privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்இந்தியா: தடை செய்யப்பட்ட பொருட்களின் சொர்க்கம்

இந்தியா: தடை செய்யப்பட்ட பொருட்களின் சொர்க்கம்

-

மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்ட பிறகு மழைக்கால ஈசல்களைப் போல் வேறு சில துரித உணவு வகைகளையும் ஆய்வு செய்யப் போவதாக விறைப்புக் காட்டுகிறது இந்திய அரசு. இந்த வீராப்புகளுக்கும் அதே மழைக்கால ஈசல்களின் ஆயுள் தான். கூடுதலாக மேகியை தடை செய்த ‘கடுமையான’ நடவடிக்கைகளின் யோக்கியதையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு முதலாளியின் கண்ணோட்டத்தில் லாபத்திற்கு உட்பட்டதுதான் அறநெறி. லாபம் எழுப்பும் மக்கள் விரோத பிரச்சினையை முதலாளியின் கஷ்டமாக இவர்கள் மடை மாற்றுவார்கள். இந்நிலையில் ஒரு பன்னாட்டு நிறுவனம், மூன்றாம் உலகநாடு ஒன்றில் தொழில் வர்த்தகத்தில் ஈடுபடும் போது அந்நாட்டு மக்களை என்னவாக கருதும்?

இந்தக் கேள்விக்கான சரியான விடையை போபால் விஷவாயு புகழ் ஆண்டர்சன் உயிரோடு இருந்தால் சொல்லியிருப்பார். ஓரளவுக்கு சரியான விடையை இந்திய தரகு முதலாளிகளாலும் கூட சொல்ல முடியும்.

மேகி நூடுல்ஸ் தடை
நெஸ்லே மேகியில் காரீயமும், மோனோ சோடியம் க்ளூட்டமைட்டும் அதிகளவில் உள்ளதாக சோதனையில் கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது

இந்தியச் சந்தையில் விற்கப்படும் நெஸ்லே மேகியில் காரீயமும், மோனோ சோடியம் க்ளூட்டமைட்டும் அதிகளவில் உள்ளதாக சோதனையில் கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. உடனடியாக தனது நாட்டில் விற்கப்படும் மேகி பாக்கெட்டுகளை பரிசோதனைக்கு அனுப்பிய சிங்கப்பூர், பரிசோதனை முடிவுகளின் படி தமது நாட்டில் விற்கப்படும் மேகி பாக்கெட்டுகளில் காரீயமும் மோனோ சோடியம் க்ளூட்டமைட்டும் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளுக்கு உள்ளே இருப்பதாக அறிவித்துள்ளது.

கோக்கோ கோலா மற்றும் பெப்சி நிறுவனங்களின் தயாரிப்புகளான கோலா பானங்களில் ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணயித்த அளவை விட 36 மடங்கு அதிகமாக பூச்சி மருந்து கலந்திருப்பதை 2003-ம் ஆண்டு தில்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் என்ற தன்னார்வ அமைப்பு அம்பலப்படுத்தியது. இவ்விரு கோலா நிறுவனங்களும் தமது பூச்சி மருந்து வியாபாரத்தை இந்தியர்களோடு நடத்தி வந்த அதே நேரம் தமது மேற்கத்திய வாடிக்கையாளர்களுக்கான தயாரிப்புகளுக்கு மட்டும் ஓரளவு தரக்கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றி வந்தன.

ஒருபக்கம் இந்தியர்களுக்கும் வெள்ளை வாடிக்கையாளர்களுக்கு இருவேறு அளவுகோல்களை இவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்றால், இன்னொரு பக்கம் வெளிநாடுகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் இந்தியச் சந்தையில் தாராளமாக அனுமதிக்கப்படுகிறது.

தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள்
வெளிநாடுகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் இந்தியச் சந்தையில் தாராளமாக அனுமதிக்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை (FDA) இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஹல்திராம் நொறுவை வகைகளுக்கு தடை விதித்துள்ளது. ஹல்திராமின் தயாரிப்புகளில் அதிகளவில் பூச்சிக் கொல்லி மருந்துகள் இருந்ததால் அவை உட்கொள்ளத் தகுதியற்றவை என்று FDA சான்றளித்துள்ளது.

அமெரிக்காவின் தடை குறித்து ஹல்திராம் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஒருவரிடம் இந்தியா டுடே பத்திரிகை கேட்ட போது, “ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான பாதுகாப்பு தரநிர்ணயம் உள்ளது, நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டுள்ளார்.

போலவே இங்கே சாதாரணமாக பெட்டிக் கடைகளில் கிடைக்கும் டாபர் சவன்ப்ராஷ் லேகியத்தை கனேடிய அரசாங்கம் அதிகளவிலான காரீயம் மற்றும் மெர்குரி கலந்திருப்பதால் 2005-ம் ஆண்டு முதல் தடை செய்துள்ளது. அதே போல் “மணல் மணலான’ சுத்தமான நெய் என்று விளம்பரப்படுத்தப்படும் ஜி.ஆர்.பி நெய் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது.

