Friday, August 19, 2022
முகப்பு செய்தி அம்மாவை பேசாதே, பாடாதே, எதிர்க்காதே - போலீஸ் குத்தாட்டம்

அம்மாவை பேசாதே, பாடாதே, எதிர்க்காதே – போலீஸ் குத்தாட்டம்

-

1.  போராளி கோவன் மீதான தாக்குதலை முறியடிப்போம்! – மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

மிழகத்தை ஆளும் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசின் டாஸ்மாக் சாராயக் கடைகளால் தமிழ்ச் சமூகம் எந்த அளவுக்குச் சீரழிக்கப்படுகிறது; தமிழகத் தாய்மார்கள் எவ்வளவு தூரம் கண்ணீர் சிந்திக் கதறுகிறார்கள் என்பதை மீண்டும் இங்க சொல்ல வேண்டியதில்லை.

டாஸ்மாக் சாராயக் கடைகளை மூடி மதுவிலக்கை அமலாக்கக் கோரி ஆளும் அ.இ.அ.தி.மு.க.வும் அதன் ஆதரவு உதிரிக் கட்சிகளும் தவிர, தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு சமூக இயக்கங்களும் போராடிவருகிறார்கள். மதுவிலக்குப் போராளி சசிப்பெருமாள் மரணத்துக்குப் பிறகு, பச்சையப்பன் கல்லூரி மாணவர்-மாணவிகளின் வீரமிகு போராட்டங்களைத் தொடர்ந்தும் அ.இ.அ.தி.மு.க. அரசின் சாராயக் கொள்கைக்கும், அதன் போலீசு அடக்குமுறைக்கும் எதிராகத் தனித்தனியே ஓங்கிக் குரல்களை எழுப்பின. அந்நிலை கண்டு அச்சங்கொண்ட அ.இ.அ.தி.மு.க. அரசு வேறொரு பிரச்சினையை முன்தள்ளி மக்களின், ஊடகங்களின் கவனத்தைத் திசை திருப்பி விட்டது.

ஆனால், அ.இ.அ.தி.மு.க. அரசின் சாராயக் கொள்கையும் சாராயக்கொள்ளையும் ஏற்படுத்தும் கேடுகள் மறைந்து போகவில்லை. அவற்றுக்கெதிராகக் குமுறிக்கொண்டிருந்த தமிழக மக்களின் உணர்வுகளை “மூடு டாஸ்மாக்கை மூடு” எனப் பாடிய பாடகர் கோவன் நள்ளிரவுக் கைது, சிறைவைப்பு, மீண்டும் ஒருமுறை பொங்கியெழச் செய்துவிட்டது. ஆளும் அ.இ.அ.தி.மு.க., அதன் நட்புக் கட்சியாகிய பா.ஜ.க., மற்றும் அவற்றின் ஆதரவு உதிரிக் கட்சிகள் தவிர தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் பலவறு சமூக இயக்கங்களும் பாடகர்  கோவன் கைதைக் கடுமையாகக் கண்டித்தன. பாடகர் கோவனை விடுதலை செய்யக்காரிப் பல போராட்டங்களும் வெடித்தன.

இரத்து செய்யப்பட்ட சட்டத்தின் கீழ் பாடகர் காவன் கைது செய்யப்பட்டதாகவும் அவருக்குத் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும், அவரது பாடலில் கைது செய்வதற்கான முகாந்திரம் எதுவும் இல்லையென்றும் கூறி போலீசுக் காவலை உயர்நீதிமன்றம் இரத்து செய்தது. அதன் பிறகு பாடகர் கோவன் பிணையில் விடப்பட்டுள்ளார். இருந்தாலும் அடக்குமுறையிலிருந்து பின்வாங்காத வெறிபிடித்த ஜெயலலிதா அரசு பாடகர் கோவனை மீண்டும் போலீசு காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளது; எதிர்வரும் தேர்தலைக் குறிவைத்து அவரை நீண்டநாள் சிறையிலடைக்கச் சதி செய்கிறது.

