Thursday, May 13, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க தருமபுரி : வேலை வாய்ப்பு முகாமா ? வெறுப்பேற்றும் முகாமா?

தருமபுரி : வேலை வாய்ப்பு முகாமா ? வெறுப்பேற்றும் முகாமா?

-

ஜெயா அரசு திவால்
வேலைவாய்ப்பே இல்லை, வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது, அரசு வேலை கொடுக்க வக்கற்றதாகிவிட்டது

“100 கோடி ரூபாய் செலவில் 5000 முதலீட்டாளர்களை குவித்து மாநாடு”, “2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணி வருவாய்”, “இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை” என மக்களிடையே பகட்டு பிரச்சாரத்துடன், சென்னையில் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டைநடத்தியது ஜெயா அரசு. இந்த நாடகத்தை முடித்த கையோடு, ஏற்கனவே திட்டமிட்ட வகையில், தருமபுரியில் வேலையில்லாதவர்களுக்கு வேலைகொடுப்பதாக ஒரு நாடகத்தையும் அண்மையில் நடத்தி முடித்தது.

வேலைவாய்ப்பே இல்லை, வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது, அரசு வேலை கொடுக்க வக்கற்றதாகிவிட்டது என்பதை பகிரங்கமாக அறிவிப்பதுதான், தருமபுரியில் நடத்தப்பட்ட இந்த தனியார் நிறுவன ஆள் சேர்ப்பு முகாம்.

“அம்மா தொலை நோக்குப்பார்வையில் உருவான தனியார் நிறுவனங்களில் ஆள் சேர்ப்பு முகாம்” என்கிற பெயரில் “300-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 10,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை”, “முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு இலவச உணவு, பேருந்து வசதி”என தருமபுரி மாவட்டம் முழுவதும் பார்க்கும் இடங்களிலெல்லாம் வானுயர தட்டிகள், கண்கவர் பேனர்கள் என விளம்பரம் தருமபுரி மக்களைத் திணறடித்தது. வேலையில்லா பட்டதாரிகளை ஈர்த்தது. 12-09-2015 அன்று காலை முகாமும் தொடங்கியது.

ஜெயா அரசு தோல்வி
“இலவசம்னுதான் போட்டுயிருந்தாங்க. ஆனா காசு வாங்கசொல்லுறாங்க”, “அதே போலத்தான் வேல கொடுக்கிறன்னு கூப்பிடுவாங்க. ஆனா வேல தரமாட்டாங்க”

காலை 7 மணி, பென்னாகரம் பேருந்து நிலையத்தில் முகாமில் கலந்து கொள்ளவதற்காக இளைஞர் பலர் சிறப்பு பஸ்சில் முண்டியடித்துக்கொண்டு ஏறினார்கள். வழக்கம் போல, கண்டக்டர் டிக்கெட் கேட்டார். இதனைக் கேட்டதும், பலரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது அதில் இருந்த பெண்கள், “என்னாங்க எல்லா இலவசம்னு சொன்னாங்க, எதுக்கு காசு கேட்கிறீங்க” என்று ஆவேசமாகக் கேட்டனர். அதற்கு கண்டக்டர், “இலவசம்னுதான் போட்டுயிருந்தாங்க. ஆனா காசு வாங்கச் சொல்லுறாங்க”, ”அதே போலத்தான் வேல கொடுக்கிறன்னு கூப்பிடுவாங்க. ஆனா வேல தரமாட்டாங்க” என்றார். அங்கேயேஏமாற்றம் தலை தூக்கத் தொடங்கியது. ஆனால், எப்படியாவது வேல கெடச்சா போதும் என்ற ஏக்கத்தோடு முகாமை நோக்கி பயணித்தார்கள்.

வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள், ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் என சுமார் 1,00,000 பேர் குவிந்தனர். “வேல கெடக்கிறதெல்லாம் அதிஷ்டம்தான் மச்சி எதுக்கும் அட்டன்ட் பன்னி பார்க்கலாம்” என்று பலரும் புலம்பிக்கொண்டே நுழைந்தனர். மற்றொரு புறமோ, அம்மாவின் நலத்திட்ட உதவிகளை பற்றி “நான்காண்டு ஆட்சி, நாடு போற்றும் வளர்ச்சி” என்று அ.தி.மு.க காரர்கள் பேசிக்கொண்டு இருந்ததும் காதிலே விழுந்தது.

