privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதோழர் கோவன் கைது - தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்

தோழர் கோவன் கைது – தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்

-

1. திருச்சி

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிப் பாடகர் தோழர் கோவன் கைதை கண்டித்து நடைபெறும் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக 02-11-2015 அன்று திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய இடத்தில் வேறொரு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதால் 03-11-2015 அன்று நடத்திக் கொள்ளுமாறு காவல்துறை அனுமதி அளித்தது. கூடுதலாக பல்வேறு நிபந்தனைகளையும் விதித்திருந்தது.

இந்நிலையில் திருச்சி – மேலசிந்தாமணி அண்ணாசிலை அருகே 03-11-2015 காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துமிடத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் அழைப்பை ஏற்று பல்வேறு அமைப்புகள், சங்கங்கள், கட்சிகளை சார்ந்த தலைவர்கள் வந்திருந்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக மைக்செட் கட்டும் வேலைகளில் ஈடுபட்டபோது, மைக்செட் வைப்பதற்கோ, இசைக் கருவிகள் பயன்படுத்துவதற்கோ அனுமதி கிடையாது என்றும், மீறி செய்தால் ஆர்பாட்ட அனுமதியை ரத்து செய்து கைது செய்வோம் என போலீசார் மிரட்டினர். இது அப்பட்டமான ஜனநாயக மறுப்பு, கருத்துரிமையை நசுக்கும் செயல் என்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்புக் குழு தோழர் தர்மாராஜ் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசின் சட்டவிரோத செயல்பாடுகளை கண்டித்து வழக்குரைஞர்களும் எதிர்த்து வாதாடினர்.

 

ஆனாலும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவிடக் கூடாது என முன் கூட்டியே முடிவெடுத்த போலீசார் பெரும் படையை கொண்டு வந்து இறக்கி, ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த இடத்தை சுற்றி வளைத்து நின்று கொண்டனர். ஆர்ப்பாட்டம் குறித்த செய்தி சேகரிப்பதற்காக வந்திருந்த ஊடகத்தினரிடம் தோழர் தர்மராஜ் போலீசின் அடக்குமுறையை கண்டித்து பேட்டியளித்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தோழர் கோவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நவம்பர் 17 வரை நடவடிக்கை எடுக்கப்படாது என தற்காலிகமாக பின்வாங்கிக் கொண்ட ஜெயா போலீசு குறித்த செய்திகள் வெளிவந்திருந்தன.