ஆளும் அ.இ.அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தவிர அனைத்துக் கட்சிகளும் இதைக் கண்டிப்பதோடு, டாஸ்மாக் சாராயக் கடைகளை மூடி, மதுவிலக்கை அமலாக்கக் கோருகின்றன. ஆனால், இந்தக் குரல்கள் ஒலிப்பதும், மதுவிலக்கு எதிர்ப்புப் போராட்டங்களும் தனித்தனியே நடப்பதால் பலவீனமாகத் தெரிகின்றன. காலப்போக்கில் இவை ஓய்ந்துபோகும் என்று ஆட்சியாளர்கள் நம்புகின்றனர்.

டாஸ்மாக் சாராயக் கடைகளை மூடி மதுவிலக்கை அமலாக்கக் கோரி மக்களும் கட்சிகளும் சமூக அமைப்புகளும் எவ்வளவுதான் மன்றாடினாலும், போராடினாலும், ஆளும் அ.இ.அ.தி.மு.க. அரசு பிடிவாதமாகவும் திமிராகவும் மறுக்கிறது. காரணம் அதன் அரசும் கட்சியும் நிர்வாகமும் சாராயக் கொள்ளையைச் சார்ந்தே இருக்கின்றன. இதுவொன்றும் ஒளிவு மறைவாக இல்லை. அனைவரும் அறியவே நடக்கின்றன. மத்தியில் ஆளும் பா.ஜ.க. மற்றும் சாதி, மதவெறிச் சக்திகளின் துணையோடும்தான் நடக்கின்றன. இந்த நாசகார சக்திகளை எதிர்க்கும் கட்சிகளும் இயக்கங்களும் தனித்தனிய போராடி வெல்ல முடியாது.

தமிழக மக்களைப் பொருத்தவரை டாஸ்மாக் சாராயக் கடைகளை மூடி மதுவிலக்கை அமலாக்கக் கோரும் பிரச்சினை இம்மக்களின் இருப்புக்கும் வாழ்வுக்கும் உயிராதாரமானது. இதில் தோல்வியுற்றால் தமிழ்ச் சமுதாயம அழிந்துபோகும். பெரும்நாசம் விளைவிக்கும். சாராயத்தையும் சாராயக் கொள்ளையையும் ஒழிப்பது, ஆளும் அ.இ.அ.தி.மு.க. மற்றும் அதன் கள்ளக் கூட்டாளிகளான பா.ஜ.க. மற்றும் சாதி, மதவெறிச் சக்திகளை முறியடிப்பது என்ற புள்ளியில் அவற்றுக்கு எதிரான சக்திகள் ஒனறிணைந்து போராடுவாம்!

தமிழ்ச் சமூகத்தைச் சீரழிக்கும் டாஸ்மாக் கடைகளை மூடு!
தாய்மார்களின் கதறலுக்கு செவி சாய்த்துக் களமிறங்குவாம்!
ஜெயலலிதாவின் சாராய சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்துவாம்!
டாஸ்மாக் எதிர்ப்புப் போராளி கோவன் மீதான தாக்குதலை முறியடிப்போம்!

இவண்
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு

2. கம்பம் ஆர்ப்பாட்டம்! தீயில் விழுந்த புழுவாய் போலிசு!

தோழர்  கோவனை தேசத்துரோக வழக்கிலிருந்து (124/ A) விடுதலை செய்யவும், அந்த சட்டப்பிரிவையே நிரந்தமாக நீக்கக் கோரியும் கம்பத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்து, கடந்த நவம்பர் 5 ம் தேதி தெற்கு காவல்நிலையத்தில் அனுமதிகேட்டு விண்ணப்பித்தோம். அங்கிருந்த போலிசு ஒருவர், “விண்ணப்பத்தை வாங்க எனக்கு அதிகாரமில்லை. மக்கள் அதிகாரம் அமைப்பின் விண்ணப்பத்தை வாங்கக்கூடாது என நிலையக் குறிப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் காவல் ஆய்வாளரை பாருங்கள்” என கூறிவிட்டார். ஆய்வாளரோ ,தீபாவளி-திருவிழா என்று தொடர்ந்து ரவுண்ட்சில் இருந்ததால் நாம் நேரில் சந்திக்கவே முடியவில்லை.

மூடு டாஸ்மாக்கை - கம்பம் ஆர்ப்பாட்டம்ஆகவே, மீண்டும் நவம்பர் 13ம் தேதி அதே கோரிக்கைக்காக வி.வி.மு. சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு விண்ணப்பித்தோம். இதையும் வாங்காமல் ஒருநாள் முழுவதும் நம்மை அலையவிட்டு ,மறுநாள் வாங்கிய ஆய்வாளர் மணிமாறன், “விண்ணப்பத்தை மட்டும்தான் வாங்குகிறோம். அனுமதி தரவில்லை. மேலிடத்தில் கேட்டுதான் முடிவு சொல்லுவோம்” என்று கூறிவிட்டார்.

