Saturday, August 20, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் - மதுரை கருத்தரங்கம் !

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் – மதுரை கருத்தரங்கம் !

-

Crowd-Silhouettesடாஸ்மாக்கிற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தமிழகத்தை அதிரச் செய்துள்ளது. மாணவர்கள், பெண்கள், கிராம மக்கள், வழக்கறிஞர்கள்,தொழிலாளர்கள்,விவசாயிகள், அரசியல் கட்சிகள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்துப் பிரிவு மக்களும் ஒரே குரலில் மூடு டாஸ்மாக்கை என விண்ணதிர முழங்குகின்றனர். அறவழியில் தொடர்ந்து போராடி வந்த சசிபெருமாள் அரசின் திட்டமிட்ட அலட்சியத்தால் கொல்லப்பட்டார்.

இதனைத்  தொடர்ந்து கலிங்கப்பட்டி, சென்னை, விருத்தாசலம், கோவை, திருச்சி,மதுரை எனப் போராட்டம் விரிவடைந்தது. மதுக்கடைகள் முற்றுகையிடப்பட்டு, சாணி வீசப்பட்டு,நொறுக்கப்பட்டன. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பின் தலைமையில் சென்று டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர். உடனே கல்லூரி மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கி கைது செய்த போலீசு பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொடுங்காயம் விளைவித்தல் உள்ளிட்டு 10 பிரிவுகளில் வழக்குப் பதிந்தது.பின்னர் சேத்துப்பட்டு காவல் நிலையம், புழல் சிறையில் வைத்து மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளது.மாணவிகளிடம் படுகேவலமாக நடந்து கொண்ட போலீசு, சிறையில் உளவுத்துறை போலீசு மூலம் சட்டவிரோதமாக மிரட்டுகிறது.

விருத்தாச்சலத்தில் டாஸ்மாக் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜூ, டாஸ்மாக் ஊழியர்களைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறி இரு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.15 நாட்கள் ஆன பின்னரும் பிணை தர மறுக்கிறது போலீசின் கைக்கூலியாகச் செயல்படும் கடலூர் மாவட்ட நீதிமன்றம்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் சி.ராஜூ கடந்த இருபது ஆண்டுகளாக சிதம்பரம் நடராசர் கோவில், சமச்சீர் கல்வி, வெள்ளாறு மணல் கொள்ளை எதிர்ப்புப் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். குறிப்பாக மணல் மாபியாக்கள்  ராஜூவை குண்டர் சட்டத்தில் அடைக்கத் துடிக்கிறார்கள்.

இதே போல, டாஸ்மாக்குக்கு எதிராக கோவை, கரூர், விழுப்புரம், ஓசூர், பெண்ணாகரம், சிவகங்கை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பின் முன்னணியாளர்களை கைது செய்து துன்புறுத்தி, கிரிமினல் குற்றவாளிகள் போல் சித்தரித்து வருகிறது போலீசு.போஸ்டர் ஒட்டுபவர்கள் கூட சிறை வைக்கப்படுகிறார்கள்.போராடும் மக்களை தடியடி, சிறை என அச்சுறுத்தி ஜனநாயக உரிமைகள்,அரசியல் சட்ட உரிமைகள் பறிக்கப்பட்ட ஒரு அசாதாரண நிலை தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டாஸ்மாக் சட்டப்படியானது! போராட்டம் சட்ட விரோதமானது!……..?

ந்திய அரசியல் சட்டத்தின் சரத்து 47 “ மதுவிலக்கை அமல்படுத்துவது அரசின் கடமை” என்கிறது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 324 “ நச்சு அல்லது அரிக்கும் தன்மையுள்ள பொருள் எதன் மூலமேனும், அல்லது மூச்சிழுத்தால், விழுங்கினால் அல்லது இரத்தத்தில் ஏற்றால் மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள் எதன் மூலமேனும் தன்னிச்சையாகக் காயம் விளைவிக்கும் எவரொருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை” என்கிறது. இதன்படி அரசே குற்றம் இழைக்கும் கிரிமினல் கூட்டமாக உள்ளது.

