Sunday, September 19, 2021
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் வெள்ளத்தில் மிதக்கும் காஞ்சிபுரம் - வறட்சியில் வாடும் தருமபுரி

வெள்ளத்தில் மிதக்கும் காஞ்சிபுரம் – வறட்சியில் வாடும் தருமபுரி

-

மழை வெள்ளத்தில் தத்தளித்த மக்களுக்கு, கரம் கொடுத்த பு..தொ.மு காஞ்சிபுரம் மாவட்ட குழு!

டகிழக்கு பருவ மழை தமிழகத்தை புரட்டி போட்டுவிட்டது. மக்கள் வாழ்வதாரம் அனைத்தும் அழிந்து போனது. வெள்ளம் தெருக்களிலும், சாலைகளிலும் சிற்றாறுகளாக மாறி மக்களின் குடியிருப்புகள் தண்ணீரில் மிதந்தன, வீடுகள் இடிந்து விழுந்தன. விளை நிலங்களிலிருந்த பயிர் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டமும், நகரமும் வெள்ளத்தில் மிதந்தது என்றால் மிகையல்ல,

காஞ்சிபுரம் வெள்ளம்குறிப்பாக காஞ்சிபுரம் நகரத்தையொட்டி, பிள்ளையார் பாளையம், ஒரிக்கை, திருக்காலி மேடு உள்ளிட்ட பகுதிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின. குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கின. இதனால் பகுதி மக்கள், பள்ளி – கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டனர். திருக்காலி மேடு அருந்ததியர் நகர் பகுதி மக்கள் ஆரம்ப பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை சந்தித்து பேசிய போது, முறையான உணவு தருவதில்லை, அனைவருக்கும் போர்வை தாராமல் இருந்தது, குழந்தைகளுக்கு உடைகள் இல்லாத நிலைமைகள் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள முடிந்தது.

மக்களின் குறைகளை போக்கும் விதமாக, காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர், நகர மன்ற தலைவர், தாசில்தார் ஆகியோரை தொடர்பு கொண்டு மக்களின் கோரிக்கை தெரிவித்து, போர்க்கால அடிப்படையில் செய்து தருமாறு வலியுறுத்தியதின் அடிப்படையில், ஆணையர் முகாமில் தங்கியிருந்த மக்களை சந்தித்து கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். மேலும் கவுன்சிலரை வரவழைத்து, பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வைக்கப்பட்டது. புரட்சிகர அமைப்பின் துணையோடு கவுன்சிலரை கேள்வியெழுப்பி திணரடித்தனர் மக்கள்.

காஞ்சிபுரம் வெள்ளம்நகர மன்ற தலைவர் மற்றும் ஆணையர், தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மக்கள் பிரச்சனையில் தலையிட, உந்தி தள்ள வேண்டிய நிலை இருந்தது.

உணவு முறையாக தருவதில்லை என்பது குறித்து ஆணையரிடம் பேசியபோது “ஆயிரக்கணக்கான பேருக்கு சமைத்து தரும் உணவில் முன்னே, பின்னே இருக்கும்” என்றவரிடம்,

“உங்கள் குடும்ப விழாவிலோ ஆயிரக்கணக்கனோருக்கு சமைப்பதில் முன்னே, பின்னே இருக்கும் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?” என கேள்வியெழுப்பியபோது அமைதியாகி பிரச்சனையை சரி செய்வதாக கூறினார். தினமும் மதிய உணவு மூன்று மணிக்குதான் வரும் என்று மக்கள் கூறினார்கள், நாம் தலையிட்ட அன்று மதியம் 12 மணிக்கே உணவு கொண்டு வந்து கொடுத்தனர்.

காஞ்சிபுரம் வெள்ளம்இதற்கிடையில், மாலை 4 மணியளவில் காஞ்சிபுரம் மார்க்கெட் சாலையில், பகுதி மக்கள் குடி தண்ணீர் மற்றும் மின்சாரம் கோரியும், பகுதியில் தேக்கியுள்ள மழை நீரை வெளியேற்றக் கோரியும் நடத்திய சாலை மறியலுக்கு, நமது அமைப்பின் சார்பாக ஆதரவு அளித்ததுடன், போராட்டத்திலும் கலந்து கொண்டு கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகளை நிர்பந்தித்தோம்.

திரும்பவும் மாலை 6 மணியளவில் திருக்காலி மேடு முகாமிற்கு சென்று மக்களை சந்தித்து 7 அறைகளில் தங்க வைக்கப்படிருந்த மக்களின் குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்கினோம். அப்போது “காலையில் நீங்கள் அதிகாரிகளிடம் பேசியதில் உணவு சுவையாகவும், குறித்த நேரத்திலும் கொடுக்கப்பட்டது” என்றனர்.

