privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகோவனை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டங்கள்

கோவனை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டங்கள்

-

1. பெங்களூரு

“கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே!’’ என்ற முழக்கத்தின்கீழ் தமிழகத்தில் செயல்பட்டுவரும் புரட்சிகர கலை இலக்கிய அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழுவைச் சேர்ந்த தோழர் கோவன் பாசிச ஜெயா அரசின் குற்றப்பிரிவுப் போலிசாரால் கைது செய்யப்பட்டு அவர்மீது தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட பொய்வழக்குகள் புனையப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதை கண்டித்தும், மக்கள் பாடகர் தோழர் கோவனை உடனே விடுதலை செய்யக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூரில் எழுச்சிகரமாக நடைபெற்றது.

kovan-arrest-bangalore-demo-14கர்நாடகாவில் உள்ள முற்போக்கு, ஜனநாயக இயக்கங்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரக்கூடிய “கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கம்’’ என்ற அமைப்பின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் ரசிய புரட்சித் தினமான 07-11-2015 காலை 10 மணியளவில் பெங்களூர் டவுன் ஹால் எதிரில் நடைபெற்றது. இதில் சி.பி.எம், சி.பி.ஐ, சி.பி.ஐ (எம்.எல்) லிபரேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு இயக்க பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு கண்டன முழக்கமிட்டு உரையாற்றினர். இவ்வார்ப்பாட்டத்திற்கு கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவர் தோழர் பன்முகன் தலைமை தாங்கினார். இறுதியாக, இவ்வமைப்பின் பொருளாளர் தோழர் சௌரி நன்றியுரையாற்றினார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து பேச்சாளர்களும் உணர்வுபூர்வமாக தங்களது கண்டனக்குரலை பதிவுச் செய்தனர்.

kovan-arrest-bangalore-demo-posterவிவசாயிகள் தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களிடையே சாதி மதம் இனம் போன்ற எந்த வேறுபாடும் கிடையாது. அவைகள் அனைத்தும் தம்மை பிரித்துவைக்க ஆளும் வர்க்கங்களால் ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடுகளே!” என்ற கருத்தை உணர்த்தும் வகையில் ஒரு பாடல் கர்நாடகத் தமிழ் மக்கள் கலைக் குழுத் தோழர்களால் எழுச்சியாக பாடப்பட்டது. பிறகு தோழர் கோவன் கைதைக் கண்டித்தும் அவரை உடனே விடுதலை செய்யக்கோரியும் விண்ணதிர முழக்கமிட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்கள் பாடகர் தோழர் கோவன் கைது செய்யப்பட்டு தேசதுரோக வழக்கில் சிறைப்படுத்தப்பட்டதற்கு காரணமாக சொல்லப்படுகின்ற அந்த இரு பாடல்களை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிறுமி நக்சல்பாரி பாடினார்.

தோழர் பன்முகன்
தோழர் பன்முகன்

கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவர் தோழர் பன்முகன் தனது தலைமையுரையில், “அந்தப்பாடலில் எங்கே இருக்கிறது தேசத்துரோக செயல்?” என்று கேள்வி எழுப்பி “இந்தப்பாடல் பட்டித்தொட்டியெல்லாம் ஒலிக்கப்படவேண்டிய அவசியத்தை” விளக்கிப் பேசினார். 10 அமைப்புகளை சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்று தங்களது கண்டனக் குரலை பதிவுச் செய்திருந்தனர். பு.ஜ.தொ.மு வின் மாநிலத் துணைத்தலைவர் தோழர் பரசுராமன் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் முத்துக்குமார் ஆகிய தோழர்களும் இதில் கலந்து கொண்டு கண்ட உரையாற்றினர்.

கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கக் கலைக் குழுவினரால் ஆயிரக் கணக்கில் தமிழிலும் கன்னடத்திலும் அச்சிட்டு மக்களிடையே கொண்டு செல்லப்பட்ட துண்டறிக்கை:

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அன்புமிகு பெரியோர்களே ! இளைஞர்களே! மாணவர்களே!

