privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமக்கள் ஜனநாயகமா, கோடிசுவரர்களின் ஆட்சியா ?

மக்கள் ஜனநாயகமா, கோடிசுவரர்களின் ஆட்சியா ?

-

இந்திய ஜனநாயகம் போலி ஜனநாயகமாக மட்டுமல்ல, ஒரு பாசிச அரசாகவும் மாறிவருகிறது என்பதை தரவுகளோடும், ஆய்வுகளோடும் நிறுவும்,

அரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!
கட்டுரையின் 2-வது பகுதி.

ஜனநாயகத்திலிருந்து மக்களை விலக்கி வைக்கும் கோடீசுவரர்களின் ஆட்சியாக

ந்தாவதாக, இன்று எம்.எல்.ஏ. ஆக வேண்டுமென்றால் கூட, குறைந்தபட்ச தகுதி கோடீசுவரனாக இருக்க வேண்டும்; சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நிற்க குறைந்தது 5 கோடி ரூபாய் செலவழிக்கத் தயாராக இருக்க வேண்டும். எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளும் இதை ஒரு விதியாகவே ஆக்கி விட்டன. அமெரிக்க மேல்நிலை வல்லரசு தலைமையிலான ஏகாதிபத்திய நலன்களுக்கு சேவை செய்வது, பருத்து கொழுத்த பன்னாட்டு நிறுவனங்களும் தரகு அதிகார வர்க்க முதலாளிகளும் நமது நாட்டின் வளங்களையும் அரசு சொத்துக்களையும் மக்களின் உழைப்புச் சக்தியையும் ஒட்டச் சுரண்டுவதற்கான முகவர்களாகச் செயல்படுவது, இந்தச் சேவைக்காக கார்ப்பரேட் முதலாளிகள் அடிக்கும் பகற்கொள்ளையில் ஒரு பங்கை பெற்றுக் கொள்வது – என்ற திருப்பணியைச் செய்வதற்காக யார் ஆட்சியில் இருப்பது என்ற ஒரேயொரு நோக்கத்திற்காக மட்டுமே எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளும் செயல்படுகின்றன. மற்றபடி, வேறு எந்த கொள்கையோ, இலட்சியமோ, நாட்டுப்பற்றோ இவர்களிடம் இல்லை.

கல்விக் கொள்ளையர்களும், தொழில் அதிபர்களும்
கல்விக் கொள்ளையர்களும், தொழில் அதிபர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆக்கப்படும் அவலம் : (இடமிருந்து) தம்பிதுரை (அ.தி.மு.க), ஜெகத்ரட்சகன் (தி.மு.க), நிதின் கட்காரி (பா.ஜ.க), நவீன் ஜிண்டால் (காங்கிரசு)

பி.ஜே.பி., ஜெயலலிதாவின் கட்சி போன்ற சில கட்சிகள் பார்ப்பனியத்தை அரியணையில் ஏற்றுவது என்ற நோக்கோடு செயல்பட்டாலும், மேலே சொன்னவாறு கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளையடிப்பதற்கோ, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு சேவை செய்வதிலோ இவர்களுக்கும் பிற தேர்தல் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் வேறுபாடு கிடையாது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) லிபரேசன், சி.பி.ஐ., சி.பி.எம். போன்ற ’இடதுசாரி’ கட்சிகள் அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கும் எதிராக எடுக்கும் நிலைப்பாடுகள் சந்தர்ப்பவாதமாக இருக்கும் அதேவேளையில், இக்கட்சிகளின் மேல்மட்ட தலைவர்கள் உட்பட அடிமட்ட ஊழியர்கள் வரை பலர் இலஞ்ச இலாவண்யம், மோசடிகளில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கின்றனர். கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு இவர்களின் தலைமையிலான அரசுகளே சேவை செய்பவையாகவும் இருக்கின்றன; மேலும், இவர்கள் ஏதாவது ஒரு ஆளும் வர்க்க / போனபார்டிஸ்ட், காரியவாத, பிழைப்புவாத கட்சிகளின் கூட்டணியில் மாறி மாறி சந்தர்ப்பவாதமாகப் பங்கேற்கின்றனர். இவர்கள் சேர்ந்துள்ள கூட்டணி பதவிக்கு வந்து, அந்த அரசுகள் கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கான சாதனமாகச் செயல்படும்போதும் கூட்டணியிலிருந்து விலகாமல், மென்மையான விமர்சனங்களை வைத்து விட்டு தொடர்ந்து ஆதரித்து, தங்களால் முடிந்தவரை அரசு சன்மானங்களைப் பெற்றுக் கொள்வதிலும் பதவி சுகம் காண்பதிலும் திருப்தி கொள்கிறார்கள். இவ்வாறு இவர்களும் ஆளும் வர்க்க / பிழைப்புவாத கட்சிகளின், கோடீசுவரர்களின் கையாட்களாக செயல்படுகின்றனர்.

அரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!கோடீசுவரர்கள்தான் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள்; நிற்க முடியும் என்பதோடு, தனியார்மய தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாதிக்கம் மிகவும் கருணையுடன் பேசும் தருணங்களில் கூட ’அனைவரையும் தழுவிய வளர்ச்சி’ (Inclusive growth) என்று கூறுகிறதேயன்றி பணக்காரர்களிடமிருந்து எடுத்து ஏழைகளுக்கு கொடுத்தல் என்பதையோ, நலிந்த பிரிவினருக்குச் சலுகைகள் வழங்கி கைதூக்கி விடுதல் என்பதையோ பேசுவதில்லை. இத்தகைய ‘கொள்கை வழிபட்ட அரசியல்’, அனைத்தையும் ‘ஜனநாயகத்திலிருந்து’ துடைத்தெறிந்து விட்டது. இதன்மூலம் வேறுபட்ட அரசியல் கொள்கைகளுக்காக வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பின்னால் மக்கள் அணிதிரளுதல், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல், அதனடிப்படையில் வாக்களித்தல் என்பதற்கான சாத்தியத்தையே நாடாளுமன்ற அரசியல் அரங்கிலிருந்து புதிய தாராளவாதம் எனப்படும் மறுகாலனியாதிக்கப் போக்கு நீக்கி வருகின்றது.

தேர்தல் லஞ்சம்
கொள்கைகளைப் பேசி ஓட்டுக்களை பெறுவதற்குப் பதிலாக பணத்தையும், பொருட்களையும் இலஞ்சமாகக் கொடுத்து ஓட்டுக்களைப் பொறுக்கும் கிரிமினல் வேலையாக முதலாளித்துவ தேர்தல் முறை மாறி விட்டது.

‘சிறந்த அரசாளுமை’ (good governance) என்பதே எல்லா அரசுகளின் நோக்கமாக இருக்க வேண்டுமெனவும் இப்போக்கு வரையறுத்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்களால் முன்தள்ளப்படும் புதிய தாராளவாத வகையிலான கட்டுமான சீர்திருத்தங்களைக் கறாராகவும் ஈவு இரக்கமின்றியும் அமுல்படுத்துவதையே சிறந்த அரசாளுமை என்று உலக முதலாளித்துவம் போற்றுகிறது. மேலும் ‘சுயமாக’ சுறுசுறுப்பாக இயங்கும் அரசு’ (Proactive state) என்பதையும் மறுகாலனியாதிக்கத்திற்கு ஏற்ப சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதில் ’தோல்வியுற்ற அரசாக’ (failed state) இருக்கக்கூடாது என்பதையும் முன்தள்ளுகிறது.

சிறந்த அரசாளுமை, நல்லாட்சி போன்ற முழக்கங்களையே இன்று எல்லா ஓட்டுக் கட்சிகளும் வரித்துக் கொண்டு விட்டன. இதற்காக உலகவங்கி போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள் தமது அரசுக்கு அளிக்கும் சான்றிதழையும் பெருமையுடன் விளம்பரப்படுத்திக் கொள்கின்றன. மேல்நிலை வல்லரசுகளால் திணிக்கப்பட்ட இந்த கட்டுமான சீர்திருத்தங்களின் எல்லைக்குள் நின்றுதான் நாடாளுமன்ற அரசியலில் முதலாளித்துவக் கட்சிகள் தமக்குள் மோதிக் கொள்கின்றன. இவைகளுக்கிடையில் வேறுபாடுகளே இல்லாத நிலைமையில், தேர்தல் போட்டியும் மாறுபட்ட கொள்கைகளுக்கு இடையிலான மோதலாக இல்லை. மாறாக, தனிநபர் பற்றிய குணாதிசயங்கள், திறமைகள், அவர்கள் செய்த இலஞ்சம் மற்றும் பிற முறைகேடுகள், மோசடிகள், சேர்த்த சொத்துக்கள் ஆகியவற்றை முதன்மைப்படுத்துகின்ற, நபர்களுக்கிடையிலான அதிகாரப் போட்டியாகவே தேர்தல்கள் இருக்கின்றன.

