privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்அசோக் லேலாண்டு என்பது நவீன நரகம்

அசோக் லேலாண்டு என்பது நவீன நரகம்

-

ஒசூர் அசோக் லேலாண்டின் முறைகேட்டை எதிர்த்த SMP தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

மோடி அரசு மத்தியில் தொழிலாளர் துறை சட்டங்களைத் திருத்தி தொழிலாளர்களை நவீனக் கொத்தடிமைகளாக மாற்றும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், கார்ப்பரேட் முதலாளிகளோ அந்த சட்ட திருத்தங்கள் அமுலுக்கு வரும் வரை காத்திருக்கவில்லை என்பதைத்தான் அசோக் லேலாண்டில் நடக்கும் மாற்றங்கள் அடக்குமுறைகள் நமக்கு உணர்த்துகின்றன.

அசோக் லேலாண்ட் - பு.ஜ.தொ.மு பிரச்சாரம்
தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பிரச்சாரம்

லேலாண்டின் நிர்வாகம் தொழிலாளர்களை சுரண்டுவதில் ஏற்கனவே பின்பற்றி வந்த நடைமுறை, மரபு, நிலையாணை விதிகள், தொழிற்சங்க முறைகள், விதிகள் எல்லாவற்றையும் தூக்கியெறிந்து விட்டது. பட்டவர்த்தனமான ஒடுக்குமுறையை தொழிலாளர்கள் மீது திணிக்கிறது. இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாளர்கள் அவ்வப்போது தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பிரச்சாரம் செய்து வருகிறது.

அது தொடர்பான பிரசுரத்தின் உள்ளடக்கம்

ஒசூர் அசோக் லேலாண்டின் முறைகேட்டை எதிர்த்த SMP தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

லேலாண்டின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

தொழிலாளர்களே, தோழர்களே!

அசோக் லேலாண்டு யூனிட் 2-ல் எஸ்.எம்.பி. லைனில் உள்ள தொழிலாளர்கள் ஐ.ஆர். அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்கு லைனில் கூடுதல் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர் என்று சொல்லி, வேறு இடங்களிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து போடுகிறது ஆலை நிர்வாகம். ஆனால், அங்கு நீண்ட நாட்களாக  “ஆப்சென்ட் கவரேஜ்” ஆக பணிந்து புரிந்து வருகின்ற தொழிலாளர்களைப் போட வேண்டும் என்பதுதான் நடைமுறை. இதனை மீறி, நிர்வாகம் முறைகேடான முறையில், தொழிலாளர் ஒற்றுமையைக் கெடுக்கும் வகையில் வேறு இடங்களிலிருந்து தொழிலாளர்களைப் போடுகிறது.

இதனை எதிர்த்துதான் எஸ்.எம்.பி. லைனில் உள்ள 4 தொழிலாளர்கள் ஐ.ஆர். அலுவலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். “தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் வெற்றி பெறுவதற்கு நாம் துணைநிற்க வேண்டும். லேலாண்டின் அடக்குமுறைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் களப்போராளிகளாக மாற வேண்டும்” என பு.ஜ.தொ.மு. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. லேலாண்டின் அடக்குமுறைகளுக்கு எதிராக உணர்வுபெறும் எந்த ஒரு தொழிலாளியும் போராடித்தான் ஆக வேண்டும் என்பதை இந்தப் போராட்டம் நமக்கு உணர்த்துகிறது.

ஏன் இவ்வளவு அழுத்தமாக இதனை சொல்கிறோம் என்றால், லேலாண்டு என்பது நவீன நரகம். உற்பத்தி சாலை என்பதைவிட இது ஒரு கொலைக் கூடம். இது தொழிலாளர்களுக்கு பலவிதமான நோய்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தும் கேந்திரமாக உள்ளது. அதனால், இதன் அடக்குமுறைக்கு எதிராக களப்போராளிகளாக மாறவேண்டியது தவிர்க்க முயாதது.

