Friday, September 25, 2020
முகப்பு புதிய ஜனநாயகம் ஈட்டி முனையாக எழுந்து நிற்போம் !

ஈட்டி முனையாக எழுந்து நிற்போம் !

-

காவிரி டெல்டா மாவட்டங்களில் பல இலட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரின் நிலை இன்றோ அல்லது நாளையோ என்ற அபாயக் கட்டத்தைத் தொட்டு நிற்கிறது. காவிரித் தண்ணீரை நம்பி வெள்ளாமையில் இறங்கிய விவசாயிகள், இன்று லாரித் தண்ணீரை வயலில் பாய்ச்சி பயிர்களைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி நிலைமை கைமீறிப் போக் கொண்டிருக்கும் வேளையில்தான், மைய அரசு தனது கும்பகர்ண தூக்கத்திலிருந்து எழுந்து டெல்லியில் கடந்த செப்டம்பர் 28 அன்று காவிரி கண்காணிப்புக் குழுவைக் கூட்டியது. கொஞ்சத்துக்கு கொஞ்சமாவது நல்ல சேதி கிடைக்காதா என டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்திருந்தபொழுது, “கர்நாடகா மாநிலத்தின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்கான தண்ணீரே கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது” என அக்கூட்டத்தில் கர்நாடகா அரசு இரக்கமின்றி மமதையோடு அறிவித்து, அவர்களின் தலையில் நெருப்பை வாரிக்கொட்டிவிட்டது.

கர்நாடகா அரசு கூறுவது அப்பட்டமான, அடுக்கமாட்டாத பொய். கர்நாடகாவிலுள்ள காவிரி அணைகளில் உள்ள தண்ணீரின் இருப்பு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துள்ள மழையின் அளவு ஆகியவை குறித்து வெளிவந்திருக்கும் புள்ளிவிவரங்களே, கர்நாடகா காங்கிரசு அரசு தீய எண்ணத்தோடு தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது என்பதையும் தமிழகத்திற்குத் தண்ணீரைத் திறந்துவிடக் கூடாது என்ற அடாவடித்தனமான முடிவோடு அது செயல்படுவதையும் நிரூபிக்கின்றன.

காவிரி டெல்டா தண்ணீர் பிரச்சனைகர்நாடகா அரசு தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 192 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் திறந்துவிட வேண்டும் என்ற நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளிவந்து எட்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இத்தீர்ப்பை கர்நாடகா அரசு ஒருநாளும் மதித்து நடந்து கொண்டதேயில்லை. இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு நிர்பந்தம் கொடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மைய அரசோ இந்த விசயத்தில் கர்நாடகாவின் கூட்டாளியாகவே செயல்பட்டு வருகிறது. இதோடு, நடுவர் மன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு அமைப்பதைத் திட்டமிட்டே புறக்கணித்து வருகிறது. காவிரியில் புதிய அணைகளைக் கட்டத் திட்டமிட்டுள்ள கர்நாடகாவின் முயற்சிகளைத் தடுப்பது போல நடிக்கிறது. கர்நாடக மாநிலத்திலும், மத்தியிலும் காங்கிரசு ஆட்சி நடந்தாலும் சரி, பா.ஜ.க. ஆட்சி நடந்தாலும் சரி தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதில் இவ்விரண்டு கட்சிகளும் ஒற்றுமையாகவே நடந்து வருகின்றன.

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கு இணையானது. ஹெல்மெட் அணிவது தொடர்பான தீர்ப்பை விமர்சித்த வழக்குரைஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்து, அவர்களின் கவுனைக் கழட்ட வைக்கும் நீதிமன்றங்கள், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை கழிப்பறை காகிதம் போல கசக்கிப் போட்ட கர்நாடகா அரசின், மைய அரசின் அடாவடித்தனத்தைக் கேள்விக்குள்ளாக்க மறுக்கின்றன. ஒரு சட்டத்தின் தகுதியைப் பெற்றுள்ள நடுவர் மன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பிலுள்ள கர்நாடகா மாநில அரசு, மைய அரசு, நீதிமன்றங்கள் அனைத்தும் அதனை நடைமுறைப்படுத்த மறுக்கும் எதிர்நிலையை எடுத்துள்ள அயோக்கியத்தனத்தைத் தமிழகம் எதிர்கொண்டு நிற்கிறது.

குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைந்த பூமியில் இன்று ஒரு போகம், டெல்டா விவசாயிகளின் உயிர் நாடியான சம்பா பயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலைமைக்குத் தமிழகம் தள்ளப்பட்டுவிட்டது. ஒருபுறம் பாரம்பரிய பெருமை கொண்ட விவசாயத்திற்கு கர்நாடகா அரசு வேட்டு வைக்கிறதென்றால், இன்னொருபுறமோ டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஷேல் மீத்தேன் எடுக்கும் திட்டங்களைக் கொண்டுவந்து தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைச் சுடுகாட்ட முயலுகிறது, மைய அரசு. ஆற்று மணல், தாதுமணல், கிரானைட் கொள்ளைகள் ஏற்படுத்தியிருக்கும் அழிவைவிடப் பன்மடங்கு பேரழிவைக் கொண்ட திட்டமிது. இந்த இரட்டை தாக்குதலை எதிர்த்து டெல்டா விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஒட்டுமொத்த தமிழகமும் ஈட்டி முனையாக எழுந்து நிற்பது எப்போது?
_________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
_________________________________

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க