privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விவிருத்தாச்சலம் : 5-வது கல்வி உரிமை மாநாடு - செய்தி, படங்கள்

விருத்தாச்சலம் : 5-வது கல்வி உரிமை மாநாடு – செய்தி, படங்கள்

-

டந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விருத்தாச்சலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மக்கள் மத்தியில் ”கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு” குறித்து தொடர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. கொள்ளையடிக்கும் தனியார்பள்ளிகளை தவிர்க்கவும், மக்கள் பணத்தில் நடத்தப்படும் அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க கோரியும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஜூன் 13, 2015 (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் விருத்தாச்சலம் திரு. கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியிலிருந்து தப்பாட்டம் முழங்க, பள்ளி மாணவர்கள் முன்வரிசையில் “ஆகா அரசுப்பள்ளி! அய்யோ தனியார்பள்ளி!” என முழக்கமிட்டு செல்ல, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க உறுப்பினர்களும், பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்த மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய உறுப்பினர்களும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சார்ந்த தோழர்களும் முழக்க அட்டைகளை கையில் உயர்த்தி பிடிக்க, ஒரு பிரமாண்டமான பேரணி துவங்கியது!

பேரணி துவங்கியது

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஓங்கி ஒலித்த தப்பாட்டமும், தப்பாட்ட கலைஞர்களின் ஆட்டமும், கல்வி தனியார்மயத்தை கண்டித்து ஒலித்த முழக்கங்களும் பொதுமக்களை நின்று கவனிக்க வைத்தன. விருத்தாச்சலத்தின் முக்கிய வீதிகளில் பேரணி பயணித்தது. மணி முக்தா ஆற்று பாலத்தை கடந்து இறுதியில் மாநாடு நடக்கும் வானொலித்திடலை அடைந்தது!

ஓங்கி ஒலித்த தப்பாட்டமும், தப்பாட்ட கலைஞர்களின் ஆட்டமும், கல்வி தனியார்மயத்தை கண்டித்து ஒலித்த முழக்கங்களும்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்கள் மத்தியில் திறந்தவெளியில் போடப்பட்டிருந்த மேடையில் “கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு” துவங்கியது!

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் மாவட்டச் செயலாளரான திரு வெங்கடேசன் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார்.

திரு வெங்கடேசன்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் மாவட்டச் செயலாளரான திரு வெங்கடேசன்

“தொடர்ந்து 5-வது ஆண்டாக இந்த மாநாட்டை விருத்தாச்சலத்தில் வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறோம்.

விருத்தாச்சலத்தை சுற்றி உள்ள அரசுப் பள்ளிகளில் செஸ் போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி என விளையாட்டு போட்டிகளை நடத்தினோம். மாணவர்கள் தங்கள் திறமையை உற்சாகத்துடனும், நுட்பமாகவும் வெளிப்படுத்தினார்கள். இவர்களுக்கு இன்னும் முறையாக சொல்லிக்கொடுத்தால், மாநில அளவில் இடம்பிடிப்பார்கள் என்பதை அறிந்தோம். அந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள்.

கல்வி உரிமைக்கான பெற்றோர் மாணவர் சங்கம் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் முயற்சியால் 2010-ம் ஆண்டு துவங்கப்பட்டு, ம.உ.பா. மையத்தின் ஒரு துணை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. 2011-ல் சமச்சீர் பாடத்திட்டத்தை ஆட்சியில் அமர்ந்ததும் ஜெயலலிதா ரத்து செய்தார். அதை எதிர்த்து விருத்தாச்சலத்தில் பல போராட்டங்களை முன்னெடுத்தோம்.

தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளையை எதிர்த்து பல போராட்டங்களை முன்நின்று நடத்தினோம். அரசு நியமித்த கட்டணத்தை பல பள்ளிகளில் வாங்க வைத்திருக்கிறோம். இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசோ மெளனமாக வேடிக்கை பார்க்கிறது. அரசு திட்டமிட்டு அரசுப் பள்ளிகளை புறக்கணிக்கிறது. பெற்றோர்கள் சங்கமாக இணைந்து போராடும் பொழுது தான் நமது உரிமைகளை வெல்லமுடியும். அதனால், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தில் இணையுங்கள்!”

மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சார்ந்த தோழர் துரை சண்முகம் துவக்க உரை நிகழ்த்தினார்.

துரை சண்முகம்
மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சார்ந்த தோழர் துரை சண்முகம்.

