privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்சென்னைக்கு குடிநீராம், கடலூருக்கு அழிவாம் - வீராணம் ஏரி அரசியல்

சென்னைக்கு குடிநீராம், கடலூருக்கு அழிவாம் – வீராணம் ஏரி அரசியல்

-

டலூர் மாவட்டத்தில் ஏற்பட்டமழை வெள்ள பாதிப்பால் சுமார் 208 கிராமங்கள் பாதிக்கபட்டிருக்கின்றன. இவற்றில் அதிக பாதிப்புக்குள்ளாகியவர்கள் கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி ஆகிய மூன்று தாலுக்காவை சேர்ந்த மக்கள். இந்த தாலுகாக்களில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் பெருகி விவசாய நிலங்கள், பயிர்கள், நெல், கரும்பு, வாழை என அனைத்தும் நாசமானது. கிட்டத்தட்ட 1.70 லட்சம் ஏக்கரில் இந்த மூன்று தாலுக்காவுக்குட்பட்ட விவாசாய நிலங்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.

farm-land-like-lake-2
குளம் போல காட்சியளிக்கும் விளை நிலம்

இந்த கடலூர் மாவட்ட வெள்ள பாதிப்புக்கு மூன்று முக்கிய காரணங்கள் குறிப்பிட்டிருந்தோம். அதில் இரண்டு காரணங்கள் ஏற்கனவே வினவில் வெளிவந்துள்ளன.

மூன்றாவது காரணம் என்னவென்றால் வீராணம் ஏரி தண்ணீர். வீராணத்தின் பாசன பரப்பு என்பது காட்டுமன்னார்குடி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாதோப்பு ஆகிய மூன்று பகுதிகளையும் உள்ளடக்கியது. வீராணம் ஏரி லால்குடியில் தொடங்கி சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி வரை சுமார் பதினைந்து கிலோ மீட்டர் நீளம் வரை 28 மதகுகள் வழியாக பாசனத்திற்கு விடப்படுகிறது. இதன் மூலம் 85,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகிறது என்கிறார் வீராணம் பாசன விவசாயிகள் சங்க தலைவர்.

இந்த வீராணம் ஏறி பதினோராம் நூற்றாண்டில் பிற்கால சோழர்களால் கட்டப்பட்டது. காவிரியில் இருந்து வரக்கூடிய வெள்ளத் தண்ணீர் நேரடியாக தஞ்சை மாவட்டத்தின் வழியாக சென்று கடலில் கலந்து விடுகிறது. அதற்கு பதிலாக தென்னாற்காடு மாவட்ட விவசாயத்திற்கு பாசனம் வேண்டும் என்பதற்காக காவிரியில் இருந்து கொள்ளிடம் வழியாகவும் (காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிடம்), கொள்ளிடத்தில் இருந்து சின்ன செங்கால் ஓடை, பெரிய செங்கால் ஓடைகள் வழியாக இந்த வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருகிறது. மேலும் மேட்டூரிலிருந்தும் வடவாறு வழியாக தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் தான் விவசாயத்திற்கு பயன்படுகிறது.

இவ்வாறு மக்களுக்கு பயன்படக்கூடிய ஏரியை முறையாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த அரசுக்கு இல்லை. கடலூர் veeranam-damமாவட்டத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஏரிகள், குளங்கள் ஆறுகள் என எதுவும் பராமரிக்கப்படவில்லை என்பதை ஏற்கனவே வினவில் வந்த கட்டுரையில் பார்த்திருப்பீர்கள். இந்த அலட்சியம் வீராணம் ஏரிக்கும் பொருந்தும். வீராணம் ஏரியை தூர் வாருவதற்கு ஐம்பது கோடி ஒதுக்கியதாக கூறப்பட்டது. இதனைக் கொண்டு தூர்வாரியிருந்தாலே தற்பொழுது ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தடுத்திருக்கலாம். ஆனால் தூர்வாரப்படவுமில்லை. வீராணம் எரியும் பராமரிக்கப்படவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படவுமில்லை.

