Tuesday, April 20, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க "அம்மா" சட்டமன்றம்

“அம்மா” சட்டமன்றம்

-

சட்டமன்ற நடவடிக்கைகள் உணர்த்தும் உண்மைகள்!

ங்காவது பெஞ்சு தட்டும் சத்தம் கேட்டால், சட்டப்பேரவை தொடங்கிவிட்டது என்று பிறந்த குழந்தையும் நினைக்கும் அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது. ஒண்ணு பெஞ்சை தட்டு, இல்லை ‘அம்மா’ ஆட்சியை எதிர்த்துப் பேசும் ஆளை தட்டு எனுமளவுக்கு முதல் ரவுண்டிலேயே கூச்சல் கிளம்பிள்ளது.

அம்மா சபை
அம்மாவின் ஜனநாயக பாரம் தாங்காமல் சரிந்து கிடக்கும் சபாநாயகர் ‘கூன் பாண்டியன்’

“அது என்ன கெட்ட வார்த்தைன்னே தெரியல!” என்று சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி வெளியே வந்து விளக்கம் கேட்குமளவுக்கு, அம்மாவின் உண்மை விசுவாசிகள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது அங்கேயே ‘முழு உடல் பரிசோதனை’ திட்டத்தை அமல்படுத்தி உள்ளனர்.

அபஸ்வரங்களுக்கு இடையே ‘அம்மாவுக்கே’ சிரிப்பு வரும்படி அவ்வப்போது சரத்குமார், தனியரசு, செ.கு.தமிழரசன் மற்றும் வெளிப்படையாகவே “இந்த சந்தைக் கடையில் நாங்கள் எந்த பிராண்ட்?” என்று கேட்ட தே.மு.தி.க அதிருப்தி எம.எல்.ஏவான அருண்பாண்டியன் போன்றோரின் மானாட மயிலாட கூத்து நடந்துள்ளது. இனி வரும் காலங்களில் ‘புரட்சித்தலைவர்’ ‘புரட்சித்தலைவியின்” படங்களிலிருந்து சூப்பர் சிங்கர் போட்டி தொடரலாம்.

‘சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சனைகளை பேசவும், விவாதிக்கவும், தீர்வு காணவும் ஜனநாயகம் புழங்கும் இடம்’ என்றும், ‘மக்கள் தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புவதன் மூலம் இது மக்களும் பங்குபெறும் மக்களாட்சி’ எனவும் சொல்லப்பட்ட நீதி நெறிமுறைகள் அந்த மன்றத்திலேயே புதைக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே இங்கே அவர்கள் எது பேசவும் வாய்ப்புமில்லை, உரிமையுமில்லை என மக்களைப் பார்த்து நியாயம் கேட்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் உரிமைகளையே காலில் போட்டு மிதிக்கும் இந்த அரசமைப்பு மக்களின் குரலை எந்த அளவுக்கு மதிக்கும் என்பதற்கு தனியே ஆராய்ச்சி தேவை இல்லை.

தி.மு.க. , காங்கிரசு, இடது, வலது கம்யூனிஸ்ட்டுகள், பா.ம.க., புதிய தமிழகம், ம.ம.க. என பல கட்சிகளும் தனிநபர் மசோதாவும் கவன ஈர்ப்பு தீர்மானங்களும் கொடுத்தாலும் பேரவை விதி முறைப்படியே விதி 55-ன் படி பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக மதுவிலக்கு பற்றி பேச ஜவாஹிருல்லா மனு கொடுத்தும் எல்லாம் துறைவாரியான மானியக் கோரிக்கையின் போது அம்மாவுக்கு திருஷ்டிப் பொட்டாக வைத்துக் கொள்ளலாம் என்கிறார் சபாநாயகர்.

அம்மாவின் ஜனநாயக பாரம் தாங்காமல் சரிந்து கிடக்கும் சபாநாயகர் ‘கூன் பாண்டியன்’ உறுப்பினர்களின் எல்லாக் குரலையும் ஒரே தள்ளாக தள்ளிவிடுகிறார். அம்மா உணவகம் போல இது அம்மா சட்டமன்றம். சும்மா இருப்பவர்க்குத்தான் இங்கு வேலை.  அம்மா சகஸ்ரநாமங்களையும், அவிழ்த்துவிடும் 110 விதியின் கீழான மந்திரங்களையும் கேட்டுக் கொண்டிருப்பவருக்குத்தான் இங்கு இடம். சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு இங்கு யாரும் அழுத்தம் கொடுத்தால் சட்டமன்ற நடவடிக்கை பிதுக்கி வெளியே தள்ளிவிடும். எதிர்க்கட்சிகள், மக்கள் பிரதிநிதிகளின் எந்தக் குரலையும் பெருந்தெய்வம் குளிர்காயும் குமுட்டி அடுப்பில் வைத்து இடிக்கும் இந்த சட்டமன்றத்தை மக்களுக்கான ஜனநாயகம் என்று எந்தக் கிறுக்கனாவது ஒத்துக்கொள்ள முடியுமா? காண்பதெல்லாம் பதினெட்டுப்பட்டி நாட்டாமையும் மரத்தடியும் சொம்பும்தான்!

