privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்நவம்பர் புரட்சி தினத்தில் கோவனைப் பேசாதே !

நவம்பர் புரட்சி தினத்தில் கோவனைப் பேசாதே !

-

நவம்பர் புரட்சி தினக் கொண்டாட்டங்கள் – 2

1. திருச்சி

வம்பர்-7 ரஷ்ய புரட்சிநாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் காந்திபுரம் பகுதியில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி போன்ற புரட்சிகர அமைப்புகள் சார்பாக கடந்த 01-11-2015
அன்று விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சிறுவர்கள், சிறுமிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் பங்கேற்கும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன. பகுதியிலுள்ள மக்கள் தோழர்களுடன் ஒன்றாக கூடி புரட்சிகர பண்பாட்டு விழாவை கொண்டாடும் வகையில் கயிறு இழுத்தல், இசை நாற்காலி, பானை உடைத்தல், ஓட்டப்பந்தயம், நீர் நிரப்புதல் என நடத்தப்பட்டன. அனைவரும் கூட்டுத்துவமாகவும்,
ஒற்றுமையாகவும், தன்னம்பிக்கை, திறமையும், ஆற்றலை உயர்த்தும் வகையில் போட்டிகளில் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். ஓவிய போட்டிக்கு டாஸ்மாக் பாதிப்புகள் பற்றி தலைப்பு வைத்ததில் ஆர்வமுடன் சில மாணவர்கள் படம் வரைந்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

நவம்பர் 7 அன்று காலை 11 மணியளவில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்று நிகழ்ச்சிக்கு போலீசு மைக்செட் வைக்க அனுமதி தரவில்லை. தோழர் கோவன் கைது பற்றி பேசக்கூடாது என அடக்குமுறை செலுத்தும் வகையில் போலீசு நடந்து கொண்டது. அதையும் மீறி மெகா போன் வைத்து மக்களிடம் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பறை இசையுடன் துவங்கிய நிகழ்ச்சி முதலில் தோழர்கள் எழுப்பிய முழக்கத்துடன் நவம்பர் புரட்சி நாளை வரவேற்று, மோடி, ஜெயா கும்பலின் பாசிச ஆட்சியை அம்பலப்படுத்தியது.

தலைமை உரை ஆற்றிய ம.க.இ.க உறுப்பினர் தோழர் சரவணன் “பிற்போக்கு பண்டிகைகளை மக்கள் ஆர்வமாக கொண்டாடி வருகின்றனர் என பத்திரிகையில் எழுதுகின்றனர். ஆனால் தீபாவளி பண்டிகை பற்றி வாட்ஸ் ஆப்பில் ஒருவர், ‘கிருஷ்ணன் நரகாசுரனை அழிக்காமல் மன்னித்து
விட்டிருந்தால் கடனை உருவாக்கும் இந்த தீபாவளி பண்டிகை வராது. நாம் கஷ்டப்பட் வேண்டியதில்லை’ என கூறியிருந்தார். இன்றைய சமூக பொருளாதார அமைப்பில் மக்கள் தீபாவளி பண்டிகையில் பாதிக்கப்படுவதும், நிம்மதியாக ஒரு பண்டிகை கூட கொண்டாட முடியவில்லை. நவம்பர் புரட்சி தான் அனைத்து பாட்டாளி வர்க்க மக்களுக்கும் விடிவை தந்தது. செத்து போனா தான் சொர்க்கம் என்று இப்ப உள்ள ஆன்மீகவாதிகள் கூறுகின்றார்கள். இவ்வுலகத்தில் கஷ்டப்படுவாய் என்பதை அடியோடு மாற்றி மண் உலகில் ஒரு சொர்க்கத்தை அனைத்து பாட்டாளி மக்களுக்கும் அனைத்து வசதிகளும் கொண்ட சோசலிச சமுதாயத்தை படைத்தது ரஷ்யா.

சோசலிசமும், கம்யூனிசமும் தான் தீர்வு, மக்கள் சோசலிச உணர்வை அறிந்து கொள்ளும் போது, தெரிந்து கொள்ளும் போது சோசலிசத்தை படைப்பார்கள்” என பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அடுத்து பேசிய ம.க.இ.க மாவட்ட செயலர் தோழர்ஜீவா “இந்த அரசு கட்டமைப்பு தகுதியிழந்து அழுகி நாறிவிட்டது. இதைத் தூக்கியெறிய வேண்டும். ஒரு மனிதன் மலக்கூடையை சுமந்து சென்றால் அதில் வரும் நாற்றம் தான் அரசின் யோக்கியதை. தேவையில்லாத அரசை தூக்கி எறிய வேண்டும். மக்களின் பஞ்சம், பசி, வறுமை, வேலையில்லா திண்டாட்டம் ஒழித்த நவம்பர் புரட்சியை நம் நாட்டிலும் நடத்த வேண்டும், அப்போது தான் மக்களுக்கு விடிவு கிடைக்கும்.” என்று பேசினார்.

