Monday, September 21, 2020
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க மக்கள் அதிகாரம்: மதுரை - உசிலம்பட்டி டாஸ்மாக் முற்றுகை ! கைது !!

மக்கள் அதிகாரம்: மதுரை – உசிலம்பட்டி டாஸ்மாக் முற்றுகை ! கைது !!

-

மக்கள் அதிகாரம்: மதுரை டாஸ்மாக் முற்றுகை!

madurai tasmac 700 pix (1)துரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், மக்கள் அதிகாரம், மற்றும் பொதுமக்கள் இணைந்து  யானைமலை ஒத்தக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடையை இன்று (07/08/2015) முற்றுகை இட்டு போராட்டம் நடத்தினர்.
யானைமலை ஒத்தக்கடையில் இருந்து திருமோகூர் செல்லும் நெடுஞ்சாலையில் அரசின் டாஸ்மாக் சாராயக் கடை உள்ளது.  ஒத்தக்கடை எவர்சில்வர் பட்டறைகள் நிறைந்துள்ள பகுதி.  பட்டறை தொழிலாளர்களின் வருமானத்தையும், உயிரையும் இங்குள்ள 3 டாஸ்மாக் கடைகள் குடித்துக் கொண்டிருக்கின்றன.  இந்தப் பகுதியில் ‘மக்கள் அதிகாரம்’ உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக துண்டறிக்கைகள், தெரு முனைக் கூட்டங்கள், அறைக் கூட்டங்கள் மூலம் ‘மூடு டாஸ்மாக்கை’ என்று மக்களை அணிதிரட்டி வந்தனர். அதே நேரத்தில், தற்போது தமிழகம் முழுவதும் பற்றி எரிந்துவரும் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்களை ஒட்டி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களும் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் இறங்கத் திட்டமிட்டு செயலில் இறங்கினர்.  எனவே மக்களைத் திரட்டிவந்த ‘மக்கள் அதிகாரம்” அமைப்பினரும் வழக்கறிஞர்களும் இணைந்து ஒத்தக்கடையில் டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டத்தைக் கையில் எடுத்தனர்.
போராட்டம் பற்றி முன்கூட்டியே மோப்பம் பிடித்த காவல்துறை, அதிகாலையிலேயே பல வண்ண படைகளை ஒத்தக்கடைப் பகுதியில் இறக்கியிருந்தது.  அதிரடிப்படை, தண்ணீர் பீரங்கி ஆகியவற்றைக் கொண்டு வந்து குவித்திருந்தது.  டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு தடுப்பரண்கள் வைத்து, போலீசால் மிகக் கவனமாகப் பாதுகாக்கப் பட்டிருந்தன.  உயர் அதிகாரிகள் அதிகாலையில் இருந்தே ரோந்து சுற்றிக் கொண்டிருந்தனர்.
ஏற்கனவே ஒத்தக்கடை முழுவதும் வீடுவீடாகவும், பட்டறை பட்டறையாகவும் சென்று பிரச்சாரம் செய்த போது பொதுமக்கள் பெரிதும் வரவேற்றனர்.  குறிப்பாக பெண்கள் அனைவரும் தெரிவித்த முதல் கருத்து “முதலில் டாஸ்மாக்கை ஒழித்துக் கட்டுங்க” என்பது தான்.  அதற்கு, “நீங்களும் வாங்க, மூடுவோம்” என பதிலளித்தோம்.  அதன் படி இன்று காலையில் இருந்தே நெடுஞ்சாலை கடைவீதியிலும், திருமோகூர் சாலையிலும் ’மக்கள் அதிகாரம்’ தோழர்களும், உள்ளூர் மக்களும், பட்டறைத் தொழிலாளர்களும் அணிதிரளத் தொடங்கினர்.  போலீசு பட்டாளத்தின் அச்சுறுத்தும் நடவடிக்கைகளுக்கு அஞ்சாமல் அணிதிரண்டனர்.  காலை 10 மணியளவில் வழக்கறிஞர் அணியினர் திரளாக வந்தனர்.
