Saturday, December 4, 2021
முகப்பு உலகம் ஐரோப்பா கால்பந்தில் ஊழல் கோல் மழை

கால்பந்தில் ஊழல் கோல் மழை

-

ன்னாட்டு கால்பந்து சங்கங்களது கூட்டமைப்பான ஃபிஃபா-வின் (FIFA-Fédération Internationale de Football Association) தலைவர் செப் பிளட்டர் ஜூன் 2-ம் தேதி தனது தலைமை பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த ‘விருப்ப ஓய்வின்’ காரணம் என்ன?

பன்னாட்டு கால்பந்து சங்கங்களது கூட்டமைப்பான ஃபிஃபா-வின் தலைவர் செப் பிளட்டர்
பன்னாட்டு கால்பந்து சங்கங்களது கூட்டமைப்பான ஃபிஃபா-வின் தலைவர் செப் பிளட்டர்

2010-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமையைக் கொடுப்பதற்காக தென்னாப்பிரிக்காவிடம் ஒரு கோடி டாலர் (சுமார் ரூ 65 கோடி) லஞ்சம் பெற்றதாகவும், 2018-ம் ஆண்டு ரஷ்யாவிலும் 2022-ம் ஆண்டு கத்தாரிலும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்த வாய்ப்பளிக்க அந்தந்த நாடுகளிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து பிளட்டர் பதவி விலகியுள்ளார்.

இந்த ஆண்டு மே மாதம் 14 ஃபிஃபா நிர்வாகிகள் மீது தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்தல், லஞ்சம், நிதித்துறை மோசடி மற்றும் கறுப்புப் பணத்தை வெளுப்பாக்குதல் ஆகிய குற்றங்களுக்காக அமெரிக்க நீதித்துறையால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் ஃபிஃபாவின் துணைத்தலைவர் உட்பட ஏழு தலைமை அதிகாரிகள் மற்றும் நான்கு விளையாட்டு மேலான்மை நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் $15 கோடி (சுமார் ரூ 1000 கோடி)-க்கு மேல் லஞ்சம் பெற்றதாக ஸ்விட்சர்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஃபிஃபா தலைமை அலுவலகத்தை சோதனையிட்டு மின்னணு தகவல் ஆதாரங்களை கைப்பற்றியுள்ளது போலீசு.

2018 மற்றும் 2022 உலகக்கோப்பை ஒதுக்கீடுகள் விவகாரத்துக்கு தனியாக ஒரு குற்ற வழக்கு பதியப் போவதாக சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேல்கட்ட விசாரணைக்காக அமெரிக்க நீதித்துறை கைது செய்யப்பட்டவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்குமாறு சுவிட்சர்லாந்தை கேட்டுக்கொண்டுள்ளது.

ஒபாமா - பிளட்டர்
‘இந்தியாவில் முதலாளித்துவம் இன்னும் வளரவில்லை. இது குரோனி கேப்பிடலிசம். ஆனால் ஐரோப்பாவில் எல்லாம் சூப்பராக்கும் தெரியுமோ?’ (அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பிளட்டர்)

இந்தக் கைதுக்கு பிறகு கிரிமினல் அடிமைகளின் அம்மா, ஜூனியர் கிரிமினல் அமைச்ச்சரை நீக்கி தன்னை யோக்கியமாக காட்டிக் கொள்வதைப்போல, சிக்கிய ஆடுகளை கூட்டமைப்பிலிருந்து தடை செய்தது ஃபிஃபா நிர்வாகம்.

பன்னாட்டு கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (FIFA) 111 ஆண்டுகளுக்கு முன் 1904-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் தொடங்கப்பட்டது. 1930-ம் ஆண்டு முதல் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தி வருகிறது. இவ்வமைப்பில் 208 நாடுகளைச் சேர்ந்த கால் பந்தாட்ட சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளன.  கடந்த 1998 முதல் 17 ஆண்டுகளாக செப் பிளட்டரே அவ்வமைப்பின் தலைவராக உள்ளார். பதவி விலகிய நான்கு நாளைக்கு முன்புதான் தொடர்ந்து 5-வது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று ஃபிஃபா மீது கூறப்படும் குற்றச்சாட்டு யாவும் நடந்துள்ள ஊழல் முறைகேடுகளில் ஒருசதவீதம் கூட இல்லை. பிரிட்டிஷ்  பத்திரிக்கையாளர் ஆண்ட்ரூ ஜென்னிங்ஸ் என்பவரால் ஃபவுல் (foul) என ஃபிஃபாவின் ஊழல், முறைகேடுகள், லஞ்சலாவண்யம், என நூற்றுக்கணக்கான பக்கங்கள் புத்தகமாக எழுதும் அளவுக்கு நாறுகிறது ஃபி்ஃபாவின் வரலாறு.

பிளட்டர் - ரொனால்டோ
இன்று ஃபிஃபா மீது கூறப்படும் குற்றச்சாட்டு யாவும் நடந்துள்ள ஊழல் முறைகேடுகளில் ஒருசதவீதம் கூட இல்லை. (கால்பந்தாட்ட வீரர் ரோனால்டோவுடன் செப் பிளட்டர்)

பல பத்தாண்டுகளாக உலகக்கோப்பை நடத்தியதில் பல்வேறு கால கட்டங்களில் நாடுகளுக்கு போட்டி நடத்தும் வாய்ப்பளிப்பது தொடங்கி ஒளிபரப்பு உரிமை வழங்குவது, ஸ்பான்சர்கள் வாங்குவது என எல்லா மட்டத்திலும் ஊழல் நடந்துள்ளது. 2002 மற்றும் 2006 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமை வழங்குவதற்க்காக ஐ.எஸ்.எல் என்ற நிறுவனத்திடமிருந்து ஃபிஃபாவின் முன்னாள் தலைவரும், தற்போதைய நிர்வாகக்குழு உறுப்பினருமான ஜோ ஹவெலேஞ் பல லட்சம் டாலர்கள் லஞ்சமாக பெற்றிருக்கிறார்.

