Tuesday, April 20, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் பட்டினியில் பன்னாட்டு நிறுவனங்களின் வியாபாரம் - ஆய்வுக் கட்டுரை

பட்டினியில் பன்னாட்டு நிறுவனங்களின் வியாபாரம் – ஆய்வுக் கட்டுரை

-

கோடிக்கணக்கானோரைப் பசியால் வாட்டிச் சிலர் கோடிக்கணக்கில் சம்பாதித்தல்

துண்டுத் தாள்களும் பயன்படுத்தித் தூக்கி எறியப்பட்ட குவளைகளும் அந்த அறையில் தரை முழுக்க இறைந்து கிடக்கின்றன. அதுதான் உலக உணவு வர்த்தகத்தின் கட்டுப்பாட்டு அறை. அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உள்ள சிக்காகோ வர்த்தக மன்றத்தின் செயல் தளத்தில் நாம் நிற்கின்றோம். மஞ்சள், நீலம், சிவப்பு என வண்ண வண்ண மேலாடைகளை அணிந்து வியர்வையில் நனைந்த பல ஆண்கள் தம் பாதங்களில் மிதிபடும் குப்பைகளைக் கண்டுகொள்ளாமல் அங்குமிங்கும் ஆரவாரத்துடன் நடமாடிக்கொண்டுள்ளனர். சோயா மொச்சை. இறைச்சி, கோதுமை உள்ளிட்ட பண்டங்களில் அவர்கள் ஊக வணிகத்தை முழு வீச்சில் நடத்திக்கொண்டுள்ளனர்.

உணவுப் பண்டங்கள் உள்ளிட்ட பலவற்றில் ஊக வணிகம் உலகில் சில நகரங்களில் நடக்கிறது. சிக்காகோ வர்த்தக மன்றம் என்பது அவையனைத்திலும் மிகப் பெரிய வணிகக் குழுமம். உலகளவில் உணவுப் பண்டங்களின் விலைகள் இங்கு நிர்ணயிக்கப்படுகின்றன. அதன்மூலம் பல கோடி மக்களுடைய தலைவிதியையும் இவர்கள் முடிவு செய்கின்றனர். இவர்கள் எடுக்கும் முடிவுகள் உலகில் பசி, பட்டினி ஆகியவற்றின்மீதும் சில முதலீட்டாளர்களின் செல்வ வளத்தின்மீதும் தாக்கம் செலுத்துகின்றன.

இதோ இவர்தான் ஏலன் நக்மென். ஆரவாரம் மிக்க இந்த அறை இவருக்கு மிகவும் பிடித்த இடம். “இங்குதான் முதலாளியம் தன் தூய வடிவில் இயங்குகிறது” என்று மகிழ்கிறார் இவர். “இங்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம்.” நாற்பத்திரண்டு அகவையான இவர் முகத்தில் மகிழ்ச்சி நடமாடுகிறது.

இவர் இங்கு வேலைக்கு வந்து இருபத்தேழு ஆண்டுகள் முடிந்துவிட்டன. வர்த்தகத் தளத்தில் கீழ் பதவியில் இருந்து வேகமாக மேலே வந்துவிட்டார். ஊக வணிகத்தில் முதலீடு செய்வது இவருடைய பணி. அதில் பணம் சம்பாதிக்கும் வழிகளைப் பற்றிய பருவ இதழ் ஒன்றை இவர் வெளியிடுகிறார். “எந்தெந்தப் பொருள்களின் வணிகத்தில் குறுகிய காலத்தில் நிரம்பப் பணம் சம்பாதிக்க முடியுமோ அவற்றில் எல்லாம் நான் வர்த்தகம் செய்கிறேன். என் நோக்கமே பணம் சம்பாதிப்பதுதான்” என்று வெளிப்படையாகச் சொல்கிறார் நக்மென்.

ஊகச் சந்தையை முழுக்க நம்புவதாகக் கூறும் இவர் தான் எவ்வாறு பணம் சம்பாதிக்கிறோம் என்பதைக் குறித்து அதிகம் நினைப்பதில்லை. கன்னெயம் (பெட்ரோலியம்), வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள், உணவுப் பொருள்கள் எனப் பலவற்றில் அவர் ஊக வணிகம் நடத்துகிறார். “நான் அரசியல் ஈடுபாடற்றவன். சந்தையை மட்டுமே நம்புகிறேன். சந்தை எப்போதும் சரியான முடிவுகளையே எடுக்கும்” என்கிறார்.

உலக அளவில் உணவுப் பண்டங்களின் விலைகள் தாறுமாறாக ஏறுவது குறித்து அவர் என்ன நினைக்கிறார்? அவரைப் பொறுத்தவரை பண்டங்களின் இருப்பும் மக்களின் தேவைகளுமே விலைகளை முடிவு செய்கின்றன.

ஊக வணிகர்களைப் பற்றிய அவருடைய கருத்து என்ன?

“சந்தைக்கு அவர்கள் நன்மை செய்கின்றார்கள். ஏனெனில் அவர்கள் எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்து விடுகின்றார்கள்.”

ஊக வணிகம் மிக அதிகமாகிவிட்டதா என்றால், தான் அப்படிக் கருதவில்லை என அவர் சொல்வது வியப்பளிக்கின்றது. உலக அளவில் உணவுப் பண்டங்களின் வணிகத்தில் முன்பு எப்போதும் இருந்ததைக்காட்டிலும் இப்போது மிக அதிக அளவில் பணம் புரள்கிறது. ஊக வணிகத்தில் செய்யப்பட்ட முதலீட்டைப் பொருத்தவரை, 2010-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்ததைவிட மும்மடங்குப் பணம் இறுதிக் காலாண்டில் அத்துறையில் நுழைந்தது. பல நாடுகளில் அண்மையில் நேர்ந்த பொருளாதாரச் சரிவைத் தொடர்ந்து அரசுகள் தொழில், வணிகத் துறைகளில் மூலதனத்தைப் பெருக்கின.

விளைபொருள்களின் ஊக வணிகம் பல முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது. வர்த்தகம் செய்யப்படும் பண்டங்களைப் பற்றி அவர்கள் குறிப்பாக அக்கறை கொள்வதில்லை. தகவல் தொழில்நுட்பத் துறையில் வர்த்தகம் செய்து பணம் சம்பாதித்தவர்கள் இப்போது உணவுப் பண்ட வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். அவ்வளவுதான்.

ஓய்வூதிய நிதிகளை மூலதனமாகக் கொண்டு பெருமளவில் பணம் சம்பாதிக்க முனையும் பெரிய நிதி நிறுவனங்கள் முதல் தனிப்பட்ட முறையில் ஊக வணிகத்தில் சம்பாதிக்க விரும்பும் சிறு முதலீட்டாளர்கள் வரை பலரும் விளைபொருள் ஊக வணிகத்தில் நுழைகின்றனர்.

தேவையை முழுமை செய்தல்

வைப்பகங்களும் இதற்கேற்றவாறு பெருமளவில் நிதியுதவி செய்ய முன்வந்துள்ளன. நிறுவனங்களின் பங்குகள் எப்படி வணிகப் பொருள்களாக உள்ளனவோ அதேபோல உலகின் உணவுப் பண்டங்களும் திடீரென வணிகப் பொருள்களாகிவிட்டன.

விளைபொருள்களின் ஊக வணிகம் இவ்வாறு பெருகுவதைத் தொடர்ந்து உலகெங்கும் அவற்றின் விலைகளும் தாறுமாறாக ஏறிக்கொண்டுள்ளன என்பது வேதனை தரும் நிகழ்வு. இதற்கு முன்பு 2008-ம் ஆண்டில் விளைபொருள்களின் விலைகள் பன்மடங்கு அதிகரித்து உலகில் பல பகுதிகளில் பசி, பட்டினி அதிகரித்தது. அதைவிட இந்த ஆண்டு விலைகள் அதிகரித்துவிட்டதாக மார்ச் மாதம் ஒன்றிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் கழகம் தெரிவிக்கிறது. கடந்த ஓராண்டில் உணவுப் பண்டங்களின் விலைகள் முப்பத்தொன்பது விழுக்காடு உயர்ந்தன. தானியங்கள், சமையல் எண்ணெய்கள் ஆகியவற்றின் விலைகள் எழுபத்தொரு விழுக்காடு உயர்ந்தன.

“மலிவான உணவு கிடைக்கும் காலம் முடிந்துவிட்டது” என்று கட்டியங்கூறுகிறார் நக்மென். இது அமெரிக்கர்களுக்கு அவ்வளவு மோசமான நிகழ்வல்ல என்கிறார். “பெரும்பாலான அமெரிக்கர்கள் அளவுக்கதிகம் உண்கின்றார்கள்.”

அமெரிக்கர் ஒவ்வொருவரும் சராசரியாகத் தம் வருமானத்தில் பதின்மூன்று விழுக்காட்டினைத்தான் உணவுப் பொருள்களை வாங்குவதில் செலவிடுகிறார். உணவுப் பண்டங்களின் விலையேற்றம் அவர்களுக்கு ஒரு தொல்லையாக மட்டும் தென்படலாம். ஆனால் உலக அளவில் ஏழைகள் தம் குறுகிய வருமானத்தில் எழுபது விழுக்காட்டினை உணவுக்காகச் செலவிடும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த விலையேற்றம் அவர்களுடைய வாழ்வாதாரத்தையே தகர்க்கிறது.

விலையேற்றம் காரணமாக 2011 சூன் மாதத்தில் மட்டும் புதிதாகச் சுமார் நான்கரைக் கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டுள்ளதாக உலக வைப்பகம் சொல்கிறது. நாளொன்றுக்கு ஒன்றேகால் அமெரிக்க டாலருக்குக் (2011-இல் சுமார் அறுபது ரூபாய்களுக்கு) குறைந்த தொகையில் வாழ்பவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பதாக உலக வைப்பகம் வரையறுக்கிறது. [இது மிகக் குறைவான, எதார்த்தத்துக்கு முற்றிலும் புறம்பான தொகை என்பது வெளிப்படை.]

