Sunday, July 21, 2024
முகப்புமறுகாலனியாக்கம்கல்விஐ.ஐ.டி தடை - APSC ரமேஷ் நேர்காணல் - வீடியோ

ஐ.ஐ.டி தடை – APSC ரமேஷ் நேர்காணல் – வீடியோ

-

அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்துக்கு தடை

ஐ.ஐ.டி நிர்வாகத்தின் பொய்களுக்கும், அவதூறுகளுக்கும் எதிராக…

உண்மையில், அங்கே நடந்தது என்ன?

ஐ.ஐ.டி ஆராய்ச்சி மாணவர் திரு ரமேஷ் – நேர்காணல்

பெரியார் - அம்பேத்கர்
“பெரியார் அம்பேத்கர் சொன்ன கருத்துகளின் அடிப்படையிலிருந்து நாங்க இந்து மதத்தை கேள்விக்கு உட்படுத்துறோம்.”

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் ஐ.ஐ.டியின் நடத்தை விதிகளை மீறி விட்டதாக சொல்கிறார்களே. அது என்ன நடத்தை விதி? அதன் எந்தப் பிரிவை மீறி விட்டீர்கள்?

code of conduct-னு, விதிமுறைகள்னு ஏதும் ஐ.ஐ.டி-ல இல்ல. இந்தப் பிரச்சனைக்கு அப்பறம் தங்களை தற்காத்துக் கொள்வதற்காகத்தான் இப்படி புதுசா ஒண்ணு கொண்டு வர்றாங்க.

நீங்கள் ஐ.ஐ.டி-யினுடைய பெயரை முறைகேடாக பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்று சொல்கிறார்களே?

ஐ.ஐ.டி-யினுடைய எம்ப்ளத்தை வச்சி எல்லாம் நாங்க போஸ்டர் எதுவும் போடக் கிடையாது. நாங்க initiated by IITM students-னு, ஐ.ஐ.டி மெட்ராஸ்ல படிக்கக் கூடிய மாணவர்கள்னு சொல்லியிருக்கோம், அவ்வளவுதான். பிரசிடென்சி காலேஜ் மாணவர்கள் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக போராட வர்றாங்கன்னா பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள்னு அவங்களோட பேனர்ல போட்டுப்பாங்க. அப்படித்தான் போட முடியும். அதே மாதிரி ஐ.ஐ.டியினுடைய மாணவர்கள்னு நாங்க போட்டிருக்கோம்,

ஐ.ஐ.டி கான்பூர் மாணவர்கள்
“இத சாதாரண அம்பேத்கர் பெரியார் ஸ்டடி சர்க்கிள் பிரச்சனையா பார்க்கல. இந்தியாவில இருக்கக் கூடிய எல்லா உயர்கல்வி நிலையங்கள்லயும் பிரச்சனையாத்தான் இருக்கும்.” (அம்பேத்கர் – பெரியார் தடையை கண்டித்து ஐ.ஐ.டி கான்பூர் மாணவர்கள்)

ஆனால், மற்ற கலைக்கல்லூரிகளை விட ஐ.ஐ.டியில் மாணவர்களுக்கு சுதந்திரம் அதிகம் என்றல்லவா சொல்கிறார்கள்?

அப்படியெல்லாம் கிடையாது. இங்க மாணவர்களுடைய நடவடிக்கைகள் அத்தனையும் முழுசாகவே கண்காணிக்கப்படுது.  கடந்த 4 வருட காலமாக ஐ.ஐ.டிக்குள்ள சி.சி.டி கேமரா எல்லா டிபார்ட்மெண்ட்லயும் பொருத்தியிருக்காங்க. இன்னும் வெளியிடங்கள்ள பொருத்தறதுக்காக contract விட்டிருக்காங்க, மாணவர்கள் ஆஸ்டல் சைட், ரோட் சைட் எல்லாம் கண்காணிக்கறதுக்காக. இங்க கடுமையான கண்காணிப்பு உண்டு. நீங்க என்ன செஞ்சாலும் அட்மினுக்குத் தெரியும்.

உங்கள் செயல்பாடுகளுக்கு முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று சொல்கிறார்களே?