திருச்சி மாவட்டம் உறையூர் அருகே மருதாண்ட குறிச்சி என்ற சிற்றூரில் சாமானயக் குடும்பத்தில் பிறந்தவர்தான் தோழர் கோவன் அவர்கள். இவர் பள்ளிப்படிப்பை முடித்ததும் தொழிற்கல்விப் பயின்று திருச்சியிலுள்ள ‘பெல்’ குழுமத்தில் பணியில் சேர்ந்தார். சமூக சமத்துவச் சிந்தனையால் புரட்சிகர அரசியலை ஏற்று, அதன் தொடர்ச்சியாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் (ம.க.இ.க) சேர்ந்து உணர்வுப் பூர்வமாகச் செயலாற்றி, மையக்குழுவில் தலைமைப் பொறுப்பை ஏற்றார். ம.க.இ.க வின் புரட்சிகரக் கொள்கைக்கு ஏற்றவகையில் பாடல்கள் அமைத்து சக தோழர்களுடன் இணைந்து, புரட்சிக்கு மக்களை அணிதிரட்டினார்.

அதன் செயல்பாடாகவே தமிழகத்தில் ஐயா சசிபெருமாள் தன் உயிரைப் பணயம் வைத்து டாஸ்மார்க் சாராயக் கடைகளை மூடக்கோரிப் போராடி உயிர்நீத்தும், தமிழக பாசிச ஜெயலலிதா அரசு அதனைக் கண்டு கொள்ளவில்லை. தமிழக மாணவர்களும், ம.க.இ.க தோழர்களும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணித் தோழர்களும் ஒன்றிணைந்து கடுமையாகப் போராடியும், ஜெயா அரசு, டாஸ்மாக் கடைகளை மூட இணங்கவில்லை. எனவே, மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு வழியாக, மாணவர்கள் முதல் மாற்றுத் திறனாளிகள் வரை, பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளிகள் என அனைவரும் போராட்டக் களத்தில் நின்று, தாங்களே சாராயக் கடைகளை மூடச் செயல்பட்டனர்.

ஆனால் சாராய அதிபர்களும் ஆட்சியாளர்களும், மக்களுக்காகப் போராடும் போராட்டங்களை, அவமானச் சின்னமாகக்கருதி காக்கிச் சட்டைக் குண்டர்களால், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், மற்றும் மாணவிகளின் மண்டையை உடைத்து, கை கால்களை முறித்து, அவர்கள் மீதே கொலைமுயற்சி போன்ற பல கொடுமையானப் பொய்வழக்குகளைப் போட்டு, காவல் நிலையத்திலும், சிறையிலும் வைத்து, அடித்துத் துன்புறுத்ததி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்திற்கு மக்களையும் மாணவர்களையும் அணிதிரட்ட தோழர் கோவன், “கூட்டம் சேர்க்க சாராயம்! ஓட்டுவாங்க சாராயம்! கோஷம் போட சாராயம்! கொடிபிடிக்க சாராயம்! ஓட்டுப்போட்ட மக்களை ஓட்டாண்டிகளாக்கி சவக்குழியில் தள்ளும் டாஸ்மாக் சாராயத்தை மூடு!” என்ற வரிகள் அடங்கிய போன்ற பல புரட்சிகர பாடல்களைப் பாடி, சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், திருச்சியில் அவரது வீட்டிற்குச் சென்ற சென்னை குற்றப்பிரிவு காவல்துறை, தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும், மக்களைத் தூண்டிப் பிளவுப்படுத்துவதாகவும் கூறி, அவரை கைது செய்துள்ளனர். அவர்மீது 124 A தேதசத்துரோக நடவடிக்கை மற்றும் 123 போன்ற இன்னும் பல பொய் வழக்குகளைப் போட்டு, போராட்டக் குரல்வளையை நெறிக்கப் பார்க்கின்றனர்.

இலட்சக்கணக்கான மக்களின் தாலியை அறுக்கும் டாஸ்மாக் சாராயக் கடைகளை மூடு! என்று சொல்வது, பாடுவது தேசத்துரோகமா?

ஒருமித்த கருத்துள்ள மத்திய மாநில அரசுகள், புரட்சிகர எழுத்தாளர்களையும், பேச்சாளர்களையும், கலைஞர்களையும், மக்களுக்காகப் போராடுபவர்களையும் மிரட்டுவதும், அடாவடியாக கைது செய்து சிறையிலடைப்பதும், அன்றாட நிகழ்வாகவுள்ளது. அதன் வெளிப்பாடே அண்மைக் காலத்தில் நடந்தேறிய கோவிந்த பன்சார், நரேந்திர தபோல்கர், கல்புருகி போன்றோர்களின் தொடர் கொலைகள், எழுத்தாளர் பெருமாள் முருகன், மற்றும் பல முற்போக்கு எழுத்தாளர்களையும், பேச்சாளர்களையும் தாக்குவது, கொலைமிரட்டல் விடுவது, அச்சுறுத்துவது அன்றாடம் தொடர்கிறது.