“பிரேசில் கல்வியாளர் ஒருவர் கூறியதை போல ‘கல்வியை பற்றி பேசுகிறோம் என்றாலே இந்த சமூகத்தைப் பற்றி பேசுகிறோம்’ என்று அர்த்தம். பணியில் இருக்கும் பொழுது ஊரைக் கெடுத்தது மட்டுமில்லாமல், ஓய்வு பெற்ற பிறகும் கோயில் கும்பாபிசேகம் என ஊரைக் கெடுப்பவர்கள் மத்தியில், மேடையில் இருக்கும் பல ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் பணி அழகானது. சிறப்பானது. இந்த வட்டாரத்தையே கல்வி காசாவதை தடுக்க தொடர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள்.

முன்பெல்லாம் ஒரு தொழிலாளிக்கு நாம்தாம் படிக்கவில்லை. நமது பிள்ளையாவது படிக்கட்டுமே என்ற சிந்தனை இருந்தது. ஆனால், இன்று நாம்தாம் தொழிலாளி. நமது பிள்ளையாவது முதலாளியாகட்டுமே என்ற அளவில் சிந்தனை மாறியுள்ளது. பலரும் தன் பிள்ளையை கலெக்டருக்கு படிக்க வைக்கணும்னு சிந்திக்கிறான். ஆனால் கலெக்டருக்கு வேலை என்னவென்றால், டாஸ்மாக் சரக்கு எப்படி அதிகம் விற்கிறது என ஓயாமல் சிந்திப்பது தான்!

ஆங்கிலம் படிப்பதால், நம் பிள்ளைகளுக்கு அந்தஸ்து கிடைக்குமென ஊடகங்களில் திட்டமிட்டே கல்வி முதலாளிகள் பரப்புகிறார்கள். கல்வி தனியார்மயம் என்பது ஒரு மிகப்பெரிய ஆபத்து.

அரசு பள்ளிகளில் வசதியில்லை என்றால் போராடி பெறுவது தான் சரி. அதற்காக தனியார் பள்ளிகளில் சேர்ப்பது எந்தவிதத்தில் சரி? அப்பா சரியில்லையென்றால் எதிர் வீட்டுக்காரை அப்பா என சொல்லமுடியுமா? அப்பாவை சரி செய்யவேண்டியது நமது கடமை.

மோடி அரசு 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் குலத் தொழிலை செய்யலாம் என சட்டமாக மாற்றுகிறான். இந்த சூழ்நிலையில் விவசாயம், தொழிற்துறை, கல்வி, மருத்துவம், அனைத்து பிரிவு மக்களையும் பாதிக்கும் தனியார்மயத்தை எதிர்ப்பது அவசியம்.”

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தை சார்ந்த திரு. . குணசேகரன், தஞ்சாவூர் “ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு அரசுப் பள்ளிகளை முன்னேற்றும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

குணசேகரன்
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தை சார்ந்த திரு. ந. குணசேகரன், தஞ்சாவூர்

“விருத்தாச்சலம் தமிழ்நாட்டிற்கே முன்மாதிரியான வேலையை செய்கிறது. குறிப்பாக ஓய்வு பெற்ற தொடக்க கல்வி அலுவலர், கல்வித்துறை சார்ந்தவர்கள் எல்லாம் தனியார் பள்ளிக்கு வேலைக்கு போய்விடுகிறார்கள். விருத்தாச்சலத்தில் மட்டும் தான் ஓய்வு பெற்ற பல ஆசிரியர்கள் கல்வி தனியார்மயமாவதை எதிர்த்து சமூக தொண்டு செய்கிறார்கள். இவர்கள் தான் சுயமரியாதைமிக்கவர்கள்.

ஆசிரியர்களை குறை சொல்லுகின்றன சில ஊடகங்கள். அரசு பள்ளியில் அர்ப்பணிப்பு உள்ள ஆசிரியர்களை பட்டியலிட்டால் அது மிக நீண்டு செல்லும். கல்பனா என்ற ஆசிரியர் ஒரு அரசு பள்ளியில் சேரும் பொழுது மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 10 பேர். அவர் வில்லுப்பாட்டு மூலம் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து, 150 மாணவர்கள் இப்பொழுது பள்ளியில் படிக்கிறார்கள்.

கல்வி அதிகாரிகளை அவ்வப்பொழுது மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கெல்லாம் மக்கள் எந்த ரியாக்சனும் காட்டுவதில்லை. தாராபுரத்தில் ஒரு அர்ப்பணிப்பு உள்ள ஆசிரியரை மாற்றல் செய்த பொழுது, ஊர் மக்களே ஒன்றாக கூடி, ஆசிரியரின் பணி மாற்றலை தடுத்து நிறுத்தினார்கள். ஆசிரியர்கள், பெற்றோர்கள் சங்கம் கையில் முழு அதிகாரமும் இருந்தால் கல்வி சமூகத்திற்கான கல்வியாக இருக்கும்.

