Tuesday, September 10, 2024
முகப்புகட்சிகள்காங்கிரஸ்யாகூப் மேமன் கொலை – இந்து மனசாட்சிக்கு இன்னொரு பலி !

யாகூப் மேமன் கொலை – இந்து மனசாட்சிக்கு இன்னொரு பலி !

-

யாகூம் மேமன்யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டு விட்டார். இன்று – 30.07.2015 – காலை 7 மணிக்குள் மேமனைத் தூக்கிலிடாவிட்டால், நீதி செத்துவிடும் என்று பதறிய உச்ச நீதிமன்றம் இரவோடு இரவாக நீதி வழங்கி விட்டது.

“பவானிசிங்கின் நியமனம் செல்லாது, ஆனால் அவரை அரசு வழக்குரைஞராக அங்கீகரித்து குமாரசாமி நடத்திய விசாரணை செல்லும்” என்று ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கிய நீதியரசர் தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வுதான் இந்தத் தீர்ப்பையும் வழங்கியிருக்கிறது.

இந்த மரண தண்டனை வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு கீழ்மை ! அநீதி, இந்து வெறி, நயவஞ்சகம், நம்பிக்கைத் துரோகம் என எந்தவொரு சொல்லுக்குள்ளும் அதனை அடக்க முடியாது. பாரதிய ஜனதா மட்டுமல்ல காங்கிரசும், விசாரணை நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரையிலான அனைவரும் இந்தக் குற்றத்தின் கூட்டாளிகள்.

1994-ல் சி.பி.ஐ-இன் பிடியில் இருந்த யாகூப் மேமனை முதன் முதலில் சந்தித்த பத்திரிகையாளர் மஸீ ரஹ்மான், (தற்போது கார்டியன் பத்திரிகையில் பணியாற்றுகிறார்) அவுட் லுக் வார இதழில் எழுதியுள்ள கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் – “இந்திய நீதியின் மீது அப்பாவித்தனமாக பெரு நம்பிக்கை வைத்திருந்த குற்றத்துக்காக யாகூப் தூக்கில் தொங்க வேண்டியவன்தான்!”

நெஞ்சைப் பிழியும் இந்தச் சொற்கள் ஈரம் கசியாத இந்து மனசாட்சியை அசைக்கப் போவதில்லை. இந்த தேசத்தின் மனசாட்சியை திருப்திப்படுத்துவதற்காகத்தான் அப்சல் குரு என்ற நிரபராதி காவு கொடுக்கப்பட்டார். நாடாளுமன்றத் தாக்குதல் என்ற அந்தக் கபட நாடகத்தின் உண்மைக் கதையை உலகுக்குச் சொல்லியிருக்கக்கூடிய அந்த ஒரேயொரு மனிதனைக் கொலை செய்த பின்னர்தான், அத்வானியாலும் இந்த தேசத்தின் கூட்டு மனச்சாட்சியாலும் அமைதியாக உறங்க முடிந்தது.

0000000

யாகூப் மேமன் இன்னொரு அப்சல் குரு.

மஸீ ரஹ்மான் எழுதுகிறார். “ஆகஸ்டு 1994-ல் சிபிஐ-இன் கட்டுப்பாட்டில் இருந்த யாகூப் மேமனைப் பார்த்துவிட்டு நான் வெளியே வரும்போது ஒரு மூத்த சி.பி.ஐ அதிகாரி, சில முகவரிகள் கிறுக்கப்பட்ட ஒரு காகிதத்தை என் கையில் திணித்து, இந்த இடங்களை புகைப்படம் எடுக்க முடியுமா என்று என்னைக் கேட்டார். அவையனைத்தும் கராச்சி முகவரிகள். தாவூத் இப்ராகீம், 1993 மும்பை குண்டுவெடிப்பின் கருவியாக செயல்பட்ட டைகர் மேமன், ஐ.எஸ்.ஐ-ன் தொடர்பாளராக இருந்து குண்டுவெடிப்பை நடத்திய தௌபீக் ஜாலியன்வாலா ஆகியோர் தங்கியிருந்த வீடுகள். இந்த முகவரிகள் அனைத்தும் யாகூப் மேமனால் சி.பி.ஐக்கு கொடுக்கப்பட்டவை. கராச்சியில் உள்ள ஒரு புகைப்படக்காரர் மூலம் அந்த இடங்களையெல்லாம் நான் புகைப்படம் எடுத்தேன். அவை இந்தியா டுடேவில் வெளியிடப்பட்டவுடன் பெரிதும் மகிழ்ந்த அந்த அதிகாரி மறுநாளே என் வீட்டுக்கு வந்து முழுக்கதையையும் சொன்னார்’’