வேலை வாய்ப்பு முகாம் மோசடி
கண் துடைப்பு முகாம் என்ற அங்கீகாரமும் இந்த முகாமிற்கு கொடுக்க முடியாது. ஏனென்றால், எந்த எந்த நிறுவனங்கள் வந்திருக்கின்றன என்ற

கண் துடைப்பு முகாம் என்ற அங்கீகாரமும் இந்த முகாமிற்கு கொடுக்க முடியாது. ஏனென்றால், எந்த எந்த நிறுவனங்கள் வந்திருக்கின்றன என்ற விவரமே இல்லை. பலரும், “எந்த கம்பெனி, கவர்மெண்டு வேலையா” என்று அருகில் உள்ளவர்களுடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போதுதான், அடுத்த அதிர்ச்சி காத்திருந்த்து. எல்லோரையும் மண் தரையில் வரிசையாக உட்காரச் சொன்னார்கள். பலரும் மரத்தடிப்பள்ளியில் உட்கார்ந்த நினைவுகளை நினைவு கூர்ந்து கொண்டனர். வரிசை நகர நகர அப்படியே நகர்ந்து உட்கார்ந்தனர். உள்ளே எந்த கம்பெனி என்ற ஆவல் இவர்களது துணியெல்லாம் மண் ஆவதைக் கூட கவனிக்க வைக்கவில்லை.

ஒருவழியாக, அலுவகத்திற்குள் சென்றனர். அங்கேதான் கடைசி அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அதிர்ச்சி வேலை தர இருப்பதாக வந்துள்ள ‘கம்பெனிக்ளைப்’ பார்த்துதான். ஆமாம், துணிக்கடை காரர்களும் (தீபா சில்க்ஸ்), மளிகைக் கடைக் காரர்களும், ஏ.பி.டி பார்சல் சர்வீஸ் என பெரும் படையே ஆள் எடுப்பதற்கு அமர்ந்திருந்தது. அதுமட்டுமல்ல, சான்றிதழ்களை வாங்கிக்கொண்டு, ஒரு வாரத்திற்குள் தகவல் வரும் என்று வேறு தெரிவித்தனர். அதை பார்த்த மற்றவர்கள், முகாமில் கலந்து கொள்ளாமலேயே ஏமாற்றத்தோடும், அதிர்ச்சியோடும், விரக்தியோடும் செய்வது அறியாமல் திகைத்து அருகிலே இருக்கும் வயல்வெளியிலும், மரத்தடி நிழலிலும் அமர்ந்திருந்தனர். சில இளைஞர்கள், உள்ளே செல்பவர்களிடம், ”டாஸ்மாக்குல சிக்கன்கபாப் விக்குறவன் எவனாவது அசிஸ்டெண்ட் வேணும்னு வந்திருக்கப் போறண்டா, உசாரா இருடா” என்று கிண்டலடித்துக் கொண்டே சென்றனர்.

இந்த நிலைமையில் ஏமாற்றமுமடைந்த பல இளைஞர்கள், பட்டதாரிப் பெண்கள் வீட்டிற்கு செல்ல மனமில்லாமல், மரத்தடியிலும் அருகில் உள்ள வயல்வெளியிலும் அமர்ந்திருர்ந்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த சக்தி
பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த சக்தி

அவர்களில் ஒருவர், பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த சக்தி. அவரிடம் பேசும் போது, “நான் 6 லட்சம்ரூபாய் செலவு பண்ணிட்டு இன்ஜினியர் முடிச்சியிருக்கிறேன். ஏதோ எனக்கு ஏற்றவாறு பெரிய கம்பெனி வந்திருக்கும்னுதான் வந்தேன். இங்க வந்து பார்த்தா தான் தெரியுது எங்க வீட்டுக்கு பின்னாடி இருக்கிற கடையெல்லாம் வந்திருக்குது. அத பார்த்த உடனே நான் வெக்சாயி வெளியில வந்துட்டேன். இதெல்லாம் ஏமாற்று வேலை, அவங்க கட்சிய பிரபலப்படுத்துறதுக்காக நடத்துற நாடகம். நீங்களே பாருங்க யாரோட முகத்திலையாவது சந்தோஷம் இருக்குதான்னு, எல்லாருமே சோர்ந்து போய் தான் வர்றாங்க” என்றார் குமுறலுடன்.

