privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஉலக போலீசின் உள்ளூர் கொலைகள்

உலக போலீசின் உள்ளூர் கொலைகள்

-

2015, ஜூன் 9 அன்று கார்டியன் பத்திரிக்கை ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருந்தது. அதில் இங்கிலாந்து, ஐஸ்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளின் போலீசோடு அமெரிக்க போலீசை ஒப்பிட்டிருந்தது. அதன்படி அந்நாடுகளின் போலீஸ் சில பத்தாண்டுகளில் சுட்டுக் கொல்வதை அமெரிக்க போலீசு ஒரு நாளிலே செய்து விடுகிறது.

போலீசால் கொலை செய்யப்பட்டவர்கள்.
போலீசால் கொலை செய்யப்பட்டவர்கள்.

2015-ம் ஆண்டின் தொடக்கத்தில் முதல் 24 நாட்களில் மட்டும் அமெரிக்க மக்கள் மீது அமெரிக்க போலீஸ் 59 முறை அபாயகரமாக சுட்டிருப்பதாக கூறுகிறது அந்தப் பட்டியல். ஆனால் இங்கிலாந்து போலீசு 1990-2014 வரையிலான 24 ஆண்டுகளில்தான் 55 தடவை  அச்செயலை செய்திருப்பதாக கூறுகிறது.

ஆஸ்திரேலிய போலீஸ் 1992 முதல் 2011 வரையிலான 20 ஆண்டுகளில் 94 பேரை சுட்டுக் கொன்றிருக்கும் நிலையில் அமெரிக்க போலீஸ் 2015 மார்ச் மாதத்தில் மட்டும் 97 பேரை சுட்டுக் கொன்றிருக்கிறது. ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களிலேயே ஆஸ்திரேலிய போலீஸ் 20 ஆண்டுகளில் கொன்றதை விட எண்ணிக்கையில் மிக அதிகமாக கொல்கிறது அமெரிக்க போலீஸ்!

கனடா (மக்கள் தொகை 3.5 கோடி) போலீஸ் ஒரு ஆண்டில் சுட்டுக் கொல்லும் மக்களின் எண்ணிக்கை 25. அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவில் (மக்கள் தொகை 3.8 கோடி) மட்டும் போலீஸ் 2015-ன் முதல் 6 மாதங்களில் மட்டும் 72 பேரை சுட்டுக் கொன்றுள்ளது

அமெரிக்க போலீசின் காட்டுமிராண்டிதனத்தை இன்னும் நெருங்கி பார்ப்பதற்காக, மக்கள்தொகை ஏறக்குறைய ஒரே அளவில் இருக்கும் கலிபோர்னியாவை சேர்ந்த ஸ்டாக்டன் நகரத்தையும் ஐஸ்லாந்து தீவையும் கார்டியன் ஆய்வு ஒப்பிடுகிறது. ஸ்டாக்டன் நகரின் மக்கள்தொகை 2.9 லட்சம், ஐஸ்லாந்தின் மக்கள்தொகை 3.2 லட்சம். ஐஸ்லாந்து 1944-ல் விடுதலையான பிறகு, ஏறக்குறைய 71 ஆண்டுகளுக்குப் பிறகு 2013-ல் மனநலம் குன்றிய நோயாளி ஒருவரை அந்நாட்டு போலீஸ் சுட்டுக் கொன்றது. இது தான் 71 ஆண்டுகளில் ஐஸ்லாந்து போலீஸ் செய்த முதல் கொலையாகும். மாறாக ஸ்டாக்டன் நகர போலீசார் இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் 3 பேரைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.