மேற்கத்திய நாடுகளில், மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களின் மேல் தனிவகைக் குறியீடுகள் இடம் பெறுவதை கட்டாயமாக்கியுள்ள அதே நேரம் இந்தியாவைப் பொருத்தவரையில் பல்வேறு விவசாய உற்பத்திப் பொருட்களில் மரபணு மாற்ற விதைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதோடு அவை குறித்த விவரங்களையும் ரகசியமாகவே வைத்துள்ளனர். அரிசி, தக்காளி, மக்காச் சோளம், கத்தரி போன்றவற்றில் மரபணு மாற்றப்பட்ட ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும் அவை என்ன ரகங்கள் எந்தப் பகுதிகளில் பயிரிடப்படுகின்றன என்பது போன்ற விவரங்கள் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை.

மேகி தடை
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள் மேற்கத்திய சந்தையில் தடைசெய்யப்படுவது அல்லது திருப்பியனுப்பப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும், இவையனைத்தும் உள்நாட்டுச் சந்தையில் எந்தத் தடையுமின்றி நுகர்வோருக்குக் கிடைத்து வருகிறது.

மருந்துப் பொருட்களை எடுத்துக் கொண்டால், Novalgin, Baralgan, Nise, D’cold, Vicks action 500, Ciza, Droperol, Furoxone, Lomofen, Furacin, Emfurazone, Helmazan, Enteroquinol, Ibsinorm, Tagon, Ridazin, Thioril, Pacentrex உள்ளிட்ட ஏராளமான மருந்து வகைகள் உலகில் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. இதே மருந்துப் பொருட்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதைக் கடந்து இவற்றை மருத்துவரின் பரிந்துறை இல்லாமலே கூட நுகர்வோரால் வாங்க முடியும் என்ற அளவில் தான் இங்கே ‘கட்டுப்பாடு’ உள்ளது.

மேலே பட்டியலிடப்பட்டுள்ள பிற நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகளில் Furoxone, Lomofen, Furacin மற்றும் Emfurazone ஆகிய மருந்துகள் புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை என்றும், D’cold மற்றும் Vicks action 500 ஆகியவை மூளைச்சிதைவை (Brain hemorrhage) ஏற்படுத்தக் கூடியவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் சில மருந்துப் பொருட்கள் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றும் கண் பார்வையையே பறிக்கக் கூடியவை என்பதால் தடை செய்யப்பட்டவை.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள் மேற்கத்திய சந்தையில் தடைசெய்யப்படுவது அல்லது திருப்பியனுப்பப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும், இவையனைத்தும் உள்நாட்டுச் சந்தையில் எந்தத் தடையுமின்றி நுகர்வோருக்குக் கிடைத்து வருகிறது. போலவே இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களின் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு உள்ளதென்றும், அவை சாலையில் பயன்படுத்தத் தக்கவையல்ல என்றும் கடந்தாண்டு ஐரோப்பிய ஒன்றியத்தால் நிராகரிக்கப்பட்டன.

இது தவிர பல நாடுகளில் தடை செய்யப்பட்ட Carbaryl, Malathion, Acephate, Dimethoate, Chlorpyrifos, Lindane, Quinalphos, Phosphomidon, Carbandizm, Captan, Tridamorph, Practilachlor, 2.4–D and Glyphosate உள்ளிட்ட 67 வகையான பூச்சிக் கொல்லி மருந்துகள் இந்திய நிலங்களில் கொட்டப்பட்டு மொத்த நாட்டின் விளை நிலங்களும் விசமாக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு உரக்கம்பெனிகள் மேற்கில் தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துகளை வகை தொகையின்றி இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் மட்டுமின்றி எதார்த்தத்தில் மொத்த இந்தியாவும் உலகின் குப்பைத் தொட்டியாக விளங்குகிறது.

உலகின் மின்னணுக் கழிவுகளுக்கான குப்பைத் தொட்டியாக விளங்குகிறது தில்லியில் உள்ள சீலம்பூர். 2007-ம் ஆண்டு கணக்கின் படி சுமார் 11594 டன் அளவாக இருந்த மின்னணுக் கழிவுகளின் வரத்து, 2014-ம் ஆண்டு 30,000 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கழிவுகளின் மொத்த கணக்கைச் சேர்த்தால் சுமார் 13 லட்சம் மெட்ரிக் டன் மின்னணுக் கழிவுகள் தில்லியில் கொட்டப்படுகின்றன.

தலைநகர் தில்லியில் உள்ள மாயாபுரி தொழிற்சாலைக் கழிவுகளுக்கான குப்பைத் தொட்டியாக பராமரிக்கப்பட்டு வந்தது. பல லட்சம் டன்கள் இரும்பு மற்றும் உலோகக் கழிவுகள் மாயாபுரியில் கொட்டப்பட்டு அந்தப் பிராந்தியமே மாசுபட்டு சீரழிந்தது.