அம்மா சட்டமன்றம்
அம்மா உணவகம் போல இது அம்மா சட்டமன்றம்

வெளிப்படையாக தமிழக ஊடகங்களில் ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியாகிய நிலையில், ஆற்றுமணல் கொள்ளை பற்றிய ஒரு உறுப்பினரின் கேள்விக்கு, “அப்படி ஒன்று தமிழகத்தில் கிடையவே கிடையாது, விதி மீறி எந்த இடத்திலும் மணல் அள்ளவே இல்லை!” என்று முதல் கிடாவை வெட்டி அம்மனுக்கு காணிக்கையாக்கியுள்ளார் ஓ.பி!

விருத்தாச்சலம் வெள்ளாறு, சேத்தியாதோப்பு பகுதி ஆறு, வேலூர் கானாத்தூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் தமிழகமெங்கும் மக்கள் ஆற்றுமணல் கொள்ளைக்கு எதிராக போராடும் போது போலீசை விட்டு மண்டையை உடைத்தவர்கள்! மக்களை மதிக்கும் மக்களாட்சியின் யோக்கியதை இதுதான்!

இன்னொரு உறுப்பினர் மின் பற்றாக்குறை பற்றி கேட்ட கேள்விக்கு, “சும்மா பொழுதை போக்க பேசக் கூடாது, சந்தேகமிருந்தால் சுவிட்சில் கையை வைத்து பாருங்கள்” என்று நத்தம் விஸ்வநாதன் அம்மாவின் கொலைவெறி ரசனைக்கு தீனி போடுவதுதான் சட்டமன்ற ஜனநாயகத்தின் மாண்பு!

இவர்தான் டாஸ்மாக்கை மூடச்சொன்னதற்கு “முதலில் இந்தியாவை நிறுத்தச் சொல்! குடிப்பவனை நிறுத்தச் சொல்! அவனை நிறுத்த சொல்! நான் நிறுத்துகிறேன்” என்று வசனம் பேசும் நாயகர்!

இவர்களே ஏற்றுக் கொண்ட ஜனநாயக நெறிப்படி கேள்விகளை எதிர்கொள்வதும் அதற்குரிய பதில் அளிப்பதும் கடமை. ஆனால் கேட்டவர்களை நக்கலடிப்பது, நாலந்தர வசனத்தால் வறுத்தெடுப்பது, நாற்காலியை விட்டே ஓட வைப்பது என்று சீரழிந்த இந்த பேய் பங்களாவில் உறுப்பினர்களுக்கே மதிப்பில்லாத போது மக்களுக்கு ஏது? இதைப்பற்றி சபாநாயகரிடம் முறையிடுவது பேயைப் பற்றி அதன் பாட்டியிடம் புகார் சொல்வது போல வேலைக்கு ஆவாதது.

யார் ஆட்சிக்கு வந்தாலும் அம்பானிக்கும், அதானிக்கும் அந்திய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், அரசியலில் கொள்ளையடிப்பதற்கும் மட்டுமே அதிகாரத்தை குவித்து வைத்திருக்கும் இது, மக்களைப் பொறுத்தவரை வெட்டி மன்றம் மட்டுமல்ல மக்கள் விரோத மன்றமும் ஆகும்.

சொந்த அனுபவத்தில் மக்கள் புரிந்து வைத்திருக்கும் இந்த உண்மையை இன்னும் உணராதவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களைப் பாருங்கள்! கூட்டத்தொடரின் ஒவ்வொரு நாளும் சட்டப் பேரவைக்கு வெளியே வந்து மைக்குக்கு நேரே “உள்ளே எதையும் பேச விடுவதில்லை, மக்கள் பிரச்சனைகளை பேச எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை!” என்று மக்களைப் பார்த்து அவர்கள் நியாயம் கேட்பதிலிருந்தே தெரியவில்லையா? உண்மையான மக்களின் அதிகாரம் இந்த அரசமைப்புக்கு வெளியே இருக்கிறது என்பது!.

– துரை.சண்முகம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க