Thursday, December 5, 2024
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்காட்டுவேட்டை காசுவேட்டையானது !

காட்டுவேட்டை காசுவேட்டையானது !

-

மேஷ் பிரசாத், ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள குண்ட்டி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான பழங்குடியின இளைஞர். அவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியிலுள்ள கீழ்சந்தை போலீசு நிலையத்தில், “தனக்கு மத்திய ரிசர்வ் போலீசு படையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தினேஷ் பிரஜாபதி, ரவி போத்ரா ஆகிய இருவரும் தன்னிடமிருந்து இரண்டு இலட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக’’க் குற்றஞ்சுமத்தி புகார் ஒன்றை அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் தினேஷ் பிரஜாபதியும் ரவி போத்ராவும் கைது செய்யப்பட்டாலும், பமேஷ் பிரசாத்துக்கு வேலையும் கிடைக்கவில்லை, அவர் கையூட்டாக அளித்த பணமும் கிடைக்கவில்லை, அவர் அளித்த புகாரின் மீது மேற்கொண்டு விசாரணையும் நடக்கவில்லை.

பமேஷ் பிரசாத் ஏமாற்றப்பட்டிருப்பது, நாள்தோறும் நாடெங்கும் நடந்துவரும் சாதாரண “சீட்டிங்” விவகாரம் போன்றதல்ல. இந்தப் புகாரை முறையாக விசாரணை செய்தால், குற்றவாளிக் கூண்டில் தினேஷ் பிரஜாபதியும், ரவி போத்ராவும் மட்டும் நிற்கமாட்டார்கள். ஜார்கண்ட் மாநில போலீசும், அம்மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்காக இறங்கியிருக்கும் மைய ரிசர்வ் போலீசு படையும் (சி.ஆர்.பி.எஃப்.) கூண்டில் ஏற வேண்டியிருக்கும். ஏனெனில், பமேஷ் பிரசாத் அளித்துள்ள புகார் மைய ரிசர்வ் போலீசு படையும் ஜார்கண்ட் மாநில போலீசும் தேசப் பாதுகாப்பு, மாவோயிச தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடத்தியிருக்கும் மிகப்பெரும் கிரிமினல் மோசடித்தனத்தை, ஊழலை அம்பலப்படுத்தும் துருப்புச் சீட்டாக உள்ளது.

போலி மாவோயிஸ்டுகளாகத் தயாரிக்கப்பட்டு, சரணடையச் செய்யப்பட்ட பழங்குடியின இளைஞர்கள்.
சி.ஆர்.பி.எஃப் படை அதிகாரிகளால் போலி மாவோயிஸ்டுகளாகத் தயாரிக்கப்பட்டு, சரணடையச் செய்யப்பட்ட பழங்குடியின இளைஞர்கள்.

பமேஷ் பிரசாத்திடமிருந்து இரண்டு இலட்ச ரூபாயைப் பெற்றுக்கொண்ட தினேஷ் பிரஜாபதி, ரவி போத்ராவை பமேஷ் பிரசாத்திற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். ரவி போத்ரா பமேஷ் பிரசாத்திடம், “போலீசிடம் சரணடையும் மாவோயிச தீவிரவாதிகளை மைய ரிசர்வ் போலீசு படையில் சேர்த்துக் கொள்ளும் திட்டமொன்று உள்ளது. நீ செய்யவேண்டியதெல்லாம், நானொரு நக்சலைட்டு எனக் கூறி ஆயுதத்தோடு போலீசிடம் சரணடைந்து, சில மாதங்கள் சிறையில் கழிக்க வேண்டும். அதன் பிறகு திருந்திய தீவிரவாதி என்ற அடிப்படையில் மைய ரிசர்வ் போலீசு படையில் உனக்கு வேலை கிடைக்கும்” எனக் கூறியதற்கு ஏற்ப, ஆயுதத்தோடு சரணடைந்த பமேஷ் பிரசாத், ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் அமைந்துள்ள மைய ரிசர்வ் போலீசின் சிறப்பு அதிரடிப் படை (கோப்ரா படை) முகாமில் அடைக்கப்பட்டார்.

