Friday, May 20, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க பிணை வேண்டாம் – சிறையிலும் போராடும் மாணவர்கள் !

பிணை வேண்டாம் – சிறையிலும் போராடும் மாணவர்கள் !

-

rsyf press meetச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பு.மா.இ.மு தலைமையில் போராடி டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கியதும், பின்னர் அவர்கள் மீது போலிசு கொலைவெறித் தாக்குதல் நடத்தியதும் நமக்கு தெரிந்ததே. அதன் பின்னர் பெண் தோழர்கள் 5 பேர் உட்பட மொத்தம் 15 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில் மாணவர்கள் மீது தொடுத்த தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுக்க மாணவர்கள் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடப்பதை நாம் தொடர்ச்சியாக பார்க்கிறோம். மேலும் சிறையில் உள்ள மாணவர்களை அனைத்து கட்சி தலைவர்களும் சென்று பார்த்து ஆதரவு அளித்துவருகின்றனர்.

ஆனால் கடந்த சில தினங்களாக மாணவர்கள் எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரையும் பார்க்க விரும்பவில்லை எனவும், கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இருவரை தவிர மற்றவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களே அல்ல என அக்கல்லூரி முதல்வரின் பேட்டியை தொடர்ந்து, கைதானவர்கள் மாணவர்களே அல்ல என்பது போன்ற பிரச்சாரம் நடந்து வருகிறது. இதனை தெளிவுப்படுத்த வேண்டி பு.மா.இ.மு மற்றும் ம.உ.பா.மை சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

இதில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்காக வாதாடி வரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக அதன் சென்னை பகுதி தலைவர் மில்டன் மற்றும் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர் வாசுதேவன் மற்றும் போராட்டத்தில் பங்கு கொண்ட காயிதே மில்லத் கல்லூரி மாணவி ஓவியா ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

பு.மா.இ.மு மாநில அமைப்பாளர் கணேசன் பேசுகையில், “சாராய பாட்டில்களை உடைத்ததற்காக போலிசார் பச்சையப்பன் கல்லுரியை சார்ந்த புமாஇமு தோழர்களை கொலைவெறியோடு தாக்கியுள்ளனர். முதலில் G7 சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று ஏசி மோகன்தாஸ் மற்றும் சீருடை அணியாத உளவுப் பிரிவினரும் இரும்பு பைப் கொண்டு அடித்துள்ளனர். அதில் சாரதி என்பவருக்கு கால் எலும்பு முறிவும், செல்வம் என்பவருக்கு கை எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஜான்சி என்ற மாணவியின் கழுத்தில் கால் வைத்து மோகன் தாஸ் மிதித்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். பின்னர் ஐ.சி.எஃப் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று அடித்துள்ளனர். அதற்கு பிறகும் சிறையில் வைத்து அடித்துள்ளனர். இதில் தோழர் சாரதிக்கு இ.சி.ஜி எடுத்து பார்க்க வேண்டுமென மருத்துவர் அறிவுறுத்தியும் மறுத்து வருகிறது போலிசு.

உள்ளே அவர்களை உடல் ரீதியிலும், உளவியல் ரீதியலும் தாக்கியது மட்டுமன்றி வெளியே மாணவர்களின் போராட்டத்தை சிதைக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகிறது இந்த அரசு. பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்தவர்கள் மொத்தம் ஐந்து பேர். தினேஷ், மருது, அன்பு, பூபாலன், மணி ஆகிய அனைவருமே பச்சையப்பன் கல்லூரியை சார்ந்தவர்களே. அவர்களிடம் கல்லூரி அடையாள அட்டையும் உள்ளது. ஆனால் பச்சையப்பன் கல்லூரி முதல்வரை காவல்துறையினர் மிரட்டி இரண்டு பேர் மட்டுமே கல்லூரி மாணவர்கள் என பேட்டியளிக்க வைத்துள்ளனர். இதில் தோழர் செல்வம் கல்லூரியின் முன்னாள் மாணவர். இப்போது முதுகலை பயில விண்ணப்பித்துள்ளவர். எனவே இப்படி போராட வரும் மாணவர்களுக்குள்ளாகவே பிளவை உண்டாக்கி வருகிறது இந்த அரசு.

அது மட்டுமன்றி மாணவர்கள் அரசியல் தலைவர்கள் யாரையும் பார்க்க விரும்பவில்லை என முழுப் பொய்யை துணிந்து பரப்பி வருகிறது. அப்படி எந்த கருத்தையும் தாங்கள் தெரிவிக்கவில்லை என மாணவர்கள் கையெழுத்திட்டு தெரிவித்துள்ளனர்.

