privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

பிணந்தின்னிகள் !

-

பெருமையாகச் சித்தரிக்கப்படும் ‘சட்டத்தின் ஆட்சி’ தோல்வியடைந்து கிடப்பதை, கடந்த ஜூன் மாதத்தில் மகாராஷ்டிராவிலும் உ.பி.யிலும் அடுத்தடுத்து இரண்டு பத்திரிகையாளர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள நிகழ்வுகள் மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன.

ஜகேந்திரா, சந்தீப் கோத்தாரி
ஆளும் சமாஜ்வாதி கட்சியின் அமைச்சரான ராம் மூர்த்தி சிங் வர்மாவின் சட்டவிரோத சுரஙகக் கொள்ளையை அம்பலப்படுத்தியதால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட உ.பி.யின் பத்திரிகையாளர் ஜகேந்திரா. சுரங்க மாஃபியா கும்பலால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட ம.பி பத்திரிகையாளர் சந்தீப் கோத்தாரி.

உ.பி.யைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஜகேந்திரா, ஆளும் சமஜ்வாதி கட்சியின் பால்வளத்துறை அமைச்சரான ராம்மூர்த்தி சிங் வர்மாவின் சட்டவிரோத சுரங்கக் கொள்ளையையும், நிலப்பறிப்பையும் எதிர்த்து உள்ளூர் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார். ஒரு அங்கன்வாடி பெண் ஊழியர் மீது பாலியல் வன்முறையை ஏவி அம்பலப்பட்டுள்ள அமைச்சர் வர்மாவின் சட்டவிரோத, சமூகவிரோத சுரங்கக் கொள்ளையை “பேஸ் புக்”கில் அவர் தோலுரித்துக் காட்டினார்.

கடந்த ஜூன் முதல்நாளன்று பிற்பகலில் ஷாஜகான்பூரின் சர்தார் பஜார் பகுதியிலுள்ள அவரது வீட்டுக்கு போலீசாரின் துணையுடன் வந்த அமைச்சரின் அடியாட்கள், அவரது வீட்டைச் சோதனை நடத்துவதாகக் கூறித் தகராறு செய்து ஜகேந்திராவை மிருகத்தனமாக அடித்து உதைத்துவிட்டு, அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொளுத்திவிட்டு தப்பியோடினர். பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்குப் போராடிய அவர், அமைச்சர் வர்மாவையும் அவரது அடியாட்கள் மற்றும் துணைநின்ற 5 போலீசுக்காரன்களையும் தண்டிக்கக் கோரி மாஜிஸ்டிரேட் முன்னிலையில் வாக்குமூலம் அளித்துவிட்டு, கடந்த ஜூன் 8-ம் தேதியன்று மாண்டுபோனார்.

இக்கொடுஞ்செயலுக்கு எதிராகப் பத்திரிகையாளர்களும், எதிர்க்கட்சிகளும், உழைக்கும் மக்களும் போராடியதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட 5 போலீசுக்காரன்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்களே அன்றி, அமைச்சர் வர்மா இன்றுவரை கைது செய்யப்படவில்லை. மறுபுறம் தடயவியல் துறையினரைக் கொண்டு, ஜகேந்திரா தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உ.பி. அரசு அறிவித்துள்ளது. மற்றவர்கள் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்திருந்தால் உடலின் மேல்பாகம் எரிந்திருக்கும் என்றும், உடலின் கீழ்பாகம் கருகியிருப்பதால் இது தற்கொலைதான் என்று தடயவியல் – புலனாய்வு அதிகாரிகளைக் கொண்டு அறிக்கை வெளியிட வைத்தும், அமைச்சரால் பாலியல் வன்முறைக்கு ஆளான அங்கன்வாடி பெண் ஊழியரை மிரட்டி சாட்சி சொல்ல வைத்தும், ஜகேந்திரா குடும்பத்தாருக்கு நிவாரணத் தொகை கொடுத்து வாயடைக்கச் செய்தும் இந்தப் படுகொலையை மூடிமறைக்க முயற்சிக்கிறது ஆளும் சமஜ்வாதி அரசு.

