Friday, August 19, 2022
முகப்பு செய்தி கோவன் பாடல் : தி.மு.க ஆதரவா ?

கோவன் பாடல் : தி.மு.க ஆதரவா ?

-

பத்திரிகையாளர் அருள் எழிலன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலர் தோழர் மருதையனோடு நடத்தும் நேர்காணல் – நான்காம் பாகம்

கேள்வி: நக்சலைட்டுகள் பத்தி நான் கேட்ட கேள்விக்கு நீங்க அரசியல் ரீதியா விளக்கம் சொன்னீங்க. ஆனா உங்களுடைய பாதையில ஜனநாயகத்தை நிராகரிச்சிட்டு ஒரு வன்முறையான வழியில மக்களை தூண்டுற போக்குதானே அரசியல் ரீதியா இருக்கு? வார்த்தைகளிலும் சரி, மக்களை திரட்டுவதிலும் சரி வன்முறையாத்தானே இருக்கு. அரசு அதைத்தானே டார்கெட் பண்ணுகிறது?

slider 1பதில்: அரசு அதைத்தான் சொல்கிறது. அல்லது, இந்த அ.தி.மு.க.. பி.ஜே.பி., எல்லாம் அதைத்தான் சொல்றாங்க. அதாவது அவங்களுக்கு ஜனநாயகப் பாதையில நம்பிக்கை இருக்கிறதாகவும், எங்களுக்கு ஜனநாயக பாதையில நம்பிக்கை இல்லை. வன்முறையிலதான் நம்பிக்கை இருக்குதுங்குற மாதிரியும் சித்தரிக்கிறாங்க. இப்போ இதுல ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்.

ஜனநாயகப் பாதையில நம்பிக்கை உள்ளவர்கள், கடந்த பத்தாண்டோ, இருபது ஆண்டோ, முப்பது ஆண்டோ எடுத்துக்குங்க… முப்பது ஆண்டுகளில அவங்க ஈடுபட்டிருக்கிற கொலை, கொள்ளை, குண்டுவைப்பு, சூறையாடல், தீவைப்பு போன்ற நடவடிக்கைகள் எவ்வளவு? அவங்க கட்சிக்காரங்க மேல – அவங்களே ஆட்சியிலயும் இருந்திருக்காங்க – எவ்வளவு கேசு இருக்கிறது? மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற அமைப்புகள் அல்லது இவங்க சொல்ற எல்லா நக்சலைட் அமைப்புகள் மேல இந்தமாதிரி குண்டு வச்சாங்க மக்களைப் படுகொலை செய்தார்கள், தீ வைத்தார்கள். இப்படி எவ்வளோ கேசு இருக்கு… அப்படின்னு ஒரு கணக்கு பண்ணுவோம். இதுல யார் குற்றம் அதிகமா இருக்குதுன்னு பார்த்து அவங்கள தடை பண்ணிடலாமா? அவங்கதான் பயங்கரவாத அமைப்புனு ஒரு முடிவுக்கு வரலாமா? அதுக்கு இப்படி பேசுறவங்கல்லாம் ரெடியா? அவங்க பதில் சொல்லணும்.

வன்முறையப் பற்றி பி.ஜே.பி.யும் அ.தி.மு.க.வும் பேசுறாங்க. பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு தீர்ப்பு வந்தது. மூணு விவசாயக் கல்லூரி மாணவிகள் அவங்களை தீ வச்சு கொளுத்தலையா? கொளுத்துனது குற்றம். கட்சித் தொண்டன் செஞ்சது தப்புன்னு இந்த அம்மா என்னைக்காவது சொல்லியிருக்காங்களா? சுப்ரீம் கோர்ட் வரைக்கும் அவங்க தண்டனைக்கு எதிராக கேசு நடத்திட்டிருக்காங்க. அவங்க குடும்பத்தை பராமரித்து அவங்களை படிக்க வைக்க செலவு பண்ணிட்டு இருக்காங்க.  இந்த வக்கிரப்புத்தி படைத்தவர்கள் வன்முறையப் பற்றி பேசுவதா? சந்திரலேகா மூஞ்சியல ஆசிட் வீசினது யாரு? எத்தனை வன்முறைகளை பட்டியலிடணும் இந்த ஆட்சிக் காலத்துல?