அடுத்து கொடியேற்றி விட்டு சிறப்புரை பேசிய மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் தோழர் தர்மராஜ் அவர்கள் “நவம்பர் புரட்சி நாளுக்கு கொடியேற்று விழாவுக்கு கூட ஒலிபெருக்கி வைத்து கொள்ள அனுமதிக்கவில்லை. அனுமதி வழங்க போலீசிடம் சென்ற போது, ‘கோவனை பற்றி பேசக்கூடாது, பேசினால் வழக்கு போடுவோம்’ என்றனர். ஒரு ஜனநாயக நாட்டில் டாஸ்மாக்கை எதிர்த்து பாட்டு பாட உரிமை இல்லை. தேசத் துரோக வழக்கு போடுவதும், கோவனை பார்க்க விடாமால் அடக்குமுறை செலுத்துகின்றனர். கோவனை பற்றி பேசினால் வழக்கு என்றால் முன்னால் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ பேசினார், அவர் மீது வழக்கு போடு. லண்டனில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் தமிழக அரசை கண்டித்து இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி கோவனை விடுதலை செய்ய வேண்டும் என்று
பேசினார்கள், அவர்கள் மீது வழக்கு போடு,அவர்கள் மீது வழக்கு போடு, பல கட்சிகள் கோவனை பற்றி பேசுகின்றனர். அவர்கள் மீது வழக்கு போடு.

இந்தியாவில் மோடி, RSS கும்பல் நேரடியாக எழுத்தாளர்களை சுட்டுக் கொல்வது, சிறுபான்மை மக்களை அச்சுறுத்துவது என இந்து மதவெறி காலிகள் தனிமனித உரிமைகளை பறித்து நீ என்ன சாப்பிடுவது, எங்கு உட்காருவது, எங்கு நிக்கனும், எழுத தடை, பேச தடை, பாடத் தடை என ஹிட்லரை போல பாசிச அடக்கு முறையை ஏவி விடுகின்றனர்.

இந்த அடக்கு முறை அஞ்ச மாட்டோம். பேனா, துரிகை போன்றவை ஆயுதமாக்குவோம். களத்தில் இந்த அரசின் பாசிசத்தையும், RSS, BJP காலித்தனத்தையும் ஓட ஓட விரட்டியடித்து முறியடித்து சோசலிச சமுதயத்தை உருவாக்குவோம். நவம்பர் புரட்சி நாளில் அதற்கு உறுதியேற்போம்.” என மக்களை அறைகூவி அழைத்தார்.

பிறகு தோழர்கள் , பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை பு.ஜ.தொ.மு சங்க நிர்வாகிகள் தோழர்.சுந்தர்ராஜ், முத்துகருப்பன் ஆகியோர் கொடுத்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இறுதியாக பெ.வி.மு தலைவர் தோழர் நிர்மலா அனைவருக்கும் நன்றி கூறி விழாவினை நிறைவு செய்தார்.

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.

2. திருச்சி பு.ஜ.தொ.மு

திருச்சி குட்செட் சுமைப்பணித் தொழிலாளர் பாதுகாப்புச் சங்கம் (இணைப்பு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.) சார்பில் நவம்பர் 7 ரசியப் புரட்சி 92 வது ஆண்டு தினம் 07-11-2015 அன்று கொண்டாடப்பட்டது. காலை 8 மணிக்கு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வை குட்செட் சுமைப்பணித் தொழிலாளர் முன்னணி தலைவர் முத்துக்கருப்பன் அவர்கள் தலைமை தாங்கினார்.

சங்கத்தின் சிறப்புத் தலைவர் ஞா.ராஜா அவர்கள் சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்து வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவினையொட்டி சிறப்பிக்கும் வகையில் வெடி வெடித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் கோபி அவர்கள் மற்றும் குட்செட் சுமைப்பணித் தொழிலாளர் பாதுகாப்புச் சங்க தலைவர் குத்புதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட தலைவர் தோழர்.காவிரிநாடன் சிறைப்புரையாற்றினார். 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி.

