Tuesday, October 15, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கமதுவை ஒழிக்க முடியுமா ?

மதுவை ஒழிக்க முடியுமா ?

-

“82 லேர்ந்து 97 வரைக்கும் எனக்கே போதை ஊசி பழக்கம் இருந்தது. அப்ப நான் மாநில அளவிலான கால்பந்தாட்ட குழுவில் இருந்தேன். விளையாட்டில் கிடைத்த தோல்வி…. அப்புறம் மற்ற ஏமாற்றங்கள் என்னை போதையின் பக்கம் தள்ளி விட்டது. அப்புறம் 97-ல் ஒரு மறுவாழ்வு மையத்தோட தொடர்பு கிடைச்சது. ரெண்டு வருசம். அந்த நரகத்திலேர்ந்து வெளியே வந்தேன். அப்புறம் இதையே ஒரு சர்வீசா செய்யலாமேன்னு 99-ல் இருந்து செய்துகிட்டு வர்றேன்”

மதுவை ஒழிக்க முடியுமா?சென்னையில் மது அடிமை மறுவாழ்வு மையம் நடத்தி வரும் அவரை நேரில் சந்தித்துப் பேசினோம்.

“இத்தனை வருச அனுபவத்தில் சொல்றேன். டாஸ்மாக்கை தடை செய்ய முடியாது. முடியாதுன்னு சொல்றதை விட கூடாதுன்னு சொல்றேன். வெற்றிகரமா மதுவை ஒழித்த ஒரு நாட்டை அல்லது ஒரு மாநிலத்தையாவது காட்டுங்க பார்க்கலாம்? நான் கூட பி.ஜே.பி காரன் தான். தோ நேத்து சென்னைல அவங்க டாஸ்மாக் முன்னால ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒரு கட்சிக்காரனா போயிருந்தேன். சுத்த முட்டாள்தனம் – வேறு என்னான்னு சொல்ல. குஜராத்லயே மதுவை ஒழிக்க முடியலை. குஜராத்ல எந்த ஏரியாவா இருந்தாலும் சரி, போன் போட்டா வீட்டுக்கே கொண்டாந்து சரக்கு சப்ளை பண்றான். நீங்க தமிழ்நாட்டில் தடுப்பது பத்தி பேசறீங்க”

“சார், மனுஷன் சந்தோசத்தை அனுபவிக்கப் பிறந்தவன். சந்தோசங்களைத் தேடித் தேடி அனுபவிக்கணும் அப்படிங்கற உந்துதல் அவனோட மரபணுவிலேயே இருக்கக் கூடிய ஒரு விசயம். எங்க புள்ளிவிவரப்படி தண்ணியடிக்கிறதுல நூத்துக்கு 20 பேரு அதுக்கு அடிமையாகறான். அதுக்காக மத்த எண்பது பேரோட சந்தோசத்தை தடுக்கணுமா? உலகத்திலேயே மற்ற வியாதிகளை விட நீரிழிவு நோயால தான் அதிக பேரு சாவறான். இந்தியா தான் உலக சர்க்கரை வியாதியின் தலைநகரம் – அதுக்காக ஊர்ல இருக்கிற சர்க்கரை ஆலைகளை மூடிடலாமா?”

“சார், இப்ப பள்ளிக்கூட பிள்ளைங்க கூட குடிக்கிறாங்களே?” இடைமறித்து கேட்டோம்.

“குடிக்கலைன்னா என்னா செய்திருப்பான்? மனவுளைச்சல்ல தற்கொலை செய்திருப்பான். உங்களுக்கு அது சந்தோசமா? 1920களிலே அமெரிக்காவில் மதுவிலக்கு கொள்கை அமுல்படுத்த முயற்சி செய்து மண்ணைக் கவ்வியது. அங்கேயே கள்ளச்சாராயம் ஆறாக ஓடியதை அடுத்து அரசாங்கமே பின் வாங்கியது. மது குடிப்பது என்பது மனிதனின் உயிரியல் கூறோடு சம்பந்தப்பட்ட ஒன்று – இதுக்கு ஒரு வரலாற்று மரபும், தொடர்ச்சியும் உண்டு. நாம் அதிகபட்சம் இந்த பழக்கத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்வது பற்றி சொல்லிக் கொடுக்கலாம்; அவ்வளவு தான். அதுக்கு மேலே ஒண்ணும் முடியாது.”

