privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்சி.ஆர்.ஐ முதலாளி சேவையில் அரசு - கோவை பொதுக்கூட்டம்

சி.ஆர்.ஐ முதலாளி சேவையில் அரசு – கோவை பொதுக்கூட்டம்

-

“சட்டவிரோத கதவடைப்பை நீக்கு! இல்லையேல் குடும்பத்தோடு எங்களை சிறையிலடை!!”  என்ற கோரிக்கையுடன்,  கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி 90 நாட்களுக்கும் மேலாக உறுதியான போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர், கோவை சி.ஆர்.ஐ. பம்ப் நிறுவனத்தின் தொழிலாளர்கள்.

சி.ஆர்.ஐ தொழிலாளர் போராட்டம்
சட்டவிரோத கதவடைப்பை நீக்கு! இல்லையேல் குடும்பத்தோடு எங்களை சிறையிலடை!

கோவை   சின்னவேடம்பட்டி, சி.ஆர்.ஐ. நிறுவனம் கதவடைப்பு செய்யப்பட்டிருக்கிறது. 1987-ல் இராஜேந்திரா இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் குடிசைத் தொழிலாக தொடங்கப்பட்ட சி.ஆர்.ஐ., இன்று கோவை மாவட்டத்தில் ஆறு கிளைகள், சீனாவில் ஒரு கிளை என்று வளர்ந்திருக்கிறது. இந்நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் விவசாயம், தொழிற்சாலை மற்றும் வீட்டு உபயோகத்திற்கான நீரிறைக்கும் இயந்திரங்கள் உள்நாட்டில் மட்டுமின்றி, 120 நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.  இன்று  இந்நிறுவனத்தின் ஆண்டு வணிகம் ரூ 1100 கோடி.

சின்னவேடம்பட்டி கிளையில் பணியாற்றும் 160 பேரில் 50 பேர்தான் நிரந்தர தொழிலாளர்கள். மற்றவர்கள்  தற்காலிக தொழிலாளர்கள். 5 முதல் பத்தாண்டுகளுக்கும் மேலாக, தற்காலிகத் தொழிலாளர்களாகவே பணிபுரியும் இவர்களது அதிகபட்ச சம்பளம் 6,000 ரூபாய். முதலாளி சவுந்திராஜன் சைக்கிளை உருட்டிக் கொண்டு கம்பெனிக்கு வந்துகொண்டிருந்த காலத்திலிருந்தே உழைத்து வரும் இத்தொழிலாளர்கள்தான்  இன்று நடுத்தெருவில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கான முயற்சியை 2012 இலேயே தொடங்கி விட்டார் சி.ஆர்.ஐ. முதலாளி. “ஒப்பந்தத் தொழிலாளியாக மாறிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எஃப். வசதிகளை இனி வழங்கமுடியாது” என்று திமிராக அறிவித்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த தொழிலாளர்களை சக்கையை போல வீசியெறிந்துவிட்டு, அவர்களை விடக் குறைவான கூலிக்கு வடமாநிலத் தொழிலாளர்களை அமர்த்திக்கொள்வதே சவுந்தரரானின் திட்டம். சி.ஆர்.ஐ.யின் மற்றக் கிளைகளிலெல்லாம் வட மாநிலத் தொழிலாளர்கள் நிரப்பப்பட்டு விட்டனர்.

முதலாளியின் பேச்சை நம்பி சங்கம் கூடத் தொடங்காமல் 25 ஆண்டுகாலம் விசுவாசமாக உழைத்த தொழிலாளிகள், இதன் பின்னர்தான் பு.ஜ.தொ.மு. சங்கத்தை தொடங்கினர்.  பணிநிரந்தரம் உள்ளிட்ட உரிமைகளுக்காக சங்கம்  போராடத் தொடங்கியது.

சி.ஆர்.ஐ தொழிலாளர் போராட்டம்
20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் 31 தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டுமென்று தொழிலாளர் நல ஆய்வாளர் உத்தரவிட வேண்டியதாயிற்று

பணி நிரந்தரத்துக்காக பு.ஜ.தொ.மு. நடத்திய போராட்டத்தின் விளைவாக, 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் 31 தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டுமென்று  தொழிலாளர் நல ஆய்வாளர் உத்தரவிட வேண்டியதாயிற்று. உடனே, உயர்நீதிமன்றத்துக்கு சென்ற சி.ஆர்.ஐ முதலாளி, நீதிபதி கர்ணனிடம் இதற்கு இடைக்காலத் தடை வாங்கினார்.

