கடந்த ஓராண்டு கால ஆட்சியில் பிரதமர் மோடி இரண்டு விசயங்களைத்தான் திரும்பத்திரும்பச் செய்து வருகிறார். ஒன்று, வெளிநாடு செல்வதற்கு விமானம் ஏறிக் கொண்டிருக்கிறார். இல்லையென்றால், அதாவது தப்பித்தவறி அவர் உள்நாட்டில் இருந்தாலோ புதுப்புது திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்த வகையில், கடந்த ஏப்ரலில் பிரதமர் மோடி முத்ரா வங்கியைத் திறந்துவைத்த கையோடு, பிரான்சுக்குச் செல்ல விமானம் ஏறினார்.
ஜன்தன் யோஜ்னா, கிளீன் இந்தியா, மேக் இன் இந்தியா, பேடீ பாச்சாவோ என்ற ஆரவாரத் திட்டங்களின் வரிசையில் “முத்ரா வங்கி”த் திட்டம் வந்திருக்கிறது. நாடெங்குமுள்ள கோடிக்கணக்கான குறுந்தொழில்கள் மற்றும் தள்ளுவண்டிக் கடை, பெட்டிக்கடை, பூக்கடை, ஆட்டோ ஓட்டுவது உள்ளிட்ட சிறு வியாபாரிகள், சுயதொழில் முனைவோருக்குத் தேவைப்படும் கடனுதவியைக் குறைந்த வட்டியில் அளித்து, அவர்களைக் கந்துவட்டியின் பிடியிலிருந்து மீட்பதுதான் முத்ரா திட்டத்தின் நோக்கம் என்று விளக்கமும் அளிக்கப்பட்டிருக்கிறது.
குறுந்தொழில் வளர்ச்சி குறித்து இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்கள் யாரும் இந்த அளவிற்குச் சிந்தித்தது இல்லையென்றும், இது மோடிக்கே உரிய செயல் பாணியென்றும் இந்து மதவெறிக் கும்பல் இத்திட்டம் குறித்து துதிபாடி வருகிறது. குறிப்பாக, சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டுப் பார்ப்பனரான எஸ்.குருமூர்த்தி, “இந்தியாவைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் கொண்டு வந்திருக்கும் திட்டமிது; இந்தியப் பொருளாதாரத்தின் புதிர்களுக்கான விடையிது; இந்த மண்ணுக்கேற்றதும், மதிநுட்பமும் நிறைந்த இத்திட்டம் ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடியது” என்றெல்லாம் புல்லரிக்கும் அளவிற்கு எழுதி வருகிறார்.
நாடெங்குமுள்ள 5.8 கோடி குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுள் மூன்றில் இரண்டு பங்கு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படுவதாகவும், முத்ரா வங்கி கடன் வழங்குவதில் இவர்களுக்குதான் முன்னுரிமை கொடுக்கும் என்றும் அறிவித்துள்ள மோடி அரசு, இதன் மூலம் தன்னை ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களின் தோழனாகவும் காட்டிக் கொள்ள முயலுகிறது.
முத்ரா திட்டத்தின் யோக்கியதையைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன், இது குறித்து புனையப்படும் கட்டுக்கதைகளைத்தான் முதலில் தோலுரிக்க வேண்டியிருக்கிறது. குறு மற்றும் சிறு தொழில்களின் வளர்ச்சிக்காக முதல்முறையாகவும் தனிச்சிறப்பான முறையிலும் உருவாக்கப்பட்ட திட்டமாக முத்ரா முன்னிறுத்தப்படுவது கடைந்தெடுத்த பொய், மோசடி. இதற்கு முன்பாகவே, இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி), விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி (நாபார்டு), தாழ்த்தப்பட்டோர் நிதியுதவி மற்றும் வளர்ச்சிக்கான தேசிய கழகம், பழங்குடியினர் நிதியுதவி மற்றும் வளர்ச்சிக்கான தேசிய கழகம், பிற்படுத்தப்பட்ட சாதியினர் நிதியுதவி மற்றும் வளர்ச்சிக்கான தேசிய கழகம் உள்ளிட்ட பல்வேறு மைய அரசின் அமைப்புகளும், மாநில அரசின் அமைப்புகளும் குறு மற்றும் சிறு தொழில்களின் வளர்ச்சியை மையப்படுத்தி பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன. மேலும், இத்தொழில் துறையில் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கு குறு, சிறு மற்றும் மத்தியதர தொழில் வளர்ச்சி சட்டம் என்ற பெயரில் தனித்தொரு சட்டம் உருவாக்கப்பட்டிருப்பதோடு, இத்தொழில்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் பல்வேறு கமிட்டிகளும் அமைக்கப்பட்டு, ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன.
