Sunday, July 21, 2024
முகப்புஅரசியல்ஊடகம்மோடியின் ஓராண்டு ஆட்சி : ஒப்பனை கலைந்தது !

மோடியின் ஓராண்டு ஆட்சி : ஒப்பனை கலைந்தது !

-

டகங்களாலும் இந்துத்துவப் பரிவாரங்களாலும் ஊதிப்பெருக்கப்பட்ட மோடி அலை இப்போது புஸ்வாணமாகிவிட்டது. கடந்த மே 26 அன்று இரண்டாமாண்டில் அடியெடுத்து வைத்த மோடியின் ஆட்சியானது, நாடு முழுவதும் கடும் அதிருப்தியையும் வெறுப்பையும்தான் எதிர் கொண்டிருக்கிறது.

ஜெர்மானிய ஏகபோக முதலாளிகள் பாசிச இட்லரை விளம்பரப்படுத்தி அதிபராக்கியதைப் போலவே, இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் மோடி என்ற பிம்பத்தை ஊதிப்பெருக்கி ‘வளர்ச்சியின் நாயகனாக’ விளம்பரப்படுத்தினர். முந்தைய காங்கிரசு கூட்டணி ஆட்சியின் பிரதமரான மன்மோகன் வளர்ச்சியைச் சாதிக்கத் தெரியாதவர், திறமையில்லாதவர் என்று குற்றம் சாட்டி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சியைக் கொண்டுவருவோம் என்ற பொய்களின் ஒளிவெள்ளத்தில் நாட்டு மக்களின் கண்களைக் குருடாக்கி மோடி கும்பல் ஆட்சியைக் கைப்பற்றியது. அவர் பதவியேற்றதும் நல்ல காலம் பொறக்குது என்று பா.ஜ.க.வும் அதன் கூலிப்படையாக வேலை செய்யும் ஊடகங்களும் கோயபல்சு பாணியில் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டன.

மோடியின் ஓராண்டு ஆட்சி : ஒப்பனை கலைந்தது!கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து பொருளாதார மந்தத்திலும் நெருக்கடியிலும் அமெரிக்க – ஐரோப்பிய பொருளாதாரங்கள் சிக்கிக் கொண்டிருப்பதோடு, சந்தை வற்றிப்போய் அந்நாடுகளின் ஆளும் கும்பலே எதை உற்பத்தி செய்வது, எங்கே சந்தையைத் தேடுவது, யாரிடம் விற்பது என்று புரியாமல் தடுமாறும் போது, அந்நாட்டின் ஏகபோக முதலாளிகள் இந்தியாவில் வந்து முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது கேழ்வரகில் நெய்வடிந்த கதைதான். இந்தியாவைவிட பெருமளவு மனித வளத்தையும் அடிக்கட்டுமான வலிமையையும் ஏற்றுமதிக்கான சந்தையையும் பெற்றுள்ள சீனா, ஏற்கெனவே இத்திசையில் பயணப்பட்டு நெருக்கடிகள் முற்றி நகர முடியாமல் தவிக்கும்போது, நான் வானத்தை வளைக்கப் போகிறேன், மணலைக் கயிறாகத் திரிக்கப் போகிறேன் என்று கோமாளித்தனமாக வெற்றுச் சவடால் அடித்து ஆரவாரம் செய்தது மோடி கும்பல்.

முந்தைய காங்கிரசு கூட்டணி ஆட்சியை விஞ்சும் வகையில் நாட்டை மீண்டும் காலனியாக்குவதைத் தீவிரப்படுத்தினால், ஏகாதிபத்தியவாதிகளின் நம்பிக்கையைப் பெற்று முதலீடுகளை ஈர்த்து வளர்ச்சியைச் சாதித்துவிடலாம் என்று மனப்பால் குடித்தது.

தொழிலாளர் போராட்டங்கள், தொழிற்சங்கச் சட்டங்கள் முதலான சிக்கல்கள் இருப்பதால்தான், அந்நிய முதலீடு வரவில்லை என்று கூறி, தொழிலாளர் உரிமைகளைப் பறித்து தொழிலாளர் சட்டத் திருத்தம்; சாதகமான இடத்தில் தொழில் தொடங்க நிலம் இல்லாததால்தான் முதலீடுகள் வரவில்லை என்று கூறிக் கொண்டு விளைநிலங்களை விவசாயிகளிடமிருந்து பறிக்க நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டம், காடுகளையும் கனிம வளங்களையும் கார்ப்பரேட் முதலாளிகள் சூறையாடுவதற்கேற்ப சுற்றுச்சூழல் சட்டவிதிகள் திருத்தம், வங்கி- காப்பீடு துறை மற்றும் இராணுவத் துறையிலும் அந்நிய நேரடி முதலீட்டுக்கு தாராள அனுமதி, கோடிகோடியாய் வரிச்சலுகைகள் – என இந்தியாவை பட்டாபோட்டுக் கொடுப்பதாக உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளிடம் மோடி கும்பல் சத்தியம் செய்து கொடுத்தது. ஆனாலும் முதலீடுகள் வரவில்லை.

ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட “மேக் இன் இந்தியா” திட்டத்தின் மூலம் ஏகாதிபத்திய நாடுகளின் சந்தைக்காக மலிவு விலையில் பொருளுற்பத்தியையும் அயல்பணிகளையும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்து, உலக நாடுகளெங்கும் மோடி சுற்றுப்பயணம் செய்து கார்ப்பரேட் முதலாளிகளை அழைத்த போதிலும் குறிப்பிடும்படியாக எந்த அந்நிய முதலீடும் வரவில்லை. எல்லா வகையிலும் கரணம் அடித்துப் பார்த்தாலும் இந்தியப் பொருளாதாரம் ஒரு அங்குலம் கூட நகராமல் முடங்கி நிற்கிறது. புதிய நகரங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் சாலைப்பணிகள் உள்ளிட்ட அடிக்கட்டுமானத் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ 2.5 லட்சம் கோடி நிதிஒதுக்கீடு செய்தும், தனிநபர் வருமான வரி, சுங்கவரி, கலால்வரி ஆகியற்றில் மேலும் பல்லாயிரம் கோடிக்கு வரி விலக்குகள் அளித்தும், அதன் மூலம் இந்திய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரிக் கொடுத்த போதிலும் குறிப்பிடும்படியான எந்த வளர்ச்சியும் இல்லை. மோடி கும்பல் அறிவித்த எட்டு சதவீத பொருளாதார வளர்ச்சி என்பது புஸ்வாணமாகிவிட்டது.

ஏற்கெனவே, பல ஆசிய நாடுகள் சூடுபட்டுள்ள நிலையில், இது நடைமுறைக்கு ஆகாத திட்டம் என்றும், ஏற்கெனவே இது இந்தியாவில் வேறு பெயரில் செயல்படுத்தப்பட்டு பயனளிக்காத கொள்கை என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் வெளிப்படையாகவே மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை விமர்சித்துள்ளார். ஆளும் வர்க்கத்தின் ஒருபிரிவு, மோடியின் திட்டங்களால் ஈர்க்கப்படாமல், அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

நிலம் கையகப்படுத்தல சட்ட எதிர்ப்பு
மண்ணைப் பறித்து மக்களைக் கொல்லும் தேசத்துரோகி மோடி கும்பலின் நிலம் கையகப்படுத்தல் திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

திவாலாகி நிற்கும் இன்றைய உலகப் பொருளாதாரச் சூழலில் என்ன செய்வது என்று ஏகாதிபத்தியவாதிகளே தத்தளிக்கும்போது, அந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத அடிமுட்டாள்களான மோடி கும்பல், அந்த யதார்த்த நிலையை மீறி எதுவும் செய்ய முடியாமல் இப்போது கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது. தனது தோல்வியை மறைக்கவும், பொருளாதாரத் தாக்குதல்களால் குமுறிக் கொண்டிருக்கும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும் இந்துவெறித் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டும், போராடும் மக்களின் மீது அரசு பயங்கரவாத அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறது.

தனது தோல்விகளை மறைத்து, ஒரு மந்திரவாதியைப் போல எல்லோருடைய கவனமும் தன்பக்கம் இருக்க வேண்டுமென்பதற்காக ஓயாமல் தன்னைப் பற்றியும் தன்னுடைய பராக்கிரமங்களைப் பற்றியும் தேர்ந்த நடிகரைப் போல பஞ்ச் டயலாக்குகளை அவிழ்த்துவிட்டு நாட்டு மக்களின் காதில் பூச்சுற்றுவதுதான் மோடி கும்பலின் முதன்மை வேலையாகிப் போனது. சினிமாவுக்கு கவர்ச்சியாக டைட்டில் வைப்பதைப் போல, புதுப்புது திட்டங்களை மோடி கும்பல் ஆரவாரமாக அறிவித்த போதிலும், அது எந்த வகையிலும் மக்களை ஈர்க்கவில்லை.

அப்புறம் வேறு எதைத்தான் மோடியின் சாதனையாகக் காட்டுவது?

மோடியின் ஆட்சியில் கடந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) அதிகரித்துள்ளதாகவும், அதில் செலவுகளின் அளவு குறைந்துள்ளதாகவும் பா.ஜ.க. பெருமையுடன் கூறுகிறது. ஆனால், மொ.உ.உற்பத்தி தொடர்பான மதிப்பீட்டு முறையில் தில்லுமுல்லு செய்துள்ளதால்தான் இந்த உயர்வு என்று முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்களே உண்மையைப் போட்டு உடைத்துள்ளனர். மேலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைச் சரிவால்தான் செலவுகள் குறைந்துள்ளதாகக் காட்ட முடிந்துள்ளதேயன்றி, மோடியின் நிர்வாகத் திறமையால் செலவுகள் குறையவில்லை என்பதும் அம்பலமாகிவிட்டது.

