privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்டாஸ்மாக் போராட்டம் - திவாலாகிப் போன போலீஸ், நீதித்துறை

டாஸ்மாக் போராட்டம் – திவாலாகிப் போன போலீஸ், நீதித்துறை

-

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் கைதான பச்சையப்பா கல்லூரி மாணவ தோழர்கள், கோவை, கடலூர், விருத்தாச்சலம், ஓசூர் என பல பகுதிகளில் கைதான மக்களுக்கும் தோழர்களுக்கு பெயில் எடுப்பதற்கான தொடர் முயற்சிகளில் நமது வழக்குரைஞர்கள் தோழர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்தப் போராட்டத்தில்… சில நிகழ்வுகள்!

விருத்தாசலம்

விருத்தாசலம் நீதிமன்றம்
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் வழக்கறிஞர் ராஜூ மற்றும் பிற தோழர்கள்

மேலப்பாலையூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை மூடிய போராட்டத்தில் கருவேப்பிலங்குறிச்சி போலீசாரால் போடப்பட்ட பொய் வழக்கில் வழக்கறிஞர் ராஜு உட்பட பொதுமக்கள் 12 பேர் மொத்தம் 13 போராளிகளை 21-8-2015 அன்று விருத்தாசலம் குற்றவியல் நடுவர் எண் II நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த போது காவல்துறை கைவிலங்கு போட முயற்சித்த போது வழக்கறிஞர் ராஜு மற்றும் பொதுமக்கள் மறுத்துள்ளனர்.

காவல்துறை அதிகாரிகள் “கைவிலங்கு போட்டுதான் அழைத்துச் செல்வோம்” என்று சொன்னபோது, வழக்கறிஞர் ராஜு, “நீங்கள் எங்களுக்கு கைவிலங்கு போட்டால் நீதிமன்றத்தில் புகார் செய்வோம்” என்று கூறியுள்ளார்.

விருத்தாசலம் நீதிமன்றம்
வழக்கறிஞர் ராஜூ

அதற்கு CL 632 என்ற போலீஸ் “உங்களை நாங்கள் நேராக நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றால்தானே புகார் செய்வீர்கள். கடலூர் O.T. காவல்நிலையத்தில் நீங்கள் தப்பிக்க முயற்சி செய்தீர்கள் என்று F.I.R. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துதான் அழைத்துச் செல்வோம்” என்று மிரட்டியுள்ளார்.

பிறகு காவல்துறை வாகனத்தில் வரும்போது, “இரண்டுபேர் சேர்ந்து ஒரு விலங்கு போட்டுக் கொள்கிறீர்களா? அல்லது தனித்தனி விலங்கு போட்டுக்கொள்கிறீர்களா?” என்று கேட்டுள்ளனர். அதற்கும் நம்முடைய தோழர்கள் மறுத்துள்ளனர்.

விருத்தாசலம் நீதிமன்றம்
மக்கள் அதிகார அமைப்பின் தோழர்களும், டாஸ்மாக்கை மூடும் போராட்டத்தை ஆதரிக்கும் பொதுமக்களும் காவல்துறைக்கு எதிராக கோஷம்

அதற்கு ஒரு போலீஸ், “நீங்கள் கைவிலங்கு போட மறுத்தால் அனைவரையும் விருத்தாசலம் பாலக்கரையில் இறக்கி கைவிலங்கு போட்டு நடத்தியே அழைத்துச்செல்வோம்” என்று மிரட்டியுள்ளனர். அவர்கள் மிரட்டலுக்கு அஞ்சாமல் வழக்கறிஞர் ராஜு மற்றும் பிற தோழர்கள் கைவிலங்கு போட மறுத்து விட்டனர்.

பின்னர் விருத்தாசலம் நீதிமன்றத்தில் அழைத்து வந்த போது நீதிமன்றம் முன் மக்கள் அதிகார அமைப்பின் தோழர்களும், டாஸ்மாக்கை மூடும் போராட்டத்தை ஆதரிக்கும் பொதுமக்களும் காவல்துறைக்கு எதிராக கோஷம் போட்டனர்.