தனியார் பள்ளிகளுக்கு சேவை செய்வதே அரசின் வேலை. 10ம் வகுப்பில் 400 மதிப்பெண்கள் எடுத்தால் தனியார் பள்ளியில் சேர்ந்து படிக்க அரசே ரூ.30,000 தருவதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் அரசு திட்டமிட்டே அரசு பள்ளிகள் தரமற்றது என்ற பிரச்சாரத்தை செய்கிறது.

ஒவ்வொரு தனியார் பள்ளியையும் நடத்துபவர்கள் ஓய்வு பெற்ற அதிகாரிகளும், ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் தான். அதனால் தான் அரசோடு இணைந்து திட்டமிட்டு அரசு பள்ளிகளை முடக்க எல்லா காரியங்களையும் செய்கிறார்கள்.

தமிழ் வழிக் கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தான் மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு முன்னுரிமை என மிகப்பெரிய போராட்டம் செய்யவேண்டும்.”

திரு. கோ. சீனுவாசன், உதவித் தொடக்க அலுவலர் (ஓய்வு), விருத்தாச்சலம்

சீனுவாசன்
திரு. கோ. சீனுவாசன், உதவித் தொடக்க அலுவலர் (ஓய்வு), விருத்தாச்சலம்

“நான் உதவி தொடக்க கல்வி அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவன். அரசுப் பள்ளிகளையும், அரசு உதவி பெறும் பள்ளிகளையும் கண்காணிப்பவர்கள் உதவி தொடக்க அலுவலர்களும், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்களும் தான். பள்ளிகளில் மாணவர்களை கல்வித்தரத்தை சோதிப்பது இவர்கள் தான். ஆனால், சோதிக்காமல் கையூட்டு வாங்கிக்கொண்டு வந்துவிடுகின்றனர். என் பணிக்காலம் முழுவதும் நேர்மையாக பணியாற்றினேன்.

இன்றைக்கு 2500 பள்ளிகளை மூடப்போவதாக சொல்கிறார்கள். 2 லட்சம் மாணவர்களை பள்ளிகளில் போலியாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். அரசுப் பள்ளிகளையாவது கண்காணிக்க நாங்கள் இருக்கிறோம். தனியார் பள்ளிகளை கண்காணிப்பதற்கு ஆளே கிடையாது. இவற்றையெல்லாம் தடுக்கவேண்டுமென்றால், தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்தவேண்டும். அதற்கு பெற்றோர்கள் ஒருங்கிணைந்து போராடவேண்டும்.

ஆசிரியர் கோ. செல்வராஜ், மாநில சிறப்புத்தலைவர், இடைநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம்.

ஆசிரியர் கோ. செல்வராஜ்
ஆசிரியர் கோ. செல்வராஜ், மாநில சிறப்புத்தலைவர், இடைநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம்.

” நான் வேலை செய்த பள்ளியில் வரலாற்றாசிரியர் இல்லை. தலைமையாசிரியர் பட்டதாரி ஆசிரியர்களை அழைத்து எடுக்கச் சொல்லும் பொழுது, யாரும் முன்வரவில்லை. இடைநிலை ஆசிரியரான நான் எடுக்க முன்வந்தேன். ஏற்றுக்கொண்டார். இவர் தமிழாசிரியர். எப்படி வரலாற்று பாடம் எடுப்பார் என சில ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர். என்மீது நம்பிக்கை வைத்து தலைமையாசிரியர் பாடம் எடுக்கசொன்னார். அந்த ஆண்டு வரலாற்று பாடத்தில் மாணவர்கள் 100% தேர்ச்சிபெற்றார்கள். அடுத்த ஆண்டு மாநில அளவில் வந்தவர்களில் என் மாணவனும் ஒருவன். தொடர்ந்து பாடம் எடுத்த சில ஆண்டுகள் வரை மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றார்கள். சில மாணவர்கள் இந்த மாநாட்டிற்கு கூட வந்திருக்கிறார்கள்.

நான் ஒரு கிராமத்து பள்ளியில் பணிபுரிந்த பொழுது, அதன் தலைமையாசிரியருடன் வேலை செய்வதில் போட்டிப்போடுவேன். அவரைவிட காலையில் சீக்கிரம் வரவேண்டும். மாலையில் அவருக்கு பிறகே கிளம்பவேண்டும் என நினைப்பேன். ஒருநாளும் நடந்ததில்லை. பள்ளிக்கு எல்லோரும் வருவதற்கு முன்பே வந்துவிடுவார். எல்லோரும் கிளம்பியபிறகு தான் பள்ளியை விட்டு கிளம்புவார்.

