Tuesday, January 26, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் வீட்டுக்கு ஒரு குடிகாரனை உருவாக்கும் தமிழக அரசு !

வீட்டுக்கு ஒரு குடிகாரனை உருவாக்கும் தமிழக அரசு !

-

1. திருச்சி ஆட்டோ ஓட்டுனர்கள்

மூடு டாஸ்மாக்கை என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகம் முழுவதும் அனைத்துப் பிரிவு மக்களும் போராடி வருகின்றனர். வீட்டுக்கு ஒரு மரம் நடவேண்டும் என்ற அரசின் கொள்கை போய், வீட்டுக்கு ஒரு குடிகாரனை உருவாக்க வேண்டும் என்ற கொள்கை வகுத்து செயல்படுவதாகவே தெரிகிறது.

தமிழகம் குடிபோதையில் தள்ளாடுகிறது. இந்நிலையை மாற்ற இந்தியாவிற்கே முன்மாதிரியாக மாணவர்கள் கிளர்ந்தெழுந்து போராடுவது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆனால், அப்படி போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவ-மாணவிகளை 15 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதும், சமூக விரோதிகள் என சித்தரிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதேபோல டாஸ்மாக்கை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது கொலை முயற்சி வழக்கு உட்பட பல வழக்குகளை போட்டு சிறையில் அடைத்துள்ளது தமிழக அரசு. இதனை பார்க்கும் போது இந்த அரசு சமூக விரோதச் செயலை எதிர்ப்போரை பழிவாங்குவதாகவே கருதுகிறோம்.

நாட்டையே சீரழிக்கும் குடிவெறியால் நாள்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு சம்பவங்கள் பெருகி வருகின்றன. இதைத்தான் அரசு விரும்புகிறதா என்ற அச்சம் ஏற்படுகிறது.

சமூகவிரோத செயல்களை தடுப்பதற்காகத்தான் சட்டமும், அரசும், போலீசும் உள்ளன. ஆனால், தமிழகத்தில் கடந்த இருமாதங்களாக நடக்கும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது அரசுதான் சமூகவிரோத செயல்களை ஊக்குவிக்கிறது என்பதாக கருத முடிகிறது. ஆகவே, தமிழக அரசு குடிகெடுக்கும் இந்த டாஸ்மாக் கொள்கையை உடனடியாக கைவிட வேண்டும்.

  • தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கைக் கொண்டு வர வேண்டும்!
  • அரசின் வருவாயைப் பெருக்குவதற்காக தமிழக மக்களை போதையில் ஆழ்த்துவதை அனுமதிக்க முடியாது!
  • போராடிய மாணவர்க்-வழக்கறிஞர் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 18-08-2015 அன்று காலை உறையூர் குறத்தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்]

ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோபிநாத் தலைமையேற்று நடத்தினார்; துணைத்தலைவர் மணிகண்டன் உரையாற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்]

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில தலைமைக்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் சிறப்புரையாற்றினார். தோழர் மணலிதாஸ் நன்றியுரை கூறினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்]

ஆர்ப்பாட்டத்தில் திருச்சி முழுவதிலிருந்தும் 200-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் திரளாக கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருச்சி

2. திருச்சி குட்செட் தொழிலாளர்கள்

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் தலைமையின் கீழ் இயங்கிவரும் சுமைப்பணித் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் திருச்சி குட்செட்டில் கடந்த 24-08-2015 அன்று மாபெரும் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது. புரட்சிகர அமைப்பின் கோரிக்கையை அங்கீகரித்து மாற்று சங்கத் தொழிலாளர்களும் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், ஒப்பந்ததாரர்களின் ஆதரவுடன் அன்றையதினம் திருச்சி குட்செட்டில் அனைத்து தொழிலாளிகளின் சார்பில் முழுநாள் வேலை நிறுத்தமும் நடந்தது.

trichy-sumai-workers-posterலாரி உரிமையாளர்கள், ஒப்பந்த தாரர்களும் அன்றைய தினம் வேலையை தவிர்த்து ஆதரவு தந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றியடைய செய்தனர். அன்றைய தினம் குட்செட் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது (பார்க்க – பத்திரிக்கை செய்திகள்)

[செய்திகளைப் பெரிதாகப் பார்க்க படத்தின் மீது அழுத்தவும்]

