Tuesday, December 1, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி அரசுப் பள்ளியில் புகும் ஆர்.எஸ்.எஸ். ஆமை !

அரசுப் பள்ளியில் புகும் ஆர்.எஸ்.எஸ். ஆமை !

-

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை மாதம் 23, 24 தேதிகளில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் பிள்ளையார் சுழியின் முக்கியத்துவம் குறித்து போதிக்கப்பட்டிருக்கிறது. “கடவுள் துகளையே” கண்டுபிடிக்கும் அளவிற்கு அறிவியல் வளர்ந்துவிட்ட நிலையில் பிள்ளையார் சுழியின் முக்கியத்துவம் குறித்து வகுப்பா? என இதைப் படிக்கும் வாசகர்களுக்குத் தலையில் அடித்துக்கொள்ளத் தோன்றலாம். ஆனால், இந்த விசயம் இப்படி சலித்துக்கொண்டு ஒதுக்கிவிடக்கூடிய அளவிற்கு சாதாரணமானது அல்ல. ஏனெனில், “அது பயிற்சி வகுப்பு என்ற போர்வையில் நடத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஷாகா” என்பதையும், “பள்ளிக்கல்வித் துறையே உத்தரவு போட்டு அரசுப்பள்ளி ஆசிரியர்களை அனுப்பி வைத்திருப்பதையும்” அவ்வகுப்பில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் நக்கீரன் இதழ் (ஆக.08-11, பக்.10) வழியாக அம்பலப்படுத்தியுள்ளனர்.

சென்னையிலுள்ள பார்ப்பன சேரியான மயிலாப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள அறம் மற்றும் பண்பாட்டு முனைவு மையம் என்ற அமைப்புதான் இப்பயிற்சி வகுப்பை ஒழுங்குசெய்து நடத்தியிருக்கிறது. இந்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.-ன் விஷக் கொடுக்குகளுள் ஒன்று. தயானந்த சரசுவதி, ஆடிட்டர் குருமூர்த்தி, பத்மா சுப்பிரமணியன், திருமதி ஒ.ஜி.பார்த்தசாரதி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்-க்கு நெருக்கமான தமிழகத்துப் பார்ப்பன கும்பல்தான் அவ்வமைப்பிற்குத் தலைமையேற்றுள்ளது. இந்த விவரங்களெல்லாம் பார்ப்பன ஜெயா அரசுக்கும் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கும் தெரியாத விடயமல்ல. ஆசிரியர் பயிற்சி வகுப்பு என்ற பெயரில் அங்கு பார்ப்பன மூடக் கருத்துகளும், ஆர்.எஸ்.எஸ்.இன் அரசியலும்தான் ஆசிரியர்களின் மூளையில் திணிக்கப்படும் எனத் தெரிந்தேதான், பள்ளிக்கல்வித் துறை ஒவ்வொரு அரசுப் பள்ளியும் தலா ஒரு ஆசிரியரை அப்பயிற்சி வகுப்புக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. எனில், ஜெயா அரசு-ஆர்.எஸ்.எஸ்-க்கு இடையே உள்ள இந்தக் கூட்டின் உள்நோக்கமென்ன என்ற கேள்வி முக்கியமானது.

இன்று இரண்டு அபாயங்கள் தமிழக பள்ளிக் கல்வியைக் கவ்வக் காத்திருக்கின்றன. ஒன்று, மொழிப் பாடத்திட்டத்தில் மீண்டும் இந்தியைத் திணிப்பதற்கு கமுக்கமாக நடைபெற்றுவரும் முயற்சிகள்; மற்றொன்று, அரசுப் பள்ளிகளில் பார்ப்பனப் பண்பாட்டைத் திணிக்கும் முயற்சி. இந்த வகுப்பு அந்த முயற்சிகளின் முன்னறிவிப்பு.

05-rss-imposing-on-education

இப்பயிற்சியின் தொடக்கமே ஆர்.எஸ்.எஸ்.இன் ‘தேசிய’த் திட்டமான கோமாதாவைக் காப்பதை வலியுறுத்துவதாக அமைந்தது. அதனை நேரடியாகச் சொல்லாமல், “சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டும், வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும்; யானை, பாம்பு, மாடு ஆகிய விலங்குகளைக் கொல்லக்கூடாது” என ஜீவகாருண்யவாதிகள் போல பேசத் தொடங்கி, “இதையெல்லாம் புனிதமா மதிக்கணும்” என முடித்துத் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டுள்ளனர்.

இதனையடுத்து, “துவ்ருக்ஷா வந்தனம், துளசி வந்தனம், பூமி வந்தனம், பித்ரு வந்தனம், சுவாசினி வந்தனம், பாரத் மாதா/பரம்வீர் வந்தனம் என்ற ஆறுவிதமான சமஸ்காரங்களைப் பண்ண வேண்டும்” எனப் பார்ப்பன சடங்குகளைப் பற்றியும், பிள்ளையார் சுழியின் முக்கியத்துவம் குறித்தும் பிரசங்கம் நடந்திருக்கிறது. “இந்தியாவோட ஒற்றுமை நமக்கு முக்கியம். அதற்கு இந்து மத கலாச்சராம்தான் சரியாக இருக்கும்” என உபதேசம் செய்திருக்கிறார், சனாதன தீவிரவாதி ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி.