பி.ஜே.பி.க்கு என்ன யோக்கியதை இருக்குது.? தாத்ரி படுகொலையை எடுத்துக்குங்க, கல்புர்கி படுகொலை எடுத்துக்கிங்க. பன்சாரே கொலையை எடுத்துக்குங்க. இதெல்லாம் என்ன? அல்லது குஜராத் படுகொலையை எடுத்துக்குங்க. இவங்களுக்கு வன்முறையப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. வன்முறையின் உருவம் ரெண்டு பேரும். அதனால இவங்களுக்கு சொல்ல வேண்டிய செய்தி ஒண்ணுதான். இந்த வன்முறைக்கு எதிராக எதிர் வன்முறைக்கு மக்கள் தயாராக வேண்டும். இதை சகித்துக் கொண்டு போகக்கூடாது. என்பது மட்டும்தான் இதுல நாம சொல்ல வேண்டிய செய்தி.

கேள்வி: பொதுவா ஜனநாயகம் அப்படின்னா தேர்தல்ல பங்கெடுக்கக்கூடிய அமைப்புகள சொல்றாங்க. இந்த கொலை கொள்ளை இந்த மாதிரி விசயங்கள் இருந்தாகூட, தேர்தல்ல பங்கேற்கக்கூடிய ஒரு அமைப்பு  ஜனநாயக அமைப்பு அப்படிங்கிற ஒரு பார்வை ஒரு அரசியல் புரிதல் மக்கள் கிட்ட இருக்கு. உண்மையிலே நீங்க அரசியல் ரீதியா போராடணும்னா தேர்தல்ல பங்கேற்று உங்களுடைய உணர்வை வெளிப்படுத்தலாமே?

பதில்: அதாவது கொலை கொள்ளை செஞ்சாக்க அந்த பாவங்கள் எங்க கழுவப்படும்னா., தேர்தல்ல நின்னா கழுவப்படும். அதான் இப்ப இருக்கிற ஏற்பாடு. அதனாலதான் பார்லிமென்ட்டுல, சட்டசபையில, எங்க எடுத்தாலும் பாதி பேரு கிரிமினல். அதுல ஒன் தேர்டு கொலை கேசு இருக்குது. திருட்டு கேசு இருக்கு, இலஞ்ச ஊழல் கேசு இருக்கு. இதெல்லாம் பார்க்கிறோம். அப்ப எங்களோட இந்த கூட்டத்துல சேர்ந்திருன்னு கூப்பிடுறாங்க.

இது ஜனநாயகமில்லை., இந்தக் குற்றக் கூட்டத்துல நாங்க சேர முடியாது அதனால நாங்க வெளியே நிற்கிறோம். இப்ப அதுதான் இவங்களுக்கு பிரச்சினையா இருக்குது. இது ஜனநாயகமா என்பதைப் பற்றி புரிந்து கொள்வதற்கே, இவர்களுடை நடவடிக்கைகளை மக்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.  உண்மையான ஜனநாயகம் வேணும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டம்.