‘’பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ-ன் கண்காணிப்பில் இருந்த யாகூப் மேமன், தன் உயிரைப் பணயம் வைத்து, பாகிஸ்தானில் எடுத்திருந்த வீடியோக்களை சி.பி.ஐ அதிகாரிகள் எனக்கு காட்டினர். தனக்கும் டைகர் மேமனுக்கும் நடந்த உரையாடலின் ஒலிப்பதிவுகள், தங்களை பாங்காக்கிற்கும் பின்னர் கராச்சிக்கும் ஐ.எஸ்.ஐ அழைத்து வந்தது குறித்த ஆதாரங்கள், மேமன் குடும்பத்தினரைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்த பாக் இராணுவ அதிகாரியின் பெயர் – என யாகூப் மேமன் தங்களிடம் தந்த பல ஆவணங்களை சி.பி.ஐ அதிகாரிகள் எனக்கு காட்டினார்கள். யாகூப் மேமன் கொண்டு வந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணங்கள் அனைத்தையும் அவருக்கு எதிராகவே நாங்கள் நீதிமன்றத்தில் பயன்படுத்தினோம் என்று கூறினார் அந்த சி.பி.ஐ அதிகாரி.”  என்று தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்  மஸீ ரஹ்மான்.

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட இருப்பதாக மகாராட்டிர அரசு அறிவித்த பின்னர், ‘’ரீ டிஃப். காம்’’ என்ற இணையப் பத்திரிகையில் “யாகூப் மேமனைத் தூக்கிலிடக் கூடாது – ஏன்?” என்று தலைப்பிட்டு ஜூலை 24 அன்று ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார் பத்திரிகையாளர் ஷீலா பட்.

27-07-2007 அன்று யாகூப் மேமனுக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்த சில நாட்களில் ’ரீ டிஃப். காம்’’ க்கு உளவுத் துறை (“ரா”) அதிகாரி பி.ராமன் அனுப்பிய கட்டுரை அது. அன்று கட்டுரையை அனுப்பி வைத்த ராமன், “இக்கட்டுரையை வெளியிட்டால், மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றம் எல்லோரையுமே விடுதலை செய்து விட வாய்ப்பிருக்கிறதாகையால் கட்டுரையை வெளியிட வேண்டாம்” என்று அக்கட்டுரையின் கீழேயே ஒரு குறிப்பு எழுதியிருந்தாராம். அதன் காரணமாக அன்று இதனை வெளியிட முடியவில்லை என்று கூறும் ஷீலா பட், தற்போது யாகூப் மேமனைத் தூக்கிலிடுவதற்கான தேதி குறிக்கப்பட்டுவிட்ட நிலையில், ராமனின் கட்டுரையை வெளியிட வேண்டுமென்று கருதியிருக்கிறார். ஜூன், 16, 2013 அன்று ராமன் இறந்து விட்டபடியால், ராமனுடைய சகோதரரிடம் ஒப்புதல் பெற்று அதனை வெளியிட்டிருக்கிறார் ஷீலா பட்.

02-08-2007-ல் உளவுத்துறை அதிகாரி ராமன் அனுப்பிய கட்டுரை இப்படித் தொடங்குகிறது. ‘’என்னை நானே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொள்கிறேன். இதை நான் எழுதலாமா? எழுதவில்லையென்றால் நான் அறம் கொன்ற கோழையாகி விடுவேனா? இதன் காரணமாக குற்றவாளிகள் தப்பி விடுவார்களா?…. இது நீதிமன்ற அவமதிப்பாகுமா? இந்தக் கேள்விகளுக்கு தீர்மானமான விடை காண முடியாது. தூக்கில் போடக்கூடாத நபர் என்று நான் கருதும் ஒரு மனிதனை, தூக்குமேடைக்குச் செல்ல விடாமல் தடுப்பது முக்கியம் என்று நான் கருதுகிறேன். எனவே, இதனை எழுத வேண்டும் என்று இறுதியாக நான் முடிவு செய்து விட்டேன். எழுதுகிறேன்.’’ என்ற பீடிகையுடன் தொடங்குகிறார் ராமன்.