லேலாண்டில் நடக்கும் இதுபோன்ற அடக்குமுறைகளை விளக்கும் வகையில் சென்ற மாதத்தில் ஆலையில் நடந்த சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

“MDV Trim லைனில்” திடீரென ஒரு வாரம் மட்டும் இரவு சிப்ட் இல்லை என மாலை 4.00 மணிக்கு அறிவிப்பு ஒட்டியது, நிர்வாகம். நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் இந்த பகுதியில் “எக்ஸஸ் மேன் பவர்” எனச் சொல்லி 4 தொழிலாளர்களை மட்டும் வெல்ட் லைனுக்கு அனுப்பி விட்டது. அதாவது, “எக்ஸஸ் மேன் பவர்” என வேறு லைனுக்கு தொழிலாளர்களை அனுப்பும் போது, முதலில் “வில்லிங்” கேட்பதும் ஜூனியராக பார்த்து (டோக்கன் நம்பர் பார்த்து) வேறு லைனுக்கு “டிரான்ஸ்பர்” செய்வதும் தான் நடைமுறையாகும். இந்த நடைமுறையை மீறி டிரான்ஸ்பர் செய்துள்ளது நிர்வாகம். இதைத்தான் முறைகேடு என்கிறோம்.

இதேபோல, கடந்த ஏப்ரல் மாதத்தில் இரவு சிப்ட் துவங்கும் போது, டோக்கன் நம்பர் அடிப்படையில் தொழிலாளர்களை பிரித்து இரண்டு சிப்ட்–க்கு ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்காமல் திடீரென 8 தொழிலாளர்கள் “சப்- அசெம்ப்ளி” உள்ளிட்ட பணியிடங்களுக்கு மாற்றப்பட்டனர். இதுவும் முறைகேடுதான்.

மேலும், தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் நிமிட உற்பத்தி முறை திணிக்கப்பட்ட பிறகுதான் அதாவது, 2010-க்கு பிறகு, ஆலைக்குள் அனேக இடமாற்றங்கள் இவ்வாறு முறைகேடான வழியில் நடைபெற்றுள்ளன, நடைபெற்று வருகின்றன.

இதற்கெல்லாம், நிர்வாக அதிகாரிகள் தரும் விளக்கம் “உங்க யூனியன் முடிவுப்பா” என்பதுதான். இவ்வாறு நிர்வாகம் முறைகேட்டை அனுமதித்துவிட்டு விளக்கம் தருவது முதல் முறையல்ல. இவற்றைப் பார்க் கும் தொழிலாளர்கள், “இந்த சங்க நிர்வாகிகளே இப்படித்தான், தேர்தல் வரட்டும்” என ஆதங்கப்படுகின்றனர். உள்நோக்குடன் மவுனம் சாதிக்கும் சங்க செயற்குழு உறுப்பினர்களிடமும் சக தொழிலாளர்களிடமும் தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கின்றனர்.

ஆனால், தற்செயலாக சீருடை அணியாமல் “சிப்ட்”-க்கு வரும் தொழிலாளர்களிடம் சீறும் நிர்வாகம், மேற்கண்ட முறைகேட்டை அனுமதிப்பது ஏன்? வேடிக்கை பார்ப்பது ஏன்? இங்கு தான் முதலாளித்துவ பயங்கரவாதத்தின் வன்மம் அடங்கியுள்ளது.