அமெரிக்க போலிசின் இது போன்ற படுகொலைகள் ஒருபுறமிருக்க மறுபுறம் அதன் நிறவெறி உலகம் முழுதும் கடுமையான கண்டனங்களை சந்தித்துள்ளது. புள்ளி விவரங்களின் அடிப்படையில் அமெரிக்க போலீஸ் வெள்ளையின மக்களை விட அதிகமாக கறுப்பின மக்களை படுகொலை செய்துள்ளது. 10 லட்சம் பேரில் சுட்டுக் கொல்லப்படும் கருப்பினத்தை சேர்ந்தவர்கள் எண்ணிக்கை 3.66, சுட்டுக் கொல்லப்படும் வெள்ளையினத்தவர் எண்ணிக்கை 0.9 ஆகும்.

போலீசால் கொல்லப்படுதல்கார்டியன் பத்திரிக்கை செய்த இன்னொரு ஒப்பீட்டில் அமெரிக்க போலீசின் நிறவெறி அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது. ஜெர்மனி போலீஸ் எந்த இனத்தையும் சேர்ந்த ஆயுதம் ஏந்திய அல்லது ஆயுதமற்ற 15 பேரை 2010-2011-லிருந்து 2 ஆண்டுகளில் சுட்டுக் கொன்றுள்ளது. மாறாக, அமெரிக்க போலீஸ் 2015 ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் நிராயுதபாணியான 19 கறுப்பின மக்களை சுட்டுக் கொன்றுள்ளது.

மிசெளரி மாகாணத்தில் நிராயுதபாணியான கறுப்பின இளைஞனான  மைக்கேல் பிரௌனை நிறவெறியால் படுகொலை செய்த வெள்ளையின போலீஸ் அதிகாரியை விடுவித்த அமெரிக்க நீதிமன்றத்தின் செயலுக்கு எதிராக அந்த மாகாணமே கொதித்தெழுந்தது.

ஏனைய நாடுகளின் மக்களை விட அதிக அளவில் அமெரிக்க மக்கள் அதன் போலீசால் சுட்டுக் கொல்லப்படுவதைப் பற்றியும், கறுப்பின மக்கள் அதிகமாக கொல்லப்படுவதற்கு காரணமான நிறவெறி குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூட அமெரிக்காவை கேட்கும் அளவிற்கு அமெரிக்க போலீசின் யோக்கியதை சந்தி சிரித்தது. இவ்வளவிற்கும் ஐ.நா.சபைதான் ஈராக், ஆப்கான் ஆக்கிரமிப்பு போர்களுக்கு லைசன்ஸ் கொடுத்த புண்ணியவான். அந்த அளவுக்கு நிறவெறியை மறைக்க முடியவில்லை போலும்.

கடைசியாக பொது மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டு பின்லாந்து நாட்டு போலீசுடன் செய்த ஒரு ஒப்பீட்டைப் பார்ப்போம். 2013-ல் பின்லாந்து போலிஸ் 6 குண்டுகளை மட்டுமே மக்கள் மீது பிரயோகித்தது. ஆனால் வாஷிங்டன் மாநிலத்தை சேர்ந்த பாஸ்கோ நகரில் கற்களை ஆயுதமாக ஏந்திய ஒருவரை மட்டும் 17 குண்டுகளால் சுட்டு உடலை சல்லடையாக்கி கொன்றனர் அமெரிக்க போலீசார்.

அமெரிக்க உள்நாட்டு புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ வெளியிட்ட தகவலின் படி, 2012-ல் மட்டும் 410 பேர் அமெரிக்க போலீசால் கொல்லப்பட்டனர். அதில் 409 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்க போலீஸ் அதன் சொந்த மக்களை சுட்டுக் கொல்வது, இனவெறியோடு கறுப்பின மக்களை குறி வைப்பது ஒருபுறம். மறுபுறம் பள்ளிக்கூடங்கள், பொது இடங்களில் அமெரிக்கர்கள் சிலரே பொதுமக்களை சுட்டுக்கொல்கின்றனர். அமெரிக்க சொர்க்கத்தின் யோக்கியதையை கார்டியனின் புள்ளி விவரங்கள் பறை சாற்றுகின்றன.

இது தொடர்பான செய்திகள்