கொள்கை வேறுபாடுகள் அற்றுப் போனதால் அரை நிலப்பிரபுத்துவ சமூகத்தின் சாபக்கேடுகளான சாதி, மதவெறி ஆகியவற்றைத் தூண்டி விட்டும், இலவசத் திட்டங்களை அறிவித்தும், நேரடியாக ஓட்டுகளுக்கு விலை பேசியும்தான் ஓட்டுகள் அறுவடை செய்யப்படுகின்றன. அரசு அதிகாரத்திலிருந்து சொல்லிக் கொள்ளப்படுகிற ஜனநாயகத்தை வெளியேற்றி விட்டு, முதலாளித்துவ வர்க்கம் அதனைக் கைப்பற்றியிருப்பது போலவே, எல்லா முதலாளித்துவ அரசியல் கட்சிகளிலும் உட்கட்சி ஜனநாயகம் ஒழிந்து ஒரு கும்பல் அல்லது குடும்பத்தின் அதிகாரமாகச் சீரழிந்திருக்கிறது. அரசாளுமையிலிருந்து அரசியலை விலக்கிவிட்ட இந்த ஜனநாயகத்தில்தான் ‘முறையாக’ தேர்தல் நடத்தப்பட்டு, பல்வேறு கட்சிகள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிக்கு வந்திருக்கின்றன.

தேர்தல் கருப்புப் பணம்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்பொழுது ஓட்டுக்களைப் பெறுவதற்காகப் பல்வேறு ஓட்டுக்கட்சிகளின் வேட்பாளர்கள் பதுக்கி வைத்திருந்த 195 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக அறிவித்தது, தேர்தல் கமிசன். தேர்தல் என்பது கருப்புப் பணத் திருவிழா என்பதன் சாட்சியம் இது.

இதற்கேற்ப தேர்தல் நடத்தை முறைகளையே கோடீசுவரர்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றாக, பரந்துபட்ட உழைக்கும் மக்களை அதிலிருந்து விலக்கி வைக்கின்ற நடத்தை முறைகளாக ஆளும் வர்க்கங்களே தேர்தல் கமிஷன்கள் மூலம் அமல் நடத்துகின்றன. சேஷன் இந்தியத் தேர்தல் தலைமை ஆணையாளராக இருந்த காலத்திலிருந்து இவ்வாறு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை சேஷனின் விசேட திறமை, தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்ற அவரது இலட்சியம், அதாவது ஒரு தனிநபரின் முன்முயற்சி என்ற கோணத்தில் பார்க்கக் கூடாது. மாறாக, ஆளும் வர்க்கம் மறுகாலனியாதிக்க கொள்கைகளுக்கேற்ப அரசு, தேர்தல் முறை ஆகியவற்றில் கொண்டு வந்துள்ள பொது மாற்றங்கள் என்று இதைப் பார்க்க வேண்டும்.

இன்னொரு பக்கம், முதலாளித்துவ தேர்தல் ஜனநாயகத்தில் சீரழிவும், ஊழல்களும், ரவுடித்தனமும், அராஜகங்களும், முறைகேடுகளும், மோசடிகளும், சந்தர்ப்பவாதங்களும், பிழைப்புவாதங்களும் மலிந்து நாறுவது என்பது அதிகரித்துக் கொண்டே போகிறது. இத்துடன் மறுகாலனியாதிக்க கொள்கைகள் புகுத்தப்பட்டதைத் தொடர்ந்து எல்லா சமூக மதிப்பீடுகளும் அறநெறிகளும் தூக்கியெறியப்பட்டு வருகின்றன. இதன் தாக்கம் ஏற்கெனவே நாறிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ தேர்தல் ஜனநாயகத்திலும் ஏற்பட்டு, தேர்தல் ஜனநாயக நடைமுறைகள் மீதும், முதலாளித்துவ ஜனநாயகத்தின் மீதும் மக்களிடையே வெறுப்பும் அவநம்பிக்கையும் அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக, இந்த சமூக அமைப்பு மற்றும் முதலாளித்துவ தேர்தல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையிழந்து புரட்சிகர இயக்கங்களின் பக்கம் மக்கள் திரும்புவதைத் தடுக்கும் நோக்கிலும் ஆளும் வர்க்கங்கள் தேர்தல் கமிசனைக் கொண்டு கடுமையான தேர்தல் நடத்தை விதிகளைக் கட்டவிழ்த்துவிட்டு வருகின்றன.

அரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!ஆனால், தேர்தல் கமிஷனின் நடத்தை விதிகள் எந்த விதத்திலும் மக்களுக்குப் பணம் கொடுத்தல், பிரியாணி, பீர் விருந்துகள், அன்பளிப்புகளை வழங்குதல், ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை வாரி வழங்குவோம் என்று கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு அறிவித்து மக்களை ஈர்த்தல், சாதிய உணர்வுகளைத் தூண்டியும் ரவுடித்தனத்தில் ஈடுபட்டும் ஓட்டுப் பொறுக்குதல் போன்ற நடைமுறைகளைத் தடுக்கவில்லை; மாறாக இவை கனஜோராகவே நடந்து கொண்டிருக்கின்றன, அதிகரித்து வருகின்றன என்று 2009 நாடாளுமன்றத் தேர்தலும், குறிப்பாக திருமங்கலம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலும் நிரூபித்துள்ளன. சில கட்சி வேட்பாளர்களிடமிருந்து பணத்தைப் பறிமுதல் செய்வதும், தேர்தல் நடத்தை விதிகளை மீறிவிட்டதாக அமைச்சர்கள் உட்பட பலபேர் மீது ஆயிரக்கணக்கான வழக்குகளைப் பதிவு செய்வதும், பிறகு தேர்தல் முடிந்தவுடன் இந்த வழக்குகளை அப்படியே விட்டுவிடுவதும்தான் நடைமுறையாக உள்ளது. யாரும் தண்டிக்கப்படுவதில்லை. பதவியும் பறிக்கப்படுவதில்லை.

முன்பெல்லாம் தேர்தல் என்பது சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லா உழைக்கும் மக்களும் கலந்து கொள்ளும் பிரச்சார முறைகளைக் கொண்டதாக, அவர்களால் மேற்கொள்ளக்கூடிய பிரச்சார முறைகள் எல்லாம் அனுமதிக்கப்பட்டு, இரவு பகலாக ஒரு இரண்டு மாத காலத்திற்கு திருவிழா போல நடைபெறும்; கட்சித் தொண்டர்கள் அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள்; ஆனால், மறுகாலனியாதிக்க கொள்கைகளுக்கேற்ப இன்று தேர்தல் என்பது கோடீசுவரர்கள் மட்டுமே பங்கேற்கக்கூடிய, அவர்களால் மேற்கொள்ளக்கூடிய பிரச்சார நடைமுறைகள் மட்டுமே கொண்டதாக மாற்றப்பட்டு விட்டது. தொலைக்காட்சி நிறுவனம் நடத்த, செய்திப் பத்திரிகைகள் நடத்த அல்லது அவைகளில் விளம்பரம் செய்ய, கார்களில் பவனி வர ஆற்றல் கொண்டவர்கள் மட்டுமே, அதாவது கோடீசுவர வேட்பாளர்கள் மட்டுமே பங்கேற்கும் வண்ணம் தேர்தல் முறைகள் மாற்றப்பட்டு விட்டன.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள்
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் என்பது குத்தாட்ட ஆபாச வக்கிரமாக மாறிப் போனது.

கொள்கை, கோட்பாடு என்று எந்த வெங்காயமுமின்றி ஓட்டுக்கட்சிகள் அனைத்தும பிழைப்புவாதக் கட்சிகளாக மாறிவிட்ட நிலையில், பிரியாணியுடன் நாள் ஒன்றுக்கு ரூ 200 கொடுத்தால்தான் வேலை செய்யும் ‘தொண்டர்களை’க் கொண்டதாகவே இவைகள் மாறிவிட்டன. பணப்பட்டுவாடா உட்பட பல முறைகேடுகளை ஒழித்து நேர்மையான தேர்தலை நடத்துவது என்ற முகாந்திரத்தில் 85 விழுக்காடு உழைக்கும் மக்கள் தேர்தலில் பங்கேற்பது உட்பட பிரச்சாரத்தில் ஈடுபடுவது வரை தேர்தல் நடைமுறையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். பலாத்காரமாகத் தடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஒரே வேலை வாக்களிப்பது மட்டுமே. அவ்வளவுதான்! அதுவும் தேர்தல் நடத்துவதற்கான காலம் குறுக்கப்பட்டு அவசரம் அவசரமாக நடத்தப்படுகின்றது. பத்து அல்லது 15 நாள் பிரச்சாரத்தில் தேர்தல் முடிந்து விடுகின்றது.