காரணம், வீராணம் என்றால் தமிழகத்தில் ஏறக்குறைய எல்லோருக்கும் தெரிந்திருக்கும் சென்னை குடிநீர் திட்டத்திற்கு முதன்மையாக வீராணம் ஏரி பயன்படுகிறது. ஆனால் சென்னைக்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர் யாருக்கு தேவைப்படுகிறது, வீராணத்தில் இருந்து ஏன் தண்ணீர் கொண்டு போகிறார்கள் என்பதற்கு முன்னால் வேறு சில காரணிகளை பார்த்து விடுவோம்.

குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் 2004-ல் சுனாமி ஏற்பட்டது. அப்பொழுது ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலலையில் சிக்கி இறந்து போனார்கள். அதற்கடுத்து 2005-ல் இது போன்ற ஒரு பாதிப்பு ஏற்பட்டது. அடுத்தது 2010-ல் ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளப்பெருக்கில் வாலாஜா ஏரி உடைந்து வடலூருக்கு அருகில் உள்ள மருவாய் என்ற ஊரிலிருந்து குறிஞ்சிப்பாடி தாலுகா வரை மூழ்கிப்போனது. அதற்கடுத்தது 2011-ம் ஆண்டு தானே புயல் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தற்பொழுது இந்த கனமழை பெருவெள்ளம். இவ்வாறு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை கடலூர் மாவட்டம் மிகப்பெரிய இடர்பாடுகளுக்குள் சிக்கிக்கொள்கிறது. ஆக இதுபோன்ற இடர்பாடுகளுக்கு வடிகால்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்பது அவசியமானவை தான். ஆனால் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவுகள் என்று பார்த்தால் இந்த வீராணம் குடிநீர் திட்டம் ஒரு முக்கியமான காரணம்.

veeranam-2வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி உயரமாகும். இந்த ஏரியின் அடியில் மணலும், வண்டல் மண்ணும் அதிக அளவில் படிந்துள்ளதால் தான் தண்ணீரை தேக்கி வைக்கி முடியவில்லை. இருப்பினும் தேக்கி வைக்கக்கூடிய தண்ணீரை தான் சென்னைக்கு குடிநீர் திட்டத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.

இந்த திட்டம் 1973-ல் கருணாநிதி ஆட்சி காலத்திலேயே முன்வைக்கப்பட்டது. இருப்பினும் இவ்வளவு தொலைவு தண்ணீரை கொண்டு செல்ல முடியாது என்பதாலும் அதற்காக ஒதுக்கிய நிதியை எடுத்து வள்ளுவர் கோட்டம் திட்டத்திற்கு பயன்படுத்தியதாலும் குறிப்பாக தி.மு.க-வில் நடந்த ஊழல் காரணமாகவும் இந்த திட்டம் அப்பொழுது தோல்வி அடைந்தது.

அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா 2004-ல் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தினார். அதன் மூலம் சென்னைக்கு தினமும் வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக மூன்று பம்ப் ஹவுஸ்கள் பூதங்குடி, பண்ருட்டி அருகே வடக்குத்து, மற்றும் காடாம்புலியூர் ஆகிய இடங்களில் அமைக்கபட்டுள்ளது. இதில் காடாம்புலியூரில் மிகப்பெரிய தொட்டி அமைத்து “கிராவிட்டி போர்ஸ் “ என்று சொல்லக்கூடிய புவி ஈர்ப்பு அழுத்தம் மூலம் போரூர் வரை சுமார் 206 கிலோ மீட்டர் தூரம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து தான் சென்னையின் எல்லா பகுதிகளுக்கும் தண்ணீர் அனுப்பப்படுகிறது.

பொதுவாக வீராணம் குடிநீர் திட்டம் என்பது சென்னையிலுள்ள எல்லா மக்களுக்கும் செல்கிறது என்று சொல்லப்படுகிறது. அது உண்மை இல்லை. சென்னையில் உள்ள சாதாரண மக்களுக்கு இந்த தண்ணீரால் எந்த பயனும் இல்லை.

சென்னை இரண்டு விதமாக உள்ளது.

1. சென்னையை இயங்க வைக்கும் தொழிலாளிகள், சென்னையை பராமரிக்கம் தொழிலாளிகள்… இவர்களெல்லாம் உழைப்பாளி மக்கள்.