மக்கள் அதிகாரத்தினுடைய டாஸ்மாக்கை எதிர்த்தப் போராட்டத்தை ஒரு எடுத்துக்காட்டுக்கு எடுத்துக்குங்க. டாஸ்மாக்கை மூடணும்னா என்ன செய்யனும்? சசிபெருமாள் மாதிரி கால்ல விழுந்து குடிக்க போறவன் கிட்ட மன்றாடணும். இல்லைன்னா கலெக்டருக்கு மனுக் கொடுக்கணும். முடியலைன்னா கோர்ட்டுக்குப் போகணும். கோர்ட்ல ஒரு ஆர்டர் வாங்கினா கூட, அரசாங்கம் அதை அமல்படுத்தாது. அமல்படுத்தலைன்னா அத அமல்படுத்துன்னு சொல்லி அதுக்கு ஒரு உண்ணாவிரதம் இருக்கனும். அதை இந்த அரசாங்கம் மதிக்காது. மதிக்காதபோது டவர்மேல ஏறணும்,  இல்லைனா மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்கனும். இதெல்லாம் ஜனநாயகப் பூர்வமான வழியாம். சசிபெருமாளுக்கே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லைன்னுட்டாங்க. அந்த ஆளு எப்படி, டவர்ல ஏறினாரு? அவர் காந்திய வாதி கிடையாதுன்னாங்க.

மக்கள் அதிகாரம் முன்வைக்கும் வழி என்ன? இந்த அரசுதான் டாஸ்மாக்கை நடத்துது. இந்த அரசுதான் மணற்கொள்ளையை நடத்துது. இந்த அரசுதான் கிரானைட் கொள்ளையை நடத்துது. அதுவும் அதிகார வர்க்கத்தின் துணையோடு, பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தின் ஆதரவோடு இது நடக்குது. அப்போ, யார் இதை நடத்துறாங்களோ அவங்க்கிட்டயே போயி கேக்கிறதுல என்ன பொருள் இருக்கிறது?

ஜனநாயகம் என்பது மக்களின் அதிகாரம். எங்க ஊர்ல கடை கிடையாதுன்னா நான்தான் முடிவு பன்னனும். எங்க ஊர்ல ஆத்துமணல் எடுக்கக்கூடாதுனா நான்தான் முடிவு பன்னணும்.  விவசாயிகளை மீறி முடிவு செய்ய, கலெக்டர் யார்? ஆர்.டி. ஓ..யார்? அரசு யார்? அப்படிங்கிறதுதான் கேள்வி. இது ஜனநாயகப் பூர்வமான கேள்வியா இல்லையா? அல்லது அவங்க கடை திறந்திட்டே இருப்பாங்க, நாம கலெக்டர்கிட்ட மனு போட்டுகிட்டே இருக்கணும்கிறதுதான் ஜனநாயகமா என்பதை மக்கள் முடிவு பண்ணிக்கட்டும்.

கேள்வி: இன்னொரு ஆறேழு மாசத்துல தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது. இதில பிரதான கட்சிகளான தி.மு.க.., அ.தி.மு.க., ரெண்டுபேருமே போட்டியிடுறாங்க. நீங்க ஜெயலலிதாவை மட்டுமே தொடர்ந்து டார்கெட் பன்றீங்க, அவங்களை மட்டுமே விமர்சிக்கிறீங்க என்றக் குற்றச்சாட்டு உங்கள் மீது வைக்கப்படுகிறது.

பதில்: அதாவது ரெண்டுவிதமான மடமைகள் இருக்கிறது. ஒண்ணு, இந்த பாராளுமன்ற அரசியல்தான் அரசியலே, என்று கருதும் மடமை. இன்னொண்ணு, உலகத்தில்  தி.மு.க., அ.தி.மு.க.ன்னு ரெண்டுதான் இருக்கு. இதை தவிர வேற ஒண்ணுமில்லை என்று கருதுவது. அப்படிக் கிடையாது.

ஆளும்கட்சியைத் தான் நாம விமரிசிக்க முடியும்? இப்போ மன்மோகன்சிங்கை எதிர்த்து அரசியல் பேசிட்டு இருக்க முடியுமா, மோடி ஆட்சியில் இருக்கும்போது?  இப்ப ஜெயலலிதா ஆட்சி. ஜெயலலிதா ஆட்சி என்ன செய்கிறதோ, என்னக் குற்றங்களை இழைக்குதோ அதை எதிர்த்துதான் பேச முடியும்.