ஆர்ப்பாட்ட நாளான 19-ம் தேதி மாலை வரை போலிசு தரப்பிலிருந்து பதில் எதுவும் வராததால், திட்டமிட்ட ஆர்ப்பாட்டத்தை நடத்த தயாரிப்பு வேலைகளை தொடங்கினோம். இந்நிலையில் இரவு 8 மணிக்கு தோழர்களை ஸ்டேசனுக்கு கூப்பிட்டு உட்காரவைத்துவிட்டு, உத்தமபாளையம் டி.எஸ்.பி கண்ணன்,மற்றும் ஆய்வாளர் A.மணிமாறன் ஆகியோர் தனி அறையில் அமர்ந்து 3 மணிநேரம் ஆலோசித்துவிட்டு, இரவு 11 மணிக்கு, 17 நிபந்தனைகளுடன் அனுமதி தருவதாக கூறியதுடன், நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாக கையெழுத்தும் வாங்கிக்கொண்டு அனுப்பினர். நிபந்தனைகளின் நகலை இறுதிவரை நமக்குத் தரவே இல்லை!

மூடு டாஸ்மாக்கை - கம்பம் ஆர்ப்பாட்டம் அதனடிப்படையில், மறுநாள் மாலை 5 மணிக்கு, சுமார் 100 பேர் ஆர்ப்பாட்ட இடத்திற்கு சென்றோம். அங்கு எங்களுக்கு முன்னால், வகைவகையான போலிசுகளும், உளவுப்பிரிவு படையினரும் திரளாக காத்திருந்தனர். நிகழ்ச்சி துவங்கியதுமே தோழர்களிடம் இருந்த சிறிய ஸ்பீக்கர் பாக்சை பார்த்த போலிசு, “மெகாபோன் என்றால் 6 வோல்ட்தான் இருக்கணும். இது பெரிதாக இருக்கிறது.எனவே பயன்படுத்தக் கூடாது”! என்று ஆய்வாளர்.மணிமாறன் எச்சரித்தார். சிலநிமிட வாக்குவாதத்திற்குப் பின், அதையும் சகித்துக்கொண்டு நிகழ்ச்சியை தொடந்தோம்.

மூடு டாஸ்மாக்கை - கம்பம் ஆர்ப்பாட்டம்அடுத்தபடியாக போலிசின் அடக்குமுறையை அம்பலப்படுத்தும் வகையில் காட்சி விளக்கமாக, கண், காது, வாய், மற்றும் கைகளை கறுப்புத்துணியால் கட்டிக்கொண்டு 4 தோழர்கள் வரிசையாக நின்றனர். அதில் கைகட்டிய தோழர் ஒருவர் தனது தோளில் பறையை தொங்கவிட்டிருந்தார். அதைக் கண்ட ஆய்வாளர் மீண்டும் ஓடிவந்து,”பறையை வைக்ககூடாது உடனே எடுத்து விடுங்கள்” என்று வாதாடினார். “இதில் உங்களுக்கு என்ன சார் பிரச்சனை?” என்று கேட்டதற்கு, “பறை இருந்தாலே அதை அடித்ததாகத்தான் எஸ்.பி. சொல்லுவாரு…” என்று முதலில் சவுண்டு விட்ட ஆய்வாளர் சிறிது நேரத்தில் கீழிறங்கிவந்து, “மோகன்ணே என்னைய வேணும்னா நாலு திட்டு திட்டிக்கங்க….இந்தப் பறையை மட்டும் தயவு செஞ்சு எடுத்துருங்கணே” என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டார்! வேறுவழியில்லாமல் இதையும் சகித்துக் கொண்டோம்.

மூடு டாஸ்மாக்கை - கம்பம் ஆர்ப்பாட்டம்இவ்வாறு ,காவல் துறையின் அராஜாகம் அடுத்தடுத்து பாயும் சூழ்நிலையில் ஆர்ப்பாட்டத்தை எப்படி தொடர்வது? என்று அங்கேயே தோழர்கள் கூடிவிவாதித்து, ”காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டித்து அம்பலப்படுத்தும் போராட்டமாக அனைவரும் வாயில் கருப்புத்துணியை கட்டிக்கொண்டு அனுமதிக்கப்பட்ட இரவு 7 மணிவரை அங்கேயே நிற்பது” என முடிவெடுத்து அவ்வாறே செய்தோம்!