கடந்த ஓராண்டில் ஊழலற்ற ஆட்சியை அளித்துள்ளதாக மார்தட்டிக் கொள்ளும் மோடி, நாடறிந்த ஊழல் கிரிமினலான ஜெயா மீண்டும் முதல்வராகியுள்ளதற்கு வாழ்த்து தெரிவிக்கிறார். ஜெ.கும்பலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்று தமிழக வளர்ச்சிக்கு துணிச்சலும் திறமையும் உள்ள ஜெ.முதல்வராக வேண்டுமென்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன். நிதியமைச்சரான அருண் ஜெட்லி ஜெயலலிதாவைச் சந்தித்த பிறகு ஜெ. கும்பலின் வருமான வரி வழக்கை ஊத்திமூடிவிட்டு, ஜெ. கும்பலுடன் சமாதான சகவாழ்வு நடத்திக் கொண்டே ஊழல் எதிர்ப்பு சவடால் அடிக்கும் மோடி கும்பலின் பித்தலாட்டம் நாறிப்போயுள்ளது.

எல்லா வகையிலும் தோல்வியடைந்து அம்பலப்பட்டு தனிமைப்பட்டுப் போயுள்ள நிலையில், ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் வளர்ச்சியைச் சாதிக்கத் துடிக்கும் மோடியை அவசரக் குடுக்கைத்தனமாக விமர்சிப்பது சிறுபிள்ளைத்தனமானது என்று பார்ப்பன ஊடகங்களின் உபதேசத்தை ஏற்று இன்னமும் மோடி கும்பலை சகித்துக் கொண்டிருப்பதா, அல்லது என்னென்ன துறைகளில் மோடியின் ஆட்சி சாதித்துள்ளது, எதில் சாதிக்கவில்லை என்று மதிப்பெண் போட்டுக் கொண்டிருப்பதா, அல்லது இக்கும்பலை தூக்கியெறிந்து மக்கள் அதிகாரத்தை நிறுவுவதற்கான போராட்டப் பாதையில் செல்வதா என்பதே நாட்டு மக்கள் முன்நிற்கும் மையமான கேள்வி.

– மனோகரன்
____________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2015
____________________________

  1. ஐயோ பாவம், லலித் மோடி மனைவிக்கு புற்று நோய். ஆபரேஷன் செய்யப் போறாங்களாம்.. நாம உதவாட்டா எப்படி என்று பதறியடித்து மனிதாபிமான உதவியை செய்துள்ளதாக கூறி வருகிறார் சுஷ்மா சுவராஜ். ஆனால் மறுபக்கமோ மனைவிக்கு புற்று நோய் என்பதைப் பற்றி கொஞ்சம் கூட வகைப்படாமல் ஜாலியாக மது விருந்து, மாதுக்களுடன் நடனம் என்று கேளிக்கை உலகில் திளைத்து வருகிறாராம் லலித் மோடி. இந்த மோடிக்குத்தான் மனிதாபிமான உதவியைச் செய்துள்ளதாக கூறுகிறார் சுஷ்மா சுவராஜ்

  2. தன் கையில் கிடைத்த இலவச பொருட்கள் மூலம் ஆட்சியை அளக்கிறார்கள் சிலர் . இன்னும் சிலரோ வீட்டின் விலை உயர்வா பொறுத்து அளக்கிறார்கள் . இன்னும் சிலரோ சென்செக்ஸ் மூலம் அளக்கிரார்க்ல் .

    மோதி நிறைய கசப்பு மருந்துகளை
    கொடுத்து உள்ளார்.சோசியகழிச ப்ரொாஜக்டுகளை கென்சல் செய்துவிட்டார் . விரைவில் ரயில்வே தனியார் மயம் என்னும் கசப்பு மருந்து தரப்பட வீருக்கிறது.

    சரியான பாதையில் நாட்டை வழி நடத்திக்கொண்டு இருக்கிறார் . மடாவாத சக்திகளை காட்டுக்குள் வைக்க தவருகிறார் . காங்கிரஸ் கொண்டுவந்தது என்று ஆடாற் அட்டைகளை கென்சல் பண்ணாமல் சிறப்பாக முன்னெடுத்து செல்கிறார் .

  3. செல்பி ஆர்வலர் மோடி ஏழை பக்கம் இல்லை ! முதலாளி பக்கமும் பணக்காரர்களின் பக்கமும் தான். ஏழையெல்லாம் எக்கேடு கெட்டோ போங்க நான் பணக்காரனுக்கு தான் பட்டு கம்பளம் விரிப்பேன் என்று சொல்கிறார். விவசாயம் அழிந்தாலும் பரவாயில்லை கார்பரேட்டுக்கு நிலம் கொடுப்பதில் முக்கியதுவம் கொடுக்கிறார். தொல்லையில்லாமல் நிலம் பிடுங்கும் சட்டம் இயற்றுவதற்கு முக்கியதுவம் கொடுக்கிறர். தேவையில்லாமல் யோகாவை வைத்து பில்டப் கொடுக்கிறார். போட்டோ கேமராவிற்கும் மக்கள் காசில் ஊர் சுத்தவும் செய்கிறார். ஆத்தோட போற தண்ணி அய்யா குடி அம்மா குடி !!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க