விருத்தாசலம் நீதிமன்றம்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது மூத்த வழக்கறிஞர் வே.அம்பேத்கார் தலைமையில் வழக்கறிஞர் R.புஷ்பதேவன் மற்றும் டாஸ்மாக்கை மூடும் போராட்டத்தை ஆதரிக்கும் வழக்கறிஞர்கள் 10-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி நீதிமன்ற காவல் அடைப்பு உத்தரவிடகூடாது என்று மனு கொடுத்தார்கள். மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கறிஞர் ராஜுவிடமும், மற்ற பொதுமக்களிடமும் தனித்தனியாக, “உங்களுக்கு கைவிலங்கு போடச் சொல்லி மிரட்டினார்களா” எனக் கேட்டு தெரிந்துகொண்டார்.

விருத்தாசலம் நீதிமன்றம்அதன் பிறகு விருத்தாசலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுக்கூடலூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை அடித்து உடைத்து மூடிய பொய் வழக்கில் மக்கள் அதிகாரம்-தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு அவர்களை 27-8-2015 அன்று விருத்தாசலம் குற்றவியல் நடுவர் I நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த போது கைவிலங்கு போட முயற்சி செய்துள்ளனர். அதற்கு வழக்கறிஞர் ராஜு கைவிலங்கு போட மறுத்திருக்கிறார்.

விருத்தாசலம் நீதிமன்றம்அதற்கு எஸ்கார்டு இன்சார்ஜ் த.பழனிச்செல்வன், எஸ்.ஐ அவமரியாதையாக அநாகரிகமான முறையில் பேசியுள்ளார். நீதிமன்றத்திற்கு வந்த வழக்கறிஞர் ராஜு, அங்கிருந்த வழக்கறிஞர்களிடம் சம்பவத்தை விளக்கினார். சம்பந்தப்பட்ட எஸ்கார்ட் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிபதியிடம் பெட்டிசன் மனு ஒன்றை எழுதிக்கொண்டிருந்தார்.

இதை அறிந்த காவல்துறை ஏட்டு ”சார், இதெல்லாம் வேண்டாம், அவர் செய்தது தப்புதான். அவரே அதை ஒப்புக்கொள்கிறார். உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்கிறார். கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க” என்று அவர் எழுதும்போது பவ்யமாக கேட்கிறார்.

விருத்தாசலம் நீதிமன்றம்
உளவுத் துறை போலீசு கண்காணிப்பு

அதற்கு வழக்கறிஞர் ராஜு, “சார் இது மூன்றாவது முறை. போனமுறையும் இப்படித்தான் உடன் இருந்தவர் சொன்னார். அதனால் சரி என்று விட்டோம். ஆனால் இது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கூட வந்த கான்ஸ்டபிளை கேட்டுப் பாருங்க. என்ன திமிராக பேசினார் என்று” என்று பதிலளித்தார்.

இதையெல்லாம் கேட்டுவிட்டு, “தப்புதான் சார். அவருக்கு நீங்க யார் என்று தெரியாது, அங்கிருந்து அனுப்பரவங்க உங்கள பத்தி சொல்லி அனுப்பணும். இங்க என்றால் எங்களுக்கெல்லாம் உங்களை பற்றி நன்றாகத் தெரியும். இந்த ஒருமுறை மன்னித்து விடுங்க சார்” என்றார்.

அருகில் இருந்த வழக்கறிஞர்கள் ”அண்ணா நீங்க எழுதுங்க” என்று கூறினர்.

மற்றொரு வழக்கறிஞர், “வாங்க ஏட்டய்யா, டீ சாப்பிட்டு வரலாம். அவரு எழுதட்டும்” என்றார்.

விருத்தாசலம் நீதிமன்றம்ஆனால் ஏட்டய்யா நகராமல் வழக்கறிஞர் ராஜு விடம் ”சார் இந்த ஒருமுறை விட்டுடுங்க என்றார்”.

வழக்கறிஞர் ராஜு, “நீங்க யார் சார், முதலில் நான் எழுதறேன். நீதிபதியிடம் கொடுக்கலாமா? வேண்டாமா? என்று பிறகு முடிவு செய்யலாம்” என்றார்.

