privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅரசின் அடக்குமுறையை முறியடிப்போம் - மக்கள் அதிகாரம் அறிக்கை

அரசின் அடக்குமுறையை முறியடிப்போம் – மக்கள் அதிகாரம் அறிக்கை

-

Flag 400 pixஅருகதை இழந்தது அரசுக் கட்டமைப்பு!
இதோ, ஆள வருகுது மக்கள் அதிகாரம்!!

மக்கள் அதிகாரம்

தமிழ்நாடு

________________________________________________________________

நெ.5/9, எஃப்.எம்.பிளாசா, 3-வது மாடி, பேக்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 01.
தொடர்புக்கு: 99623 66321

பத்திரிகைச் செய்தி                   12/08/2015

மிழகத்தில் அரசே குடிவெறியைத் திட்டமிட்டு மக்களிடம் திணித்து தெருவுக்குத் தெரு டாஸ்மாக்கைத் திறந்ததன் மூலம் பெண்களின் தாலியறுத்து, இளைஞர்களை, மாணவர்களைச் சீரழித்து மனிதப் பேரழிவுக்கு இட்டுச் செல்வதை இனம் கண்டு, இதற்கு எதிராக ‘மூடு டாஸ்மாக்கை! கெடுவிதிப்போம் ஆகஸ்ட் 31” என்ற இயக்கத்தை மக்கள் அதிகாரம் அமைப்பு தமிழகமெங்கும் நடத்தி வருகின்றது. ‘மூடு டாஸ்மாக்கை’ இயக்கத்தையொட்டி கடந்த இரண்டு மாதங்களாக எமது அமைப்பின் உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேலான இடங்களில் சுவர் எழுத்துக்கள், பல லட்சம் துண்டறிக்கைகள், பேருந்து, ரயில், தெருமுனைப் பிரச்சாரங்கள், சுவரொட்டிகள் எனப் பல வடிவங்களில் பிரச்சாரம் செய்து வந்தனர்.

ஏற்கனவே தமிழ்நாடெங்கும் டாஸ்மாக்கிற்கு எதிராக மக்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தனர். இதே பிரச்சினைக்காக அறவழியில் தொடர்ந்து போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள் அரசின் திட்டமிட்ட அலட்சியத்தால் கொல்லப்பட்டார். இதையடுத்து கலிங்கப்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு மதுக்கடைகளை நொறுக்கி போராடத் தொடங்கினர்.

pennagaram tasmac protest (4)எங்களின் இரண்டு மாதப் பிரச்சாரம் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பின் தலைமையில் திரண்டு சென்று அருகிலிருந்த ஷெனாய் நகர் டாஸ்மாக் கடையை உடைத்து நொறுக்கினர். உடனே கல்லூரி மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கி முன்னணியாளர்களைக் கைது செய்தது போலீசு. சுமார் 30 பேரைப் பிடித்துச் சென்ற போலீசு அவர்களில் 15 மாணவர்களை மட்டும் விட்டு விட்டு, 15 பேர் மீது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொடுங்காயம் விளைவித்தல் உள்ளிட்டு 10 பிரிவுகளில் வழக்குப் பதிந்தது. மேலும் ஜி7 சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் வைத்தும் புழல் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளது, போலீசு.

இவர்கள் தாக்கப்பட்டதை அறிந்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. போராடுகின்ற மாணவர்களைப் பிளவுபடுத்தி, ஆட்கொணர்வு மனுவை வலுவிழக்கச் செய்யும் வஞ்சக நோக்கத்தோடு, சிறையிலிருந்த மாணவர்களில் இருவர் மீதான வழக்குகளைத் திரும்ப பெற்றுக் கொண்டு அவர்களை மட்டும் விடுவித்துள்ளது அரசு. இந்த இருவரைத் தவிர பிறர் எல்லாம் ‘வன்முறை கும்பல்’ என்றும் ‘கிரிமினல்’ என்றும் வாதிடுகிறது. ஊடகங்களையும் அவ்வாறு சித்தரிக்கும்படி தூண்டுகிறது. இவர்கள் பிணையில் வருவதற்கு வழக்காடிய போது இவர்கள் மீது பல வழக்குகள் உள்ளன என வாதிட்டு பிணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசு. ஆனால், இவர்கள் மீதுள்ள வழக்குகள் எதுவும் கிரிமினல் வழக்குகள் அல்ல. மாணவர்களின், மக்களின் உரிமைகளுக்காக போராடியதற்காக போலீசார் போட்டுள்ள பொய் வழக்குகள்தான்.

ஆட்கொணர்வு மனுவை எவ்வளவு தூரம் இழுத்தடிக்க முடியுமோ அந்தளவு வரை நீதிமன்றம் சென்று கொண்டுள்ளது. அண்மையில் இவ்வழக்கில் ஆளைக் கொணரும் உத்தரவைத் தராமல் ஒரு நபர் விசாரணை என்று வஞ்சக நாடகம் ஆடுகின்றது. மாணவர்கள் பிணை கேட்கப் போவதில்லை என எழுதிக் கொடுத்து அரசின் மூஞ்சில் கரி பூசி விட்டனர்.