  • சங்க நிர்வாகிகளிடம் முறைகேட்டை பற்றி கேட்கையில் “வில்லிங்” அறிவிக்காமல் சில தொழிலாளர்களை மட்டும் டிரான்ஸ்பரில் வெளியேற்றியது சரியா? என கேட்கும் போது, “யாரும் வில்லிங் கேட்கவில்லை. உங்களுக்கு லைன் மாறணும் என்றால் அடுத்த வாய்ப்பில் அதை செய்கிறோம்” என்கிறார்கள். அதாவது, ‘அடுத்த முறைகேடு நடக்கும் உனக்கும் பங்கு தருகிறோம்’ என்று தொழிலாளர்களை சீரழிக்கிறார்கள்.
  • இந்த முறைகேட்டிற்கு சில தொழிலாளர்கள் எப்படி பலியாகிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய விசயம். தற்போதுள்ள வேலைப் பளு, அடக்கு முறை இதனை எதிர்த்து முறியடிக்க முடியாது என்ற மனநிலையில், குறுக்குவழியாக, இந்த மேற்கண்ட முறைகேடுகளுக்கு துணை போகின்றனர். ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற கருத்து ஆழமாக இவர்கள் மனதில் பதிந்துள்ளது. முறைகேட்டின் பலனை சுவைத்த பிறகு நிர்வாகத்திற்கும் குறிப்பிட்ட சங்க நிர்வாகிகளுக்கும் வாழ்நாள் விசுவாசிகளாக (அடிமை) மாற வேண்டியுள்ளது. இதன் பின்னர், சர்வீசில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராகவும் சரியான நடைமுறைகள், நியாயங்கள் பற்றியும் பேச இயலாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
  • தங்கள் ஓட்டுச் சீட்டு லாபத்திற்காக இந்த முறைகேட்டை சங்க நிர்வாகிகள் செய்வதாக தொழிலாளர்கள் புரிந்து வைத்துள்ளனர். சங்கத்தின் மீது ஆத்திரமடைகின்றனர். “எவன் வந்தாலும் இப்படித்தான், போன டைம் அவங்களும் இப்படித்தான் ஆடுனாங்க. இந்த முறை இவங்க அப்படி ஆடுறாங்க. ஒன்னும் பண்ண முடியாது” என்ற முடிவுக்கும் வருகின்றனர். நம்பிக்கை இழக்கின்றனர். நிர்வாகம் எதிர் பார்க்கும் மனநிலையும் இப்படித்தான் பிறக்கிறது. அதாவது, “இதுக்கு மேனேஜ்மென்டே பரவாயில்லை” என தொழிலாளர்கள் கோபத்தில் கொதிப்பதைப் பார்த்து நிர்வாகம் குதூகலிக்கிறது.

முடிவாக, நமது நிறுவனத்தில் நடக்கும் முறைகேட்டிற்கு சில தனிநபர்களை மட்டுமே பொறுப்பாக்க முடியாது. ஆலையின் நிலையாணை விதிகள் என்பதைக் காட்டி போராடும் தொழிலாளர்களை ஒடுக்கும் நிர்வாகம், முறைகேட்டை அனுமதிப்பதற்கு முக்கியமான, மையமான காரணம் சங்கத்தை ஒழித்துக் கட்டுவதுதான். இதனை கீழ்க்கண்ட விளைவுகள் மூலம் நிறைவேற்றுகிறது.

  • தொழிலாளர்கள் மத்தியில் சங்கத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்வது
  • ஒவ்வொரு தொழிலாளரையும் ஊழல்படுத்தி ஒற்றுமையைக் குலைப்பது
  • சக தொழிலாளியின் மீதே அவநம்பிக்கை உருவாக்கி எல்லோரையும் தனித்தனியாக பிரிப்பது

அதாவது, தொழிலாளர்கள் சங்கத்தின் கீழ் கட்டுப்பாடான சக்தியாக திரண்டுவிடக் கூடாது என்றும் மிக எச்சரிக்கையாக ஆலையில் ஒவ்வொரு நிகழ்வையும் தீர்மானிக்கின்றது நிர்வாகம்.

ஆக, முறைகேட்டை ஒர் ஆலைக்குள் நடக்கும் விசயமாக சுருக்கிப் பார்க்கக் கூடாது. ஏனெனில், முறைகேடும் லாபவெறியும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதவை. முறைகேட்டை கட்டவிழ்த்து விட்டால் தான் முதலாளித்துவமே உயிர் பிழைத்து வாழ முடியும்.

