privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்கோகுல்ராஜ், விஷ்ணுபிரியா கொலைகளும்-கொலைகாரர்களும்

கோகுல்ராஜ், விஷ்ணுபிரியா கொலைகளும்-கொலைகாரர்களும்

-

gokulraj-murder-case-tn-police

படம் : ஓவியர் முகிலன்

கோகுல்ராஜ்-யுவராஜ், விஷ்ணுபிரியா-செந்தில்குமார், கொலைகளும்-கொலைகாரர்களும்

ஆர்ப்பாட்டம்

நாள்: 29-09-2015 நேரம்: மாலை 5.00 மணி
இடம்: ராஜா தியேட்டர் சிக்னல் அருகில், புதுச்சேரி

ஆதிக்க சாதி வெறியர்களை பாதுகாக்கும் போலிசுக்கும் நீதி மன்றத்திற்கும் மக்களை பாதுகாக்கும் அருகதை கிடையாது!

என்ற முழக்கத்தின் கீழ் நடந்த ஆர்ப்பாட்டத்தை மக்கள் அதிகாரம் புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இரா. சுதாகர் தலைமைதாங்கி நடத்தினார்.

கோகுல்ராஜ், விஷ்ணுபிரியா கொலை - ஆர்ப்பாட்டம்
“இந்த அரசின் போலிசு எந்திரம் தன்னுடைய துறையில் ஒரு உயர்பதவி வகிக்கக்கூடிய டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவைக்கூட இந்த மண்ணில் வாழ வைக்க முடியவில்லை”

அவர் பேசும் போது “இந்த அரசின் போலிசு எந்திரம் தன்னுடைய துறையில் ஒரு உயர்பதவி வகிக்கக்கூடிய டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவைக்கூட இந்த மண்ணில் வாழ வைக்க முடிய வில்லை. ஆகவே இந்த போலிசு ஆதிக்கச்சாதி வெறியர்களின் அடியாட்படையானதன் விளைவுதான் இந்தக் கொலை! நேர்மையான அதிகாரி நேர்மையாக வழக்கினை விசாரித்தால் கூட கொலை செய்யப்படுவார் எனும் நிலைதான் தமிழகத்தில் நடக்கிறது. எனவே ஆகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் போலிசினையும் நீதிமன்றத்தையும் நம்பி பயனில்லை. யுவராஜ்-காவல் துறை உயரதிகாரி செந்தில்குமார் போன்ற சாதி வெறியர்களை மக்கள் மன்றத்தில் விசாரணை செய்து மக்களே நேரடியாக இவர்களை தண்டித்து அதிகாரத்தை கையில் எடுப்பதன் மூலம் தான் சாதி வெறி கொலைகளை தடுக்க முடியும்” என தனது தலைமை உரையில் விளக்கி பேசினார்.

இவரைத் தொடர்ந்து கண்டன உரையாற்றிய புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் மாநில செயலாளர் தோழர் சோ.பாலசுப்பிரமணியன் அவர்கள் பேசும் போது, “இந்தக் கட்டமைப்பு செயலிழந்து போய்விட்டது. மத்தியில் மோடியாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டில் ஜெயலலிதாவாகவும் இருந்தாலும் சரி, புதுவையில் ரங்கசாமியாக இருந்தாலும் சரி டாஸ்மாக் பிரச்சனையில் மதுவுக்கு விலக்கு தர முடியாது என்கின்றனர். புதுவையில் என்.ஆர் அரசு மதுவிலக்கு கொண்டுவருவதற்கு சுற்றுலா தலங்களை விரிவாக்குவதன் மூலம் மதுவை குறைக்க ஏற்பாடு செய்வேன் என அறிக்கை கொடுக்கிறார் இது மக்களை மூடராக்கும் செயல்” என ரங்கசாமியை கண்டித்து பேசினார்.

கோகுல்ராஜ், விஷ்ணுபிரியா கொலை - ஆர்ப்பாட்டம்
“மத்தியில் மோடியாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டில் ஜெயலலிதாவாகவும் இருந்தாலும் சரி, புதுவையில் ரங்கசாமியாக இருந்தாலும் சரி டாஸ்மாக் பிரச்சனையில் மதுவுக்கு விலக்கு தர முடியாது என்கின்றனர்”

மேலும், “ஓட்டுக்கட்சிகள், தரகு அதிகார வர்க்க முதலாளிகள் இவர்கள் எல்லோரும் ஏகாதிபத்தியத்தின் சேவையை முக்கியமாக எடுத்து செயயக்கூடியவர்களாக அதிக அளவில் வளர்ந்துள்ளனர். இதுதான் இன்றைய உழைக்கும் மக்களுடைய பிரச்சனையாக இருக்கிறது. காவல் துறை மக்களை காக்கும் வேலைக்காக தொடங்கப்பட்டது என்றால் அதனுடைய வேலையை செய்யாமல் எதிராக மாறியுள்ளது, நீதி மன்றமும் அதே நிலையில் தான் உள்ளது.

