Friday, May 14, 2021
முகப்பு களச்செய்திகள் போராடும் உலகம் மக்கள் அதிகாரம்: போலிசை விரட்டியடித்த கோவை மக்கள்!

மக்கள் அதிகாரம்: போலிசை விரட்டியடித்த கோவை மக்கள்!

-

kovai tasmac police (4)கோவை மாநகரில் சாய்பாபா காலனி மிகவும் பரபரப்பான பகுதிகளுள் ஒன்று. அதில் காலனி ரோட்டை தாண்டி சற்றே இடது புறத்தில் தான் கருணாநிதி நகர் இருக்கிறது. இஸ்லாமிய மக்களும் ஒடுக்கப்பட்ட சமூகமான அருந்ததிய சமூக மக்களும் கணிசமான அளவில் நெருங்கிய நட்போடு வாழும் பகுதிகளுள் இதுவும் ஒன்று.

இந்து மதவெறி இயக்கங்களின் முக்கியப் பகுதியாக ஒரு காலத்தில் இருந்த பகுதி. எஸ்‌டி‌பி‌ஐ போன்ற இயக்கங்களும் ஆங்காங்கே அலுவலகங்கள் திறந்துள்ளன. எனினும் இப்பகுதி மக்களின் வாழ்நிலை என்னவோ தினக்கூலிகளின் சிரமமான நிலையிலேயே இருக்கின்றது.

இந்த மக்களது அதிகாரம் தான் நிறுவப் பட வேண்டும் என்ற நியாயமான ஆசையுடன் தான் கருணாநிதி நகருக்குள் மக்கள் அதிகாரம் சார்பில் “மூடு டாஸ்மாக்கை” பிரச்சாரத்திற்கு சென்றோம்.

பகுதிக்குள் நுழைந்த இருபதாவது நிமிடம் மூன்று உளவுத் துறை போலீசார் வந்து நம்மை மறித்தனர்.

யார் நீங்க…? (தெரியாத மாதிரியே..!)

சார், நாங்க மக்கள் அதிகாரம் என்கிற அமைப்பிலிருந்து வந்திருக்கிறோம். டாஸ்மாக்கை மூட வேண்டும் என மக்களிடம் பிரச்சார இயக்கம் செய்து கொண்டிருக்கிறோம்.

இந்த மாதிரி கொட்டு (பறை) அடிக்காரதுக்கெல்லாம் அனுமதி வாங்கணும். இது போல பிரச்சாரம் செய்வதற்கும் அனுமதி வாங்கணும், கிளம்புங்க.

சார் பிரச்சாரம் செய்வதற்கெல்லாம் அனுமதி வாங்க வேண்டியதில்லை. நாங்க தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோம்.

இப்போ இங்க பிரச்சாரத்துக்கு வந்துருக்கீங்கள்ல, இங்க பொறுப்பாளர் யாருன்னு சொல்லுங்க அவர் போன் நம்பர் சொல்லுங்க

‘ஏன் சார், மைக்கு வெச்சு பேசறதுக்கு தானே அனுமதி வாங்கணும் பறைக்கு வாங்க வேண்டியதில்லையே’ என ஒரு தோழர் கேட்க, ‘இல்ல தம்பி அதுக்கும் வாங்கணும் சட்டத்தில் அனுமதி இருக்கு’, ‘இது மாதிரி கேள்வியெல்லாம் கேட்க கூடாது, சரியா’

‘சரி சார் நாங்க பறை அடிக்கல’ ‘ஆனா, பிரச்சாரம் செய்வோம் அது எங்க உரிமை என்ன செய்ய முடியுமோ பண்ணிக்கங்க’

எனக் கூறிவிட்டு வாங்க தோழர் போலாம் என மீண்டும் பகுதிக்குள் நமது வேலையை தொடர்ந்தோம்.

