privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மக்கள் அதிகாரம் - புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மக்கள் அதிகாரம் – புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

-

வுடையார்கோவிலில் 29-09-2015-ம் தேதி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சாளர்களில் பெரும்பாலானோர் காவல்துறையின் அயோக்கியத்தனத்தையும், டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய பச்சையப்பா கல்லூரி மாணவ – மாணவிகளை தாக்கியும், டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய மக்கள் மீது பொய்வழக்கு போட்ட காவல்துறையை கண்டித்தும் பேசினார்கள்.

ஆவுடையார்கோவிலில் காவல் ஆய்வாளராக உள்ள பிரேம் ஆனந்த், சினிமா பாணியில் வரும் விறைத்த போலீசாக தனக்கு கீழ் வேலை பார்க்கும் காவலர்களிடம் காட்டி வந்தார். மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டத்தின் மூலம் அவரது பிம்பம் கலைய தொடங்கியதால், ஆத்திரம் அடைந்து பிரேம் ஆனந்த் மற்றும் காவலர் மாரிமுத்து மக்கள் அதிகார தோழர்கள் MSK பழனி, இந்தியன் பழனி ஆகியோர் தனியாக இருந்தபோது சீருடை அணியாமல் கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு தோழர்களைப் பார்த்து “கோத்தா, கொம்மா, ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா” என்று பேசி ரௌவுடித்தனம் செய்ததை ஏற்கனவே வினவில் “ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் அதிகார தோழர்கள் மீது இன்ஸ்பெக்டர் காட்டிய வீரம்” என்ற தலைப்பில் எழுதியிருந்தோம்.

போலீஸ் தாக்குதல் குறித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்பிய கடிதம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இதனைத் தொடார்ந்து தோழர்கள், ஆவுடையார்கோவில் அம்பாள்புரம், கீழவீதி, ஒக்கூர் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு மக்களிடம் பிரச்சாரம் செய்து மக்களை தயார் செய்து வருகின்றனார். இதனால் ஆவுடையார்கோவில் காவல்நிலையத்தில் எஸ்.பி சி.ஐ.டி யாக இருக்கும் ராஜாராம், ஆய்வாளார் பிரேம் ஆனந்த், மாரிமுத்துவைப் போன்று முரடர்களாக நடக்காமல் நரித்தனமான சில சதி வேலைகளில் ஈடுபட்டார்.

தோழர்களின் வீடுகளுக்கு ரகசியமாக சென்று அவர்கள் பெற்றோர்களை சந்தித்து தோழர்களின் எதிர்கால வாழ்க்கையின் மீது அதீத அக்கறை கொண்டவர் போல் நடித்து, “மக்கள் அதிகாரம் அமைப்பு அரசுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத அமைப்பு அதில் உங்கள் பிள்ளைகள் இருந்தால், அரசு வேலை கிடைக்காது” என்று கூறியுள்ளார்.

அதற்கு அந்த பெற்றோர்கள், “அமைப்பில் சேராமல் சும்மா இருந்தால் அரசு வேலை கிடைத்துவிடுமா?” என்று எதிர்கேள்வியை கேட்டுள்ளனார்.

அதற்கு ராஜாராம் புத்திசாலித்தனமாக, “TNPSC, IAS, IPS தேர்வுகளை எழுதுவதற்கு தாம் இலவசமாக பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்வதாக” சொல்லியுள்ளார்.

ராஜாராமின் நோக்கத்தை புரிந்தவர்கள், “அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் செல்லுங்கள்” என கூறியுள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் பேசவந்த பேச்சாளார்களையும், ஆர்ப்பாட்டத்தில் பேசவேண்டாமென மூளைச்சலவை செய்துள்ளார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்நிலையில் பிரேம் ஆனந்த், மாரிமுத்து ஆகிய போலீஸ்காரர்கள் மக்கள் அதிகாரத் தோழர்களை மீண்டும் வீடுகளுக்கு சென்று விசாரணை என்ற பெயரில் தோழர்களைப் பற்றி மக்களுக்கு பீதியை ஏற்படுத்த முயற்சித்து வந்ததால், ஆவுடையார்கோவில் மக்கள் அதிகாரம் சார்பில் காவல் ஆய்வாளரர் பிரேம் ஆனந்த், காவலர் மாரிமுத்து ஆகியோரின் சட்ட விரோத செயல்களை கண்டித்து கண்டன போஸ்டர்கள் ஆவுடையார்கோவில், அறந்தாங்கி, கரூர், ஒக்கூர் போன்ற இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டன.