டாஸ்மாக் பிரச்சினையல் நாங்கள் பிரச்சாரம் பண்ணுவது தி.மு.க.வுக்கு ஆதரவாக முடிந்து விடும் என்று ஜெயலலிதா அரசு அஞ்சினால், அல்லது அவர்களது ஆதரவாளர்கள் அஞ்சினால், டாஸ்மாக்கை மூடுகிறோம்னு அவங்களே சொல்லிவிடலாமே.  மூட மறுத்து,  தி.மு.க.வின் வெற்றிக்கு இவங்க ஏன் துணை போறாங்க அப்படிங்கிறதுதான் எம்முடைய கேள்வி. எங்களை விடுங்கள். இவர்களே ஏன் அவர்களுக்கு வழி வகுத்துக் கொடுக்கிறார்கள்? மூடி விடட்டுமே, யார் வேண்டாம்னது?

 1. இன்று கோவனுடன் நேர்காணல் புதிய தலைமுறை தொலைக்காட்சி யில்
  ######

  கோவன் ,தனது தரப்பு வாதங்களை எடுத்து வைக்கிறார்.
  மது ஒழிப்பிற்காக ,கருணாநிதி இன்ன பிற
  ஓட்டுக்கட்சிகளை அணிசேர்ப்பதாக சொல்கிறார்.
  இது போலித்தனமான சப்பைக்கட்டு வாதம் என்பது எனது கருத்து.
  ____________________________
  மேலும், ஈழப்போரை தடுத்து நிறுத்தக்கோரி போராட்டங்கள் நடத்திய
  மதிமுக,விசிக,பாமக ,சிபிஐ இன்னும் பல
  தமிழ் அமைப்புகளோடு ஒன்றுபடாமல்
  வீணான வறட்டு விமர்சனங்களை வாரி
  இறைத்தனர்.
  அதில் வேறு ‘ ஈழப்போரில் நேர்மையான சந்தர்ப்ப வாதமும், நேர்மையில்லாத சந்தர்ப்ப வாதமும்’ என்ற தலைப்பில்
  நூல் வெளியிட்டு விமர்சன வியாக்கியானங்கள் செய்தனர்.
  அப்போதெல்லாம் ‘தென்படாத’ அனைத்துக் கட்சி அணிச்சேர்க்கை ,இவர்களுக்கு
  மது ஒழிப்பிற்காக மட்டும் தென்படுவது
  ஏன்?..!!..
  கோவன் கைதைக் கண்டித்த தாலேயே கருணாநிதி,
  ஸ்டாலின்,ராமதாஸ்,வைகோ ,திருமாவளவன் ஆகியோர் எல்லாம் ‘ ஜனநாயக நேர்மையான சக்தி’களாக மாறி விட்டார்களா என்ன?..!! மக இக தோழர்களுக்கே வெளிச்சம்..¡!
  ##
  மேற்கண்ட கேள்விகளை எல்லாம் கோவன்
  தனது நேர்காணலில் பதில் கூறாமல்
  “அவை நீண்ட விவாதங்களில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள்” என்று மழுப்பிவிட்டது கவனிக்கப்பட
  வேண்டிய ஒன்று..!!

  • மது ஒழிப்புப் போராட்டத்தில் எந்த ஓட்டுக் கட்சியும் உண்மையானவர்கள் அல்ல என்பது சிறு குழந்தையும் அறிந்த உண்மை. குறிப்பாக திமுகவுக்கு மது ஒழிப்பு என்ற ஒரு எண்ணம் கனவிலும் ஏற்படாது. தேர்தலில் ஓட்டுப் பொறுக்கவே அனைத்து தேர்தல் கட்சிகளும் இதனை செய்கின்றன.

   இது குறித்து கோவனோ மகஇகவினரோ அறியாமல் இருக்க மாட்டார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அது கோவனின் ’மூடு டாஸ்மாக்கை’ பாடலிலும் வெளிப்பட்டது.