அதனை தொடர்ந்து காலை 9 மணி முதல் 11 மணிவரை திருச்சி இராமகிருஷ்ணா பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

trichy-sumai-workers-notice

கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்க தலைவர் தோழர். குத்புதின் தலைமை தாங்கி பேசுகையில் மதுவிலக்குப் போராட்டத்தினை அரசு துச்சமென நினைப்பதாகவும், மக்களின் பேரெழுச்சியாக, தொடர் போராட்டங்கள், சசிபெருமாள் அவரது மரணம், மாணவர் – வழக்கறிஞர் தீர மிகு போராட்டங்களுக்கு பிறகும் அரசு மௌனம் காப்பதாகவும் சாடியதோடு, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் “மக்கள் முழுக்க அரசியல் கற்றால் தான் போரட்டத்திற்கு வீதிக்கு வருவார்கள்” என்ற கருத்தை வலியுறுத்தி பேசினார். பெரியார் போன்ற தலைவர்கள் இன்றில்லாத நிலையில் எங்களைப் போன்ற புரட்சிகர அமைப்புகள்தான் இன்றளவும் மக்களுக்காக போராடி வருகின்றன என்று சுட்டிக் காட்டினார்..

கண்டன உரை ஆற்றிய சங்கத்தின் சிறப்பு தலைவர் தோழர் ராஜா தமிழகத்தின் பல்வேறு அரசியல் சார்ந்த மக்களின் வாழ்வாதார பிரச்சினையில் தன்னெழுச்சியாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் மதுவிலக்கு மற்றும் டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி போராடிய போது அவர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதற்க்கு கடுமையாக தனது கண்டனத்தை தெரிவித்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்]

ஈழ விடுதலைக்காக முதல் முதலாக குரல் கொடுத்து அவர்கள் போராடியதை குறிப்பிட்டு, மூடு டாஸ்மாக்கை என அவர்கள் மூட்டிய தீ பரவட்டும் என்று பேசினார்.

“அரசு காவல்துறையை ஒரு அடியாள் படையாகவே பயன்படுத்துகிறது. கூடுதலாக சமீபத்தில் புனே நகரில் போராடிய திரைப்பட கல்லூரி மாணவர்கள் மீது தனியார் குண்டர் படையை ஏவி காட்டுமிராண்டிதனமாக தாக்குதல் செயலில் இந்த அரசாங்கம் ஈடுபடுகிறது. இந்த போலீசு குறைந்தபட்சம் சரி தவறு எது என சிந்திக்க தெரியாத மிருகம் போல் ஏவல் படையாக மாறியுள்ளது. அதனால் தான் பெண் காவலர்களை டாஸ்மாக்கு காவல் போடுகிறான். எவ்வளவு கேவலமாக குடிகாரர்கள் பேசினாலும் சகிச்சிக்கிட்டு டாஸ்மாக் முன்னாலே நாயா நிக்கனும்.. தேவையா இந்த தொழில் என சிந்திக்க வேண்டும்.”

மக்கள் உரிமை பாதுகாப்பு மைய திருச்சி மாவட்ட தலைவர் தோழர். காவிரிநாடன் தனது கண்டன உரையில், “மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ அவர்கள் விருத்தாசலம் பகுதியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராட சென்ற போது அவர் மீது கடை ஊழியரை கடப்பாறையால் குத்த முயற்சி செய்தார் என்ற பொய் வழக்கு போலீசால் போடப்பட்டுள்ளது.

தோழர் ராஜூ பல்வேறு மக்கள் மாணவர்கள் பிரச்சனையை ஒட்டி பல முறை போராட்டம் நடத்தியுள்ளார். குறிப்பாக தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனுக்கு எதிராகவும், கல்வி கட்டணக் கொள்ளைக்கு எதிராக போராடி கட்டப்பட்ட கட்டணத்தினை திரும்ப பெற்று தந்ததோடு, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் வழிபாடு நடத்த தடை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியது போன்ற போராட்டங்களில் ஈடுபட்டவர்.

கடந்த 68 ஆண்டுகளாக மக்கள் தமது கோரிக்கைகளை மனுக்களாகவே கொடுத்து அதில் தீர்வு ஏற்படவில்லை. இனி மக்கள் தங்கள் தேவைகளை போராடி பெறுவதுதான் ஒரே வழி” எனவும் பேசினார்.

