Thursday, November 26, 2020
முகப்பு உலகம் அமெரிக்கா சிங்கமுத்துவுக்கு அ.தி.மு.க - ஜெயமோகனுக்கு அமெரிக்கா

சிங்கமுத்துவுக்கு அ.தி.மு.க – ஜெயமோகனுக்கு அமெரிக்கா

-

உலக நாடுகள் அனைத்தும் இராணுவத்திற்காக செலவிடும் மொத்த தொகையில் பாதிக்கு மேல் தனது பங்காக செலவிடும் அளவுக்கு தன்னை அமெரிக்கா வளர்த்துக் கொண்டது எப்படி?”

“ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் விற்பனை பொருளாக்கப்பட்டதும், அவர்களது கட்டாய உழைப்பும், அவர்களது துயரமும்தான் அமெரிக்காவின் வல்லாண்மைக்கும் வளத்துக்கும் காரணம். இந்த உண்மையை கேட்பது பலருக்கு மகிழ்ச்சியை அளிக்காது என்றாலும் அதுதான் உண்மை.”

கார்னல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராபர்ட் பர்ஷோச்சினி அமெரிக்க வல்லரசின் இராணுவ வல்லாதிக்கத்தை அம்பலப்படுத்தும் தனது பதிவை மேற்கண்ட கேள்வி பதிலுடன் தொடங்குகிறார்.

secret-of-us-global-power

அமெரிக்காவின் மொத்த இராணுவ செலவீனத்தை ($61,000 கோடி) இரண்டாக பிரித்தாலும் கூட, அதில் ஒரு பகுதி மட்டுமே (அதாவது $30,500 கோடி), உலக நாடுகளில் சீனா ($21,600 கோடி) மற்றும் ரசியா ($8,400 கோடி) அல்லது சவுதி அரேபியாவின் ($8,100 கோடி) ஒட்டு மொத்த இராணுவ செலவீன தொகைக்கு ஈடாகிறது. இதில் சவுதி அரேபியாவின் இராணுவச் செலவுகள் அமெரிக்க ஆதிக்கத்தின் நீட்சிதான் என்பதையும் கவனிக்க வேண்டும்.

இதைத்தாண்டி ஐரோப்பிய வல்லாதிக்கங்களான ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி தத்தமது இராணுவ ஆதிக்கத்துக்கு முறையே $4,600 கோடி, $6,000 கோடி, $6,200 கோடி, $3,100 கோடி செலவிடுகின்றன.

வடகொரியாவின் இராணுவ சர்வாதிகாரம் என்று ஊளைச்சவுண்டு விடும் ஊடக பயங்கரவாதிகளுக்கு மத்தியில் அதன் இராணுவ செலவீனம் உலகவரைபடத்தில் தேடிக்கண்டுபிடிக்க இயலாத வண்ணம் திருஷ்டி பொட்டு அளவில் இருக்கிறது. அதற்கு எதிராக நிறுத்தப்படும் ‘ஜனநாயக’ தென்கொரியா தனது இராணுவத்திற்காக ஆண்டுக்கு $3,600 கோடி செலவிடுகிறது.

ஜெயமோகன்
அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு அடை கொடுக்கும் இலக்கியவாதி.

ஈரானின் இராணுவ செலவீனமோ உலக வரைபடத்தில் குறிப்பிட இயலாத அளவிற்கு மிக மிகச் சிறியதாக உள்ளது. அதாவது 2009 கணக்கின் படி $1,000 கோடி. ஆனால் இவர்கள் தான் ஆயுதங்களை குவித்து உலகை மிரட்டுவதாக $61,000 கோடி செலவு செய்யும் அமெரிக்கா சீன் போட்டது.

போகிற போக்கில் இன்னொரு குண்டையும் போட்டுத்தாக்குகிறார் ராபர்ட் பர்ஷோச்சினி. அதாவது அமெரிக்கா லாவோசில் போட்ட வெடிக்காத குண்டுகளை அகற்றுவதற்கு $1,600 கோடி தேவைப்படுகின்றது. இந்தக் குண்டுகளை அப்புறப்படுத்த முடியாததால் ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக, குழந்தைகள்  பலியாகியிருக்கின்றனர். ஆனால் அமெரிக்கா இன்னமும் லாவோசிற்கு $1,600 கோடி தொகையை வழங்க மறுக்கிறது.

