privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஹைத்தி : ரொட்டி வழங்க கருப்பினப் பெண்களைச் சுரண்டும் ஐ.நா

ஹைத்தி : ரொட்டி வழங்க கருப்பினப் பெண்களைச் சுரண்டும் ஐ.நா

-

லகின் வறுமை மிகுந்த நாடுகளில் ஒன்றான ஹைத்தியில் நிலைகொண்டுள்ள ஐ.நா அமைதிப்படை வீரர்கள் ஹைத்தி பெண்களை பாலியல் ரீதியில் சுரண்டியுள்ளனர்.

ஐ.நா அமைதிப்படை
ஐ.நா அமைதிப்படை

2004-ம் ஆண்டு ஹைத்தி அதிபர் அரிஸ்டைடுக்கு எதிராக ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியது அந்நாட்டு ராணுவம். அரிஸ்டைட் ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி பரப்பின. ஆனால் அமெரிக்க ராணுவம்தான் தன்னை கடத்தியதோடு நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்ததாக அரிஸ்டைட் குற்றம் சாட்டினார்.

அப்போதிலிருந்து ஐ.நா.வின் அமைதிப்படையை ஹைத்தியில் நிறுத்திய அமெரிக்கா, தனக்கான ஒரு தலையாட்டி பொம்மையை `ஜனநாயக` முறைப்படி ஏற்படுத்தி, ஜனாதிபதி, பிரதமர், மேல் சபை, கீழ் சபை என பாரளுமன்ற கொலுவை அங்கு வைத்துள்ளது.

ஹைத்தியில் 2004-ல் இருந்து ஐ.நா.வின் அமைதிப்படையைச் (MINUSTAH-United nations stabilization mission in HAITI) சேர்ந்த சீருடைப்பணியாளர்கள் 6,806 பேரும் (ராணுவம் 4,604 பேர், போலீசு 2,202 பேர்), 1,459 பிற ஊழியர்களும் ஆக 8,394 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் இந்திய ராணுவத்தின் 426 பேரும் அடக்கம். 2014-2015 ஐ.நா.வின் நிதி நிலை அறிக்கையின் படி ஹைத்தியில் அமைதிப்படைக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு $50 கோடி (சுமார் ரூ 3,198 கோடி).

ஐ.நா.வின் அமைதிப்படை என்ற உடன் ஏதோ சமணத்துறவிகள் மயிலிறகால் தரையை கூட்டிச் செல்லும் கற்பனைக் காட்சி ஏதாவது தோன்றினால் முதலில் அதை எச்சியைத் தொட்டு அழித்து விடுங்கள். நீல நிற இரும்பு தலைக்கவசமும், இயந்திரத் துப்பாக்கியும், குண்டு துளைக்கா உடையும், கையெறி குண்டுகளும் தரித்த கவச வாகனங்கள், ராணுவ டாங்கிகள் என அக்மார்க் கொலைகார ஆக்கிரமிப்பு ராணுவமே ஐ.நா.வின் அமைதிப்படை. புலிமார்க் சீகைக்காய் தூளுக்கும் புலிக்கும் இடையே என்ன சம்பந்தமோ அதே தான் ஐ.நா அமைதிப் படைக்கும் அமைதிக்கும்.

தருமி கேள்வியின் சாயலில், சேர்ந்தே இருப்பது எதுவென்றால் அன்னிய ஆக்கிரமிப்பு இராணுவங்களும், பாலியல் சுரண்டலும் எனுமளவு வரலாறு நெடுகிலுமே ஆக்கிரமிப்பு போர்களில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டியே வந்திருக்கின்றனர். இந்தியாவின் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், ஈழம், ஹைத்தி எங்கும் `அமைதியை` நிலை நாட்டச் சென்றவர்கள் எல்லோருமே ஆக்கிரமிப்பு அதிகாரத்தின் காரணமாகவும், துப்பாக்கியின் பலத்தாலும் பாலியல் குற்றங்களை செய்ததே வரலாறு. அதைப் போன்ற இன்னுமொரு கேடுகெட்ட ராணுவத்தின் அத்துமீறலே ஹைத்தி பெண்களின் மீதான பாலியல் சுரண்டல்.

ஹைத்தி
மேற்கிந்தியத் தீவுகளில் அமைந்துள்ள ஹைத்தி

ஹைத்தி இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்க கைப்பாவை இராணுவ சர்வாதிகாரி ஃபிரான்கோயிஸ் டுவாலியரின் குடும்ப ஆட்சியில் சிக்கிச் சீரழிந்த நாடாகும். 1990-களில் போலி ஜனநாயக தேர்தலில் ஆட்சிக்கு வந்த அரிஸ்டைட் மற்றும் அவரது விசுவாசிகளால் ஊழல், மனிதஉரிமை மீறல், பஞ்சம் , படுகொலைகள் என சின்னாபின்னமாக்கப்பட்டது. அரிஸ்டைட் விரட்டியடிக்கப்பட்ட 2004 முதல் ஐ.நா அமைதிப்படையின் ‘பாதுகாப்பில்’ இருந்து வருகிறது. போதாக்குறைக்கு 2010-ம் ஆண்டில் 7 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டு ஹைத்தி பாதிக்கப்பட்டது.