சங்கம் தொடங்கியதற்காக, தொழிலாளர்களை தொடர்ந்து பழிவாங்கும் நிர்வாகத்தின் அடாவடித்தனங்கள், நட்டம் என்று பொய்க்கணக்கு காட்டுவது போன்ற தில்லுமுல்லுகளை தொழிலாளர் துறை ஆணையர் முன் ஆதாரங்களுடன் பு.ஜ.தொ.மு அம்பலப்படுத்தியது. சி.ஆர்.ஐ நிர்வாகமோ வாய்தாவுக்கு வராமல் இழுத்தடித்தது.  தொழிலாளர்துறை முதல் நீதிமன்றம் வரை அனைத்தையும் விலைக்கு வாங்க முடிந்த போதிலும், அடிமைகளாக நடந்து கொள்ள வேண்டிய தொழிலாளர்கள் தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்பதை சவுந்தரராஜனால் சகிக்க முடியவில்லை.

எனவே, தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு அதுவரை வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை, சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு மறுக்கப்பட்டது. 8 மணிநேரத்தில் முடிக்கக்கூடிய வேலையை 4 மணிநேரத்தில் செய்து முடித்துத் தருமாறு நிர்ப்பந்திப்பது, இலக்கை எட்டவில்லை என்று கூறி சம்பளத்தில் பிடித்தம் செய்வது, பரிச்சயமில்லாத துறைகளுக்கு தொழிலாளர்களைப் பந்தாடுவது, சட்டப்படியான விடுமுறையைக் கூடத் தர மறுப்பது என்று பல வடிவங்களில் சங்கத்தின் மீது தாக்குதல் தொடுத்தது நிர்வாகம். வக்கிரத்தின் உச்சமாக மற்ற கிளைகளில் 30% போனஸ், சின்னவேடம்பட்டி கிளைக்கு மட்டும் 8.33% தான் என்று அறிவித்தார் சவுந்தரராஜன்

கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு மிடுக்காக உலக நாடுகளை சுற்றி வந்தாலும், முதலாளி சவுந்தரராஜனின் புத்தி பண்ணையார்த்தனமும் தெள்ளவாரித்தனமும் கலந்தது. தொழிலாளர்களோ சுயமரியாதை உணர்வும் புத்திக்கூர்மையும் நிறைந்தவர்கள். சங்கத்தை ஒழிப்பதாக எண்ணிக்கொண்டு ஆலைவாயிலில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையை ஆள்வைத்து திருடிப் பார்த்தார் சவுந்தரராஜன். அப்புறம் கொடிக்கம்பத்தை பிடுங்கிப் போட்டார். கடைசியாக, சங்கத்தைக் கலைத்தால் போனஸ், கல்வி உதவித்தொகை என்று தொழிலாளிகளுக்கு ஆசை காட்டியும் பார்த்தார்.  எதுவும் பலிக்கவில்லை.

தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளை எதிர்த்து, வேலைநிறுத்தம் செய்ப்போவதாக தொழிலாளர்கள் அறிவித்த உடனே, கதவடைப்பு செய்து விட்டு, காண்டிராக்டில் தயாரித்த தரமற்ற பம்புகளில் சி.ஆர்.ஐ என்று முத்திரை குத்தி விற்கத் தொடங்கினார் சவுந்தரராஜன். போலி சி.ஆர்.ஐ பம்புகளை வாங்காதீர் என்று இந்த பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தினர் தொழிலாளர்கள்.

இது சட்டவிரோதமான கதவடைப்புதான் என்று தொழிலாளர் நல ஆணையர்  ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. இருந்தபோதிலும், முதலாளிக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை அரசு. “முதலாளி தமது மகளின் திருமண @வலைகளில் மும்மரமாக இருப்பதால் பேச்சு வார்த்தைக்கு வரமுடியாது” என்று சி.ஆர்.ஐ. நிர்வாகம் திமிராக அறிவித்தது. அதுவரை வயிற்றில் ஈரத்துணிகட்டி காத்திருக்குமாறு கூறுகிறது அதிகார வர்க்கம்.

