Tuesday, June 18, 2024
முகப்புஉலகம்ஆசியாஅனந்தா தாஸைக் கொன்ற வங்கதேச இசுலாமிய மதவெறியர்கள்

அனந்தா தாஸைக் கொன்ற வங்கதேச இசுலாமிய மதவெறியர்கள்

-

வங்க தேசத்தின் அறிஞர் பெருமக்களை கொன்று ஒழிப்பதை இசுலாமிய மதவெறியர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி அவிஜித் ராய் கொல்லப்பட்டார். வங்க தேச தலைநகரான டாக்காவில் நடந்த புத்தக கண்காட்சி ஒன்றிற்கு தனது மனைவியான ரஃபீதா அஹமது பான்யாவுடன் சென்று விட்டுத் திரும்பும் போது தான் அந்தக் கொலைவெறித் தாக்குதல் நடந்தது. ராய் தம்பதியினர் பயணித்த சைக்கிள் ரிக்‌ஷாவைச் சூழ்ந்து கொண்ட கொலையாளிகள், இருவரையும் இழுத்துக் கீழே தள்ளியுள்ளனர். முதல் வெட்டு ராயின் தலையில் விழுந்துள்ளது. தொடர்ந்து அவரது உடலெங்கும் சராமாரியாக வெட்டிக் கிழித்து கொடூரமாக கொன்றுள்ளனர்.

அனந்தா பிஜோய் தாய்
கொல்லப்பட்ட அனந்தா பிஜோய் தாஸ்

அவிஜித் கொல்லப்பட்டு சரியாக 75 நாட்கள் கழித்து கடந்த 12-ம் தேதி அனந்தா பிஜோய் தாஸ் தாக்கப்பட்டார். வங்க தேசத்தின் வடமேற்குப் பகுதியில் சூர்மேய் நதிக்கரையில் அமைந்துள்ள சில்லேத் நகரைச் சேர்ந்த 33 வயதே நிரம்பிய இளைஞரான அனந்தா, வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 12-ம் தேதியன்று காலை 8:30 மணிக்கு அலுவலகம் சென்று கொண்டிருந்தவரை அரிவாள்கள் ஏந்திய கும்பல் ஒன்று சுற்றி வளைத்து கொடூரமான முறையில் வெட்டிக் கொன்றுள்ளது.

கொடூரமாக கொல்லப்படும் அளவுக்கு இவர்கள் இழைத்த குற்றம் என்ன?

அவர்கள் உண்மையாக இருந்தார்கள்; நாத்திகர்களாக இருந்தார்கள் என்பதே ‘குற்றம்’. இந்திய துணைக்கண்டமெங்கும் இசுலாமியர்களிடையே விஷம் போலப் பரவி வரும் இசுலாத்தின் வஹாபி மதவெறி பலி வாங்கிய எண்ணற்ற உயிர்களின் பட்டியலில் சமீபத்திய சேர்க்கை தான் இவ்விரு உயிர்களும்.

பலியானவர்கள் இருவரும் நாத்திகர்கள் மட்டுமின்றி, நாடறிந்த பதிவர்களாகவும் களச் செயல்பாட்டாளர்களாகவும் இருந்துள்ளனர். வங்கதேச முற்போக்காளர்கள் மத்தியில் இவர்கள் பரவலாக அறியப்பட்டவர்கள். அவிஜித் ராய் முக்தோ மோனா (சுதந்திரச் சிந்தனையாளர்கள்) என்ற இணையதளத்தை துவங்கியவர். பொறியியலாளரான அவிஜித் ராய் தாக்கா பல்கலைக்கழகத்தின் பிரபல இயற்பியல் பேராசிரியர் அயோய் ராயின் மகன். தத்துவம், அறிவியல் சிந்தனைகள், மனித உரிமைகள் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

இசுலாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவரான அவிஜித் ராயின் புத்தகங்களை விற்கத் தடை விதித்து, ஜமாத் ஏ இசுலாமி என்கிற தீவிரவாத இயக்கம் வெளிப்படையாகவே மிரட்டியுள்ளது. அவர் நடத்தி வந்த முக்தோ மோனா இணையதளம், தொடர்ந்து நாத்திகத்தை முன்வைத்ததோடு இசுலாமிய அடிப்படைவாதத்தை அம்பலப்படுத்தி வந்துள்ளது.