அமெரிக்க வல்லரசின் ரகசியம் இது!

பின் குறிப்பு:

இதை வெண்முரசு வேந்தர் ஜெயமோகனிற்கு சமர்ப்பிக்கிறோம். ஒவ்வொரு நாட்டிலும் இம்சை அரசன் 24-ம் புலிகேசி போன்ற காமடி பீஸ் அரசர்களின் புகழ்பாடி உண்டி வளர்க்கும் கவிராயர்கள் இல்லாமல் இலக்கியம் இல்லை. அதுவே மோடி, ஹிட்லர், அமெரிக்கா என்றால் இலக்கிய ஆளுமைகள் சிலிர்த்து எழும்; அறம், இலட்சியவாதம், மரபு, வரலாறு என்று கண்டதை உமிழும். அதாவது வேதக் காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்பதையே இவர்கள் உள்ளொளி தத்துவமாக இழுத்து விடுவார்கள்.

அர்ஜுன் சம்பத் எனும் கைக்கூலியுடன் அமெரிக்காவில் மேடையேறியது குறித்து கொஞ்சம் வெட்கப்பட்டிருந்தார், ஜெயமோகன். அதற்கே அவரது அமெரிக்க என்.ஆர்.ஐ அம்பிகள் சிலிர்த்து எழுந்து அர்ஜுன் சம்பத் மற்றும் அவரை மேடையேற்றிய தமிழ் பெயரில் இருக்கும் இந்துமதவெறி சங்கத்துக்காக வாதாடினார்கள். உடனே தான் பட்டது வெட்கமே அன்றி, கோபமல்ல என்று மற்றுமொரு இழுப்பை விட்டிருந்தார் ஜெயமோகன். குசுக்கள் கூட சூறாவளி போல சித்தரித்துக் கொள்ளும் இக்காட்சிகளை இதுவரை வரலாறு கண்டதில்லை.

இப்படி பச்சையாக  பாசிசத்தை ஆரத்தழுவி வெண்முரசு என்று மச்சகந்தியை பராசரன் சீரழித்த கதையை எழுதிக்கொண்டிருக்கும் தருணத்திலும், தான் அமெரிக்க டூர் போனதை முன்னிட்டு ‘அமெரிக்க இலட்சியவாதம்’ எனும் அடையை இலக்கிய உலகிற்கு நல்கியிருந்தார்.

“அது என்ன சார் அமெரிக்க இலட்சிய வாதம்” என்று ஒரு வாசகர் அப்புராணியாய் கேட்கப் போக, கேட்பது ஒருவேளை இடதுசாரியாக இருக்குமோ என்ற ஐயத்தில் கம்யுனிஸ்டுகளை விளாசியிருந்தார். அதாவது ‘கம்யுனிஸ்டுகள் தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று சொல்லி பாட்டாளி வர்க்க சவுண்டு விடுகிறார்கள். இந்தக் கூச்சலுக்கு மத்தியில் உனக்கெல்லாம் அமெரிக்க இலட்சியவாதம் குறித்து எதாவது தெரியுமா’ என்ற தொனியில் விளக்கியிருந்தார். அமெரிக்காவை எதிர்க்கும் கம்யூனிச வகைமாதிரிகளுக்கு போலிக் கம்யூனிஸ்டுகளை ஆதாரமாய் குறிப்பிடுகிறார். அமெரிக்கா ஆராதிப்பதே இத்தகைய போலிக் கம்யூனிசத்தைத்தான். இந்த உண்மை இலக்கிய மேதைக்கு தெரியவில்லை.

ஜெயமோகனின் விளக்கத்திற்கு ராபர்ட் பர்ஷோச்சினி வரைபடத்தோடு பொழிப்புரை எழுதியிருக்கிறார் என்பதை மட்டும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம். அமெரிக்காவின் புகழ், வளர்ச்சி, தொழில் நுட்பம், சுத்தம், சுகாதாரம், கவர்ச்சி அனைத்திலும் கோடிக்கணக்கான ஏழைநாட்டு மக்களது ரத்தம் கலந்துள்ளது. சுந்தர ராமசாமி தனது இறுதி காலத்தில் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே மறைந்தார். ஜெய மோகன் போலவே அமெரிக்காவையும் கொண்டாடினார். சு.ரா வழியில் எழுத்தும் எண்ணமும் அமெரிக்காவில் செட்டிலாவதையே “அமெரிக்க இலட்சியவாதம்” என்கிறார் ஜெயமோகன். பரவாயில்லை, பாணபத்திர ஒணாண்டிகள் மகிழ்ச்சியடைவதையே சோகமுற்றிருப்பதாக காட்டுவதற்கு கற்றுக் கொண்டிருக்கிறார்கள். சிங்கமுத்துவுக்கு கிடைத்தது அ.தி.மு.க. ஜெயமோகனுக்கு கிடைத்தது அமெரிக்கா!