அடுத்து என்ன சொல்லி நம்மை மடக்குவது எனப் புரியாமல் குழம்பியவாறு நின்று கொண்டிருந்தனர். சற்றே பணிந்தால் ஏறி மிரட்டலாம், இவனுக என்ன பேசுனாலும் எதிர்த்துப் பேசுறாங்களே என்று ரத்தினபுரி ஸ்டேசனுக்கு போன் பண்ணிவிட்டார்கள்.

நாம் அடுத்தடுத்து ஒரு நான்கைந்து வீடுகளை தாண்டுவதற்குள் அந்த குறுகலான சந்தில் பேட்ரோல் வண்டி டாடா சுமோ ஒன்றை கொண்டு வந்து நிறுத்தி நம்மைப் பின் தொடர்ந்தவாறே அங்கு பெருத்த நெருக்கடியை ஏற்படுத்தி கொண்டிருந்தார்கள். ஆனால் நம்மிடம் வந்து மேற்கொண்டு பேசுவதற்கு அவர்கள் யாரும் தயாரில்லை.

அடுத்து, நாம் மக்களிடம் பேசும் போது அருகில் ஒரு போலீஸ் வந்து நிற்பதும் நின்று கொண்டு நம்மையே உற்றுப் பார்ப்பதுமாக நடந்து கொண்டனர். பொது மக்கள் தர்ம சங்கடமான சூழ்நிலைக்குள்ளாக, நாம் பதிலுக்கு பொது மக்களிடம்,

‘பாருங்கம்மா, சாரு வந்து போலீஸ்காரரு. நாங்க டாஸ்மாக்கை மூடச் சொல்லி மக்கள் கிட்ட பிரச்சாரம் செய்யறோம். ஆனா, போலீஸ் வந்து எங்களை மிரட்டுது. இப்படியெல்லாம் பேசக் கூடாதுன்னு சொல்றாங்க,’ என ஆரம்பிக்க,

அடுத்த வீட்டிலிருந்து மறுபடியும் வண்டிக்கு சென்று விட்டனர்.

அடுத்து செல்லும் வீடுகளுக்கெல்லாம் இடையே இப்படியே பிரச்சாரம் செய்தோம். அடுத்து இன்னொரு ரோந்து வண்டி வந்தது. அதில் தான் யாரோ பெரிய அதிகார வரப்போகிறார் எனப் பார்த்தால், அதிலிருந்து ஒரு எஸ்‌ஐ இறங்கி வந்தார்.

அது போக இதர உளவுப் பிரிவினர் இந்த வாக்குவாதத்தை வீடியோ எடுப்பதில் முனைந்தனர். இந்த மொத்தக் கும்பலும் எங்களை சுற்றி நின்று கொண்டு வாக்கு வாதத்தை துவங்கினர்.

நீங்க மக்களை தூண்டுறீங்க, கேன்வாஸ் பண்ணுறீங்க வன்முறைய தூண்டுறீங்க – டாஸ்மாக் முன்னாடி குழி வெட்டு ஒண்ணுக்கு அடின்னு எல்லாம் போட்ருக்கீங்க

இதுல என்ன சார் வன்முறை…?

தம்பி, இது கவர்மெண்டு கொள்கை. அதனால நீங்க அங்க போயி கேளுங்க.

சார் நூறு மனுக் கொடுத்தாச்சு. நூறு போராட்டம் பண்ணியாச்சு. உயர் நீதி மன்றமே இது அரசாங்கத்தோட கொள்கை முடிவுன்னு சொல்லிருச்சு. இனி எங்க போக சொல்றீங்க…

இல்ல, நீங்க சட்டவிரோதமாக கூடியிருக்கீங்க.

எது சட்டவிரோதம்?