அவர் அறையில் அமர்ந்து பார்த்ததேயில்லை. எப்பொழுதும் பள்ளியைச் சுற்றி சுறுசுறுப்பாக கண்காணித்துக்கொண்டே இருப்பார். ஆசிரியர் யாராவது வரவில்லையென்றால் அவரே பாடமும் எடுப்பார். சில ஆண்டுகளில் அவர் மாற்றலாகி வேறு ஊருக்கு போகும் பொழுது, 57 வயதான நான், சிறந்த தலைமையாசிரியரை பள்ளி இழக்கிறதே என தேம்பி தேம்பி அழுதேன். நான் அழுவதைப் பார்த்து அவரும் கலங்கினார்.

இப்படிப்பட்ட அர்ப்பணிப்பு உள்ள ஆசிரியர்கள் இருப்பதால் தான் அரசுப் பள்ளிகள் இன்னும் உயிர் வாழ்கின்றன.”

மாணவர்களுக்கு பரிசு, பாராட்டு

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கலை நிகழ்ச்சிகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பேச்சாளர்கள்

மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் பலத்த கைத்தட்டலுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன!

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு
நாள் 13-6-2015 இடம் : விருத்தாசலம்

அமைப்பு :
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்

தீர்மானங்கள் :

  1. மாணவர்களிடையே சமத்துவத்தைப் பேணும் வகையிலான ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்சி முறை, ஒரே தேர்வு முறை கொண்ட பொதுப்பள்ளி- அருகமைப்பள்ளி முறைக்காக அனைவரும் போராட வேண்டுமென இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது.
  2. அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் ஆரம்பிக்கவும், அனைத்து அரசு பள்ளிகளிலும் தரமான கல்வி வழங்க தேவையான ஆசிரியர்களை நியமிக்கவும், அரசு மாணவர் விடுதிகளில் சுத்திகரிக்கபட்ட குடிநீர், சுகாதாரமான உணவு என்பதை கண்காணித்து உத்திரவாதபடுத்தவும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதற்கு மாநில அரசு, மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களை நிர்ப்பந்திக்கும் வண்ணம் போராட வேண்டுமென்று ஆசிரியர்களையும் மாணவர்களையும் பெற்றோரையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
  3. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கே அரசு மருத்துவ கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டுமென இம்மாநாடு ஒரு மனதாக வலியுறுத்துகிறது.
  4. கல்வியை மட்டுமின்றி மாணவர்களையும் பண்டமாக்கும் கல்வி வியாபாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்குவதற்கு அரசைப் பொறுப்பாக்கு வதற்கும் போராட வேண்டுமென மாநாடு அறை கூவுகிறது.
  5. ஆசிரியர்கள் மட்டுமல்ல அரசு ஊழியர்கள் உள்ளிட்ட நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் தனியார்பள்ளிகளை புறக்கணித்து அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என இம்மாநாடு ஒரு மனதாக கேட்டுக்கொள்கிறது.
  6. அனைவருக்கும் கல்வியளிப்பதாக தானே ஏற்றுக்கொண்ட பொறுப்பைக் கைகழுவியது மட்டுமின்றி, தாய்மொழிக் கல்வியையும், அரசுப் பள்ளிகளையும் ஒழித்துக்கட்டுவதற்கும், தனியார் கல்விக் கொள்ளையை பாதுகாத்து ஊக்குவிப்பதற்கும் இந்த அரசாங்கம், அதிகாரிகள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட மொத்த அரசமைப்பும் முன்நின்று வேலை செய்கின்றன. இந்தஅரசு, ஆளும் தகுதியிழந்து விட்டதால், இதனிடம் மனுக்கொடுப்பதும் மன்றாடுவதும், பயனற்றது என்றும், மக்கள் தமது கல்வி உரிமையை நிலை நாட்டிக்கொள்ளும் வகையிலான போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும், பள்ளிகள் அனைத்தையும் ஆசிரியர், மாணவர், பெற்றோர் தமது கண்காணிப்பின் கீழ்கொண்டு வரவேண்டும் என்றும் இம்மாநாடு அறைகூவுகிறது.
  7. ஆசிரியர்களை கற்றல், கற்பித்தல் அல்லாத டி.என்.பி.சி, யு.பி.எஸ்.சி,தேர்வு பணி, தேர்தல் பணி, பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி, மதுவின் தீமை விளக்க பேரணி, மழை நீர் சேகரிப்பு ஊர்வலம், இது போன்ற எண்ணற்ற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று இம்மாநாடு ஒரு மனதாக தமிழக அரசை வலியுறுத்துகிறது.
  8. அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்களை அரசு நிதி உதவி கொடுத்து தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி தரகு வேலை பார்க்கும் கல்வி துறையை, மாவட்ட நிர்வாகத்தை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

மாநாட்டில் கலந்து கொண்ட பொதுமக்கள்

வை.வெங்கடேசன்
மாநாட்டுக் குழுத் தலைவர்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
தொடர்பு : 93450 67646

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க