அந்த முகாமில் பமேஷ் பிரசாத் போலவே, பல நூறு பழங்குடியின இளைஞர்கள் – ஏறத்தாழ 514 பேர் – மாவோயிச தீவிரவாதி எனக் கூறி சரணடைந்து, மைய ரிசர்வ் போலீசு படையில் சேரும் கனவோடு நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட பழங்குடியின இளைஞர்கள். பத்தாவதோ, +2-வோ, ஐ.டி.ஐ படிப்போ முடித்துவிட்டு வேலைதேடி அலைந்தவர்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரவி போத்ராவையும், தினேஷ் பிரஜாபதியையும் தெரிந்திருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பழங்குடியின மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்களின் எதிர்பார்ப்பு ஒன்றாகவே இருந்தது. அரசுப் படையில் சேர்ந்துவிட்டால் தமது குடும்பத்தைப் பிடித்தாட்டும் வறுமையிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற ஆசையில், தமக்குச் சொந்தமான வயல்வெளிகளை விற்றுவிட்டோ, கடன் வாங்கியோ ஒரு இலட்ச ரூபாய் முதல் இரண்டரை இலட்ச ரூபாய் வரை இலஞ்சமாகக் கொடுத்துவிட்டு, அவர்கள் அம்முகாமை வந்தடைந்தனர். வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஆறு மாதம், ஒரு வருடம் என அந்த முகாமில் அடைபட்டு, வேலைக்கான உத்தரவு இன்றோ அல்லது நாளையோ வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் காத்துக் கிடந்து வந்தனர்.

07-sundara-kujurஆனால், பமேஷ் பிரசாத் உள்ளிட்டு, அவர்களுள் ஒருவருக்குக்கூட அரசுப் படையில் வேலை கிடைக்கவில்லை. மாறாக, சரணடைந்த தீவிரவாதி என்ற முத்திரையோடு அவர்கள் ராஞ்சி முகாமிலிருந்து துரத்தியடிக்கப்பட்டனர். இன்று அந்த முத்திரையே வேறு வேலை தேடுவதற்கு பெருந்தடையாக மாறிவிட்டது. கொடுத்த பணத்தை மீட்க அதிகார வர்க்கத்தோடு பமேஷ் பிரசாத் போராடிக் கொண்டிருக்கிறார் என்றால், சுந்தர குஜுர் 400 மைல்களுக்கு அப்பால் உ.பி.யிலுள்ள ஒரு செங்கல் சூளையில் கொத்தடிமையைப் போல வேலை பார்த்துவருகிறார். “இந்த விசயத்தில் ஒருபோதும் நீதி கிடைக்காது என்று எனக்குத் தெரியும். ஆனால், அடகு வைக்கப்பட்ட குடும்ப நிலத்தை மீட்க 40,000 ரூபாய் நான் சம்பாதிக்க வேண்டும் ” என்கிறார், அவர்.

0000

தேசப் பாதுகாப்பு, தேச ஒருமைப்பாடு, தீவிரவாத ஒழிப்பு என்ற பெயர்களில் இராணுவமும், போலீசும் போலி மோதல் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், கொட்டடிச் சித்திரவதைகளை நாடெங்கும் நடத்தி வருகின்றன. அப்பாவிகளைக்கூட மாவோயிச தீவிரவாதிகளாக, முசுலீம் தீவிரவாதிகளாக, அல்லது அவர்களது ஆதரவாளர்களாகப் பொய்க் குற்றஞ்சுமத்தி சிறையில் அடைத்து சித்திரவதை செய்து வருகின்றன. அத்தகைய குற்றங்களின் இன்னொரு பக்கம்தான் இந்தப் போலி மாவோயிஸ்டு சரணடைவு ஊழல். அவை மனித உரிமை மீறல் குற்றங்கள் என்றால், இந்த ஊழல் கடுந்தண்டனைக்குரிய சதி, மோசடி, அதிகார முறைகேடுகள் நிறைந்த கொடுங்குற்றம்.