இவர்களிடம் எவ்வளவு நேரம் பேசுவதென்று மக்களிடம் பதில் சொல்லத் துவங்கினோம். போலிசார் நம்மிடம் இது சட்ட விரோதமான கூட்டம் எனக் கூறினால், நாம் மக்களைப் பார்த்து நீங்களே சொல்லுங்க டாஸ்மாக்கை மூடச் சொல்லுறது சட்ட விரோதமா…? சொல்லுங்க என பேச வீடுகளுக்குள் இருந்த மக்கள் அனைவரும் வெளியே வந்து இதனை வேடிக்கை பார்க்கத் துவங்கிவிட்டனர். தெருவே திரண்டுவிட்டது. தோழர்களின் பேச்சுக்கள் மக்களுக்கு காவல் துறையின் இயல்பை புரிய வைத்தது. காவல் துறை காமெடி துறை ஆனதை பொறுக்காது உடனே நடவடிக்கையில் இறங்கினர்.

எல்லாம் ஸ்டேசனுக்கு நடங்க, நாங்க உங்களை அரெஸ்ட் பண்றோம்.

‘எதுக்கு அரெஸ்ட் பண்றீங்க, நாங்க என்ன தப்பு பண்ணினோம் நாங்க அரெஸ்ட் ஆக முடியாது’ என்று எதிர்த்து நின்றோம்.

உடனே, நம்மை வலுக்கட்டாயமாக இழுத்து ஜீப்பில் ஏற்ற முயன்றனர். நமது தோழர்கள் உடனே கைகளைக் கோர்த்துக் கொண்டு கைதாக மாட்டோம் என நிற்க, அதே சமயம் சுற்றி நின்றிருந்த மக்களில் சிலர்

‘அந்த பசங்க என்ன தப்பா சொல்லிட்டாங்கன்னு இப்பிடி போட்டு இழுக்கறீங்க…? அவங்க சரியாதான் சொல்றாங்க இங்க டாஸ்மாக்னால நாங்க படுற கஷ்டம் உங்களுக்கென்ன தெரியும்’ எனப் பேசத் துவங்க ஒரு உளவுப் போலிசு உடனே அந்த பெண்ணிடம் சென்று, ‘ஏம்மா, உனக்கு என்னமா தெரியும் போம்மா உள்ள’ என மிரட்டத் துவங்கினார்.

அடுத்தடுத்து சில பெண்களும் நமக்கு ஆதரவாக பேசத் துவங்க, தோழர்கள் மீதிருந்து கையை எடுத்து விட்டு எஸ்‌ஐ உயரதிகாரிக்கு போன் பண்ணப் போய் விட்டார்.

பொது மக்களில் நமக்கு ஆதரவாக பேசிய சிலரிடம் சென்று, ‘அவங்க மாவோயிஸ்டு’ ‘தீவிரவாதி’ என உளவுப் போலிசு கூற நம் தோழர் சத்தமாக ‘பாருங்கம்மா, நாங்க டாஸ்மாக்கை மூடச் சொல்லி பிரச்சாரம் பண்றோம் இவரு ஏதோ சம்பந்தமில்லாம மாவோயிஸ்டுனு சொல்லிகிட்டு இருக்காரு’ எனக் கூற மக்களும் ஆமோதித்தனர்.

இளவயது தோழர் ஒருவரிடம் உளவுப் பிரிவு, ஏன் தம்பி படிக்கிற வயசில உனக்கு எதுக்கு இதெல்லாம் என கேட்க, நம் தோழர், ’சார், நான் சின்ன வயசுனாலும் சரி எது தப்பு எதுன்னு பகுத்துப் பார்க்க தெரியும். நான் எல்லாம் தெரிஞ்சு தான் பண்றேன். உங்க வேலை என்னவோ அதை பாருங்க’ எனக் கூறிவிட்டார். “கால் வெக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி வெக்கிராணுகளே” என நினைத்து விட்டார் போலும் அந்த உளவுப் பிரிவு தனது பழைய வேலையான வீடியோ எடுக்கும் வேலைக்கே திரும்பி விட்டார்.

