privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்சி.பி.எம் பிழைப்பு வாதம் இந்துமதவெறியரை எதிர்க்குமா ?

சி.பி.எம் பிழைப்பு வாதம் இந்துமதவெறியரை எதிர்க்குமா ?

-

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல கன்னட எழுத்தாளரும் முற்போக்குச் சிந்தனையாளருமான கல்புர்கி மற்றும் பகுத்தறிவாளரும் மருத்துவருமான நரேந்திர தபோல்கர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான கோவிந்த் பன்சாரே ஆகியோர் படுகொலை செயப்பட்டுள்ள கொடூரம், உ.பி. மாநிலம் தாத்ரியில் மாட்டிறைச்சி உண்டதாகக் குற்றம் சாட்டி இந்துவெறியர்களால் ஒரு முஸ்லிம் அடித்துக் கொல்லப்பட்ட அட்டூழியம், முன்னாள் பாக்.வெளியுறவு அமைச்சர் குர்ஷித் மக்முத் கசூரியின் நூலை வெளியிட ஏற்பாடு செய்த ‘குற்றத்துக்காக’, அத்வானியின் விசுவாசியான சுதீந்திர குல்கர்னியின் முகத்தில் சிவசேனா குண்டர்கள் கருப்பு மை ஊற்றி அவமானப்படுத்தி நடத்திய தாக்குதல், மோடியின் அமைச்சர்கள் வாய்க்கொழுப்பேறி இந்துத்துவ நஞ்சைக் கக்கிவருவது, எழுத்தாளர்கள் கொல்லப்படும் நிலையில் சாகித்ய அகாடமி மவுனம் சாதித்து வருவது – முதலானவை மோடி அரசின் மீது கடும் அதிருப்தியை அறிவுத்துறையினரிடம் தோற்றுவித்துள்ளது.

திரைப்படத் துறையினர்
விருதுகளைத் திருப்பிக் கொடுக்கும் திரைப்படத் துறையினர்

நாட்டில் நிலவும் இத்தகைய சூழலுக்கு எதிராக பிரதமர் வாய் திறக்காததோடு, எந்த நடவடிக்கையும் எடுக்காததையும் கண்டிக்கும் வகையில் 88 வயதான பெண் எழுத்தாளரான நயன்தாரா சேகல், தனக்கு 1986-ம் ஆண்டில் அளிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதைத் திரும்ப ஒப்படைத்துள்ளார். இந்த அறச்சீற்றத்துக்கு கல்புர்கி கொலையும், தாத்ரி விவகாரம் மட்டும் காரணமல்ல; “இன்று நாடெங்கும் தீவிரமாகிவரும் சகிப்புத் தன்மையற்ற இந்துத்துவ சக்திகளின் தாக்குதல் சூழல் காரணமாகவே நான் எனது விருதினைத் திருப்பிக் கொடுக்கிறேன்” எனக் குறிப்பிட்டு, புகழ் பெற்ற இந்தி கவிஞர், அசோக் வாஜ்பாய் தனது விருதினைத் திரும்பக் கொடுத்துள்ளார். “கௌதம புத்தரும் குருநானக்கும் பிறந்து வாழ்ந்த புண்ணிய பூமியில், மதரீதியான தாக்குதல்கள் நடப்பது நமது மண்ணுக்கும் சமுதாயத்துக்கும் பெருத்த அவமானம். இவற்றை இந்த அரசால் தடுக்க முடியாத நிலையில் இந்த விருதைத் திருப்பி அளிக்கிறேன்” என்று மோடி அரசுக்குக் கடிதம் எழுதி, பஞ்சாபின் எழுத்தாளரான தலீப் கவுர் தீவானா, தனக்கு 2004-ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட பத்மசிறீ விருதைத் திரும்ப அளித்துள்ளார்.