அப்படி முன் அனுமதி பெற்று யாரும் செய்றது கிடையாது. எடுத்துக்காட்டுக்கு ஒரு விஷயத்தை சொல்லலாம். இஸ்கான் – ஹரே ராமா ஹரே கிருஷ்ணா  – வாரா வாரம் பஜனை நடத்துறாங்க. இந்த பஜனைக்காக வாரா வாரம் போய் அவங்க அட்மின் கிட்ட, டீன் ஆஃப் ஸ்டூடன்ட்ஸ் கிட்ட கையெழுத்து வாங்கிட்டு வர்றதில்ல.

அப்போ இந்து மத பிரச்சாரத்துக்கு சுதந்திரம் உண்டு, மதத்தை விமர்சனம் செய்ய சுதந்திரம் கிடையாதுன்னு சொல்லலாமா?

உண்மையா, அதுதான் அங்க பிரச்சனையா இருக்கு. பெரியார் அம்பேத்கர் சொன்ன கருத்துகளின் அடிப்படையிலிருந்து நாங்க வெளிப்படையாக இந்து மதத்தை கேள்விக்கு உட்படுத்துறோம். அதுதான் அவங்களுக்கு பிரச்சனையா இருக்கு.

அம்பேத்கர் - பெரியார் பெயர்
“இந்தப் பேரு polarising ஆ இருக்கு. நீங்க பேர மாத்துங்க, ஒரு ஜெனரலைஸ்ட் நேம் வச்சிக்குங்க” (படம் : பேஸ்புக்கிலிருந்து)

இந்து மதப் பிரச்சாரத்துக்குதான் அனுமதி என்கிறீர்களா? அல்லது இந்து மதவெறி பிரச்சாரத்துக்கும் அனுமதி இருக்கிறதா?

குருமூர்த்தி தொடர்ந்து பேச உள்ளே வர்றாரு. அவர் ஆர்.எஸ்.எஸ்-னுடைய கருத்தை முன் வைத்து பல்வேறு விதங்களில் சரி என்று பேசுவதற்கு எல்லா டிபார்ட்மென்டுக்கும் வருவார். எகனாமிக்ஸ் டிபார்ட்மென்ட்ல, மத்த ஸ்டூடன்ட்ஸ் ஆர்கனைசேஷன், ரைட் விங் ஆர்கனைசேஷன்ல வந்து பேசுவாரு. இன்ஸ்டிட்யூட்டே சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் டேகுக்குள்ள கூப்பிடுவாங்க. ஆனா அவரு பேசுவது எல்லாமே ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவா கருத்துக்களாத்தான் இருக்கும்.

ரொம்ப குறிப்பா சொல்றதா இருந்தா, 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு 6 மாத காலத்துக்கு முன்னாடியே, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே, இவங்க முழுமையா பி.ஜே.பிக்கு சார்பாக எல்லா நடவடிக்கைகளும் நடத்தினாங்க. பி.ஜே.பிக்கு ஓட்டு போடணும் என்று சங்க பரிவார ஆதரவு மாணவர்கள் உள்ளேயே பிரச்சாரம் பண்ணினாங்க.

டெல்லியில காங்கிரஸ் ஆட்சியில நடந்த போதே ஐ.ஐ.டியில பா.ஜ.க ஆட்சி நடந்தது என்று சொல்கிறீர்களா?

ஆமா. கிரண் பேடி உள்ள டாக் குடுக்கும் போது பி.ஜே.பிதான் கரெக்ட். நான் பி.ஜே.பிக்குதான் ஆதரவு தரப் போறேன். அதையே நீங்க பண்ணணும் என்று மேடையிலேயே நின்னு பேசி முடிச்சிட்டு போனாங்க.

காங்கிரஸ் - பா.ஜ.க
டெல்லியில காங்கிரஸ் ஆட்சியில நடந்த போதே ஐ.ஐ.டியில பா.ஜ.க ஆட்சி நடந்தது (படம் : பேஸ்புக்கிலிருந்து)

உங்களுடைய படிப்பு வட்டத்திற்கு ஐ.ஐ.டி வழங்கும் சலுகைகள் என்ன?

இல்ல. ஐ.ஐ.டில இருந்து எங்களுக்கு எதுவுமே கொடுக்கறது இல்ல. ஒரே ஒரு விஷயம் மட்டும் கொடுக்குறாங்க. நாங்க கிளாஸ் ரூம்ச வாங்கிக்கிறோம். அது ஐ.ஐ.டி நிர்வாகம் கொடுக்கல. நாங்க வேறு ஒரு பேராசிரியர் துணையோடு அவரு வாங்கிக் கொடுப்பாரு. ஐ.ஐ.டியிடமிருந்து எந்தவித சப்போர்ட்டும் கிடையாது. கூட்டங்களை நடத்துவதற்காக மாணவர்கள் கிட்ட உண்டியல் ஏந்தி  ஸ்பீக்கர்சுக்கு, பேம்ப்லட்ஸ், போஸ்டருக்கு உண்டான செலவுகள் எல்லாத்தையும் பண்ணியிருக்கோம்.