– இளங்கோ

செய்தி ஆதாரம் Visual Of Global Military Expenditures

 

 1. //வடகொரியாவின் இராணுவ சர்வாதிகாரம் என்று ஊளைச்சவுண்டு விடும் ஊடக பயங்கரவாதிகளுக்கு மத்தியில் அதன் இராணுவ செலவீனம் உலகவரைபடத்தில் தேடிக்கண்டுபிடிக்க இயலாத வண்ணம் திருஷ்டி பொட்டு அளவில் இருக்கிறது. அதற்கு எதிராக நிறுத்தப்படும் ‘ஜனநாயக’ தென்கொரியா தனது இராணுவத்திற்காக ஆண்டுக்கு $3,600 கோடி செலவிடுகிறது//

  அடேங்கப்பா ? அது சரி வட கொரியாவில் பஞ்சம் வந்து செத்தார்களா இல்லை தென்கொரியாவில் செத்தார்களா ? அங்கே என்ன வளம் இருக்கிறது ? பிச்சைகாரன் வட கொரியா, செலவு பண்ண காசு இல்லை . அதனால் அவனை நல்லவன் என்று கூறுவதா ?

  //ஈரானின் இராணுவ செலவீனமோ உலக வரைபடத்தில் குறிப்பிட இயலாத அளவிற்கு மிக மிகச் சிறியதாக உள்ளது. அதாவது 2009 கணக்கின் படி $1,000 கோடி//

  ஒரு குடும்பஸ்தர் பாதுகாப்பிற்காக துப்பாக்கி வாங்க ஐம்பதாயிரம் செலவு செய்கிறார் .
  இன்னொருவர் ரவுடி , ஐம்பது ரூபாயில் கத்தி வாங்குகிறார் .

  இப்பொழுது ஆய்ததிர்காக குறைந்த செலவு செய்த ரவுடியை , ரொம்ப நல்லவர் என்று கூறுவது அபத்தம்!

  • றாமன், அமெரிகாவுகக்கு முதுகு சொர்ரிவதன்நோக்கம் தான் என்ன? அடிமைப் குனம் எப்போதான் போகுமோ? கட்டுரைக்கு எதிர்கருத்தை தெலிவாக ஆதாரதுடன் முன்வைக்கவும்.

  • ஈரானை ரவுடி என்று கூறும் ராமன் ,இதே ரவடி 1951 Mohammad Mosaddegh தலைமயில் ஓரளவுக்கு சமய முற்போக்கு ,சமத்துவம் சிந்தனை கொண்ட,சுயசார்புள்ள அரசை நிருவ முயன்று ,அதில் ஓர் அளவு வெற்றி பெற்று ,அடுத்த அடி எடுத்து வைக்கும் போது ,அதன் கழுத்தை நெறித்து ஒரு அல்லக்கை அரசை ,நிருவி ,அந்த நாட்டை மறுபடியும் சுரண்ட ஆரம்பித்தது உங்க கோடு சூட்டு போட்ட உங்க குடும்பஸ்தர். Mosaddegh அரசு வெற்றிகரமான இயங்கி இருக்குமனால் ,அது ஒரு பெஞ்ச்மர்ககி மத்திய கிழக்கு அரசியல் அமைப்பு முறைகளிலும் ,மக்கள் சிந்தனை வட்டத்திலும் ,ஒரு மிக முக்கிய தாக்கத்தை ஏற்படத்தி இருக்கும் .