மத்தியில் காங்கிரசு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபொழுது, இடதுசாரி தீவிரவாத அமைப்புகளிலிருந்து விலகி போலீசிடம் சரணடைபவர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வு நிதியைக் கூட்டித் தரப் போகும் திட்டம் அறிவிக்கப்பட்ட நேரத்தில்தான் ஜார்கண்டில் இந்த போலி மாவோயிஸ்டு சரணடைவு ஊழலும் தீவிரமாக நடந்தது. இந்த ஊழலின் வெளிப்புற முகமாக அம்பலமாகியிருக்கும் ரவி போத்ரா, சில்லறைத்தனமான போர்ஜரி வேலைகளைச் செய்யும் சாதாரண கிரிமினல் பேர்வழி அல்ல. போலீசாலும், இராணுவத்தாலும் தயார்படுத்தப்பட்டவன். நாகலாந்து மாநில போலீசில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றிய அவன், ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பணிநீக்கம் செயப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, நான்கே நாட்களில் பிணையில் வெளியே வந்தான். அதன் பிறகு, மணிப்பூர், அசாம் மாநிலங்களில் இராணுவத்திற்கு ஆள்காட்டியாக வேலை செய்திருக்கிறான்.

07-kuldeep-bharaஇந்த அனுபவம், தொடர்புகளோடு ஜார்கண்டிற்கு வந்து சேர்ந்த அவன், தன்னை ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியாகப் பழங்குடியின இளைஞர்களிடம் காட்டிக் கொண்டான். அவனின் இந்த “பில்ட்-அப்”பிற்கு அனைத்துமாக இருந்தது, சி.ஆர்.பி.எஃப். படை. அவன் ஊரைச் சுற்றி வருவதற்கு சி.ஆர்.பி.எஃப்.க்குச் சொந்தமான ஜீப்பும் அவனுக்கு சி.ஆர்.பி.எஃப். சிப்பாகளின் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இதன் மூலம் அவனது மோசடி வேடத்திற்கு ஒரு நம்பகத்தன்மை உருவாக்கப்பட்டது.

இந்தப் போலி மாவோயிஸ்டு சரணடைவு ஜார்கண்டு மாநில போலீசு டி.ஜி.பி. ஜி.எஸ்.ராத் முன்னிலையிலும் நடந்தது. சரணடைந்த இளைஞர்களுள் ஒருவர்கூடச் சிறையில் அடைக்கப்படவில்லை. அவர்கள் மீது எந்த வழக்கும் புனையப்படவில்லை. மாறாக, அவர்கள் அனைவரும் மத்திய ரிசர்வ் படையின் முகாமில் அடைக்கப்பட்டு, அம்முகாமும் மத்திய ரிசர்வ் போலீசு படையாலேயே பாதுகாக்கப்பட்டது. அவர்களுக்குத் தேவையான உணவு ராஞ்சியிலுள்ள மத்திய சிறைச்சாலையிலிருந்து போலீசு அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவின் மூலம் அனுப்பப்பட்டிருக்கிறது.

முகாமில் இருந்த இளைஞர்கள் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் போலீசுக்குரிய உடற்பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் விரும்பினால் நகரத்திற்குள் சென்றுவரவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் சொந்த கிராமத்திற்கு ரிசர்வ் போலீசு படையின் வாகனங்களில் சென்று திரும்பியிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்த கிராமத்துப் பழங்குடியின இளைஞர்கள் ஒருவர் பின் ஒருவராக இந்த மோசடி வலைக்குள் விழுந்துள்ளனர். இந்த 514 பேரிடமும் தலைக்கு ஒன்று முதல் இரண்டரை இலட்சம் ரூபாய் வரை இலஞ்சம் பெறப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, தீவிரவாதிகள் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் இவர்களுக்கு அரசு கொடுத்த நிதியையும் போலீசும் மத்திய ரிசர்வ் போலீசு படையும் பங்கு வைத்து சுருட்டிக் கொண்டுவிட்டன.