மற்றொரு பட்டதாரி, சரவணன், தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். “நான் எம்.எஸ்சி, பி.எட். முடிச்சிருக்கேன். ஏதாவது கம்பெனியில சூப்பர்வைசர் வேல கெடச்சா போயிடுலாம்னு நெனச்சிதான் வந்தேன். இங்க போகும் போது எம்.எஸ்.சி. படிச்சவங்கயெல்லாம் எதுக்கு வர்றீங்கனு கேட்குறாங்க. அதுக்கு PG-யை விட்டுங்க UG-யை எடுத்துக்கோங்க என்றேன். அதுக்கப்புறம், டாடா டோகோமா_வுல கஸ்டமர் கேர்க்கு எடுத்துக்கிட்டு அப்புறம் போன் பண்ணுவோம் என்று எந்த ரெஸ்பான்சும் கொடுக்காம வெளியில அனுப்பிட்டாங்க. அதை கேட்டவுடனே நொந்து போய்ட்டேன்” என்றவர், அங்கு கொடுத்த அடையாளச் சீட்டை எடுத்து வைத்துக் கொண்டார்.

சரவணன் எம்.எஸ்சி, பி.எட்.
சரவணன் எம்.எஸ்சி, பி.எட்.

“வீட்டில் கேட்டால் என்ன சொல்வீங்க” என்றதுக்கு, “இந்தச் சீட்டையாவது வீட்டுல காட்டுனா கொஞ்சம் சந்தோஷப்படுவாங்க” என்றார் வேதனையோடு. “இதுக்கு பேரு தொலைநோக்குத்திட்டம்னு தம்பட்டம் அடிச்சிக்கிறாங்க. சின்ன கடைங்களுக்கு போய் நம்மலே வேலை கேட்டா, வேல இருக்கா, இல்லையானு சொல்லப்போறாங்க. இதுக்கு ஒரு முகாமா” என்று திட்டியபடியே நடந்தார்.

மற்றொருவர், லதா கூறுகையில், “நான் 10 வது படிச்சியிருக்கேன். 2 இடத்தில வீட்டுவேலை செய்யிறேன். ஒரு வீட்டுக்கு 1000 ரூபா தர்றாங்க. எங்க வீட்டுக்காரர் கூலிக்கு ஆட்டோ ஒட்டுறாரு. சம்பாதிக்குற காசுல பாதிய குடிச்சிட்டு வந்துடுவாரு. அப்புறம் எப்படி குடும்பத்தை ஓட்டுறது. அதனால தான் இங்க வந்தேன். பக்கத்துல இருக்குற நூல் மில்லுக்குதான் கொடுத்துட்டு வந்திருக்கிறேன். பிறகு போன் பண்ணுறதா சொல்லியிருக்காங்க, கூப்பிடுறாங்களோ? இல்லையோ தெரியல?” என்றார் தாழ்ந்த குரலில்.

இப்படி முகாமில் வந்த பலரும் தங்களது ஏமாற்றத்தையும் ஏக்கத்தையும் துன்பத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

***

வேலை வாய்ப்பு முகாம் நாடகம்
இஞ்ஜினியரிங் படித்தால் வேலை; ஐ.டி.ஐ படித்தால் வேலை, டிப்ளமோ படித்தால் வேலை, BBA, MBA என்று ரகரகமாக படித்தால் வேலை கிடைக்கும் என்று ஆசை யூட்டி, படிக்க வைக்கும் போதே தொடங்கிவிட்டது, நாடகம்.

ருமபுரி மாவட்டம் என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது வறட்சி மாவட்டம், பின்தங்கிய மாவட்டம் என்பதுதான். இந்த மாவட்டத்தில் குறிப்பாக விவசாயம் பொய்த்து போய் அண்டைய மாநிலங்களுக்கு வேலை தேடி ஓடுவது மிக அதிகம். மேலும், ‘சுயதொழில்’ (அதாவது கோழி வியாபாரம், துணி வியாபாரம்) செய்து பிழைப்பை நடத்த வட்டிக்கு வாங்கி கந்துவட்டிக்கு பலியாகின்றனர் பலர். வியாபாரம் சரியாக இல்லாமலும் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்துள்ளது. சென்ற ஒரே வாரத்தில் 3 தற்கொலைகள் நெஞ்சை உருக்கும் வகையிலான சம்பவமங்கள் நடந்து கொண்டியிருக்கின்றன. இதனை கண்டுகொள்ளாத அரசாங்கம் டாஸ்மாக்கை திறந்து வைத்து பல குடும்பங்களின் வருமானத்தை பிக்பாக்கெட் அடித்துவருகிறது. இதனால், குடும்பத்தை நடத்த முடியாமல், உள்ளூரில் கூலி வேலையும் கிடைக்காமல் குழந்தைகளை விட்டுவிட்டு பெண்களும் நகரத்தை நோக்கி வேலைக்குச் செல்வது அதிகரித்து வருகிறது.

