Saturday, August 20, 2022
முகப்பு உலகம் அமெரிக்கா மத்தியத் தரைக்கடல் : ஏழை அகதிகளின் இடுகாடு

மத்தியத் தரைக்கடல் : ஏழை அகதிகளின் இடுகாடு

-

June 7, 2014 – ஆப்பிரிக்காவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பா செல்ல விரும்பும் அகதிகள் – கரை தொடாடமல் மரிப்பவர்களே அதிகம்!

ரோப்பாவிற்கு வரும் அகதிகள் மற்றும் புலம் பெயர்பவர்களின் எண்ணிக்கையில் நடப்பு ஆண்டான 2015-லும் எந்த மாற்றமும் இல்லை. அதாவது அகதிகளாக வருவொர் பிணங்களாக கரையேறுகிறார்கள் – அந்த எண்ணிக்கைதான் அப்படியே தொடர்கிறது.

வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக ஐரோப்பாவை நோக்கி வருகிறார்கள். ஜூலை மாதத்தில் மட்டும் 50 ஆயிரம் அகதிகள் மத்தியத் தரைக்கடல் பகுதியில் உள்ள தீவுகளில் வந்திறங்கியதாக உலக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு முந்தைய மாதத்திலும் இந்த எண்ணிக்கை 50 ஆயிரமாக இருந்தது. இந்த ஆண்டு இதுவரைக்கும் 1 இலட்சத்து 24 ஆயிரம் அகதிகள் கிரீசுக்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு, மே மாத கடைசியில் மட்டும் ஐரோப்பாவை சேர்ந்த கடற்படை மற்றும் வியாபார கப்பல்கள் மொத்தம் 1,770 அகதிகளை மத்தியத் தரைகடல் பகுதியில் மீட்டுள்ளனர். உலகிலேயே அதிக அளவு அகதிகள் கப்பல்கள் தரைத் தட்டும் இடமாக மத்தியத் தரைக்கடல் உள்ளது.

கிரீஸில் உள்ள லெஸ்போஸ் (Lesbos), காஸ் (Kos) மற்றும் சியோஸ் (Chios)   தீவுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த ஐரோப்பாவிற்கான உலக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனத்தின் செயலாளர் வின்சென்ட் கோசெடேல் (Vincent Cochetel) அகதிகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள், குடிநீர் வசதிகள், மருத்துவ வசதிகள் மற்றும் தங்குமிடங்கள் செய்து கொடுக்க முடியாத இந்த குழப்பமான சூழலை எனது 30 ஆண்டு அனுபவத்தில் கண்டதில்லை என்கிறார்.

மத்தியத் தரைக்கடல் தீவுகளில் நிலவும் இந்த குழப்பமான மற்றும் வெட்ககேடான சூழலை கிரீஸ் கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்நிறுவனம் கேட்டுக் கொண்டு உள்ளது. ஏற்கனவே உள்நாட்டுக் குழப்பத்தாலும், ஐரோப்பிய யூனியனின் கிடிக்கிப் பிடி மற்றும் ‘சிக்கன நடவடிக்கையாலும்’ சொந்த மக்களையே கவனித்துக் கொள்ள இயலாத சூழலில் கிரீஸ் எவ்வாறு இந்த நிலைமையை கட்டுப்படுத்த இயலும்?

இது ஒருபுறமிருக்க தமது தாய்நாடுகளை விட்டு பெயர்த்தெறியப்படும் அகதிகளுக்கு இந்த பயணம் காசி யாத்திரை போல இறுதிப் பயணமாக மாறிவிட்டது. இது வரையில் நிகழ்ந்த அகதிகளின் உயிரிழப்பில் மிகப்பெரியதும் கொடூரமானதும் இந்த ஆண்டில் நிகழ்ந்த அகதிகள் கப்பல் விபத்தாகும்.

லிபியாவின் திரிபோலியில் இருந்து கிளம்பிய அகதிகள் கப்பலில் இருந்த 850 பேரில் 350 பேர்கள் எரித்திரியாவை சேர்ந்தவர்கள். மீதி இருந்தவர்கள் சோமாலியா, சிரியா, மாலி, ஐவரி கோஸ்ட், எத்தியோப்பியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் உள்ளிட்டு 34 பேர்கள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர்.