ஐ.நா.வின் உள் மேற்பார்வை அலுவலகம் (office of internal oversight services) உலகின் மோசமான வாழ் நிலைகளை கொண்டுள்ள (ஐ.நா. வின் படைகள் நிலை கொண்டுள்ள 16 நாடுகள் உட்பட) 1.25 லட்சம் மக்களிடையே ஆய்வு செய்து, அவர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்முறை மற்றும் பாலியல் சுரண்டல் குறித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதன்படி 225 ஹைத்தியப் பெண்கள் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான உணவுக்காகவும், மருந்துக்காகவும், குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களுக்காகவும் பாலியல் சுரண்டலுக்கு உடன்பட வேண்டி இருந்ததாக தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களில் மூன்றில் ஒரு பங்கு 18 வயதிற்கும் குறைவான குழந்தைகள்.

ஐ.நா அமைதிப்படை
பான் கீ மூனுக்கோ ஐ.நா. வின் “நேம் பேட்ஜ்” மாட்டிக்கொண்டு பாலியல் குற்றத்தை செய்வதுதான் கவலை அளிகிறது

அம்மக்களின் பசியைப் பயன்படுத்திக்கொண்டு பாலியல் சுரண்டலைச் செய்யும் ரவுடிப் புத்தியுடைய கும்பல் ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் அமைக்க பாடுபடுவதாக வாய்கிழிய பேச ஏதாவது தகுதி இருக்கிறதா? பான் கீ மூனுக்கோ ஐ.நா. வின் “நேம் பேட்ஜ்” மாட்டிக்கொண்டு பாலியல் குற்றத்தை செய்வதுதான் கவலை அளிகிறது. ‘செய்வது களவாடித்தனமானாலும் அதுல ஒரு நாயம் வேணாமாய்யா’ என சகுனியாக கவலைப்படுகிறார் இவர்.

உலகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய படைகள் மூலம் அமைதியை காத்து வருவதாக படம் காட்டுகிறது, ஐ.நா. தற்சமயம் காங்கோ, லைபீரியா, தெற்கு சூடான், ஹைத்தி உட்பட 16 நாடுகளில் ஆயுதம் தாங்கிய படைகளை நிறுத்தியுள்ளது ஐ.நா. அரசியல் நிலைத்தன்மை அற்ற நாடுகளில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், தேர்தல்களை நடத்துவதன் மூலம் அந்த நாடுகளில் ஜனநாயகத்தினை காத்துள்ளதாகவும் தனக்குத்தானே 12-க்கு 8 ஃபிளக்ஸ் வைத்துக் கொள்(ல்)கிறது.

கடந்த 15 ஆண்டுகளில் இந்த அடியாள் படையின் எண்ணிக்கை 20,000 பேரிலிருந்து ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது என்பது தற்செயல் நிகழ்வல்ல. உலகமயமாக்க சுரண்டலுக்காக ஏகாதிபத்தியங்கள் குறிப்பாக அமெரிக்காவை எதிர்த்து மக்கள் போராட்டங்களும், எழுச்சிகளும் உலகின் பல்வேறு பகுதிகளில் வெடிக்கின்றன. மூன்றாம் உலக நாடுகளின் வளத்தைச் சுரண்டவும், ஒடுக்கப்படும் நாடுகளின் மக்கள் போராட்டங்களை ஒடுக்கவும், `துப்பாக்கி முனையில்` வலுக்கட்டாயமாக தேர்தல்களை நடத்தி போலி ஜனநாயகத்தை நிலை நாட்டவும் போலீசு, உளவுப்படை, ராணுவம், தன்னார்வக்குழுக்கள் ஆகிய ஆட்கொல்லிகளை உள்ளிறக்கி விட்டு போராட்டத்தை மழுங்கடிக்கவும், ஜனநாயக சக்திகளை நசுக்கவும், ஒரு ஜனநாயக முகமூடி அணிந்த அமைப்பு தேவைப்படுகிறது.

ஹைத்தி நிலநடுக்கம்
2010-ம் ஆண்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஹைத்தி மக்களுக்கு உதவும் கியூப மருத்துவர்கள்.

ஏகாதிபத்திய நாடுகள் சொந்த ராணுவத்தை இறக்க முடியாத நாடுகளிலும், காசை வாங்கிக் கொண்டு காரியத்தை முடித்துக் கொடுக்கும் கமிசன் ஏஜண்ட் போல ஐ.நா சபையும் அமைதிப் படையை போன்ற அதன் துணை அமைப்புகளும் செயல்பட்டு வருகிறன. அவை நிறுவப்பட்ட காரணமும் அதுதான்.