மத்திய உளவு நிறுவனமான “ரா” வின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவுக்கு தலைவராக இருந்த ராமன், காத்மாண்டுவிலிருந்து யாகூப் மேமனை இந்தியாவுக்கு அழைத்து வந்திருக்கிறார். (மேமனை தில்லி ரயில் நிலையத்தில் மடக்கிப் பிடித்தோம் என்கிறது சி.பி.ஐ-ன் குற்றப்பத்திரிகை) விசாரணைக்கு யாகூப் மேமன் முழு ஒத்துழைப்பு வழங்கியது, ஐ.எஸ்.ஐ-க்குத் தெரியாமல், பாகிஸ்தானிலிருந்து தனது குடும்ப உறுப்பினர்களை இந்தியாவுக்கு வரவழைத்து எல்லோரையும் சரணடைய வைத்தது ஆகியவற்றைத் தனது கட்டுரையில் விவரிக்கிறார்.

“இந்த உண்மைகளைக் கணக்கில் கொண்டு யாகூப் மேமன் மற்றும் அவரது குடும்பத்தினரின் தண்டனையைக் குறைக்குமாறு அரசுத் தரப்பு வக்கீலே கோரியிருக்க வேண்டும். ஆனால் எப்படியாவது தூக்கு தண்டனை வாங்கித் தந்துவிடவேண்டும் என்பதே அரசுத் தரப்பின் நோக்கமாக இருந்திருக்கிறது. எனவேதான், மேற்கூறிய உண்மைகளை நீதிமன்றத்தின் பார்வைக்கே அவர்கள் கொண்டு செல்லவில்லை” என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் ராமன்.

மும்பை குண்டுவெடிப்பில் ஐ.எஸ்.ஐ க்கு இருந்த தொடர்பு உள்ளிட்ட பல விவரங்கள் யாகூப் மேமன் கொடுத்தவை என்றும், இல்லையென்றால் இவற்றில் பத்து சதவீத ஆதாரங்களைக்கூடத் தங்களால் திரட்டியிருக்க முடியாது என்றும் சி.பி.ஐ வழக்குரைஞர் தன்னிடம் கூறியதாகச் சொல்லியிருக்கிறார் மேமனின் வழக்குரைஞர் ஷ்யாம் கேஸ்வானி. “மேமனை பிணையில் விடுவதற்கு தாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டோம்” என்று கூறி விட்டு, மறுநாள் டில்லி உத்தரவு என்று கூறி மேமனை பிணையில் விடுவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார் என்று கூறி, சி.பி.ஐ-ன் இரட்டைவேடத்தையும் அவர் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

தனது கட்டுப்பாட்டில் இருந்த கைதியான யாகூப் மேமனை தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்க வைத்து, குண்டுவெடிப்பில் ஐ.எஸ்.ஐ-க்கு உள்ள தொடர்பை உலகுக்கு தெரிய வைத்தது இந்திய அரசு. அப்சல் குருவும் இப்படித்தான் தொலைக்காட்சி காமெராவின் முன் நிறுத்தப்பட்டார் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.

0000000

திகம் விவரிக்கத் தேவையில்லை. யாகூப் மேமனை நம்ப வைத்துக் கழுத்தறுத்திருக்கிறது இந்திய அரசு. தான் கைதானது மட்டுமின்றி, தந்தை, சகோதரிகள், மனைவி, அப்போதுதான் பிறந்த கைக்குழந்தை ஆகிய பத்து குடும்ப உறுப்பினர்களையும் யாகூப் வரவழைத்ததற்குக் காரணம், குற்றத்தில் நேரடித் தொடர்பு இல்லாத தன்னை சி.பி.ஐ சிக்கவைக்காது என்ற நம்பிக்கை. நீதிமன்றம் விடுவித்து விடும் என்ற நம்பிக்கை.  மஸி ரஹ்மான் கூறுவது போல, இந்திய அரசின் மீதும் நீதியின் மீதும் அவர் கொண்டிருந்த முட்டாள்தனமான நம்பிக்கை.

