Saturday, December 4, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் கவிதா முத்துச்சாமியின் கேள்விக்கு என்ன பதில் ?

கவிதா முத்துச்சாமியின் கேள்விக்கு என்ன பதில் ?

-

சி‌ஆர்‌ஐ தொழிலாளர் வீட்டில் நேர்காணல் – 1

தான் அடிமையென்று உணராமல் இருப்பது தான் அடிமைத்தனத்தை விட மோசமானது” என்றொரு வழக்கு உண்டு. இங்கே இந்த வகையினர் பெரும்பான்மையாக உள்ளனர்.

எனினும் அடிமைத்தனத்தை உணர்ந்து சக மனிதர்க்கும் உணர்த்தி போராடத் தூண்டும் சமூகத்தின் உயிர்ப்பான மனிதர் குழாம் மிகச் சிறுபான்மையாக இருப்பினும் இரட்டிப்பு வேகத்தில் வளரக் கூடியது.

அப்படியான ஒரு அமைப்பாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இருப்பதும்; அதன் நிகழ்ச்சிப் போக்கில் சமரசமற்ற போராட்டங்கள் இருப்பதும் ஆச்சரியமல்ல.

அதில் ஒரு வகைமாதிரி போராட்டமாக கோவை சி‌.ஆர்‌.ஐ தொழிலாளர் போராட்டம் இருப்பதும் இதனாலேயே அரசுக்கு சவாலாக மாறி கோவை பு.ஜ.தொ.மு நிர்வாகிகளின் தொடர்ச்சியான கைதும் வாசகர்களும் தோழர்களும் அறிந்ததே.

முத்துசாமி
பத்தாம் வகுப்பு முடித்தவுடன் இந்நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த முத்துசாமி சி‌.ஆர்‌.ஐ யின் வளர்ச்சிக்கு உரமாக கொடுத்திருக்கும் உழைப்பு இருபது வருடங்கள்

குடும்பத்தோடு, மனைவி முதல் குழந்தைகள் ஈறாக தான் கொண்ட கொள்கையை வரிக்கச் செய்து போராட்டக் களத்துக்கு அழைத்து வருவதில் பு.ஜ.தொ.மு மற்ற தொழிற்சங்களுக்கு முன்னோடி. அப்படி களத்துக்கு வந்து கோவை மாவட்ட ஆட்சியரையும் அவருக்கு அடுத்த நிலை அதிகார மையமான தாசில்தாரின் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்கிய பெண் தொழிலாளிகளின் வாழ்க்கையை நேரடியாக அறிந்து கொள்ளச் சென்றோம்.

முதலில் சி‌.ஆர்‌.ஐ தோழர் முத்துசாமி வீடு. பத்தாம் வகுப்பு முடித்தவுடன் இந்நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த முத்துசாமி சி‌.ஆர்‌.ஐ யின் வளர்ச்சிக்கு உரமாக கொடுத்திருக்கும் உழைப்பு இருபது வருடங்கள். அவரது மனைவியின் பெயர் கவிதா.

இனி கவிதா முத்துசாமியின் வார்த்தைகளில்…

நீங்க தாசில்தார்கிட்ட பேசும் போது என்ன தீர்வு சொன்னாரு?

“22-ம் தேதி பேச்சு வார்த்தைல பேசிக்கலாம்”னு சொன்னாரு.

அதுக்கு, “நாங்க இங்கிருந்து ஒரு முடிவு தெரியாம போக மாட்டோம். வாடகை கொடுக்க முடியல. குழந்தைங்களோட வந்திருக்கோம். சாப்பாட்டுக்கே வழியில்லாம சிரமப்பட்டுட்டு இருக்கறோம். 90 நாளாச்சு அதுக்கான முடிவு சொல்லுங்க. நீங்க வெளியே இருந்து பணம் வாங்கிட்டு இந்த மாதிரி பண்ணுறீங்களா?” அப்டின்னு கேட்டேன்.

“இருங்கம்மா, யாராவது ரெண்டு பேர் மட்டும் பேசுங்க. இத்தான பேரு பேசுனா எப்பிடி பேசறது. மெதுவா பேசுங்கம்மா…” -னு சொல்றாரு.

