Friday, December 6, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயா பதவி ஏற்பைக் கண்டித்து திருச்சியில் போராட்டம்

ஜெயா பதவி ஏற்பைக் கண்டித்து திருச்சியில் போராட்டம்

-

திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பாக, “ஊழல் செய்த ஜெயா பதவி ஏற்பது தமிழகத்திற்கு அவமானம்” என்றும், “நீதிமன்றம் பணத்திற்கும், பார்ப்பனியத்திற்கும் கைப்பாவை” என்றும் முழக்கங்களின் அடிப்படையில் 22.05.2015 அன்று தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஜெயா பதவி ஏற்பு -கண்டன ஆர்ப்பாட்டம்
ஜெயா முதல்வர் பதவி ஏற்பதைக் கண்டித்து 22-ம்தேதி காலை திருச்சி நகர் முழுவதும் மற்றும் பேருந்துகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன

23.05.2015 அன்று ஊழல் ராணி ஜெயா முதல்வர் பதவி ஏற்பதைக் கண்டித்து 22-ம்தேதி காலை திருச்சி நகர் முழுவதும் மற்றும் பேருந்துகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. நகர் முழுவதும்  சுவரொட்டியை பார்த்து போலீஸ் பரபரப்புடனும் எச்சரிக்கையுடனும் இருந்தது.

மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு காலை 10.30 மணியளவில் பறை முழக்கத்துடன் தோழர்கள் கூடி போர்க்குணத்துடன் முழக்கமிட்டனர்.

தோழர்கள் கொடி, பேனருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உடன், காவல் துறை ஆய்வாளர் உமா சங்கர் கோபத்துடன் ஓடி வந்து தோழர்களை தடுத்து பார்த்தும் முடியாததால் ஒரு தோழரை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினார். தோழர்கள் கோபத்துடன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார் ஆய்வாளர்.

ஜெயா பதவி ஏற்பு - கண்டன ஆர்ப்பாட்டம்
போலீஸ் வேன் ஒன்று மட்டும் இருந்தது அதில் தோழர்களை வலுக்கட்டாயமாக ஏற்றினார்கள்.

போலீஸ் வேன் ஒன்று மட்டும் இருந்தது அதில் தோழர்களை வலுக்கட்டாயமாக ஏற்றினார்கள் காவல்துறையினர். பெண் தோழர்கள் வைத்திருந்த ஆர்ப்பாட்ட பேனரை பிடுங்க நினைத்த காவல்துறையினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பேனரை பெண் தோழர்கள் விடுவதாக இல்லை; பெண் காவலர்கள் திகைத்தனர்.

ஜெயா பதவி ஏற்பு - கண்டன ஆர்ப்பாட்டம்
காவலர்கள் தோழர்களின் போர்குணத்தை கண்டு திகைத்தனர்

மீதம் உள்ளவர்களை ஏற்ற வேன் இல்லாததால் அவ்வழியே வந்த ஒரு அரசு பேருந்தை நிறுத்த முயற்சித்தார் ஆய்வாளர். அது நிற்காமல் சென்றதால் பேருந்து ஓட்டுநரை ஒருமையில் திட்டி அப்பேருந்தை நிறுத்தி தோழர்களை அதில் ஏறச் சொன்னார்.

ஜெயா பதவியேற்பு - கண்டன ஆர்ப்பாட்டம்
“இவ்வளவு கேவலமாக ஆய்வாளர் மிரட்டுகிறார். உனக்கு கோபம் வரவில்லையா? ஏன் இந்த பொழப்பு?”

ஒரு தோழர் பேருந்தின் உள்ளே சென்று ஓட்டுனரிடம், “இவ்வளவு கேவலமாக ஆய்வாளர் மிரட்டுகிறார். உனக்கு கோபம் வரவில்லையா? ஏன் இந்த பொழப்பு? எங்களை காவல்துறை வேனில் தான் ஏற்ற வேண்டும். இதில் நாங்கள் ஏற மாட்டோம். அதனால் நீங்கள் கிளம்புங்கள்” என்று ஓட்டுநருக்கு ஆதரவாக பேச அவரும் அதை ஏற்றுக் கொண்டு காவல்துறையை மதிக்காமல் சென்று விட்டார்.

“அடுத்த வேன் வரும் வரை நாங்களும் போக மாட்டோம்” என முன்பு வேனில் ஏற்றப்பட்ட தோழர்களும் கீழே இறங்கி முழக்கமிட்டனர்.

ஜெயா பதவி ஏற்பு - கண்டன ஆர்ப்பாட்டம்
பெண் தோழர்கள் வைத்திருந்த ஆர்ப்பாட்ட பேனரை பிடுங்க நினைத்த காவல்துறையினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பத்திரிகை,தொலைக்காட்சி ஊடகங்கள் குவிந்தன.