இதுபோன்ற அடக்குமுறைகளை முறியடிக்க… விவசாயிகளும், தொழிலாளர்களும், மாணவர்களும் ஒன்றிணைந்துப் போராடவேண்டுயுள்ளது. புரட்சிகர அமைப்புகள், பாடல்கள் வாயிலாகவும், தெருநாடகம் பொதுக்கூட்டம் மற்றும் கருத்தரங்கம் வாயிலாக மக்களை ஒன்றிணைக்க வேண்டுயுள்ளது. எனவே,

  • மத்திய மாநில அரசுகளின் பாசிச ஒடுக்குமுறையைக் கண்டித்து!
  • தமிழக டாஸ்மாக் சாராயக்கடைகளை மூடக்கோரி!
  • டாஸமாக் கடைகளை மூடக்கோரி போராடி சிறையிலிருக்கும் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்களை விடுவிக்கக் கோரி!
  • புரட்சிகர எழுத்தாளர்களையும், பேச்சாளர்களையும், கொலை செய்தவர்களை, கொலை முயற்சி மற்றும் கொலைமிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யக்கோரி!
  • அனைத்து மக்கள் போராளிகளையும் விடுவிக்கக்கோரி!
  • தோழர் கோவன் அவர்களையும் விடுவிக்கக்கோரி!

பெங்களூர் கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கககலைக்குழுச் சார்பாக, டவுன் ஹால் எதிரில் 07.11.2015 சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் வந்து கலந்துக்கொள்ள வேண்டுமென்று அழைக்கிறோம்!

இவண்.

கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம்,
பெங்களூர்,
தோழர் பன்முகன்-9980545958
மாரி-9844367323
சௌரி-8904641575

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்:
பு. ஜ செய்தியாளர்,
ஓசூர். பேசி- 9944958840

2. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், திருவாரூர்

கருத்துரிமை பறிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்குத் தடை

கருத்துரிமை பறிப்பைக் கண்டித்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்திற்குக் காவல் துறை அனுமதி மறுத்து தடைவிதித்தது. தடையை மீறி திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் த.க.இ.பெ வினர் மாவட்டத்தலைவர் அண்ணாதுரை தலைமையில் 07-11-15 மாலை 6 மணிக்கு ஒலிபெருக்கி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

kovan-arrest-kalai-ilakkiya-mantram-protestஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாவட்டசெயலர் இரா.தாமோதரன் “மக்கள் கலை இலக்கியக் கழகத்திற்கும் எங்களுக்கும் கருத்து மாறுபாடுகள் உண்டு. விமர்சனத்தை விமர்சனத்தின் மூலமும் அரசியல் ரீதியாகவும் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும். மக்கள் பாடகர் கோவன் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மக்கள் நலனுக்கான இடதுசாரி ஒற்றுமையைக் கட்டி அமைக்க ஒன்றிணைந்து செயல்படுவோம். போராட்டக்களத்தில் த.மு.எ.க.ச ஒன்றிணைந்து நிற்கும்” என்றார்.

அடுத்துப் பேசிய ம.க.இ.க தஞ்சை கிளைச்செயலர் இராவணன் “புரட்சிகர, முற்போக்கு செயல்பாட்டாளர்கள் தாக்கப்படுவதும், கைதுகளும், சிறைகளும் புதிய விசயங்கள் அல்ல. கோவனுக்கும் கூட கைது சிறை புதுவிசயமல்ல. ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாகப் பாடினார் என்கிறார்கள். இதற்கு முன்னால் இதே கோவனால் பாடப்பட்ட தரத்திலும், தகுதியிலும், போர்க்குணத்திலும் மேம்பட்டதாக ஏராளமான பாடல்கள் வெளிவந்துள்ளது. இருண்ட காலம் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. மூடு டாஸ்மாக் பாட்டு வெளிவந்து மூன்று மாதங்களாகி விட்டது. இப்போது ஏன் இந்தத் தாக்குதல் என்று பலர் கேட்கிறார்கள்.