சங்க உறுப்பினரும் நுகர்பொருள் வாணிப கிடங்கிற்க்கு பொருட்களை ஏற்றும் SWHC ஐ சேர்ந்த தோழர் தனக்கோடி பேசுகையில், ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தால் அவர் 5 வருடங்களில் சுமார் 1.80 லட்சம் வரை செலவு செய்வதாகவும், ஆனால் அரசு ஒரு குடும்பத்திற்க்கு சுமார் 3000 முதல் 4000 ரூபாய் வரையே இலவச பொருட்கள் வழங்குவதாகவும் புள்ளி விவரங்களை கூறி பேசியது சிறப்பாக இருந்ததுடன் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் பேசியது அனைவரையும் கவர்ந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்]

மைய கலைக்குழு தோழர்கள் விளக்கமளித்து பாடிய பாடல்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோரை உணர்ச்சியின் விளிம்பிற்கே கொண்டுவரும் வகையில் இருந்தன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்]

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுவரொட்டி ஒட்ட சென்ற போது சில மாணவர்கள் எங்களிடம் வந்து “இந்த போஸ்டர் தயாரிக்க ஒன்றிற்கு எவ்வளவு செலவாகும்” என்று கேட்டனர். “எங்களிடம் ஐந்தாறு குடுங்கள், எங்களது வீட்டில் ஒட்ட வேண்டும். எங்கள் அப்பா தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதால் எங்களால் சரியாக படிக்க முடியவில்லை. நிம்மதியாக தூங்க முடியவில்லை” என்று கூறினர். எங்கள் நினைவுக்கு வந்தது “படிப்ப கெடுத்திட்டியே அம்மா” என்ற கலைக் குழு தோழர்கள் பாடிய பாடல்வரிகள் தான்.

சங்க செயலர் தோழர் ரத்தினம் நன்றியுரையாற்ற ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி கிளை.

3. குடந்தை

டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம்,அடக்குமுறையை ஏவும் அரசு, குதறும் காவல்துறை, துணைநிற்கும் நீதிமன்றம் என்ற தலைப்பில் 07-09-2015 அன்று குடந்தை காந்திபூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

prpc-tnj-demo-bannerமாலை 6 மணியளவில் ஆர்ப்பாட்டம் பறை இசையோடு துவங்கியது ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக்கை இழுத்து மூடக்கோரியும் காவல்துறை, நீதிமன்றம் ஆகியவற்றை அம்பலப்படுத்தியும் முழக்கம் இடப்பட்டது.

மக்கள் சொத்தை கொள்ளையடித்த ஜெயாவுக்கு விடுதலையாம்! டாஸ்மாக்கை எதிர்த்துப் போராடிய மக்களுக்கு தண்டனையாம்! என்ற முழக்கமும் ஊத்திகொடுத்த தாய் மாமனுக்கு 307 செக்சன் பாரு! மொத்தமக்களையும் குடிகாரனாக்கும் அம்மாவுக்கு என்ன செக்சன்? என்ற முழக்கமும் மக்களிடையே மிகுந்த வரவேற்பைபெற்றது.

prpc-tnj-demo-poster-2மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் தஞ்சை மாவட்டஅமைப்பாளர் வழக்குரைஞர் தோழர் தமிழ்.ஜெயப்பாண்டியன் தலைமையுரையாற்றுகையில், “பச்சையப்பன்கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் மண்டைய உடைக்குது, மாணவிகளை அவமான படுத்தியது. ஆனால் E.V.K.S.இளங்கோவனுக்கு எதிராக அ.தி.மு.க குண்டர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் மேயரும் சேலையை மடிச்சிக் கட்டிக்கிட்டு கையில் வெளக்கமத்தோடு நின்று அராஜகம் செய்தவர்களை வேடிக்க பார்கிறது போலீசு.

சாராயக்கடைக்கு எதிராக போராடினா போலீசு ஒடுக்குகிறது. இந்த அரசு அறிவிக்கப்படாத அவசரநிலை காட்டாச்சி நடத்துகிறது” என்று இந்த அரசையும் காவல்துறையையும் அம்பலப்படுத்தி பேசினார்.

குடந்தை வழக்குரைஞர் தியாகு பேசுகையில், “நடக்கக்கூடிய குற்றங்கள் பலவற்றுக்கு டாஸ்மாக்தான் காரணம் அந்த டாஸ்மாக்கை எதிர்த்து மாணவர்கள் போராடினால் குற்றம் என்று சொல்கிறது அரசு. மாணவர்களையும், இளைஞர்களையும் மதுபோதையில் சிந்திக்கவிடாமல் செய்வதன் மூலமாக தங்களுடைய ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று இந்த அரசும் ஆட்சியாளர்களும் நினைக்கிறார்கள்” என்பதை அம்பலப்படுத்தினார்.