உலக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2015-ம் ஆண்டில் மட்டும் 30,000 அகதிகள் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் இறந்த அகதிகளில் வட ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 1,722 என்கிறது.

இங்கே மிகவும் கொடூரமான விஷயம் என்னவெனில், போன ஆண்டின் இறப்பு எண்ணிக்கையான 3,271 இந்த ஆண்டின் தொடக்க வாரங்களிலேயே எட்டப்பட்டு விட்டது.

meditranian (3)அகதிகளின் இந்த நிலைக்கு முதன்மையான காரணம் ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக ஆப்பிரிக்க கண்டம் மாற்றப்பட்டதுதான். அது தோற்றுவித்த உள்நாட்டுப் போரும் மத அடிப்படைவாதமும் அகதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. ஆட்கடத்தல் கும்பல்களின் முக்கியமான இலக்கு இந்த காரணங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளும் அதன் மக்களும் தாம்.

ஜூலை 27 அன்று 2,000 க்கும் மேற்பட்ட அகதிகள் பிரான்ஸ், காலேசில் (Calais) உள்ள ஐரோப்பிய சுரங்க வளாகத்தில் நுழைய முயற்சி செய்தனர். அங்கிருந்து இங்கிலாந்தை சென்றடைய செய்த இந்த கடுமையான முயற்சியில் ஏராளமானோர் காயமுற்றனர். பிரான்ஸ் போலிஸ் 200 அகதிகளை கைது செய்துள்ளனர் என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

இந்த கோடையில் மட்டும் 8 அகதிகள் ரயில் டிரக்கில் ஏற முற்பட்டு இறந்து போயினர்.

ஏற்கனவே பிரான்சில் 3000 பேர்கள் அகதிகளாக உள்ளனர். இந்த அகதிகளை கட்டுப்படுத்தத் தவறுவதாக பிரான்சும் பிரிட்டனும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றன.

பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் தெரசா மே மற்றும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்டு காசிநியூ இருவரும் சேர்ந்து வெளியிட்ட கடிதத்தில், பெரும்பான்மையான அகதிகள், கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் வழியே பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கு வருவதாக் கூறினர்.

இதற்கு நிரந்தர தீர்வாக இருவரும், ஐரோப்பாவிற்கு வரும் அகதிகள் மற்றும் புலம் பெயர்வோரின் எண்ணிக்கையை குறைப்பது தான் என்று ஒரே குரலில் கூறியிருக்கின்றனர். .

கடுமையான சட்டங்கள் போடுவதன் மூலமாகவும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் மூலமாகவும் அகதிகளின் எண்ணிக்கையை கட்டுபடுத்த வேண்டும் என்று பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு ஆலோசனைகளையும் எச்சரிக்கைகளையும் விடுக்கின்றன.

இந்த அகதிகள் மற்றும் புலம் பெயர்வோருக்கு தேவையானது உளவியல் ரீதியிலான ஆதரவு தான் என்று UNHCR யை சேர்ந்த ஒரு ஊழியர் கூறுகிறார். இந்த நெருக்கடிகளை சமாளிக்க வேறுவிதமான நீதிமுறைகளும் மனிதாபிமான முறைகளும் உள்ளதாக தன்னார்வ நிறுவனங்கள் கூறுகின்றனர்.

அதாவது அந்த நாடுகளிலேயே இதற்கான அகதிகள் முகாம்களை வைத்து அங்கேயே அவர்களை அரசியல் தஞ்சம் கோர சொல்லலாம் என்றும் இது ஐரோப்பாவிற்கு வரும் அகதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் என்கிறார்கள். மனிதாபிமானம் என்று இவர்கள் வைக்கும் தீர்வுகள் கடைசியில் இந்த முட்டு சந்தில் தான் நிற்கின்றன.

பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் அரசுகள் அகதிகளை மீண்டும் அவர்களது தாய் நாட்டிலேயே விட்டு விடப் போவதாகவும், அகதிகளைக் கடத்திக் கொண்டு வரும் கடத்தல்காரர்களை அழித்தொழிக்கப் போவதாவும் சவடால் அடித்து கொண்டு இருக்கின்றன. இதற்காக பிரிட்டிஷ் அரசு பிரான்சிற்கு 11 மில்லியன் டாலர்கள் உதவி செய்ய போவதாக அறிவித்து உள்ளது.