உலகெங்கிலும் சுமார் நூறு கோடிப் பேர் பட்டினி கிடக்கின்றனர். ஆப்ரிக்காவின் கொம்புப் பகுதியில் (சோமாலியா, எத்தியோப்பியா, எரிட்ரியா முதலிய நாடுகளில்) இப்போது பட்டினி வாட்டுகிறது. மழையின்மை, உள்நாட்டுப் போர்கள், ஊழல் மலிந்த அரசுகள் முதலியன மட்டுமே இதற்குக் காரணங்கள் அல்ல. விளைபொருள்களின் விலைகள் மிக வேகமாக உயர்ந்துள்ளதும் ஒரு முதன்மையான காரணியாகும். [1943-44 வங்காளப் பஞ்சம் குறித்த தன் ஆய்வில், ‘பசி, பட்டினி ஆகியவற்றுக்குக் காரணம் உணவுப் பண்டங்களின் பற்றாக்குறை அன்று. மக்களிடம் அவற்றை வாங்குவதற்குப் போதிய வசதி இல்லாததுதான் அவர்கள் பட்டினி கிடப்பதற்குக் காரணம்’ என்கிறார் பொருளாதாரத்தில் நோபெல் பரிசு பெற்ற அமர்த்யா சென்.]

விரும்பத் தகாத ‘பக்க விளைவுகள்’!

வறியவர்கள் தம் உணவு ஆதாரத்தை இழந்துள்ளது குறித்து நக்மென் என்ன நினைக்கிறார்? அது “சந்தைப் பொருளாதாரத்தின் விரும்பத்தகாத பக்கவிளைவுகள்” என்கிறார்.

அத்தகைய பக்கவிளைவுகளை நேரடியாக எதிர்கொள்பவர்களின் நிலை என்ன என்று சற்றுக் கூர்ந்து பார்ப்போமா?

இதோ இவர் பெயர் அலிமா அபூபக்கர். இருபத்தைந்து அகவை நிரம்பிய இந்தத் தாய் கென்ய நாட்டின் மிகப் பெரும் சேரியான கிபேரா-வில் சிறு குடிசை ஒன்றில் வாழ்கிறார்.

தன் இரண்டு குழந்தைகளுக்கும் கணவனுக்கும் இன்றிரவு என்ன உணவு படைக்கமுடியும் என்று சிந்திக்கிறார். அண்மைக் காலம் வரை இந்தச் சேரியில் அதிகம் சம்பாதித்தவர்களில் இவரும் இவருடைய கணவரும் அடங்குவர். அலிமாவின் கணவர் சிறைக் காவலராகப் பணியாற்றுகிறார். அவருடைய மாதச் சம்பளம் நூற்றைம்பது யூரோக்கள். இச்சம்பளத்தில் பாதி அவருடைய குடும்பத்தின் உணவுத் தேவையை நிறைவு செய்வதற்குப் போதுமானதாக இருந்தது.

ஆனால், இப்போது திடீரென நிலைமை மாறிவிட்டது. கென்ய மக்களின் முதன்மையான உணவுப் பொருள் மக்காச்சோள மாவு. கடந்த ஐந்து மாதங்களில் அதன் விலை இரட்டிப்பாகிவிட்டது. உருளைக் கிழங்கின் விலை முப்பது விழுக்காடு உயர்ந்தது. பால், காய்கறிகள் ஆகியவற்றின் விலைகளும் ஏறிவிட்டன.

இந்த அதிரடி விலையேற்றத்தின் காரணம் என்னவென்று அவருக்குத் தெரியாது. ஆனால், இனி உணவுக்காகச் செலவு செய்வதில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்பது மட்டும் அவருக்குப் புரிகிறது. முதல் கட்டமாக விலை குறைந்த மக்காச்சோள மாவை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினார். அது சுவையற்றதாக இருக்கிறது. ஆனால் வயிற்றை நிரப்பியாகவேண்டுமே! தன் குழந்தைகளுக்குப் போதுமான உணவு தருவதற்காகச் சில சமயங்களில் அந்தத் தாய் தான் சாப்பிடாதிருக்கப் பழகிக்கொண்டார்.

கும்பி என்ற சிற்றூர் மலாவி நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ளது. 2008-ம் ஆண்டு அவ்வூர் மக்கள் திடீரெனக் கடும் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். வழக்கமாகத் தென் ஆப்ரிக்காவில் பசி, பட்டினி, சத்துப் பற்றாக்குறை ஆகியவை நிலவுவதற்குக் காரணம் வறட்சிதான். ஆனால் இம்முறை அப்பகுதியில் வறட்சி இல்லை. உணவுப் பண்டங்கள் சந்தையில் நிறைய இருந்தன. மக்காச்சோளம், அரிசி ஆகிய அடிப்படை உணவுப் பொருள்களின் விலைகள் எந்த வெளிப்படைக் காரணமும் இன்றி சில மாதங்களில் இரண்டு மடங்கு உயர்ந்துவிட்டன. இம்முறை உள்ளூர் வணிகர்கள் பொருள்களைப் பதுக்கி வைக்கவும் இல்லை.

நூற்றுக்கு மேற்பட்ட வளரும் நாடுகளில் இதே நிலை நிலவிற்று.

விலையேற்றத்துக்குச் சொல்லப்படும் காரணங்கள்

வளரும் நாடுகளில் உள்ள மக்கள் இந்த விலையேற்றத்தால் படும் அவதியைப் பற்றிக் கூறும் உலக வைப்பகத் தலைவர், “ஏற்கெனவே அதிகமாக உள்ள உணவுப் பண்டங்களின் விலைகள் மேன்மேலும் அதிகமாகி வருவதால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் அல்லலுறுகின்றனர். ஏழைகளின் எண்ணிக்கையும் வளர்ந்துவருகின்றது” என்கிறார்.

கருத்தரங்குகள் உள்ளிட்ட கூட்டங்களில் விலைகள் தாறுமாறாக உயர்வதற்கு அடிக்கடி சொல்லப்படும் காரணங்களில் கீழ்க்கண்டவையும் அடங்கும்:

 • சூழல் மாற்றத்தால் வறட்சி, வெள்ளம், புயல் முதலியன அதிகம் நிகழ்கின்றன. அதனால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது.
 • கன்னெயத்துடன் கலந்து ஊர்திகளை இயக்குவதற்கு உயிரெரிபொருளாகப் பயன்படுத்துவதற்குத் தேவைப்படும் பயிர்களை வளர்க்கவேண்டும். அதற்கு விளைநிலங்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதனால் உணவு உற்பத்திக்குப் பயன்படும் நிலப்பரப்பு குறைகிறது.
 • பெருகிவரும் மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப உலக உணவு உற்பத்தி பெருகவில்லை.
 • சீனா, இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதாரம் வேகமாக உயர்வதால் அந்நாட்டு மக்கள் முன்பைவிட உயர்தரமான உணவுவகைகளை உட்கொள்கின்றனர். அதனால் தேவை அதிகரிக்கிறது.
 • கச்சா எண்ணெய்ப் பொருள்களின் விலையேற்றத்தால் உணவு உற்பத்தி, வழங்கல் ஆகியவற்றின் செலவு அதிகரிக்கின்றது.
 • இறைச்சி அதிகம் உட்கொள்ளப்படுகிறது. அதற்கான கால்நடைகளை வளர்ப்பதற்கு அதிக அளவில் தானியங்கள் தேவைப்படுகின்றன.
 • பல்லாண்டுகளாக அரசுகள் – குறிப்பாகப் பசி, பட்டினி அதிகம் உள்ள நாடுகளின் அரசுகள் – வேளாண்மையில் போதுமான முதலீடு செய்யாமல் புறக்கணித்துவந்துள்ளன. இதனால் மொத்த விளைச்சல் குறைகிறது.

இவையனைத்துமே சரியான காரணங்களைப் போலத்தான் தோன்றுகின்றன. அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. ஆயினும், இந்த அளவு கிடுகிடுவென விலைகள் ஏறுவதற்கு இவை காரணங்கள் அல்ல.

விலையேற்றத்தின் உண்மையான பின்னணியை எடுத்துரைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அவர்களுள் ஒருவர் ஒலீவியர் டீ சூட்டர் என்பவர். இவர் ஒன்றிய நாடுகளவையின் உணவு உரிமைக்கான சிறப்பு அதிகாரி. உயிரெரிபொருள் உற்பத்தி அதிகரித்தல் உள்ளிட்ட உற்பத்திச் சிக்கல்களும் விளைச்சல் குறைதல், ஏற்றுமதி நிறுத்தம் ஆகியவையும் விலையேற்றத்திற்கு மிகச் சிறிய காரணங்கள் என்று அவர் அண்மையில் எழுதினார். “உலகளவில் நிதிச் சூழலில் ஏற்கெனவே சிக்கல் அதிகம் இருந்தது. அத்துடன் ஊக வணிகமும் சேர்ந்துகொண்டது. அதனால்தான் உணவுப் பண்டங்களின் விலைகள் கடுமையாக ஏறின” என்கிறார் அவர். நிதிச் சந்தையில் கடும் தேக்கம் நிலவியதால் பெரிய நிதி முதலீட்டாளர்கள் பண்ட வர்த்தகத்திற்கு மிகப் பெரிய அளவில் தாவினார்கள். அதனால் ஊக வணிகம் கட்டுக்கடங்காமல் ஏற்றங்கண்டது. என்று டீ சூட்டர் விளக்குகிறார்.

உயிரி எரிபொருள் பயன்பாடு
உயிரி எரிபொருள் பயன்பாடு

பண்ட வர்த்தகத்தைக் கூர்ந்து கவனித்தால் உணவுப் பண்டங்களின் விலையேற்றத்திற்கு இதுவரை கூறப்பட்ட காரணங்கள் ஐயத்திற்கிடமானவையே என்பது தெளிவாகிறது.