மக்கள் அதிகாரம் முன்வைத்த “மூடு டாஸ்மாக்கை” முழக்கம் மக்கள் முழக்கமாக மாறிவிட்டது. லட்சக்கணக்கானோர் பாடலைத் தங்களது பாடலாக ஏற்றுக்கொண்டனர். தாங்கிக் கொள்ள முடியாத அரசு தாக்குதலைத் தொடங்கி உள்ளது. கோவன் கைதைக் கண்டித்து த.க.இ.பெ மற்றும் ஜனநாயக சக்திகளின் கண்டன குரல்களும், மக்களின் போராட்டங்களும் தோழர் கோவனை விடுதலை செய்யும்” என்று கூறி நன்றி தெரிவித்தார்.

நிறைவு உரையாற்றிய த.க.இ.பெ மாநில செயலர் தோழர் இரா.காமராசு “மோடியின் ஆட்சியில் கருத்துரிமைக்கு எதிரான எழுத்தாளர்கள் கல்புர்கி, நநேரந்திர தபோல்கர், கோவிந் பன்சாரே ஆகியோர் வேட்டையாடப்பட்டனர். முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்படுகிறது, மிரட்டப்படுகிறார்கள்.

தேர்தலின்போது லேடியா, மோடியா என்று எதிர்எதிராக சித்தரிக்கப்பட்டது. தமிழகமும் அதற்கு சளைத்ததல்ல என்ற நிலை தான் நிலவுகிறது. பெருமாள் முருகன் மீதான தாக்குதல்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்து சொல்பவர்கள் மீதான தாக்குதல்கள் வரிசையில் மக்கள் பாடகர் தோழர் கோவனும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். நள்ளிரவில் கைது, எங்கேயிருக்கிறார் என்று தெரியாமல் வைத்திருந்தது, விசாரணைக்குப் போலீஸ் காவல் கோருவது, தேசியப் பாதுகாப்புத் தடைச்சட்டத்தின் கீழ் சிறை வைக்க முயற்சி போன்ற வரம்பு மீறிய செயலை, தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். தோழர் கோவனை உடனே விடுதலை செய்ய வேண்டும். வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்றார்.

ஒலிபெருக்கி இல்லாத நிலையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் என்ன கூறுகிறார்கள் என்று நூற்றுக்கணக்கானவர்கள் நெருங்கி வந்து நின்று கேட்டது ஆர்ப்பாட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. கருத்துரிமைக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்தும், தோழர் கோவன் கைதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள் இருளைக் கிழித்து மக்களிடம் சென்றது.

தகவல்
வினவு செய்தியாளர்,
தஞ்சாவூர்

3. அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், திருத்துறைப்பூண்டி

ஒடுக்குமுறை மூலம் மக்கள் கோரிக்கைதகளையோ, போராளிகளையோ நசுக்கிவிட முடியாது

க்கள் கலை இலக்கியக் கழக பாடகர் தோழர். கோவன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் ஒன்றியச் செயலர் சரவணன் தலைமையில் 04-11-2015 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

kovan-arrest-ilaignar-mantram-protest

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஒன்றிய தலைவர் தோழர் கணேஷ், நகர செயலர் தோழர் குமார், மாவட்டத் துணைச் செயலர் தோழர் சுஜாதா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தோழர் தமிழ்ச்செல்வி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினர்.

விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் தோழர் ஞானமோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகக்குழு உறுப்பினர் சந்தரராமன், மாவட்டக்குழு உறுப்பினர் முத்துக்குமரன், ஒன்றிய செயலர் பாஸ்கர், நகர செயலர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

வினவு செய்தியாளர்,
தஞ்சாவூர்

4. மக்கள் அதிகாரம், திருவாரூர்

திருவாரூர் : கருத்துரிமை பறிப்பு என்ற ஒற்றை வரியில் சுருக்கக் கூடியது அல்ல; கோவனின் கைது!

க்கள் கலை இலக்கியக் கழக பாடகர் தோழர்.கோவன் கைது செய்யப்படுவதற்கு முன்னால் மக்கள் அதிகாரம் திருவாரூர் சார்பில் 05-11-15 அன்று திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொள்ள காவல்துறையிடம் 27-10-15 அன்று விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. அந்த விண்ணப்பத்திற்குப் பதில் அளித்து 04-11-15 அன்று ஆணை பிறப்பித்து காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது. கோவன் கைது குறித்துப் பேசக்கூடாது என்று வாய்மொழி செய்தி மூலம் தோழர்களுக்கு அச்சுறுத்தலைத் தந்தது.

