Wednesday, October 4, 2023
முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்ஆர்.எஸ்.எஸ் மயமாகிறது நீதித்துறை ! மதுரை ஆர்ப்பாட்டம் !

ஆர்.எஸ்.எஸ் மயமாகிறது நீதித்துறை ! மதுரை ஆர்ப்பாட்டம் !

-

ஆர்.எஸ்.எஸ் மயமாகிறது நீதித்துறை ! ஊழலும் சர்வாதிகாரமுமே அதன் சட்டம் !

என்ற முழக்கத்தின் அடிப்படையில், நீதித்துறை ஊழலை அம்பலப்படுத்திய வழக்கறிஞர்கள் அச்சுறுத்தப்படும் நிலையில் நீதித்துறையை சந்திக்கு இழுத்த மக்கள் அதிகாரம் தோழர்கள் 85 பேர், 28-10-2015 புதன்கிழமை அன்று மதுரையில் கைது.

நீதித்துறை ஊழல் - மக்கள் அதிகாரம் மதுரை ஆர்ப்பாட்டம்மதுரையில் கடந்த செப்டம்பர் 10 அன்று நீதித்துறை ஊழலை கண்டித்து வழக்கறிஞர்கள் பேரணி நடத்தியதை ஒட்டி மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 14 பேர் அனைத்திந்திய பார் கவுன்சிலால் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.  இந்த அநீதியை கண்டித்து பேச முடியாத ஒரு அறிவிக்கப்படாத அவசர நிலை மதுரை நகருக்குள் நிலவி வருகிறது.

நீதிமன்ற வளாகத்தில் சுவரொட்டி ஒட்டுவதோ, துண்டறிக்கை கொடுப்பதோ, கூட்டம் நடத்தவோ கூடாது என்றும் மீறினால் வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்ற அவசர நிலை தான் மதுரையில் உள்ளது.  ஜனநாயக இயக்கங்களின் எந்த ஒரு கூட்டத்திற்கும் அனுமதி மறுக்கப் படுகிறது.  தமிழகத்தின் ‘மிகப் பெரும் எதிர் கட்சி’யான தி.மு.க மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தொடர்ந்து பலமுறை அனுமதி கேட்டும் மறுக்கப்பட்டுள்ளது.

நீதித்துறை ஊழல் - மக்கள் அதிகாரம் மதுரை ஆர்ப்பாட்டம்இன்னிலையில், 27-ம் தேதியே மதுரை முழுவதும் ஆர்.எஸ்.எஸ் மயமாகிவரும் நீதித்துறையை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்ட அறைகூவலுடன் சுவரொட்டிகள் பளிச்சிட்டன.  இது அதிகாரவர்க்கத்தை நேருக்கு நேர் மோதலுக்கு அழைப்பது போல் இருந்தது.

கடமை தவறாத காவல்துறை 28-ம் தேதி அதிகாலை முதலே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் குவிந்தது.  மக்களோடு மக்களாக இருந்த மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள், சரியாக 10.45 மணிக்கு மடக்கி வைத்திருந்த பதாகைகள், முழக்க அட்டைகள் ஆகியவற்றை ஏந்தி விண்ணதிரும் முழக்கங்களுடன் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பாய்ந்து சென்றனர்.  பதறி ஓடிவந்த காவல்துறையினர் தோழர்களை தடுக்க முயன்றனர்.  அதற்குள் பத்து பதினைந்து பேர்களாக இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென நூறு பேர்களாக மாறியதை கண்டு திகைத்து போனது காவல்துறை.  மக்கள் அதிகாரம் அமைப்பினரோடு தென் மாவட்டங்களைச் சேர்ந்த வி.வி.மு, பு.மா.இ.மு., ம.க.இ.க., பு.ஜ.தொ.மு., பெவிமு ஆகிய தோழமை அமைப்புத் தோழர்களும் ஆதரவாளர்களும் இணைந்து கொண்டனர்.  கட்டுப்படுத்த முடியாத காவல்துறை திணறியது.  உடனடியாக கைது செய்துவிட முயன்றது.  அந்த நேரத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர் குருசாமியை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டதால் கிடைத்த இடைவெளியில் தோழர்கள் மேலும் சிற்ப்பாக முழக்கமிடத் தொடங்கினர்.

நீதித்துறை ஊழல் - மக்கள் அதிகாரம் மதுரை ஆர்ப்பாட்டம்மீண்டும் கைது செய்ய முயன்றது காவல்துறை.  “நாங்கள் கைதாக வரவில்லை.  நீதித்துறையின் சதிகளை அம்பலப்படுத்த வந்துள்ளோம்.  அதற்கு கைது செய்வாய் என்றால்.  நீயே செய்து கொள் “ என்று ரோட்டில் படுத்து விட்டனர் தோழர்கள். திரளாக சுற்றி நின்ற மக்களின் முன் தோழர்களை குண்டு கட்டாக தூக்கி சென்று வாகனங்களில் புளி மூட்டையை போல திணித்தது போலீசு.  தோழர்களோ ஒருவரோடு ஒருவராக தங்களை பின்னிக் கொண்டு தொடர்ந்து முழக்கமிட்டனர்.

கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஒவ்வொரு தோழரையும் இரண்டு மூன்று காவலர்கள் சேர்ந்து இழுத்துச் சென்றனர்.  அந்த இடமே போர்களம் போல் ஆனது.  வாகனங்களில் ஏறிய தோழர்களை கொன்று விடுவேன் என மிரட்டினான் ஒரு உதவி ஆய்வாளர்.  தோழர்களோ மிக எழுச்சிகரமாக முழக்கமிட்ட படி இருந்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பின்னர் ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.  கருத்தரங்கம் நடத்த செலவில்லாமல் அரங்கம் பிடித்து கொடுத்த காவல் துறைக்கு நன்றி கூறிவிட்டு தோழர்கள் கருத்தரங்கம் நடத்த ஆரம்பித்தனர்.  பாடல்கள் உரைகள் என மாலை 6 மணிவரை கூட்டம் நடந்தது.  பின்னர் தோழர்கள் விடுவிக்கப் பட்டனர்.

தகவல்

மக்கள் அதிகாரம்
மதுரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க