ஒவ்வொரு வீக்கத்தின் பின்புலத்திலும் ஒரு கதை இருக்கும்

உணவு உற்பத்திக்காகப் பயன்படும் நிலம் உயிரெரிபொருள்களை விளைவிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பதில் உண்மை இருக்கிறது. ஆனால், அண்மைக்காலம்வரை மொத்த தானிய உற்பத்தியில் ஆறு விழுக்காடுதான் உயிரெரிபொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டது. உணவுப் பண்டங்களின் விலையேற்றத்தில் உயிரெரிபொருள்களின் பங்கு பரவலாக அறியப்பட்டதைவிட மிகக் குறைவுதான் என்ற உலக வைப்பகத்தின் கூற்று கவனிக்கத்தக்கது. மேலும், உயிரெரிபொருள்களை விளைவிப்பதற்குத் தரும் மானியத்தை அதிகப்படுத்துவதற்கு எதிராகக் கடந்த சூன் மாதம் அமெரிக்க நாடாளுமன்றம் வாக்களித்தது. உயிரெரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைக்கும் முகமாகத்தான் இந்த வாக்கெடுப்பு நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதேபோல, வளரும் நாடுகளில் இறைச்சித் தேவை அதிகரிப்பதும் விலையேற்றத்திற்கு ஒரு சிறு காரணந்தான். சீனா, இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் இறைச்சி இறக்குமதியைப் பெரிய அளவில் அதிகரிக்காமலே தம் இறைச்சித் தேவையைச் சமாளிக்கமுடியும் என்கிறது அனைத்துலக உணவுக்கொள்கை ஆய்வுக் கழகம். “வளரும் நாடுகளில் தேவை அதிகரிப்பதால் உலகளவில் விலைகள் ஏறியதற்கான தடயங்களே இல்லை” என்று உலக வைப்பக அறிக்கையொன்று கூறுகிறது.

சூழல் மாற்றம் காரணமா? கண்டிப்பாக அதற்கும் ஒரு பங்கு இருக்கிறது. உலகெங்கும் உணவுப் பண்டகசாலைகளில் இருப்புகள் குறைந்துள்ளன. ஆனாலும், உணவு விற்பனையைவிட உற்பத்தி அதிகமாக உள்ளது என்பதே இன்றைய நிலவரம்.

பிரேசிலின் பெரிய மக்காச்சோள பண்ணையில் அறுவடை
பிரேசிலின் பெரிய மக்காச்சோள பண்ணையில் அறுவடை

உணவுத் துறையில் அவசர நிலை நிலவுவதாகப் பரப்புரை செய்யப்படுவது சூழ்ச்சிகரமான செயலுத்தியின் ஒரு பங்கு. எந்தவொரு துறையிலும் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கவேண்டுமானால் அதன் பின்புலத்தில் ஒரு கட்டுக்கதை தேவை.

 • சில ஆண்டுகளுக்கு முன் தகவல் தொழில்நுட்பத்துறையில் இத்தகைய வீக்கம் நேர்ந்தது. பொது அறிவு மட்டுமன்றிப் பாரம்பரியப் பொருளாதார முறையின் விதிகளும் இப்போது மதிப்பிழந்துவிட்டன என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கிய “புதிய பொருளாதாரம்” அந்த வீக்கத்தின் கட்டுக்கதைப் பின்புலமாகத் திகழ்ந்தது.
 • வீடு வாங்குவது மிகப் பாதுகாப்பான முதலீடு என்ற கட்டுக்கதை அமெரிக்காவில் வீட்டுக் கடன் வழங்கும் துறையில் உருவான வீக்கத்திற்குப் பின்புலமாக இருந்தது.
 • ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாத் தேவையாக விளங்குவது உணவு. அதில் பற்றாக்குறை வரப்போகிறது என்று அச்சமூட்டுவது மேற்கண்ட கட்டுக்கதைகளின் வேறொரு வடிவமே.

உலக உணவுத் துறையில் அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உணவுச் சந்தை நிதிச் சந்தையாக உருமாற்றம் பெற்றுள்ளது என விவரிக்கிறது வர்த்தகம், மேம்பாடு ஆகியன குறித்த ஒன்றிய நாடுகளின் கருத்தரங்கம் (வமேஒநாக). இதன் வெளிப்பாடாகத்தான் நம் அடிப்படைத் தேவையான உணவு பங்கு வர்த்தகத்தில் சூதாட்டப் பொருளாக மாறியிருக்கிறது.

தாறுமாறான விலைகள்

வமேஒநாக-வின் தலைமைப் பொருளாதார அதிகாரியான கெய்னெர் ப்லாசுபெக் இது குறித்து ஒரு நூல் எழுதியுள்ளார். செருமானிய நிதி அமைச்சகத்தின் முன்னாள் உயர் அதிகாரியான இவர் உணவுப் பண்டங்களில் ஊக வணிகம் நடைபெறுவது குறித்துப் பல ஆண்டுகளாக அக்கறை கொண்டுள்ளார்.

2008-ம் ஆண்டு நேர்ந்த உலக நிதி நெருக்கடிக்குப்பின் உலக நாடுகளின் நாணயங்கள், பண்டங்கள், அரசு கடனீட்டு ஆவணங்கள், பங்குகள் ஆகியவற்றின் விலை மதிப்புகளில் நடக்கும் ஏற்ற இறக்கங்களை இவர் கண்காணிக்கத் தொடங்கினார். இவை ஒவ்வொன்றின் விலைகளும் மாறுவதில் ஏதோ ஓர் ஒற்றுமை தெரிந்தாற்போல் இருந்தது. அதைக் கூர்ந்து கவனிப்பதற்காக வல்லுநர் குழு ஒன்றை ப்லாசுபெக் அமைத்தார்.

foodstuff-price“நிதிமயமாக்கப்பட்ட பண்டச் சந்தைகளில் விலைகளை முடிவு செய்வதில் தகவல் பரிமாற்றத்தின் பங்கு” என்ற பெயரில் அந்தக் குழு அறிக்கையொன்றை வெளியிட்டது. இந்தத் தலைப்பு பொத்தாம்பொதுவானது போலத் தோன்றுகிறது. ஆனால், அந்த அறிக்கையின் உள்ளடக்கம் மிகவும் முதன்மை வாய்ந்தது. பண்டப் பரிமாற்றச் சந்தை நல்லபடி நடக்கவில்லை என்று அந்த வல்லுநர் குழு தெரிவிக்கிறது. பொருளாதார மாதிரிகளின் அடிப்படையில் சந்தைகள் எப்படி இயங்கவேண்டுமோ அப்படிப் பண்டச் சந்தை இயங்கவில்லை. ஒரு பண்டத்தின் இருப்பும் அதன் தேவையும்தாம் அப்பண்டத்தின் விலையைத் தீர்மானிக்கவேண்டும். ஆனால், நிதிச் சூதாட்டச் சந்தையில் கலந்துகொள்பவர்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் விலைகளைத் தள்ளிச்செல்கின்றனர் என்று அந்த ஆய்வில் தெரியவந்தது.

இதன் காரணமாக விலைகள் மிக மோசமான முறையில் சிதைக்கப்படுகின்றன. இருப்புதேவை என்கிற எதார்த்த நிலைமைகளுக்கும் விலைகளுக்கும் தொடர்பே இல்லை. வருங்காலத்தில் பொருளாதார நிலைமை எவ்வாறு மாறும் என்ற ஊகத்தின் அடிப்படையில் விலைகள் முடிவு செய்யப்படுகின்றன.

பண்டங்களின் ஊக வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் முதலீட்டாளர்களில் பெரும்பாலானோருக்கு அந்தப் பண்டங்களைக் குறித்த புரிதல் இல்லை. ஒரு பண்டத்தை விற்றல், வாங்குதல் ஆகியன குறித்து அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கும் அந்தப் பண்டத்திற்கும் எந்தத் தொடர்புமே இல்லை. விலைகளை முடிவு செய்வதற்குத் தக்க அடிப்படைக் காரணங்களைப் பயன்படுத்தாமல் ஒருவரைப் பார்த்து மற்றவர் விலை சொல்வது அதிகம் நிகழ்கிறது.

உலக உணவாதாரத்துடன் சூதாடுதல்

டுனீசியாவில் ரொட்டி விலை, கென்யாவில் மக்காச்சோள மாவின் விலை, மெக்சிக்கோவில் மக்காச்சோளத்தின் விலை ஆகியவற்றை நிதி முதலீட்டு வைப்பகங்களும் பெருநிதி முதலாளிகளும் முடிவு செய்யும் இந்த நிலை எப்படித் தோன்றிற்று? பெரிய ஓய்வூதிய நிதியங்கள் முதல் சிறு முதலீட்டாளர்கள் வரை அனைவரும் உலக உணவாதாரத்தின் மீது சூதாட்டம் நடத்தும் நிலை வரக் காரணம் என்ன? உலக அளவில் எவ்வளவு பேர் பசியுடன் கிடக்கவேண்டும் என்பதை முடிவு செய்யும் வல்லமை சிக்காகோ, நியூ யார்க், லண்டன் ஆகிய வல்லரசு நகரங்களின் சந்தைகளுக்கு எப்படிக் கிடைத்தது?

பரவலாகக் கவனிக்கப்படாமல் சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த முக்கியமானதொரு சந்தை மாற்றமே இந்தத் தவறுக்கு அடிப்படை. பெருநிதி நிறுவனங்கள் செய்த பல மாறுதல்கள்தாம் மனித குலத்தின் உணவாதாரத்தை நிதிச் சூதாட்டச் சந்தைப் பொருளாக மாற்றின.

பன்னெடுங்காலமாக இருப்பும் தேவையுமே உணவுப் பண்டங்களின் சந்தையைக் கட்டுப்படுத்திவந்தன. உழவர்கள் விளைவித்த உணவுப் பண்டங்களை விநியோகிப்பவர்களும் சில்லறை விற்பனையாளர்களும் நுகர்வோருக்குக் கொண்டுசேர்த்தனர்.

வெளிப்படையாக நடக்கும் ஊகச் சந்தை இடைக்காலத்தில் உருவாகிற்று. விலை ஏற்ற இறக்கங்களில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் முகமாக உற்பத்தியாளர்கள் தம் பண்டங்களை முன்கூட்டியே குறிப்பிட்ட விலைக்கு விற்றார்கள். வழக்கமாக அந்த விலை அப்போதைய நிலவரத்தைவிடக் குறைவானதாக இருந்தது. ஊக வணிக ஒப்பந்தம் முழுமையடைந்த நாளில் பண்டம் உற்பத்தியாளரிடமிருந்து கை மாறிற்று. அப்போதைய விலை முன்பே ஒப்புக்கொண்ட விலையைவிடக் குறைவாக இருந்தால் உழவருக்கு நன்மை. அதிகமாக இருந்தால் ஊக வணிகருக்கு நன்மை. உழவர்களும் உணவுப் பண்டங்களுக்கு மதிப்புக் கூட்டுவோரும் தத்தம் இடரைக் குறைத்துக்கொள்வதற்கு ஒரு வழி செய்தது இத்தகைய ஊக வணிகம். இந்தச் சந்தையில் புழங்குவதற்குத் தேவையான நிதியை ஊக வணிகர்கள் தந்துதவினர். நுகர்வோருக்குப் பண்டங்கள் தொடர்ந்து கிடைத்தன.