“கொடைக்கானல் மலைப்பகுதியில் வனச்சரணாலயம் அமைக்கும் திட்டம் என்கிற பெயரில் தலைமுறை தலைமுறையாக அங்கு வாழ்ந்து வரும் பழங்குடி மக்களை அரசு வெளியேற்றுவதை எதிர்த்த போராட்டத்தில் பாடல் பாடிய குற்றத்திற்காக திண்டுக்கல் மற்றும் கொடைக்கானலில் இருந்து போலீசார் காவலில் எடுத்து விசாரிப்பதற்கும், மேலும் புதிய வழக்குகள் போட்டு நிரந்தரமாக சிறையிலேயே முடக்குவதற்கும் சதித்திட்டம் தீட்டியிருப்பதை” அம்பலப்படுத்தினார். “ஜெயா அரசின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம், டாஸ்மாக்கை மூடும்வரை ஓயமாட்டோம்” என மக்கள் அதிகாரம் தோழர்கள் முழக்கமிட்டதுடன், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தை துவங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை வலுக்கட்டாயமாக இழுத்தும், வயதானவர்கள் – பெண்கள் – குழந்தைகள் உள்ளிட்டோரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியும் போலீசு வாகனங்களில் ஏற்றினர். போலீசின் அராஜகத்தை கண்டித்து ஆவேசமாக முழக்கமிட்ட தோழர்களை குறிவைத்து அதிரடிப்படை போலீசார் தாக்குதல் நடத்தியதில் வேதாரண்யம் சாமி மற்றும் திருச்சி மருதை ஆகிய தோழர்களுக்கு மண்டை உடைந்தும், கழுத்துப் பகுதியில் கொடுங்காயமும் ஏற்பட்டது. ஊடகங்கள் முன்னிலையிலேயே போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். அத்துடன் சுற்றிலும் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்த முயற்சித்தும், ரோட்டில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவரையும் வலுக்கட்டாயமாக இழுத்து போலீஸ் வேனில் ஏற்ற முயற்சித்தனர். பொதுமக்கள் ஆவேசமடைந்து எதிர்க்கவே அவரை போலீசார் விட்டுவிட்டனர். பின்னர் தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாநகர தலைவர் சின்னதுரை, தமிழ்தேசியப் பேரியக்க திருச்சி மாநகர செயலாளர் தோழர். கவித்துவன் உள்ளிட்ட பேச்சாளர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 106 பேரை கைது செய்து மண்டபத்தில் சிறை வைத்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கோவன் கைது - திருச்சி போராட்டம்போராட்டம் முடிந்து விட்டதாக போலீசு நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் போலீசின் இந்த சட்ட விரோத பாசிச அடக்குமுறையை கண்டித்து சிறை வைக்கப்பட்ட இடத்திலும் தோழர்கள் போராட்டத்தை மீண்டும் துவங்கினர். போலீசார் உணவு ஏற்பாடு செய்ததையும் மறுத்துவிட்டு, உண்ணாவிரதம் இருக்க துவங்கினர். பிரச்சனை அதற்குள் ஊடகங்களில் தொடர்ந்து வெளிவர துவங்கியதால் உளவுத்துறை மேலதிகாரி ஒருவர் நேரடியாக தொலைபேசியில் பேசி, நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுமாறும் கெஞ்சியுள்ளார். தோழர்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்திக் கொண்டும் அடுத்தகட்ட போராட்டம் குறித்தும் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறாரகள். மேற்கண்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து திருச்சி மாநகர் முழுவதும் சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

தகவல்
மக்கள் அதிகாரம்
திருச்சி
94454 75157

2. புதுவை

தோழர் கோவன் கைது - புதுவையில் கண்டன ஆர்ப்பாட்டம்ழைக்கும் மக்களின் தாலியறுக்கும் டாஸ்மாக் கடைகளை மூட மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தி அணிதிரட்டும் விதமாக மூடு டாஸ்மாக்கை என்று பாடல் பாடியதற்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிப் பாடகர் தோழர் கோவன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தின் மூலம் அரச பயங்கரவாதத்தை மக்களுக்கு விளக்கும் வகையில் புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் 31-10-2015 அன்று முத்தியால்பேட்டை மார்கெட் எதிரில் கண்டன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர் சரவணன் தலைமையில் நடந்தது. பு.ஜ.தொ.மு.வின் புதுச்சேரி மாநில இணைச் செயலாளர் தோழர். லோகநாதன் கண்டன உரை யாற்றினார்.

தோழர் கோவன் கைது - புதுவையில் கண்டன ஆர்ப்பாட்டம்தோழர் சரவணன் தனது தலைமையுரையில், “மக்களை சீரழிக்கும் டாஸ்மாக்கை மூடச் சொல்லி பாடல் பாடியதற்காக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார், தோழர் கோவன். மக்களோடு மக்களாக வசிக்கும் தோழரை அதிகாலை 02.45 மணிக்குக் 10 பேர் கொண்ட போலிசு தனிப்படை அவரது வீட்டிற்குச் சென்று கைது செய்துள்ளது. தேடப்படும் தலைமறைவு கிரிமினல் குற்றவாளியைத் தேடிச் சென்று கைது செய்வது போல் கைது செய்துள்ளது. அதே நேரத்தில் தஞ்சையில் தோழர் காளியப்பனைக் கைது செய்ய திருடனைப் போல் அவரது வீட்டின் பின்பக்க சுவரேறிக் குதித்துள்ளது. பின்னிரவு 02.45 மணிக்கு சாதாரண மக்களில் ஒருவரது வீட்டின் பின்பக்கச் சுவரேறிக் குதித்தால், குதித்தவனை திருடன் என்று தானே சொல்ல முடியும். இவர்கள் பெயர் போலிசு. இவர்களுக்கு இதில் கொஞ்சமும் வெட்கமில்லை போலிருக்கிறது.