இப்படி ஏதோதோ முயற்சி செய்து மாணவர்களின் போரட்டத்தை தடுத்து நிறுத்த முயன்றாலும் வெளியே போராட்டம் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. நேற்றைய தினம் பூந்தமல்லி அறிஞர் அண்ணா பள்ளி மாணவர்கள் போராடியுள்ளனர்”

tasmac-puzhal-demo-11மில்டன் பேசுகையில், “நேற்றுக்கு முந்தைய தினம் கல்லூரி மாணவர்களில் ஐவரில் இரண்டு பேருக்கு பிணை வழங்குவதாக தெரிவித்திருந்தனர். ஆனால் மாணவர்கள் எனில், ஐவருக்குமேதானே பிணை வழங்க வேண்டுமென வாதாடியவுடன் வழக்கை தள்ளி வைத்தார்கள். ஆனால் நேற்று இரவு இரண்டு மாணவர்களை சிறையிலிருந்து வீட்டிற்கு கொண்டு வந்து விட்டுள்ளது போலீசு. அவர்களுக்கு நேற்றைய தினம்தான் பிணை மறுக்கப்பட்டிருந்தது. இந்த விசயம் உடனிருந்தவர்களுக்கே தெரியாது. எப்படியாவது மாணவர்களை பிரித்து போராட்டத்தை நசுக்க பார்க்கிறது அரசு.

எனவே, கைதான மற்ற மாணவர்கள் அறிவித்திருப்பது, இந்த அரசிடம் நாங்கள் கெஞ்ச போவதில்லை. பிணைக்காக கொடுத்த மனுவையும் வாபஸ் வாங்குகிறோம். எங்கள் மீது பொய்வழக்கு போட்டு உள்ளே தள்ளியுள்ளது இந்த அரசுதான். எனவே இந்த அரசேதான் எங்களை வெளியே விடவேண்டும் எனக் கூறியுள்ளனர்.”

மேலும் ஒரு கேள்விக்கு மில்டன் பதிலளிக்கையில் “இந்திய அரசியல் சட்டம் பிரிவு 47-ன் கீழ் அரசு மதுவில்லா சமூகத்தை நோக்கி செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசுதான் சட்டவிரோதமாக நடந்து கொள்கிறது. இதனால்தான் மக்கள் அரசை எதிர்த்து போராட வேண்டியுள்ளது.” என அரசை அம்பலப்படுத்தியுள்ளார்.

அடுத்து போராட்டத்தில் பங்கு கொண்ட மாணவி ஓவியா பேசுகையில், “ஒரு மாணவனை அஞ்சு போலிஸ்காரங்க சேர்ந்து அடிச்சாங்க. ஆனா அந்த மாணவன் தடுத்தானே தவிர திரும்ப அடிக்கல. அப்போ அடிச்சவன் செஞ்சது வன்முறையா இல்ல அடி வாங்குனவன் செஞ்சது வன்முறையா? மதுவால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். குடும்பத்தில் மனைவியாக இருந்தாலும் சரி, மகளாக இருந்தாலும் சரி அதிகம் பாதிப்படைவது பெண்கள்தான். எங்க அப்பா குடிச்சிட்டு கேவலமா பேசுறாருனு காலேஜ்லயும், ஸ்கூல்லயும் வந்து அழுவுற பொண்ணுங்கள நாங்க பாத்திருக்கோம். அதுக்காக நாம போயி போராடுனா உனக்கெல்லாம் எதுக்குடி இந்த வேலைனு ஒரு போலிஸ்காரன் பூட்ஸ் காலால உதைக்கிறாரு. மனிதாபிமானமே இல்லாம மயக்கம் போட்டிருந்த மாணவிக்கு தண்ணி கூட கொடுக்காம குண்டுக்கட்டா தூக்கிட்டு போயி, அவங்க துணி எல்லாம் வலிச்சி ரொம்ப கேவலமா நடந்துக்கிறாங்க. இதுக்கு பேரு வன்முறையா இல்ல நாங்க போராடுனது வன்முறையா” என்றவரிடம் அடுத்தகட்ட போராட்டத்தை பற்றி கேட்டதற்கு, “இப்போ கல்லூரி மாணவர்கள்தான் போராடிட்டு இருக்காங்க. அடுத்து பள்ளி மாணவிகளையும் திரட்டி கண்டிப்பா மதுபாட்டில்களை உடைப்போம். நாங்க அமைதியா போராடினா இந்த அரசு செவி சாய்க்கிலை. அதனால இனிமே வன்முறையாதான் போராடுவோம், மதுபாட்டிலை உடைப்போம்” என உறுதியாகக் கூறினார்.

இதில் ஒரு பத்திரிக்கையாளர், “மாணவர் அமைப்பு என்றால் நீங்கள் தனியாக போராட வேண்டியதுதானே, ஏன் தேவையில்லாமல் மாணவர்கள் இழுக்கின்றனர்?” என கேட்டதற்கு “மாணவர்கள் இல்லாமல் எங்காவது மாணவர் அமைப்பு இருக்குமா? மாணவர்கள் எங்கு போராடினாலும் மாணவர் அமைப்பு தலைமை தாங்கும். அதுதான் இயல்பான நடைமுறை” என பதிலளித்தார் தோழர் கணேசன்.