இந்தச் சந்தையில் பங்கேற்பதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வேளாண் தொழிலுடன் தொடர்புடையவர்களாக இருந்தனர்: உழவர்கள், மதிப்புக் கூட்டுபவர்கள், சேமிப்புக் கிடங்கு வைத்திருப்பவர்கள், உணவு வழங்கலில் ஈடுபட்ட பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியோர்.

வைப்பகங்கள் இதில் ஒரு சிறு பங்கினைத் தான் வகித்தன. சந்தையில் பங்கு பெறுவோருக்குக் கடன் தரும் பணியை வைப்பகங்கள் செய்தன. அது நன்றாக நடந்தது. சந்தைகள் பல ஆண்டுகள் நிலையாக, அதிக ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் நடந்துவந்தன. நிதித்துறை நிறுவனங்களின் கண் படும்வரை.

அரசுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுதல்

இந்தப் புது வணிகத் துறையில் நிதி நிறுவனங்கள் புகுவதற்கேற்பச் சந்தை நுழைவு விதிகள் விரிவாக்கப்பட வேண்டியிருந்தன. அதுவரை அந்த விதிகள் கடுமையானவையாக இருந்தன. அதற்கு நல்ல காரணம் இருந்தது. ஆனால், நிதி நிறுவனங்களின் வல்லமை படைத்த மேலதிகாரிகள் அமெரிக்க அரசின் மேல்மட்டங்களில் இருப்பவர்களுடன் கமுக்கமாக வேலை செய்தார்கள், அதன் விளைவாக 1999-ல் அமெரிக்க அரசின் பண்டங்கள் ஊக வணிக ஆணையம்ஊக வணிகச் சந்தை விதிகளைப் பெருமளவு தளர்த்திவிட்டது. பண்டங்களின் பங்குரிமைச் சான்றிதழ்களைப் பெருமளவு வாங்குவதற்கு வைப்பகங்கள் அனுமதிக்கப்பட்டன.

லேமென் பிரதர்சு, மார்கன் இசுடேன்லி, பேய்ர் இசுடெய்ர்ன்சு, சே.பி. மார்கன் ஆகியன உலகளவில் மிகப் பெரிய நிதி முதலீட்டு வைப்பகங்கள். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வது தொடர்பான அரசு விதிகளைத் தளர்த்தவேண்டும் என்று இந்த வைப்பகங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அமெரிக்க அரசின் ‘பங்குரிமைச் சான்றிதழ் மற்றும் பரிமாற்ற ஆணையம்’ 2004-ம் ஆண்டு வைப்பகங்களின் செயல்தளத்தை மேலும் விரிவாக்கிற்று. அதன் விளைவாக நிதித்துறைச் சூதாடிகள் தம் கைவசம் இருக்கும் துணைப்பிணையத் தொகையைக் காட்டிலும் நாற்பது மடங்குத் தொகை வரை ஊக வணிகத்தில் முதலீடு செய்ய முடிந்தது. இப்படியாக முன்னைக் காட்டிலும் மிக அதிகப் பணம் பங்குச் சந்தையில் புகுந்து விளையாடிற்று.

ஆனால், தனிப்பட்ட பண்டங்கள் மீது பந்தயம் வைப்பது இடர் மிக்க செயல். அதனால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் முதலில் இந்த வர்த்தகத்தில் நுழையத் தயங்குவார்கள். அவர்களைக் கவர்வதற்கான வழிகளை வைப்பகங்கள் தேடின. கோல்ட்மென் சேக்சு நிறுவனத்திற்கு ஒரு சிந்தனை உதித்தது: தனிப்பட்ட பண்டங்களில் வாணிகம் செய்யாமல் ஒன்றுக்கு மேற்பட்ட பண்டங்களில் மொத்தமாக வாணிகம் செய்தல். (இந்தச் சிந்தனை எவ்வளவு பரவியுள்ளது என்பது அமெரிக்க வீட்டுக்கடன் குமிழ் உடைந்தபின் தெளிவாகத் தெரிகிறது.) கன்னெயம் முதல் கோதுமை வரை பரந்த அளவில் பண்டங்கள் மீது ஊக வணிகம் நடத்துவதற்கேற்பக் ‘குறியீட்டு நிதிகள்’ உருவாக்கப்பட்டன. ஒரேயொரு பண்டத்தின்மீது பந்தயம் வைப்பதால் அதிகரிக்கும் இடரைப் பல பண்டங்கள் மீது பந்தயம் வைப்பதன்மூலம் பரவலாக்குவதற்கு இவை உதவின. அதனால் அந்த நிதிகளின் ‘கடன் நம்பகத்தன்மை’ உயர்கிறது. அதன் விளைவாகப் பெரு நிதி முதலீட்டாளர்கள் அந்த நிதிகளில் முதலீடு செய்ய ஈர்க்கப்படுகின்றனர்.

சூதாடிகள் இந்த ஊக வணிகப் பங்குகளை அவற்றின் மூலப் பண்டங்களாக எப்போதுமே மாற்றுவதில்லை என்பதில்தான் சூழ்ச்சி அடங்கியுள்ளது. நிதி நிறுவனங்கள் ஒப்பந்தங்களை விற்கின்றன. அந்த ஒப்பந்தங்கள் சுமார் எழுபது நாள்களுக்கு நீடிப்பதாக வைத்துக்கொள்வோம். அவற்றின் கெடு முடிவதற்குள் அவற்றை விற்று அதில் கிடைக்கும் உபரியைக் கொண்டு புதிய ஒப்பந்தங்களில் முதலீடு செய்வது நிதி நிறுவனங்களின் வணிகத் தொழில். இப்படியாக இது வெளியில் இருந்து ஆற்றல் தேவைப்படாமல் என்றென்றைக்கும் தொடர்ந்து இயங்கும் இயந்திரம் போலச் செயல்படுகிறது. ஊக வணிக முதலீட்டாளர்கள் நேரடியாகப் பண்டங்களின் சந்தை மதிப்புடன் எந்தவிதத் தொடர்பும் அற்றவர்களாகின்றனர்.

இவ்வாறாக, ஊக வணிக முதலீட்டாளர்கள் பண்டங்களுடன் நேரடித் தொடர்பு கொள்ளாதிருப்பதால் பொருள்களின் விலைகள் தாறுமாறாக ஏறுவதற்கு ஊக வணிகத்தைக் குற்றம் சொல்லக்கூடாது என்பது இந்தத் தொழில் செய்வோரின் வாதம். “எங்கள் சூதாட்டத்திற்கும் பொருள்களின் இருப்பு-தேவைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை!” என்கின்றனர்.

நச்சு வளையம்

ஆனால், ‘அவர்களுடைய இந்த வாதம் தவறானது. ஊக வணிகம் பண்டங்களின் விலைகளை பாதிக்கிறது’ என்கிறார் இதை ஆராய்ந்த மேக்சிமோ டொரேரோ என்ற வல்லுநர். அவர் அனைத்துலக உணவுக்கொள்கை ஆய்வுக் கழகத்தின் சந்தை, வணிகம், மற்றும் நிறுவனத் துறையின் இயக்குநர். மக்காச்சோளம், சோயா, கோதுமை ஆகியவற்றின் சந்தைகளை அவர் மிகக் கவனமாக ஆராய்ந்திருக்கிறார். அவற்றின் விலைகள் வருங்காலத்தில் எப்படி மாறும் என்று ஊக வணிகர்கள் பேரம் செய்கிறார்களோ அதைப் பொருத்து உண்மையாகவே விலைகள் மாறுகின்றன என்பதை அவருடைய ஆராய்ச்சிகள் தெளிவாக எடுத்துக் காட்டின.

மேலும், விலைகள் ஏறுமுகமாக இருக்கையில் பண்டங்களைத் தம் கைவசம் வைத்திருப்பவர்கள் அவற்றை விற்காமல் காக்கின்றனர். அதன் காரணமாக விலைகள் மேலும் உயர்கின்றன.

சீனாவின் சாங்காயில் பன்றி இறைச்சி
சீனாவின் சாங்காயில் பன்றி இறைச்சி

இப்படியாக, முன்னர் ஓரளவு கணிக்கக்கூடியனவாக இருந்த உணவுச் சந்தைகள் இப்போது முற்றிலுமாக ஆட்டங்கண்டுவிட்டன. “தானியம், சமையல் எண்ணெய், கால்நடைகள் ஆகியவற்றின் சந்தைகளில் உலகளவில் எழுந்துள்ள புதிய ஊக வணிக வாய்ப்புகள் ஒரு நச்சு வளையத்தை உருவாக்கிவிட்டன” என்கிறார் ப்ரெடெரிக் காப்மேன். “கோல்ட்மென் சேக்சு எவ்வாறு உணவுப் பற்றாக்குறையைத் தோற்றுவித்தது” என்பது அவர் ஏப்ரல் 2011-இல் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு. அவர் தெளிந்த முடிவாகச் சொல்வது இதுதான்: “உணவுப் பண்டங்களின் விலை ஏற ஏற அவற்றின் ஊக வணிகத்தில் மேன்மேலும் நிதி குவிகிறது. அதன் விளைவாக விலைகள் மேன்மேலும் உயர்கின்றன.”

2003-க்கும் 2008-க்கும் இடைப்பட்ட காலத்தில் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்களுடன் தொடர்புள்ள ஊக வணிகம் 2300 விழுக்காடு (அதாவது, 23 மடங்கு!) அதிகரித்தது. பண்டங்களின் ஊக வணிக ஒப்பந்தங்களில் இரண்டு விழுக்காடு மட்டும் மெய்யாகவே பண்டங்கள் கை மாறுவதற்கு வழிகோலியதாக ஒன்றிய நாடுகளவையின் உணவு மற்றும் வேளாண் கழகம் தெரிவிக்கிறது. அது நடப்பதற்கு முன்னர் மீதமுள்ள (நூற்றுக்குத் தொண்ணூற்று எட்டு) ஒப்பந்தங்கள் குறுகிய காலத்தில் நிறைய ஊதியம் அள்ளும் நோக்கம் உள்ள முதலீட்டாளர்களால் ஒருவருக்கொருவர் கைமாற்றப்பட்டன. அந்த இடைநிலை முதலீட்டாளர்களுக்கு ஒப்பந்தங்களில் உள்ள பண்டங்களைப் பற்றித் துளிக்கூட அக்கறை இல்லை.