“26-ம் தேதி கதவை சார்த்தீட்டாங்க… சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் சோதி வந்தாரு. இன்ஸ்பெக்டர் ஆஃப் பேக்டரி ல இருந்து வந்தாங்க. இவங்க, எல்லாத்துக்கும் ஒரே பதில் ‘மேலிடத்துல இருந்து உத்தரவு, நாங்க என்ன செய்ய முடியும்’னு சொல்றாங்க.

சரி, பதினைந்து நாளுக்கு அப்புறமாவது ஏதாவது முடிவு தெரியும்னு போனோம். அப்பவும் இதே பதில் தான்.நாங்க வாடகை வீட்டுல இருக்கறம். மூவாயிரம் வாடகை. மூணு மாசமா வாடக கொடுக்க முடியல. எங்களுக்கு பதில் சொல்லுங்க” அப்டின்னு சொன்னா,

“22ஆம் தேதி பேசிக்கலாம்மா. முதலாளியே வருவாரு”-னு சொன்னாங்க.

திருமதி கவிதா முத்துசாமி
அடுத்தவங்க வயித்துல அடிச்சிட்டு நீ என்னத்த போயி சுப காரியம் பண்ற, உனக்காகத்தானே உழைச்சு கொடுத்துருக்கோம். நீ கல்யாணத்துக்கு 100 ரூவா செலவு பண்றீன்னா… தொழிலாளிகளுக்கு 10 ரூவா செய்யி

இந்தப் போராட்டம் 90 நாட்களா நடக்குது.. வருமானம் இல்லாம குடும்பத்த எப்பிடி சமாளிக்கறீங்க..?

நான் ஒரு ஆள் வேலைக்கு போறங்க. 5000 ரூவா வருது சம்பளம். அதிலயும் லீவு போட்டுட்டா 4000 தான் கெடைக்கும். அத வெச்சுதான் இருக்கறத வெச்சு ஓட்டிக்கிட்டு இருக்கோம்.

இந்தப் போராட்டத்தை பற்றி பக்கத்து வீடுகளில் உங்கள் சொந்தக்காரங்களில் என்ன சொல்றாங்க..?

போராடுங்க. கண்டிப்பா கிடைக்கும் அப்டின்னு ஒரு தரப்பு வாதம். இன்னொரு பக்கத்துல, இப்பிடியே போய்ட்ருந்தா என்ன பண்றது. சாப்பாட்டுக்குக் கூட வழியில்ல. வாடகை வேற தரணும்னு.

அனைத்து வழிகளில் போராடியும் ஏ‌.சி‌.எல், டி‌.சி‌.எல் முதல் கலெக்டர் வரையிலானவர்கள் தொழிலாளர்களுக்கு எதிரான நிலையையே எடுக்கிறார்கள். காவல் துறையும் இவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. இதைப் பற்றி..?

பணம் தான் மெயின் காரணமா தெரியுது. நம்ம கிட்ட அந்த இது இல்ல, தேவையுமில்ல. மக்கள் தான் நமக்காக போராடணும்.

வீட்டில இருக்கற எல்லா பொம்பளைங்களும் வரணும். எல்லாருமே போராடுனாதா ஜெயிக்க முடியும். எல்லா கட்சி மேலயும் வெறுப்பாதா இருக்கு. நாமெல்லாம் ஓட்டுப் போட்டுதான் ஜெயிக்க வைக்கறோம். எந்த ஆட்சி வந்தாலும் நமக்கு எதும் கெடையாது.

கஷ்டப்பட்டாதான் நமக்கு கூலின்னு ஆயிபோச்சு. கஷ்டப்பட்ட கூலியே கிடைக்கலேங்கற போது நாம என்னதான் பண்றது.

உங்க கணவர் சிறைக்கு போனது பற்றி உங்க கருத்து..?

தப்பான விசயத்துக்காக போகல. நல்லதுக்காக தான் போயிருக்காரு. இதுனால நாள பின்ன எதுவும் பாதிப்பு வரக்கூடாதுன்னு மட்டும் நினைக்கறேன்.

இவரு சிறைக்கு போனது பற்றி சொந்தக்காரங்க பக்கத்து வீட்டுல லாம் என்ன சொல்லுறாங்க…?