மது அடிமைகளிடம் பல்லாண்டுகள் வேலை செய்து வருவதாக சொல்லிக் கொண்ட அவர் தொடர்ந்து மதுவிலக்கின் சாத்தியமின்மை குறித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். மது விலக்கு சாத்தியமில்லை என்பதை முன்வைத்துப் பேசும் பின்நவீனத்துவ அறிஞர் பெருமக்கள் மற்றும் முதலாளித்துவ சந்தை நிபுணர்களின் வாதமும் இதுதான். கூடுதலாக, சாராய வியாபாரத்தில் அரசுக்குக் கிடைகும் வருவாயை சுட்டிக் காட்டுவோரும் உண்டு.

மனிதன் மகிழ்ச்சியை அனுபவிக்கப் பிறந்தவன் : எது மகிழ்ச்சி?

மதுவை ஒழிக்க முடியுமா?சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி போட்ட கோணல் கணக்கால் ஜெயலலிதாவுக்கு மகிழ்ச்சி. ரேசனில் துவரம் பருப்பு தீருவதற்கு முன் வரிசையில் இடம் கிடைத்தால் ஏழைத் தாய்மார்களுக்கு மகிழ்ச்சி. சாலையை அடைத்து வைக்கப்படும் பிரமாண்ட ப்ளக்ஸ் பேனர் அம்மாவின் பார்வையில் பட்டால் அமைச்சர்களுக்கு மகிழ்ச்சி. அந்த பேனரின் பெயரில் காசை பிடுங்காமல் இருந்தால் வணிகர்களுக்கு மகிழ்ச்சி.

பொறியியல் கல்லூரியில் இடம் கிடைப்பது நடுத்தர வர்க்கப் பெற்றோருக்கு மகிழ்ச்சி – அதனால் கிடைக்கப் போகும் வசூல் தொகையின் பிரமாண்டம் கல்வி வள்ளல்களுக்கு மகிழ்ச்சி. காலச் சக்கரத்தைப் பின்னோக்கித் திருப்பி கற்காலத்திற்கு சமூகத்தை அழைத்துச் செல்லும் கருத்துக்கள் இந்துத்துவ கும்பலுக்கு மகிழ்ச்சி – காலத்தை முன்னே தள்ளி புதியதொரு எதிர்காலத்தை மக்களே படைக்க அவர்களைப் போராடத் தூண்டும் கருத்துக்கள் கம்யூனிஸ்டுகளுக்கு மகிழ்ச்சி.

மனிதன் மகிழ்ச்சியை, இன்பத்தைத் தேடும் இயல்பினன் என்பது எந்தச் சார்புமின்றி எல்லோருக்கும் பொதுவான ஒன்றேயானது அல்ல. ஆளும் வர்க்கங்களின் மகிழ்ச்சி என்பது ஆளப்படும் வர்க்கங்களின் துன்பம். ஒரு ரூபாய்க்கு ஒரு சதுர மீட்டர் நிலம் என்ற கணக்கில் குஜராத் மாநில அரசு அதானி குழுமத்திற்கு லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை அள்ளிக் கொடுத்த நடவடிக்கை கௌதம் அதானிக்கு மகிழ்ச்சியையும், அந்த நிலத்தையே நம்பி வாழ்ந்த விவசாயிகளுக்கு துன்பத்தையும் ஒரே நேரத்தில் வழங்கியது.

சாராய போதை யாருக்கு மகிழ்ச்சியை அளிக்க முடியும்? ஒரு மனிதனின் சமூக செயல்பாட்டில் இயல்பாக எழும் உணர்ச்சிகளைத் தாண்டி, உடலின் நரம்பு மண்டலங்களைத் தாக்கி இலகுவாக்கும் போதை வஸ்துக்களை ‘மகிழ்ச்சிக்காக’ நாடுவது ஒரு குறுக்கு வழி. சுருக்கமாகச் சொன்னால், மனிதனின் சமூக சிக்கல்களில் இருந்து ஒரு தற்காலிக தப்பித்தலை சாராய போதை வழங்குகிறது.