   மது ஒழிப்புப் போராட்டத்தில் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் அமைப்பினருடன் தேமுதிகவினரும் மது ஒழிப்பு போராட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டனர். பல இடங்களில் விசிக வினர் நேரடி ஆதரவு கொடுத்திருக்கின்றனர். இவை எல்லாம் கைது நடப்பதற்கு முன்னாலேயே நடந்தவை.

   இத்ற்கு முன்னர் மக இக வினர் எந்தப் பிரச்சினையிலும் யாருடனும் கூட்டுச் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று கூறினால் அது மிகத்தவறு. பல்வேறு போராட்டங்களில் பல்வேறு கட்சியினருடன் இணைந்து போராடி இருக்கின்றனர். எனக்கு ஞாபகம் இருக்குமளவில் தில்லை போராட்டத்தில் அப்போது பாமகவில் இருந்த வேல்முருகன் (தற்போதைய அம்மா போற்றி வேல்முருகன்)மகஇக மேடையில் பேசியிருக்கிறார்.
   நிலைமை இப்படி இருக்க, முன்பு பகுதியளவில் மற்ற கட்சியினருடன் இணைந்து செயல்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் தற்போது கோவன் கைதிற்குப் பின் மீண்டும் டாஸ்மாக் போராட்டத்தை முழு வீச்சாகக் கொண்டு போக தமிழக அளவில் அனைத்துக் கட்சியுடன் இணைந்து செயல்படத் தீர்மானித்திருப்பது, எவ்விதத்தில் சந்தர்ப்பவாதம் ?.. அப்படியெனில் இதற்கு முன்னரே மற்ற போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டது சந்தர்ப்பவாதம் என்று ஏன் உங்களுக்கு தோன்றவில்லை ?

   இங்கு திமுகவிற்கு இயைந்த வகையிலோ, காங்கிரசுக்கு இயைந்த வகையிலோ மக இகவோ அல்லது மக்கள் அதிகாரமோ தமது கொள்கையை, முழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லையே ?. அவ்வாறு கொள்கையைக் கை விட்டு விட்டு ஐக்கியத்திற்கு ஒரு முன்னெடுப்பை மகஇகவினரோ அல்லது மக்கள் அதிகாரத்தினரோ எடுத்திருந்தால் அதனை சந்தர்ப்பவாதம் என்று கூறலாம்.

   சந்தர்ப்பவாதம் என்பது சாதகமான சூழலுக்கு தமது கொள்கைகளை, முழக்கங்களை உதறித் தள்ளி விட்டு வால் பிடித்து போவது தானே ?.. அவ்வாறு இங்கு ஏதேனும் நடந்ததா ?.

  • ஈழப் போர் நடைபெறும் போது தமிழ்தேசியம் பேசியவர்களை ஒதுக்கித் தள்ளியது குறித்து அவர்களது ”நேர்மையா ச.வாதமும் , நேர்மையற்ற ச.வாதமும்” வெளியீட்டை தலைப்பையும் முன்னுரையையும் மட்டும் படித்து விட்டு பேசினால் சரியானதாகாது என்று கருதுதிறேன்.

   ஈழப் போராட்டத்தின் போது, திமுக கருங்காலி வேலை பார்த்து நேரடியாக அம்பலமானது. அதிமுக பகிரங்கமாக வேடம் போட்டது. தமிழ் தேசியம் பேசுவோர், பாதி பேர் அம்மா காலடி போற்றி என்று சரணாகதி அடைந்துவிட்டனர். மீதி பேர், இந்திய அரசையும், அமெரிக்காவையும், ஐ.நா. சபையையும் (அதாவது போரை பின் நின்று நடத்துபவர்களை) கூவி அழைத்து போரை நிறுத்தக் கூறி மன்றாடினர். போர் நடத்தப்படுவது, இங்கிருக்கும் முதலாளிகளின் நலனிற்காக மட்டுமே என்பதை மறுத்தனர், மறைத்தனர். ஏதோ பிரபாகரனுக்கும் காங்கிரசு தலைவி சோனியாவுக்கும் இருந்த பழைய கணக்குத் தீர்ப்பு தான் இந்தப் போர் என்பது போல பேசிப் பரப்பினர்.

