Friday, August 7, 2020
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் சாலை வேண்டுமா ? தெருவில் இறங்கி போராடு - பாகலூர் போராட்டம்

சாலை வேண்டுமா ? தெருவில் இறங்கி போராடு – பாகலூர் போராட்டம்

-

பாகலூர் பேரிகை சாலை மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள குண்டும் குழியுமான சாலைகளை சீரமைப்போம்! மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்! என்ற முழக்கத்தினை முன்வைத்து மக்கள் அதிகாரம் சார்பாக தடையைமீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக… பல ஆண்டுகளாக குண்டுங்குழியுமாக, சேரும் சகதியுமாக கிடக்கும் தார்சாலைகளை செப்பனிட்டுத் தராத இந்த அரசமைப்பை அம்பலப்படுத்தி நாமே தார்சாலைகளை அமைத்து அதனைப் பராமரிக்க இந்த சாலைகளைப் பயன்படுத்தும் கனரக வாகனத்தாரிடம் வரி வசூல் செய்து நிர்வகிப்போம் என்ற பிரதான முழக்கத்தை மக்கள்முன் வைத்து பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள மக்களை அழைத்ததும் மக்கள் மத்தியில் இம்முழக்கம் அவர்களது சொந்த முழக்கமாக ஓங்கி ஒலித்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

hosur-rain-affected-demo-5இதனைக் கண்ட அதிகாரவர்க்கம் போலீசை அணுகி ஆர்ப்பாட்ட அனுமதியை ரத்து செய்தது. ஆர்ப்பாட்ட தேதிக்கு முன்னதாகவே, ஓடோடிவந்து அவசர அவசரமாக ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு மண் அடித்து சாலையை போட்டுவிட்டதாக கணக்குக் காட்டிவிட்டுச் சென்றது. மேலும், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்த போலீசு, “இப்பகுதியில் தார்சாலை அமைக்க 420 கோடி ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது. என்றும் விரைவில் போடப்படும். ஆதலால் ஆர்ப்பாட்டம் நடத்தத் தேவையில்லை” எனக்கூறி அனுமதி தர மறுத்தது. எனினும், மக்கள் அதிகாரம் அமைப்பினர் தாங்கள் மக்களுக்கு அறிவித்தப்படியே அனுமதி மறுப்பைப் பொறுட்படுத்தாமல் தடையை மீறி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர்.

மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த பாகலூர் சூடாபுரம் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ச. மங்கலம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு. கோபாலகிருஷ்ணன், ஒத்தரப்பள்ளி விவசாய சங்கத்தைச் சேர்ந்த திரு. ராமசாமி, சூடாபுரம் கேபிள் ஆப்ரேட்டர் திரு. முருகேசன், பாகலூர் சர்க்கில் ஜவுளிக்கடை உரிமையாளர் திரு. வெங்கடசாமி, சாப்கான் பெட்ரோல் பங்க் பஷீர், திரு. ராமசாமி, ஆயில்கடை, பேரிகை சாலை, பாகலூர்,  சூடாபுரம் மஞ்சு மற்றும் மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர் சந்தோஷ், தோழர் திம்மராயப்பா, தோழர் சுரேஷ், தோழர் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன குரலெழுப்பினர். இது இப்பகுதிவாழ் மக்களுக்கு புது நம்பிக்கையை விதைத்துள்ளது. தமிழிலும், தெலுங்கிலும் ஆயிரக்கணக்கில் துண்டறிக்கை அச்சிடப்பட்டு மக்களிடம் விநியோகித்துப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

துண்டறிக்கை சொல்லும் செய்தி:

அன்புடையீர், வணக்கம்!

பாகலூர் முதல் பேரிகை வரையிலான சாலை குண்டும் குழியுமாக உள்ள அவலநிலை பல ஆண்டுகளாக உள்ளது. தினந்தோறும் ஐநூறுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் இந்தப் பாதையில் செல்கின்றன. பல நூறு பேருந்துகள் செல்கின்றன. போலீசு ஸ்டேசன், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளி, தனியார் மருத்துவமனை, வழிபாட்டு நிலையங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் நிறைந்த இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்காண மக்கள் சென்றுவருகின்றனர்.

மழைக் காலங்களில்.. சேரும் சகதியுமாக குட்டைகள் போல காட்சியளிக்கும் இந்த சாலை மற்ற காலங்களில் தூசி பறக்கும் சாலையாக உள்ளது. அரிசி முதல் அனைத்து பொருட்களும் தூசி படிந்த பொருட்களாக மாறியுள்ளது. குடிக்கும் தண்ணீர் முதல் பள்ளி மாணவர்களின் உணவு வரை தூசி கலந்தவற்றைதான் உண்கின்றனர். இந்த அபாயமான நிலைமைகள் காரணமாக மூச்சுத் திணறல், ஆஸ்துமா, காலரா, டெங்கு, மலேரியா, சேற்றுப்புண் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் பிறப்பிடமாக உள்ளது. மனித உடல் ஆரோக்கியத்திற்கு சூரிய குளியல், மூலிகை குளியல் நல்லது என்று டி.வி விளம்பரங்கள் காட்டுகின்றன. ஆனால் , பாகலூர் சர்க்கிலில் மண் தூசி குளியலைத்தான் மக்கள் அன்றாடம் அனுபவித்து வருகின்றனர்.

பாகலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 25 கி.மி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனிம வளங்கள் வெட்டியெடுக்கப்படுகின்றன. இதனால், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள அரசு போட்ட தார்சாலைகள் மண்சாலைகளாக மாறியுள்ளன. இங்குள்ள விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாமல் விவசாயம் அழிந்து பெங்களுருக்கும் ஒசூருக்கும் செல்ல வேண்டிய அவலநிலைமை உருவாகியுள்ளது.

இவ்வழியிலிருந்து கர்நாடகாவிற்கு பல கோடி மதிப்புள்ள ஜல்லி, மணல், பூ, பழம், காய்கறிகள் நாள்தோறும் கொண்டுச்செல்லப்படுகின்றன. மேலும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒசூருக்கும் பெங்களூருக்கும் கூலி வேலைக்கு சென்றுவருகின்றனர். இதன்மூலம் அங்கே சாப்பிங்மால்கள், ஹைட்டெக் சிட்டி, உல்லாச விடுதிகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் கட்டப்படுகின்றன. ஆனால், நமது வாழ்க்கை மிக மோசமாக வாழ்வதற்கே தகுதியற்றதாக போய்கொண்டிருக்கிறது. இதன் ஒரு வெளிப்படையான ஒரு உதாரணம்தான் இந்த பாகலூர் பேரிகை சாலை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுடைய சாலைகளின் அவலநிலை.

இந்த சாலைகள் குண்டுங்குழியுமாக இருப்பதற்கு காரணங்கள் என்ன?

முக்கியமாக அரசு அமைக்கும் சாலைகள் பேப்பர் சாலைகளாக உள்ளன. மற்றொருபுறம், பல டன் எடையுள்ள மணல், ஜல்லி ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகள் சாலைகளை நாசம் செய்கின்றன. இதனால், சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. குறிப்பாக, இந்த சாலைகள் நீரோட்டங்கள் நிறைந்த சாலைகளாக உள்ளன. இப்பகுதியில் இளகிய மண் கொண்டதாக உள்ளது. இதற்கேற்ப நீரோட்ட ஏற்பாடுகள் கான்கிரீட் சாலைகள் ஆங்காங்கே அமைத்தால்தான் சாலை தரமானதாக இருக்கும். இதனைக் கணக்கில் கொள்ளாமல் அரசு அமைக்கும் சாலை என்பது இரண்டே நாளிலேயே பெயர்ந்து வந்து, மண்சாலையாக மட்டும் இல்லாமல், விபத்துக்களை அதிகப்படுத்தும் மோசமான ஜல்லிக் கொட்டிய சாலையாக மாறிவிடுகிறது.

இவ்வாறு திட்டங்களை வகுப்பதிலும் அமுல்படுத்துவதிலும் மக்கள் நலன்களைப் பற்றி சிறிதும் அரசு சிந்தித்துக் கூட பார்ப்பதில்லை. அதிகார வர்க்கத்திடம் நிலவும் ஊழலும், மக்கள் நலனில் காட்டும் அலட்சியமும், அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்வதும்தான் இதற்கு அடிப்படை காரணங்கள். தரமான சாலை அமைக்க அரசிடம் கோரியும் அரசு தரமான சாலையை அமைத்துத் தருவதில்லை. இந்த அவலநிலைமையும் மாறிவிடுவதில்லை. ஆகையால், ஒரேயொரு தீர்வுதான் நம்முன்னே உள்ளது. பாகலூர் பகுதி மக்களாகிய நாம் ஒன்றிணைந்து நமக்கான சாலை அமைப்போம். இந்த சாலையைப் பயன்படுத்தும் லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்களிடம் வரி வசூலிப்போம். சாலைகளை நாமே பராமரிப்போம் என்கின்ற வகையில் படிப்படியாக மக்கள் அதிகாரத்தை நாமே நிறுவுவோம்.

இந்த ஒரு பிரச்சனைக்கு மட்டுமல்ல.. பால் கொள்முதல், குடிநீர், சுகாதாரம், கல்வி, விளை பொருட்களின் விலையைத் தீர்மானித்தல், கொள்முதல் செய்தல் என எல்லா பிரச்சனைகளுக்கும் மக்கள் தங்களது அதிகாரத்தைக் கையிலெடுத்து செயல்படுத்துவது ஒன்றே தீர்வு. ஆளத் தகுதியிழந்த இந்த அரசு மக்களுக்கு சேவை செய்ய இலாயக்கற்று போய்விட்டது என்பது மட்டுமல்ல, இது மக்களுக்கு எதிர் நிலை சக்தியாக எதிரியாக மாறிவிட்டது. டாஸ்மாக், கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளை, பாலியல் வன்முறை என பல பிரச்சனைகளின் ஊற்று மூலமாக உள்ளது. நாட்டையும் மக்களையும் சீரழிக்கிறது. இதனால், இதன் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் இவற்றை நாமே தடுத்து நிறுத்த வேண்டும். அதற்காக மக்கள் அதிகாரத்தை நிறுவ ஒன்றிணைவோம்.

  • குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும்!
  • குண்டும் குழியுமான மண் சாலையை சீரமைப்போம்!
  • மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!
  • ஆளத் தகுதி இழந்துவிட்டது அரசு கட்டமைப்பு!
  • இதோ, ஆள வருகிறது மக்கள் அதிகாரம்.!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இவண்

மக்கள் அதிகாரம், தமிழ்நாடு(-ஓசூர் பகுதி)
தொடர்புக்கு; 8015269381

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க