இந்த நாடுகள் எதற்கு போட்டி போட்டுக் கொண்டு தங்கள் நாடுகளில் உலகக்கோப்பை போட்டியை நடத்த குடுமிச் சண்டை போட்டுக் கொண்டு கைய்யூட்டு அளிக்க முன் வருகின்றன ?

கால்பந்து விளையாட்டை வளர்க்கும் நோக்கத்துடன் வரிசை கட்டி நிற்க இந்த நாடுகள் முன்வரக் காரணம் என்ன? இவர்களது நோக்கம் எளிமையானதுதான். தேர்தல் திருவிழாவுக்கு ஸ்பான்சர் செய்யும் புரவலர்களான கட்டிட காண்ட்ராக்டர்கள், பாலம், கட்டடம், சாலை தொடங்கி, சுடுகாட்டு கொட்டகை வரை டெண்டருக்கு அடி போடுவதைப்பொல, பல்லாயிரம் கோடி பெறுமானமுள்ள அடிக்கட்டுமான திட்டங்களை பெறுவதற்கும், சுற்றுலா, உணவு விடுதிகள், தங்குமிடங்கள், விமானப் போக்குவரத்து ஆகிய சேவைத்துறை முதலாளிகள் கொழுப்பதற்கும் இந்த சங்கிலியில் அரசியல் அதிகாரவர்க்க முதலைகள் பொறுக்குவதற்கும் தான் இந்தப் போட்டியை நடத்துவதில் உள்ள போட்டி.

சுவிட்சர்லாந்தின் ஜூரிக் நகரில் உள்ள ஃபிஃபா தலைமையகம்
சுவிட்சர்லாந்தின் ஜூரிக் நகரில் உள்ள ஃபிஃபா தலைமையகம்

நம் நாட்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளும் அதில் நடந்த பகல் கொள்ளைகளுமே இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. காமன்வெல்த் மூலம் ஊழலை தவிர இந்த நாட்டு மக்களுக்கு கிடைத்தது என்ன? குடிமக்களுக்கு அடிப்படை வசதிகளைக்கூட தர முடியாதவர்கள் போட்டி நடத்துவது தில்லானா மோகனாம்பாள் ஜமீந்தாரைப்போல பவுசை காட்டவா? அல்லது வைத்தி போல வியாபாரத்திற்கா? அதே போன்று கிரிக்கெட் அதில் குறிப்பாக ஐ.பி.எல் போட்டிகளின் ஊழலைக் குறிப்பிடலாம்.

‘இந்தியாவில் முதலாளித்துவம் இன்னும் வளரவில்லை. இது குரோனி கேப்பிடலிசம். ஆனால் ஐரோப்பாவில் எல்லாம் சூப்பராக்கும், தெரியுமோ?’ என தாராளமயத்தின் பாதம் தாங்குபவர்கள் இதை என்ன சொல்லி அழுது நியாயப்படுத்துவார்கள்?

ஊழலும், லஞ்சமும் திறந்த சந்தைப் போட்டியின் பெட்ரோல். இது இல்லாமல் முதலாளித்துவத்தால் ஒரு அங்குலம் கூட நகர முடியாது. நெருக்கடி முற்றும் போதெல்லாம் செப் பிளட்டர் போன்ற மலையாடுகளில் ஒன்று சென்டிமெண்ட் நாடகத்தை அரங்கேற்றி மீண்டும் சுரண்டல் புதுவேகமெடுக்கும், இந்தப் பதவி விலகல் நாடகத்தின் கிளைமாக்ஸ் எப்படி இருக்கும்?

செப் பிளட்டர்
“நான் மலை ஆட்டை போன்றவன், மேலே ஏறிக்கொண்டே இருப்பேன். என்னை நிறுத்தி விட முடியாது…” – செப் பிளட்டர்

“நான் மலை ஆட்டை போன்றவன், மேலே ஏறிக்கொண்டே இருப்பேன். என்னை நிறுத்தி விட முடியாது…” சுவிட்சர்லாந்தின் நாளிதழ் ஒன்றிற்கான பேட்டியில் பிளட்டர் உதிர்த்த வார்த்தைகள் இவை.

இந்திய மருத்துவக்கழக ஊழல் பேர்வழி கேத்தன் தேசாய் இன்று உலக மருத்துவக்கழகத்தின் தலைவராகியிருப்பது போல, உச்சநீதி மன்றமே அதிசயமாய் காறித்துப்பிய பி.சி.சி.ஐ சீனிவாசன் இன்று ஐ.சி.சி தலைவராகியிருப்பது போல, நாளை செப் பிளட்டர் கால்பந்து விளையாட்டுக்கு ஆபத்து ஆபத்து என ஐ.நா.வில் ஏதாவது உயர்ந்த பதவியை ஏற்கக் கூடும்.

தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உலகமய காலகட்டத்தில் ஒரு விளையாட்டு என்பது விளையாட்டிற்குரிய நற்பண்புகளை இழந்து, பெரும் வியாபாரமாக தலையெடுத்து நிற்கிறது. அளப்பரிய இலாபத்தின் வாய்ப்பே பெரும் ஊழல்களையும் தோற்றுவிக்கிறது.

கால்பந்தில் கோல் அழகை ரசிகர்கள் வியந்தோதும் போது, முதலாளிகள் கணிசமான கருப்புபண இருப்பை அதிகரித்திருப்பார்கள். ஃபிஃபாவின் ஊழல் அதற்கு ஒரு முன்னோட்டம்.

–  எட்கர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க