07-karam-dayal-tikkaஇந்த 514 பேரும் கையில் நவீன ஆயுதங்களுடன் ஜார்கண்ட் மாநில போலீசிடம் சரணடைந்துள்ளனர். இந்தப் போலி மாவோயிஸ்டு சரணடைவு ஊழலே மத்திய ரிசர்வ் போலீசு படையும் ஜார்கண்ட் மாநில போலீசும் நடத்திய சதி என்பதால், அந்தப் படைகளின் அதிகாரிகளைத் தவிர, வேறு வழியில் இந்த நவீன ஆயுதங்கள் சரணடைந்த பழங்குடியின இளைஞர்களுக்குக் கிடைத்திருக்க முடியாது. இத்துணை பெரும் தொகையிலான, பல்வேறுவிதமான ஆயுதங்களை போலீசு அதிகாரிகள் சப்ளை செய்திருக்கிறார்கள் என்பது, எவ்விதக் கணக்கிலும் வராத, சட்டவிரோதமான, கள்ளத்தனமான ஆயுதக் கிடங்குகளை போலீசும் துணை இராணுவமும் நடத்திவருவதை அம்பலப்படுத்துகிறது.

2012-ம் ஆண்டின் இறுதியில் மத்திய ரிசர்வ் போலீசு படையில் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்ட எம்.வி.ராவ், ராஞ்சி முகாமில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் குறித்துப் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி, இது குறித்து விசாரிக்குமாறு ஜார்கண்ட் மாநில போலீசுக்குக் கடிதம் எழுதினார். இதன் பிறகு, முகாமில் இருந்த இளைஞர்களைச் சொந்த ஊருக்குத் துரத்தியடித்ததுதான் நடந்ததேயொழிய, விசாரணை எதுவும் நடைபெறவில்லை. பமேஷ் பிரசாத் மார்ச் 2014-ல் போலீசில் புகார் கொடுத்த பிறகு ரவி போத்ராவும் தினேஷ் பிரஜாபதியும் கைது செயப்பட்டு, இந்தப் புகார் குறித்த விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப் போவதாக சவுண்டு விடப்பட்டதைத் தாண்டி எதுவும் நடைபெறவில்லை.

07-vijay-kobe“போலீசு மற்றும் சி.ஆர்.பி.எஃப். அதிகாரிகள்தான் தன்னை இயக்கியதாக” ரவி போத்ரா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பிறகும்கூட எந்தவொரு அதிகாரியும், போலீசுக்காரனும் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. மூத்த வழக்குரைஞரான ராஜீவ் குமார், “இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” எனக் கோரி ஜார்கண்ட் உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த ஊழல் புகாரை முறையாக விசாரிக்கத் தொடங்கினால் பல உயர் போலீசு அதிகாரிகள் மாட்டிக் கொள்வார்கள் என்பது மட்டுமல்ல; சரணடைந்த இடதுசாரி தீவிரவாதிகள் மறுவாழ்வுத் திட்டம் என்பதே துணை இராணுவப் படைகளும், போலீசும் கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடாக இருந்துவருவதும் அம்பலமாகிவிடும் என்பதால்தான் இந்த ஊழல் புகாரை ஊறுகாய் பானைக்குள் போட்டு வைத்திருக்கிறது, அரசு.