தனது அண்ணன் டைகர் மேமன், அயூப், தாவூத் இப்ராகிம் ஆகியோர்தான் குண்டுவெடிப்பின் குற்றவாளிகள் என்பது யாகூபின் கூற்று. தனது அண்ணன் டைகர் மேமன் ஐ.எஸ்.ஐ-ன் கைக்கருவியாக இருந்து குண்டு வைத்தார் என்ற உண்மை தெரிந்தவுடன், தனது தந்தை, பாக் அதிகாரிகளின் கண் முன்னாலேயே தனது கைத்தடி முறியும் வரை டைகர் மேமனை அடித்தார் என்றும், நிரபராதிகளான தாங்கள் விடுவிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையினால்தான் அங்கிருந்து இங்கே வந்ததாகவும் கூறியிருக்கிறார் யாகூப் மேமன்.

மேமன் மீது போடப்பட்ட வழக்கு காலாவதியாகிப்போன தடா சட்டத்தின் கீழானது. சித்திரவதை செய்து போலீசு பெறுகின்ற பொய் வாக்குமூலத்தை ஏற்றுக் கொள்ளும் தடா சட்டத்தின் கீழ்தான் யாகூப் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அதிலும் யாகூபுக்கு எதிராக சாட்சி சொன்னவர்கள் ஆறில் ஐந்து பேர் தங்கள் சாட்சியத்தை மறுத்து விட்டனர். “தனக்கு குண்டு வைக்கும் சதியைப் பற்றி எதுவும் தெரியாது” என்ற யாகூப் மேமனின் கூற்றை பொய்ப்பிக்கும் வகையில் ஒரு நேரடி சாட்சியம்கூட இல்லை என்கிறார்கள் வழக்குரைஞர்கள்.

supreme-court-yakub-memonஇழிபுகழ் பெற்ற இந்தியாவின் “கூட்டு மனச்சாட்சி”க்குக் கொடுக்கப்படும் இன்னொரு ரத்தக்காவுதான் இந்தத் தண்டனை. ஆனால் இதை “நீதி” என்று சொல்கிறது உச்ச நீதிமன்றம். “எய்தவன்” யாகூப் மேமன் என்றும் குண்டு வைத்தவர்கள் வெறும் அம்புகள்தான் என்றும் கூறுகிறது உச்ச நீதிமன்றம். டைகர் மேமனின் தம்பி என்ற ஒரு காரணத்தைத் தவிர எய்தவன் என்று யாகூபை குற்றம் சாட்டுவதற்கு வேறு எந்தச் சாட்சியமும் இல்லை என்பதைப் பல சட்ட வல்லுநர்களும் கூறி விட்டார்கள்.

பாபர் மசூதி இடிப்பு, 1992-93 மும்பை படுகொலைகள் ஆகியவற்றை “எய்தவர்கள்” அமைச்சர் நாற்காலிகளை அலங்கரிக்கிறார்கள். குஜராத் இனப்படுகொலையை “எய்தவர்” பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மும்பை குண்டு வெடிப்புக் குற்றத்துக்கு ரத்தக்காவு கேட்கும் துவிவேதிகளும், சதுர்வேதிகளும், மிஸ்ராக்களும் இதற்குப் பதில் சொல்வதில்லை.

1992-93 மும்பை கலவரத்தில் கொல்லப்பட்ட 900 பேரில் மூன்றில் இரண்டு பங்கினர் முஸ்லிம்கள் என்பது அரசின் கணக்கு. கொள்ளையடித்தவர்கள், பெண்களைக் கடத்தியவர்கள், சூறையாடியவர்கள் என்று கலவரத்தில் ஈடுபட்ட 31 போலீசாரின் பெயர் குறிப்பிட்டுக் குற்றங்களைப் பட்டியலிட்டிருக்கிறது ஸ்ரீகிருஷ்ணா கமிசன். ஆனால் ஒரு போலீஸ்காரனும் ஒரு நாள் கூட சிறை செல்லவில்லை. மாறாக எல்லோரும் பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள். ராம் நாயக், கோபிநாத் முண்டே போன்றவர்கள் நேரடியாக வன்முறையைத் தூண்டியதாகவும், பால் தாக்கரே ஒரு தளபதியைப் போல நின்று கலவரத்தை வழிநடத்தியதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா. தாக்கரே அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார். மற்றவர்கள் மத்திய அமைச்சர்களானார்கள்.