அவிஜித் ராய்
மத அடிப்படைவாதத்துக்கு எதிராக எழுதியதால் கொல்லப்பட்ட அவிஜித் ராய்

முக்தோ மோனா தளத்தில் அனந்தா கட்டுரைகள் எழுதியுள்ளார். மேலும் காலாண்டிதழாக வெளி வந்து கொண்டிருக்கும் ஜூக்தி (தர்க்கம்) என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும், செல்லேத் நகரின் அறிவியல் மற்றும் பகுத்தறிவுக் கழத்தின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். தொடர்ந்து இசுலாமிய அடிப்படைவாதத்தை அம்பலப்படுத்தும் கட்டுரைகள் எழுதி வந்த அனந்தா, தீவிரவாத வஹாபிகளின் தாக்குதல் பட்டியலில்(Hit List) முதலிடத்தில் இருந்து வந்துள்ளார்.

முற்போக்காளர்கள் மேல் நடத்தப்படும் தாக்குதல் வங்கதேசத்திற்குப் புதிதல்ல, தொண்ணூறுகளில் தஸ்லிமா நஸ்ரினும் இரண்டாயிரத்தின் துவக்கத்தில் ஹுமாயுன் ஆஸாத்தும் அடிப்படைவாத வஹாபிகளின் தாக்குதல் இலக்காக இருந்துள்ளனர். எனினும், 2013-ம் ஆண்டிற்குப் பின் இத்தாக்குதல்கள் ஒரு புதிய வேகத்தில் நடக்கத் துவங்கியுள்ளன. 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸிஃப் மொகியுத்தீன் குறுவாட்கள் ஏந்திய கும்பலால் தாக்கப்பட்ட சம்பத்திலிருந்து தொடர்ந்த இடைவெளிகளில் முற்போக்கு எழுத்தாளர்களும் வலைப்பதிவர்களும் தாக்கப்பட்டு வருகின்றனர்.

2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அஹ்மத் ரஜீப் ஹைதர் கொல்லப்பட்டார். அதே ஆண்டு மார்ச் மாதம் சன்னியுர் ரஹ்மான கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானார். 2014-ம் ஆண்டு நவம்பரில் ஷஃபியுள் இஸ்லாம் பேராசிரியர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இந்தாண்டு பிப்ரவரி மாதம் அவிஜித் ராயும், மார்ச் மாதம் வாஷிகுர் ரஹ்மானும் கொல்லப்பட்டுள்ளனர்.

அனந்தா பிஜோய் தாஸ் - கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு
அனந்தா பிஜோய் தாஸ் – கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு

பொதுவாக கொல்லப்பட்ட அனைவரும் முற்போக்காக இருந்தவர்கள் என்பதோடு, குறிப்பாக ஷஃபியுள் ரஹ்மானைத் தவிர மற்ற அனைவரும் 2013-ம் ஆண்டின் ஷாபாக் போராட்டம் என்று பிரபலமாக வருணிக்கப்படும் போராட்டங்களில் பங்கேற்றவர்கள்; அந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக இணையத்தில் பிரச்சாரம் செய்தவர்கள். இசுலாமிய வஹாபிய அடிப்படைவாதிகளைப் பொறுத்தவரை, ”ஒப்பந்தம் போட்டு மேடையில் விவாதிக்கலாம் வாங்க” என்று ‘நாகரீகமாக’ கையைப் பிடித்திழுப்பதெல்லாம், அம்பலமாகும் வரை தான். அம்பலமாகி விட்ட பின் அரிவாள் மொழியில் தான் இயல்பாக பேசுவார்கள்.

அந்த வகையில் ஷாபாக் போராட்டங்களின் போது, வங்க தேச மக்களிடையே இசுலாமிய அடிப்படைவாதிகள் கடுமையாக அம்பலப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். தாங்கள் அம்பலப்பட்டதற்கு கருத்தியல் ரீதியாக பதிலளிக்கத் துப்பில்லாததால் குறுவாட்களைத் தீட்டி தருணம் பார்த்துக் காத்திருந்துள்ளனர்.

அது என்ன ஷாபாக் போராட்டம்?