07-krishna-oranபமேஷ் பிரசாத், சுந்தர குஜுர், குல்தீப் பாரா, தேவ்தத் கோபே, சுக்தேவ் முண்டா, ரோஷன் குடியா, கரம் தயாள் டிக்கா, ரோஷன் திர்கே, அம்ரித் பிரகாஷ் திர்கே, விஜ கோபே – என இந்த மோசடியில் சிக்கவைக்கப்பட்ட ஒவ்வொருவரின் எதிர்காலமும் இன்று இருண்டு போவிட்டது. அவர்கள் அனைவரும் இன்று அரசிடம் வேலை கேட்கவில்லை. தங்களை ஏமாற்றி பறிக்கப்பட்ட பணத்தைக் கேட்கவில்லை. மாறாக, தங்கள் பகுதி போலீசு நிலையத்திலிருந்து, “நாங்கள் மாவோயிச தீவிரவாதி இல்லை” என்ற நன்னடத்தைச் சான்றிதழை வழங்குமாறுதான் கோருகிறார்கள். இந்த 514 பேரும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை ஒத்துக்கொண்டுள்ள அரசாங்கமோ, இந்த மோசடி குறித்து விசாரணையும் நடத்தவில்லை. அவர்கள் கோருகிற நன்னடத்தைச் சான்றிதழையும் வழங்க மறுக்கிறது.

எப்பேர்பட்ட பொறுப்பற்ற, இரக்கமற்ற, மோசடியான அரசு அமைப்பின் கீழ் வாழுமாறு நாம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம் என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டியிருப்பதை வாசகர்கள் நிச்சயம் உணர முடியும். ஆனால், நாம் புரிந்துகொள்ள வேண்டியது இதனை மட்டுமல்ல. மாவோயிச தீவிரவாதம்தான் மிகப் பெரும் உள்நாட்டு அபாயம் என்றும், நாட்டின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் எதிரானது என்றும் முத்திரை குத்தி, அதனை ஒழிப்பதற்காகப் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் வெளிப்படையாக மட்டுமின்றி, நாடாளுமன்றத்துக்கே தெரியாமல் இரகசியமாகவும் செலவழிக்கப்படுகிறது. அரசுப் படைகள் மாவோயிச தீவிரவாதத்துக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்துப் போராடுவதாகவும், அதனால் அப்போரில் நடைபெறும் அத்துமீறல்களைப் பெரிதுபடுத்தக் கூடாதென்றும் கூறி, அரசுப் படைகளின் மனித உரிமை மீறல்களுக்கு வக்காலத்து வாங்கப்படுகிறது.

ஆனால், ஜார்கண்டில் நடந்துள்ள இந்த ஊழல் “மாவோயிச தீவிரவாதத்தை ஒழிப்பது” என்ற கடமையை நிறைவேற்றுவதற்காகப் போராடிக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் துணை இராணுவப் படையும், போலீசும், ஐ.பி.எஸ். அதிகாரிகளும் போலியான மாவோயிஸ்டுகளை உருவாக்கியிருப்பதை அம்பலப்படுத்துகிறது. அரசுப் படைகள் தாம் நிறைவேற்ற வேண்டிய கடமைக்கு எதிராகச் செயல்பட்டிருப்பதை அம்பலப்படுத்துகிறது. கேள்விக்கிடமற்ற புனிதக் கடமைகளாகக் கூறப்படும் தேசப் பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு போன்றவற்றைக்கூட அதிகார வர்க்கம் தனது சொந்த ஆதாய நோக்கிலிருந்து மட்டுமே அணுகியிருப்பதை, அதற்கு அப்பால் அக்‘கடமைகளின்’பால் அவர்களுக்கு எவ்வித அக்கறையும் கிடையாது என்பதை அம்பலப்படுத்துகிறது. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட கடமையை நிறைவேற்றும் தகுதியும் நம்பகத்தன்மையும் இல்லாத, கொள்ளைக்கூட்டமாக அரசுப் படைகள் சீரழிந்து நிற்பதை அம்பலப்படுத்துகிறது.

வேலியே பயிரை மேய்வதா என்பன போன்ற அறத்திற்கெல்லாம் இப்பொழுது அதிகாரக் கட்டமைப்பில் இடமில்ல. மாறாக, பயிரை மேய்வதே வேலியின் கடமை என்பதாக அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளும், இந்த அதிகார கட்டமைப்பும் மாறிவிட்டதைதான் இத்தகைய ஊழல்களும், அதிகார முறைகேடுகளும், மனித உரிமை மீறல்களும் எடுத்துக்காட்டுகின்றன.

– செல்வம்

________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2015
________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க