லேலாண்டில் இதுவரை சொல்லி வந்த மரபுகள், நடைமுறைகள், ஆலையின் நிலையாணை விதிகள், தொழிற்சங்க விதிகள், முறைகள் போன்ற எல்லாவற்றையும் காலங்கடந்தவையாக்கி விட்டது கார்ப்பரேட் நிர்வாகம். அவற்றின் இடத்தில் பட்டவர்த்தனமான காட்டுமிராண்டித்தனமான சுரண்டலை கொண்டுவந்துள்ளது. இதுதான் லேலாண்டின் பயங்கரவாதக் கொள்கை. இந்தக் கட்டமைப்பு மாற்றத்தின் அல்லது நெருக்கடின் வலி தொழிலாளர்கள் மீது சுமத்தப்படுகிறது. இதன் பலனை லேலாண்டின் கார்ப்பரேட் நிர்வாகம் சுவைக்கிறது!

அசோக் லேலாண்ட் - பு.ஜ.தொ.மு பிரச்சாரம்
அரசின் எல்லா மட்டங்களிலும் மற்றும் சமூக வாழ்வின் எல்லா இடங்களிலும் நடக்கும் முறைகேடுகளையும் சீர்கேடுகளையும் பார்த்து நம்மில் பலரும் ஆதங்கப்படுகிறோம்

தாலுக்கா அலுவலகம் தொடங்கி அரசின் எல்லா மட்டங்களிலும் மற்றும் சமூக வாழ்வின் எல்லா இடங்களிலும் நடக்கும் முறைகேடுகளையும் சீர்கேடுகளையும் பார்த்து நம்மில் பலரும் ஆதங்கப்படுகிறோம்; குமுறுகிறோம். “இந்த நாடு உருப்படாது” என்று சாபம் கொடுக்கிறோம். லேலாண்டில் நடக்கும் முறைகேடுகளும் இதன் ஒருபகுதிதான்.

இந்த அரசுக் கட்டமைப்பே சீரழிந்து, அழுகி நாறுகிறது. கார்ப்பரேட்டுகளின் கைக்கூலியாகவும் அடிமையாகவும் சீரழிந்துவிட்டது. இதனால்தான் லேலாண்டிலும் முதலாளித்துவ பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. எந்தச் சட்டத்தையும் கடைப்பிடிப்பதில்லை. அதுபோலத்தான், லேலாண்டு நிர்வாகம் இதுகாறும் சொல்லிவந்த நடைமுறை, மரபு, நிலையாணைகள் எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு பட்டவர்த்தனமாக தொழிலாளர்களை சுரண்டுவதும் நடக்கிறது. இந்த பயங்கரவாதத்தையே சட்டங்களாகக் கொண்டுவந்து தொழிலாளர்களின் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பறித்து வருகிறது கார்ப்பரேட்டுகளின் அடியாளான மோடி அரசு.

ஆம், லேலாண்டு போன்ற கார்ப்பரேட் முதலாளிகளை நம்பி ஆலைகளையும் அதன் எடுபிடிகளை நம்பி நாட்டையும் ஒப்படைத்து விட்டு வேடிக்கை பார்க்க முடியாது. அவ்வாறு செய்தால், வறுமை, ஊழல், சீரழிவு, கொலை, கொள்ளை தொடரத்தான் செய்யும். ஆகையால், ஆலையிலும் சமூகத்திலும் பொது ஒழுங்கை உருவாக்க, மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதே தீர்வாகும்!

போராடும் எஸ்.எம்.பி. தொழிலாளர்களுக்கு தோள் கொடுப்போம்!

லேலாண்டின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படத்தின் மீது அழுத்தவும்]

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்
பதிவு எண்: 24/KRI
தொடர்புக்கு: 97880 11784

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க