   இந்த மூன்று அணியினரில் யாருடன் கூட்டுச் சேர்ந்தாலும் தவறான முழக்கங்களை முன் வைத்து போராடுவது தான் வழி. கருணா , ஜெயாவுடன் இணைந்து ஈழத்திற்கு குரல் கொடுப்பது எவ்வளவு மோசமோ அதில் சிறிது கூட குறைவில்லாத அளவிற்கு மோசமானது தான் இங்கிருந்த தமிழ் தேசிய கும்பல்களுடன் இணைவது.

   இவர்களில் யாருடனாவது சேர்ந்து கோசமிட்டிருந்தால் தான் அது சந்தர்ப்பவாதம்.

   இங்கு ஈழப் பிரச்சினையுடன் டாஸ்மாக் பிரச்சினையை இணைப்பதில் சந்தர்ப்பவாதம் குறித்த புரிதல் இல்லாதது மட்டும் பிரச்சினையாகப் புலப்படவில்லை. கூடுதலாக, சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தவர்கள் (தமிழ் தேசியவாதிகள் உட்பட) அவசர அவசரமாக புதையல் எடுக்க ஓடி வருவது போல் தான் புலப்படுகிறது.

   எனினும் மீண்டும் அவதூறுகளைப் பரப்ப வாழ்த்துக்கள் !!

   • சரி, அதெல்லாம் சந்தர்ப்ப வாதம் என்றே வைத்துக்கொள்வோம் . இன்று கோவன் திமுக முகாமுக்கு சென்று முகவுக்கு முன்பு கூழைகும்பிடு போட்டது எந்த வகையில் சேர்கிறதென்பதை நண்பர் அனான்யன் சொன்னால் கேட்டுகொள்கிறோம் .

    ஈழபிரச்சனையில் அவர்கள் அப்படி செய்தார்கள் இவர்கள் இவர்களோடு கூட்டு சேர்ந்தார்களென வக்கணை பேசுபவருக்கு கோவனின் முக சரணாகதி பற்றி மூச்சும் விடவில்லை
    ஒழிப்பையும் அதன் தீமைகளையும் விளக்கி பிரசாரம் செய்பவராக இருந்தால் , இந்த விடயத்தில் அரசியல் சாக்கடையில் வீழந்ததேன் ?

    ஊத்தி கொடுத்த உத்தமியையும் அவரது ஆட்சியையும் இவ்வளவு காட்டமாக தேர்தல் நெருங்கும் நேரத்தில் விமர்சித்தது எதற்கு? இன்னொரு சாராய புறொக்கரை அரியணையில் உட் கார்த்தி அழகு பார்க்கவா ?

    நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தனது ஆட்சிக்காலத்தில் சாராயக்கடையை முதன் முதலாஅ திறந்து விட்டு புரட்சி பண்ணியவரை போய்பார்த்தது இவரும் கேவல அரசியல் சாக்கடையில் வீழ்ந்து விட்டார் என்பதையே காட்டுகிறது . இதற்கு அனான்யன் அவர்கள் எந்த சப்பை கட்டு கட்டியும் புண்ணியமில்லை என்பதை புரிந்து கொள்ள்வேண்டும்..

 2. ஒரு பிரச்சனை அது தொடர்பாக தோழர் கோவன் அவர்கள் கருணாவை சந்திப்பது , இளங்கோவனை சந்திப்பது எல்லாம் நேர்மையான சந்தர்ப்ப வாதமும், நேர்மையில்லாத சந்தர்ப்ப வாதமும் என்ற சொற் தொடரை தான் நினைவு படுத்துகின்றன.

 3. Lavanya raman,இனியன் ஆகியோர்களின் கருத்து சரியானதல்ல.தோழர் கோவன் சரியானபடியே பேட்டி அளித்திருக்கிறார்.
  திரு ஷண்முக சுந்தரம் அவர்களும் நல்ல முறையில் பேட்டியை கொண்டு சென்றிருக்கிறார்.நன்றி.பாராட்டுக்கள்.

