Friday, December 2, 2022
முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்க ஏவுகணைகள் = அமெரிக்க பத்திரிகைகள்

அமெரிக்க ஏவுகணைகள் = அமெரிக்க பத்திரிகைகள்

-

மெரிக்க ஊடகங்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடாவடி செயல்களுக்கு எப்படி பக்க வாத்தியங்கள் இசைத்து அதன் சொந்த மக்களை நுட்பமாக ஏமாற்றுகின்றன என்பதற்கு சில சமீபத்திய சான்றுகளைப் பார்ப்போம்.

வடகொரிய ஏவுகணை சோதனை
வடகொரியாவின் ஏவுகணை சோதனை “இது ஒரு ஆத்திரமூட்டும் செயல்”

2015, மே – 9 அன்று கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையை சோதனை செய்து பார்த்ததாக வட கொரியா தெரிவித்தது. இது ஒரு ஆத்திரமூட்டும் செயல் என்றும் , தென்கொரிய – அமெரிக்கா இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியினாலும், உலக நாடுகளின் ஆதரவு கிடைக்காததன் ஆத்திரத்தினாலும் வட கொரியா அடுத்தடுத்த ஏவுகணை சொதனைகளில் ஈடுபடுகிறது என்று தென் கொரிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்ததாக யூ.எஸ்.ஏ டுடே என்ற அமெரிக்கப் பத்திரிகை செய்தி வெளியிட்டு இருக்கிறது.

மார்ச் – 23 அன்று அமெரிக்கா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து அணுகுண்டை ஏவ வல்ல ஏவுகணையை சோதித்துப் பார்த்தது. இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்கா இது போன்று 3 முறை சோதித்து பார்த்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஜப்பானுடன் சேர்ந்து தயாரித்த ஏவுகணைகளை() ஜூன் – 6 அன்று பரிசோதித்துப் பார்த்துள்ளது. பாகிஸ்தானையும் சீனாவையும் காரணம் காட்டி இந்திய அரசும் கூட அணுகுண்டை தாங்கி செல்லும் அக்னி – 5 ஏவுகணையை ஜனவரி மாதத்தில் சோதனை செய்து பார்த்துள்ளது. அது மட்டுமல்லாமல் மார்ச் – 19 மற்றும் ஏப்ரல்–4 ல் வேறு சில ஏவுகணை சோதனைகளையும் நிகழ்த்தியுள்ளது.

அமெரிக்க ஏவுகணை சோதனை
அமெரிக்காவின் ஏவுகணை சோதனைகள் “நாட்டின் பாதுகாப்பிற்கு அவசியமானது”

இது போன்ற சோதனைகள் தங்களது நாட்டின் பாதுகாப்பிற்கு அவசியமானது என்று ஏவுகணை சோதனையில் ஈடுபடும் அனைத்து நாடுகளும் கூறி வருகின்றன. நிலைமை இப்படி இருக்கும் போது,  அமெரிக்க அரசும், அதன் ஊடகங்களும் அதே போன்ற தர்க்க நியாயத்தை ஒருபோதும் தம் எதிரிகளிடம் எதிர்பார்ப்பதில்லை. அவற்றை நிராகரிக்கவே செய்கின்றனர்.

ஒவ்வொரு முறை வடகொரியா ஏவுகணை சோதனை செய்யும் போதும் கொரியத் தீபகற்பம் முழுமைக்கும் பதட்டமான சூழல் நிலவுகிறது என்று அமெரிக்க சார்பு ஊடகங்கள் கூறி வருகின்றன. ஆனால், அமெரிக்காவின் இராணுவ அச்சுறுத்தலுக்கு எதிராக இது போன்ற சோதனைகளை தான் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதாக கூறி வருவதை இருட்டடிப்பு செய்கின்றன.

வடகொரியாவின் செயல்களுக்கு கண், காது, மூக்கு வைத்து அமெரிக்க ஊடகங்கள் கதை, திரைக்கதை, வசனம் எழுதி பலவிதமான காட்சிப் படிமங்களாக மக்களின் மூளையில் சொருகி வருகின்றன. அதே வேளையில் அமெரிக்கா ஆக்கிரமிக்கும் நாடுகளைப்  பற்றி இட்டுக் கட்டி எழுதி தனது சொந்த மக்களை ஒரு பீதியிலேயே வைத்திருக்கின்றன. எந்த ஒரு நாடு அமெரிக்க பத்திரிகைகளுக்குத் தீனியாக இருக்கிறதோ அந்த நாடுதான் அமெரிக்க இராணுவத்திற்கும் பலியாகிக் கொண்டிருக்கும். அதன் அடிப்படையில் அந்த நாடுகளைத் தாக்குவதற்கான தார்மீக ஆதரவுத் தளத்தை பொது மக்களிடம் பெறுவதற்கு  அமெரிக்க ஊடகங்கள் பெரும் பங்காற்றுகின்றன.