வேறு ஒரு கோணத்திலிருந்து இதையே தான் மத நம்பிக்கையும் செய்கிறது. தம்மைத் தாக்கும் பிரச்சினைகளை நேர்கொண்டு சந்திப்பதை விடுத்து மக்களை ’ஆண்டவனின்’ சந்நிதானங்களுக்கு வழிநடத்திச் செல்கிறது.

சாராய வரலாறு : மக்களின் வரலாறா?

மதுவை ஒழிக்க முடியுமா?குடியின் வரலாறு பற்றி இருபத்தியோராம் நூற்றாண்டின் பின்நவீனத்துவ ரசனைக்காரர்கள் அளிக்கும் சித்திரம் என்பது இவ்வாறானதாக உள்ளது : ஆதி காலத்திலிருந்தே மனிதன் குடித்துக் களித்துள்ளான். மனித சமூகத்தின் குடிப்பழக்கம் பண்டைய இலக்கியங்களிலும், அகழ்வாய்வுத் தடயங்களிலும் ஆதாரங்களாக இரைந்து கிடக்கின்றன. குடிக்கு எதிரான பிரச்சாரம் என்பது மனித சமூகத்தின் இயல்புக்கே எதிரானது.

என்.ஜி.ஓ.க்கள் முதல் பின்நவீனத்துவ ’அறிவுஜீவிகள்’ வரையிலானவர்கள் அளிக்கும் இந்த சாமர்த்தியமான விளக்கம் அடிப்படையில் உண்மையல்ல. நிலநடுக்கோட்டிற்கு வட கோடியில் அமைந்துள்ள பகுதிகளின் மக்களுக்கு குடி என்பது குளிருக்கு எதிரான கவசங்களில் ஒன்று. கேளிக்கை அம்சம் முக்கியமல்ல.

இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளிலோ மன்னர்களின் அந்தப்புரங்களே சாராய நதியின் ஊற்றுமூலமாக விளங்கியுள்ளது. மக்களைப் பொறுத்தவரை நிலபிரபுத்துவ காலகட்டத்தின் ஒடுக்குதலிலும் சுரண்டலிலும் சிக்குண்டு கிடந்தனர். பிழைத்துக் கிடப்பதே போராட்டமான அந்த காலப் பகுதியில் குடிப்பதும், கேளிக்கைகளும் மக்களுக்கு சாத்தியமாகியிருக்குமா? குடிப்பதும், குடித்துக் களிப்பதும், இசையில் மூழ்கித் திளைப்பதும், நடனம் போன்ற கலைகளின் புரவலர்களாக இருப்பதுமான நடவடிக்கைகள் அன்றைய சமூகத்தின் மேல் வர்க்கத் தட்டைச் சேர்ந்தவர்களுக்கே சாத்தியமாக இருந்தது.

சாதாரண உழைக்கும் மக்கள் தரங்குறைந்த, போதை குறைந்த மதுவகைகளைக் குடித்தாலும், அது வர்க்க ரீதியான ஒடுக்குமுறையின் அவலங்களை, குறிப்பாக கடுமுழைப்பின் வலிகளைக் கடந்து போகும் அத்தியாவசியமாகவும் இருந்திருக்கிறது.

உழைக்கும் மக்களை மலிவான சாராய போதையில் ஆழ்த்தி வைப்பது ஆட்சியாளர்களுக்கு எந்தளவுக்கு நன்மை பயக்கும் என்பதை அக்குவேறு ஆணி வேறாக விளக்கியுள்ளான், சாணக்கியன். மதுவின் கேளிக்கைகள் மேட்டுக் குடியினருக்கானதாகவும், அதன் தீமைகள் மக்களுக்கானதாகவுமே அன்றும் இன்றும் தொடருகிறது.

அளவோடு குடிக்கலாமா?