ஊக வணிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயரும்

அமெரிக்காவைச் சேர்ந்த கோல்ட்மென் சேக்சு உள்ளிட்ட நிறுவனங்களும் தனிப்பட்ட மூலதனக்காரர்களும் இந்தச் சூதாட்டத்தில் விளையாடுகின்றனர். 2009-ஆம் ஆண்டு கோல்ட்மென் சேக்சு எனும் அந்த முதலீட்டு வைப்பகம் பண்டங்களின் ஊக வணிகத்தில் மட்டும் ஐநூறு கோடி டாலர்கள் (அப்போதைய மதிப்பில் சுமார் 21,000 கோடி ரூபாய்கள்) சம்பாதித்தது. அந்நிறுவனத்தின் மொத்தச் சம்பாதனையில் இது மூன்றில் ஒரு பங்கு.

உணவுத் துறையில் நிலவும் கடும் சிக்கல் குறித்து 2008-இல் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவைக் குழு ஒன்று விசாரணை நடத்திற்று. மைக்கேல் மாசுட்டர்சு என்னும் ஊக வணிக நிதி மேலாளர் அக்குழுவின் முன் பின்வருமாறு வாக்குமூலம் அளித்தார்: “பண்டங்களின் ஊக வணிகச் சந்தையில் புது வகையான சூதாடிகள் நுழைந்ததால் அவற்றின் தேவை வெகுவேகமாக உயர்ந்தது. அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியை நாம் இப்போது காண்கிறோம்.”

இந்தச் சந்தையை அரசுகள் ஒழுங்குபடுத்தவேண்டும் என்கிறார் பொருளாதார வல்லுநர் ப்லாசுபெக். இல்லையேல் ஊக வணிகச் சூதாடிகளின் எண்ணிக்கையும் பசி பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கையும் உயரும்; அதன் விளைவுகள் மிக மோசமானவையாக இருக்கும் என்கிறார் அவர்.

உலகளவில் உணவுப் பண்டங்களின் விலைகள் பத்து விழுக்காடு உயர்ந்தால் மேலும் ஒரு கோடிப் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் தள்ளப்படுவதாக உலக வைப்பகம் கூறுகிறது. அனைவருக்கும் போதுமான உணவு உலகில் உள்ளது. ஆனால், அதை வாங்குவதற்குப் போதுமான பணம் இல்லாததால் நிறையப்பேர் பசியால் சாகின்றனர்.

“பண்டச் சந்தைகள் சரியாக இயங்கவேண்டுமானால் உடனடியாக உலகளவில் அரசியல் செயல்பாடுகள் தேவை” என்று ஒன்றிய நாடுகளவையின் வாணிபம் மற்றும் மேம்பாட்டுக் கருத்தரங்கம் நடத்திய ஆய்வில் தெரியவருகிறது. அது மேலும் பின்வருமாறு தெரிவிக்கிறது: ‘சந்தைகளின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்கவேண்டும். சூதாடிகளின் செயல்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.’

அந்த ஆய்வில் ஈடுபட்ட வல்லுநர்கள் கீழ்க்கண்ட ஆலோசனைகளையும் முன்வைத்தனர்: விலைகள் திடீரென உயரும்போது அதைக் குறைப்பதற்கென அரசுகள் தனி நிதியை இருப்பில் வைத்திருக்கவேண்டும். நிதிச் சந்தைச் செயல்பாடுகளின் வேகத்தை மட்டுப்படுத்தி ஊக வணிகத்தைக் குறைப்பதற்காக அத்தகைய வர்த்தகத்தில் சம்பாதிக்கும் பணத்தின்மீது ‘பரிமாற்ற வரி’ விதிக்கவேண்டும்.

சுவடின்றிச் செத்து மடிதல்

ஆப்பிரிக்காவில் பஞ்சத்தாலும் போராலும் பாதிக்கப்பட்ட அகதிகளின் வரிசை
ஆப்பிரிக்காவில் பஞ்சத்தாலும் போராலும் பாதிக்கப்பட்ட அகதிகளின் வரிசை

அத்தகைய ஆலோசனைகளை அந்தச் சமயத்தில் அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்வார்கள்போலத் தெரிந்தது. வட ஆப்ரிக்காவில் உணவு விலையேற்றத்தை எதிர்த்து வெடித்த கிளர்ச்சிகளைக் கண்டு பணக்காரர்கள் அஞ்சினர். “பசிப் போராட்டங்கள்” பரவும் என்ற பேச்சு பரவலாக அடிபட்டது. ஆனால் அதுவும் கற்பனையாகிவிட்டது.

“கன்னெயப் போராட்டங்கள் என்றும் அவற்றைக் குறிப்பிடலாம்” என்கிறார் பெட்டீனா எங்கெல்சு. அவர் செருமனி நாட்டு பெர்லின் நகரில் உள்ள அரசியல் ஆய்வுக் கழகம் ஒன்றில் அமைதி மற்றும் போர்கள் குறித்து ஆராய்ச்சி செய்கிறார். “ஆளுமையில் மக்கள் பங்கு பெறுதல், செல்வத்தை அனைவருக்கும் மறுபங்கீடு செய்தல்” ஆகியனதாம் இந்தப் போராட்டங்களில் நடுநாயகமாகனவை என்கிறார். ட்யூனிசு, கைரோ, ட்ரிப்போலி உள்ளிட்ட பல நகரங்களில் தெருவில் இறங்கிப் போராடியவர்கள் நடுத்தர மக்கள்தாம், வறியவர்கள் அல்லர் என்பது அவருடைய வாதத்திற்கு வலுச் சேர்க்கிறது.

“பசியால் வாடுபவர்களுக்குப் போராடுவதற்கு நேரமில்லை” என்கிறார் ரால்ப் சூதாப். இவர் ஒன்றிய நாடுகளவையின் உலக உணவுத் திட்டத்தின் பெர்லின் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். பசியால் வாடுபவர்களில் பெரும்பாலானோர் சிறு குறு உழவர்கள். அவர்கள் செத்து மடிவது வெளியுலகுக்குத் தெரியவருவதில்லை.

இருப்பினும், உணவுப் பண்டங்களின் விலை உயர்வு எனும் சிக்கல் அரசியல் செயல்நிரலில் மேல்நிலைக்கு வந்துள்ளது. தங்குதடையில்லா வர்த்தகத்தை முன்னிறுத்தும் செருமன் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் கூட உணவுப் பண்டங்களில் இப்போது நிகழும் “பொறுப்பற்ற சூதாட்டத்தைக்” கண்டித்துள்ளார். “ஐயத்துக்கு இடந்தரும் நிதித்துறைச் செயல்பாடுகளால் உணவுப் பண்டங்களின் விலைகள் மிக வேகமாக உயர்ந்துவிட்டன. அதனால் 2006-2009 ஆண்டுகளில் பல கோடி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பசியால் தவிக்கின்றனர்” என்று மே மாதம் செருமன் வெளியுறவுத் துறை நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறினார்.

சந்தையைக் கட்டுக்குள் கொண்டுவருதல்

“சந்தை என்றாலே அது ஒழுங்குபடுத்தப்படவேண்டும். அது சந்தையின் இயல்பு.” அப்படியில்லையேல் அது திக்குத் தெரியாத அடர்ந்த காடு போலாகிவிடும் என்றார் அப்போதைய பிரெஞ்சு அதிபர் நிக்கொலசு சார்க்கோசி. தொழில் துறையில் உலகில் முன்னணியில் உள்ள எட்டு நாடுகளைக் கொண்ட G8 அமைப்பு, உலகளவில் தொழில் துறையில் முன்னணியில் உள்ளவையும் முன்னுக்கு வந்துகொண்டிருப்பவையுமான இருபது நாடுகளைக் கொண்ட G20 அமைப்பு ஆகிய இரண்டுக்கும் சேர்ந்தாற்போல 2011-இல் அவர் தலைவராக இருந்தார். ஊக வணிகம் காரணமாக உணவுப் பண்டங்களின் விலைகள் கட்டுக்கடங்காமல் ஏறுவதைக் குறி வைத்துள்ளார்.

G20 வேளாண் அமைச்சர்களின் மாநாடு 2011 சூன் 22-23 தேதிகளில் பாரிசில் நடந்தது. அப்போது மேற்கண்ட சிக்கல் மீது முதன்மையான கவனம் செலுத்தப்பட்டது. வேளாண் பொருள்களின் சந்தைகள் மீது கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படவேண்டும் என்று சார்க்கோசி அம்மாநாட்டில் வாதிட்டார். “ஒழுங்குபடுத்தப்படாத சந்தை சந்தையே அல்ல. மாறாக, அது நன்மையில் நம்பிக்கையற்ற ஒரு சிலருக்குப் பணத்தை அள்ளித் தரும் சூதாட்டம் தான்” என்றார்.

ஆனால், உலகளாவிய வேளாண் சந்தைத் தகவல் முறை ஒன்றினை அறிமுகப்படுத்தவேண்டும் என ஒப்புக்கொண்ட அந்த அரசியல்வாதிகள் இந்தச் சிக்கல் குறித்து மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. அரசுகள் அந்தத் தகவல் முறையைப் பயன்படுத்தி உணவுப் பண்டங்களின் விலைகளைக் குறித்த தகவல்களைப் பரிமாறிக்கொள்ளமுடியும். அப்படிச் செய்வதன் மூலம் வருங்காலத்தில் கோதுமை, மக்காச்சோளம், அரிசி, சோயாமொச்சை ஆகியவற்றின் விலைகள் ஏறுகையில் அரசுகள் உடனுக்குடன் தலையிடமுடியும் என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பு.