பாலஸ்தீன பிரச்சனை
பாலஸ்தீன பிரச்சனைக்கு இஸ்ரேல் பொறுப்பில்லையாம்

இசுரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையேயான பிரச்சினையில் பாலஸ்தீனத்தை தனிமைப்படுத்தவும், பாலஸ்தீனத்தைத் தாக்குவதற்கு இசுரேலுக்கு அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவ ரீதியிலான உதவிகள் அமெரிக்கா அளிப்பதை நியாயப்படுத்தவும் அமெரிக்க ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

சமீபத்தில் ஜூன் 16 அன்று இசுரேலிய வெளியுறவுத்துறை “காசாவைப் பற்றி அறிந்து கொள்ள உங்கள் கண்களை திறவுங்கள்” (open your eyes about Gaza) என்ற  அனிமேஷன் காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், ஒரு வெளிநாட்டு பத்திரிக்கை நிருபர் ஒருவர் “நாம் காசா நகரத்தின் மையத்தில் இருக்கிறோம். இங்கே மக்கள் அனைவரும் அமைதியாக வாழ விரும்புகிறார்கள். இங்கே தீவிரவாதிகள் யாரும் இல்லை, இருப்பவர்கள் அனைவரும் சாதாரண மக்களே” என்று பேச ஆரம்பிக்கும் போது நகரத்தில் ஹமாஸ் தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதலில் ஈடுபடுவர். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் எதிராக தீவிரவாதிகளின் செயல்கள் இருக்குமாறு காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த காணொளி மூலம் பாலஸ்தீனம் இன்று இரத்தக் களறியாக இருப்பதற்கு தனக்கு எந்த பாத்திரமும் இல்லை, அனைத்திற்கும் தற்போது பாலஸ்தீனத்தை ஆளும் ஹமாஸ் தீவிரவாதிகள் தாம் காரணம் என்று இசுரேலிய அரசுத் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க – இசுரேலிய ஊடகங்கள் அதற்கு பக்க வாத்தியங்கள் வாசித்து வருகின்றன.

ஆனால் உண்மை நிலவரம் என்ன? ஐக்கிய நாடுகளின் மனித நேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு  குழு வெளியீட்ட புள்ளிவிவரங்கள் இதற்கு மாறான தகவல்களைத் தெரிவிக்கின்றன. அமெரிக்க – இசுரேலிய மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையேயான சண்டையில் 2014-ல் மட்டும் 1,483 அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், அதில் 521 பேர் குழந்தைகள் மற்றும் 283 பேர் பெண்கள். ஏறத்தாழ 5 லட்சம் மக்கள் தங்களது சொந்த இடங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டுள்ளனர், 18,000 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

ஐ.எஸ்.ஐ.எஸ்
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட புத்தம் புது டொயோட்டா வண்டிகளில் உலா வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமெரிக்காவின் எதிரியாம்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் 15 ஆண்டுகள் (1990-2005) வெளிநாட்டு நிருபராகவும் , மத்திய அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் பத்திரிகையாளராகவும் பணியாற்றிய அனுபவம் மிகுந்த கிரீஸ் வெட்ஜஸ், இசுரேலுக்கு ஆதரவான கருத்துக்கள் எப்படி திணிக்கப்படுகின்றன என்பதைப் பற்றியும் அதற்கு பத்திரிக்கையாளர்கள் எவ்வாறு நிர்பந்திக்கபடுகிறார்கள் என்பதைப் பற்றியும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

பிப்ரவரி 13 அன்று இங்கிலாந்தை சேர்ந்த 100 கலைஞர்கள் பாலஸ்தீன மக்களை ஆதரித்தும், இசுரேலுடையேயான கலாச்சார உறவுகளை புறக்கணிப்பதாகவும் கார்டியன் பத்திரிகைக்கு ஒரு கடிதத்தை எழுதி இருந்தனர். இதுவரையிலான கொடூரமான ஆக்கிரமிப்புகளில் ஒன்றான இதன் மூலம் பாலஸ்தீன மக்களது வாழ்வாதாரம்  முற்றிலும் சேதப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறி உள்ளனர். இசுரேலின் தாக்குதல் பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரங்களை பாதிப்பதுடன் குறிப்பாக அவர்களது கலாசார அடையாளங்களை குறி வைத்தும் நடத்தபடுகிறது என்று குற்றம் சாட்டியிருந்தனர்.

இசுலாமியத் தீவிரவாதிகள் வேறு மதத்தினரது கலாச்சார அடையாளங்களை அழித்தொழிப்பதாக கூறிக் கொண்டு அமெரிக்க மற்றும் இசுரேல் அரசுகள் கடுமையானத் தாக்குதலை மேற்கொண்டு அப்பாவி மக்களை அழித்துக் கொண்டு இருக்கும் அதே வேளையில் ஊடகங்கள் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இந்த இனவழிப்பு குறித்த உண்மைகளை மறைத்தோ அல்லது ஹமாஸ் அமைப்பினரது தாக்குதல்களை மிகைப்படுத்தியோ பொதுப்புத்திக்குள் புதைத்து விடுகின்றன.