இதன் பிறகு மறுநாள் 18-11-2015 அன்று குடியிருப்புகளில் மக்கள் வீடுகளை சுத்தப்படுத்தியும், பாத்திரங்களை கழுவியும் கொண்டிருந்த மக்களை சந்தித்தபோது, “அரசாங்கம் எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை” என்றும், “இதுவரையில் யாரும் எங்களை எட்டிப் பார்க்கவில்லை, நீங்கள் தான் நேற்றிலிருந்து எங்களுடன் இருந்து வருகின்றீர்கள்” என்ற பகுதி மக்களிடம்,

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

“இந்த அரசமைப்பும், அதன் அங்கமான அதிகார வர்க்கமும் மக்கள் பிரச்சனையை தீர்க்காது. ஏனெனில் காஞ்சிபுரம் மாவட்டத்துக்குட்ப்பட்ட ஆறு -ஏரி-வாய்க்கால்களை ஆக்கிரமித்தும், வரைமுறையில்லாமல் மணலை அள்ளி சென்று இயற்கையை சூறையாடியதின் விளைவுதான், இந்த வெள்ளச்சேதம். இந்த மழை வெள்ளத்தை சமாளிக்க முடியாமல் இயற்கையை பேரழிவாக சித்தரிக்கின்றனர்.

பாசிச ஜெயாவே ஈழ தமிழர்களை ராஜபக்ட்சே தலைமையிலான அரசு கொன்றொழித்த போது, ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என பேசியது போல், ‘இந்த மழை வெள்ளத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியாது, தவிர்க்க முடியாது’ என திமிர்தனமாக பேசினார். முதலாளிகளும், அதன் அங்கமான மாஃப்பியாக்களும் இயற்கையை மட்டுமல்ல நாட்டையே சூறையாடுகின்றார்கள். இப்படிப்பட்டவர்களை பாதுகாப்பது தான் ஜெயா உள்ளிட்ட ஒட்டு பொறுக்கி கட்சிகளினுடைய வேலையாக உள்ளது.” என்று விளக்கினோம்.

இதை போல ஐய்யங்கார்குளம் கிராமத்தில் நாடார் தெரு மீனவர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. உடனடியாக மக்களை காப்பாற்றும் விதமாக ஊர் தலைவரை தொடர்பு கொண்டு பள்ளியில் தங்க வைக்க பகுதி தோழர்கள் உத்தரவாதப்படுத்தினார்கள். இதன் பிறகு மக்களை பள்ளிக்கு அழைத்து வந்தோம். உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அடுத்து காவலான்கேட் பகுதி குடியிருப்பை வேகவதி ஆற்றுநீரால் சூழப்பட்டு இடுப்பளவுக்குமேல் தண்ணீர் இருந்த சாலையை கடந்து மக்களை சந்தித்து நிவாரண பணிகளை மேற்கொண்டோம் இப்பணியில்பெண் தோழர்களுடன் கிளை தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். தோழர் ஒருவருக்கு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சையெடுத்துக் கொண்டுயிருந்த நிலையில் மக்களுக்கு உதவும் எண்ணத்தோடு தோழர்களுடன் இணைந்து செயல்பட்டது மக்களுக்காகத்தான் தோழர்களும் அமைப்பும் என்ற உணர்வை வெளிப்படுத்துவதாக இருந்தது.

இந்த பணிகளில் பு.ஜ.தொ.மு தோழர்களுடன், பு.மா.இ.மு தோழர்களும் கலந்து கொண்டனர்.

தோழமையுடன்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம்
88075 32859

இயற்கைஅன்னை மழை பொழிந்தாலும் வறட்சி மாவட்டம் என்ற தருமபுரியின் அடையாளத்தை மாற்ற முடியாத அம்மா ஆட்சி

அன்புடையீர்,

வரும் முன்னர் காவாதான்வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக்கெடும்.

ஆனால் 200-க்கும் மேற்பட்டோர் செத்து மடிந்த பிறகு, “சேதம் தவிர்க்க இயலாது. முழுமையாக எரிய விட்டுவிடமாட்டோம்” என்கிறார் ஜெயலலிதா. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவருக்கு இருந்த அறிவு, இன்று நுனிநாக்கில்ஆங்கிலம் பேசும் புரட்சித்தலைவி அம்மாவின் அதிகாரிகளுக்கோ, அம்மாவுக்கோ இல்லை என்பது மட்டுமல்ல; நம்மை ஆள துளியும அருகதையற்று விட்டது இந்த அரசுக்கட்டமைப்பு என்பதுதான் இந்த கனமழை, வெள்ளம் ஏற்படுத்திய துயரம் நமக்கு உணர்த்துவது.