”இழுத்து மூடு! இழுத்து மூடு!
மக்களின் குடிகெடுக்கும்
தாய்மார்கள் தாலியறுக்கும்
டாஸ்மாக் கடைகளை
இழுத்து மூடு! இழுத்து மூடு!
முற்றுகை! முற்றுகை!
டாஸ்மாக் கடை முற்றுகை!
வன்முறை அல்ல! வன்முறை அல்ல!
குடி கெடுக்கும் டாஸ்மாக்கை
அடித்து நொறுக்குவது வன்முறை அல்ல!”
என விண்ணதிர முழக்கமிட்டவண்ணம் சாலையின் இரண்டு பக்கங்களில் இருந்தும் மக்கள் பதாகை, முழக்க அட்டைகளுடன் திரண்டுவந்து டாஸ்மாக் கடையை நோக்கி முன்னேறினர்.  ஈ, கொசு கூட உள்ளே புகுந்துவிடாத படி போலீசு படை சாராயக்கடையைப் பாதுகாத்து நின்றது.  போலீசைத் தள்ளிக்கொண்டு டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட மக்கள், அதன் முன்னே சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.  போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது. ஒத்தக்கடை அரசுப் பள்ளி மாணவர்கள் பலர் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு முற்றுகைப் போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டனர்.
 ”குடிபோதை சாதாரண மக்களை எவ்வாறு சீரழிக்கிறது.  குடிப்பவரை மட்டும் அல்லாமல் அவரது குடும்பத்தையும் சேர்த்து அழிக்கிறது.  இதனால் பெண்கள் குழந்தைகள் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.  டாஸ்மாக்கை மூடவேண்டும் என அனைத்து தரப்பினரும் போராடி வருகின்றனர்.  பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் டாஸ்மாக்கை மூடி போராட்டம் நடத்தினர்.  அவர்களைப் போலீசு காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி ரத்த ஆறு ஓடச் செய்ததைப் பார்த்து நாமெல்லாம் நெஞ்சம் பதைபதைத்தோம்.
அவர்கள் சிறைக்குள்ளும் தாக்கப் படுகிறார்கள்.  மக்களின் அடிப்படைத் தேவைகளைச் செய்து கொடுக்க வக்கில்லாத அரசாங்கம், டாஸ்மாக்கைத் திறந்து குடி கெடுக்கிறது.  அது மட்டுமல்லாமல், குடியினால் தான் விபத்துகள், திருட்டு, பாலியல் கொடுமைகள், கொலை, கொள்ளை அனைத்துக் குற்றங்களும் நடைபெறுகின்றன.  இதைத் தெரிந்து கொண்டு தான் அரசாங்கம் டாஸ்மாக் கடைகளை நடத்துகிறது.  டாஸ்மாக் சாராயக் கடைகளுக்கு எதிராகப் போராடும் இளைஞர்களுக்கு வழக்கறிஞர்கள் இலவசமாக வழக்கு நடத்திக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.  எனவே டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடுங்கள்.  இந்தப் போராட்டம் அரசுக்கு ஒரு எச்சரிக்கை தான்.  காடை திறக்கப்பட்டால் மீண்டும் தீவிரமான போராட்டங்களை நாம் இணைந்து நடத்துவோம்.  டாஸ்மாக்கை மூடியே தீருவோம்”  என மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மு.திருநாவுக்கரசு பேசினார்.