அவர்களுக்கு மாவட்டச் செயலர் தோழர் ஜீவா அளித்த பேட்டியில், “ஜெயா பதவி ஏற்பு மற்றும் இந்தத் தீர்ப்பு அவமானம். ஏழை மக்கள் ஒரு தவறு செய்தால் காவல்துறை துவைத்து எடுக்கிறது. நீதிமன்ற நீதிபதியோ குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி தானா இல்லையா என முகத்தைக் கூட பார்க்காமல் 15 நாள் ரிமாண்டு என்று பேசுவார். ஆனால் ஜெயா-சசி கும்பல் சொத்துக் குவிப்பு வழக்கில் 18 ஆண்டுகாலம் கழித்து இந்த நீதிமன்றத்தையே விலைக்கு வாங்கி உள்ளது உலகத்துக்கே தெரியும். நான் எது வேண்டுமானாலும் செய்வேன், என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று திமிராக நடந்து கொள்கிறார். நாளை முதல்வர் பதவி வேறு ஏற்கப் போகிறார், இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அவமானம்” என்று கூறினார்.

ஜெயா பதவி ஏற்பு - கண்டன ஆர்ப்பாட்டம்
“நான் எது வேண்டுமானாலும் செய்வேன், என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று திமிராக நடந்து கொள்கிறார். நாளை முதல்வர் பதவி வேறு ஏற்கப் போகிறார், இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அவமானம்”

அடுத்த வேன் வந்து சேரவே காவல்துறையினர் தோழர்களை கைது செய்து வேனில் ஏற்றி 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்தனர். கைதான தோழர்கள் உற்சாகத்துடன் ஜெயாவின் பார்ப்பன பாசிச ஆட்சியைக் கண்டிக்கும் வகையில் புரட்சிகர பாடல்கள் பாடியும், நீதிமன்ற கேலிக்கூத்துகளை விரிவாக விளக்கியும் கூட்டம் நடத்தியதை காவல்துறையினர் ஆச்சரியத்துடன் பார்த்தனர்; அன்று மாலை அனைவரையும் விடுவித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பாசிச ஜெயாவின் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எந்த ஒரு ஓட்டுப்பொறுக்கி கட்சியும் வாய் திறக்கக்கூட அஞ்சிக்கொண்டிருக்கும் வேளையில் புரட்சிகர அமைப்புகளின் இப்போர்க்குணமிக்க போராட்டம் மக்களிடம் மட்டுமல்ல அரசியல் கட்சியினரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்ப்பாட்ட முழக்கங்கள்:

  • அரை பவுன் அறுத்தவனுக்கு!
    ஆறு மாசம் ஜெயிலு!
  • அறுபத்தி ஆறு கோடி!
    ஆட்டைய போட்ட அம்மாவுக்கு!
    விடுதலை விடுதலை!
  • ஊரரிந்த திருட்டு!
    உலக மகா திருட்டு!
    இல்லையின்னு சத்தியம் செய்யுறாரு!
    உத்தமரு குமாரசாமி!
  • சொத்து குவிப்பு வழக்கிலே!
    அஞ்சும் மூணும் இரண்டு தான்!
    தீர்ப்பு சொன்னது நீதிபதியா?
    பதினெட்டு பட்டி நாட்டாமையா?
  • சட்டத்தின் ஆட்சி என்ற பெயரில்!
    கட்ட பஞ்சாயத்து தீர்ப்பை!
    முறியடிப்போம்! முறியடிப்போம்!

ஜெயா பதவி ஏற்பு - கண்டன ஆர்ப்பாட்டம்

  • பணத்துக்கும் பார்ப்பானுக்கும்!
    கைப்பாவையாய் நீதிமன்றம்!
    ஜெயலலிதா சசிகலா!
    மன்னார்குடி கும்பலை!
    கொட்டம் அடக்க வாருங்க!
    நக்சல் பாரியா சேருங்க!
  • நீதி வழங்கும் அருகதையற்ற!
    நீதி மன்றத்தை நம்பாதே!
    கஞ்சா கடத்தும் ராணுவம்!
    காப்பியடிக்கும் ஐ.ஜி!
    வழிப்பறி செய்யும் போலீசு!
    நாட்டையே விற்குது ஓட்டுகட்சிகள்!
    அரசு கட்டமைப்பே அழுகி நாறுது!
    அடித்து நொறுக்க அணிதிரள்வோம்!
  • மக்கள் சொத்தை கொள்ளையடித்த!
    பாசிச ஜெயாவின் சொத்துக்களை!
    பறிமுதல் செய்வோம் பறிமுதல் செய்வோம்!
    ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வோம்!
  • நம்பாதீங்க நம்பாதீங்க!
    நீதிமன்றம் போலீசு!
    சட்டமன்றம் பாராளூமன்றம்!
    ஓட்டுக்கட்சிகளை நம்பாதீங்க!
  • பெரியார் பிறந்த மண்ணிலே!
    பார்ப்பனியம் கொட்டமடிக்க!
    அனுமதியோம் அனுமதியோம்!
  • ஆளும் அருகதையற்ற!
    அரசுக் கட்டமைப்பை!
    வீழ்த்திடுவோம் வீழ்த்திடுவோம்!
  • போடாதீங்க போடாதீங்க!
    ஓட்டு எவனுக்கும் போடாதீங்க!
    தேர்தல் பாதை திருடர் பாதை!
    நக்சல் பாரியே புரட்சி பாதை!
  • நக்சல் பாரி பாதையிலே!
    மக்கள் அதிகாரத்தை படைத்திடுவோம்!
    நாட்டை மீட்க அணிதிரள்வோம்!

பத்திரிகை செய்திகள்

[செய்திகளைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி கிளை
.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க