மதுவை ஒழிக்க முடியுமா?பூரண மதுவிலக்கிற்கு எதிராகப் பேசும் என்.ஜி.ஓ.க்கள், மது அருந்துவது தனிநபர் உரிமை சம்பந்தப்பட்டதாகவும், ஒருவன் அளவோடு குடிப்பது என்று தீர்மானித்தால், அவரது தனிப்பட்ட மகிழ்ச்சியில் யாரும் தலையிடக் கூடாது என்றும் தமது வாதங்களை முன்வைக்கின்றனர். மதுவின் அளவு அதிகரித்து, சாராய போதை இல்லாமல் எந்தக் வேலையும் ஓடாது என்கிற நிலை ஒரு ‘நோய்’ என்றும், அந்த நிலையை அடையாத வரை நாம் மதுப்பழக்கம் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் சொல்கின்றனர்.

இது சாத்தியமா?

தொண்டையில் இறங்கும் சாராயம் இரைப்பையை அடைந்த நொடியில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சடாரென்று உயர்த்துகிறது. உயரும் சர்க்கரை, உடலின் ஆற்றலை மூளையின் கட்டுப்படுத்தும் சக்திக்கு மீறி உயர்த்துகிறது. இதன் விளைவாக ஒருபக்கம் உடலின் அசைவுகளை மூளை கட்டுப்படுத்தும் திறனை தற்காலிகமாக இழக்கும் அதே நேரம், இன்னொரு பக்கம் நரம்பு மண்டலத்தைத் தாக்கி மூளையின் தர்க்கப்பூர்வமாக சிந்திக்கும் ஆற்றலைக் குலைக்கிறது. சுருக்கமாக நிதானத்தை தவற வைக்கிறது என்று சொல்லலாம்.

மூளையின் தர்க்க அறிவு மழுங்கடிக்கப்பட்ட நிலையில் எது நிறுத்திக் கொள்ளும் அளவு என்று தீர்மானிப்பதே ஒரு மனிதனால் இயலாத ஒன்று. இது ஒரு பக்கம் இருக்க, தொடர்ந்து சாராயம் உட்கொள்ளும் ஒருவரின் உடல் போதையின் தாக்குதலை சமாளிக்கும் ஆற்றலைப் பெறுகிறது. முதல் நாளில் ஒரு ’கட்டிங்’ அடித்தால் ஏற்படும் அதே அளவு போதை, சில நாட்கள் அல்லது வாரங்களுக்குப் பின் பல ’கட்டிங்குகளை’க் கோரும்.

மதுவுக்கு அடிமையான பலரும் ”நான் ஒரு தலை சிறந்த சாராய அடிமை ஆகப் போகிறேன்” என்கிற லட்சியத்தோடு துவங்குவதில்லை. நண்பர்களின் வற்புறுத்தலோ, கண நேர சபலமோ, விரும்பிய நடிகரின் வெள்ளித்திரை சாராய சாகசம் ஏற்படுத்திய குறுகுறுப்போ தான் தற்செயலான தூண்டுதாக அமைந்து சாராய போத்தலின் முன்னே எதிர்கால மது அடிமையை அமர வைக்கிறது. விளையாட்டாக குடிக்கப் பழகிய ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிக்கு குடி, தோல்விக்கு குடி, மகிழ்ச்சிக்கு குடி, மனவருத்தத்திற்கு குடி என்கிற பழக்கத்திற்கு வந்து சேருகிறார். ஒரு கட்டத்திற்குப் பின் குடிப்பதற்காகவே காரணங்கள் ஏற்படுத்தப்பட்டு, பின் எந்தக் காரணங்களும் இன்றி குடிக்கும் அடிமை நிலையை அடைகிறார்.

இதன் பொருளாதாய விளைவு என்ன?

மதுவை ஒழிக்க முடியுமா?2010-ல் 12 ஆயிரம் கோடியாக இருந்த டாஸ்மாக் விற்பனை தற்போது 25 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான டாஸ்மாக் விற்பனை இலக்கை 30 ஆயிரம் கோடியாக நிர்ணயித்துள்ளது அரசு. பத்தாண்டுகளுக்கு முன்பு சமூகத்தில் குடிப்பழக்கம் என்பது அருவருக்கத்தக்கதாய் இருந்தது மாறி, தற்போது இயல்பான ஒன்றாகியிருக்கிறது. இளைஞர்கள் குடித்த காலம் போய், தற்போது பள்ளி மாணவர்கள் மாணவிகள் வரை குடி இயல்பானதாகியிருக்கிறது.