இன்று, மனித குலமே வாழமுடியாத பகுதியாகி விட்டது தமிழகம். சமீபத்திய மழைக்கு தமிழகமே வெள்ளக்காடாக மாறிவிட்டது . திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளநீர். உயிரையிழந்து, உறவையிழந்து, உடமையிழந்து எங்கு பார்த்தாலும் மக்கள் கண்ணீர். சுற்றுப்புற சுகாதாரமே சீர்கெட்டுவிட்டது .

தமிழகத்தின் பல மாவட்டங்களின் நிலை வெள்ளக்காடாகி விட்டது என்றால் தருமபுரியின் நிலையோ வேறு. தருமபுரி மாவட்டத்தில் வறட்சி நிவாரணம் கேட்டு போராடாத ஆண்டில்லை. ஒவ்வொரு ஆண்டும் கோரிக்கை வைக்கிறோம். வறட்சியின் மறுபெயர் தருமபுரி என்பது வரலாறாகிவிட்டது. நாம் இதை சாபக்கேடாகவே கருதுகிறோம். இது இயற்கையால் நமக்கு ஏற்பட்ட சாபக்கேடல்ல. துளியும் மக்கள் நலன் அக்கறை அற்றுப்போன ஆட்சியாளர்களால், அதிகாரிகளால் திட்டமிட்டே நமது நலன் புறக்கணிக்கபட்டதால் வந்த சாபக்கேடான அடையாளம். இந்த அடையாளம் மாற்ற முடியாதது அல்ல. இயற்கையை எதிர்த்து தனக்கு தகுந்தவாறு அதை மாற்றியமைத்து வந்திருக்கிறது மனித குலம்.

ஆக, நமது மாவட்டத்தின் அடையாளத்தையும் மாற்றுவது ஒன்றும் பெரிய வேலையில்லை. மக்கள் நலனில் அக்கறை இருந்தால் மாற்றமுடியும். இந்த மழையை அப்படியே சிந்தாமல் சிதறாமல் விவசாயத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற திட்டம் இந்த அரசிடம் இருந்ததா என்றால் இல்லை என்பதுதான் விவசாயிகள், ஜனநாயக சக்திகள் மற்றும் அறிஞர்கள்அனைவரும் சொல்லும் பதில்.

இந்த மழையை சரியாக முன்கூட்டியே திட்டமிட்டு பயன்படுத்த ஏற்பாடு செய்திருந்தால் 3-4 ஆண்டுகளுக்கு தருமபுரி விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கசெய்து விவசாயத்தை பாதுகாத்திருக்கலாம். தருமபுரி மக்களின் நாடோடி அவல வாழ்க்கையை மாற்றியிருக்கலாம்.
ஆனால் அப்படிப்பட்ட நோக்கம் இந்தஆட்சியாளர்களுக்கு துளியும் இல்லை. இதனால் தமிழகத்தில் பல மாவட்ட ஏரிகள் இந்த மழைக்கு நிரம்பினாலும் நமது மாவட்டத்தில் உள்ள 95 சதவீத ஏரிகள் நிரம்பவில்லை. 30-35 சதவீத அளவுக்குள்ளாகவே நிரம்பியுள்ளன. ஜெயாவின் சிலஅமைச்சர் பெருமக்கள் ஏரிகள் நிரம்பியதாக கூறினாலும் அந்த ஏரிகளின் உண்மையான கொள்ளளவு எவ்வளவு? தூர் வாரப்படாமல் இருந்தது மற்றும் ஆக்கிரமிப்பு காரணமாக எவ்வளவு குறைந்த கொள்ளளவே தண்ணீர் நிரம்பியுள்ளது என்று பார்த்தால் இதுவும் பாதிபொய் என்பது தெரியவரும்.

நீர்நிலைகளை பராமரிப்பதாக அரசு பேசும் பித்தலாட்டங்களெல்லாம் ஏரிகளைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கு தெரியும்.

  • நமது மாவட்டஜெர்தலாவ் ஏரியிலிருந்து புதிய கால்வாய் மூலம் பாலக்கோடு மற்றும் பென்னாகரம் பகுதியில் உள்ள 15 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ஏரிகளில் பாதியளவு தண்ணீர்கூட நிரம்பவில்லை.
  • 10 ஏரிகளுக்கு தண்ணீரை கொண்டு வந்து சேர்க்கும் மாறண்டள்ளி அருகே உள்ள செங்கன் பசுவன்தலாவ் ஏரிக்கு கால்வாய் அமைக்கும் திட்டமும் ஆமைவேகத்தில் நடப்பதால் இரண்டும் கெட்டானாக விவசாயிகள் இயற்கையாக வரவேண்டிய தண்ணீரும் வராமல் தவிக்கிறார்கள். இதற்காக ஒதுக்கப்படும் நிதிகள் அமைச்சர்களும் அதிகாரிகளின் கொள்ளைக்கே போய் சேர்கிறது.
  • பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை வைத்து போராடிவரும் பென்னாகரம் கெட்டூர் ஏரிக்கு பஞ்சப்பள்ளி உபரிநீரை கொண்டுவரும் திட்டத்தை பற்றி செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே உள்ளது அரசு.