Hosur tasmac protest (2)விருத்தாச்சலம் நகரில் ஒரு டாஸ்மாக் கடைக்கு எதிராக மாணவர்கள் போராடியது, விருத்தாச்சலம் வட்டம் மேலப்பாளையூரில் டாஸ்மாக் கடை முற்றுகை ஆகிய இரு வழக்குகளிலும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜூ கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு பிணை தரவும் அரசு கடுமையாக எதிர்க்கின்றது.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் சி.ராஜூ கடந்த இருபது ஆண்டுகளாக மக்கள் பிரச்சனைகளை எடுத்துப் போராடி வந்திருக்கிறார் என்பதை அனைவரும் அறிவர். குறிப்பாக, சிதம்பரம் நடராசர் கோவிலில் மொழித் தீண்டாமைக்கு முடிவு கட்டுவது, நடராசர் கோவிலை தீட்சிதர்கள் பிடியிலிருந்து மீட்டு இந்து அறநிலையத்துறை வசம் கொண்டுவருவது, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதை நிலைநாட்டுதல், உயர்நீதிமன்றத்தில் தமிழ், சமச்சீர் கல்விக்கான போராட்டம், தனியார் பள்ளிக் கட்டணக் கொள்ளைக்கு முடிவுகட்டுதல், வெள்ளாறு மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்துதல் போன்ற பல்வேறு இயக்கங்களை முன்னின்று நடத்தியவர், வழக்கறிஞர் ராஜூ. இதன் காரணமாகவே அவர் மீது குறி வைத்து பொய் வழக்குகளைப் போட்டுப் பிணையில் விட மறுக்கிறார்கள். வழக்கறிஞர் ராஜூ மீது போடப்பட்ட பொய் வழக்கைக் கண்டித்து விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட கடலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போல, டாஸ்மாக்குக்கு எதிராக கோவை, கரூர், விழுப்புரம், ஓசூர், பெண்ணாகரம், சிவகங்கை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பின் முன்னணியாளர்களை கைது செய்து துன்புறுத்தி, கிரிமினல் குற்றவாளிகள் போல் சித்தரித்து வருகிறது, அரசு.

நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராமசுப்பிரமணியம், ரவிச்சந்திர பாபு ஆகியோர் ‘மது விலக்குக்காக டாஸ்மாக் கடை முன்பு போராட்டம் நடத்தியவர்களை குற்றப்பின்னணி கொண்டவர்களாகக் கருதக் கூடாது; போராட்டம் நடத்துவது அரசியல் சட்ட அடிப்படை உரிமை. அரசியல் சட்டப் பிரிவு 47 இன்படி மது விற்பனையைத் தடை செய்வது மாநில அரசின் கடமை. அந்த அரசியல் சட்டக் கடமையைத்தான் மாணவர்கள் செய்துள்ளனர்’ எனக் கூறியுள்ளனர்.

மேற்கண்ட டாஸ்மாக் எதிர்ப்பு மக்கள் போராட்டம் மற்றும் அதற்கெதிரான அரசின் அடக்குமுறை உணர்த்துவது யாதெனில், நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கட்டமைப்பு முழுவதும் தீராத, மீளமுடியாத, நிரந்தரமான, மிக மிக அசாதாரணமான நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. அதன் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் அவற்றுக்குரியவையாக வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றாது, திவாலாகி, தோற்றுப் போய், எதிர் நிலை சக்திகளாக (Bankrupted, Failed, Collapsed and Opposite force) மாறிவிட்டன. மது மற்றும் மணற்கொள்ளையை அரசியல் சட்டப்படி தடுக்க வேண்டிய அரசே, அதற்கு எதிராக செயல்படுவது இதற்குத் துலக்கமான உதாரணம். ஆகவே இந்த அரசியல் அமைப்பு மக்களுடைய எந்தப் பிரச்சினையையும் தீர்ப்பதற்கு தகுதி இழந்துவிட்டது. எனவே மக்கள், டாஸ்மாக் ஒழிப்பு உள்ளிட்ட எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க அதிகாரத்தைக் கையில் எடுப்பதே ஒரே தீர்வு.

shut tasmac 1எனவே டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ, சென்னை பச்சையப்பன் கல்லூரி புமாஇமு மாணவர்கள், மற்றும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

மக்கள் அதிகாரம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளைத் தனிமைப்படுத்தும், கொச்சைப்படுத்தும், போலீசின் சதிகளை கடுமையாகக் கண்டிக்கின்றோம். ஊடகங்கள் அவற்றுக்கு ஒத்துழைக்க வேண்டாம். மக்களது நியாயமான கோரிக்கைகளையும் போராட்டங்களையும் ஆதரிக்க வேண்டும். போலீசின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை துணிவுடன் மக்களிடையே அம்பலப்படுத்த வேண்டும்.

அரசின் அடக்குமுறைகளை முறியடிக்கும்படியும், தொடர்ந்து போராட்டத் தீயை அணையாது காக்கும்படியும் மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்

  • டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடிக் கைதாகியுள்ள மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ, பச்சையப்பன் கல்லூரி பு.மா.இ.மு. மாணவர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்!
  • டாஸ்மாக் ஒழிப்புப் போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் வாபஸ் வாங்கு!
  • பூரண மதுவிலக்கை உடனே அமல்படுத்து!
  • அரசு டாஸ்மாக்கை மூடாவிட்டால் மக்களே அதிகாரத்தைக் கையிலெடுத்து அவரவர் ஊர்களில் டாஸ்மாக்கை மூடவேண்டும்!

இவண்
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க