உலகம் முழுதும் இந்த ஏழை எளிய உழைக்கும் மக்கள் இருமுறை புலம் பெயர்ந்துள்ளனர். காலனி ஆதிக்க காலகட்டத்தில் ஏகாதிபத்தியங்கள் நேரடியாக ஆப்பிரிக்க ஆசிய மக்களை அடிமைகளாக இழுத்து சென்றனர். பிறகு இன்றைய மறுகாலனிய காலகட்டத்தில் ஏகாதிபத்தியங்களின் போர்சக்கரத்தில் மாட்டிய ஆசிய ஆப்ரிக்க நாடுகளின் உள்நாட்டு நிலைமைகள், அம்மக்களை தமது தாய்நாட்டை விட்டு அகதிகளாக இரண்டாவது முறையாக நவீன அடிமைகளாக விரட்டுகின்றன. அதிலொரு பகுதி மக்கள் தாம் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாய் வீசியடிக்கபடுகின்றனர்.

21-ம் நூற்றாண்டின் ஏகாதிபத்திய வளர்ச்சியின் பலிபீடங்களாக ஆசிய ஆப்ரிக்க ஏழை நாடுகள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக தொடரும் இந்த கொடூரத்தின் வடிவம் தான் மாறியுள்ளதே தவிர உள்ளடக்கம் மாறவில்லை.

இங்கே வட கிழக்கு மாநிலங்களில் இருந்து கிட்டத்தட்ட இதே காரணங்களுக்காக உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ள உழைக்கும் மக்களின் நிலைமைகளை இங்கே ஒப்பிடலாம். தண்டகாரண்யா காடுகளில் இருந்து விரட்டப்பட்ட பழங்குடி மக்கள் இந்தியாவெங்கும் சிதறுண்டு கிடக்கின்றனர். கட்டிடத் தொழிலாளிகளாகவும், மேம்பாலம் கட்டுபவர்களாகவும் மற்றும் அதற்கான மனித பலிகளாகவும் இருக்கின்றனர்.

meditranian (2)அதே வேளையில் இங்கே இன வெறியர்கள் அவர்களது வருகையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் குடும்ப அட்டையை வழங்க கூடாது என்றும் நாவில் ஈரம் இல்லாமல் பேசுகின்றனர்.

அகதிகளாக புலம் பெயர்ந்து செல்லும் மக்களில் ஈராக் மற்றும் சிரியாவை சேர்ந்த மக்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். ஏகாதிபத்தியங்களின் சுரண்டல்கள் மற்றும் பிற்போக்குத்தனத்தோடு உள்ள கூட்டணியாலும் அதன் எதிர்வினைகளான இசுலாமிய தீவிரவாத அமைப்புகளாலும் தமது வாழ்விடங்களை தொலைத்த இசுலாமிய மக்கள் ஒருபுறம் ஐ.எஸ் போன்ற இசுலாமிய அடிப்படைவாத அமைப்புகளிடம் சிக்கிக் கொள்கின்றனர். மறுபுறம் வாழ்வதற்கு நாதியற்று அகதிகளாக தூர தேசங்களுக்கு புலம் பெயர்கின்றனர்.

மத்தியத் தரைக்கடல் அகதிகளுக்கு ஒரு கொடூரமான பகுதியாக மாறி உள்ளது. ஏகாதிபத்தியங்களின் விளையாட்டரங்கான அவர்களது தாய் நாட்டில் இனி இடமில்லை. தொலைதூரத்தில் உயிர் பிழைக்க ஓடும் தேசங்களிலும் அவர்களுக்கு இடமில்லை. இடையில் இறந்துபட்டு போகும் இந்த அகதிகளுடைய உடல்கள் ஆழிப்பெருங்கடலின் ஆழத்தில் புதைக்கபடுகின்றன. எனில் சாவதற்கான இந்த போராட்டம், வாழ்வதற்காக என்று மாறும் போது தான் இவர்களும் இவர்களது நாடுகளும் மீண்டெழும்!

– பாலு

மேலும் படிக்க:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க