இதை சற்றும் எதிர்பாராத போலிசுப்படை ஒடோடி வந்து, “இது உங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிடவில்லை.உடனே கருப்புத்துணியை அவிழுங்கள்” என்று கடுமை காட்டியது. ”எங்கள் வாயில் நாங்கள் துணி கட்டினால் உங்களுக்கு என்ன பிரச்சனை? அய்யப்ப பக்தர்கள் கருப்புத்துணியில்தான் ஆடை உடுத்துகிறார்கள்.அவர்களையும் கைது செவீங்களா? எங்கள்தரப்பில் நிறைய விட்டுக்கொடுத்து விட்டோம். இனிமேல் முடியாது. நீங்க என்ன செய்வீங்களோ செய்து கொள்ளுங்கள்!” என்று தோழர்கள் கடுமை காட்டத் தொடங்கியதும், செய்வதறியாது நெருப்பில் விழுந்த புழுவாய் துடித்து போனது கம்பம் போலிசு!

மூடு டாஸ்மாக்கை - கம்பம் ஆர்ப்பாட்டம்அடுத்த அஸ்திரமாக, ”அம்மா பத்தின கார்டூன் படத்தை இதுவரை வச்சுட்டீங்க. இனிமேல் வைக்கக்கூடாது. அம்மா படத்தை மட்டுமாவது எடுத்துவிடுங்கள்” என்று வந்து நின்றது போலிசு. இதற்கும் நாம் முடியாது என மறுத்து விடவே, இறுதியாக,…”கருப்புத் துணிகட்டி நிற்பவர்களின் பெயர்-முகவரியை சொல்லுங்கள்.மேலிடத்துக்கு சொல்ல வேண்டும்” என்று மிரட்டியது போலிசுபடை! ”அப்படியெல்லாம் சொல்லமுடியாது. வழக்குப்போடப் போறீங்களா…போடுங்க” என்று தோழர்கள் கூறிவிட்டதால், அங்கும் இங்கும் ஓடி பரபரப்பு காட்டிக் கொண்டிருந்தது போலிசு!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மூடு டாஸ்மாக்கை - கம்பம் ஆர்ப்பாட்டம்நிகழ்ச்சியின் இறுதியாக, காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டித்தும், கோவன் பாடலையே முழக்கமாக்கியும் தோழர்கள் முழக்கமிட்டபின், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட செயலாளர் தோழர். லயோனல் அவர்கள் கண்டன உரையாற்ற வந்தார். உடனே போலிசுப் பட்டாளம் மொத்தக் கூட்டத்தையும் சுற்றி வளைத்துக் நின்று கொண்டு தோழரின் பேச்சை பொதுமக்கள் கேட்கவிடாமல் செய்தனர். இதைக் கண்டித்த தோழர் லயோனல் அவர்கள், ”கம்பம் போலிசின் இந்த சட்டவிரோதப் போக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம்.அங்கு இவர்கள் கண்டிப்பாக பதில் சொல்லியே தீரவேண்டும்” என எச்சரித்தார்!

முதலில் ஆர்ப்பாட்டமாகத் தொடங்கி இறுதியில் போராட்டமாக மாறிய மொத்த நிகழ்வும், நமது எதிர்பார்ப்புக்கும் மேலாக மக்களிடம் வீச்சான பிரச்சாரமானது.! மக்களிடம் அம்பலப்பட்டுப் போன அம்மா போலிசு தனக்குத்தானே முகத்தில் கரியை பூசிக் கொண்டது!

மூடு டாஸ்மாக்கை - கம்பம் ஆர்ப்பாட்டம்நிகழ்ச்சியை முழுவதுமாக கவனித்த சில மூத்த காவலர்கள், “ ஒரு சாதாரணமான ஆர்ப்பாட்டத்தை முறையாகக் கையாளத் தெரியாமல் இப்படி கேவலப்படுகிற அதிகாரிகளிடம் வேலை பார்ப்பதைவிட, பேசாமல் காக்கிச் சட்டயை கழட்டி வீசிவிட்டு உங்களோடு சேர்ந்து போராடுறதே மேல்” என்று நம்மிடம் புலம்பிச் சென்றனர்!