இருப்பினும், உணவுப் பண்டங்கள் தொடர்பான நிதி கைமாறுதல்களை ஒழுங்குபடுத்துவதற்கெனப் பருண்மையான சட்டங்கள் எவையும் பிறப்பிக்கப்படவில்லை. அப்படிச் செய்வதற்கு வலுத்த எதிர்ப்பு உள்ளது. குறிப்பாக, அமெரிக்காவும் பிரிட்டனும் அதைக் கடுமையாக எதிர்க்கின்றன. தம் நாடுகளில் உள்ள நிதிச் சந்தைகள் அத்தகைய சட்டங்களால் பெருமளவு பாதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசுகள் கவலைப்படுகின்றன.

வர்த்தகத்தை வெளிப்படையானதாக மாற்றுதல்

பண்ட வர்த்தகத்தில் ஒளிவுமறைவுகளை அகற்றவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கருதுகிறது. மேலும், ஊக வணிகத்தில் ஒவ்வொரு பண்டத்துக்கும் உயர்ந்த அளவு விலையை நிர்ணயம் செய்வது குறித்தும் அந்நாடுகள் சிந்தித்துவருகின்றன. ஐரோப்பாவைப் போலன்றி, அமெரிக்க பங்குச் சந்தைகளில் பல பொருள்களுக்கு ஏற்கெனவே அத்தகைய வரையறைகள் உள்ளன. அவற்றை பால், பருத்தி, காபி, கோக்கோ போன்ற உணவுப் பண்டங்களுக்கும் விரிவாக்குவது குறித்து அமெரிக்க அரசு சிந்தித்துவருகிறது.

ஆனால், அப்படிப்பட்ட வரையறைகளைச் செயல்படுத்துவது கடினமாகத்தான் இருக்கப்போகிறது. ஏனெனில், உலகளாவிய பங்குச் சந்தைச் சூதாட்டத்தில் மிகச் சிறு அளவுதான் சட்டப்படியான சந்தைகளில் நடைபெறுகிறது. சட்டங்கள் கடுமையாகும்போது வைப்பகங்கள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் தம் ஊக வணிகத்தை அரசுக் கட்டுப்பாட்டுக்கப்பால் தமக்குள் வைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இத்தகைய ஆபத்தான, கட்டுக்கடங்காத வளர்ச்சியை உள்ளடக்கிய வணிகத்தை அரசுகள் மிகக் கவனத்துடன் ஒழுங்குபடுத்தவேண்டும் என்பது தெளிவு. அமெரிக்காவிலுங்கூட அத்தகைய திட்டங்களை அரசு உருவாக்கிவருகிறது. ஆனால், அத்தகைய சட்ட முன்வரைவுகள் சட்டமாகாமல் தடுப்பதில் நிதி நிறுவனங்களின் கையாள்கள் தொடர்ந்து வெற்றிபெற்றுவருகின்றனர்.

மக்களுக்கு உணவு தருவது குறித்துச் செயல்பட அரசியல்வாதிகள் தயங்குகின்றனர். அதே சமயம் பங்குச் சந்தை வணிகர்கள் ‘புகுந்து விளையாடுவதற்கு’ ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

வாய்ப்புகளைத் தேடி …

வேளாண்மையில் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான கருத்தரங்கு கடந்த மே மாதம் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடந்தபோது நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர். வைப்பகர்கள், தரகர்கள், உற்பத்தியாளர்கள், வணிகர்கள், பெருநிதி நிறுவன மேலாளர்கள், பெரிய முதலீட்டாளர்கள் ஆகியோருடன் சில அமெரிக்கப் பல்கலைக் கழகங்களின் முதலீட்டு அதிகாரிகளும் ஒரு அமெரிக்க நகரின் காவல் மற்றும் தீயணைப்புத் துறை ஓய்வூதிய நிதி மேலாளர்களும் அங்கு திரண்டனர்.

உணவுப் பண்டங்களின் விலை உயர்வைக் கொண்டு தம் ஊதியத்தைப் பெருக்கிக்கொள்வது எப்படி என்று தெரிந்துகொள்ள அவர்கள் அனைவரும் விரும்பினர். அமெரிக்க விளைநிலங்களில் முதலீடு செய்வது நல்லதா, இல்லை ப்ரெசீல் நாட்டு விளைநிலங்களில் முதலீடு செய்வது சிறந்ததா? உயிரெரிபொருள்களை விளைவிப்பதற்கு உகந்த நிலம் எங்கு மலிவு விலையில் கிடைக்கும்? ஆப்ரிக்காவிலா அல்லது தென் அமெரிக்காவிலா? அத்தகைய பகுதிகளில் முதலீடு செய்த பிறகு ஏதாவது சிக்கல் [அரசியல் கலவரம் உள்ளிட்டவை] நேர்ந்தால் அங்கிருந்து எவ்வளவு விரைவில் முதலீட்டைப் பாதுகாப்பாக வெளிக்கொணரமுடியும்? [இவைபோன்ற வினாக்களுக்கான விடைகளைத் தெரிந்துகொள்ள அவர்கள் விரும்பினர்.]

தம் முதலீடுகள் அவை இயங்கும் நாடுகளில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து நிதி முதலீட்டாளர்களுக்குத் துளிக்கூட அக்கறை இல்லை. அம்முதலீடுகளால் குமுகங்களும் சூழலும் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை.

வேளாண்மையில் [குமுகப்] பொறுப்புடன் முதலீடு செய்வதை முன்னிலைப்படுத்தும் கூட்டத்திற்கும் மேற்கண்ட கருத்தரங்கில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்கள் அந்தக் கூட்டம் கருத்தரங்கின் இறுதிக் கட்டத்தில் நிகழுமாறு கவனமாக நிகழ்ச்சி நிரலை உருவாக்கியிருந்தனர். அதற்கான நேரம் வருவதற்குள் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்தோரில் பெரும்பாலானோர் தத்தம் ஊர்களுக்குத் திரும்புவதற்காக வானூர்தி நிலையங்களுக்குப் புறப்பட்டுவிட்டார்கள்.

பிற நாடுகளில் விளை நிலங்களை வாங்குபவர்களை “நிலத் திருடர்கள்” என்று நடுநிலையறிஞர்கள் குறிப்பிடுவர். அவர்கள் [மக்களை அடிமைப்படுத்தும்] “புதுப் பிரபுக்கள்” என்கிறார் ஒன்றிய நாடுகளவையின் உணவு மற்றும் வேளாண் கழகத்தின் முன்னாள் பொது இயக்குநர் சேக் டியூப்.

ஆனால், அவ்வாறு குற்றஞ்சாட்டப்படுபவர்களுக்கு அவர்கள் தவறு செய்வதாகவே தெரியவில்லை. தம் முதலீடு நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர். வேகமாகப் பெருகிவரும் மக்கள்திரளுக்குத் தேவையான உணவு உற்பத்தி செய்வதற்குத் தாங்கள் உதவுவதாக அவர்கள் வாதாடுகின்றார்கள்.

நிலங்களைத் திருடுதல்

கடந்த நாற்பது ஆண்டுகளில் உலக மக்கள் எண்ணிக்கை ஏறக்குறைய இரண்டு மடங்கு உயர்ந்தது. இப்போது மக்கள் தொகை வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது. இருப்பினும், 2050-ஆம் ஆண்டுக்குள் மக்கள் எண்ணிக்கை முப்பது விழுக்காடு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்படி நிகழ்ந்தால் 2050-ஆம் ஆண்டு வாக்கில் உலகில் தொள்ளாயிரம் கோடி மக்கள் இருப்பார்கள்.

இந்நிலையில் நிலத் திருட்டுகள் அவ்வளவு மோசமானவையாக முதலில் தெரியவில்லை. உலக வைப்பகமும் வளர்ச்சியடையா நாடுகளில் அத்தகைய முதலீடுகளைப் பரிந்துரைத்தது. அந்நாடுகளில் கட்டமைப்பு வசதிகள் பெருகி வேலை வாய்ப்பு அதிகரித்தால் அனைவருக்கும் நல்லது என உலக வைப்பகம் நம்பிற்று [அல்லது, நம்புவதாக நடித்தது!].

ஆனால், முதலீட்டாளர்களின் பேராசையையும் பசி, பட்டினிக்கு எதிரான போரையும் இணைத்தால் அனைவருக்கும் நல்லது என்ற திட்டம் மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.

பிரிட்டானியப் பல்கலை ஒன்றில் நடந்த கருத்தரங்கிலும் உலக வைப்பகத்தின் ஆய்வொன்றிலும் எட்டப்பட்ட முடிவுகள் மேற்கண்ட நிலத் திருட்டின் கொடிய விளைவுகளை அம்பலப்படுத்துகின்றன:

 • ஆதிக்க ஆற்றல்கள் சிறு குறு உழவர்களை ஏமாற்றி அவர்களுடைய நிலங்களைப் பெரு முதலீட்டாளர்களுக்கு விற்றுவிட்டன
 • வேலை வாய்ப்புத் தொடர்பாக மக்கள் ஆசைகாட்டி ஏமாற்றப்பட்டனர்
 • உள்ளூர் மக்களுக்கு வேண்டிய தண்ணீரைத் திருடும்வண்ணம் பாசன முறைகள் கட்டமைக்கப்பட்டன
 • காடழிப்பு (உயிரினங்களின் வாழிடங்கள் அழிக்கப்படுதல்)
 • வேதி உயிர்க் கொல்லிகளால் மாசடைந்த ஓரினப் பயிர்கள்
 • மக்கள் வாழிடங்களில் இருந்து கட்டாயத்தின்பேரில் அப்புறப்படுத்தப்படுதல்.

2011 வரையான சில ஆண்டுகளில் உலக அளவில் சுமார் எட்டுக் கோடி எக்ட்டேர் நிலம் (20 கோடி ஏக்கர்கள்) வெளிநாட்டு முதலீட்டாளர்களுடைய கைககளுக்கு மாறிவிட்டதாக உலக வைப்பகம் தெரிவிக்கிறது.