கலவரத்தின் எதிர்வினைதான் குண்டுவெடிப்பு என்பதை ஸ்ரீகிருஷ்ணா கமிசன் அழுத்தந்திருத்தமாக கூறியிருக்கிறது. கலவரக்காரர்கள் தண்டிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, யாகூப் மேமனுக்குத் தீர்ப்பெழுதும் நாற்காலிகளில் வெவ்வேறு பெயர்களில் பாபு பஜ்ரங்கிகள் அமர்ந்திருக்கிறார்கள் என்தே உண்மை.

சிறையில் இருக்கும் தூக்கு தண்டனைக் கைதிகளில் 94% பேர் முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் என்கிறது தேசிய சட்டப்பல்கலைக் கழகத்தின் ஆய்வு. முஸ்லிம்களைக் கொன்றதற்காக ஒரு இந்து வெறியனோ, தலித்துகளைக் கொன்றதற்காக ஒரு சாதி வெறியனோ இதுவரை இந்த நாட்டில் தூக்கிலிடப்பட்டதில்லை. 29-ம்தேதியன்று யாகூபின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தவே, தனது முடிவுக்கு வலுச்சேர்க்க, மனு சாத்திரத்திலிருந்து ஒரு சுலோகத்தைச் சொல்லியிருக்கிறார். வழங்கப்படும் நீதியின் தன்மை குறித்து இதற்கு மேலுமா விளக்கம் வேண்டும்?

0000000

ந்தக் கபட நாடகத்தின் கடைசிக் காட்சியில், ராமன் என்ற ஒரு இந்துத்துவ சார்பு உளவுத்துறை அதிகாரியின் மனச்சாட்சி (மனச்சாட்சியின் ஆவி) அரங்கினுள் நுழைகிறது. யாகூப் மேமனை “தூக்குமேடைக்குச் செல்ல விடாமல் தடுப்பது முக்கியம்” என்ற காரணத்தினால்தான் எழுதுவதாக பீடிகை போடுகிறார் ராமன்.

மேமனைக் காப்பாற்ற வேண்டும் என்பதை விட, தான் நல்லவன் என்று தனக்குத் தானே உறுதி செய்து கொள்ள அவர் இதனை எழுத வேண்டியிருக்கிறது. ஆனால் கட்டுரையை எழுதி முடிப்பதற்குள் விழித்துக் கொண்ட அவரது மூளை, “கட்டுரையை வெளியிடாமல் தடுப்பதே முக்கியம்” என்று அவருக்கு உணர்த்துகிறது.

அதனால்தான் 2007 ஆகஸ்டில் எழுதிய இந்தக் கருத்தை ஒரு பிரமாண வாக்குமூலமாக ஒருபோதும் ராமன் தாக்கல் செய்யவில்லை. மார்ச் 21, 2013 அன்று உச்ச நீதி மன்றம் மேமனின் தூக்கை உறுதி செய்து தீர்ப்பளிக்கும் வரை கட்டுரையாகவும் அதனை வெளியிடவில்லை. 02-08-2007 அன்று மேலெழும்பிய அவரது “அறவுணர்ச்சியை” அந்தக் கணமே தூக்கிலேற்றி விட்டார் உளவுத்துறை அதிகாரி ராமன்.

இப்போது ஷீலா பட்டினால் பிரசுரிக்கப்பட்டிருக்கும் ராமனின் கடிதம், யாகூப் மேமனின் தண்டனையை நிறுத்த உதவவில்லை. மாறாக, தகுதியற்ற அந்த மனிதனை மனச்சாட்சியுள்ள மனிதாபிமானியாக காட்டுவதற்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறது.

ராமனின் கட்டுரையும், பேரறிவாளனின் வாக்குமூலத்தை தணிக்கை செய்து எழுதிய சி.பி.ஐ எஸ்.பி தியாகராசனின் பேட்டியும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவை.