மொத்தத்தில், சுயசிந்தனையே இல்லாமல் ஒவ்வொரு அசைவுக்கும் மேலதிகாரிகளிடமும், ஆளும்கட்சி காரர்களிடமும் பதில் கேட்டு,அவர்கள் காலால் இட்ட உத்தரவை தலையால் செய்து முடிக்கும் அடிமைகளாய் காவல் அதிகாரிகள் செயல்படுவது அவர்களுக்குள்ளேயே எரிச்சலையும், சலிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. செயலற்ற தமிழக காவல்துறையின் தோல்விக்கு இந்த ஆர்ப்பாட்டம் சிறந்த உதாரணமாக அமைந்தது.

தற்போது 40 தோழர்கள் மீது அத்துமீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளது கம்பம் போலிசு!

தோழர் கோவனின் வழக்கை கண்டித்து கம்பத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த விடக்கூடாது என்ற நோக்கில் அனுமதி என்ற பெயரில் போடப்பட்ட நிபந்தனைகள்

———————————————————————————–
காவல் ஆய்வாளர், கம்பம் தெற்கு காவல் நிலையம் அவர்களின் செயல்முறை நடவடிக்கை குறிப்புகள்

முன்னிலை:
திரு.மணிமாறன்
காவல் ஆய்வாளர்
கம்பம் தெற்கு காவல் நிலையம்

பார்வை: 80/Mike/K2PS/2015 Dated :16.11.2015

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டார விவசாயிகள் விடுதலை முன்னணியின் செயலாளர் திரு. கே. முருகன் ஆகிய நீங்கள் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மையக்கலைக்குழுவின் தோழர் கோவன் கைது செய்வதைக் கண்டித்தும், அவர்  மீதுள்ள வழக்குகளை திரும்பப் பெறக்கோரி கம்பம் டாக்ஸி ஸ்டாண்டு அருகில் வருகின்ற 19.11.2015ம் தேதி 17.00மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு மனு கொடுத்துள்ளீர்கள் . உங்களுடைய மனு பரிசீலிக்கப்பட்டது. கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு 19.11.2015-ம் தேதி 17.00 மணி முதல் 19.00மணிவரை கம்பம் டாக்ஸி ஸ்டாண்டு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

கடைபிடிக்கவேண்டிய நிபந்தனைகள்

1. பிரிவு 30(2) காவல் சட்டம் அமலில் உள்ளதால் அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சி தவிர மற்ற திடீர் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை

2. ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்கள் பற்றிய பட்டியல் மற்றும் நிகழ்ச்சி நிரலை முன்கூட்டியே காவல்துறையினரிடம் அளிக்க வேண்டும்.

3. அனுமதிபெற்ற நோக்கத்திற்காக மட்டுமே ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். வேறு எந்த நோக்கத்திற்காகவும் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது.

4. ஆர்ப்பாட்டத்தின்போது பொதுமக்களுக்கும் பொது அமைதிக்கும் பங்கம் ஏற்படும் வகையிலும் எரிச்சலூட்டும் வகையிலும் மற்றும் பிறரை புண்படுத்தும் வகையிலும், தடைசெய்யப்பட்ட பாடல்கள், தடை செய்யப்பட்டட கோஷங்கள் ஆகியவற்றை எழுப்பக்கூடாது.

5. ஆர்ப்பாட்டத்தில் எழுப்பக்கூடிய கோஷங்களை முன்கூட்டியே காவல்துறையினருக்கு தரவேண்டும்.

6. ஆர்ப்பாட்டத்திற்கு ஒலிபெருக்கி அனுமதி இல்லை.

7. ஆர்ப்பாட்டத்தின் போது கோபமூட்டக்கூடிய வகையிலான பேச்சுக்களோ கோஷங்களோ எழுப்பக்கூடாது.

8. ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டத்திற்கு முன்போ, அல்லது ஆர்ப்பாட்டத்தின் போதோ அல்லது ஆர்ப்பாட்டம் முடிந்தபின்போ இசைக்கருவிகளை இசைத்தோ, நாடகங்கள் நடத்தியோ, நடனமாடியோ, கலை நிகழ்ச்சிகள் நடத்தியோ, வசனங்கள் பேசியோ, பாடல்பாடவோ கூடாது.