 4. பத்திரிக்கை செய்திகள் தோழர் கோவன் அவர்கள் கருணாவை சந்திப்பது , இளங்கோவனை சந்திப்பது பற்றி எழுதுகின்றதே தவிர ,வினவு தளம் இந்த சந்திப்புகளை பற்றி மூச்சி விடமாட்டேன் என்று இருக்கின்றது. வினவும் அதன் தோழ்ன்மை இயக்கங்களும் ஓட்டு கட்சிகளை புறகணித்து மக்களுக்கு புதிய ஜனநாயக பாதையை காட்டும் அமைப்புகள் என்பதால் இந்த சந்திப்புகள் இணைய தளங்களில் குறிப்பாக கிற்று போன்ற இணைய தளங்களில் விவாதமாக பரிமாரிகின்றன. ம ஜ இ க போன்ற ம க இ க வுக்கு மதுவிலக்கு பிரச்சனையில் மார்சிய-லெனிய கொள்கை ரீதியாக முரண்படும் இயக்கங்கள் ஜெயாவையும்-கருணாவையும் குற்றவாளிகளாக நிறுத்துகின்றன. ம ஜ இ க-வின் நிலை சரியானதாகவே இருப்பதாக எனக்கு தோன்றுகின்றது. மேலும் காங்கிரஸ் கட்சியின் இளங்கோவனை தோழர் கோவன் சந்தித்தது ம க இ கவின் அரசியல் சித்தாந்த சீர் குலைவாக தான் படுகின்றது. ஈழ படுகொலையில் , மாவோயிஸ்டுக்லின் ஆளுமையில் உள்ள இந்திய பழங்குடி மக்களின் மீதான காங்கிரஸ் கட்சி ஆட்சியின் தாக்குதல்களை நாம் பார்த்து கொண்டு தானே இருந்தோம். அப்படி இருக்கையிலும் நன்றி தெரிவிக்கவும் , சென்னையில் நடக்க இருக்கும் மீட்டிங் அழைப்புக்கும் காங்கிரஸ் கட்சியின் இளங்கோவனை தோழர் கோவன் அவர்கள் சந்தித்தது மிகுந்த முரண்பட்ட நிலையை உருவாக்கி உள்ளது.

  மற்றும் ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருந்து சிந்திக்கும் போது ஜெயாவை தவிர்த்து மற்ற ஓட்டு கட்சிகள் அனைத்துமே மதுவிலக்குக்கு ஆதரவாக பேசும் நிலையில் இந்த குறிப்பிட்ட பிரச்சனைக்காக மட்டுமே அவர்களுடன் கூட்டணி அமைத்து இன்றைய ஜெயாவின் தமிழ் நாடு அரசுக்கு அழுத்தம் கொடுத்து டாஸ்மாக் கடைகளை மூட வைப்பதில் தவறு இல்லை என்றும் தோன்றுகின்றது.

  இது தொடர்பான விவாதங்களை திறந்த மனதுடன் தொடரவே ஆசைப்படுகின்றேன்

  • நண்பர் இனியன் ,

   //// ம க இ கவின் அரசியல் சித்தாந்த சீர் குலைவாக தான் படுகின்றது ///

   ஏற்கனவே தில்லை கோவில் பிரச்சினையின் போது பாமகவைச் சேர்ந்தவர்களையும் இணைந்து செயல்பட்ட போது இது மகஇக வின் சித்தாந்த சீர்குலைவாகப் பார்க்கப்படவில்லை என்பதையும், தற்போது அவ்வாறு பார்க்கப் படுகிறது என்பதற்கும் ஒரே ஒரு காரணம் தான் இருப்பதாக நான் கருதுகிறேன். முன்னது நடக்கும் போது, அது ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்டு, திமுக ஆதரவாகவோ, பாமக உள்ளிட்ட மற்ற கட்சிகளின் ஆதரவானதாகவோ காட்டப்படவில்லை. இன்று திமுக ஆதரவு ஊடகங்கள் இதனை தமக்கு சாதகமாகவும், அதிமுக, பாஜக ஆதரவு ஊடகங்கள் இது ஜெ வுக்கு எதிரான திமுக வின் சதி என்பதாகவும் காட்டும் வகையில் தான் இச்செய்தியைக் கொண்டு செல்கின்றன.