BSP மாவட்ட வழக்கறிஞர் அணித்தலைவர் வழக்கறிஞர் கோ.ராஜ்குமார், “மாணவர்களையும் இளைஞர்களையும் சிந்திக்கவிடாமல் செய்வதுதான் இந்த அரசின் கொள்கையாக இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் எட்டு நீதிபதிகள் ஊழல் நீதிபதிகள் என்று நீதிபதிகள் மீது குற்றம் சுமத்தி வழக்கு தொடுக்கப்பட்டது இன்றுவரை விசாரணை இல்லாமல் இருக்கிறது” என்று நீதிமன்றத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்தினார்.

வி.சி.க.முன்னாள் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சா.விவேகனந்தன் பேசுகையில் “அலுவலகங்கள் பள்ளிகள் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் கூட இல்லை. ஆனால், டாஸ்மாக் 500 மீட்டருக்கு 1 கடை உள்ளது. காவல்துறை குடித்துவிட்டு வண்டி ஓட்டினா கேஸ் போடுகிறார்கள். ஆனால் அதே காவல்துறைதான் டாஸ்மாக் கடைக்கு காவல் இருக்கிறது. நீதிமன்றங்கள் அரசாங்கத்தை கண்டிக்க துப்பில்லாத நிலையில் இருக்கின்றன” என்று நீதிமன்றத்தையும் காவல்துறையையும் அம்பலப்படுத்தினார்.

shutdown-tasmac-kudanthai-demo-1

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்டத்தலைவர் தோழர் காவிரிநாடன் நிறைவுரையாற்றுகையில், “மாணவர்கள் போராட்டம் சட்டபூர்வமானது நியாயமானது. இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் சரத்து 47 பூரண மதுவிலக்கை அமுல்படுத்த சொல்கிறது. ஆனால் ‘அரசே சராயக்கடையை நடத்துவது சட்டவிரோதமானது’ என்று அதை கண்டிக்காத நீதிமன்றம் சாராயக்கடைக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. காவல்துறை செய்யும் அத்துணை குற்றங்களுக்கும் நீதிமன்றம் துணைநிற்கிறது” என்று காவல்துறையையும், நீதிமன்றத்தையும் அம்பலப்படுத்தினார்.

“அரசுக்கு வருமானம் வருது அதனாலதான் சாராயக்கடையை நடத்துறோம் என அரசு சொல்கிறது அம்மா விபச்சாரவிடுதி என நடத்தலாமே அதனாலையும் வருமானம் வருமே” என்று பேசிய போது மக்கள் உற்சாகமாக கைதட்டி வரவேற்றனர்.

ஒரு பெரியவர், “வெற்றிகொண்டான் பேச்சுக்கு பிறகு ஒரு சிறப்பான பேச்சை இப்போதுதான் கேட்கிறேன் இன்னும் 10 நிமிடம் பேசினாலும் கேட்கலாம்” என்று சொன்னார்.

ஒரு அம்மா போலீஸ்காரர்களை திட்டினார். அப்போது உளவுத்துறை போலீஸ்காரர்கள், பச்சமிளகா கடிச்ச மாதிரி, “இவங்க ஆர்ப்பாட்டம் நடத்துறதால நமக்கு ஆப்பாயிடும் போல” என்று அவர்களுக்குள்ளாகவே பிதற்றிக் கொண்டிருந்தனர்.

தோழர் இறுதியாக, “உழைக்கும் மக்கள் நம்மளை நாமே ஆளுவதற்கு அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும்” என அறைகூவல் விடுத்தார்.

நிறைவுரையை அடுத்து சிறப்பானதொரு கலைநிகழ்ச்யை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக்கலைக் குழு தோழர்கள் நடத்தினர். கலைநிகழ்ச்சியில் மூடுடாஸ்மாக்கை என்ற பாடல் குடந்தை மக்களிடத்தில் போராட்ட உணர்வை தட்டிஎழுப்பியது.

பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்-ஐ அம்பலப்படுத்தும் எச்சரிக்கை, எச்சரிக்கை என்ற பாடல் பாடிய போது வாகனத்தில் சென்றவர்கள் கூட நின்று கலைநிகழ்சியை கவனித்தார்கள்.