காவல்துறையின் எச்சரிக்கை, அச்சுறுத்தலை மீறி மக்கள் அதிகாரம் திருவாரூர் தோழர் முரளி தலைமையில் தோழர்கள் அணிதிரண்டனர். பத்துபேர்தான் என்று ஏளனமாகப் பேசிய காவல்துறையில் உள்ள அம்மா விசுவாசி முகத்தில் கரிபூசும் வகையில் தோழர்கள் மற்றும் அனைத்துக்கட்சி நண்பர்கள் ஆர்ப்பாட்டத்தில் அணிதிரண்டனர்.

சிறப்புரையாற்றிய திருச்சி மக்கள் உரிமை பாதுகாப்பு மையத் தலைவர் காவிரிநாடன் “கருத்துரிமை பறிப்பு என்று ஒற்றை வரியில் ம.க.இ.க பாடகர் தோழர் கோவனின் கைதைச் சுருக்கி விட முடியாது” என்றார். அவர் மேலும் பேசியதாவது

“மாற்றம், வளர்ச்சி என்று கவர்ச்சிகரமாக வந்த மோடியின் ஆட்சியில் நாடு காவிமயமாகிக் கொண்டிருக்கிறது. வரலாறு திரித்து எழுதப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் முற்போக்கு சிந்தனையாளர்களை வேட்டையாடுகிறார்கள். சாதிவெறி ஊக்குவிக்கப்பட்டு தலைவிரித்தாடுகிறது. இராமாயணத்தை மலையாளத்தில் எழுதும் எழுத்தாளர் பஷீர் இஸ்லாமியர் என்பதால் அச்சுறுத்தப்படுகிறார். சிறுபான்மையினர் அச்சத்திற்கும், அவநம்பிக்கைக்கும் ஆளாகி உள்ளனர். பார்ப்பன இந்துமத வெறி பாசிசம் அரங்கேறி ஆட்டம் போடுகிறது,

இதனை சகிப்புத் தன்மை இன்மை என்று ஒற்றை வரியில் சுருக்கிப் பார்த்தோம் என்றால் எதிர்காலம் பழைய இருண்ட காலம் ஆகிவிடும். தோழர் கோவன் கைது சரி என்றும், ஜெயலலிதாவை அவதூறு செய்துவிட்டார் என்றும் அம்மா விசுவாசிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

தி.மு.க தலைமை கழகப் பேச்சாளராகக் காளிமுத்து இருந்தபோது, ‘அம்மா என்று சொன்னால் வணங்கத் தோன்ற வேண்டும். ஆனால் ஜெயலலிதாவைக் கூப்பிடத்தான் தோன்றுகிறது’ என்றார். அவரை அழைத்துப் பதவிகள் கொடுத்து இறந்தவுடன் ராஜமரியாதை கொடுத்து இறுதி ஊர்வலத்தை நடத்திவைத்தார் ஜெயலலிதா. உத்தமி என்று கோவன் பாடியதற்கு இப்போது வழக்கு.

இதற்கு நீதிமன்றம் துணை நிற்கிறது. சாராய விற்பனை அரசின் கொள்கை முடிவு தலையிட முடியாது என்று கூறுகிறது. ஹெல்மெட் பிரச்சனையில் வழக்கறிஞர்களைத் தண்டிக்கிறது.

வீடு காலி செய்யக்கூட மூன்றுமாத அவகாசம் தரவேண்டும், மதுரை வழக்கறிஞர்களை உடனே காலிசெய் என்கிறது உயர்நீதிமன்றம். இருபத்து ஓராயிரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, மதுரை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை அவமதிப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். மூத்த வழக்கறிஞர்கள் கூட அவமதிக்கப்படுகிறார்கள். சட்டத்தைத் தலைமுடிக்குச் சமமாகத்தான் மதிக்கிறார்கள்.

“குடி நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு” என்று விளம்பரப்படுத்திக் கொண்டே சாராயம் விற்பது அரசின் கொள்கை முடிவு என்கிறார்கள். அதுதான் கொள்கை முடிவு என்றால் இந்த அரசைத் தகர்த்துத் தரைமட்டமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை. மக்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வது ஒன்றே தீர்வு” என்று மக்களை அறைகூவி அழைத்தார்.