இப்படி தொழிலாளிகளின் தாலி அறுத்து, மகளுக்கு ஆயிரம் பவுன் போட்டு திருமணம் நடத்தும் சி.ஆர்.ஐ. முதலாளியின் வக்கிரத்தை திருமண முகூர்த்தம் நடைபெறும் சவுந்தரராஜனின் கிராமம் முழுவதும் பிரச்சாரம் செய்து  மதிப்பிழக்கச் செய்தனர் தொழிலாளர்கள். ஜூன் 12 அன்று திருமண வரவேற்பு நடைபெறும் கோவை கொடிசியா அரங்கின் வாசலில், சவுந்தரராஜனால் கொலை செய்யப்பட்ட சி.ஆர்.ஐ. கம்பெனியை சங்கு ஊதி சேகண்டி அடித்து பாடையில் கொண்டு செல்வோம் என்று அறிவித்து, அந்தப் பாடை தூக்கும் விழாவுக்கு சவுந்திராஜனின் வீட்டிற்கே சென்று பத்திரிகையும்வைத்தனர்.

சி.ஆர்.ஐ தொழிலாளர் போராட்டம்
“ஜூன் 12 அன்று திருமண வரவேற்பு நடைபெறும் கோவை கொடிசியா அரங்கின் வாசலில், சவுந்தரராஜனால் கொலை செய்யப்பட்ட சி.ஆர்.ஐ. கம்பெனியை சங்கு ஊதி சேகண்டி அடித்து பாடையில் கொண்டு செல்வோம்” என்று அறிவிப்பு

இந்நடவடிக்கைகளால் பீதியடைந்தார் சவுந்தரராஜன். உடனே, மூன்று மாதங்களாகத் தூங்கிக் கொண்டிருந்த அரசு எந்திரம் துள்ளி எழுந்தது. ஜெயலலிதா பதவியேற்பைக் கண்டித்து மே 22 ஆம்தேதி ஒட்டிய சுவரொட்டியைக் காரணம் காட்டி, ஜூன் 10 அன்று பு.ஜ.தொ.மு.வின் மாநில துணைத்தலைவர் விளவை இராமசாமியையும் அவரது மகனும் பு.மா.இ.மு.வின் கோவை மாவட்ட செயலருமான திலீபனையும் கைது செய்தது போலீசு. ராமசாமி பிணையில் வந்தவுடன் மீண்டும் பொய்வழக்குப் போட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை குண்டர் சட்டத்தில் சிறைவைப்பதே அரசின் திட்டம்.

இதுவன்றி, 5 சங்க முன்னணியாளர்கள், போராட்டப் பந்தலில் சமையல் செய்து கொண்டிருந்த தொழிலாளிகள் போன்றோர் மீதும் பொய்வழக்கு போடப்பட்டு சிறைவைக்கப்பட்டனர். தொழிலாளர் குடும்பத்தினர் மிரட்டப்பட்டனர். போலீசு ஆய்வாளர் ஜோதியும் சரவணம்பட்டி போலீசும் சவுந்தரராஜனிடம் கவ்விய காசுக்கு அதிகமாகவே குரைத்தனர்.

ஜூன் 12 அன்று திருமண வரவேற்பு நடந்த கொடீசியா அரங்கைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு. கல்யாணக் கறிசோறுக்காக போலீசு காத்து நிற்க, பசிக்கும் பட்டினிக்கும் பணிந்துவிடாத தொழிலாளர்கள்,  திட்டமிட்டவாறு காந்திபுரம் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கைது செய்யப்பட்ட தொழிலாளிகளின்  தாய்மார்களும் மனைவிமார்களும் சிறை செல்ல அஞ்சவில்லை. பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளைக் கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.

பதினோரு வருசம் மண்டி போட்டாச்சு. இனிமே நம்ம கைதான் உசர இருக்கணும். முதலாளி கை கீழத்தான் போகணும் என்று ஆவேசமாகச் சொன்னார் ஒரு தொழிலாளியின் தாய். ஊதிய உயர்வு, போனசு என்ற கோரிக்கைகளின் வரம்பைத் தாண்டி, சி.ஆர்.ஐ என்ற ஒரு நிறுவனத்தின் முதலாளிக்கெதிரான போராட்டம் என்ற எல்லையையும் தாண்டி, அந்தத் தாயின் குரலில் ஒலிப்பது தொழிலாளி வர்க்கத்தின்  நெஞ்சில் கனன்று கொண்டிருக்கும் வேட்கையல்லவா!