   இதை போன்ற தொடகங்க்களை கிள்ளி எறிதந்தன் விளைவு ,மேலும் எண்பதுகளில் சோவியத் எதிர்ப்பு என்று இஸ்லாமை அடிபடைவாதத்தை கிளப்பி விட ,அது பத்மாசுரன் கதையாய் போய் ,அமெரிக்க ஏகதிபதயத்தை வீழ்த்த மத அடிபடைவாதத்தை நாடுவதே வழி என்ற நிலையை எடுக்க தூண்டுகிறது .
   அதனால் தமிழகம் போன்ற இடங்களில் , மத துவசே சிந்தனை இன்றி வளர்க்கப்பட்ட ,பன்முக சிந்தனை உள்ள இஸ்லாம்யியர் கூட ,வாஹ்ஹபிசிம் போன்ற தீவிர சித்தாதங்ககளை நோக்கி செல்லும் நிலை ஏற்படுகின்றது

 2. ஜெயமோகன விட்ருங்க தோழர்!. ரப்பர் பாராட்டு விழாலயே, இங்க யாருக்குமே இன்னும் நாவல் எழுத தெரியலன்னு ஒரு குசுவ போட்டவருல்லா! அறம், இந்து ஞானம், தியானம்னு ஜல்லியடிச்சிட்டு, இப்ப சினிமா வசனம்னு இளக்கியவாதிகளுக்கான கதிமோட்சம் அடஞ்சவருல்லா அவரு. நான் அவருக்கு ஆங்கிலத்துல நாலு வரி மின்னஞ்சல் அனுப்பினேன். இந்த மாதிரி விஷ்ணுபுரம் படிச்சேன், அபாரம் அற்புதம், இங்க நெதர்லாந்துல இருக்கேன், சென்னை வந்தா உங்கள சந்திக்க விருப்பம்னு. உடனே பதிலும் போட்டு, அலைபேசி எண்ணும் அதுல குறிப்பிட்டிருந்தாரு. அந்த கடிதத்தையும் அவரு தளத்துல பிரசுரிச்சாரு (அவருடைய பதில் இல்லாமல்) எனக்கே வெக்கமாயிருச்சு, சீ என்னடா ஒரு நல்ல மனுசன இப்படி ஏமாத்துறோமேன்னு. அப்பறம் வேற ஒரு பேர்ல, அவருடைய முரண்பாடுகளை விமர்சிச்சு தமிழ்ல பெரிசா ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். இன்னி வரைக்கும் பதிலும் இல்ல, தளத்துல பிரசுரிக்கவும் இல்ல. இந்த பாபநாசம் சொயம்புலிங்கம் யாரூங்கீங்க? அது அச்சு அசலு, நம்ம செயமோகன் அண்ணாச்சில்லா. அதுல கடசீல அவரு ஒரு வசம் சொல்லுவாரு பாத்துக்கிடுங்க, “எனக்கு என் போண்டா-டீ பிள்ளைகளோட சௌக்கியமா இருக்கணும், அதுக்கு என்ன செய்யணுமோ அத செய்யுதேன்.என்ன மன்னிச்சு விட்ருங்க”. அதுனால அவர விட்ருங்க அண்ணாச்சி. நல்ல மனுசன், செட்டிலாயிட்டாரு!

 3. //“ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் விற்பனை பொருளாக்கப்பட்டதும், அவர்களது கட்டாய உழைப்பும், அவர்களது துயரமும்தான் அமெரிக்காவின் வல்லாண்மைக்கும் வளத்துக்கும் காரணம்.///

  அப்பத்தமான வாதம். கருப்பின அடிமை முறை 1865இலேயே ஒழிக்கபட்டுவிட்டது. அதன் பிறகு சுமார்
  90 ஆண்டுகள் கழித்து, இரண்டாம் உலகப் போர் 1945இல் முடிந்த பின், பனிப்போர் துவங்கிய பிறகு தான் அமெரிக்க வலாதிக்கம் என்ற கருத்தியலே உருவானது. அதுவரை அமெரிக்கா தனி காட்டு ராஜாவாக, உலக அரசியலில் ஈடுபடமால் ஒதுங்கியிருந்தது. கட்டாய உழைப்பு என்று அடிமை முறை ஒழிக்கபட்ட பின் எதுவும் இல்லை. அமெரிக்க வளத்திற்க்கு காரணம் சரியான பொருளாதார கொள்கைகளை, ஜனனாயக முறையில் செயல்படுத்திய விவேகம் தான். 18ஆம் நூற்றாண்டில் அய்ரோப்பாவில் நிலவிய நிலப்பிரத்துவ அடக்குமுறைகளில் இருந்து தப்பிக்க லச்சக்கணக்கான அய்ரொப்பியர்கள் அமெரிக்காவிற்க்கு புலம் பெயர்ந்து, கடும் உழைப்பின் மூலம் வளம் பெற்றனர். இதை பற்றி Free to Choose என்னும் புகழ் பெற்ற நூலில் : ”..the streets of New York were not paved with gold, but with hard work, thrift and enterprise that were not even imaginable in the old world (Europe)..”