ஆனால், கிரண்பேடி, குருமூர்த்தி கூட்டங்களுக்கு ஐ.ஐ.டி பணம். அப்படித்தானே?

ஆமா, ஆமா. ஐ.ஐ.டிதான் பணம் கொடுத்திருக்கு. அது ஐ.ஐ.டியுடைய பணத்திலருந்துதான் நடக்குது. இதுக்குண்டான வரவு செலவு எதுவும் மாணவர்கள் மத்தியில வெளியிடுவது இல்ல. மக்களுடைய வரிப்பணத்தை பி.ஜே.பி ஆட்சிக்கு வருவதற்காக நிர்வாகமே பயன்படுத்துது.

உங்களுடைய படிப்பு வட்டத்திற்கு அம்பேத்கர் – பெரியார் பெயரை வைக்கக் கூடாது என்று டீன் வெளிப்படையாகவே சொன்னாரா?

அவர்கிட்ட பேசப் போகும்போது டீன் சிவகுமார், “இந்தப் பேரு polarising ஆ இருக்கு. பின்னாடி பொலிடிக்கல் கலர் இருக்க மாதிரி இருக்கு. நீங்க பேர மாத்துங்க, ஒரு ஜெனரலைஸ்ட் நேம் வச்சிக்குங்க. இல்லாட்டி வேறு பேரு வச்சுக்குங்க” என்றார். நாங்க அது குறித்து அவர்கிட்ட டிபேட் பண்ண போகும்போது, “இதில டிபேட் பண்றதுக்கெல்லாம் ஒண்ணும் இல்ல. இது டீன் ஆஃப் ஸ்டூட்ன்ட்சுடைய ஆர்டர். இத நீங்க ஃபாலோ பண்ணணும்.” என்றார். இதே வார்த்தைய பயன்படுத்தினார். இது டீன் ஆஃப் ஸ்டூடன்சுடைய ஆர்டர்.

அப்போ பெயர்தான் பிரச்சனையா?

ஒட்டு மொத்த பிரச்சனையோட சாராம்சமே அம்பேத்கர் – பெரியார் ஸ்டடி சர்க்கிளில் பேசப்பட்ட விஷயங்கள் பார்ப்பனியத்திற்கு எதிரா இருக்கு. அதுதான் முக்கியமான விஷயமே.

உங்களுடைய படிப்பு வட்டத்தின் சார்பில் என்ன பிரச்சனைகளுக்காக கூட்டங்கள் நடத்தியிருக்கிறீர்கள்?

நாங்க சான்ஸ்கிரீட் இம்போசிஷன் எதிர்த்து லிங்குவிஸ்டிக்ஸ், ஏரியால வொர்க் பண்றவர வச்சு கூட்டம் நடத்தியிருக்கோம். கர் வாபசி பத்தி கூட்டம் நடத்தியிருக்கோம். பீஃப் பேன் பண்ணது பத்தி பேசியிருக்கோம்.

ஐ.ஐ.டி-ல நேம் போர்ட்ஸ் எல்லாம் ஹிந்தியிலயும் எழுதினாங்க. ஹிந்தியில எழுதினது ஹிந்தி படிச்சவங்களுக்கே தெரியல, இது அப்பட்டமான பார்ப்பனிய வெறி, இந்துத்துவா வெறி அப்படீன்னு நாங்க புரூவ் பண்ணி காமிச்சோம்.

லேண்ட் அக்விசிசன் பில் பத்தி, லேபர் லா பத்தி கூட்டம் நடத்தியிருக்கோம்.

இப்படி மக்களுடைய அடிப்படை வாழ்வை பாதிக்கக் கூடிய அரசாங்கம் கொண்டு வரக் கூடிய பொருளாதார கொள்கைகளை எதிர்த்தும், ஹிந்துத்துவா அடிப்படையில் கொண்டு வரக் கூடிய எல்லா திட்டங்களை குறித்து நாங்க பகிரங்கமா பேசியிருக்கோம். அனலைஸ் பண்ணி கட்டுரை எழுதியிருக்கோம். இது எல்லாமே, இப்ப நடந்துகிட்டு இருக்கிற அரசாங்கத்துக்கு எதிரானதா இருக்கு என்பதுதான் எங்க மேல் இருக்கிற குற்றச்சாட்டே.

