privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்சி.ஆர்.ஐ - பெஸ்ட் தொழிலாளர்கள் : கோவை ஆட்சியர் அலுவலக முற்றுகை

சி.ஆர்.ஐ – பெஸ்ட் தொழிலாளர்கள் : கோவை ஆட்சியர் அலுவலக முற்றுகை

-

கோவைத் தொழிலாளர்களின் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம்

சி‌.ஆர்‌.ஐ தொழிலாளர்களின் போராட்டமானது 60 நாட்களைக் கடந்து நடந்து கொண்டிருக்கிறது. பெஸ்ட் பம்ப்ஸ் தொழிலாளர்கள் போராட்டமும் 50 நாட்களைக் கடந்து விட்டது. ஆனால் இந்த அரசும் அதிகாரிகளும் எந்த முடிவும் எடுக்காமல் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதையொட்டி சீரழிந்து தோற்றுப் போயுள்ள இந்த அரசக் கட்டமைப்பை அம்பலப்படுத்தும் வகையிலும் இந்தப் போராட்டத்தை இன்னும் பெருவாரியான மக்களிடத்து எடுத்துச் செல்லும் பொருட்டும் 25-05-2015 திங்கள் குறை தீர்ப்பு நாளன்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

ஏற்கெனவே ஒரு முறை மனு கொடுத்து அதற்கு உரிய நடவடிக்கை இல்லையென்பதால் அதன் இணைப்பு மனுவாக இன்னொரு மனுவும் கொடுத்து காத்திருந்தனர் தொழிலாளிகள். அழைப்பு வந்ததும் சி‌.ஆர்‌.ஐ, பெஸ்ட் பம்ப்ஸ் ஆகிய நிறுவனத் தொழிலாளிகள் ஆட்சியர் அறைக்கு சென்றனர். தொழிலாளர்களின் கேள்விகளுக்கும் நியாயமான உணர்வுகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் திணறினார், ஆட்சியர்.

அதே சமயம், வெளியே சி‌.ஆர்‌.ஐ தொழிலாளிகள் 98 பேரும் பெஸ்ட் பம்ப்ஸ் தொழிலாளர்கள் 46 பேரும் தமது குடும்பத்துடன் சுமார் 250 பேர் அந்த ஆட்சியர் அலுவலகத்தை நிரப்பியிருந்தனர். வர்க்கச் சீருடையான சிவப்புச் சட்டைகளுடன் தோழர்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தவாறு ஆட்சியர் அலுவலகத்தின் முகப்பை அலங்கரித்தனர்.

சி.ஆர்.ஐ - பெஸ்ட் தொழிலாளர் போராட்டம்
வர்க்கச் சீருடையான சிவப்புச் சட்டைகளுடன் தோழர்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தவாறு ஆட்சியர் அலுவலகத்தின் முகப்பை அலங்கரித்தனர்.

முழக்கங்கள் பொறித்த மேலங்கிகளுடன் தொழிலாளிகளும் அவரவர் தம் குழந்தைகளும் பெண்களும் அலுவலகத்தின் அனைத்து திசைகளிலும் அடையாளங்களாய் நின்று கொண்டிருந்தனர்.

தகித்து கொண்டிருந்த அக்கினி நட்சத்திரத்தை மீறும் தகத்தகாய சூரியன்களாய் கீழே அமர்ந்து தார் சாலையை தலைகள் மட்டும் தெரியும் படி நிறைத்திருந்தனர்.

சி.ஆர்.ஐ - பெஸ்ட் தொழிலாளர் போராட்டம்
வர்க்கக் கோபம் தெறிக்கும் தொழிலாளிகளின் முழக்கம்

ஆட்சியர் பேச்சு வார்த்தையின் முடிவில், “வரும் புதனன்று தாசில்தார் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடக்கும்” என அறிவித்தார். எந்த தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடக்கும் என அறிவித்தாரோ அதே தாசில் தார் தான் சி‌.ஆர்‌.ஐ கதவடைப்பு நிகழ்ந்த மறு நாள் வந்து, “இது சட்டவிரோத கதவடைப்பு உடனடியாக திறக்க வேண்டும்” என அறிவித்தார். இப்படியான இந்த சட்டத்தின் அதிகாரபூர்வ பிரதிநிதிகளின் ஆணைகளை மயிருக்கு சமானமாக பார்க்கும் சி‌.ஆர்‌.ஐ முதலாளியுடன் பேச்சுவார்த்தையாம். அவர் பேச்சுவார்த்தைக்கு வராததால் தான் இவ்வளவு போராட்டமும் என்பது அறியாதவரல்ல கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா.

துரோகி சி.ஆர்.ஐ பம்ப்ஸ் முதலாளி சௌந்திரராஜன் நோட்டீஸ்

[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

வெளியில் வந்து நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது சி‌.ஆர்‌.ஐ செயலாளரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கோவை மாவட்டத் தலைவருமான தோழர் குமாரவேல், “நாங்கள் ஏற்கெனவே பல முறை பல இடங்களில் மனு கொடுத்தாயிற்று. கம்பெனியின் வாசலில் 60 நாட்களாய் கிடக்கிறோம். இத்தனை நாட்களாக கதவடைப்பு என்பதை ஒத்துக் கொண்ட சௌந்திர ராஜன் இப்போது உற்பத்தி நிறுத்தம் எனும் புதுக் கதையை கட்டுகிறார். இந்த சட்டத்தின் முன்பு எங்கள் போராட்டங்கள் எல்லைகளை கடந்து நடந்து கொண்டிருக்கிறது. இப்படி மனு கொடுப்பது இது தான் இறுதி முறை இந்தப் போராட்டத்தை நாங்கள் மக்கள் முன் எடுத்துச் செல்லப் போகிறோம்.

ஆயிரம் பவுனும் கணக்கிலடங்கா சீர்வரிசைகளுடன் கூடிய டாம்பீகத் திருமணத்தின் அழைப்பிதழ் ஆடம்பரம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அடுத்த மாதம் 8-ம் தேதி சௌந்திர ராஜன் தனது மகளுக்கு திருமணம் நடத்தப் போகிறார். அது சாதாரணத் திருமணம் அல்ல. ஆயிரம் பவுனும் கணக்கிலடங்கா சீர்வரிசைகளுடன் கூடிய டாம்பீகத் திருமணம். இதே கோவையில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு தேய்ந்து போன டயருடன் பஞ்சர் கடைக்கும் வீட்டிற்கும் தனது இத்துப் போன ஸ்கூட்டரில் அலைந்து கொண்டிருந்த சௌந்திர ராஜன் இன்று இந்த நிலைமைக்கு உயர்த்திய தொழிலாளர்களை வெளியே தள்ளிய சௌந்திர ராஜனது வீட்டு திருமணத்திற்கு சென்று போராடுவோம்” என எச்சரித்து கனல் மூட்டினார்.

சி.ஆர்.ஐ - பெஸ்ட் தொழிலாளர் போராட்டம்அழுகைகளையும் ஆறுதல்களையுமே அதிகம் பார்த்திருந்த அந்த ஆட்சியர் அலுவலகத்தின் குறை தீர்ப்பு நாள், முதல் முறையாக வர்க்கக் கோபம் தெறிக்கும் தொழிலாளிகளின் முழக்கத்தினால் சற்று பூரித்துத் தான் போயிருக்கும்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க