தாத்ரி சம்பவமும், மும்பையில் பாக். கஜல் பாடகர் குலாம் அலியின் நிகழ்ச்சி ரத்து செயப்பட்டிருப்பதும் துரதிருஷ்டவசமானது என்று கூறிய மோடியின் பூசி மெழுகும் வார்த்தைகளை அம்பலப்படுத்தி, ஷஷி தேஷ்பாண்டே என்ற பிரபல பெண் எழுத்தாளர் சாகித்ய அகாடமி உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளதோடு, தனக்கு அளிக்கப்பட்ட விருதையும் திருப்பிக் கொடுத்துள்ளார். இவர்கள் மட்டுமின்றி, உதய் பிரகாஷ், கே.வீரபத்திரப்பா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதைத் திருப்பி அளித்துள்ளனர். ஐந்து எழுத்தாளர்கள் தங்களது சாகித்ய அகாடமி பதவிகளைத் துறந்துள்ளனர். சினிமா தயாரிப்பாளர்கள் – இயக்குனர்கள் பலரும் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதுகளைத் திருப்பிக் கொடுத்துள்ளனர்.

நயன்தாரா சேகல், அசோக் வாஜ்பாய், தலிப் கௌர் திவானா.
விருதுகளைத் திருப்பிக் கொடுத்து மோடி முகத்தில் காரி உமிழ்ந்த எழுத்தாளர்கள் : நயன்தாரா சேகல், அசோக் வாஜ்பாய், தலிப் கௌர் திவானா.

“இந்து ராஷ்டிர நாடாக இந்தியாவை மாற்றும் திசையில் இந்த அரசு செல்கிறது. தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக் கழக (சி.எஸ்.ஐ.ஆர்.) இயக்குனர்கள் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வெளிப்படையாகப் பங்கேற்கின்றனர். அரசின் பல்வேறு நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் திட்டமிட்டே திணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், விருதை திருப்பித் தருவதைத் தவிர விஞ்ஞானியான எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று உருக்கமாக கடிதம் எழுதி, பத்ம பூஷண் விருது பெற்ற 87 வயதான விஞ்ஞானி பி.எம். பார்கவா தனது விருதைத் திருப்பிக் கொடுத்துள்ளார். விஞ்ஞானிகள் அசோக் சென், பி.பல்ராம் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட நாட்டின் உயரிய பத்ம பூஷண் விருதைத் திருப்பி அளித்துள்ளனர். ரொமிலா தாப்பர், இர்பான் ஹபீப், கே.என். பணிக்கர், மிருதுளா முகர்ஜி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வரலாற்றாசிரியர்கள், மோடி அரசுக்குத் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். பிரபல வரலாற்றாசிரியர் சேகர் பதக், தனக்கு அளிக்கப்பட்ட பத்மசிறீ விருதைத் திருப்பிக் கொடுத்துள்ளார். எழுத்தாளர்கள், கலைஞர்கள், வரலாற்றாசிரியர்களின் போராட்டத்தை ஆதரித்து 107 மூத்த விஞ்ஞானிகள் ஆன்லைனில் அறிக்கை வெளியிட்டுள்ளதோடு, நாட்டில் நிலவும் மோசமான சூழலுக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அரசுத் தலைவரிடம் மனு கொடுத்துள்ளனர்.

பி.எம்.பார்கவா, அசோக் சென், பி.பல்ராம்
அரசின் விருதுகளைத் திருப்பிக் கொடுத்துள்ள பிரபல விஞ்ஞானிகள் : பி.எம்.பார்கவா, அசோக் சென், பி.பல்ராம்