மது அடிமைகள் மறுவாழ்வு : என்.ஜி.ஓ.க்களின் அட்சய பாத்திரம்

கட்டுரையின் துவக்கத்தில் இடம்பெற்ற என்.ஜி.ஓ நபருடனான நீண்ட உரையாடல் அவருக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பின் காரணமாக நிறைவு பெற்றது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

“சார், பொதுவா நாங்க ஒரு பெட்டுக்கு மாசம் பதினாறாயிரம் சார்ஜ் பண்றோம். நீங்க வேற ரெக்கமென்டேசன்ல வந்திருக்கீங்க…. சரி, நீங்க பத்தாயிரம் கட்டிருங்க. அப்புறம் முக்கியமா, நீங்க பத்தாயிரம் தான் கட்டிருக்கீங்கன்னு வேற யார்ட்டயும் சொல்லிக்கிடாதீங்க. சரியா?” என்று செல்பேசி இணைப்பைத் துண்டித்தவர், நம்மிடம் திரும்பினார்.

“சார், போன ஆறு மாசமா ரொம்ப நெருக்கடியா போகுதுங்க. நான் இங்க ஒரு போதை மறுவாழ்வு மையம் நடத்திட்டு வர்றேன். மொத்தம் பத்து படுக்கைகள். இப்ப கொஞ்சம் போட்டி அதிகமாயிடுச்சா.. அதனால, வர்ற பேசண்டுங்க ரொம்ப பேரம் பேசறாங்க. ஒரு பெட்டுக்கு ஒரு மாத சார்ஜ் பத்தாயிரம் தான் போகுது இப்ப.. வட்டி கட்டி, சம்பளம் குடுத்து, பேசண்டுகளுக்கு ஒரு மாசம் சோறு போட்டு… கடைசில நமக்கு பெட்டுக்கு ரெண்டு மூணாயிரம் தேர்றதே பெரும்பாடா இருக்கு. முப்பதாயிரத்தை வச்சிகிட்டு சென்னைல என்னா செய்ய முடியும் சொல்லுங்க?”

“மத்தபடி செலவுக்கு எப்படி சமாளிக்குறீங்க?”

“முன்னெயெல்லம் நன்கொடை வரும்… இப்ப அரசு கட்டுப்பாடு அதிகமாயிட்டதாலே அதுவும் குறைஞ்சு போச்சு.. மத்தபடி எங்கனா ரோட்ரி க்ளப் லயன்ஸ் க்ளப்லேர்ந்து செமினார், வொர்க் சாப்னு கூப்டுவாங்க.. அதுல கொஞ்சம் தேறுது. ஏதோ கைய கடிக்காம ஓட்டிகிட்டு இருக்கேன்…”

“இந்த நிலைமை அப்படியே போயி மறுவாழ்வு மையம் மூடும் நிலை வந்தா என்ன செய்வீங்க?”

“நமக்கெல்லாம் அங்கங்க இருக்குற தொடர்புதான் முதலீடே. ஆயிரத்தெட்டு திட்டங்கள் இருக்கு”

போதை மறுவாழ்வு மையம் இன்றைய தேதியில் என்.ஜி.ஓ.க்களின் தொழில் வாய்ப்புகளில் ஒன்றாக சக்கை போடு போட்டு வருகிறது. நாங்கள் சந்தித்தவரை விட பலமடங்கு பெரிய தொடர்பு வலைப்பின்னலைக் கொண்ட என்.ஜி.ஓ.க்கள் பலர் சென்னையில் லாபகரமாக ‘மது அடிமை மீட்பு’ வியாபாரத்தில் ஈட்டுபட்டு வருகிறார்கள்.

பத்துக்கு பத்து அளவில் நான்கு அறைகளும், அரசு மட்டத்தில் நல்ல தொடர்புகளும் இருந்தால் போதும் – போதிய பயிற்சிகளோ, அரசின் அனுமதியோ, தணிக்கையோ இன்றி யார் வேண்டுமானாலும் போதை மறுவாழ்வு மையம் துவங்க முடியும். சென்னையில் மட்டும் சில நூறு ‘மறுவாழ்வு’ மையங்கள் செயல்பட்டு வந்தாலும், இவை எதுவும் அரசின் கண்காணிப்பிற்கோ, தணிக்கைக்கோ உட்படுத்தப்படுவது இல்லை.