பயிற்சிக்கு வந்திருந்த ஆசிரியர்களுள் ஒருசாரர் இந்தப் பார்ப்பன கதாகலாட்சேபத்திற்கு அங்கேயே எதிர்ப்பு தெரிவித்ததோடு, “பசு புனிதமென்றால், ஆடு, கோழி எல்லாம் புனிதமில்லையா?” என்று திருப்பி அடித்து ஆர்.எஸ்.எஸ். கும்பலின் மூக்கை உடைத்துள்ளனர். மேலும், “இது என்ன ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியா, நீங்க என்ன ஆர்.எஸ்.எஸ்.யூனிட்டா?” எனக் கேட்டு அக்கும்பலின் முகத்திரையைக் கிழித்துள்ளனர். இந்த அயோக்கியத்தனம் பத்திரிகைகளின் வாயிலாக அம்பலப்பட்ட பிறகு, “இது பற்றி விசாரணை நடத்தப்படும்” என சால்ஜாப்புகள் நிறைந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது, பள்ளிக்கல்வித் துறை.

தற்பொழுதுள்ள 10+2+3 என்ற கல்வி முறையையும் பாடத்திட்டத்தையும் முழுமையாக மாற்றி, பள்ளிக் கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வியைக் காவிமயமாக்கும் நோக்கில் புதிய கல்விக் கொள்கையை வகுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது, மோடி அரசு. இதற்காக ஆர்.எஸ்.எஸ்.-ன் குட்டிகளுள் ஒன்றான பாரதிய சிக்ஷா மண்டல் புதிய கல்வித் திட்டத்தை மத்திய அரசிடம் வழங்கியிருப்பதாகவும், அவ்வமைப்பின் தலைமையில் இராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

மீண்டும் மும்மொழிக் கொள்கையைக் கொண்டுவருவது இப்புதிய கல்விக் கொள்கையின் ஓர் அம்சமாக உள்ளது. இப்புதிய கல்விக் கொள்கையையும், பாடத் திட்டத்தில் மும்மொழிக் கொள்கையோடு, சமஸ்கிருதத்தையும் பள்ளிக் கல்வியில் சேர்ப்பது தொடர்பாகவும் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் கருத்தரங்குகளை நடத்தி வருகிறது, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திடம் இக்கருத்தரங்களை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, மதுரை, கோவை, சென்னை ஆகிய மூன்று நகரங்களில் கருத்தரங்குகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இக்கருத்தரங்குகளில் 13 தலைப்புகளின் கீழ் கருத்துக் கேட்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும், அதில் 11-வது தலைப்பின் கீழ் மும்மொழிக் கொள்கை மற்றும் சமஸ்கிருதத்தை வளர்ப்பது தொடர்பாக 9 வகையான கேள்விகள் இடம்பெற்றிருப்பதாகக் கல்வியாளர்கள் கூறியிருக்கின்றனர்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் மொழிப் பாடமாக பயிற்றுவிக்க வேண்டும் என 2006-ல் சட்டம் கொண்டு வரப்பட்டு, அச்சட்டம் இந்தக் கல்வியாண்டு முதல் கட்டாயமாகிறது. இச்சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்திலும், அதன் மதுரை கிளையிலும் நிலுவையில் உள்ளன. இச்சட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடையேதும் விதிக்கவில்லை என்றபோதும், தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகள் – மெட்ரிக் மற்றும் நடுவண் வாரியப் பள்ளிகள் (சி.பி.எஸ்.இ.) இச்சட்டத்தை ஒருபொருட்டாக மதிப்பதேயில்லை. அப்பள்ளிகளில் தமிழ் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது. குறிப்பாக, நடுவண் வாரியப் பள்ளிகளில் ஒரு வாரத்திற்கு 20 முதல் 40 நிமிடம் மட்டுமே கற்பிக்கப்படும் அளவிற்கு தமிழ் தீண்டத்தகாத மொழியாக ஒதுக்கப்பட்டுவிட்டது.

தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகள் தமிழைத் தீண்டத்தகாத மொழியாகப் புறக்கணித்துள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் மட்டும்தான் தமிழ் முதன்மைப் பாடமொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருந்துவருகிறது. அதற்கும் வேட்டு வைக்கும் வகையில் ஒருபுறம் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் தீவிரமாகத் திணித்துவருகிறது, பார்ப்பன ஜெயா அரசு. இன்னொருபுறம் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் அரசுப் பள்ளிகளிலும் திணிப்பதற்கான ஏற்பாடுகளில் மோடி அரசோடு கைகோர்த்துச் செயல்படத் துணிந்திருக்கிறது. இவற்றுக்கு அப்பால் அரசுப் பள்ளிகளில் பார்ப்பன பண்பாட்டைத் திணிப்பதற்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்துவருகிறது, ஜெயா கும்பல்.

கல்லூரிகளில் மட்டுமின்றி, அரசுப் பள்ளிகளில்கூட மாணவர்கள் சாதிரீதியாகப் பிரிந்து மோதிக்கொள்ளும் போக்கு அதிகரித்து வரும் வேளையில்; கல்லூரி மாணவர்களிடேயே போராட்டக் குணம் மழுங்கடிக்கப்பட்டு, சுயநலமும், பிழைப்புவாதமும், சீரழிவும் அதிகரித்துள்ள நிலையில், கல்வித் திட்டத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பையும், பார்ப்பன பண்பாட்டுத் திணிப்பையும் வெற்றிகரமாக நிறைவேற்றிவிட முடியும் என மனப்பால் குடிக்கிறது, பார்ப்பனக் கும்பல். 1965-களில் நடந்த மாணவர் போராட்டத்தைப் போன்றதொரு வலிமையான போராட்டத்தை இப்பார்ப்பன சதிக்கு எதிராகத் தமிழக மாணவ சமுதாயம் நடத்தத் துணியாவிட்டால், சுயமரியாதை மரபு கொண்ட தமிழகம் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலின் அடிமையாக மாற்றப்படுவதைத் தடுத்துவிட முடியாது.

– குப்பன்
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2015
________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க