தேமே வென வேடிக்கை பார்க்கும் 10 போலீசார் வளைச்சு வளைச்சு வீடியோ எடுக்கும் 5 உளவுப் பிரிவு போலீசார் 2 பேட்ரோல் வண்டிகள் இன்னும் இரண்டு இருசக்கர பேட்ரோல் வண்டிகள் முன்னிலையில் அந்த தெருவே திரண்டு நின்று வேடிக்கை பார்க்க அந்தச் சின்ன தெருவில் நாம் மக்களை நோக்கிப் பிரச்சாரத்தை சத்தமாக செய்து கொண்டிருக்கிறோம். இடையில் எஸ்‌ஐ அருகே ஓடி வந்து,

‘இந்தாங்க இந்தாங்க ஏ‌சி சார் பேசுராரு’ என செல்போனை நீட்டினார்.

ஏ‌சி கிட்ட நீங்க பேசுங்க சார், நாங்க எதுக்கு பேசணும்..?, எனக் கேட்க மீண்டும் அவர் போய் விட்டார். அடுத்து, நமது பெண் தோழரை கைது செய்ய இன்னொரு பெண் போலீசை வரவழைத்தனர்.

அந்த பெண் போலீஸ், நம் தோழரையும் இந்த சம்பவங்களையெல்லாம் படம்பிடித்துக் கொண்டிருந்த அதே பகுதியில் வசிக்கும் தினசரி நாளிதழ் பெண் நிருபரையும் துணியை பிடித்து இழுத்து மூர்க்கத்தனமாக இழுக்க ஆரம்பித்தார்.

kovai kk nagar tasmac police (4)வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் இருவரையும் தங்கள் காம்பவுண்டுக்குள் இழுத்துக் கொண்டு, ‘ஏம்மா, இப்பிடி புடிச்சு இழுக்கறியே, உனக்கெல்லாம் அறிவில்ல நீயும் ஒரு பொம்பள தானா…’ எனக் கேட்க அந்த பெண் போலீஸ் அமைதியாக போய் ஜீப்பருகே நின்று கொண்டார்.

இறுதியாக, மூன்றாவது பேட்ரோல் வண்டியில் வந்த ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் சூழலின் மனநிலை என்னவென அவதானிக்காமலே கூட்டமாக இருப்பதைப் பார்த்துவிட்டு வேனுக்குள் இருந்தவாறே மைக்கில்

‘இந்த இடத்தில் சட்டவிரோதமாக கூடியிருக்கிறீர்கள், எல்லோரும் உடனே கலைந்து போங்க’ என அறிவித்தார்.

நம் தோழர்கள் மீண்டும் ஆளுக்கொரு திசையில் நின்று கொண்டே சத்தமாக, ‘பாருங்கம்மா, பாருங்கையா இத்தனை நாளா நீங்க நின்னுக்கிட்டும் பேசிக்கிட்டும் இருந்த உங்க வீட்டு வாசலிலே நீங்க நிற்பது சட்ட விரோதம்னு போலீஸ் சொல்லுது, ஏன் அப்பிடி சொல்லுது ஏன்னா, டாஸ்மாக்கை மூடணும்னு சொல்றது நாம தானே, அப்ப போலீஸ் யாருக்கு சப்போர்ட்டு டாஸ்மாக்குக்கா மக்களுக்கா’ எனப் பேசத் துவங்க இன்ஸ்பெக்டர் உடனே வண்டியில் இருந்து இறங்கி வந்துவிட்டார்.

