Saturday, May 10, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்நெய்வேலி நிலக்கரி தொழிலாளர் போராட்டம் வெல்க !

நெய்வேலி நிலக்கரி தொழிலாளர் போராட்டம் வெல்க !

-

அன்பார்ந்த தொழிலாளர்களே!

பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 12,000 நிரந்தரத் தொழிலாளர்களும் 10,000 ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர்.

workers-struggle-bannerநிரந்தரத் தொழிலாளர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் புதுப்பிக்க வேண்டும். அந்த அடிப்படையில் ஏற்கனவே உள்ள ஒப்பந்தம் 31-12-2011 ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இதன் பின்னர் 43 மாதங்களாக ஊதிய உயர்வு தொடர்பாக 25 கட்டங்களாக பேச்சு வார்த்தை நடத்தியும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

ஒரு அற்பத் தொகையை ஊதிய உயர்வாக தருவதாகக் கூறி வருகிறது NLC நிர்வாகம். தொழிலாளர்களின் குறைந்த பட்ச கோரிக்கைகளைக் கூட நிர்வாகம் ஏற்கவில்லை. தொழிலாளர்கள் தரப்பில் தரப்பட்ட வேலை நிறுத்த அறிவிப்புக்கு நீதிமன்றம் தடைவிதித்து தொழிலாளர் விரோதப் போக்கைக் காட்டி வருகிறது.

இதனை மீறி கடந்த 20-ம் தேதி அதிகாலை முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஆதரவுடன் நடக்கும் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நாட்டின் மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்று!

NLC தொழிலாளர்களின் போராட்டத்தில் முக்கியமான கோரிக்கைகளில் ஊதிய உயர்வு, 25 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவந்த ஈடுகட்டும் விடுப்பை (C Off) ரத்து செய்யும் நிர்வாகத்தின் முடிவைக் கைவிடுதல் போன்றவை முக்கியமானவை. மேலும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் பேசி முடிக்கும் நடைமுறையை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று மாற்றி இருப்பதே தொழிலாளர்களை நசுக்கும் முடிவாகும். மேலும், தொழிலாளர்களின் குறைந்தபட்ச உரிமைகளைக் கூட அங்கீகரிக்க மறுக்கின்றது ஆலை நிர்வாகம்.

இதற்கு முக்கியக் காரணம், 1992-ல் கொண்டுவரப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையாகும். இந்தக் கொள்கையின் அடிப்படையில் தான் பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்குவது, தொழிலாளர்களின் குறைந்தபட்ச உரிமைகளைப் பறிப்பது போன்ற அடக்குமுறைகளை ஏவிவருகின்றன மத்திய மாநில அரசுகள். மோடி அரசு மேலும் தீவிரமாக செயல்பட்டு, தொழிலாளர்களின் அற்ப சொற்ப உரிமைகளையும் பறித்துவருகிறது. இதற்கான மசோதாவையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற இருக்கிறது.

குறிப்பாக, பொதுத்துறை தனியார்மயமாக்குவதற்கு முன்பாக, பன்னாட்டுக் கம்பெனிகளும் கார்ப்பரேட் கம்பெனிகளும் விதிக்கும் நிபந்தனைகளே, அவர்களின் இலாப வெறியை உத்திரவாதப்படுத்திக் கொள்பவையாக இருக்கின்றன. அந்த வகையில்தான், குறைந்த கூலி, பராமரிப்பு செலவுகளைக் குறைப்பது போன்றவற்றை பொதுத்துறை நிறுவனங்களில் தற்போதே அமுலுக்குக் கொண்டுவரவேண்டும் எனக் கோருகின்றன. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வை மிக அற்பத்தொகையைக் கொடுத்ததும் இதன் வெளிப்பாடே!

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து ஓட்டுக்கட்சிகளும் இந்த தனியார்மயக் கொள்கைகளைத் தத்தமது மாநிலங்களில் தீவிரமாக அமுல்படுத்தி வருகின்றன. இதனால், பாதிக்கப்படும் தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடும் போது மட்டும் நீலிக்கண்ணீர் வடித்தும், தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுப்பது போல நடித்தும் வருகின்றன. “தொழிலாளர்களின் பிரச்சனையை விரைந்து பேசி தீர்க்க வேண்டும்” என மத்திய அரசுக்குக் கோரிக்கை வைப்பதுடன் நின்று கொள்கின்றன.