இத்துணை அமைப்புகள், கமிட்டிகளுக்குப் பிறகும் குறு மற்றும் சிறு தொழில்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது என்பதுதான் கசப்பான உண்மை. நாடெங்குமுள்ள 5.8 கோடி குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுள் வெறும் 4 சதவீத நிறுவனங்களுக்குத்தான் வங்கிக் கடன் கிடைத்திருப்பதையும், மற்றவர்கள் கடனுக்குக் கந்துவட்டிக் கும்பலை நம்பியிருப்பதையும் அரசின் புள்ளிவிவரங்களே ஒப்புக் கொள்கின்றன.
“குறுந்தொழில்களுக்கு ஒதுக்கப்படும் கடன் தொகையை வங்கி நிர்வாகம் திட்டமிட்டே சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குக் கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இத்தகைய தில்லுமுல்லுகளை அரசும் கண்டு கொள்வதில்லை” எனக் குற்றஞ்சுமத்துகிறார், தமிழ்நாடு குடிசை மற்றும் குறுந்தொழில் கூட்டமைப்பின் தலைவர் ஏ.எஸ்.கண்ணன். குறிப்பாக, கடந்த காங்கிரசு ஆட்சியில் குறு மற்றும் சிறு தொழில்களுக்கு எந்தவிதமான ஈடும் கேட்காமல் ஒரு கோடி வரை கடன் கொடுக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, அது பெருமளவில் நடைமுறைப்படுத்தப்படாமல் மோடி ஆட்சியிலும் கிடப்பில் போடப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தும் அவர், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள கடன் திட்டங்களை நியாயமாகவும் விரைவாகவும் நடைமுறைப்படுத்த முயலாமல், புதிதாக முத்ரா திட்டத்தை அறிவித்திருப்பது மோடியின் விளம்பர அரசியல்தான் எனக் குறிப்பிடுகிறார்.
நாடெங்குமுள்ள 5.8 கோடி குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுள் மூன்றில் ஒரு பங்கு உற்பத்தியிலும், மற்றொரு பங்கு வர்த்தகத்திலும், மீதமுள்ளவை சேவைத் துறையிலும் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை என்பது மட்டும் அவற்றின் நசிவுக்குக் காரணமல்ல. குறிப்பாக, உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு “ஜாப் ஆர்டர்” கிடைப்பதுதான் இன்று பெரும் சவாலாக உள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் தமது உற்பத்தியில் 20 முதல் 30 சதவீத வேலைகளை குறு மற்றும் சிறு நிறுவனங்களிடம் கொடுத்து வாங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டாலும், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தும் நிலையில் பொருளாதார நிலையும் இல்லை. அரசின் பொருளாதாரக் கொள்கையும் குறு, சிறு நிறுவனங்களுக்கு ஆதரவாக இல்லை. குறிப்பாக, உற்பத்தித் துறையில் நுழையும் பன்னாட்டு நிறுவனங்கள் தமது வேலைகளை, தமக்குச் சொந்தமான துணை நிறுவனங்களிடமே கொடுத்து வாங்கிக் கொள்கின்றன; அல்லது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்கின்றன. பொருளாதார மந்தம், தேக்கம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான அரசின் தொழிற்கொள்கை ஆகியவை காரணமாக ஜாப் ஆர்டர் கிடைக்காமல், குறு மற்றும் சிறு நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டு நிற்கின்றன. இந்த நிலையில் முத்ரா திட்டத்தை குருமூர்த்தி உள்ளிட்ட இந்து மதவெறிக் கும்பல் சர்வரோக நிவாரணியாக முன்னிறுத்துவது புண்ணுக்கு புனுகு தடவும் ஜால வித்தைக்கு ஒப்பானதாகும்.
சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு ஏறத்தாழ நான்கு இலட்சம் முதல் ஐந்து இலட்சம் கோடி ரூபாய் வரை கடன் தேவைப்படுவதாகப் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், முத்ரா வங்கியோ வெறும் 20,000 கோடி ரூபாய் முதலீட்டில்தான் தொடங்கப்படுகிறது. இதனை ஒரு இலட்சம் கோடி ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்ற வாக்குறுதிதான் அளிக்கப்பட்டிருக்கிறது. இதுவொருபுறமிருக்க, மோடி அரசு பதவிக்கு வந்தவுடன் தயாரித்த (கடந்த ஆண்டு) பட்ஜெட்டில் சிறுதொழில்களின் வளர்ச்சிக்காக 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட திட்டம் நடைமுறைக்கே வரவில்லை என சிறுதொழில் சங்கங்கள் குறிப்பிடுகின்றன. இவையெல்லாம் முத்ரா வங்கித் திட்டமும் மற்றுமொரு சவடால் அறிவிப்பு தவிர வேறில்லை என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.
இதற்கு அப்பால், முத்ரா வங்கித் திட்டம் குறுந்தொழில்களுக்கு, உதிரித் தொழில்களை நடத்திவரும் அடித்தட்டு மக்களுக்கு உதவுவது என்ற போர்வையில் நாடெங்குமுள்ள கந்துவட்டி மற்றும் லேவாதேவி கும்பலை அமைப்பாகத் திரட்டுவதையும், அவர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுதான் தயாரிக்கப்பட்டிருக்கிறது. முத்ரா வங்கி குறுந்தொழில்களுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் நேரடியாகக் கடன் வழங்காது. அவ்வங்கி உள்ளூர் அளவில் செயல்படும் “முதலீட்டாளர்களை” – அதாவது கந்துவட்டிக் கும்பலையும், சிட்பண்ட் போன்ற குறுநிதி நிறுவனங்களையும் தன்னிடம் பதிவு செய்து கொள்ளுமாறு கோரும். இப்படி பதிவு செய்துகொண்டவர்களுக்கு முத்ரா வங்கி கடன் வழங்கும். அவர்கள் பயனாளிகளைத் தேடிப் பிடித்துக் கடன் கொடுப்பார்கள். கடன் கொடுப்பதையும், அதனை வட்டியோடு வசூலிப்பதையும் முறைப்படுத்தும் போலீசாக முத்ரா வங்கி செயல்படும்.
“தாம்பரத்தில் ஒரு சிறு வணிகருக்குக் கடன் தர வேண்டும் என்றால், அப்பகுதியில் கடன் கொடுத்து வாங்கும் கந்து வட்டிக்காரர்களுக்குத்தான் பயனாளிகளைத் தெரியும். உதாரணத்துக்கு, கரூர் போன்ற பகுதிகளில் 3 ஆயிரம் பேர் சேர்ந்து கரூர் பைனான்சியர்கள் சங்கத்தை அமைத்து 40 ஆண்டுகளாக நல்ல முறையில் கடன் கொடுத்து வாங்குகின்றனர். அது போன்ற லட்சக்கணக்கான பைனான்சியர்களை நாடு முழுவதும் கண்டறிந்து முத்ரா பதிவு செய்யும். இதுதான் நாட்டைப் புரிந்துகொண்டவர்களால் இந்தியக் கண்ணோட்டத்துடன் உருவாக்கப்பட்ட திட்டம்” என்கிறார், எஸ்.குருமூர்த்தி.