அரசால் வெளியிடப்படும் ஓரிரு அறிவிப்புகளும், நடைபெறும் வேலைகளின் யோக்கியதை பெரும் மோசடியாகவே உள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்தில் சில ஏரிகள் ஒப்புக்காக தூர்வாரி அந்த மண்ணை காவாயில் கொட்டி தண்ணீர்வரும் வழி அடைக்கப்பட்டுள்ளது. ஏரியில் ஒரு இடத்தில் மண்எடுத்து ஏரிக்குள்ளேயே இன்னொரு இடத்தில் கொட்டியிருக்கிறார்கள். தேர்தலை மனதில்கொண்டே புலிக்கரை ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்திற்கு இப்போது நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்திற்கு பாசனவசதி செய்து தரும் விஷயத்தில் மன்னர்களுக்கு இருந்த அக்கறைகூட ஜனநாயகம் என வாய்கிழிய பேசும் இந்ந ஆட்சியாளர்களுக்கு இல்லை. தீபாவளிக்கு முன்கூட்டியே இலக்கு திட்டமிட்டு குடிகெடுக்கும் அரசிடம் மக்கள் நலனை எதிர்பார்ப்பது நம் தவறு.

இந்த கனமழைக்கு 200-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். தமிழகத்தின் 15 மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது. மக்கள் இறந்த பிறகும், பாதித்தபிறகும் நாடகம் போடுவதால், விளம்பரப்படுத்திக் கொள்வதால் ஒன்றும் பலனில்லை. மக்களுக்குதான் பாதிப்பு. ஏரிகளை ரியல்எஸ்டேட் மஃபியாக்கள் வளைத்துப்போட அரசு அனுமதிஅளிப்பது, அரசே விதிமுறைகளை மீறி அரசுகட்டிடங்கள் கட்டுவதுதான் இந்த வெள்ள சேதத்திற்கு, மக்களின் துயரத்திற்கு காரணம்.

கிரானைட் கொள்ளை, ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணல்கொள்ளைபோல் அனைத்திலும் மக்கள் நலன் புறக்கணிக்கபட்டு மஃபியாக்களின் ஆட்சியாகவே விதிமுறைகளை மீறி செயல்படுகிறது அரசு.

நீர் நிலைகள் ஆக்கிரமிப்பதால், நீர்நிலைகள் பராமரிப்பது புறக்கணிக்கப்படுவதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் தண்ணிரில் தத்தளிக்கிறார்கள் மக்கள். மழைநீரை பாதுகாக்காமல், முன்கூட்டியே இதைப் பயன்படுத்தி தர்மபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாகவே ஆட்சியாளர்கள் வைத்திருப்பதால் நிரந்தரமாக நாம் கண்ணீரில் தத்தளிக்கிறோம்.

இன்று வறட்சிக்கு பேர் போன நமது மாவட்டம் நாளை இயற்கையின் சீற்றத்தால் மழை வெள்ளத்தில் பாதிக்காமல் இருக்க எந்த உத்திரவாதமும் இல்லை. சுனாமி, தானே புயல், தற்போதைய மழைவெள்ளம் இவற்றிலிருந்து குடிகெடுக்கும் இந்த ஆட்சியாளர்கள் படிப்பினைபெற துளியும் வாய்ப்பே இல்லை. மழையாலும் வறட்சியாலும் வாழ்வாதாரத்தையும் உயிரையும் பறிகொடுத்து பாதிக்கப்படும் நாம்தான் படிப்பினைபெற வேண்டும்.

இவை உணர்த்துவது ஒன்றுதான். இந்த அரசமைப்பு நம்மை ஆளும் அருகதையை இழந்துவிட்டது. மக்களே அதிகாரத்தை கையில் எடுத்து இயற்கை உள்ளிட்ட நீர்நிலைகளை பராமரித்து நம் வாழ்வாதாரத்தை, உயிரை நாமே பாதுகாப்பதுதான் தீர்வு.

அருகதைஇழந்தது அரசுக்கட்டமைப்பு
இதோ ஆள வருகுது மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்,
தருமபுரி பகுதி.
தொடர்புக்கு: 8148573417

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க