‘மக்களுக்குப் போதிய உணவு தருதல் அரசின் பொறுப்பு’

speculation-graph
ஊக வணிகர்களின் திருவிளையாடல் – மக்காச்சோள உற்பத்தியும் ஊக வணிகமும்

இந்தச் சிக்கல்கள் எத்தியோப்பிய நாட்டில் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றன. பசி, பட்டினி என்றாலே பலருடைய நினைவுக்கு வருவது எத்தியோப்பியா தான். ஐம்பத்தேழு லட்சம் எத்தியோப்பியர்கள் தம் உணவுக்குப் பன்னாட்டு உதவியை நம்பி வாழ்கின்றனர். அந்நிலையில் எத்தியோப்பிய அரசு பெருமளவில் வளமான விளைநிலங்களைப் பிற நாட்டு முதலாளிகளுக்கு விற்றல், குத்தகைக்குத் தருதல் ஆகிய செயல்களில் ஈடுபட்டுள்ளது. அந்த முதலீட்டாளர்கள் அந்நிலங்களின் விளைபொருள்களை எத்தியோப்பியாவில் இருந்து ஏற்றுமதி செய்துவிடுகின்றார்கள்!

2007-ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு நிதியுதவி பெறும் வேளாண் திட்டங்கள் 815-க்கு எத்தியோப்பிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சௌதி நிறுவனங்கள், பன்னாட்டு வேளாண் நிறுவனங்கள், பிரிட்டானிய ஓய்வூதிய முதலீட்டு நிறுவனங்கள் ஆகியன அங்கு முதலீடு செய்துள்ளன.

எத்தியோப்பியாவின் கம்பேலாப் பகுதியில் சுமார் முப்பத்தாறு லட்சம் எக்ட்டேர் (90 லட்சம் ஏக்கர்) நிலம் இவ்வாறு தாரை வார்க்கப்பட உள்ளது. அந்நாட்டு அரசு அமைக்கவுள்ள தேசியப் பூங்காவுக்கு ஒதுக்கவேண்டிய நிலத்தின் பெரும்பகுதியும் இதில் அடங்கும். பிற நாடுகளின் உணவுத் தேவைக்காக இயற்கை எழில் கொஞ்சும் காடுகள் அழிக்கப்பட்டுவருகின்றன. எத்தியோப்பியத் தலைநகரமான அடிசபாபாவிற்கு ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் இசுப்பானிய நாட்டு நிறுவனமொன்று வாரமொன்றுக்கு 180,000 கிலோ காய்கறிகளை உற்பத்தி செய்கிறது. அவை துபாய், கத்தார், பகுரெயின், சௌதி அரேபியா ஆகிய நாடுகளில் உள்ள பன்னாட்டுக் கன்னெய நிறுவனங்கள்,
ஐந்து-விண்மீன் (நட்சத்திர) உணவு விடுதிகள் ஆகியவற்றுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

“பசியால் வாடுபவர்களுக்கு அந்நிய நாட்டுச் சந்தையில் கோதுமை வாங்குவதற்கு அரசுக்குத் தேவைப்படும் அந்நியச் செலாவணியை நாங்கள் ஈட்டித் தருகிறோம்” என்கிறார் அந்த இசுப்பானிய நிறுவனத்தின் மேலாளர். “தமக்காக எதையுமே வாங்கும் திறன் இல்லாதிருக்கும் மக்களுக்கு உணவு வழங்குவது அரசின் பொறுப்பு” என்கிறார் டச்சு (ஆலந்து) நாட்டினரான அந்த மேலாளர்.

தவறானவற்றில் முதலீடு செய்தல்

சிக்கல் என்ன என்பதை அவர் சரியாகத்தான் சுட்டிக்காட்டியுள்ளார்: போதுமான உணவு உள்ளது; ஆனால் அந்த உணவை வாங்குவதற்குப் பலரிடம் பணம் இல்லை. மலிவு விலையில் உணவு உற்பத்தி செய்வது தம் பொறுப்பு என்று முதலீட்டாளர்கள் கருதுவதில்லை. தம்மிடம் ஏற்கெனவே நிறைய உள்ள பணத்தை மேலும் பெருக்குவதுதான் அவர்களுடைய வேலை. விளைபொருள் விற்பனையில் கிடைக்கும் ஊதியமும் விளை நிலங்களின் விலை உயர்வால் கிடைக்கும் உபரியும் இருபத்தைந்து விழுக்காடு இருக்கும் என்று பிரிட்டானிய நிதி நிறுவனமொன்று எதிர்பார்க்கிறது.

சாலை, பாசன வசதிகளைவிட்டுத் தொலைவில் இருக்கும் வெறும் நிலத்தில் இவ்வளவு அதிகமான ஊதியத்தை வழக்கமாக எதிர்பார்க்கவியலாது. நீர் வளமும் போக்குவரத்து வசதிகளும் கொண்ட வளமான நிலங்களைத்தான் வழக்கமாக முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். அந்நிலங்களை ஆற்றல் தேவை மிக்க வேதி வேளாண்மைக்கு உட்படுத்திச் சூழல் மாசுபடுதல், தண்ணீர்ப் பற்றாக்குறை போன்ற சிக்கல்களை மேலும் மோசமாக்குவார்கள்.

ஆக, சத்துப் பற்றாக்குறையால் வாடும் மக்களுக்கு முதலீட்டாளர்களும் ஊக வணிகச் சூதாடிகளும் இழைக்கும் கொடுமை விலைவாசி உயர்வு மட்டுமன்று. “மோசமானவர்கள்தாம் முதலீடு செய்கின்றனர் என்பதல்ல சிக்கல். அவர்கள் தவறான பொருள்கள் மீதும் முதலீடு செய்கின்றனர்” என்கிறார் சுவிசர்லாந்து நாட்டுத் தொழில்நுட்பக் கழக வேளாண் சூழலியலாளர் ஏஞ்செலிகா இல்பெக்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றிய நாடுகளவையின் சார்பில் “மேம்பாட்டுக்கான வேளாண் அறிவு, அறிவியல், தொழில்நுட்பம் குறித்த பன்னாட்டு அளவீடு” என்ற ஆய்வு உலகெங்கும் நடத்தப்பட்டது. ஒன்றிய நாடுகளவையும் உலக வைப்பகமும் நூற்றுக்கணக்கான அறிவியலாளர்களை இதற்காகப் பணியமர்த்தின. வேளாண்மையின் எதிர்காலம், பசி, பட்டினியைப் போக்குவதில் வேளாண்மையின் பங்கு ஆகியவற்றைப் பற்றிய தம் அறிவை அந்தக் குழுவினர் தொகுத்தனர். இல்பெக்கும் அந்த ஆய்வுக் குழுவில் பணியாற்றினார். அவர்களுடைய அறிக்கை 2009-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இப்போது பரவலாகச் செய்யப்படும் வேதிவேளாண்மை எனும் ஆலை சார்ந்த வேளாண் முறையை ஆதாரங்களுடன் மிகக் கடுமையாகச் சாடிற்று அந்த அறிக்கை. சூழலில் நஞ்சு கலந்து மாசுபடுதல், திடீர் திடீரென நிகழும் பருவநிலை மாற்றங்கள், உயிரின அழிவு, தண்ணீர்ப் பற்றாக்குறை, நோய்களும் வறுமையும் அதிகரித்தல் ஆகியவற்றில் வேதி வேளாண்மைக்குப் பெரும்பங்கு உள்ளது என்றும் அந்த ஆய்வு தெரிவித்தது.

மாற்றம் கோருதல்

பருவநிலை மாற்றங்களால் விளையும் இன்னல்களைப் போக்குவதற்கு அந்த ஆய்வாளர்கள் பின்வரும் தீர்வுகளை முன்வைத்தனர்:

 • பெருமளவில் விளைச்சல் அடைதல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட இப்போதைய வேதி வேளாண் முறையைக் கைவிடுதல்
 • ஓரினப் பயிர் சாகுபடியைத் தவிர்த்தல்
 • இப்போது மிகப் பெரும் அளவில் பயன்படுத்தப்படும் உயிர்க் கொல்லிகளை முற்றிலும் ஒதுக்குதல்.

இத்தகைய வேதி வேளாண்மை தண்ணீரை மாசுபடுத்துகிறது. மண்ணை வறளச் செய்கிறது. ஏற்றுமதி சார்ந்த வேளாண்மை வளரும் நாடுகளின் சந்தைகளை ஒழித்துவிடுகிறது.

சூழலுக்கு உகந்த, நிலைத்த, நீடித்த முறைகளைப் பயன்படுத்திச் சிறு குறு உழவர்கள் உள்ளூர்த் தேவைக்கு விளைவிக்கும் வண்ணம் வேளாண் முறைகளை திசை திருப்பவேண்டும் என்று மேற்படி அறிஞர் குழு கூறுகிறது. அந்த உழவர்களுக்குத் தேவையான விதைகள், கட்டமைப்பு வசதிகள், வேளாண் அறிவு, சந்தை ஆகியவற்றைத் தருவதற்குப் போதுமான முதலீடுகள் செய்யப்படவேண்டும் என்கிறது அந்த ஆய்வு. அப்படிச் செய்தால் அந்தச் சிறு உழவர்கள் தாமும் உண்டு பிறருக்குத் தேவையான உணவையும் உற்பத்தி செய்வார்கள். உலக உணவாதாரத்தைக் காத்து, பசிப் பிணியை ஒழிப்பதற்கு இது ஒன்றே வழி என்று அந்த அறிஞர்கள் கருதுகின்றனர்.

ஆனால், இந்தப் பரிந்துரைகளை ஆளும் வர்க்கம் கண்டுகொள்ளவில்லை. நிலைத்த, நீடித்த வேளாண்மையில் முதலீடு செய்வதற்கு இன்றும் அரசுகள் உதவி செய்வதில்லை. “உணவு உற்பத்தியில் ஈடுபட்டுத் தாமும் உண்டு வாழும் எழுநூறு கோடி மக்களின் தேவைகளைவிட நிறுவனங்கள், பணக்காரர்கள் ஆகியோருடைய நலத்தில் தான் அரசுகள் தொடர்ந்து கவனஞ்செலுத்துகின்றன” என்கிறார் ஆக்சுபாம் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் வேளாண் வல்லுநர் மரீட்டா விக்கெர்த்தேல்.

சூழலுக்கு உகந்த, நிலைத்த வகையில் விளைச்சல் எடுத்து அதன் பலனை அனைவருக்கும் போதுமான அளவு வழங்கும் புது உணவு யுகம் இப்போதைக்கு வருவதாகத் தெரியவில்லை. இப்போதுள்ள தீவிர ஆலைமயமான வேளாண் முறையின் பக்க விளைவுகள்தாம் வேளாண்மையைச் சிக்கலில் மாட்டியுள்ளன என்று தெரிந்தும் அரசியல்வாணர்களும் பொருளாதார முறைகளும் அந்த வேளாண் உற்பத்தி முறைக்குத்தான் இன்னமும் முதன்மை தருகின்றனர்.