ம.தி.மு.க மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் ஆரூர்.சினிவாசன் “ஒரு பக்கம் தாலிக்குத் தங்கம் கொடுப்பதும் இன்னொரு பக்கம் டாஸ்மாக்கைத் திறந்து வைத்து தாலிஅறுப்பதும் அதிகார வர்க்கத்தின், ஆட்சியாளர்களின் வாடிக்கையாகிவிட்டது. அதிகார வர்க்கத்தின், ஆட்சியாளர்களின் உறக்கத்தைக் கலைத்துள்ளது கோவனின் குரல்” என்று கூறி கோவனை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

“ஜெயலலிதாவை விமர்சனம் செய்வதால் தேசத்துரோமா?” என்று கேள்வி எழுப்பிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் வி.எஸ்.மாசிலாமணி “ஜெயலலிதா மக்களை மடையர்கள் என்று கருதுகிறார். மக்கள் மடையர்கள் அல்லர் என்பதைப் புரிய வைப்போம்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)இன் மாவட்ட செயலர் ஐ.வி.நாகராஜன் “ம.க.இ.க தோழர் கோவன் கைது நடவடிக்கைக்குக் கடும் கண்டத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஆட்சியில் சரத்குமார், செ.கு.தமிழரசன் தவிர மற்ற அனைவர் மீதும் அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது. ம.க.இ.க அடக்குமுறையைக் கண்டு சமரசம் செய்து கொள்ளக் கூடிய அமைப்பல்ல. எங்கள் மீது கூட கடும் விமர்சனங்கள் வைத்திருக்கிறார்கள். விமர்சனங்களை அரசியல் ரீதியாகவே எதிர்கொள்ள வேண்டும். மோடி ஆட்சியில் நாடு முழுவதும் காவியாக்கி விடவேண்டும் என்று துடிக்கிறார்கள். மாட்டுக்கறி பிரச்னையை அரசியல் ஆக்குவதாகக் கூறுகிறார்கள். ஸ்ரீரங்கத்தில் இனி மாட்டுக்கறி பிரியாணி நைவேத்தியம் செய்ய யாரும் கோரவில்லை. காத்தவராயனுக்கு சர்க்கரைப் பொங்கல் செய்யச் சொல்வதை எப்படி ஏற்க முடியும்?” என்றார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர் கலைமணி, மாற்றத்திற்கான மக்கள் கழக தோழர் வரதராஜன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் கோகுல் ராஜ், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட துணைத்தலைவர் மகேந்திரன், விவசாயிகள் விடுதலை முன்னணி பட்டுக்கோட்டை வட்ட அமைப்பாளர் மாரிமுத்து, ம.க.இ.க தஞ்சை கிளை செயலர் இராவணன், ஆம் ஆத்மி திருவாரூர் மாவட்ட தலைவர் ராமதாஸ், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் ஆசாத், தே.மு.தி.க நகரச் செயலர் செந்தில், தே.மு.தி.க மாவட்ட தலைவர் மோகன்குமார், மக்கள் அதிகாரம் வேதாரண்யம் தோழர் தனியரசு ஆகியோர் கலந்து கொண்டு கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

ஏறத்தாழ மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் கீழத்தஞ்சையில் அறுபதுகளில் நடந்த போராட்டங்களை நினைவு படுத்தியதாகவும் அந்தக்காலம் மீண்டும் திரும்பும் என்று நம்பிக்கை அளிப்பதாகவும் மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் தெரிவித்தனர்.

தகவல்
வினவு செய்தியாளர்,
திருவாரூர்

5. மக்கள் அதிகாரம், மயிலாடுதுறை

“மூடு டாஸ்மாக்கை மூடு, பாடு அஞ்சாதே பாடு”, “கருத்துரிமையை பறிக்காதே, மக்கள் பாடகர் கோவனை விடுதலை செய்” என்ற முழக்கங்களின் அடிப்படையில் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்து விட்டது. 06-11-2015 அன்று காலை 11 மணி அளவில் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஒலிபெருக்கி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கத் தலைவர் வேலு குபேந்திரன் தலைமை தாங்கினார். பால அருள் செல்வன் தே.மு.தி.க.சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டார்.

kovan-arrest-mayiladuthurai-demoதகவல்
மக்கள் அதிகாரம்,
மயிலாடுதுறை

6. மக்கள் அதிகாரம், கரூர்

ரூரில் மக்கள் அதிகாரம் சார்பில் 09-11-2015 அன்று நடத்தப்பட்ட “வழக்கு நிதி தாரீர்” பிரச்சாரம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
கரூர்