மற்றொருபுறம், மின்சாரத்துறை தனியார்மயமாக்கம், கனிமவளங்கள் சூறையாடல், நிலக்கரியில் அண்மையில் நடந்துவரும் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஊழல்கள் போன்றவை அனைத்தும் தனியார்மயம் தாராளமயத்தின் விளைவே. மின்சாரத்துறையை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து, அதன் மூலம் தொடர்ந்து மின்சார விலையேற்றத்தை மக்கள் மீது திணித்திருப்பதும் இதன் விளைவே. இதன் மூலம், மின்சாரத்தை தொடர்ந்து விலையேற்றவும், கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களைக் கொள்ளையடிக்கவும் முழுமையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், மக்கள் நல அரசு என்ற போர்வையை அரசு கழற்றி வீசிவிட்டது. அதாவது, இலவச மருத்துவம், இலவசக் கல்வி, நீதி, சட்டம் போன்ற அனைத்தையும் இந்த அரசே கடைப்பிடிப்பதில்லை. மக்களுக்கு குறைந்தப் பட்ச தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அளவிற்கு இந்த அரசு மக்களை ஆளத் தகுதியிழந்துவிட்டது. முதலாளிக்கும் தொழிலாளிக்கும் வாழும் உரிமையை வழங்குவதுதான் ஜனநாயகம் என்று இவர்கள் பேசியதை எல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, அப்பட்டமாக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடியாளாக அரசு செயல்பட்டு வருகிறது. தொழிற்சங்கப் போராட்டங்களையும் விவசாய சங்கப் போராட்டங்களையும் கடுமையாக ஒடுக்கிறது.

இதனால், சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற குறைந்தபட்ச தேவைகளுக்கு மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். இலஞ்ச ஊழல், பாலியல் வன்கொடுமை, டாஸ்மாக் போன்ற சமூக அநீதிகளுக்கு எதிராக மக்களே திரண்டெழுந்து, நேரடியாக சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்கின்ற போராட்டங்கள் வளர்ந்து வருகின்றன.

இவ்வுண்மைகள் நமக்கு உணர்த்துவது என்ன? தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தினால் பாதிக்கப்படுகின்ற தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், வியாபாரிகள், சிறு தொழில் செய்பவர்கள் அனைவரும் இனியும் தனித்தனியாகப் போராடி வெற்றிபெற முடியாது. இதற்கு உதாரணம், சமீபத்தில் நடந்த போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டமே. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நீண்டகாலமாக இக்கோரிக்கைகளுக்காக நடத்தியப் போராட்டத்தின் விளைவு மிகச் சொற்பமான (மூன்றாண்டுகளுக்கு 5.5%. அதாவது ரூ 500 முதல் 1500 வரை) ஊதிய உயர்வே இது ஊதிய உயர்வு என்பதைவிட, அடக்குமுறை தொடர்கிறது என்பதுதான் உண்மை!

மேலும், சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு போராட முடியாது என்பதுதான் அனுபவம். தற்போது, NLC தொழிலாளர்களும் நீதிமன்றத் தடையை மீறித்தான் போராடி வருகின்றனர்.

nlc-workers-strikeஇந்தச் சூழலை நாம் உணரவேண்டும். NLC தொழிலாளர்களின் மீதான அடக்குமுறைகளும் தனியார்மயமும் பிரிக்க முடியாதவை. இத்தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது, இந்த அரசு ஆளத் தகுதியிழந்ததன் விளைவு. ஆகையால், தொழிலாளர்கள் பரந்துபட்ட ஒரு ஐக்கியத்தை உருவாக்குவதும், அடுத்த கட்டமாக அரசை நிர்பந்திக்கும் ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டங்களுக்கும் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வகையில் தங்களது உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்!

NLC தொழிலாளர்களின் போராட்டம் வெல்க!

மத்திய அரசே!

  • 43 மாதங்களாக நிறைவேற்றாத ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி தீர்வுகாண்!
  • பொதுத்துறைகள் தனியார்மயத்தை கைவிடு!

உழைக்கும் மக்களே, தொழிலாளர்களே!

  • NLC தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளும் மின் கட்டண உயர்வும் தனியார்மயத்தின் விளைவுகளே! இந்த அரசு மக்களை ஆளத் தகுதியிழந்துவிட்டது என்பதன் வெளிப்பாடே!
  • NLC தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்போம்! அரசை நிர்பந்தித்து அனைத்து மக்களும் ஒன்றிணைந்துப் போராடுவோம்!
  • NLC தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்ட மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 97880 11784