பெஸ்ட் பம்ப்ஸ்

கோவை தடாகம் ரோட்டில் அமைந்துள்ள பெஸ்ட் குரூப் கம்பெனிகளில் சுமார் 250 தொழிலாளர்கள் கடந்த 25 வருடங்களாக வேலை செய்து வருகிறார்கள். இ‌.எஸ்‌.ஐ, பி‌எஃப் வசதி இல்லை. ஒரு தொழிலாளி கூட நிரந்தரம் இல்லை. சட்டப்படியான உரிமைகள் கேட்டதுக்கு தொழிலாளர்கள் 50 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு எதிராக 50 தொழிலாளர்கள் கடந்த 90 நாட்களுக்கும் மேலாக போராடி வருகிறார்கள்.

சி.ஆர்.ஐ தொழிலாளர் போராட்டம்
“கோவை தொழிலாளர் துறை வெல்லம் கொடுத்து பேசியே கொல்கிறது.”

சட்ட விரோத வேலை நீக்கத்துக்கெதிராக தொழிலாளர் துறையில் மனுச் செய்தும் எந்த விட பலனும் இல்லை. தொழிலாளர்களை விசம் கொடுத்து கொல்வது ஒரு பாணி வெல்லம் கொடுத்து கொல்வது ஒரு பாணி. கோவை தொழிலாளர் துறை வெல்லம் கொடுத்து பேசியே கொல்கிறது. கோவை மாநகர காவல்துறை போராடும் தொழிலாளர்களை விசம் கொடுத்து கொல்லும் முறையில் சிறையில் அடைத்தும் மிரட்டியும் கொல்கிறது.

தொழிலாளர் துறை அலுவலகத்தில் டி‌.சி‌.எல் முன் நடைபெறும் பேச்சு வார்த்தைக்கு முதலாளி திருமதி ஸ்ரீப்ரியா கலந்து கொண்டால் பந்தய சாலை காவல் நிலைய காவலர்கள் இருபது பேர் பாதுகாப்புக்கு வருகின்றனர். முதலாளியோ, “என்னால் 50 பேரையும் வேலைக்கு எடுக்க முடியாது; தொழிலாளர்கள் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்” எனத் திமிராக எழுதித் தருகிறார். இதனை தொழிலாளர் துறை ஆணையர் எந்த விட மறுப்பும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறார். காவல் துறையோ, “இதற்கு எதிராக தொழிலாளர்கள் பெருமூச்சு விட்டாலும் கைது செய்வோம்” என மிரட்டுகிறார்கள். பெஸ்ட் கம்பெனி தொழிலாளர்கள் 4 பேர் மீது ஆறு பிரிவுகளில் பொய் வழக்கு போட்டு சிறையிலும் அடைத்து விட்டது. மீதி 30 தொழிலாளர்கள் மீது பொய் வழக்கை சாயிபாபா காலனி காவல் துறை கொடுத்துள்ளது.

இதன் மூலம் காவல் துறை என்ன சொல்கிறது என்றால் ’50 தொழிலாளர்கள் குடும்பங்கள் அழிந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. முதலாளி ஸ்ரீப்ரியா குடும்பத்துக்கு எந்த விட பாதிப்பும் வரக் கூடாது’ என்கிறார்கள்.

பெஸ்ட் தொழிலாளர் போராட்டம்
தொழிலாளர்கள் பக்கம் சகல நியாயங்கள் இருந்தும் கேட்பதற்கு ஆள் இல்லை.

முதலாளி ஸ்ரீப்ரியா சட்டத்தை மயிரளவும் மதிக்காமல் நடப்பார். 25 வருடங்களாக வேலை செய்யும் தொழிலாளர்களை ஒப்பந்தக் கூலிகள் என்கிறார். யார் அந்த ஒப்பந்த தாரர் எனக் கேட்டால், நானேதான் என்கிறார். ஒரு முதலாளி எப்படி தன்னை ஒப்பந்த தாரர் எனக் கூற முடியும்? “இதற்கு அனுமதி வாங்கியுள்ளீர்களா” எனக் கேட்டால் “அதெல்லாம் வாங்க முடியாது நான் சொல்வதுதான் சட்டம்” என்கிறார். “சட்டப்படி நடக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை, என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது, எனக்கு பாதுகாவலாக காவல்துறை உள்ளது” எனச் சொல்கிறார்.

மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இரண்டு முறை மனு கொடுத்து முறையீடு செய்தாகி விட்டது. சட்டப்படியான அமைப்புகள் அனைத்தின் கதவுகளையும் தட்டியாகிவிட்டது. அனைவரும் முதலாளிக்கு கூசாமல் சேவகம் செய்கிறார்கள். எல்லாத் திசைகளிலும் பணம் பாதாளம் வரை பாய்கிறது.

பெஸ்ட் தொழிலாளர் போராட்டம்
தொழிலாளர்கள் தங்கள் நியாயத்தை பெற என்ன செய்வது.? விடை காண வாருங்கள்.

தொழிலாளர்கள் பக்கம் சகல நியாயங்கள் இருந்தும் கேட்பதற்கு ஆள் இல்லை. கோவை மாநகர காவல்துறையே “நாங்கள் தொழிலாளர்களது நியாயங்களை செவி மடுத்துக் கேட்க மாட்டோம் பட்டினியால் தொழிலாளர்கள் அழிந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை, ஆனால் எக்காரணம் கொண்டும் போராடக் கூடாது. போராடினால் சிறையில் அடைப்ப்ம்“ என மிரட்டிக் கொண்டுள்ளனர்.

பெஸ்ட் கம்பெனியில் கடந்த 25 வருடங்களாக நிரந்தரத் தொழிலாளர்கள் யாரும் இல்லை. இ‌.எஸ்‌.ஐ பி‌எஃப் உரிமைகள் கூட இல்லை.

முதலாளி கடந்த 25 வருடங்களாக சட்டத்தை ஏமாற்றி தொழிலாளர்கள் உழைப்பையே உறிஞ்சி மேலும் மேலும் பணம் சேர்க்கிறார். மாவட்ட ஆட்சித் தலைவரும் முதலாளிக்கு உதவியாக உள்ளார். தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளார். தொழிலாளர் துறையும் முதலாளிக்கு சேவகம் செய்கிறது. தொழிற்சாலை ஆய்வாளரும் முதலாளிக்கு சேவகம் செய்கிறார். காவல் துறையும் முதலாளிக்கு எடுபிடி வேலை செய்கிறது. தொழிலாளர்கள் தங்கள் நியாயத்தை பெற என்ன செய்வது.? விடை காண வாருங்கள்.

முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!

கோவை மாநகர காவல் துறை அறிவிப்பு !

  • முதலாளிகளுக்கு சேவை செய்வதே எங்கள் கொள்கை!
  • தொழிலாளர்களை சிறையிலடைப்பதே எங்கள் நடைமுறை

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அறிவிப்பு

  • காவல் துறை, தொழிலாளர் நலத் துறையின் சதியை முறியடிப்போம்!
  • தொழிலாளிகளின் உரிமைகளை மீட்டெடுப்போம்!!

சி‌.ஆர்‌.ஐ பெஸ்ட் தொழிலாளர் போராட்டங்களும் கட்டமைப்பு நெருக்கடியும்

பொதுக் கூட்டம்

26-07-2015 மாலை 6 மணி
துடியலூர் பேருந்து நிலையம்
கோவை

நிகழ்ச்சி நிரல்

தலைமை :
தோழர் குமாரவேல்
மாவட்டத் தலைவர், பு.ஜ.தொ.மு, கோவை.

முன்னிலை :
தோழர் சரவணன்
பெஸ்ட் பம்ப்ஸ் கிளைச் செயலர், பு.ஜ.தொ.மு, கோவை.

உரை :
தோழர் விளவை இராமசாமி
மாநிலத் துணைத் தலைவர்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு.

சிறப்புரை :
தோழர் ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு

நன்றியுரை :

தோழர் பூவண்ணன்
மாவட்ட பொருளாளர், பு.ஜ.தொ.மு, கோவை.

(ம.க.இ.க மையக் கலைக் குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்)

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

  1. போகிற போக்கை பார்த்தால் எல்லா தொழிற்சாலைகளையும் மூடிவிட்டுதான் மறுவேலை போலும்! யாருமே வேலை தராத நிலையில் கிடைந்த வந்த கஞ்சியும் போச்சி!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க