இந்திய அரசியல் சட்டம் சரத்து 21-ன் படி  மக்களின்  வாழ்வுரிமையை  அரசு காக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு பல லட்சம் குடும்பங்களைக் கொல்கிறது. இவ்வாறு, தான் உருவாக்கிய சட்டங்களைத் தானே மதிக்கவில்லை என்பதுடன், சட்டத்தை அமல்படுத்தச் சொல்லிப் போராடுபவர்களைக் “குற்றவாளிகளாக” சித்தரிக்கிறது. தண்ணீர், மணல் கொள்ளை உட்பட எந்தக் கோரிக்கைக்கான போராட்டத்தையும் போலீசுதான் வந்து ஒடுக்குகிறது.நீதிமன்றமோ பொய்வழக்கு என்று தெரிந்தாலும், கண்ணை மூடிக்கொண்டு போலீசின் கைதை ஆதரிக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பைக்கூட மாஜிஸ்ட்ரேட்டுகள் மதிப்பதில்லை.நீதிமன்றங்கள் காவல் நிலைய அவுட்போஸ்ட் ஆகிவிட்டது.

அரசை, மாஜீஸ்ட்ரேட்டுகளைக் கண்டிக்க வேண்டிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் “ பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போராட்ட முறை தவறு” என்று வழக்கை விசாரிக்கும் முன் சொல்லி, தமிழக நீதித்துறை எடுக்க வேண்டிய நிலைப்பாட்டை கோடிட்டுக் காட்டுகிறார். இதே தலைமை நீதிபதி முன்பு டாஸ்மாக்கை மூடச் சொல்லி, வழக்குத் தொடுத்தபோது, டாஸ்மாக்கை நடத்துவதும், மூடுவதும் அரசின் கொள்கை முடிவு; இதில் நீதிமன்றம் தலையிடாது என்றார்.

madurai prpc (3)அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்றால் போராட்டம் தவிர மக்களுக்கு என்ன வழி? கடந்த பத்து ஆண்டுகளாக பல ஆயிரம் மனுக்கள்,ஆர்ப்பாட்டங்கள்,உண்ணாவிரதங்கள், முற்றுகைகள் நடத்தி ஓய்ந்து போன பின்புதானே மக்கள் டாஸ்மாக்கை உடைக்கிறார்கள்! இதற்கு தலைமை நீதிபதியின் பதில் என்ன? மாணவர்கள் போராட்டத்தை விமர்சிக்கும் இவர் காவல்துறை கல்லூரி மாணவிகளிடம் மிகக் கேவலமாக, சட்ட விரோதமாக நடந்து கொண்டதை, காவல் நிலையத்தில், சிறையில் மாணவர்களைத் தாக்கியதைக் கண்டிக்காதது ஏன்? இரண்டாயிரத்துக்கு   மேற்பட்ட நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகளை அரசு அகற்ற வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லி வருடங்கள் கடந்து விட்டன.

சசிபெருமாள் இறப்புக்குக் காரணமான டாஸ்மாக்கை அகற்றச் சொல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டுக்கு மேல் ஆன பின்னரும்  அகற்றப்படவில்லை.இன்னும் பல்லாயிரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் அரசுக்கெதிராக உறங்குகின்றன.இவையெல்லாம் சட்டவிரோதம் இல்லையாம்; மாணவர் போராட்டம் மட்டும் தவறாம். இதேபோல்தான் வாழ்வுரிமைக்காகப் போராடும் என்.எல்.சி தொழிலாளர் போராட்டத்தையும் சட்டவிரோதமானது என அறிவிக்கிறது நீதிமன்றம்.கோர்ட்டுக்கும் வரக்கூடாது;போராடவும் கூடாது; சாகுங்கள் என்கிறது நீதித்துறை.

அரசுக்கேற்ப நிறத்தை மாற்றிக் கொள்ளும் நீதிமன்றங்கள்!