அன்றைய கிழக்கு பாகிஸ்தானில், 1970-இல் நடந்த தேர்தலில் வங்கதேசத்துக்குக் கூடுதல் தன்னாட்சி உரிமை வேண்டுமென்ற மக்களின் கோரிக்கையை முன்வைத்துப் போட்டியிட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான அவாமி லீக் கட்சி கிழக்கு பாகிஸ்தானில் 99 சதவீத அளவுக்கு வாக்குகளைப் பெற்று மிக அதிக இடங்களைக் கைப்பற்றியது. இப்பெரும்பான்மையைக் கொண்டு முஜிபுர் ரஹ்மான் ஒட்டுமொத்த (கிழக்கு,மேற்கு) பாகிஸ்தானுக்கும் பிரதமராகும் நிலை ஏற்பட்டது. முஜிபுர் ரஹ்மானின் வெற்றியை மேற்கு பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் ஏற்க மறுத்தனர்.

ரஃபிதா போன்யா அகமது
ரஃபிதா போன்யா அகமது – கொல்லப்பட்ட அவிஜித் ராயின் மனைவி. (தாக்குதலில் கைவிரலை இழந்தவர்)

அதைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்துப் பின் தேச விடுதலைப் போராக வளர்ந்தது. பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளர்கள் வங்கதேச மக்கள் மீதும் அவாமி லீக் கட்சியினர் மீதும் மிகக்கொடிய இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்டனர். இசுலாமிய அடிப்படைவாத கட்சியான ஜமாத் -இ-இஸ்லாமி, பாகிஸ்தான் ஆட்சியாளர்களுடன் வெளிப்படையாகக் கைகோர்த்தது. தமது மாணவர்-இளைஞர் அமைப்புகளைக் கொண்டு ரசாக்கர்கள் எனப்படும் இரகசிய குண்டர்படைகளையும், அல்-பதார் எனும் கொலைக்குழுக்களைக் கட்டியமைத்தனர்.

தேச விடுதலையை ஆதரித்து களத்தில் நின்ற முன்னணியாளர்களையும் அறிவுத்துறையினரையும்  கோரமாகக் கொன்றொழித்தனர் ரசாக்கர்கள். அந்த சமயத்தில் சுமார் இருபதிலிருந்து முப்பது லட்சம் வரையிலான வங்காளிகள் கொல்லப்பட்டனர். சுமார் பதினைந்து லட்சத்திற்கும் அதிகமான வங்கப் பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர் (25 லட்சம் வரை இருக்கலாம் என்றும் சிலர் மதிப்பிடுகிறார்கள்). சுமார் ஒரு கோடி வங்க மக்கள் அகதிகளாக இந்தியாவுக்குள் புகுந்தனர்.

1971-ம் ஆண்டு வங்காளிகளின் நினைவுகளில் ஆறாத வடுவாக நிலைத்தது. ஒவ்வொரு ஆண்டும் வங்க தேச விடுதலைக் கொண்டாட்ட நிகழ்வுகள் மரித்தோரைக் குறித்த நினைவுகளாலும் கண்ணீராலும் அலங்கரிக்கப்பட்டன. தொடர்ந்து நடந்த வங்க தேசத் தேர்தல்கள் ஒவ்வொன்றிலும் பாகிஸ்தானோடு கைகோர்த்து கொலைவெறியாட்டம் போட்ட இசுலாமிய அடிப்படைவாதிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரும் கோரிக்கை ஒரு முக்கிய பேசு பொருளாக அமைந்தது.

ஷாபாக் சதுக்கம்
ஷாபாக் சதுக்க எழுச்சி

இந்நிலையில், 2008-ம் ஆண்டுத் தேர்தலில் அவாமி லீக் கட்சி போர்குற்ற விசாரணையை தேர்தல் வாக்குறுதியாக முன்வைத்து வென்றது. தொடர்ந்து பன்னாட்டு போர் குற்ற விசாரணை நீதிமன்றத்தின் முன் நடந்த விசாரணைகளின் முடிவில், 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம், ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் முக்கியத் தலைவரும், மீர்பூரின் கசாப்புக் கடைக்காரன் என்று மக்களால் காறி உமிழப்படும் போர்க்குற்றவாளியுமான அப்துல் காதர் மொல்லாவுக்கு போர்குற்ற நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

தீர்ப்புக்குப் பின் தெனாவெட்டாக இரட்டை விரல்களைக் காட்டியவாறே நீதிமன்றத்திலிருந்து அப்துல் காதர் வெளியேறும் காட்சி ஊடகங்களில் வெளியாகின. வங்க தேச மக்களின் நினைவடுக்குகளில் வெறுப்பின் குறியீடாக நீங்காத இடம் பிடித்த கொலைகாரனின் வெளிப்படையான கொக்கரிப்பு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தலைநகர் டாக்காவின் ஷாபாக் சதுக்கத்தில் மக்கள் சாரிசாரியாகக் குவிந்தனர். மக்களின் உணர்வுகளைத் தங்கள் படைப்புகளால் தட்டியெழுப்பும் வேலையை முற்போக்குப் பதிவர்கள் கையிலெடுத்தனர் – அந்தப் படைப்பாளிகளின் படையில் முன்னணியாளர்களாக முக்தோ மானோ தளத்தின் பதிவர்கள் நின்றனர்.