சென்னையில் நடத்தப்படும் பெரும்பாலான ’மறுவாழ்வு’ மையங்கள் சேது படத்தில் காட்டப்படும் பாண்டி மடங்களைப் போல் தான் நடத்தப்படுகின்றன. போதை ‘நோயாளிகளின்’ குடும்பத்தாரை அணுகும் என்.ஜி.ஓ ஆள்பிடி ஏஜெண்டுகள், பாதிக்கப்பட்டவரை அள்ளிச்சென்று தாம் நடத்தும் மறுவாழ்வுக் கொட்டகையில் அடைக்கின்றனர். தொடர்ந்து பல வாரங்கள் உளவியல் மற்றும் உடல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு இலக்காக்கப்படும் பாதிக்கப்பட்டவர்கள், ஒருகட்டத்தில் மது போதையை தாம் மறந்து விட்டதாக நடிப்பதன் மூலம் மட்டுமே தப்பிக்கிறார்கள்.

இவ்வாறு மனிதத்தன்மையற்ற முறையில் மறுவாழ்வு மையத்தால் நடத்தப்பட்ட சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இருவர், 2010 மே மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். நீதி மன்றம் அரசு எந்திரத்தை மயிலறகால் கடுமையாக அடித்ததைத் தொடர்ந்து அரசு எந்திரம் மறுவாழ்வு மையங்களின் மேல் எடுத்த கடுமையான ’நடவடிக்கை’யின் கதி என்னவாயிற்று என்பதைப் பற்றிய உருப்படியான தகவல் ஏதும் இல்லை.

மறுவாழ்வு மையங்களில் இருந்து தப்பிக்கும் மது அடிமைகள் மீண்டும் பழைய வாழ்க்கைக்கே திரும்புகிறார்கள் என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை. எனினும், இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள என்.ஜி.ஓ பெருச்சாளிகள் தமது வருமான வாய்ப்பைப் பாதிக்காதவாறு மதுவுக்கு எதிரான பிரச்சாரத்தை சமீப காலத்தில் முடுக்கி விட்டுள்ளனர்.

என்ன தான் தீர்வு?

டாஸ்மாக் சாராயம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் பாரதூரமானவை. ஒரு தலைமுறையையே சமூகப் பொறுப்பற்றவர்களாகவும் கிரிமினல்களாகவும் மெல்ல மெல்ல மாற்றி வருகிறது ’அம்மா’தலைமையிலான அரசு. ஜெயா 2003-ல் பற்ற வைத்த நெருப்பிற்கு பின்னர் வந்த கருணாநிதி எண்ணெய் வார்த்துச் சென்றுள்ளார். மீண்டும் பதவிக்கு வந்த ஜெயா ஊதி ஊதி பெரும் காட்டுத் தீயாக வளர்த்துள்ளார்.

மொத்த சமூகத்தையும் துருவாக அரித்துத் தின்னும் சாராயத்தை அரசே தடுக்கும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இன்னும் குடி வாடிக்கையாளர்களாக எந்தப் பிரிவு மக்களைச் சேர்க்கலாம், புதிதாக என்ன பிராண்டு சாராயத்தை இறக்கலாம், அடுத்த ஆண்டு சாராய வருமானத்திற்கு எதை இலக்காக வைக்கலாம் என்று தீர்மானிப்பதில் அரசு எந்திரம் மொத்தமும் தீவிரமாக சிந்தித்து வருகிறது. டாஸ்மாக்கை மூடுவது என்பது மக்கள் கையில் மட்டுமே உள்ளது.

அரசிடம் கோரிக்கை வைத்து சோர்ந்து போய், கடைசியில் தாமே நேரடியாக களமிறங்கி தங்கள் கிராமத்தில் இருந்த டாஸ்மாக் கடையைத் தகர்த்தெறிந்து அழிவிடைதாங்கி கிராம மக்கள் நம்முன் ஒரு முன்னுதாரணத்தை படைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் அழிவிடைதாங்கியாக மாறுவது ஒன்று மட்டும் தான் நம்முன் உள்ள சாத்தியமான, சரியான தீர்வு.

– தமிழரசன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க