சிக்கலின் ஒரு கூறு

இந்தத் தீய போக்கில் மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகளே தெரியவில்லை. பண்டங்களின் ஊக வணிகத்தில் பெரிய அளவில் ஈடுபட்டுள்ள நிதி நிறுவனங்கள் வேளாண் பொருள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பெருநிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளன. எ.கா. செருமன் நாட்டு டாய்ச்செ வைப்பகத்தின் DWS உலகளாவிய வேளாண்வணிக நிதியம், அலையான்சு RCM உலகளாவிய வளங்கள் நிதியம் ஆகியன மிகப் பெரும் நிதி நிறுவனங்கள். (“விளைச்சலை அதிகரிக்கும் வாய்ப்புகளை முன்வைத்தல்” என்பது அலையான்சின் விளம்பர மந்திரமாக உள்ளது.) இவை மான்சான்ட்டோ, சின்சென்ட்டா போன்ற விதை நிறுவனங்கள், பொட்டாசு கார்ப்பொரேசன், மொசெயிக் உள்ளிட்ட வேதியுர நிறுவனங்கள், ஏடீஎம், பன்சி போன்ற பன்னாட்டு வேளாண் நிறுவனங்கள், டெசுக்கோ, சேப்வே, டைசன் புட்சு போன்ற உணவுப் பொருள் வழங்கல் நிறுவனங்கள் உள்ளிட்ட மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் நிறைய முதலீடு செய்துள்ளன.

“மேற்படி நிதி நிறுவனங்களில் நீங்கள் செய்யும் முதலீடு உலகளவில் உணவாதாரத்தைக் காக்க உதவுகிறது” என்று உங்களுடைய நிதி ஆலோசகர் சொல்வதை நீங்கள் நம்பினால் ஒன்றைக் குறித்து நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும்:

அத்தகைய முதலீடுகள் சிக்கலை உண்டாக்குகின்றன, தீர்வுகளை அல்ல.

மூலக் கட்டுரை

மொழிபெயர்ப்பாளர் : பரிதி

ஊகவணிகம் – மிக எளிமைப்படுத்தப்பட்ட ஓர் எடுத்துக்காட்டு

சந்தையில் இன்று சோளம் கிலோ பதினெட்டு ரூபாய்க்கு விற்பதாக வைத்துக்கொள்வோம். சோளம் பயிரிட்டிருக்கும் உழவர் ஒருவர் பண்ட வர்த்தக நிறுவனம் ஒன்றுடன் கீழ்க்கண்டவாறு ஒப்பந்தம் செய்துகொள்கிறார்: இற்றைக்கு மூன்று மாதங்கள் கழித்து அவரிடமிருந்து ஐயாயிரம் கிலோ சோளத்தைக் கிலோ இருபது ரூபாய்க்கு அந்நிறுவனம் வாங்கிக்கொள்ளும்.

அந்த மூன்று மாதக் கெடு முடிகையில் சோளத்தின் விலை கிலோ இருபதைவிடக் குறைவாக இருந்தால் ஒப்பந்தம் போட்ட உழவருக்கு நல்லது. அதிகரித்திருந்தால் நிறுவனத்துக்கு நல்லது.

இந்த ஒப்பந்தத்தில் உணவுப் பண்டம், அதை விளைவிப்பவர், அதை வாங்கும் நிறுவனம் ஆகியன நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. இது உலகின் பல பகுதிகளில் சில நூறாண்டுகளாக நடைமுறையில் இருந்துவருகிறது. அண்மைக்காலத்தில் வணிக முறைகள் இதைவிட நுணுக்கமாக மாறியுள்ளன. எப்படி?

மேற்படி ஒப்பந்தத்தையே பங்குச் சந்தையில் விற்கவும் வாங்கவும் முடியும்! உற்று நோக்குங்கள்; விற்பனை செய்யப்படுவது சோளம் அல்ல, அது குறித்து உழவரும் சோளம் வாங்கும் நிறுவனமும் செய்துகொண்ட ஒப்பந்தம் அடுத்த கட்டமாகப் பங்குச் சந்தையில் வணிகப் பொருளாகிறது, அந்த ஒப்பந்தம் இவ்வாறு பல கைகள் மாறலாம். இதுதான் மிக எளிமையான அளவில் பண்டங்களில் ஊக வணிகம்.

இப்படிப்பட்ட ஊக வணிகத்தில் ஈடுபடுவோர் அதன் அடிப்படையாக உள்ள பண்டத்தை வாங்கவோ விற்கவோ வேண்டியதில்லை. அவர்களுக்கும் எந்தவொரு பண்டத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கவேண்டியதில்லை என்றாகிறது!

அ. கட்டுரையில் மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் பகர அடைப்புக் குறிகளுக்குள் “[]” தரப்பட்டுள்ளன.

ஆ. கட்டுரையில் அழுத்தத்திற்காகச் சில வாக்கியங்கள் தடிப்பான எழுத்துகளில் காட்டப்பட்டுள்ளன.. இது மூலக் கட்டுரைகளில் இல்லை.

பிறமொழிச் சொற்கள், சொற்றொடர்கள், அமைப்புகளின் பெயர்கள்

தமிழ் அருஞ்சொற்பொருள்கள் ‘அப்பாத்துரையார் அகராதி’ எனப்படும் ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன (சென்னைப் பல்கலை வெளியீடு).

அமர்த்யா சென் – amartya sen, “poverty and famines”, 1982
அமெரிக்க டாலர் – the US dollar
அரசு கடனீட்டு ஆவணங்கள் – government bonds
அலிமா அபூபக்கர் halima abubakar
அலையான்சு RCM உலகளாவிய வளங்கள் நிதியம் allianz RCM global resources fund
அனைத்துலக உணவுக்கொள்கை ஆய்வுக் கழகம் the international food policy research institute (washington)
ஆக்சுபாம் oxfam
ஆப்ரிக்காவின் கொம்புப் பகுதி the horn of africa
இசுப்பானிய spanish
இந்தோனேசியா indonesia
உணவு மற்றும் வேளாண் கழகம் the food and agricultural organization
உயிரெரிபொருள் biodiesel
ரூபாய் rupee
(ஒன்றிய நாடுகளவையின்) உலக உணவுத் திட்டம் the UN world food program
உலக வைப்பகம் the world bank (உலக வங்கி)
ஊக வணிகம் futures trading
எத்தியோப்பியா ethiopia
எரிட்ரியா eritrea
ஏஞ்செலிகா இல்பெக் angelika hilbeck
ஏடீஎம் ADM
ஏலன் நக்மேன் alan knuckman
ஐரோப்பிய ஒன்றியம் the european union
ஒலீவியர் டீ சூட்டர் olivier de schutter
ஒன்றிய நாடுகள் the united nations (ஐக்கிய நாடுகள்)
கடன் நம்பகத்தன்மை credit rating
கத்தார் qatar
காபி coffee
கிபேரா kibera
கும்பி gumbi
குறியீட்டு நிதிகள் index funds
கெய்னெர் ப்லாசுபெக் heiner flassbeck
கென்யா kenya
கைரோ cairo
கோக்கோ cocoa
கோல்ட்மென் சேக்சு goldman sachs
சிக்காகோ வர்த்தக மன்றம் the chicago board of trade
சின்சென்ட்டா syngenta
சீனா china
சுவிசர்லாந்து switzerland
சூதாடி (பந்தயம் வைப்பவர்) speculator
செருமனி germany
செருமானிய german
சேக் டியூப் jacques diouf
சேப்வே safeway
சே.பி. மார்கன் j p morgan
சோமாலியா somalia
சௌதி (அரேபியா) saudi arabia
ட்யூனிசு tunis
ட்ரிப்போலி tripoli
டச்சு (ஆலந்து) dutch (holland)
டாய்ச்செ வைப்பகத்தின் DWS உலகளாவிய வேளாண்வணிக நிதியம் deutsche bank’s DWS global agribusiness fund
டுனீசியா tunisia
டெசுக்கோ tesco
டைசன் புட்சு tyson foods
துணைப்பிணையம் collateral
துபாய் dubai
நிக்கொலசு சார்க்கோசி nicolas sarkozy
நிதிமயமாக்கப்பட்ட பண்டச் சந்தைகளில் விலைகளை முடிவு செய்வதில் தகவல் பரிமாற்றத்தின் பங்கு price formation in financialized commodiity markets: the role of information
நோபெல் பரிசு the nobel price
ப்ரெசீல் brazil
ப்ரெடெரிக் காப்மேன் frederick kaufman
பகுரெயின் bahrain
பங்குரிமைச் சான்றிதழ் securities
பங்குரிமைச் சான்றிதழ் மற்றும் பரிமாற்ற ஆணையம் the US securities and exchange commission
பண்டங்கள் commodities
பண்டங்கள் ஊக வணிக ஆணையம் the US commodities futures rrading commission
பன்சி bunge
பிரிட்டன் britain
பிரெஞ்சு french
பெட்டீனா எங்கெல்சு bettina engels
பெர்லின் berlin
பேய்ர் இசுடெய்ர்ன்சு bear stearns
பொட்டாசு கார்ப்பொரேசன் potash corporation
மரீட்டா விக்கெர்த்தேல் marita wiggerthale
மலாவி malawi
மார்கன் இசுடேன்லி morgan stanley
மான்சான்ட்டோ monsanto
மெக்சிக்கோ mexico
மேக்சிமோ டொரேரோ maximo torero
மேம்பாட்டுக்கான வேளாண் அறிவு, அறிவியல், தொழில்நுட்பம் குறித்த பன்னாட்டு அளவீடு international assessment of agricultural knowledge, science and technology for development
மைக்கேல் மாசுட்டர்சு michael masters
மொசெயிக் mosaic
யூரோ euro
ரால்ப் சூதாப் ralf sudhoff
லேமென் பிரதர்சு lehman brothers
வர்த்தகம், மேம்பாடு ஆகியன குறித்த ஒன்றிய நாடுகளின் கருத்தரங்கம் the united nations conference on trade and development
வைப்பகம் bank (வங்கி)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க