ஏற்கனவே வேலையிழப்பு, விலைவாசி உயர்வு என்று பல்வேறு திசைகளில் தாக்கப்பட்டு கொந்தளிப்பான தருணம் ஒன்றின் விளிம்பில் நின்றிருந்தனர் வங்க தேசத்து மக்கள். வறண்டு கிடக்கும் வனத்தின் மத்தியில் காய்ந்த சருகுகளின் மேல் தீக்குச்சியைக் கொளுத்திப் போட்டார் அப்துல் காதர் மொல்லா. வழக்கம் போல் மத அடிப்படைவாதம் தன்னைக் காப்பாற்றி விடும் என்று அவர் தப்புக் கணக்குப் போட்டிருக்க வேண்டும். கலைந்த தேன்கூட்டிலிருந்து ஆத்திரத்தோடு பாய்ந்து வரும் தேனீக்களைப் போல் மக்கள் சாரிசாரியாக ஷாபாக் சதுக்கத்திற்கு அணிவகுத்தனர்.

அப்துல் காதர் மொல்லாவைத் தூக்கிலிட வேண்டும் என்ற முழக்கம் விண்ணதிர எழுந்தது. ஷாபாக் சதுக்கத்தில் பற்றிய நெருப்பு வெகு விரைவில் வங்க தேசத்தின் மூலை முடுக்குகளெங்கும் பற்றிப் படர்ந்தது. சிட்டகாங், சில்லேத், பாரிசால், மேய்மென்சிக், கூல்னா, ராஜ்பாரி, ராஜ்ஷாஹி, ரங்பூர், கோமில்லா, போக்ரா, நாராயன்கஞ், நவகாளி, நார்சிங்தி போன்ற பகுதிகளில் உக்கிரமான போராட்டங்கள் எழுந்தன.

அப்துல் காதர் மோல்லா
2013-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட வங்கதேச மதவெறியர் அப்துல் காதர் மோல்லா

இப்போராட்டங்கள் பின்னர் கனோஜாக்ரன் மன்ச் (Gonojagran mancha – சமூக விழிப்புணர்வு இயக்கம்) என்ற இயக்கமாக வளர்ந்து, ஜமாத் ஏ இசுலாமி கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையாக எழுந்தது. பின்னர் டிசம்பர் 12-ம் தேதி 2013-ம் ஆண்டு அப்துல் காதர் மொல்லா தூக்கிலிடப்படும் வரை ஷாபாக் எழுச்சியின் தீவிரம் குறையவே இல்லை. இறுதியில் இசுலாமியர்களைப் பெரும்பான்மையினராக கொண்ட வங்க தேசத்தில் இசுலாமிய அடிப்படைவாதம் பேசும் ஜமாத் ஏ இசுலாமி கட்சி தனிமைப்பட்டு நிற்கும் நிலை ஏற்பட்டது.

கடந்த இருபது ஆண்டுகளில் இசுலாமிய உலகினுள் வைரஸ் கிருமியைப் போல் பரவி வரும் வஹாபிய அடிப்படைவாதமானது, வங்கத்து மக்கள் விட்ட நாக்-அவுட் பன்சில் மூக்குடைபட்டு நின்றது. குரானின் எந்த அத்தியாயத்தில், எந்த வரியில் எத்தனை எழுத்துக்கள் இருக்கின்றன எத்தனை நிறுத்தக்குறிகள் இருக்கின்றன அவை ஒவ்வொன்றுக்கும் நபி என்ன விளக்கம் கொடுத்திருக்கிறார், அதில் எதை எடுப்பது எதை விடுவது என்று பீராய்ந்து மயிர் பிளக்கும் வாதங்களை முன்வைத்து இசுலாமியர்களை மதவெறியூட்டுவதில் கில்லாடிகளான வஹாபியர்கள் இதை எதிர்பார்க்கவில்லை.