ட்சி  மாறினால் காட்சிகள் மாறும்.நீதித் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல.சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்காவின் தீர்ப்பை எதிர்த்து தமிழகம் வன்முறைக் களமாக மாற்றப்பட்டு சட்டம்-ஒழுங்கு சீர்குலைக்கப்பட்டபோது அதைத் தவறென்று நீதிமன்றம் சொல்லவில்லை. சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எல்லா அட்டூழியங்களும் நடந்ததை நீதிமன்றம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது.முக்கியமான பிரச்சனைகள் அனைத்திலும் அரசின் நிலைபாட்டையே நீதிமன்றங்கள் எடுக்கும்.சட்டம் ரெண்டாம்பட்சம்தான்.

தமிழகத்தில் ஆற்று மணல், கிரானைட், தாது மணல் கொள்ளையின் மதிப்பு பல லட்சம் கோடி என்பதுடன், மாநிலத்தையே பாலைவனமாக்கும் செயலாகும்.இக்கொள்ளையில் பிரதான பங்கு வகிப்பது அரசாங்கமும், ஆட்சியாளர்களும்தான்.இப்பிரச்சனைகள் பலமுறை நீதிமன்றம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. கொள்ளைகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.உரிய நடவடிக்கை இல்லையென்பதுடன், இந்த ஊழலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பங்காளி என்பதே முக்கியமானது.குறிப்பாக இவ்வழக்குகளைக் கையாண்ட நீதிபதிகள் பலர் கனிமவளக் கொள்ளையர்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்துள்ளனர். இவை எதுவும் சட்டப்படியானதல்ல என்பது தலைமை நீதிபதிக்கும் தெரியும். ஆனால் மீண்டும், மீண்டும் இந்த ஊழல் நீதிபதிகளுக்கே கனிமவள வழக்குகளை கையாளும் அதிகாரத்தை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அளிக்கிறார்.

நேர்மையான நீதிபதிகள் சிலருக்கு எப்போதும் இத்துறை அளிக்கப்படுவதில்லை. மதுரையில் கடந்த ஏப்ரல்,2015-ல் கிரானைட் கொள்ளைக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த நீதிபதி சென்னையில் ஜூலை மாதம் வைகுண்டராஜனுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கிறார். வினோத் குமார் சர்மா என்ற தமிழே தெரியாத பஞ்சாப் மாநில ஓய்வு பெற்ற நீதிபதியை விசாரணை அதிகாரியாக நியமிக்கிறார். ஆகஸ்டு மாதம் மீண்டும் மதுரை வந்த இந்த நீதிபதிக்கு மீண்டும் கனிமவளத் துறை தலைமை நீதிபதியால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே தலைமை நீதிபதி தன்னை உத்தமன் போல் காட்டிக் கொள்ள, நீதிமன்றத்தின் மீதான மக்கள் நம்பிக்கையைக் காக்க தாதுமணல் கொள்ளை உத்தரவுக்குத் தடையும் விதிக்கிறார்.

மொத்தத்தில் வைகுண்டராஜன் காப்பாற்றப்படுகிறார்.அவரது கடத்தல் தொடர்ந்து நடக்கிறது. ஆட்சியாளர்கள்-அரசு அதிகாரிகள்-கனிமவள மாபியாக்கள்-ஊழல் நீதிபதிகள்- தலைமை நீதிபதி-அவரது ஆலோசனைக் குழு நீதிபதிகள் என அனைவரும் சேர்ந்து நடத்தும் இந்த நாடகத்தில் ஏமாளிகள் மக்களே. நடந்ததில் பெரிய கூத்து கடந்த 20 ஆண்டுகளாக வைகுண்டராஜனுக்கு வழக்கறிஞராக இருந்த அரசின் தலைமை வழக்கறிஞர்  ஏ.எல்.சோமையாஜி, அரசின் சார்பில் வாதிடுகிறார்.