இப்படுகொலை ஏற்படுத்திய அதிர்ச்சி அடங்குவதற்குள்ளாகவே, ம.பி.யில் பத்திரிகையாளரான சந்தீப் கோத்தாரி சுரங்க மாஃபியா கும்பலால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். ம.பி.யின் சுரங்க மாஃபியாக்களின் சூறையாடலையும், மங்கனீசு கனிமவளக் கொள்ளையையும், அவர்களது கூட்டாளிகளான அதிகார வர்க்கத்தையும் ஓட்டுக்கட்சிப் பிரமுகர்களையும் தோலுரித்துக் காட்டி, சந்தீப் கோத்தாரி தொடர்ந்து உள்ளூர் பத்திரிகைகளில் எழுதி வந்தார். அதற்காகவே அவரையும் அவரது குடும்பத்தாரையும் இக்கொள்ளையர்கள் தொடர்ந்து மிரட்டி வந்தனர். அவர் மீது பல பொய் வழக்குகளைச் சோடித்து தொல்லை கொடுத்தனர்.

சுரங்க மாஃபியாக்களின் பகற்கொள்ளையை எதிர்த்து அவர் தொடுத்துள்ள ஒரு வழக்கைத் திரும்பப் பெறச் செய்ய நிர்ப்பந்தித்து அவர் மறுத்ததால், கடந்த ஜூன் 19 அன்று மோட்டார் சைக்கிளில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தபோது, குண்டர்களால் கடத்திச் செல்லப்பட்டார். கொடூரமாக சித்திரவதை செய்து, அவரை உயிரோடு எரித்துக் கொன்றுவிட்டு மகாராஷ்டிராவின் வார்தா மாவட்டம் சிந்தி ரயில் நிலையம் அருகே அவரது பிணத்தை சுரங்க மாஃபியாக்கள் வீசியெறிந்துள்ளனர்.

பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, நாடெங்கும் ஊழல் கொள்ளையர்களையும் சாராய கும்பலையும் சமூக விரோத குற்றக் கும்பல்களையும் அம்பலப்படுத்திப் போராடிய எத்தனையோ இளைஞர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். ஊழல் கொள்ளைகளுக்கு எதிராக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் பெற முயல்பவர்கள்கூட குறிவைத்து கொல்லப்படுகின்றனர். அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறையின் உதவியுடன் கிரிமினல் குற்றக் கும்பலை முறியடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் எழுதுபவர்களையும் போராடுபவர்களையும், அதே அதிகார வர்க்க, போலீசு, நீதித்துறையின் துணையுடன் கிரிமினல் குற்றக் கும்பல்கள் அழித்தொழிக்கின்றனர்.

கிரிமினல் குற்றக் கும்பல்களின் அட்டூழியங்கள் தலைவிரித்தாடும் நிலையில், மாவோயிஸ்டு புரட்சியாளர்கள் வன்முறைப் பாதையைக் கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டும் என்று ஆளும் வர்க்கங்களும் தேசிய ஊடகங்களும் தொடர்ந்து உபதேசிக்கின்றன. ஆனால் இந்த அரசமைப்பின் சட்டவிதிகளுக்குட்பட்டு, ஜனநாயக முறைப்படி போராடுவோருக்கே இந்தக் கதி என்றால், இது சட்டத்தின் ஆட்சியின் தோல்வியையும், ஆளும் வர்க்கம் ஆளத்தகுதியிழந்து நிற்பதையும், இந்த அரசமைப்பானது எதிர்நிலை சக்தியாக மாறிவிட்டதையும்தான் நிரூபித்துக் காட்டுகிறது.

– தனபால்
_______________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2015
_______________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க