அமெரிக்காவின் நடவடிக்கைகளின் பின் விளைவுகள் பெற்றெடுத்த பிள்ளைகள்  தாம் அல்கைதா, ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் என்று தமது சொந்த நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய தார்மீகக் கடைமையை ஊடகங்கள் கைகழுவிக் கொண்டு உள்ளன.

ஈராக்கின் மீதான தனது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த புஷ் கூறிய வார்த்தைகள், “ஈராக்கை நிராயுதபாணியாக்கி, அதன் மக்கள் விடுவிப்பது மற்றும் உலகைக் காப்பது” என்பவை உலகெங்கும் உள்ள ஊடகங்களில் திரும்பத் திரும்ப விளம்பரப்படுத்தப்பட்டன. தன்னை ஒரு மீட்பனாக அறிவித்து தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு உலகுத் தழுவிய பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டது அமெரிக்கா. ஈராக் என்ற ஒரு பெரும் புதைகுழியில் அமெரிக்க பொருளாதாரம் புதையும் வரையில் அது நீடித்தது. அதன் பின்னர் சொந்த நாட்டு மக்களின் எதிர்ப்புப் போராட்டம் காரணமாகவும் பொருளாதார ரீதியிலான கடுமையான பின்னடைவு காரணமாகவும் மண்ணைக் கவ்வி பின்வாங்கியது.

தீவிரவாதத்திற்கு எதிரான இந்த பம்மாத்து, தீவிரவாதிகளை அழிப்பதில்லை மாறாக அவர்களை உருவாக்கத்தான் செய்கிறது. அல்கொய்தா தீவிரவாத அமைப்பினரை உருவாக்கிய அமெரிக்கா பின்னர் அதன் தலைவர் பின்லேடனை அழிப்பதற்காக போர் நடத்தியது மட்டுமல்லாமல் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினருக்கு புரவலராக அமெரிக்கா இருந்து வருவதும் அம்பலமாகி சந்தி சிரிக்கின்றது.

அமெரிக்க ஊடகங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை பற்றி அதன் மக்களை அச்சமூட்டி வரும் அதே நேரத்தில், அதன் உருவாக்கத்தில் அமெரிக்காவின் பங்கைப் பற்றி அமைதி காத்து வருகின்றன. இந்த ஆண்டில் ஜூன் மாதம் வரை 100 பேர்களின் தலையைத் துண்டித்து படுகொலை செய்த அமெரிக்காவின் விசுவாசியான சவூதி அரசின் காட்டுமிராண்டி செயல்களை கண்டும் காணாமல் இருக்கும் ஊடகங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்-ன் படுகொலைகளை பற்றி எழுத எந்த ஒரு தர்க்க நியாயமும் இல்லை.

ஐ.எஸ் தலையை துண்டிக்கும் வீடியோவை காட்டும் அமெரிக்க ஊடகங்கள், அதன் அடிப்படையில் அமெரிக்க அரசின் சித்திரவதை சிறைகளை நியாயப்படுத்துகின்றன. ஆனால், தலை துண்டிக்கப்படும் வீடியோவில், அந்த படுகொலைகள், அமெரிக்க அரசின் அபு கரீப் சிறை சித்திரவதைகளுக்கு எதிர்வினை என்று கொலையாளிகள் கூறுவதை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்து விடுகின்றன.

ஜூலை – 6 காலைப் பொழுதில் வடக்கு யேமன் துறைமுக பகுதியில் சவுதி-அரேபியா தலைமையிலான  கூட்டுப் படைகளின் வான்வெளித் தாக்குதலால் 45 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேலான அப்பாவி மக்கள் படுகாயமுற்றனர். ஏழை நாடான யேமனைத் தாக்குவதற்கு அரேபியாவிற்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது. தமது சொந்த அரசின் இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளை அமெரிக்க மக்களுக்கு தெரியப்படுத்த இந்த ஊடகங்கள் தவறுகின்றன.

உலகெங்கும் உள்ள ஜனநாயகவாதிகள், மனித உரிமை அமைப்புகள் அமெரிக்கா மற்றும் இசுரேலின் பயங்கரவாத செயல்களை அம்பலபடுத்தி வந்தாலும் அவை பெரும்பாலும் பொது மக்களின் செவிகளுக்கு எட்டுவதில்லை. வெகுஜன ஊடகங்கள் பெரும்பாலும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சொந்தமாக இருப்பதால் அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதல்களால் சிதறுபட்ட அப்பாவி மக்களின் இரத்தத் துளிகள் தாம் இம்முதலாளிகளின் பத்திரிகைகளின் “எழுத்து மையாகவே” மாறுகின்றன.

மேலும் படிக்க:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க