பகத்சிங் பிறந்தநாள் கூட்டம் கூட நடத்த முடியாது என்று ஐ.ஐ.டி மறுத்து விட்டதாமே, உண்மையா?

பகத்சிங் பிறந்தநாள் செப்டம்பர் மாசம் வந்தப்ப அம்பேத்கர் பெரியார் ஸ்டடி சர்க்கிள்ல இருந்து எக்ஸ்ட்ரா முயூரல் லெக்சருடைய கோ-ஆர்டினேட்டர அணுகினோம். “பகத் சிங்க பத்தி பேசணும். அத நாங்க நடத்துறத விட, நீங்க நடத்துனீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும். நீங்க ஐ.ஐ.டி கிட்ட ஃபண்ட் வாங்கி நீங்க நடத்துங்க. சமன்லாலை கூப்பிடலாம்”னு சொல்லி மெயில் அனுப்பினோம். அதை எக்ஸ்ட்ரா ம்யூரல் லெக்சரோட கோர் டீமும் ஒத்துக்கல, ஃபாகல்டி அட்வைசரும் ஒத்துக்கல.

எக்ஸ்ட்ரா ம்யூரல் லெக்சருடைய கோர் மெம்பர் ஒருத்தர், ரிப்ளை பண்ணும் போது, “ஈ.எம்.எல் இதுக்கு சூட்டபிள் பிளாட்பார்ம் கிடையாது. நீங்க வேறு விதத்தில, வேற சப்போர்ட்ல நடத்திக்குங்க” என்று சொன்னாரு.

அவர்கிட்ட தனிப்பட்ட முறையில பேசும் போது அவர் முன் வைச்ச வாதம், ஐ.ஐ.டி உள்ளே இருக்கக் கூடிய பெரும்பான்மை மாணவர்களுக்கு பொதுவான ஒரு ஆளா பகத் சிங் இருக்க மாட்டாரு. சோ இப்படி நடத்துவது தேவையில்லாதது என்று ரிப்ளை பண்ணாரு.

ஆனா, அரவிந்தன் நீலகண்டன் ஒரு கூட்டம் நடத்தினாரு. அந்தக் கூட்டம் நடத்தப்பட்டதே, வலது சாரி சிந்தனை உள்ள மாணவர்களுக்கு மட்டும்தான். அரவிந்தன் நீலகண்டன் பேசினது ஐ.ஐ.டி மெட்ராஸ் பணம் கொடுத்து நடந்த லெக்சர்.

பார்ப்பனியத்தையும் வலதுசாரி கருத்துகளையும் பரப்புவதற்கு மக்கள் வரிப்பணத்தை ஐ.ஐ.டி சென்னை முறைகேடாக பயன்படுத்துகிறது என்று  குற்றம் சாட்டலாமா?

உண்மையா அப்படித்தான் பயன்படுத்தப்படுது. இத நான் சொல்றேன்னு பார்க்க வேணாம். பேஸ்புக்குக்குப் போய் eml-னு டைப் பண்ணினா என்ன லெக்சர் நடத்தியிருக்காங்கன்னு லிஸ்ட் வரும். அந்த லிஸ்ட பார்த்து யார் வேண்டும்னாலும் புரிஞ்சிக்கலாம்.

இப்ப இவ்வளவு நேரம் வலது சாரி சிந்தனை, இந்துத்துவா சிந்தனை சார்பா நடந்த லெக்சர பத்தி பேசிக்கிட்டிருந்தோம். இன்னொரு சைடு இருக்கு எல்லாமே கம்ப்ளீட்லி ப்ரோ கார்ப்பரேட்.

ஒரே ஒரு எடுத்துக்காட்டு சொல்றேன். சமீபத்தில இன்ஃபோசிஸ் நிர்வாகி கிருஷ் கோபாலகிருஷ்ணன், யஷ்வந்த் சின்ஹா வந்து பேசினர்.

கிருஷ் கோபாலகிருஷ்ணன் யஷ்வந்த் சின்ஹாகிட்ட டிமாண்ட் வைக்கிறாரு, கிருஷ் கோபாலகிருஷ்ணன். எங்களுக்கு டாக்ஸ், இந்தத் துறையில் வரிகள் சம்பந்தமான பிரச்சனைகள் பெரிய ஹர்டிலா இருக்கு. அத நீங்க ஃப்ரீ பண்ணி கொடுக்கணும். யூனியன், லேபர் லா சம்பந்தமான விஷயங்கள் சிக்கலா இருக்கு. இன்னும் எங்களுக்கு சார்பா மாத்திக் கொடுக்கணும்.