சட்டங்களை உருவாக்கி காக்க வேண்டியவர்களே நிலையை அரசு கட்டுமானம் மீறிவிட்டது எனவேதான் இந்த மக்கள் அதிகாரத்தினர் “இருக்கும் இந்த அரசு கட்டமைப்பு தோல்வி அடைந்து விட்டது, எனவே மாற்று அதிகார அமைப்பு வேண்டும்” என முன் வைக்கின்றனர். எனவே மக்களே அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும் எனச் சொல்வது சரியானதுதான் அந்த அடிப்படையில் மக்கள் அதிகாரம் வெல்லட்டும்! புரட்சி வெல்லட்டும்! இவர்களை வாழ்த்துகிறேன்” என தனது கண்டன உரையை முடித்தார்.

இவருக்கு அடுத்ததாக கண்டனவுரையாற்றிய புதுவை மாநில பெரியார் திராவிட விடுதலை கழக ஒருங்கிணைப்பாளர் தோழர் கோகுல் காந்தி நாத்

கோகுல்ராஜ், விஷ்ணுபிரியா கொலை - ஆர்ப்பாட்டம்
“சிதம்பரத்தில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தில் 300 பவுன் நகையினை திரும்பவும் கொள்ளைக்காரனிடம் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்காமல் இவரே எடுத்துக்கொண்டு பதவி உயர்வு பெற்று அந்தமானுக்கு சென்றவர்தான் புதுச்சேரி எஸ்.எஸ்.பி.சந்திரன்”

“அதிகாரிங்க அரசியல்வாதிகள் சாதியின் பெயரால் கொலைகள் செய்கின்றனர். இதற்கு ஏதும் தெரியாத இளைஞர்களை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர். இதுதான் புதுவையில் அதிகமாக நடந்து வருகின்றது. சிதம்பரத்தில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தில் 300 பவுன் நகையினை திரும்பவும் கொள்ளைக்காரனிடம் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்காமல் இவரே எடுத்துக்கொண்டு பதவி உயர்வு பெற்று அந்தமானுக்கு சென்றவர்தான் புதுச்சேரி எஸ்.எஸ்.பி.சந்திரன். இவருக்கு புதுவையில் அவர் பணியை பாராட்டி விருது கொடுத்தனர். இந்த வெட்கக்கேடு இங்குதான் நடக்கிறது” என போலிசை அம்பலபடுத்தினார்.

மேலும் நீதிமன்றத்தை பற்றி, “சென்னை உயர்நீதி மன்றத்தை சார்ந்த நீதிபதிகள் புதுச்சேரியில் உள்ள ஓட்டளுக்கு வந்து மது மங்கையுடன் கூத்தடித்துவிட்டு செல்கின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உள்ளூர் சாதி ஆதிக்க ஓட்டுக்கட்சிகள் தலைவர்கள் செய்து கொடுத்து மாமா வேலை பார்க்கின்றனர். இப்படித்தான் இருக்கு காவல்துறையும், நீதித்துறையும்.

கோகுல்ராஜ், விஷ்ணுபிரியா கொலை - ஆர்ப்பாட்டம்
“காவல் துறை செய்யும் மக்கள் விரோத செயலை தடுக்கனும்னா இவங்க சொல்லும் மக்கள் அதிகாரமே சரி என ஏற்றுக்கொண்டு இவர்கள் செய்யும் அனைத்து போராட்டத்திலும் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்”

சாதி சங்கத்தின் தலைவர்கள்தான் பல கட்சியின் தலைவர்களாக உள்ளனர். இவர்கள் எப்படி மக்களுக்கு ஜனநாயகத்தின் உரிமைகளை வழங்க முடியும். பல்வேறு சினிமா படங்களை பார்த்து இளைஞர்கள் உடலை உறுதிபடுத்திக்கொண்டும் ஆசையினை வளர்த்துக்கொண்டு போலிசு வேலைக்கு வந்தால் பக்கோடா கடைகாரனிடமும், பானிபூரி காரனிடமும், ரூபாய் பத்தை மாமுல் வாங்கச்சொல்லி கற்றுக்கொடுக்கிறது இந்த காவல் துறை.”

இப்படி பல ஆதாரங்களை அமபலப்படுத்தி, “காவல் துறை செய்யும் மக்கள் விரோத செயலை தடுக்கனும்னா இவங்க சொல்லும் மக்கள் அதிகாரமே சரி என ஏற்றுக்கொண்டு இவர்கள் செய்யும் அனைத்து போராட்டத்திலும் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்” என்று சொல்லி தனது கண்டனவுரையை முடித்தார்.

இறுதியாக உரையாற்றிய மக்கள் அதிகாரம் புதுவை மாநில தோழர் கு.செல்வம் பேசிய போது சாதியின் கொலைவெறியை அம்பலப்படுத்தி பேசி, “இந்தக் கொலைக்கு காரணமாக இருக்கும் அரசு கட்டமைப்பை தகர்க்காமல் சாதியை ஒழிக்க முடியாது. கொலைகளை தடுக்க முடியாது” எனவும் “இந்தக் குற்றவாளிகளை தண்டிக்க மக்கள் அதிகாரமே தீர்வு” என தனது கண்டனவுரையை முடித்தார்.

அடுத்ததாக இந்த ஆர்ப்பாட்டம் நடக்க மக்கள் அனைவருக்கும் நன்றி செலுத்தி நிறைவு செய்தார் புதுவை மாநில மக்கள் அதிகாரம் தோழர் க. பாலகிருஷ்ணன்.

செய்தி

மக்கள் அதிகாரம்
புதுச்சேரி.