பணம் வாங்குவதைத்  தவிர உயர்,உச்சநீதிமன்றங்களில் நடக்கும் மிகப்பெரிய ஊழல் அரசு,பார்ப்பனீயம்,கார்ப்பரேட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்புச் சொல்வது. டாஸ்மாக் கடைகளை உடைத்தவர்களுக்கு பல லட்சம் டெபாசிட் கட்டச் சொல்லும் நீதிமன்றம், 22,000 கோடி மக்கள் பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற நோக்கியா கம்பெனிக்கு 200 கோடி மட்டும் கட்டச் சொல்லி தடை விதிக்கிறது. ஜெயலலிதாவின் வருமான வரி வழக்கில் ஆதரவாகத் தீர்ப்பளித்த நீதிபதி தட்சிணாமூர்த்திக்கும், விசுவாச உளவுத்துறை அதிகாரி ராமானுஜத்துக்கும் தகவல் ஆணையர் பதவி, சட்டவிதிகளை அப்பட்டமாக மீறி வழங்கப்படுகிறது.நீதிமன்றம் மவுனம் காக்கிறது.

உயர்நீதிமன்றத்தின் நிலை இது என்றால் உச்சநீதிமன்றத்தின் நிலை மகாக் கேவலமானது. இந்திய தலைமை நீதிபதி ஹெ.எல்.தத்து மீது ஜெயலலிதா வழக்கில் நேரடியாகக் குற்றம் சாட்டப்பட்டது: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கட்ஜூ, தத்து ஊழல் செய்து சொத்து சேர்த்துள்ளார் என ஆதாரங்களை வெளியிட்டார். முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் கே.ஜீ.பாலகிருஷ்ணன், சதாசிவம் பற்றி எழுதினால் பக்கங்கள் போதாது. டாஸ்மாக் போராட்டத்துக்குப் பிணை வழங்க மறுக்கும் நீதித்துறைதான் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கும், சல்மான்கானுக்கும் விரைந்து ஜாமீன் வழங்குகிறது.madurai prpc (2)

மொத்தத்தில் மக்களின் கடைசி நம்பிக்கை என்று சொல்லப்படும் நீதித்துறை, சீரழிந்து நாசமானதுடன் அரசு-கார்ப்பரேட்-பார்ப்பனீயமயமாகி மக்களை ஒடுக்குவதுடன் ஆட்சியாளர்கள்-அரசு அதிகாரிகள்- கனிமவள மாஃபியாக்கள்-போலீசுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதை யாரேனும் மறுக்க முடியுமா?  இந்த உண்மை சரியெனில் இந்த நீதிஅமைப்பில் நமது பிரச்சனைகளை எப்படித் தீர்க்க முடியும்? நீதி எப்படிப் பெற முடியும்? தான் சொல்லும் சட்டத்தை, விதிகளை தானே கடைபிடிக்க முடியாத அரசும், போலீசும், நீதித்துறையும் சட்டப்படி நடக்குமாறு மக்களை அறிவுறுத்தும் யோக்கியதையை இழந்து போனதே உண்மை.மாறிப்போன சூழல்களில் மாற்று என்ன?  என்பதைப் பற்றிச் சிந்திப்பதே சமூக அக்கறை உள்ளவர்கள் செய்ய வேண்டியது.

அட்டக்கு முறையை ஏவும் அரசு!
துணைநிற்கும் நீதிமன்றம்!
டாஸ்மாக் எதிர்ப்பு மக்கள் போராட்டம்!

கண்டன கருத்தரங்கம்

நாள்:22.08.2015  மாலை 5.00 மணி
இடம்: செய்தியாளர்கள் அரங்கம்,பிரஸ் காலனி,மாட்டுத்தாவணி எதிர்புறம், மதுரை.

தலைமை:வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

துவக்க உரை: வழக்கறிஞர் திருநாவுக்கரசு,
தலைவர், மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சங்கம்

 கண்டன உரை:

 டாஸ்மாக் நடத்துவது சட்டப்படியானது! எதிர்த்துப் போராடுவது சட்டவிரோதமானது! சரியா?
– வழக்கறிஞர் தி.லஜபதிராய்,உயர் நீதி மன்றம் ,மதுரை

 டாஸ்மாக் எதிர்ப்பு மக்கள் போர்-ஒடுக்கும் அரசு,நீதிமன்றங்கள்! மாற்று என்ன?
வழக்கறிஞர் திரு.ப.திருமலை ராஜன்,முன்னாள் பொதுச் செயலாளர்,
கீழமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு,ஈரோடு

அனவரும் வருக!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை மாவட்டக் கிளை ,தொடர்புக்கு:98653 48163, 94434 71003

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க