ஏற்கனவே, மக்கள் வேலையில்லாமல் அற்பக் கூலிக்கு கிடைத்த வேலைக்குச் சென்றால், அந்தக் கூலியையும் டாஸ்மாக்கை வைத்து புடுங்கிக் கொள்கிறது அம்மா அரசு. மக்களின் மாதவருவாயைப் புடுங்கிக் கொண்டு மதுவருவாயைப் பெருக்கிக் கொள்கிறது. ஒருபுறம் தாலிக்குத் தங்கம் திட்டம், மறுபுறம் தாலியறுக்கும் டாஸ்மாக் என்று சொல்லி பெண்களே அம்மா ஆட்சியின் மீது காறித் துப்புகிறார்கள். இதைப் பற்றி எல்லாம் எந்தக் கவலையுமின்றி, ஊத்திக் கொடுப்பதையே முழு நேரத் தொழிலாகச் செய்து வருகிறார்கள் ஆட்சியாளர்களும் அரசு அதிகாரிகளும். எனவே, இவர்கள் டாஸ்மாக்கை மூடமாட்டார்கள். மக்களே அதிகாரத்தைக் கையில் எடுக்கும் போது தான் தீர்வு” என்று சொல்லி தனது உரையை முடித்தார்.

தோழர் கோவன் கைது - புதுவையில் கண்டன ஆர்ப்பாட்டம்அடுத்து கண்டனவுரையாற்றிய தோழர் லோகநாதன், “அரசின் செயல்பாட்டை விமர்சனம் செய்து பாட்டுப் பாடுவதே தேசக் துரோகக் குற்றம் என்றால், இதன் பெயர் ஜனநாயக நாடா? மேலும், தோழர் கோவனைக் கைது செய்வதற்கான காரணத்தைச் சொல்லாமல், அவரை வைத்திருக்கும் இடத்தைக் கூட சொல்லாமல் இருப்பதென்றால், அதற்குப் பெயர் கைது நடவடிக்கையா? அல்லது ஆள்கடத்தலா? இந்தச் செயலைச் செய்பவர்கள் பெயர் ரவுடிகள். காக்கிச்சட்டை போட்டுக் கொண்டு இந்த வேலையைச் செய்வதை விட வேறேதாவது வேலையைச் செய்யலாம்.” என்றும், இது மட்டுமின்றி அரசு அதிகாரிகள் தற்கொலை, பகுத்தறிவாளர்கள் படுகொலை என் அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் பாசிசமயமாகி வருவதையும், பாசிசத்திற்கு துணையாக இருப்பதையும் தோலுரித்துக் காட்டினார்.

இறுதியாக, மக்களின் தாலியறுக்கும் டாஸ்மாக்கை மூடச் சொல்லி பாட்டுப் பாடுவது தேசத் துரோக குற்றம் என்றால் அக்குற்றத்தை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்ற அறிவிப்புடன், மூடு டாஸ்மாக்கை பாடலையும், பாடு அஞ்சாதே பாடலையும் தோழர்கள் பாடினர். தோழர். கோவன் பாடிய மூடு டாஸ்மாக்கை, ஊத்திக் கொடுத்த உத்தமி ஆகிய இரண்டு பாடல்களையும் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

திருபுவனை கிளைச் செயலாளர் தோழர் மகேந்திரனின் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

தகவல்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி
தொடர்புக்கு: 95977 89801.