எப்படியாவது ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்கவேண்டும் என்ற வெறி; ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் நாலு சீட்டாவது ஜெயித்தால்தான் கட்சியையே தக்க வைத்துக் கொள்ள முடியும்; இல்லாவிட்டால் காக்காய்கள் கூட்டத்தில் கல்லெறிந்தது போல கட்சி நிர்வாகிகள் ஓடிப் போய் விடுவார்கள் என்ற பீதி ஆகிய ‘உன்னத நோக்கங்களே’ இன்று கட்சிகளை வழிநடத்துகின்றன. இந்த நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ள எந்தவிதமான சந்தர்ப்பவாதத்திற்கும் அவமானத்திற்கும் அவமதிப்புகளுக்கும் இழிவுபடுத்தலுக்கும் எல்லாவிதமான பிழைப்புவாதங்கள், தகிடுதத்தங்களைச் செய்யவும் எல்லா தேசிய, பிராந்திய, சாதியக் கட்சிகளும் கூட்டணிகள் அமைத்துக் கொள்கின்றன. கொள்கை, இலட்சியம், தேசப்பற்று, சமூகப்பற்று போன்று எதுவும், எந்த மதிப்பீடும் அறநெறியும் இக்கட்சிகளிடம் இல்லை.

தேர்தலுக்கு முன்பு அமைக்கப்படும் கூட்டணிகள் தேர்தல் முடிந்தவுடன் கலைந்து புதிய கூட்டணிகள் அமையும்; தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணிகள் மாறும். அதேவேளையில், கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு சேவை செய்வதிலும் தங்களது தலைமையிலான அரசுகளை அதற்கான கருவியாகப் பயன்படுத்துவதிலும், அதன்மூலம் எல்லாவிதமான முறைகளிலும் தங்களுக்கான சொத்துக்களைக் குவித்துக் கொள்வதிலும் இவர்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர். ஆட்சி நடத்துகின்ற, அரசை இயக்குகின்ற கட்சிகளின் தன்மையில் இப்படிப்பட்ட மாற்றங்கள் நடந்துள்ளன.

இன்னுமொரு மாற்றம் என்னவென்றால், எல்லா முதலாளித்துவ தேர்தல் அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது பினாமிகளின் (சாதிக் பாட்சா, பல்வா போன்ற பினாமிகளின்) பேரில் சுயநிதிக் கல்லூரிகள் நடத்துகிறார்கள்; ரியல் எஸ்டேட் தொழிலில் கோடிகோடியாகச் சொத்து சேர்க்கிறார்கள்; மணல் திருட்டு நடத்திக் கொள்ளையடிக்கிறார்கள்; கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பங்குதாரர்களாக உள்ளனர். கனிம வள சுரங்கத் தொழில் நடத்திக் கொள்ளையடிக்கிறார்கள். சொந்த மாநிலத்தில் தொழில் நடத்தினால் தெரிந்து விடும் என்பதால் வெளிமாநிலங்களில் தொழில் நடத்துகிறார்கள். இவ்வாறு அரசியல்வாதிகள் முதலாளிகளாக மாறியுள்ளனர்.

இதன் மறுபக்கமாக முதலாளிகள், குறிப்பாக, அவர்களின் இளைய வாரிசுகள் இன்று அரசியல்வாதிகளாக மாறியுள்ளனர். முதலாளி வர்க்கத்திற்காக அவர்களின் அரசியல் பிரதிநிதிகள் ஆள்வது மாறி, முதலாளி வர்க்கத்தினரே இன்று நேரடியாக ஆட்சி செலுத்துவதும், முதலாளிகள், நிலப்பிரபுக்களால் சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டு வரும் ஏழைகள், தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட்டிற்காகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் ‘சோசலிசம்’, ‘சமூக நீதி’ போன்ற கொள்கைகளின் அடிப்படையில் வறுமை ஒழிப்பு, வேலையின்மை ஒழிப்பு போன்ற திட்டங்களைப் போட்டு அரசியல் சேவை செய்பவர்கள், தொண்டாற்றுபவர்கள் என்ற நிலைமாறி அவர்களே முதலாளிகளாக மாறி நேரடியாக சுரண்டுபவர்களாகவும் ஒடுக்குபவர்களாகவும் மாறிவிட்டனர்.

(தொடரும்)
____________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2015
____________________________

கட்டுரையின் முதல் பகுதி : அரசு : அனைவருக்கும் பொதுவானதோ ஜனநாயகமானதோ அல்ல !