9. ஆர்ப்பாட்டத்தின்போது பிறர் மனதை துன்புறுத்தக்கூடிய வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரம் , பிளக்ஸ் பேனர் , துணியால் ஆன பேனர் போன்றவை ஏதும் நிறுவவோ, விநியோகிக்கவோ கூடாது.

10. ஆர்ப்பாட்டத்திற்கு முன்போ அல்லது ஆர்ப்பாட்டம் முடிந்தபின்போ பொதுக்கூட்டமோ, தெருமுனை பிரச்சாரம் போன்ற திடீர் நிகழ்ச்சி ஏதும நடத்தக்கூடாது.

11. ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மட்டுமே நடத்தி முடிக்கவேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அதிகமாக ஆர்ப்பாட்டம் நடத்தினால் நிபந்தனைகளை மீறியதாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும்.

12. ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்களின் செய்கை தனி நபரை குறித்தோ அல்லது ஒரு அமைப்பை பற்றியோ எந்தவகையிலும் மனம் புண்படும் படியான பேச்சுக்களோ, ஒலி, ஒளி அமைப்போ , வசனங்களோ இருக்கக்கூடாது.

13. ஆர்ப்பாட்டத்தின்போது தனிநபர் அல்லது அவர் சார்ந்த அமைப்பு அல்லது நிர்வாகத்தை கண்டித்து தரக்குறைவான , தீங்கான அல்லது ஆத்திரமூட்டும் வகையிலும் பேச்சுக்களோ, கோஷங்களோ, வார்த்தைகளோ பயன்படுத்தக்கூடாது.

14. ஆர்ப்பாட்டம் எடைபெறும் இடத்தில் போக்குவரத்திற்கும் , பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறு இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள வேண்டும்.

15. ஆர்ப்பாட்டத்தின்போது பாதுகாப்பு அலுவலின் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஏதேனும் அறிவுரை கூறினால் அதனையும் கடைபிடிக்க வேண்டும்.

16. மேற்கண்ட நிபந்தனைகளை மீறும்பட்சத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு சட்டரீதியான நடவடிகைக்கு உட்படுத்தப்படும்.

நகல் பெற்றமைக்கு ஏற்பளிப்பு வேண்டப்படுகிறது.

காவல் ஆய்வாளர்
கம்பம் தெற்கு காவல் நிலையம்
கம்பம்.

பெறுனர்
திரு.கே.முருகன்,செயலாளர், உத்தமபாளையம் வட்டார விவசாயிகள் விடுதலை முன்னணி.
நகல்
1) காவல் கண்காணிப்பாளர், தேனி மாவட்டம், தேனி.
2) காவல் துணைக்கண்காணிப்பார், உத்தமபாளையம் உட்கோட்டம்.

———————————

தகவல்

விவசாயிகள் விடுதலை முன்னணி.
தேனி மாவட்டம்.

3. நாகர்கோவில்

டாஸ்மாக் சாராயக் கடைகளை மூட வலியுறுத்தி பாட்டு பாடிய மக்கள் கலை இலக்கியக் கழக பாடகர் தோழர் கோவன் மீது பதியப்பட்ட தேசத்துரோக பிரிவின் கீழான வழக்கை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரியும்

ngl-pp-police-permission-deniedடாஸ்மாக் சாராயக் கடைகளை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்துபவர்கள் மீது தொடர்ந்து கடுமையான அடக்குமுறைகளை கையாண்டு ஒடுக்க முயற்சி செய்து வரும் தமிழக அரசை கண்டித்தும்

டாஸ்மாக் சாராயக் கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தியும்

வடசேரி அண்ணா விளையாட்டரங்கம் முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பின் குமரி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக 27-11-2015 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து வடசேரி காவல் நிலைய ஆய்வாளரிடம் 20-11-2015 அன்று காலை அனுமதி கோரி மனு அளித்திருந்தோம்.

மனுவை பெற்றுக்கொண்ட ஆய்வாளர், “வேறு எந்த கோரிக்கை என்றாலும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தருகின்றேன். டாஸ்மாக் தொடர்பான கோரிக்கை என்றால் எங்கள் நிலைய எல்லைக்குள் அனுமதி இல்லை. இது முக்கியமான கோரிக்கை என்பதால் ஆட்சியர் அலுவலகம் முன்பு போய் ஆர்ப்பாட்டம் நடத்துங்கள்”  என்று அனுமதி மறுத்து கூறினார்.

ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பகுதி நேசமணிநகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டதாகும். “ஆட்சியரிடம் கோரிக்கையை தெரியப்படுத்துவதால் எந்தப் பலனும் இல்லை. தங்களால் மூட முடியாது என்று அமைச்சரே சட்டசபையில் அறிவித்து விட்டதால் எங்கள் நோக்கம் மக்களிடம் கருத்தை தெரிவிப்பதுதான். மேலும் எந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்வோம். நீங்கள் முடிவு செய்வது நியாயமா? அண்ணா விளையாட்டரங்கம் முன்பு வழக்கமாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கும் இடம்தானே” என்று வலியுறுத்தினோம்.

டாஸ்மாக்கை மூடு என்ற கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்த மட்டும் அனுமதி இல்லை என்று மறுத்தது ஆய்வாளரின் தனிப்பட்ட முடிவு அல்ல. இதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றே புரிந்து கொள்ள முடிகிறது.

வழக்கமாக, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி காவல்நிலையங்களுக்குச் செல்லும்போது அனுமதி மறுக்கப்பட்டாலும் கூட பலமுறை இழுத்தடிப்பிற்கு பின்பே மறுக்கப்படும். ஆனால், டாஸ்மாக் கோரிக்கையில் உடனடியாக அனுமதி மறுக்கப்பட்டு அது கடிதமாகவும் 15 நிமிடங்களுக்குள் கொடுக்கப்பட்டு விட்டது.

ஜனநாயக நாட்டில் டாஸ்மாக்கை மூடச் சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்தக் கூட அனுமதி இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 47 மதுவை தடை செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

  • பொதுமக்களும் மதுவை தடைசெய்யக் கூறி ஆயிரக்கணக்கான மனுக்களை அரசிடம் கொடுத்து மன்றாடி விட்டனர்.
  • உயர்நீதிமன்றமும் மதுக்கடைகளை மூட உத்தரவிட முடியாது, எங்களுக்கு அதிகாரம் இல்லைஎன்று கூறிவிட்டது.
  • சசிபெருமாள் தனது உயிரையும் தியாகம் செய்து விட்டார்.

அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு அச்சப்படாமல் விடாப்பிடியாக தொடர்ந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கடலூர் மாவட்டம் மேலப்பாளையம் கிராமத்திலும், கலிங்கப்பட்டியிலும் வேறு சில மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தி டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடியுள்ளனர் மக்கள். இங்கு ஆட்சியரின் அதிகாரமோ, எஸ்.பி-ன் அதிகாரமோ, முதலமைச்சரின் அதிகாரமோ எடுபடவில்லை. எங்கள் ஊரில் டாஸ்மாக் சாராயக் கடை தேவையில்லை என்று போலீசுக்கு அஞ்சாமல் உறுதியாக விடாப்பிடியாக போராடிய மக்களின் அதிகாரமே எடுபட்டுளது. இந்த வழியில் போராட மக்களை அழைப்பதே எமது ஆர்ப்பாட்டத்தின் நோக்கம். இதைத்தான் தோழர் கோவனும் தனது பாடலில் பாடியுள்ளார்.

இதே வழியில் மக்கள் போராடி தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தினால் மட்டுமே டாஸ்மாக் சாராயக் கடையை மூட முடியும். டாஸ்மாக்கை மட்டுமல்ல, அடிப்படை உரிமைகளான கல்வி, மருத்துவம் ஆகியவற்றை பெற முடியும். மேலும் இயற்கை வளக் கொள்ளை உள்ளிட்ட அனைத்தையும் தடுத்து நிறுத்த முடியும். மேலப்பாளையூர், கலிங்கப்பட்டி மக்கள் போன்று குமரி மாவட்ட மக்களும் போலீசுக்கு அஞ்சாமல் டாஸ்மாக்கை மூடும்வரை போராடி மக்கள் விரோத போலீசுக்கும், மக்கள் விரோத அரசுக்கும் தகுந்த பாடம் புகட்டி மக்கள அதிகாரத்தை நிறுவ வேண்டும்.

மக்கள் அதிகாரம்,
நாகர்கோவில்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க