“சிவராசன் பாட்டரி வாங்கி வரச்சொன்னார்” என்ற வாக்கியத்தை மட்டும் பதிவு செய்து, “எதற்காக என்று தெரியாது” என்ற வாக்கியத்தை எழுதாமல் விட்டதற்கு தியாகராஜன் கூறும் காரணமும், ராமன் தனது கட்டுரையை “வெளியிட வேண்டாம்” என்பதற்கு கூறியிருக்கும் காரணமும் ஒன்றுதான்.

அஜ்மல் கசாப் வழக்கிலும், யாகூப் மேமன் வழக்கிலும் அரசுத் தரப்பு வழக்குரைஞராகப் பணியாற்றிய உஜ்வல் நிகாம் சமீபத்தில் ஒரு உண்மையை வெளியிட்டார். “ஒரு நாள் அஜ்மல் கசாப் கலங்கிய கண்களுடன் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தான். இச்செய்தியை ஊடகங்கள் வெளியிட்டதால், கசாபின் மீது அனுதாப அலை உருவாகத் தொடங்கியது. உடனே அஜ்மல் கசாப் சிறையில் மட்டன் பிரியாணி கேட்டதாக ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விட்டேன். ஊடகங்களில் அது விவாதப் பொருளாகிவிட்டது. உண்மையில் கசாப் பிரியாணி கேட்கவுமில்லை, நாங்கள் வாங்கித் தரவுமில்லை’’ என்று சொல்லியிருக்கிறார் உஜ்வல் நிகாம்.

தமது குற்றத்துக்கு நியாயம் கற்பிக்கும் தோரணையில் இவர்களிடையே என்ன வேறுபாட்டைக் காண்கிறீர்கள்? இந்த தேசத்தின் “கூட்டு மனச்சாட்சி” இவர்களுடன் ஒன்றுபடும் இடத்தை கவனியுங்கள். அறம் கொன்ற இந்து மனச்சாட்சி குறித்த அம்பேத்காரின் அவதானிப்பை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

மோடியின் மனச்சாட்சி, “குஜராத் படுகொலை அநீதியானது” என்று அவரை உறுத்துவதாகவும், ஜெயலலிதாவின் மனச்சாட்சி, “ஊழல் தவறு” என்று அவரைச் சுடுவதாகவும், தங்கள் குற்றவுணர்வை மறைத்துக் கொண்டுதான் அவர்கள் பதவியில் அமர்ந்திருப்பதாகவும் நீங்கள் நம்பும் பட்சத்தில், உங்களுக்கும் ராமனை நம்பிய யாகூப் மேமனுக்கும் அதிகம் வேறுபாடில்லை.

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டுவிட்டார் என்பதைத் தவிர.
____________________
–    மருதையன்

____________________

  1. பார்பனிய இரத்தம் ஓடாத கூட்டு மனசாட்சிகளே ஒன்றுபடுங்கள்.பாசிச பார்ப்பனிய இரத்தம் ஓடும் மனசாட்சிகளின் நாளங்களிலிருந்து அந்த இரத்தத்தை உறிஞ்சி வழித்தெடுப்போம்.பார்ப்பனியத்தின் சவக்குழியிலிருந்துதான் மக்கள் விடுதலை துளிர்த்து எழும்.

  2. Isis தீவிர வாத கும்பலுக்கும் rss தீவிர வாத கும்பலுக்கும் வித்தியாசம் இல்லை. சும்மா கிடந்த சங்கை (பாபர் மசூதி )ஊதி பெருசாக்கி மத தீவிர வாதத்தை வளர்த்து விட்டதே இந்த rss bjp கும்பல் தான். இவர்களுடைய ஆட்சியில் மனசாட்சி என்பது இவர்கள் கலாமுக்கு வைத்த ஒப்பாரி நாடகமே. இந்த ஒப்பாரி யால் தூக்குக்கு எதிராக இருந்த கொஞ்ச நஞ்ச மனசாட்சி யும் அடங்கி போனது தான் பெரும் சோகம்.