இதனை மக்கள் ஆங்காங்கே நின்று பரபரப்பாக பார்க்க தொடங்கியவுடன் பீதி அடைந்த போலீசு மக்கள் படிக்கும்போதே பகல் நேரத்தில் போஸ்டர்களை கிழித்து மக்களிடம் அம்பலப்பட்டுப் போனார்கள். பின்னர் 12-10-2015 அன்று மக்கள அதிகார மாநில ஒருங்கிணைப்புக் குழு தோழர்கள் மாரிமுத்து, தனியரசு, மக்கள் கலை இலக்கியக் கழக தோழர் ஜீவா, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் மணிமாறன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சோர்ந்த வழக்கறிஞர்கள் இராமலிங்கம், அலாவுதீன் மற்றும் ஆவுடையார்கோவில் மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட தோழர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து ஆவுடையார் கோவிலில் உள்ள அம்பாள்புரம், கீழவீதி மற்றும் ஒக்கூர் டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லியும் ரௌடித்தனம் செய்த ஆய்வாளர் பிரேம்ஆனந்த், காவலர் மாரிமுத்து ஆகியோர் மீது நடவடிக்கை கோரியும் நேரில் சென்று முறையிடச் சென்றார்கள்.

ஆனால் தோழர்கள் ஒருமணி நேரமாக கலெக்டரைச் சந்திக்க கேட்டும் அனுமதி வழங்கப்படாததால் “கலெக்டர், மக்கள் அதிகார தோழர்களைச் சந்திக்காமல் அறையைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்கமாட்டோம்” என்று அறிவித்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அனைத்து மீடியாக்களும் படம் பிடிக்க தொடங்கிவிட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகார வார்க்கம் தோழர்கள் கலெக்டரை சந்தித்து பேச உடனே அனுமதி வழங்கினர்.

மக்கள் அதிகாரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதைக் குறித்த பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அப்பொழுது டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லியும், ஆவுடையார்கோவில் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், காவலர் மாரிமுத்து ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதற்கு உடனே மாவட்ட ஆட்சித் தலைவர் அறந்தாங்கி வருவாய் வட்ட கோட்டாட்சியரை அழைத்து போலீசுக்கு எதிரான புகாரை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதி அளித்தார். அதனைத் தொடார்ந்து கலெக்டர் அலுவலக போராட்டம் கைவிடப்பட்டது.

மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனுக்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தற்பொழுது காவலர் மாரிமுத்து ஆவுடையார்கோவில் காவல் நிலையத்திலிருந்து பணி மாற்றம் செய்து விராலிமலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

டாஸ்மாக் கடைகளை நிபந்தனையின்றி மூடவேண்டும், மூடாவிட்டால் நாங்கள் மக்களை திரட்டி மூடுவோம் என அறிவித்து ஆவுடையார்கோவில் மக்கள் அதிகார தோழார்கள் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், காவலர் மாரிமுத்து, SP CID ராஜாராம் ஆகியோரின் சதிகள், மிரட்டல்கள் மற்றும் அதிகார மமதைகளை உடைத்து அடுத்த கட்ட போரட்டத்திற்கு தயராகி கொண்டிருக்கின்றார்கள்.

மேலும் ”போலீசால் பொய் வழக்கு போட்டு சிறையில் தான் அடைக்கமுடியும், மக்களுக்காக அதனை எதிர்கொள்ள, தோழரர்கள் தயாராக இருக்கிறோம்” எனக் கூறி போலீசின் தார்மீக பலத்தை ஆவுடையார்கோவிலில் இழக்கச் செய்து வருகிறார்கள்.

தகவல்

மக்கள் அதிகாரம்,
ஆவுடையாரர்கோவில் பகுதி,
புதுக்கோட்டை மாவட்டம்.

  1. சி.ஐ.டி ராஜாராம் தோழர்களின் பெற்றோர்களை சந்தித்து “மக்கள் அதிகாரம் அமைப்பில் இருந்தால், அரசு வேலை கிடைக்காது” என்று கூறியுள்ளார். பெற்றோர்கள், “அமைப்பில் சேராமல் இருந்தால் அரசு வேலை கிடைத்துவிடுமா?” என்று எதிர்க்கேள்வி கேட்டுள்ளனார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க