3. திருவள்ளூர் (மேற்கு)

புரட்சி – புதிய ஜனநாயகம் – கம்யூனிசம் 98 – வது ரஷ்யப் புரட்சி தின விழா

திருவள்ளூர் (மேற்கு) மாவட்ட அமைப்பு சார்பில் 98-வது ரஷ்யப் புரட்சி தின விழா பட்டாபிராம் பகுதியில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி விளையாட்டு போட்டிகள் 01-11-2015 அன்று நடத்தப்பட்டன. குழந்தைகளுக்கான ஓட்டப்பந்தயம், மியூசிக்கல் சேர், மற்றும் பெண்களுக்கான மியூசிக்கல் சேர், ஓட்டப்பந்தயம், கயிறு இழுக்கும் போட்டி, குண்டு எறிதல் போன்றவை நடத்தப்பட்டன. ஆண்களுக்கு வாலிபால் மற்றும் கயிறு இழுத்தல் போட்டி
நடத்தப்பட்டது. போட்டிகளில் மொத்தம் 80 பேர் வரை கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் தொழிலாளர்களின் குடும்பத்தினரும், பகுதியை சேர்ந்த நண்பர்களும், ஆதரவாளர்களும் உற்சாகமாக விளையாட்டு போட்டிகளில் கலந்துக் கொண்டனர்.

நவம்பர் 7-ம் தேதி நடைபெற்ற ரஷ்யப் புரட்சி தின விழா கூட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குடும்பத்துடன் 200 பேர் கலந்து கொண்டனர். கூட்டம் மாலை 5.30 மணியளவில் தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன்துவங்கி இரவு 8.30 மணியளவில் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன்முடிவடைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

நவம்பர் 07 – 98-வது ரஷ்யப் புரட்சி தின விழா கூட்டத்தினைதிருவள்ளூர் (மேற்கு) மாவட்ட தலைவர் தோழர் சரவணன் தலைமைதாங்கி நடத்தினார். ரஷ்யப் புரட்சி தின விழாவை ஒரு குடும்ப விழாவாக நடத்த வேண்டிய அவசியம் குறித்தும் இன்றைய அரசியல் சூழலில் இந்து மதவெறி பாசிச சக்திகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்களுடைய பண்பாடு, கலாச்சாரம் ஆகிய அனைத்திலும் தனது மதவெறி பாசிசத்தை கட்டவிழ்த்து வருகிறது. இதனை
உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என கூறினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கிய பகுத்தறிவு கழகத்தின் தலைவர் தோழர் தமிழ்நெறி, “நமது நாட்டில் மோடியின் ஆட்சியில் முற்போக்காளர்களும், மூடநம்பிக்கைக்கு எதிரான எழுத்தாளர்களும் படுகொலை செய்யபடுகின்றனர். மாட்டிறைச்சிக்கு
எதிரான மதவெறி அரசியல் RSS-ஆல் திட்டமிட்டு இந்து மதவெறியர்களால் அரங்கேற்றப்பட்டு வருகிறது. மனுதர்மத்தில் உள்ள ரிக் வேதம் புராணங்களை படித்துகாட்டி மாட்டிறைச்சியை உட்கொள்ளும் பண்பாடே ஆரிய பார்ப்பனர்களது பண்பாடு தான்” என்பதை தோலுரித்து காட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் பட்டாபிராம் பகுதி கவுன்சிலர் சார்லஸ் பேசும் போது, குழந்தைகளை நமது அரசியலுக்கு ஏற்றவாறு வளர்த்துள்ளதை பாராட்டியும், போராட்ட தலைமையின் வாரிசுகளாக உள்ளதையும் சுட்டிக்காட்டி பேசினார். இன்றைய மதவாத அரசியலை வீழ்த்த குழந்தைகளை இது போன்ற அரசியலை சொல்லி வளர்ப்பது தான் சரியானது என உணர்வதாக கூறினார்.

பழங்குடியினர் மக்கள் நலச் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் தோழர் ஜெயதென்னரசு இலக்கிய நடையிலும், எளிய தமிழிலும் அரங்கில் இருந்த அனைவரின் மனதை கவரும் வகையில் பேசினார். “இதுவரையில் பல்வேறு கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும், பொதுகூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசியிருந்தாலும் இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகிழ்ச்சி எனக்கு
இதுவரை கலந்து கொண்ட கூட்டங்களில் கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் நவம்பர் விழா கூட்டத்தில் நான் எனது குடும்பத்துடன் கலந்து கொள்வேன் என்பதை உறுதியாக கூறுகிறேன். இன்றைய மதவெறி பாசிசத்தை வீழ்த்த பெண்கள் அதிக அளவில் களம் இறங்கி பிரச்சாரம் செய்ய வேண்டும். குழந்தைகளின் அரசியல் உணர்வை பாராட்டுகிறேன். நமது அமைப்பின் அரசியல் பாதை தான் சரியானது இதன் மூலம் தான் இந்து மதவெறி பாசிசத்தை வீழ்த்த முடியும்” என உறுதியாக கூறி தனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