ஐ.நா.வுக்கு என நிலையான ராணுவம் எதுவும் கிடையாது. ஏகாதிபத்திய நாடுகள் காசையும், பிற ஏழை நாடுகள் அடியாட்களையும் அமைதிப்படை பணிக்கு சப்ளை செய்கின்றன.

அமைதிப்படைக்கு மிகப்பெரிய நிதிப்பங்களிப்பு அளிக்கும் முதல் நான்கு நாடுகள் அமெரிக்கா (28.38%), ஜப்பான் (10.83%), பிரான்ஸ்(7.22%), ஜெர்மனி(7.14%). இவர்களெல்லாம் உலக அமைதியை விரும்பி, போரை வெறுத்த புத்தர்கள் அல்ல. அமைதிப்படை வீரர்கள் ஹைத்தி பெண்களுக்கு அளித்த பால் பவுடர் டப்பாவுக்கும், துண்டு ரொட்டிக்கும் பின் பாலியல் சுரண்டல் என்னும் தேவை இருந்ததைப் போல ஏகாதிபத்திய நாடுகளுக்கு வேறு வகையான சுரண்டல் நோக்கங்கள் உள்ளன.

துசா
1804-ல் ஹைத்தி விடுதலைக்கு தலைமை வகித்த துசா லூவேதியூர்

19-ம் நூற்றாண்டில் பிரான்சின் காலனிய ஆக்கிரமிப்பை முறியடித்து 1804-ம் ஆண்டு லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவு நாடுகளில் முதல் குடியரசாக விடுதலை பெற்றது ஹைத்தி. முதல் உலகப் போரின் போது அமெரிக்கப் படைகள் ஹைத்தியில் இறங்கி அடுத்த 20 ஆண்டுகள் நேரடி ஆக்கிரமிப்பை தொடர்ந்தன. இப்போது ஹைத்தியில் அமைதியை நிலைநாட்ட பிரான்சும், அமெரிக்காவும் படைகள் ஏற்பாடு செய்கின்றன என்பதிலிருந்து ஐ.நா அமைதிப்படையின் நோக்கத்தை புரிந்து கொள்ளலாம்.

அமைதிப் படை பணிக்கு அடியாள் பங்களிப்பாளர்களாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் பில்டிங்கும், பேஸ்மெண்ட்டும் ஒருசேர பலவீனமான நாடுகள் தான் இடம் பிடித்துள்ளன. முதல் நான்கு இடங்களில் வங்கதேசம் (9380 பேர்), பாகிஸ்தான் (8,797 பேர்), இந்தியா (8,102 பேர்), நேபாளம் (5,532பேர்) ஆகிய நாடுகள் உள்ளன. ஆனால், உலக நாட்டாமை அமெரிக்கா இந்த அமைதிப்படைக்கு அளித்திருக்கும் அடியாட்களின் எண்ணிக்கையோ வெறும் 80. கலவரம் செய்ய சங்க பரிவாரங்களுக்கும், `உலக அமைதியை` நிலை நாட்ட அமெரிக்காவுக்கு அவுட் சோர்சிங் தேவை என்பதை சொல்லவும் வேண்டுமோ?

அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய எபோலோ வைரஸ்காய்ச்சலுக்கு அனுப்பிய மருத்துவர்களின் எண்ணிக்கையோ பத்து விரல்களுக்குள் அடங்கி விடும். ஆனால், எபோலோ வைரஸ் பரவிய மக்கள் கொத்து கொத்தாக செத்து விழுந்த போது அமெரிக்கா, லைபீரியாவுக்கு 3,000 ஆயுதம் தாங்கிய அடியாட்களை அனுப்பி வைத்தது. இவர்களின் பண்பு பற்றியெரியும் வீட்டில் சுருட்டு பற்ற வைக்கும் பண்ணையார்களுடையது.

இன்று உலகின் மிக மோசமான பஞ்சத்தாலும், எல்லா வகைச் சுரண்டலாலும் அடிமைப்பட்டு கிடக்கிறது ஹைத்தி. உலக நாடுகள் அனைத்தின் காலனியாக வல்லரசுகளின் சிலந்தி வலையில் ஐ.நா போன்ற கட்டப்பஞ்சாயத்து அமைப்புகளின் அடியாள் படையை சுமந்துகொண்டு காயும் வயிற்றுடன், பஞ்சடைத்த கண்களுடனும், எல்லா வகைச் சுரண்டல்களையும் வேதனையுடன் அனுபவித்துக் கொண்டு மற்றுமொரு விடுதலைப் போருக்காக காத்திருக்கிறது.

– எட்கர்

தொடர்பான செய்திகள்