   இந்த லாவணிகளை வைத்துக் கொண்டு பழி தீர்க்க ஒரு பக்கம் தமிழ் தேசியவாதிகளும், மறு பக்கம் தமது சித்தாந்த பராக்கிரமத்தைக் காட்ட மஜ இக போன்றவர்களும் இணையத்திலும் போஸ்டர்களிலும் புரட்சி செய்ய ஆரம்பித்து விட்டனர்.

   மஜ இகவின் போஸ்டரில் கருணாவைப் பற்றி ஏன் பேசவில்லை? என்று ’விமர்சனமாக’ !?!!?! கைதுக்கு கண்டனம் தெரிவிப்பது போல், ஈழத்தாயின் உள்ளக் கிடங்கை வெளிப்படுத்தியிருந்தனர். கோவனின் பாடல் ”ஓட்டுக் கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டு அவர்கள் வந்தால் மூடுவார்கள் என்று நம்பி பிரயோசனம் இல்லை” என்பதைத் தெளிவாகக் கூறும் பட்சத்தில் பாடலில் கருணாவின் பெயர் இடம் பெறாதது குற்றம் என்று கூறுவது எவ்விதத்தில் சரியானதாக இருக்கும் என்று தெரியவில்லை. மஜஇக வைப் பொறுத்தவரையில் கருணா ஓட்டுக் கட்சி இல்லையா ?.

   • நண்பர் அனனியன், ம க இ க போன்ற கம்யுனிஸ்டு அமைப்புக்கு, கட்சிக்கு நிகழ் கால மதுவிலக்கு பிரச்சனையில் அரசியல் சித்தாந்த சீர்குலைவு ஏற்படவில்லை என்றால் அதில் மகிழ்வே. மதுவிலக்கு பிரச்சனையில் வீழ்த்தப்படவேண்டியது ஜெயா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜெயாவை தவிர்த்து மற்ற ஓட்டு கட்சிகள் அனைத்துமே மதுவிலக்குக்கு ஆதரவாக பேசும் நிலையில் இந்த குறிப்பிட்ட மதுவிலக்கு பிரச்சனைக்காக மட்டுமே அவர்களுடன் கூட்டணி அமைத்து இன்றைய ஜெயாவின் தமிழ் நாடு அரசுக்கு அழுத்தம் கொடுத்து டாஸ்மாக் கடைகளை மூட வைப்பதில் தவறு இல்லை

 5. கோவன் கைது, விடுதலை ஆகியன, ம.க.இ.க; மக்கள் அதிகாரம், வினவு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு ஆகியொருக்கான விளம்பரமாகவும், மக்களை அடையக்கூடிய வழிகளாகவும் இருக்கவேண்டியன. ஆனால் இப்போது அவை ஓட்டு கட்சிகளின் தேர்தல்நேர விளம்பரமாகிக் கொண்டிருக்கிறது. கோவனின் ஓட்டுகட்சிகள் சந்திப்பு, அனிசேர்ப்பு, என்பதில் என்ன விதமான அரசியல் என்று விளங்கவில்லை. நாளைய ஆட்சியாளர்களும் எதிராக திரும்பமாட்டார்கள் என்பது என்ன உத்திரவாதம், அப்போது ஜெ’வையும் சந்தித்து அனிசேர்ப்பதா? வருந்ததக்க நிகழ்வுகள்…!
  கைதுக்கு கண்டனமும், விடுதலைக்கு ஆத்ரவும் தெரிவித்தவர்களுக்கு, நன்றி அறிவிப்புகள் போதுமே.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க