யாரும் எதுவும் சொல்லல. நல்லபடியா வந்துருவாரு. அப்டின்னு மட்டும் தைரியம் சொன்னாங்க. அவரோட அம்மா மட்டும் அழுதாங்க. “இவனுக்கு எதுக்கு அந்த வேலை, எழுதிக் கொடுத்துட்டு வந்துற வேண்டியது தானே” அப்டின்னு.

அப்புறம் பையனும் பொண்ணும்தான் ஒரே அழுக்காச்சு. பொண்ணுதான், “அப்பாவுக்கு ஏதாவது ஆயிருமா. அடிச்சிருவாங்களா” அப்டின்னு ஒரே அழுகை.

ஒரு வேளை 22-ம் தேதி பேச்சுவார்த்தைல முடிவு எதிர்மறையா வந்தா அடுத்த கட்டமா என்ன பண்ணலாம்..?

கதவை உடைக்கலாம்.

நேர்மையான வழில நம்ம போறோம். அதுக்கும் அவன் வல்லீனா, அப்புறம் ஏதாவது பண்ணிதான் ஆகணும். கதவ உடச்சு பார்ப்போம். அதுக்கு மேல அவனுக என்ன பண்ண முடியுமோ பண்ணட்டும்.

சங்கத்த பற்றி என்ன நினைக்கறீங்க..?

சங்கம் நல்ல சங்கம்தான். ஆனா இவரு வெளியே வர லேட் ஆகும் போது கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்துச்சு. ஏன் லேட் ஆகுதுன்னு குழப்பமா இருந்துச்சு. அப்புறம் ஒண்ணும் இல்லை.

இந்தப் போராட்டத்துக்காக உங்க கணவர் மறுபடியும் ஜெயிலுக்கு போறத பற்றி என்ன நினைக்கறீங்க.?

நீங்கல்லாம் இருக்கீங்க, எப்டியும் வெளியே கொண்டு வந்துருவீங்க… இனிமே நாங்களும் வரோம். அவங்க ஒரு பக்கம் நாங்க ஒரு பக்கம் இருக்க எங்களுக்கு விருப்பம் இல்லை.

நான் ஆரம்பத்துல இருந்து ஆதரவு தான். குமாரவேல் அண்ணா கிட்ட கூட சொன்னேன். “அண்ணா, போராடுங்க தேவைப்பட்டா நாங்களும் வரோம். ஏதாவது முடிவு கிடைக்கட்டும். நம்ம தப்பு செயல. நம்ம தப்பு செய்யாத போது எதுக்கு அடிமையா இருக்கணும்”.

முதலாளி கல்யாணத்துல வந்து நாம இப்பிடி பாடை கட்டுவோம்னு சொன்னது சரியா..?

அவன் அந்த அளவுக்கு பண்ணியிருக்கான், நம்மளுக்கு அந்த வேதனை, அதுனால அப்பிடி பண்ணிருக்கோம்.

இல்ல, நாம ஒரு சுப காரிய

அடுத்தவங்க வயித்துல அடிச்சிட்டு நீ என்னத்த போயி சுப காரியம் பண்ற, உனக்காகத்தானே உழைச்சு கொடுத்துருக்கோம். நீ கல்யாணத்துக்கு 100 ரூவா செலவு பண்றீன்னா… தொழிலாளிகளுக்கு 10 ரூவா செய்யி. அதுக்கே இப்பிடி பண்ணும் போது நாம என்ன செய்ய முடியும்.

-தொடரும்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

 1. //போராட்டத்தில் நாங்கள்//
  இந்த மாதிரியான போராட்ட்ங்களினால் ஒரு பிரயோஜனமும் இல்லை.
  தனியார் தொழிற்ச்சாலைகள் இருக்கலாம்,நிறுவனங்கள் இருக்கலாம்.
  ஆனால் தனியார் பள்ளிகள்,கல்லூரிகள் கூடாது,
  ஏனென்றால் இக்கல்லூரிகளும்,பள்ளிகளும் சொரனையற்ற,அடிமைத்தனமான இளைஞர்களையும்,படிப்பாளிகளையும்தான் உருவாக்குகின்றன.
  புரட்ச்சியும்-புரட்சியாளர்களும் வேண்டும் என்றால் கல்விக்கூடங்கள் அனைத்தும் மக்கள் வசப்பட வேண்டும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க