ஊடகங்களாலும் இந்துத்துவப் பரிவாரங்களாலும் ஊதிப்பெருக்கப்பட்ட மோடி அலை, இப்போது புஸ்வாணமாகி நாடு முழுவதும் கடும் அதிருப்தியையே எதிர்கொண்டிருக்கிறது. பொருளாதாரச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவது, அந்நிய முதலீடுகளை ஈர்ப்பது என்ற மோடி அரசின் நடவடிக்கைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை. ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட “மேக் இன் இந்தியா” என்ற சரக்கும் விலை போகவில்லை. ஊழலற்ற ஆட்சி என்ற அண்டப்புளுகை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா, ம.பி.முதல்வர் சௌகான் ஆகியோர் சிக்கியுள்ள ஊழல் விவகாரங்கள் சந்தி சிரிக்க வைத்துவிட்டன. சினிமா-தொலைக்காட்சி, கல்வி-கலாச்சாரம், அறிவியல், வரலாற்று ஆவு அமைப்புகள் முதல் உச்ச நீதிமன்றம் வரை அனைத்து நிறுவனங்கள் மட்டுமின்றி, சி.பி.ஐ, பிரதமர் அலுவலகம் போன்ற உயர் அதிகார அமைப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ். விசுவாசிகளை நியமித்து வருவதும், தீவிரமாகிவரும் இந்துவெறித் தாக்குதல்களும் அறிவுத்துறையினரிடமும் விஞ்ஞானிகளிடமும் கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளன. மீள முடியாத அரசியல் பொருளாதார நெருக்கடியிலும், தப்பிக்க முடியாத லஞ்ச ஊழலிலும் சிக்கிக் கொண்டு அனைத்தும் தழுவிய தோல்வியிலும் மாட்டிக்
கொண்டுள்ள மோடி கும்பல், நாட்டின் அறிவுத்துறையினரிடமும் மதிப்பிழந்து தனிமைப்பட்டுப் போயுள்ளது.

07-awards-returnedஇருப்பினும், ஆட்சியதிகார பலத்தையும், அமைப்புரீதியில் திரட்டப்பட்டுள்ள இந்துவெறி பாசிச குண்டர் படையையும், கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதரவையும் கொண்டுள்ள துணிச்சலில் பா.ஜ.க. அமைச்சர்களும் தலைவர்களும் இந்துத்துவப் பரிவாரங்களும் அறிவுத்துறையினரின் நியாயமான இந்த அறப்போராட்டங்களை எள்ளி நகையாடி பாசிசத் திமிருடன் கொச்சைப்படுத்தி வருகின்றனர்.

“இது வெறும் காகிதப் புரட்சி. அவர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் எழுதுவதை நிறுத்திவிட்டுப்போகட்டும். நாங்கள் சாகித்ய அகாடமியை மூடிவிட்டு அதனைத் தூய்மை இந்தியா (ஸ்வாச் பாரத்) திட்ட அலுவலகமாக மாற்றிவிடுகிறோம்” என்று எழுத்தாளர்களும் கலைஞர்களும் இல்லாத ஒரு நாட்டைக் கட்டியமைக்கக் கிளம்புகிறார், மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரான மகேஷ் சர்மா.

எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் படுகொலை செய்யப்படும் நாட்டில், அரசின் விருதுகள் ஓரு அவமானச் சின்னம் என ஒரு எழுத்தாளன் நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது? எழுத்தாளர்களின் மீதான வன்முறையைக் கண்டிக்காத சாகித்ய அகாடமிக்கு தனது எதிர்ப்பைக் காட்டும் வகையில்தான் அவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளைத் திருப்பிக் கொடுக்கிறார்கள். இதுவும்கூட தவறு என்று சாடுகின்றனர், பா.ஜ.க. அமைச்சர்கள்.