இனிமேல், ஐ.டி துறையில் 8 மணி நேர வேலை, மாதா மாதம் சம்பளம் கொடுக்கிறது எல்லாம் இல்ல. ஃபுல்லா ஆட்டமேசன் பண்ணப் போறோம். அவர் பேசிஸ்ல வேலை கொடுத்து வாங்கப் போறோம். இதுக்கெல்லாம் ஏற்றாற்போல நீங்க சட்டங்களை மாத்தணும். இப்படிப்பட்ட டிமாண்ட்களை வைக்கிறாரு, கிருஷ் கோபாலகிருஷ்ணன்.

அதுவும் எக்ஸ்ட்ரா மூரல் லெக்சர்தான், ஐ.ஐடி ஃபண்டட். இதோ போல் புரோ கார்ப்பரேட், கல்வியில் தனியார்மயத்தை எப்படி கொண்டுவ ருவது தொடர்பான நிறைய கான்ஃபரன்ஸ், நிறைய மீட்டிங் உள்ளே நடக்கும்.

இந்தப் போராட்டத்தில் உங்களுக்கு ஆதரவு எந்த அளவுக்கு இருக்கிறது?

அறிவுத்துறையினர் மத்தியில் பெரும்பான்மையினர் எங்களுக்கு ஆதரவு கொடுத்திருக்காங்க. ஐ.ஐ.டி பாம்பே ஸ்டூடன்ட் ஆர்கனைசேசன், டி.ஐ.எஸ் டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோசல் ஸ்டடீஸ்ல ஒரு ஸ்டூடண்ட் ஆர்கனைசேசன் எங்களுக்கு சப்போர்ட் பண்ணியிருக்குது.

எஸ்.எஃப்.ஐ முழு ஆதரவு கொடுக்கிறோம். சமன்லால் எங்களுக்கு ஆதரவா பேஸ்புக்கில் எழுதியிருக்கிறார். அருந்ததி ராய், உங்களுக்கு சார்பா நான் ஸ்டேட்மென்ட் தர்றேன் என்று சொல்லியிருக்காங்க

நியூயார்க் டைம்ஸ், பி.பி.சி இந்தியா, கார்டியன் இது மாதிரி விஷயங்களில் இருந்து கூட எங்களுக்கு ஆதரவு வந்திருக்கு.

இத சாதாரண அம்பேத்கர் பெரியார் ஸ்டடி சர்க்கிள் பிரச்சனையா பார்க்கல. இந்தியாவில இருக்கக் கூடிய எல்லா உயர்கல்வி நிலையங்கள்லயும் பிரச்சனையாத்தான் இருக்கும். பேஸ்புக்ல ஐ.ஐ.டி மும்பையில இருந்து ஷேர் பண்ணியிருந்தாங்க. சமீபத்தில காஷ்மீர்ல இருந்து ஒரு லெக்சரரா கூட்டி வந்து கூட்டம் நடத்தினாங்களாம். ஐ.ஐ.டி மும்பை நிர்வாகம், காஷ்மீர் ரொம்ப சென்சிடிவான இஷ்யூ, அதை நடத்தக் கூடாதுன்னு தடை விதிச்சிட்டாங்களாம்.

இது ரொம்பத் தவறானாது. இது இந்தியா முழுக்க எல்லா பகுதிகளிலும் நடக்குது.

அம்பேத்கர் பெரியாரில் தொடங்கி, நில அபகரிப்பு சட்டம், தொழிலாளர் சட்ட திருத்தம், காஷ்மீர் பிரச்சனை வரை அனைத்திலும் மக்களுக்கு எதிரான கருத்தை மட்டும்தான் ஐ.ஐ.டி நிர்வாகம் ஊக்குவிக்கும் என்று நாம் கூறலாமா?

அப்படித்தான், அப்படி எடுத்துக்கலாம். ஐ.ஐ.டி நிர்வாகமே நடைமுறையில் அப்படித்தான் நடக்குது. உள்ள யார் வேண்டும்னாலும் புரிஞ்சிக்கலாம். அது ரகசியம் கிடையாது. வெளிப்படையான உண்மை அது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க