  3. ஒரு மனித உயிரை காப்பதற்காக “உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக ” பின்னிரவில் கூடியிருந்தால் இந்த ஜனநாயக நாட்டின் மேன்மையை நினைத்து பாராட்டலாம்.ஆனால் அந்த மனிதன் அவரது பிறந்தநாளில் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று யாருக்கோ ஏதோ வேண்டுதல் இருப்பதைப்போல 3 மணிக்கு கூடி 5 மணிக்கு தீர்ப்பளித்துள்ளனர்.அந்த தீர்ப்பு இப்படித்தான் வரும் என்று நன்கறிந்தவர்களாக சிறைத்துறை எல்லா ஏற்பாடுகளையும் ஆரம்பித்து நடத்துகிறது.நீதிமன்ற உத்தரவை கண்ணில் காட்டினால் தான் அதனை பின்பற்றுவோம் என்று சாதாரண ஜாமீனுக்கெல்லம் சட்ட நியாயம் பேணும் சிறைத்துறை இப்போது ஒரு தொலைபேசி அல்லது தொலைநகல் மூலமாகவே நீதிமன்ற உத்தரவை நம்பி கயிற்றை சுருக்குகிறது. இதையெல்லாம் இப்படி “முறைப்படி” செய்வதை விட ஒரு களைத்துப்போன அல்லது வெறுப்பால் உந்தப்பட்ட ஒரு காவல் அதிகாரி லாக் அப்பில் தரும் தண்டனை ஒப்பீட்டளவில் சற்று ‘நியாயமானது’ தான்.ராவின் அதிகாரி ராமனின் வழியாக இந்தநாடு சொன்ன வாக்குறுதி மீறப்பட்டு அரசு அறம் கொன்றிருக்கிறது.நீதி வழுவிய மன்னர்கள் அதை உணர்ந்த கணமே உயிர்விட்டதாக கதைகள் உலவும் இந்நாட்டில் தான் இதுவும் நடக்கிறது.

    • இருந்தாலும் இது கொஞ்சம் ஓவரான ஆக்சன் மாதிரி தெரியுது ராத்திரில நீதிபதிக எல்லாம் தூங்காம தீயா வேலை செஞ்சு இருக்காக திருடன் லலித் மோடிய பிடிக்க இத மாரி பாடு பட்டு இருந்தா அரசாங்கத்துக்கு பணமாவது கிடைக்கும்,பணத்த விட பிணத்தின் மீது அரசியல் செய்வதுதான் மோடிக்கு ரெம்ப பிடிக்கும் போல இருக்குது…

      • தூக்கு போட 8 மணிநேரம் இருந்தப்ப பிரஷாந்த் பூஷன் போட்ட மனுவால், இரவு தீர்ப்பு அளிக்க வேண்டியிருந்தது. ஒரு வேளை, இரவு மனுவை விசாரிக்கலைனா, அதையும் குறை சொல்வீங்க…

  4. என் ஆங்கில அறிவுக்கு எட்டியவரை, மேமன் சரண்டர் ஆனதாக பி.ராமன் சொன்னதாக தெரியவில்லை. ஒரு வேளை, ஐ திங் வினவு இஸ் ஸ்பீக்க்ங் பிரிட்டிஸ் இங்கிலீஸ்…!!!

    “The prosecution was right in saying that Yakub was arrested in Old Delhi. Yakub was right in claiming that he was not arrested in Old Delhi. In July 1994, some weeks before my retirement, he was informally picked up in Kathmandu, with the help of the Nepal police, driven across Nepal to a town in Indian territory, flown to Delhi by an aircraft of the Aviation Research Centre and formally arrested in Old Delhi by the investigating authorities and taken into custody for interrogation. The entire operation was coordinated by me.

    He had come to Kathmandu secretly from Karachi to consult a relative and a lawyer on the advisability of some members of the Memon family, including himself, who felt uncomfortable with Pakistan’s Inter-Services Intelligence, returning to India and surrendering to the Mumbai police. The relative and the lawyer advised him against surrender due to a fear that justice might not be done to them. They advised Yakub to go back to Karachi.”

    • அதுதான் போலீசின் வழக்கமான பித்தலாட்டம். Informally picked up in Kathmandu என்று ராமன் எழுதியிருக்கிறாரே அதற்கு என்ன அர்த்தம்? இன்பார்மலாக “பிக் அப் – டிராப்” செய்பவனை சென்னை மொழியில் “பாடு” என்பார்கள். மைலாப்பூர் இங்கிலீசில் என்னவென்று சொல்வார்கள்?