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, “இவர்களது டிவிட்டர்களைப் பார்த்தாலே இவர்கள் பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள் என்று புரியும். இவர்கள் எதிர்க்கட்சிகளால் செயற்கையாக வலிந்து உருவாக்கப்படும் இத்தகைய போராட்டத்தின் மூலம் பிரபலமடையப் பார்க்கிறார்கள்” என்று சாடுகிறார். டெல்லி ஐ.ஐ.டி. மாணவர்களிடம் உரையாற்றிய இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன், “இந்தியாவில் சகிப்புத் தன்மை குறைந்து வருகிறது. இது ஜனநாயகத்துக்கும், தொழில் வளர்ச்சிக்கும் நல்லதல்ல” என்று பா.ஜ.க. அரசின் போக்கு குறித்து விமர்சனமாகக் குறிப்பிட்டார். உடனே, “ரிசர்வ் வங்கி வேலையை மட்டும் ரகுராம் ராஜன் பார்க்கட்டும். ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என்று அவர் அறிவுரை சொல்லத் தேவையில்லை. அவரை மோடி அரசு உடனே நீக்க வேண்டும்” என்று சீறுகிறார், சுப்பிரமணிய சாமி.

“விருதுகளை திருப்பிக் கொடுப்பதன் மூலம் நாட்டின் பெருமையை சீர்குலைக்கிறார்கள். செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள இத்தகைய எதிர்ப்புகளால் பிரதமர் மோடியையோ, பா.ஜ.க.வையோ ஒன்றும் செய்துவிட முடியாது” என்று எகிறுகிறார் மைய அமைச்சர் உமா பாரதி.

முன்னாள் ராணுவத் தளபதியும் இந்நாள் பா.ஜ.க. அமைச்சருமான வி.கே.சிங், அரியானாவின் ஃபரிதாபாத்தில் ராஜபுத்திர சாதிவெறியர்களால் தீயிடப்பட்ட குடிசையில் இரு தாழ்த்தப்பட்ட குழந்தைகள் உயிரோடு எரிக்கப்பட்டதைப் பற்றி நாய்களுடன் ஒப்பிட்டு அப்பட்டமான பார்ப்பன வெறியை பாசிசத் திமிருடன் கக்கியுள்ளார்.

“நான் மாட்டுக்கறி சாப்பிடுவது எனது தனிப்பட்ட விருப்பம்; அதை யாரும் தடுக்க முடியாது” என்று பேசிய கர்நாடக முதல்வரின் தலையை வெட்டுவேன் என பா.ஜ.க. தலைவர் பகிரங்க மிரட்டல் விடுக்கிறார். இந்துவெறி சிறீராம் சேனா அமைப்பினர் கர்நாடக முதல்வருக்குப் பன்றிக் கறி அனுப்பும் போராட்டத்தை நடத்துகின்றனர்.

இந்துத்துவ தாக்குதல் தீவிரமாகிவரும் இத்தகைய சூழலில், சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளை திருப்பிக் கொடுத்து அரசின் முகத்தில் காறி உமிழாத குறையாக தங்களது எதிர்ப்புகளை பல எழுத்தாளர்களும் கலைஞர்களும் விஞ்ஞானிகளும் பதிவு செய்கின்றனர். ஆனால், சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழக எழுத்தாளர்களின் நெஞ்சில் இவையனைத்தும் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, விருதுகளைத் திருப்பிக் கொடுக்கும் எழுத்தாளர்களை அவர்கள் கேலியும் கிண்டலும் செய்து கொச்சைப்படுத்துகிறார்கள். அமிதாவ் கோஷ் போன்ற சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் தங்களது விருதுகளைத் திருப்பிக் கொடுக்காத போதிலும், போராடும் எழுத்தாளர்களை ஆதரிக்கிறார்கள். ஆனால் தமிழகத்தின் பிழைப்புவாத எழுத்தாளர்களோ, திருப்பிக் கொடுப்பவர்களை ஆதரிக்கக் கூட முன்வராமல் வழக்கமான தமது அடிமைத்தனத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எழுத்தாளர்கள் தமக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பிக் கொடுப்பது பிரச்சினைக்குத் தீர்வல்ல, இந்தப் போராட்டமுறையும் சரியல்ல; வேறு தளத்தில் போராட வேண்டும் என்று இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக ஏதோ பெரிய போராட்டம் நடத்தப் போவதைப் போல தமிழக சி.பி.எம். கட்சி காட்டிக் கொள்கிறது. ஆனால் என்ன போராட்டம் என்பதைப் பற்றி அது வாய் திறக்க மறுக்கிறது. சி.பி.எம். கட்சியின் அகில இந்தியத் தலைமையானது, விருதுகளைத் திருப்பிக் கொடுக்கும் எழுத்தாளர்கள் – கலைஞர்களின் போராட்டத்தை ஆதரிக்கிறது. ஆனால் தமிழகத்தின் சி.பி.எம். கட்சியும் அதன் தலைமையிலான த.மு.எ.க.ச.வும், விருதுகளைத் திருப்பிக் கொடுப்பது தீர்வல்ல என்று தனி ஆவர்த்தனம் வாசித்துக் கொண்டிருக்கிறது. இந்துத்துவ தாக்குதல் தீவிரமாகிவரும் சூழ்நிலையில், நீங்கள் எந்தப் பக்கம் என்பதுதான் மையமான கேள்வி.