மதுரை வழக்கறிஞர் சங்கச் செயலாளர் ராமமூர்த்தி, துணைத் தலைவர் வில்லவன் கோதை, மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கப் பொருளாளர் கோகுல்ராஜ், ஆகியோர் உரையாற்றினர்.  வழக்கறிஞர்கள் கனகவேல், ராஜேந்திரன், வின்சென்ட், வெங்கடேசன், சீனிவாச ராகவன், அன்பரசு, பாரதி, நாராயணன், நடராசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  போராட்டத்திற்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், மக்கள் அதிகாரம் மாநில தலைமைக்குழு உறுப்பினருமான தோழர்.வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார்.
”மக்கள் அதிகாரம் ஆகஸ்டு 31 கெடு விதித்துள்ளது.  நாம் ஆகஸ்டு 15க்குள் டாஸ்மாக் சாராயக்கடைகளை மூட வேண்டும் என கெடு விதிப்போம் ”என்ற அறைகூவலோடு முற்றுகைப் போராட்டம் முடிவுற்றது.
நூற்றுக் கணக்கிலே திரண்டிருந்த மக்களின் எழுச்சி, வழக்கறிஞர்களின் தார்மீக ஆவேசம் ஆகியவற்றைக் கண்ட போலீசு பட்டாளம் வாய்மூடி மௌனியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.  டாஸ்மாக் கடையில் இருந்து பேரணியாக சென்று,  மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முழக்கமிட்டு அதன் பின் போராட்டம் முடிவுற்றது.  சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தால் போக்குவத்து முடங்கியது.  பேருந்துகளில் வந்த பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கிவந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.  பலரும் இந்த போராட்டம் சரியான அவசியமான போராட்டம் என்று கருத்து தெரிவித்து பொறுமை காத்தனர்.
போராட்ட முழக்கங்கள்
அஞ்ச மாட்டோம்! அஞ்ச மாட்டோம்!
தமிழ்நாடு போலீசுக்கு
அஞ்ச மாட்டோம்! அடங்க அட்டோம்!
வழக்கு நடத்துறோம்! வழக்கு நடத்துறோம்!
டாஸ்மாக் போராளிகளுக்கு
இலவசமாக வழக்கு நடத்துறோம்!
அஞ்சாதே ! அஞ்சாதே!
போலீசுக்கும் வழக்குக்கும்
அஞ்சாதே! அஞ்சாதே!
கைது செய்! கைது செய்!
டாஸ்மாக் கடைக்கு எதிராக
போராடிய மாணவர்களை
வெறி கொண்டு தாக்கிய
காக்கிச் சட்டை ரவுடிகளை
கைது செய் – சிறையில் அடை!
சசிபெருமாளை கொலை செய்தது
தமிழக அரசு! தமிழக அரசு!
கொலைகார தமிழக அரசு!
போலீசும் கலெக்டரும்
கோர்ட்டும் தான் குற்றவாளிகள்!
தீர்வில்லை தீர்வில்லை!
நீதிமன்றம் தீர்வில்லை!
சட்ட மன்றம் தீர்வில்லை
ஒன்றே தீர்வு! ஒன்றே தீர்வு!
மக்கள் போராட்டம் ஒன்றே தீர்வு!
டாஸ்மாக்கை அடித்து நொறுக்குவோம்!
மக்கள் எழுச்சியை கட்டியமைப்போம்!
மூடுவோம்! மூடுவோம்!
மக்களே மூடுவோம்!
சாராயக்கடையை மூடுவோம்!
கெஞ்ச மாட்டோம்! கெஞ்ச மாட்டோம்!
கொலைகார அரசிடம்
கெஞ்ச மாட்டோம்! கெஞ்ச மாட்டோம்!
தகவல்
மக்கள் அதிகாரம், மதுரை

படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்

_________________________________________________________________

மக்கள் அதிகாரம் : உசிலம்பட்டி டாஸ்மாக் முற்றுகை !

துரை மாவட்டம், உசிலம்பட்டியில் இன்று 07.08.2015 காலை 11 மணியளவில் தாலுகா அலுவலகம் அருகில் அணி திரண்ட மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள், அருகிலிருந்த டாஸ்மாக் மதுபானக் கடையை முற்றுகையிட்டு கடையின் மீது சாணியை வீசி அபிஷேகம் செய்தனர்.

முன்பே தகவலறிந்து ஒன்றிரண்டு காவலர்கள் அங்கே வந்திருந்தனர். உளவுத்துறை போலீஸ் ஒருவர், உடனடியாக உசிலையில் உள்ள மற்ற டாஸ்மாக் கடைகளுக்கு அலைபேசியில் தொடபு கொண்டு.. கடைகளை கொஞ்ச நேரம் மூடி வைக்கும்படி எச்சரிக்கை செய்தார். அப்புறம் இன்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மாறும் சில போலீஸ் வந்து இறங்கினர்.

தோழர்கள் சாணியடித்து முடியும் வரை காத்திருந்து, சிறிது நேரம் முழக்கமிட்டதையும் வேடிக்கை பார்த்துவிட்டு, ” தோழர்… போதும் போதும் ..சாணியைத் தான் எரிஞ்சுட்டிங்களே ! ” என்று கெஞ்சியவாறு கூட்டிச் சென்றார்…

நான்கு பெண் தோழர்கள் உட்பட மொத்தம் 13 பேர் கைதாகினர்.

கூடியிருந்த மக்கள் “நல்ல காரியம் செஞ்சீங்க …நல்ல செய்யுங்கப்பா ! ” என்றனர். அருகிலிந்த ஒரு பாட்டி, ” இந்த ……. யார் என்ன செஞ்சாலும் கடையை அடைக்க மாட்டேன்கிறாப்பா ! அவுஞ்ச சிறுக்கியாயிருப்பா போல ” என்றார்.

மக்களுக்கு டாஸ்மாக் கடை மீது சாணி அடித்தது அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் அளித்திருப்பதை உணர முடிந்தது.

முற்றுகையின் போது முழக்கங்கள்

வெல்லட்டும் வெல்லட்டும்
மக்கள் அதிகாரம் வெல்லட்டும்

தமிழக அரசு ஜெயா அரசு
ஆளும் அருகதையை இழந்து விட்டது
சாராயம் விற்று பொழப்பு  நடத்துது !

தண்ணீர் கொடுக்க வக்கில்ல !
கல்வி கொடுக்க துப்பில்ல !

மதுவிலக்கை அமுல்படுத்த
போராடிய மாணவர்களை
பச்சையப்பா கல்லூரி மாணவர்களை
போலீசை வைத்து அடக்கப் பாக்குது !

அஞ்ச மாட்டோம்…. கெஞ்ச   மாட்டோம்
குடி கெடுக்கும் அரசுக்கும்
சாராயம் விற்கும் ஜெயாவுக்கும்
பாதுகாக்கும் போலீசுக்கும்
அஞ்ச மாட்டோம் … அஞ்ச மாட்டோம் …

இழுத்து மூடுவோம்…இழுத்து மூடுவோம்.
டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம்.

தமிழக பெண்களின் தாலியறுத்து
பள்ளி கல்லூரி மாணவர்களை
மது கொடுத்து சீரழிக்கும்
தமிழக அரசு மக்கள் அரசா ?

மாணவர்கள் மீது தடியடி !
ஆளும் ஜெயா கும்பலுக்கு
தமிழக போலீஸ் மிதியடி !

வெட்கக் கேடு ..வெட்கக் கேடு !
சாராயம் விற்பது சட்டமாம்
தடுத்து நிறுத்துவது குற்றமாம் …!

மாணவர்கள் உடம்பில் ரத்தம் வடியுது…
போலீஸ் உடம்பில் சாராயம் ஓடுது  !

கெஞ்சியது போதும் ….கெஞ்சியது போதும் ..
போலீசைக் கண்டு அஞ்சியது போதும் !
மக்கள் அதிகாரம் கையில் எடுப்போம்..
மதுக்கடைகளை அடித்து நொறுக்குவோம் ..! !

படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்

_____________________________________________

செய்தியும் படங்களும் : பு ஜ செய்தியாளர்கள், உசிலம்பட்டி .

 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. மக்கள் அதிகாரத்தின் இந்த புதிய போர்த் தந்திரம் – ஆளும் ஜெயா அரசையும்
  அதன் ஏவலாளி ரவுடி போலீசையும் ரொம்பவே மிரட்டி இருக்கிறது.
  மதுக்கடைகளை அடித்து நொறுக்குவதை வன்முறை என்று முத்தரை குத்தி
  மக்களின் கைகளை கட்டிப் போட்ட போலீஸ், இந்த புது வகை போர்த் தந்திரத்தின் முன்
  எந்த சட்டத்தையும் வளைக்க முடியாமல் முழி முழி என்று முழிக்கிறது. ஐயோ பாவம் !
  உசிலை முழுக்க இந்த சாணி அபிஷேகம் பற்றித் தான் பேச்சு !

  உசிலை மக்கள் அதிகாரத்திற்கும், அதன் சிறப்பு மிகு தலைமைக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க