என்றாலும், நபி மொழியை விட பரந்துபட்ட மக்களின் மொழியே வலுவானது என்ற உண்மையை வங்க தேச வஹாபியர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் வஞ்சம் தீர்ப்பதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். மக்களை தங்களுக்கு எதிராக அமைப்பாக்குவதில் கருத்துத் தளத்தில் செயல்பட்டு முன்னணியில் நின்றவர்கள் என்ற முறையில் முக்தோ மானோ தளத்தின் பதிவர்களின் மீது கொலை வெறியில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் ரீதியில், கருத்து ரீதியில் வெல்ல முடியாத கோழைகளின் கடைசி ஆயுதம் தான் அடிப்படைவாதக் கொலைவெறி. அந்தக் கொலை வெறியிடம் தான் அவிஜித்தும் அனந்தோவும் ஏனையோரும் களப்பலியாகி உள்ளனர். என்றாலும் இவர்கள் தனித்தவர்கள் இல்லை.. அவர்கள் மக்களின் நலனுக்காக பேசியவர்கள். அதனால்தான் இக்கொலைகளைக் கண்டித்து வங்க தேசத் தலைநகரில் நடக்கும் போராட்டங்களுக்கு மக்கள் திரள்கிறார்கள்.

அடிப்படைவாதிகளை அரசியல் அடிப்படையிலும் மக்களின் வாழ் நிலையின் பாற்பட்டும் எதிர்ப்பதே சரியானது என்பதை வங்க முசுலீம்கள் உணர்த்தி வருகின்றனர்.

ஷாபாக் சதுக்கம் இன்னும் விழ வில்லை; ஒவ்வொரு முறை ஒரு முற்போக்கு ஜனநாயகவாதி கொல்லப்படும் போது அது மக்களின் நினைவுகளில் ஓயாத அலையைப் போல் இடையறாது எழுந்து கொண்டேயிருக்கும். ஏனெனில் அவர்களே மக்களின் நம்பிக்கைக்குரிய ஒளிபொருந்திய எதிர்காலத்தின் குழந்தைகள். பாசிஸ்டுகளும் மதவாதிகளும் இன்னபிற பிற்போக்காளர்களும் கடந்த காலத்தில் செத்து, நாளுக்கு நாள் மட்கி அழுகி வரும் பிணங்கள்.

வங்க தேச எழுத்தாளர்கள் கொல்லப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் தெருவிலிறங்கி போராடுகிறார்கள் – ஒவ்வொரு கொலையின் பின்னும் வஹாபியர்கள் மக்களின் தீராத வெறுப்புக்காளாகிறார்கள். இசுலாத்தின் மாண்பைக் காப்பாற்றும் நடவடிக்கை என்ற வஹாபியர்களின் மாய்மாலங்களை மக்கள் புறந்தள்ளுகின்றனர்.

வரலாற்றில் ஜனநாயகவாதிகளை, முற்போக்காளர்களை, நாத்திகர்களை, சோஷலிசவாதிகளை, கம்யூனிஸ்டுகளை மக்கள் விரோதிகள் கொன்று குவித்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் எதிரிகள் தனிமைப்படுத்தப்பட்டே வந்துள்ளனர். மீண்டும் ஒரு முறை அந்த வரலாற்று உண்மையை வஹாபியர்கள் மெய்ப்பித்து வருகிறார்கள்.

ஏனெனில் அவர்கள் (மத அடிப்படைவாதிகள் / எதேச்சாதிகார பாசிஸ்டுகள்) அளவற்ற வெறுப்புடையோராகவும் நிகரற்ற தீயோராகவும் இருக்கிறார்கள்.

– தமிழரசன்

மேலும் படிக்க..

  1. அனந்தா பிஜோய் தாஸின் நாத்திகக் கருத்தைப் பற்றி எழுதியிருந்தால் இன்னும் சற்று விளக்கம் கிடைத்திருக்கும்.

  2. “வறண்டு கிடக்கும் வனத்தின் மத்தியில் காய்ந்த சருகுகளின் மேல் தீக்குச்சியைக் கொளுத்திப் போட்டார் அப்துல் காதர் மொல்லா. வழக்கம் போல் மத அடிப்படைவாதம் தன்னைக் காப்பாற்றி விடும் என்று அவர் தப்புக் கணக்குப் போட்டிருக்க வேண்டும்.”

    இந்த மிருகத்துக்கு அவர் இவர் என்ற மரியாதை அவசியமா ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க