      நீதிமன்றத்தில் சரணடைய வரும் கைதிகளை, கோர்ட் வாசலில் வைத்து மடக்கிப் பிடித்துவிட்டு, நள்ளிரவில் நடுக்காட்டில் உயிரைப் பணயம் வைத்துப் பிடித்ததாக போலிசு சொல்வதும், அதைக்கேட்டு மாஜிஸ்டிரேட் சிரிப்பதும், ஆன்றாடம் கோர்ட்டில் நடக்கும் விசயம். இது கோர்ட் வளாகத்தில் திரியும் நாய்களுக்குக் கூடத் தெரிந்த உண்மை.

      அதிருக்கட்டும். யாகூப் மேமனை டில்லி ரயில் நிலையத்தில் கைது செய்தது உண்மைதான் என்று பங்காளியை விட்டுக்கொடுக்காமல் புளுகுகிறாரே ராமன், அந்த “உண்மை” மீது, (ராமய்யரின் மூஞ்சி மீது என்றும் சொல்லலாம்) யாகூபுக்கு தண்டனை விதித்த நீதிபதியே காறித்துப்பியிருக்கிறார். அதையும் படித்துப் பாருங்கள்.

      சீனு, இங்கிலீசு தெரிஞ்சவனெல்லாம் அறிவாளின்னா அதை இங்கிலீசே ஒத்துக்காது. காவிக்கு வாக்கப்பட்ட இப்பிடித்தான் கண்றாவியா வாந்தி எடுக்கணும்! எடுங்க, தனியா ரூம் போட்டு எடுங்க!

  5. “informally picked-up” – ராமன் கூறியது உண்மையானால், இந்திய அரசுக்கு மும்பை குண்டு வெடிப்பின் பின்னால் பாகிஸ்தான்தான் உள்ளது என்று நிறுவும் ஆதாரங்கள் —
    சூட்-கேஸ் – நிறைய — வைத்துக்கொண்டே குற்றவாளி சுற்றவேண்டிய அவசியம் என்ன? ஒரு இறையாண்மை மிக்க நாட்டின் சார்பாக கூறப்பட்ட வாக்குறுதிகள் ஒருவனுக்கு கொடுக்கப்பட்டால் – அவன் யாகூப் மேமன் – போன்ற நபராக இருந்தாலும் கூட, காப்பாற்றப்பட்டிருக்க வேண்டும் என்று ராமன் புலம்பியதன் மர்மம் என்ன? என்ன வாக்குறுதி கொடுக்கப்பட்டது? இந்திய அரசின் கரங்களுக்கு எட்டாத தொலைவில் இருந்தபோது மட்டுமே இது போன்ற வாக்குறுதிகள் பெறப்பட சாத்தியம். நீ சரணடைந்து அரசுடன் சேர்ந்து , குண்டு வெடிப்பின் சூத்திரதாரி பாகிஸ்தான்தான் என்று நிறுவும் ஆதாரங்களை திரட்டி கொடுத்து , அவ்வாறே கூறவும் செய்தால் , நீயும் , உன் குடும்பத்தாரும் குறைந்த பட்ச தண்டனையுடன் விடுவிக்கப்படுவீர்கள் என்று இந்திய அரசின் சார்பில் உறுதிமொழி கொடுக்கப்பட்டு, காரியம் ஆனதும் கழட்டி விட்டுவிட்டார்கள் என்று தோன்றுகிறது . அதனால்தான் , யாகூப் மேமன் கூட இந்திய அரசு என்னை கைது செய்யவில்லை . நானாக சரணடைந்தேன். மத்திய உளவுத்துறை தாங்களே முயன்று கைது செய்தோம் என்று ஆதாயம் தேடுகிறார்கள் என்று புலம்பிக்கொண்டிருந்தார் . கேடத்தான் ஆளில்லாமல் போய்விட்டது. முழு உண்மையையும் சொன்னால் – வெளியில் உள்ள தன் குடும்பத்திற்கு ஆபத்து என்று உள்ளுக்குள்ளேயே மருகி மருகியே காலத்தை கழித்திருக்க வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க