காடுகளையும் ஆறுகளையும் மலைகளையும் அழித்தும், ஆற்றுநீரையும் நிலத்தடி நீரையும் வரைமுறையின்றி உறிஞ்சியும், நச்சுக் கழிவுகளைக் கொட்டி சுற்றுச்சூழலை நாசமாக்கியும் வரும் கார்ப்பரேட் நிறுவனங்களால் இந்தியாவின் 13 நகரங்கள் மிக மோசமாக மாசடைந்துள்ளன. 150 ஆறுகளில் 76 ஆறுகள் கழிவுநீர் கால்வாய்களாக மாறிவிட்டன. கப்பல் உடைக்கும் தொழில் நடக்கும் குஜராத்தின் அலாங் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான டன்கள் அளவுக்கு நச்சுக் கழிவுகள் குவிந்து ஆண்டுக்குச் சராசரியாக 60 பேர் கொல்லப்பட்டு வருகின்றனர்.

மேற்கில் காலாவதியாகிப் போன சாதாரண தொழில்நுட்பம் முதல் அணுத் தொழில்நுட்பம் வரை இந்தியாவின் தலையில் கட்டுகிறார்கள் பன்னாட்டு முதலாளிகளும் ஏகாதிபத்திய நாடுகளும். இந்த சூறையாடலுக்கு எந்த இடையூறும் வந்து விடக்கூடாது என்பதில் இந்திய ஆளும் வர்க்கம் முனைப்பாக உள்ளது. அதற்காகவே, சுற்றுச்சூழல் சட்டம், வனப் பாதுகாப்புச் சட்டம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் என்று சகல விதமான கட்டுப்பாடுகளையும் தளர்த்துகிறது, மோடியின் அரசு.

பன்னாட்டு நிறுவனங்கள் சந்தைப்படுத்தும் உணவுப் பொருட்களுக்கும் மருந்துப் பொருட்களுக்குமான கட்டுப்பாட்டு முறை என்பதே இந்தியாவில் பெயரளவில் தான் உள்ளது. மேற்கத்திய நாடுகளில் சந்தைக்குச் செல்லும் முன் மற்றும் சந்தைக்குச் சென்ற பின் என சோதனை மற்றும் எதிர்வினை என்று இரண்டு அம்சங்களிலும் பரிசோதனை மற்றும் தரக்கட்டுப்பாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன.

மேற்கத்திய நாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு முதலாளித்துவ சமூக அமைப்பு ஏற்படுத்தியுள்ள நுகர்வோர் விழிப்புணர்வு ஒரு காரணம் என்றாலும், தங்கள் சொந்த நாட்டு வளங்களைப் பாதுகாத்துக் கொண்டு மூன்றாம் உலக நாடுகளின் வளங்களை வரைமுறையின்றி சீரழிக்கலாம் என்ற ஏகாதிபத்திய சுரண்டல் நலனே பிரதான பாத்திரமாற்றுகிறது. இதன் காரணமாகத் தான் அதிக கழிவுகளை வெளிப்படுத்தும் உற்பத்தித் தொழில்கள் மற்றும் ஆலைத் தொழில்களை இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்குத் தள்ளி விடுகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை மக்களின் மேலும், இயற்கை வளங்களின் மேலும் செய்யப்படும் கூட்டு வல்லுறவை தொழில் வளர்ச்சி என்கின்றனர் முதலாளித்துவ ’அறிவுஜீவிகள்’. பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணின் உயரம் முதலாளிகளுக்கு ஏற்படுத்தும் உவகையின் முன் அழிந்து கொண்டிருக்கும் நாடும் நாட்டு மக்களும் இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. இந்த மனித குல விரோதிகளின் ஒட்டுமொத்த குறியீடாக வந்திருப்பவர் தான் மோடி.

நம்மைச் சுற்றிலும் மலையைத் திருடி, ஆற்றை உறிஞ்சிக் களவாடி, காடுகளை அழித்து, நிலத்தை நஞ்சாக்கி, காற்றில் விஷத்தை பரப்புகிறார்கள் உள்நாட்டுத் தரகு முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும். இந்தச் சூழலில் நீங்கள் ப்ராணாயாமம் செய்தாலும் உள்ளே செல்லப் போவதென்னவோ காற்றில் கலந்துள்ள கார்பன் மோனோ ஆக்சைடு தான். பாதுகாப்பட்ட தண்ணீரைக் குடித்தாலும் டவ் கெமிக்கல்சின் இரசாயன பூச்சிக் கொல்லி மருந்திலிருந்து தப்ப முடியாது.

நெஸ்லே மேகியின் மீதான கண்துடைப்பு தடை எத்தனை காலத்திற்கு இருக்கும் என்று நமக்குத் தெரியாது – கோலா பானங்களின் மீதான ’தடைக்கு’ என்ன நேர்ந்ததோ அதே தான் இந்த ‘தடைக்கும்’ நேரும். நிரந்தரத் தடை வேண்டுமென்றால் அது மக்கள் கையில் மட்டுமே உள்ளது.

– தமிழரசன்