குருமூர்த்தியின் வார்த்தைகளில் குறுந்தொழில் முனைவோரின் நலன் இருப்பதற்கான சுவடுகூடத் தென்படவில்லை. முத்ரா வங்கி உள்ளூர் பைனான்சியர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுக்குமாம். அவர்கள் அதனை மைய அரசு கூறும் வட்டி வீதத்தில் உள்ளூர் தொழில்முனைவோருக்குக் கொடுத்து, அவர்களைக் கைதூக்கி விடுவார்களாம். கேப்பையிலிருந்து நெ வழிகிறது என அவர்கள் கூறுவதை நம்புவதற்கு நாமென்ன அவ்வளவு இளிச்சவாயர்களா?
முத்ரா திட்டம் என்பது கந்துவட்டித் தொழிலைச் சட்டபூர்வமாக்குகிறது. அவர்களின் தொழிலுக்குப் பாதுகாப்பும் உத்தரவாதமும் அளிக்க முன்வருகிறது. குறு நிதி நிறுவனங்கள் என்ற போர்வையில் செயல்பட்டு வரும் பலதரப்பட்ட பிளேடு கம்பெனிகள் மற்றும் கந்துவட்டித் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் கவுண்டர், தேவர், வடநாட்டு பனியா, மார்வாரி உள்ளிட்ட ஆதிக்க சாதியினரின் சுரண்டலும், அத்துமீறல்களும் கட்டுக்கு அடங்காமல் தொடருவதற்கான வாய்ப்புகளைத் திறந்து விடுகிறது என்பதைத் தாண்டி இத்திட்டம் குறுந்தொழில்களுக்கோ, அதில் ஈடுபட்டுள்ள அடித்தட்டு மக்களுக்கோ எந்தவிதமான பாதுகாப்பையும் அளிக்கவில்லை. அவர்களுக்கு உதவ ஒரு சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை.
அடித்தட்டு மக்களுக்குக் கடனுதவி அளித்து, அவர்களைக் கைதூக்கி விடுவது என்ற “நல்ல” நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் குறு நிதி நிறுவனங்கள் இறக்கிவிடப்பட்டன. இதற்காக அந்நிறுவனங்களுக்கு தேசிய வங்கிகளிலிருந்து பணமும் கொட்டித் தரப்பட்டது. ஆனால், அதன் பலன்? குறு நிதி நிறுவனங்கள் கந்துவட்டி மாஃபியாக்களாக மாறி, ஏழைகளை, விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளிவிட்டதைத்தான் ஆந்திராவிலும், ஒரிசாவிலும் கண்டோம். இத்துயரத்தை, கொடுமையை முத்ரா வங்கித் திட்டம் தேசியமயமாக்கக்கூடும்.
– திப்பு
__________________________
புதிய ஜனநாயகம், மே 2015
__________________________
***
குறுந்தொழிலுக்குச் சாவுமணி!
சிறுதொழில் பட்டியலில் இருந்து ஊறுகாய், மெழுகுவர்த்தி, ஊதுவத்தி, தீக்குச்சி, பூட்டு, ரொட்டி, நோட்டுப் புத்தகங்கள், ஸ்டீல் பீரோ, சேர், ஷட்டர், அலுமினிய பாத்திரங்கள் உள்ளிட்ட 20 பொருட்களை நீக்கி உத்தரவிட்டுள்ளது மைய அரசு. இதனால் இத்தொழில்களை இனி கார்ப்பரேட் நிறுவனங்களே நேரடியாக மூலதனமிட்டுத் தொடங்க முடியும். நோட்டுப் புத்தகங்கள், பென்சில்கள் போன்றவற்றை சிறுதொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து, தங்களின் பெயரில் விற்பனை செய்து வரும் ஐ.டி.சி. உள்ளிட்ட தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் கொள்ளைக்கான வாய்ப்பைத் திறந்துவிட்டுள்ளது. இதுகாறும் இத்தொழிலை நடத்திவரும் குறு மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் இனி கார்ப்பரேட் நிறுவனங்களோடு போட்டியிட வேண்டிய கட்டாயத்திற்குள், இக்கட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளன. மிக முக்கியமாக, வேலைவாய்ப்பின்மையும், வேலை இழப்பும் கோலோச்சிவரும் நேரத்தில் வெளிவந்துள்ள இந்த அறிவிப்பு, ஏதாவது கைத்தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் நிரந்தரமாகவே மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது.