சிறப்புரையாற்றிய திருவள்ளூர் (மேற்கு) மாவட்ட செயலாளர் தோழர் முகிலன் சோவியத் ரஷ்யாவின் சாதனைகளை, நம்நாட்டு மக்களின் அவல வாழ்க்கையோடு ஒப்பிட்டு விளக்கினார். “பாசிசமயமாகி வரும் காவி பயங்கரவாதத்தையும், மறுகாலனியாக்க நடவடிக்கைகளையும் இன்றைய அரசியல் பாதையில் (தேர்தல் பாதை) நின்று தீர்க்க முடியாது. பாசி சத்தை முறியடிக்கும் வல்லமை கம்யூனிசத்தை தவிர மாற்று ஒன்றில்லை.தற்போது தேவை அதிகாரத்தை மக்கள் கையிலெடுப்பதும், புதிய ஜனநாயக புரட்சியை முன்னெடுப்பதும் தான் ஒரே தீர்வு” என்பதை விளக்கி பேசினார்.

இறுதியாக விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகள் மற்றும் பெண்கள், ஆண்கள்அனைவருக்கும், திருக்குறள் ஒப்புவித்தல், மாறுவேட போட்டிமற்றும் ஓவியம் வரைதல் ஆகியவற்றில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர்களுக்கும் கோப்பை மற்றும் சாண்றிதழ்கள் வழங்கப்பட்டது. போட்டியிலும், விழாவிலும் கலந்து கொண்ட அனைவரும் மிகுந்த ஆரவாரத்துடன், உற்சாகத்துடனும் கோப்பை மற்றும் சான்றிதழை பெற்று சென்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணைத் தலைவர் தோழர் லெட்சுமணன் கூட்ட ஏற்பாடுகளுக்கு உதவி புரிந்த கிளை சங்க முன்னணியாளர்களுக்கும், விளையாட்டு குழு தோழர்களுக்கும் நன்றி தெரிவித்த்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருமையான இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம்

4. சென்னை பெ.வி.மு, ம.க.இ.க

98-வது நவம்பர் புரட்சி நாள் விழாவினை “பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்தை முறியடிப்போம் ! பாட்டாளி வர்க்கப் பண்பாட்டை உயர்த்தி பிடிப்போம்!” என்ற முழக்கத்தை
முன்வைத்து நவம்பர் புரட்சி விழா சென்னையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் நடத்தப்பட்டது. விழாவில் குழந்தைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டார்கள்.

நிகழ்ச்சிக்கு ம.க.இ.க. தோழர் சோமு தலைமை தாங்கி நடத்தினார். ரஷ்யாவில் நடந்த புரட்சியை போல இந்தியாவிலும் ஒரு புரட்சியை நடத்த வேண்டும் அதற்காக நாம் பாடுபட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார்.

nov7-pevimu-04பின் பெ.வி.முவின் குரோம்பேட்டை கிளை செயலாளர் தோழர் மீனா வாழ்த்துரையும், நிகழ்ச்சிகளை ம.க.இ.க. தோழர் அஸ்ரத்
தொகுத்தும் வழக்கினார்கள். இளம் தோழரின் உற்சாகமான பறை முழக்கத்துடன் தொடங்கியது நிகழ்ச்சி.

பகத்சிங், வேலுநாச்சியார், ஜான்சி ராணி, அஸ்ரத் மஹல், கல்புர்கி என நடித்த இளந்தோழர்கள், அவர்களை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று பாடிய தோழர் கோவனை கைது செய்தது போல என்னையும் கைது செய்யுங்கள் என்று துணிவோடு இளந்தோழர் மேடையில் ‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று பாடி தொடங்கியதும் அவருடன் எங்களையும் கைது செய்யுங்கள் என்று சொல்வது போல் மேடையில் 5 இளந்தோழர்கள் ஏறி கோரஸ் பாட, கைதட்டலில் அரங்கமே அதிரத் தொடங்கியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சிறுவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் காட்சியாக வைத்தது அனைவரையும் கவர்ந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