மக்களை தரித்திரத்துக்கு தள்ளிவிட்டு, அதற்கு நிவாரணமும் செய்வதாக நாடகமாடுகிறது ஜெயா அரசு. மொத்தத்தில், இந்த அரசு ஆளத் தகுதியிழந்து விட்டது.

இந்த வேலை வாய்ப்பு முகாம் என்பது ஓட்டுப் பொறுக்குவதற்கான நாடகம் என்று பலர் உணர்ந்துள்ளனர். ஆனால், நாடகம் இங்கே தொடங்கவில்லை. இஞ்ஜினியரிங் படித்தால் வேலை; ஐ.டி.ஐ படித்தால் வேலை, டிப்ளமோ படித்தால் வேலை, BBA, MBA என்று ரகரகமாக படித்தால் வேலை கிடைக்கும் என்று ஆசை யூட்டி, படிக்க வைக்கும் போதே தொடங்கிவிட்டது. அந்த நாடகத்தின் இறுதியான இடம் தான் வேலைதேடுவது.

ஒரு இளைஞன், பெண்ணின் வாழ்க்கை நெருக்கடியின் குறைந்த பட்ச தேவைகளுக்காகத்தான் பலரும் வேலைதேடி வருகின்றனர். இவர்களின் மன வேதனையை சொல்லி மாளாது. இருந்தாலும், இந்த வேதனைக்கு இந்த முகாம், கல்லூரிகளில் நடக்கும் “காம்பஸ் இண்டர்வியூ” என்ற அளவிற்கு கண் துடைப்பாகக் கூட அமையவில்லை என்பதுதான் சிலரது வருத்தம்.

மருத்துவம், கல்வி, குடிநீர், சுகாதாரம், வேலைவாய்ப்பு என எல்லாவற்றிலும் புறக்கணிக்கப்படுகின்ற இளைய சமுதயாத்திற்கு முகாம் தேவைதான். அது அம்மா நடத்தும் முகாமல்ல. இந்த அரசின் அதிகாரத்தைப் பறித்து அனைவருக்கும் வேலை, இலவசக் கல்வி, இலவச மருத்துவம், சுகாதாரம் போன்றவற்றை உத்திரவாதம் செய்வது எப்படி என சிந்திக்கும் முகாம்தான் இன்றைய தேவை!

– பு.ஜ.செய்தியாளர்
பென்னாகரம்.

  1. //மக்களை தரித்திரத்துக்கு தள்ளிவிட்டு, அதற்கு நிவாரணமும் செய்வதாக நாடகமாடுகிறது ஜெயா அரசு. மொத்தத்தில், இந்த அரசு ஆளத் தகுதியிழந்து விட்டது.//

    அது சரி, தேர்தல் பாதையே ஒரு சீரழிந்த பாதை. இந்த பாதையில் நல்லவர்கள் வந்தாலே நிலை தவறித் தான் போவார்கள் எனும் பொழுது, தற்பொழுது ஆள்பவர்களை பற்றி கேட்கவா வேண்டும். ஒரு (முன்னாள்) ஆட்டக்காரி(நடிகை) நாட்டை ஆட்சி செய்தால் வேறு எப்படி இருக்கும், இப்படித் தான் இருக்கும். வோட்டு போட்ட மக்களையே முக்கறுப்பு செய்து அசிங்கப் படுத்துவது என்பது இது தான்.

    மாநிலத்தில் தான் இப்படி என்றால் மத்தியில் கேட்கவே வேண்டாம். ஊர் சுத்தி பொறுக்கி ஜென்மம் ஒன்று பிரதமர் என்கிற பெயரில் உக்கார்ந்துக் கொண்டு இருக்கிற பொதுத் துறை நிறுவனங்களை எல்லாம் அழிக்காமல் விடமாட்டேன் என்று அட்டுழியம் செய்கிறது. இதோ இன்று இரண்டாவது முறையாக மீண்டும் அமெரிக்காவிற்கு பொறுக்க செல்கிறது. என்ன செய்வது எஜமானர் கூப்பிட்டால் வாலை குழைத்துக் கொண்டு போய் பவ்யமாக நிற்ப்பது தானே ஒரு நல்ல நன்றியுள்ள ஜீவனுக்கு அழகு. மொத்தத்தில் மாநிலத்தை ஒரு ஆட்டக்காரியும் , மத்தியில் ஒரு சாவு கிராக்கியும் ஆண்டால் நாடு இந்த லட்சணத்தில் தான் இருக்கும்!!!!!

  2. Absolutely ur right comrade..but my question is why u should not take to lead this country.?

    what i mean to say, why dont you to became the leader for CM or PM.like the People Parties side..?can u accept my question?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க