கூட்டம் அதிகமாவதை பார்த்த உளவுத்துறை போலீஸார் பதற்றத்துடன் நிகழ்ச்சியை நிறுத்துமாறு நெருக்கடி கொடுத்தார்கள். “ஆர்ப்பாட்டம் நடத்துறோங்கிற பேர்ல பொதுக்கூட்டம் நடத்துறிங்களா” என்று கேட்டனர்.

கலைநிகழ்ச்சியின் போது மக்கள் தாமாகவே முன்வந்து நிதி கொடுத்து ஆதரவு தெரிவித்தனர் இறுதியாக நன்றியுரை கூறி ஆர்ப்பாட்டம் முடிக்கப்பட்டது.

தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
குடந்தை

4. கரூர்

ரூர் காணியம்பட்டியில் உள்ள அரசு பாலி-டெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் 24-08-2015 அன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை 8.45 மணியளவில் கல்லூரி வாசலின் முன்பு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு, “டாஸ்மாக்கை மூட வேண்டும், கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும்” என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவரும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழருமான தோழர் சுதர்சனன் மாணவர்களை ஒருங்கிணைத்து பேசினார். மாணவர்கள், “இழுத்து மூடு இழுத்து மூடு, டாஸ்மாக்கை இழுத்து மூடு” என்று முழக்கங்கள் எழுப்பினர்.

கல்லூரி நிர்வாகம், “டி.சி கொடுத்து விடுவேன், இன்டெர்னல் மதிப்பெண் போட மாட்டேன்” என்று மிரட்டியதை துணிவோடு எதிர்கொண்ட மாணவர்கள், “போராடுவது எங்கள் உரிமை, டாஸ்மாக்கை மூடச் சொல்லுங்கள், நாங்கள் கலைந்து சொல்கிறோம்” என்று துணிவோடு பதிலளித்தனர்.

மாணவர்கள கல்லூரி வாயிலில் இருந்து நோட்டிஸ் வினியோகித்து, கண்டன முழக்கம் அடங்கிய தட்டிகளை ஏந்தி பேரணியாகச் சென்றனர். கரூர் மணப்பாறை சாலை கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகில் தொடர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

“யாரைக் கேட்டு போராட்டம் செய்தீர்கள்? யாரிடம் அனுமதி வாங்கினீர்கள்” என்று  மிரட்டிய போலீசிடம், “போராடுவது எங்கள் உரிமை, உங்களிடம் அனுமதி வாங்கத் தேவையில்லை” என்று தைரியமாக பதிலளித்தனர் மாணவர்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

“டாஸ்மாக்கை இழுத்து மூடும் வரை, கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை விடுதலை செய்யும் வரை ஓயாது எங்கள் போராட்டம்” என்பதை பறைசாற்றும் வகையில் இந்த போராட்டம் அமைந்தது.

தகவல்

இரா பாக்கியராஜ்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர்

5. கடலூர்

விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் ஆகஸ்ட் 8-ம் தேதி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர்

6. விருத்தாசலம்

கஸ்ட் 24-ம் தேதி விருத்தாசலம் பாலக்கரையில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

shutdown-tasmac-virudai-demo

தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாசலம்

 

 

  1. கடையை மூடு என்று சொல்லும் போராளிகள் ஏன் மக்களை “குடிக்க வேண்டாம்” என அறிவுறுத்த மறுக்கிறார்கள்? நாட்டில் கற்பழிப்பு கூட பெருகி வருகிறது, அதற்கு இந்த பு.ஜ.வின் தீர்வு என்ன?? கள்ளக்காதல் கொலைகள் நடப்பது அரசாங்கத்தால் அல்லது மக்களால்??? உலத்திலேயே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்தியாவில் தான் அதிகம், இதற்காக நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகளை எல்லாம் மூடிவிட முடியுமா?? டாஸ்மாக்கை மூடினால் தமிழ்நாட்டில் ஏதும் பெரிய புரட்சி நடந்துவிடாது… குடிப்பது குற்றமல்ல… குடித்துவிட்டு செய்யும் ஈன செயல்கள் தான் குற்றமே..

  2. சர்கரை தின்பதால்தான் நீரிழிவு நோய் வருதுன்னு இந்தியனோட ஒலகமகா கண்டுபிடிப்பு போதும் அவரு அறிவு மட்டம் என்னன்னு நாம புரிஞ்சுக்க…. சூப்பரு செவ்வாழ நீ கலக்கு…..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க