அந்த பெட்டிசனில் ” நான் வழக்கறிஞர். நான் ஒரு அரசியல் கைதி. எனவே மேற்படி வழக்கில் கைதாகியுள்ள யாருக்கும் கைவிலங்கு போடக்கூடாது என உத்தரவிட வேண்டும்” எனவும்,  “எஸ்கார்ட் பழனிச்சாமி, S.I. ஆகியோர் முறைகேடாக நடந்து கொண்டு என்னை மிரட்டினார்கள்” என்றும், “என்னை ஒருமையில் பேசினார்கள் என்றும், அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அந்த பெட்டிசனை வழக்கறிஞர் நீதிபதியிடம் சேர்த்தார்.

இதற்கிடையில் வழக்கறிஞர் ராஜுவை சிறைக்கு அழைத்துச்செல்ல மேற்சொன்ன அதிகாரிகளுடன், டி.எஸ்.பி.யும் வந்து இருந்தார்.

அவர் “All fingers art not equal. ஏதோ ஒரு கேசை பார்த்துட்டு யார் என்னன்னு தெரியாம ஒரே மாதிரி நடத்துக்கறாங்க. They are immatured” என்றார்.

virudai-court-people-power-10அதற்கு வழக்கறிஞர் ராஜு, “என்ன சார் பேசறீங்க. 75 வயது நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர் டாஸ்மாக்கை மூடு என்று சொல்லி கைதாகியிருக்கிறார். அவரிடம் போய் உன்னை கைவிலங்கு போடு, இல்லையென்றால் தப்பிக்க முயன்றதாக பொய்கேசு போட்டுதான் எல்லாரையும் கூட்டிட்டுப்போவேன் என்று திமிராகப் பேசறாங்க. நான் கேட்கறேன், பேசும்போது யார்கிட்ட பேசறோம், எங்க பேசறோம் என்று உணர்வு இல்லாமல்…. மூளையை கழட்டி வைச்சுருவாங்களா” என்றார் கோபமாக.

டி.எஸ்.பி. பதில் சொல்ல முடியாமல் அமைதி ஆனார்.

மேலும் வழக்கறிஞர் ராஜு, “இதையெல்லாம் பார்க்கும்பாது இவை எதுவுமே மாவட்ட அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை” என்றார்.

உடனே டி.எஸ்.பி. “பார்த்தீங்களா? பழியை எங்களிடமே போடுறீங்க” என்றார்.

அதற்கு ராஜு, “ஆமாம் சார். அப்படித்தான் சந்தேகப்படறேன்” என்றார்.

அதன்பிறகு அவசர அவசரமாக ராஜுவை போகலாம் என்று டி.எஸ்.பி. காவல்துறை வேனில் அழைத்துச்சென்றார்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே திரும்பவும் டி.எஸ்.பி.-யுடன் ஒரு ஜீப்பில் ராஜு நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார். என்னவென்று கேட்டபோது, நீதிபதியிடம் மறுதேதி  வாங்காமலேயே அவசரமாக போய்விட்டதாக சொல்லி நீதிபதி வரசொல்லியிருக்கிறார் என்று தெரிந்தது. நீதிபதி வழக்கறிஞர் ராஜுவை நேரில் அழைத்து மறுதேதி குறிப்பிட்டு பிறகு அனுப்பி வைத்தார்.

மூடு டாஸ்மாக்கை என்று போராடிய மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுமக்களை கைவிலங்கு போட அச்சுறுத்தி பார்த்தது அதிகார வர்க்கம். அதற்கு அஞ்சாமல் மறுத்தனர் நம் தோழர்கள். உண்மையிலேயே கைவிலங்கு போட வேண்டிய குற்றவாளிகள் ”சாராயம் விற்கும் ஜெயா அரசும்-போலீசும்தான்” என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பத்திரிகை செய்தி

virudai-court-people-power-09

செய்தி

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
கடலூர் மாவட்டம்

சென்னை

ச்சையப்பா கல்லூரி மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாணவ தோழர்களை கைதாகும் பொழுது போலீசு கடுமையாக தாக்கியதை உலகமே பார்த்து காறித்துப்பியது. சட்டவிரோதமாக காவல்நிலையத்திலும் மணல் நிரப்பிய பைப்பால் அடித்தது! அன்று இரவு மாணவர்களை ரிமாண்ட் செய்வதற்காக போலீசு நீதிபதி வீட்டிற்கு அழைத்துவந்தது!

டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்
பச்சையப்பன் கல்லூரி, பு.மா.இ.மு மாணவர்கள் போராட்டம் (கோப்புப் படம்)

ஊர் அடங்கியதும் இரவு 9.30 மணிக்கு நீதிபதியின் வீட்டுக்கு அழைத்து வந்தனர். “ஏழு ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை வழங்கும் வழக்கில் உரிய காரணங்கள் இல்லாமல் ரிமாண்ட் செய்யக்கூடாது” என உச்சநீதி மன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி வாதாடினோம். நீதிபதி அதை காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. நீதிபதியிடம் கையெழுத்து வாங்கி, மாணவர்களை சிறையில் அடைப்பதிலேயே காவல்துறை கண்ணும் கருத்துமாய் இருந்தது.

கைது செய்த பொழுதும், காவல்நிலையத்திலும் காட்டுமிராண்டித்தனமாக அடித்ததை எடுத்து சொல்லியும் நீதிபதிக்கு பதைபதைப்பு வரவில்லை. இவ்வளவு மோசமாக தாக்கியிருக்கிறீர்களே என போலீசை நீதிபதி கண்டிக்கவுமில்லை.

நின்றுகொண்டே பேசிக்கொண்டிருந்த நீதிபதியை, காவல்நிலையத்தில் மாணவர்களை அடித்ததை ஒவ்வொருவராக சொல்வதை உட்கார்ந்து விரிவாக பதிவு செய்யவேண்டும் என கோரினோம். “நானும் மனுசன் தானே!” என சொல்லி, சீக்கிரம் முடிச்சுட்டு தூங்க போகணும் என ஒரு இயந்திரத்தை போல போலீசு கேட்ட கையெழுத்தை போட்டுவிட்டு கிளம்புவதிலேயே இருந்தார். காவல்நிலையத்தில் போலீசு அடிப்பதையெல்லாம் இவ்வளவு பெரிதுபடுத்துகிறோம் என அசுவாரசியமாய் கேட்டு பதிவு செய்தார்.

அடித்ததை பதிவு செய்யும் பொழுது மாணவர்களை நீதிபதி “வா! போ!” என ஒருமையில் அழைத்தார். “பொது நோக்கத்திற்காக போராடிய அந்த மாணவர்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. போலீசை போல ஏன் நடந்துகொள்கிறீர்கள்? மரியாதையாக அழையுங்கள்” என பல வழக்குரைஞர்களும் போராடிய பிறகுதான், ஏற்கனவே கேட்ட மருத்துவ சிகிச்சை மற்றும் உணவிற்கு அனுப்பிவைத்தார். எல்லா மாணவர்களுக்கும் வெளிக்காயங்களுக்கு மட்டும் பெயருக்கு டிஞ்சர் போட்டு, உள்நோயாளியாக அனுமதித்து விடக்கூடாது என மருத்துவர்களை டீல் செய்து, திரும்ப அழைத்துவந்தார்கள்.

நீதிபதியின் நடவடிக்கையை கவனித்த பொழுது, சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் மக்களை அடிக்கும் ஒவ்வொரு போலீசுக்கும் ஐ.ஜி நம்மள காப்பாத்துவார் என்பதை விட, “ஜட்ஜய்யா! நம்மள காப்பாத்துவார்” என்ற நம்பிக்கை எல்லா போலீசுக்கும் இருக்கும் என அப்பட்டமாக தெரிந்தது!

கொசுறு செய்தி : இரவு 9.30 மணி அளவில் நீதிபதி வீட்டிற்கு மாணவ தோழர்களை அழைத்து வந்த பொழுது, அரசை, போலீசை அம்பலப்படுத்தி முழக்கம் எழுப்பினார்கள். இதனால் பக்கத்து வீட்டில் தூக்கம் கலைந்த இன்னொரு நீதிபதி வந்து மாணவர்களையும், நம்மையும் பார்த்து “தூக்கம் கலைக்கிறீர்களே!” என விசனப்பட்டார்.

டாஸ்மாக் போராட்டம் அன்றைக்கு தமிழகம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருந்த பொழுது, தூக்கம் கலைத்ததற்காக கவலைப்படுகிறார்! நாம் பலரின் ’தூக்கத்தை’ கலைக்க வேண்டியிருக்கிறது!

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க