‘நீங்க அனுமதி வாங்கிட்டு தான் இது போலச் செய்யனும் அனுமதி வாங்காமா செய்யுறீங்க‘

‘எங்க கிட்ட அனுமதி வாங்கிட்டா டாஸ்மாக் வெச்சிங்க..? இவ்வளவு நேரம் இங்க என்ன நடந்துதுன்னே தெரியாம மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்கறீங்க’

‘இல்லைங்க, நீங்க எழுதிக் குடுங்க., நானே கூட இருந்து உங்களுக்கு அனுமதி வாங்கித் தரேன்’ சொல்லுங்க நாளைக்கு காலைல எப்பவாறீங்க சொல்லுங்க உங்க கூடயே ஸ்டேசனுக்கு நானும் வரேன் உங்க ஏரியா இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லி நானே வாங்கித் தாரேன் சரியா தோழர்’ என பேசிக் கொண்டே போய்க் கொண்டிருந்தார்.

அதற்குள் பகுதிப் பெண்கள் சிலர் இன்ஸ்பெக்டரிடம், ‘உங்க கூட இருந்த பொம்பள போலீசு அந்த பெண்ணைப் போட்டு அப்பிடி இழுக்குது, துணியெல்லாம் வெளிய தெரிய போட்டு வெரு வெருன்னு இழுக்குது இதுக்கு அந்த பெண் போலீசு மன்னிப்பு கேட்கணும்’ எனக் கோரிக்கை வைத்தனர்.

‘எல்லார் சார்பிலேயும் நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்’ எனக் கூறி பிரச்சினையை எப்படியாவது காவல் துறைக்கு சாதகமாக மாற்ற இன்ஸ்பெக்டர் சாந்தமான முறையில் பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.

இறுதியில் ‘பறையெல்லாம் அடிக்க வேண்டாம் சும்மாவே பேசுங்க’ என அவர் கூற, கண்டுகொள்ளாமல் பறையை முழங்க விட்டு, சத்தமாக அறிவித்தோம். பிரச்சாரம் ஆரம்பித்தது முதல் இப்போது வரை காவல் துறை எப்படியெல்லாம் அணுகியது காவல் துறை யாருக்கு சாதகமாக இருக்கிறது என்றும் மீண்டும் டாஸ்மாக்கை மூடும் வரை பிரச்சாரம் செய்வோம் என்றும் அறிவித்து விட்டு கலைந்தோம்.

அந்த தெரு முழுவதும் இருக்கும் மக்கள் அனைவரும் வெளியே நின்று நம்மை வழியனுப்பினர். ‘மீண்டும் கட்டாயம் வாங்க, நாளைக்கு வரும்போது பகலிலே வராதீங்க, நாங்கல்லாம் வேலைக்கு போயிருவோம். சாயங்காலமா வாங்க..!’ என மக்கள் கூறினார்கள். பகுதியில் இருந்த பல்வேறு கட்சியினரும் தோழர்களை வாழ்த்தினர்.

டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது மட்டுமல்ல, டாஸ்மாக் எதிர்ப்பு பிரச்சாரத்தை தடுப்பதும் போலிசின் கடமை போலிருக்கிறது. ஆனாலும் என்ன? அடுத்த நாள் காலையில் கோவை சாய்பாபா காலனி டாஸ்மாக் கடை மக்கள் அதிகாரம் தோழர்களால் நொறுக்கி மூடப்பட்டது. இந்த முறை கடை நொறுக்கும் போது போலிசு இல்லை. ஆனால் போலிசு வரும் வரை தோழர்கள் இருந்தார்கள் – கைது செய்யப்படுவதற்கு!

இன்று பிரச்சாரத்தை முடக்க நினைத்த போலீசின் அடக்குமுறையை முறியடித்த மக்கள் இறுதியில் அதிகாரத்தையும் கையில் எடுப்பார்கள்.

kovai pp tasmac (7)
கோவை சாய்பாபா காலனி டாஸ்மாக்கை அடித்து நொறுக்கிய மக்கள் அதிகாரம்

  1. ஜெ. போலிசின் கடமை இதுதான் ..டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதும் –டாஸ்மாக் எதிர்ப்பு பிரச்சாரத்தை தடுப்பதும்தான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க