தமிழகத்தில் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி பகுதிகளில் சிறுதொழில்களாக நடந்துவரும் தீக்குச்சி, பட்டாசு, நோட்டுப் புத்தகங்கள் தயாரிப்பு; தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, மாரண்ட அள்ளி, பென்னாகரம் பகுதிகளில் நடந்துவரும் பர்னிச்சர்கள் தயாரிக்கும் தொழில்; திருப்பூர், கும்பகோணம், சென்னை, மதுரை, மானாமதுரை பகுதிகளில் நடந்துவரும் எவர்சில்வர் பட்டறை தொழில்; தமிழகத்தின் பல பகுதிகளில் குடிசைத் தொழிலாக நடந்துவரும் ஊறுகாய், ஊதுவத்தி, மெழுகுவர்த்தி தயாரிப்பு – ஆகியவை அனைத்தும் மைய அரசின் அறிவிப்பினால் பெரும் அழிவைச் சந்திக்க வேண்டிய அபாயத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
“சிறுதொழில் தயாரிப்புகளில் பெரிய நிறுவனங்கள் ஈடுபடும்பொழுது நுகர்வோருக்குச் சற்றுக் குறைவான விலையில் பொருட்கள் கிடைக்கலாம். ஆனால், ஆயிரக்கணக்கான சிறுதொழில்கள் அடியோடு மூடப்படும். வருங்காலத்தில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே நாட்டில் சொந்த தொழில் செய்ய முடியும் என்ற கட்டாயம் இந்த அறிவிப்பினால் ஏற்படவும் வாய்ப்புள்ளது” என எச்சரிக்கிறார், இந்திய தொழிற்கூட்டமைப்பின் சேலம் பகுதி தலைவர் ராஜேஷ்குமார்.
இதுவொருபுறமிருக்க, குறுந்தொழில்களின் முதலீட்டு வரம்பை ரூ 20 இலட்சத்திலிருந்து 50 இலட்சமாகவும், சிறு தொழிற்சாலைகளுக்கான முதலீட்டு வரம்பை ரூ 5 கோடியிலிருந்து ரூ 10 கோடியாகவும், நடுத்தர தொழில்களின் முதலீட்டு வரம்பை ரூ 10 கோடியிலிருந்து ரூ 20 கோடியாகவும் உயர்த்தியிருக்கிறது, மைய அரசு. இந்த அதிரடி உயர்வின் மூலம் குறு, சிறுதொழில் என்ற அடிப்படைக்கே வேட்டு வைத்து, கந்துவட்டிக்கு கடன் வாங்கி தொழில் செய்துவரும் சாதாரண தொழில்முனைவோரை அத்துறையிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான சதியை அரங்கேற்றியிருக்கிறது.
இப்படியொரு இரட்டைத் தாக்குதலை குறுந்தொழில் மீது தொடுத்துவிட்டு, முத்ரா வங்கியின் மூலம் கடன் கொடுத்து குறுந்தொழிலையும், அதனை நடத்திவரும் அடித்தட்டுப் பிரிவினரையும் கைதூக்கிவிடப் போவதாக மோடியும் அவரது பரிவாரங்களும் விளம்பரம் செய்துவருவது எத்தகையதொரு பித்தலாட்டம்!