தமிழகத்தின் எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட அரசின் விருதுகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தமது பிழைப்புவாதத்தைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சி.பி.எம்.கட்சியோ, தனது கோழைத்தனத்தை மறைத்து வெற்று சவடால் அடித்துக் கொண்டிருக்கிறது.

– மனோகரன்.
_________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2015
_________________________________

  1. மக்கள் காலங்காலமாக மாட்டுக்கறியும், பன்றிகறியும், ஏன் வறட்சி காலத்ட்கில் எலிக்கறி கூட உண்பார்கள்… இவ்வளவு வருஷம் இல்லாத பிரச்சனை இப்பொழுது ஏன் வருகிறது??? மாட்டுக்கறி சாப்பிட்டால், சாப்பிட்டுவிட்டு போகவேண்டியது தானே? அதை ஏன் பெரிய சாதனையாக பட்டியலிட வேண்டும்?? உ.பி போன்ற மாநிலங்களில் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவதாகவே இது அமையும்… இது இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு…உலகில் உள்ள இந்துகளில் 85 சதவிகிதம் பேர் இங்கு தான் இருக்கின்றனர்.. இவர்கள் “பசு”வை கடவுளாக பார்க்கும் பொழுது, மற்ற மதத்தினரும், கீழ்ழ்ழ்ழ்ழ் சாதியினரும் “பசுவை” கொல்லுவோம் என்று சொல்லி உசுப்பேற்றும்பொழுதுதான் “அடி” வாங்குகிறார்கள்… தமிழ்நாட்டிலும், கேரள, ஆந்திராவிலும் உள்ள இந்து மக்கள் “மாட்டுக்கறி” சாப்பிடுவதை “பன்றி” மலம் சாப்பிடுவதை போல நினைப்பதால் தான், இங்கு இன்னமும் “பீப்” பிரியானியும், “வறுத்த” கறியும் விற்க முடிகிறது…. பெரும்பான்மை மக்களின் உணர்வை காயப்படுத்தினால் இது போன்ற விஷயங்கள் மிக சாதாரனமாக எல்லா நாட்டிலும் நடக்கும்…பாகிஸ்தானில் “பன்றி” கறி சாப்பிடுவதற்காக வாதாடினால் சும்மா விடுவான _____________?????

  2. பாகிஸ்தான் என்பது தீவிர இசுலாமிய நாடு. இசுலாமிய ஜனநாயக நாடுகளை பாருங்களேன்.
    துபாயில் பன்றிக்கறி விற்கப்படுகிறது, பல பிலிப்பினோக்கள் அங்கு அவற்றை வாங்கி உண்கிறார்கள்.
    துபாயில் பன்றிக்கறி உண்பவர்களை யாரும் இதுவரை கொல்லவில்லை. பன்றிக்கறியை உண்பதை தடை செய்யவும் இல்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க