  அமெரிக்க அறம், மதிப்பீடுகள் என்பன இவை தான் : hard work, thrift, enterprise, liberty, freedom. In 1970 Robin Williams identified core American Values.
  ஆனால் பனிப்போர் காலங்களில் ரஸ்ஸிய மற்றும் சீனா ஏகாதிப்பத்தியத்தை எதிர்க்க வேண்டி, ராணுவ பலத்தை பல மடங்கு பெருக்க வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா தள்ளபட்டது. அதன் விளைவாக உருவான military industrial complex இன்றும் நிலையாக இருப்பதால் முரண்பாடுகள்
  உள்ளன. ஆனால் உண்மையாம அமெரிக்க அறம் என்பது இதுவல்ல. மேலே உள்ள பட்டியல் தான்.

  வட கொரியா 1953 முதல் சோசியலிச பாதையில் செல்ல முயன்று, படிப்படியாக சீரழிந்து, பஞ்சத்தில், பட்டினியில்______ மக்களை பலி கோடுத்து, சர்வாதிகார ஆட்சியில் சிக்கி சீரழந்து வருகிறது. பணம் மற்றும் உணவு கேட்டு அதன் அரசு ராணுவ பலத்தை கொண்டு மிரட்டி வருவதால், தென் கொரியா, வேறு வழியின்றி பெரும் ராணுவ செலவு செய்ய வேண்டிய கட்டாயம்.
  ஆனால் 1953 முதல் சந்தை பொருளியல் பாதையில் (அதன் ஒரு வடிவத்தில்) சென்ற தென் கொரியா இன்று வளமான லிபரல் ஜனனாயக நாடாக முன்னேறிய நாடாக திகழ்கிறது. இரண்டு நாடுகளும் ஒரே இன மக்களை கொண்டிருந்தும் ஏன் இந்த பெரும் வித்தியாசம் என்பதை நேர்மையாக, தரவுகளுடன் அடிப்படியில் அலச துப்பில்லாமல், வெத்து வார்தைகளை வீசிவது தானே வினவு பாணி ?

  சரி, இன்றைய வெனிசுலா திவாலாகி, மக்கள் அங்கு செத்து கொண்டிருக்கிறார்கள். சாவேஸ் செய்த முட்டாள்தனமான ‘சோசியலிச’ பாணி கொள்கைகளின் நிகர விளைவு இது. அதை பற்றி முழங்குகளேன். ஆனால் அதெல்லாம் அமெரிக்க சதி, etc etc என்று தான் மேலோட்டமாக எழுதுவீர்கள் என்று தெரியுமே. You people can never learn from history and will never ever learn.

 4. //அப்பத்தமான வாதம். கருப்பின அடிமை முறை 1865இலேயே ஒழிக்கபட்டுவிட்டது.//

  முதல் பொய். வினவு தளத்தை எந்த கறுப்பின மக்களும் படிக்கப்போறதில்லை!அந்த ஒரே தைரியத்துலதான் இந்தமாதிரி ஒரு பச்சைப்பொய்யை சொல்லுறீங்களோ.

  //பனிப்போர் காலங்களில் ரஸ்ஸிய மற்றும் சீனா ஏகாதிப்பத்தியத்தை எதிர்க்க வேண்டி, ராணுவ பலத்தை பல மடங்கு பெருக்க வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா தள்ளபட்டது//

  இரண்டாவது பொய். பனிப்போரை தொடங்குனதே அமெரிக்காதான். என்றைக்குன்னு தெரியுமோ? ஆகஸ்ட் 6, 1945. முதல் அணுகுண்டை ஹிரோஷிமாவுல போட்டு.

  // You people can never learn from history and will never ever learn.//

  கடைசியா இந்த மாதிரி ஒரு philosophical statement!

  அதியமான் அய்யா -இந்த வினவு தள விவாதங்களைப் படிக்கிறவங்க எல்லோரையும் தற்குறின்னு நினைக்கிறீங்களோ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க