“மாட்டுகறி’ என்ற தலைப்பில் பெ.வி.மு.வின் தோழர்கள் கவி மற்றும் வடிவு, கவிதை வாசித்தார்கள். “பசு பசு என்று கூவிகிறார்களே என் எருமை மாட்டை பற்றி ஒன்றும் சொல்வதில்லை – ஓ…. எருமை கருப்பாக இருப்பதாலா?” என்றும், “மாட்டுகறி சாப்பிட கூடாது என்று கூவும் இவர்கள் நடுவீட்டில் மாட்டை கட்டி வைத்து சாணி, மூத்திரம் அள்ளுவதற்கு தயாரா?” என்ற கேள்விகளையும் அவர்களின் முகத்தில் அறைவதுபோல் கேட்டார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பெ.வி.மு. தோழர்கள் “செவ்வணக்கம் செவ்வணக்கம்’, “புரட்சி புரட்சி எனும் சொல்’ என்ற புரட்சிகர பாடல்களை பாடியது அரங்கத்தில் சிறப்பாக பாராட்டப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பிறகு ‘மாற்றம்’ என்ற நா டகம் பெ.வி.மு தோழர்களால் நடத்தப்பட்டது. இப்போது உள்ள கல்வி சூழலை விரும்பாத சிறுவர்கள் காணும் கனவு பள்ளி போன்று நமக்கும் நிஜத்தில் கிடைக்காதா என்ற ஏக்கம் நிறைவேற, நாம் எல்லோரும் சேர்ந்து போராடினால் மாற்றம் நிச்சயம் உருவாகும் என்று உணர்த்தும் விதமாக அமைந்தது.

ம.க.இ.க.வின் சென்னை கலைக்குழு சார்பில் தீபாவளி என்ற நாடகமும் / புரட்சிகர கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. நரகாசூரனின் மரணத்தை தீபாவளியாக கொண்டாடப்படுவதை உழைக்கும் மக்களுடைய தீராதவலி என்று உணர வைத்தது நாடகம். மேலும் பாடல்கள் மூலம் எல்லாருக்கும் உணர்வூட்ட முடியும் என்ற வகையில் அமைந்தது கலைநிகழ்ச்சி.

பெ.வி.மு தோழர் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பகுதிகளில் ஓட்டப் பந்தயம், எலுமிச்சை ஸ்பூன், தண்ணீர் நிரப்புதல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தினர். அதில் பகுதி குழந்தைகளும் பெண்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். பங்கு பெற்ற அனைவருக்கும் விழா அரங்கில் பரிசுகள் வழங்கப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மேலும் கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களுக்கும், ஓவியம் வரைந்து அரங்கில் காட்சியாக வைத்தவர்கள், கவிதை வாசித்தவர்களுக்கு என்று அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை தோழர் சுப.தங்கராசு, பு.ஜ.தொ.மு, தோழர் ராஜூ, மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்பாளர், தோழர் சோமு, ம.க.இ.க., தோழர் அஜிதா, ம.க.இ.க, தோழர் செல்வம்,
ம.க.இ.க, தோழர் ராமன், ம.உ.பா.மை, தோழர் லூர்தின் ம.உ.பா.மை
ஆகியோர் வழங்கி சிறப்பித்தார்கள்.

nov7-pevimu-24சிறப்புரையில் பேசிய மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்
ராஜூ
, இப்போது உள்ள அரசியல் சூழல் பார்ப்பன பாசிச ஜெயா அரசு எப்படி அடக்குமுறையினை கையாள்கிறது, அதற்கு உதாரணமாக டாஸ்மாக் எதிர்த்துபாடிய தோழர் கோவன் கைது நடவடிக்கை என்பதை விளக்கமாக எடுத்து கூறினார்.

பெ.வி.மு. தோழர் சத்யா நன்றியுரை வழங்கினார்.

பாட்டாளி வர்க்க சர்வ தேசகீதத்துடன் விழா சிறப்பாக முடிந்தது.

நவம்பர் 7 விழாவின் சிறப்புகளையும் கடமைகளையும் நெஞ்சில் ஏந்தி தோழர்கள் உற்சாகமாக கலைந்தனர்.

விழா முடிவில் மாட்டுகறி விருந்து அளிக்கப்பட்டது.

தகவல்
பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை

5. காஞ்சிபுரம்

பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்தை முறியடிப்போம்!

பாட்டாளி வர்க்கப் பண்பாட்டை உயர்த்திப் பிடிப்போம் என்ற தலைப்பில் காஞ்சிபுரத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் நவம்பர் 7 ரசியப் புரட்சி நாள் கொண்டாட்டப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம்

6. உடுமலைப்பேட்டை

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் நவம்பர் 7 அன்று உடுமலைப்பேட்டையில் ரசியப் புரட்சி நாள் கொண்டாடப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் மாட்டுக்கறி விருந்து
வழங்கப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
உடுமலைப்பேட்டை