3. கரூர்

தோழர் கோவன் தேச துரோக வழக்கின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்தும் தோழர் கோவனை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியும், கரூரில் 02-11-2015 அன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கொடுக்க இழுத்தடித்த காவல்துறை, ஆர்ப்பாட்டத்திற்கு முதல்நாள் இரவு 8 மணிக்கு நிபந்தனைகளுடன் (பறையடிக்கக் கூடாது, முழக்கங்களை முன்கூட்டியே காவல்துறையிடம் கொடுக்க வேண்டும், 1 மணி நேரம்தான் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்) அனுமதி வழங்கியது.

ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சக்திவேல் தலைமை வகித்தார். தோழர் காவல்துறையையும், இயற்கை வளக் கொள்ளைதான் தேசத் துரோகம் என்பதையும் அம்பலப்படுத்தி பேசினார்.

கண்டன உரையாற்றிய தோழர் வசந்தன், “மூடு டாஸ்மாக்கை பாடலை பாடினால் மட்டுமல்ல, அதை பரப்பினாலும், பார்த்தாலும் தேச துரோக வழக்கு போடும் இந்த அரசு” என்று போலி ஜனநாயகத்தை தோலுரித்து பேசினார்.

மக்கள் அதிகாரம் தோழர் புஸ்பராஜ், “அடக்கு முறைக்கு அஞ்ச மாட்டோம், அடக்கு முறையை முறியடிப்போம். தோழர் கோவன் செய்த துரோகத்தை நாமும் செய்வோம். தோழர் கோவன் ஒருவரை கைது செய்யலாம். ஆனால், நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் கோவன்கள் உருவாகி வருவார்கள்” என்று ஆக்ரோஷமாக பேசினார்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த தோழர் சத்யா, “உலக அளவில் பாசிஸ்டுகளை எதிர்த்து ஒழித்தன மக்கள் போராட்டங்கள். நாமும் அடக்குமுறைக்கு அஞ்சாமல் அதை எதிர்கொள்வோம்” என்று பேசினார்.

சிறப்புரை ஆற்றிய மக்கள் அதிகாரம் தோழர் இராமசாமி, பார்ப்பன பாசிசத்தை திரைகிழிக்கும் விதமாக பேசினார். தொலைக்காட்சி விவாதத்தில் அ.தி.மு.க-வின் சரஸ்வதி இந்தப் பிரச்சனையில் அம்மாவிற்காக அமைதியாக இருக்கிறோம் என்று திமிராகச் சொன்னதைக் குறிப்பிட்டு, அ.தி.மு.க குண்டர்களை இறக்கி விட்டாலும், களத்தில் சந்திக்க தயாராக உள்ளோம் என்று சவால் விடுத்தும், எச்சரிக்கை விடுத்தும் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், “மூடு டாஸ்மாக்கை” பாடலை பாடிய போது, காவல்துறை தலையிட்டு பாடக் கூடாது என்று நிறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பெண்களும், சிறுவர்களும் அதிகம் கலந்து கொண்டனர்.

இறுதியாக மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர் பாக்கியராஜ் நன்றியுரை வழங்கினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
கரூர் – தொடர்புக்கு 9791301097

4. மதுரை

  • “மூடு டாஸ்மாக்கை” என்பது தேசத் துரோகமா?
  • ம.க.இ.க பாடகர் கோவன் மீது தேசத்துரோக வழக்கு, கைது
  • போராடும் மக்களை மிரட்டிப் பார்க்கிறது பாசிஸ்டு ஜெயா அரசு!
  • அஞ்ச மாட்டோம்! டாஸ்மாக்கை மூடும் வரை ஓயமாட்டோம்

என்ற முழக்கங்களுடன் மதுரை அண்ணாநகர், அம்பிகா திரையரங்கு அருகில் 2-11-2015 அன்று காலை 10.30 மணி அளவில் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

5. திருவாரூர்

தோழர் கோவன் கைதைக் கண்டித்து, 03-11-2015 அன்று அண்ணாசிலை, மேலசிந்தாமணி, திருச்சியில் மதியம் 1.00 மணிக்கு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருவாரூர், நாகை, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சுவரொட்டிப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

kovan-arrest-tvr-poster