2. சென்னை நகரத்தில் இந்த வாய்ப்பு வசதிகளை எல்லாம் அனுபவிக்ககூடிய மேட்டுக்குடிகள் ஒரு பக்கம். இந்த மேட்டுக்குடிகள், இவர்களின் பிள்ளைகள் படிக்க கூடிய பள்ளிகள், ஷாப்பிங் மால்கள், ஐந்து நட்சத்திர விடுதிகள், சினிமா ஸ்டுடியோக்கள், மற்றும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ராமச்சந்திரா, மலர்,அப்போல்லோ போன்ற பெரிய மருத்துவமனைகள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் என்று பன்னாட்டு நிறுவனகளுக்கு வழங்கப்பட்டு வரும் தடையற்ற மின்சாரம் போல் தடையற்ற நீர் வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கு தான் பிரதானமாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மேட்டுக்குடிகளின் வசதிகளுக்காகதான் சென்னை குடிநீர் என்பது வீராணத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது.

இதற்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் மழைக்காலமாக இருந்தாலும், வெயில் காலமாக இருந்தாலும் வீராணம் தண்ணீரை முதலில் கொண்டு செல்கிறார்கள். அதாவது மன்னர்கள் காலத்தில் விவசாயத்திற்கு பயன்பட வேண்டும் என்று கொண்டு வந்த திட்டத்தை கைவிட்டு விட்டு சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் என்று ஏரியில் அதிக அளவு தண்ணீரை தேக்கி வைத்தனர்.

மேலும் வறட்சியான காலங்களில் மதகுகளில் யாரும் தண்ணீர் திறந்து விடக்கூடாது என்பதற்காக தான் மதகுகளை சுற்றி இரும்பு veeranam-report-2கம்பி வேலி அமைத்துள்ளனர்.

தற்பொழுது பெய்த மழைக்கு முன்னாடி வீராணம் பாசனபரப்பு விவசாயிகள் பல முறை கோரிக்கை வைத்தும், கண்ணீர் விட்டு கதறி அழுதும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்து விடாததால், கடைசியாக விவசாயிகள் போராடிய போது ஜெயா அரசு கொடுத்த பரிசு விவசாயிகள் மீதான தாக்குதலும் தடியடியும் தான்.

வீராணம் விவசாயிகள் பாசன சங்கம், கொள்ளிடம் கீழணை விவசாயிகள் பாசன சங்கம் இவர்கள் போராடும் பொழுது அந்த விவசாயிகள் பிரச்சனை என்ன, நாட்டிற்க்கே சோறு போடக்கூடிய விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களே என்று சற்றும் சிந்திக்கவில்லை. என்ன தான் நாம் பணம் கட்டு கட்டாக சம்பாதித்தாலும் கரன்சி கட்டையா தின்ன முடியும் என்கிற புத்தியோ, அறிவோ கொஞ்சம் கூட இல்லாதது இந்த அதிகார வர்க்கம். எத்தனையாயிரம் விலை கொடுத்தாவது வாங்கி தின்னும் நிலைமை அவர்களுக்கு இருக்கிறது. சாதாரண மக்களுக்கு அரிசி வாங்கி சாப்பிட முடியாத நிலைமை தான் இருக்கிறது.

இதை எல்லாம் புரிந்து கொள்ளாத இந்த அதிகார வர்க்கம், அதன் திமிரில் வீராணம் பாசன பரப்பு விவசாயிகளின் வயிற்றில் அடித்து வீராணம் தண்ணீரைக் கொண்டு செல்கிறார்கள்.

விவசாயிகள் கேட்டபொழுது தண்ணீர் திறந்து விட்டிருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது. நிலைமை சீராக இருந்திருக்கும். ஏற்கனவே கணிசமான அளவு தண்ணீர் தேக்கி வைத்திருந்தார்கள். தற்பொழுது தண்ணீர் வந்த பொழுது தேக்கி வைக்க இடமில்லாமல் அதை திறந்து விட்டதன் விளைவு தான் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கும், வெள்ளாறு, பரவனாறு, வெள்ளியங்கால் ஓடை இவைகள் எல்லாம் நிரம்பி வழிந்து நூற்றுக்கணக்கான கிராமங்கள் தண்ணீரில் மூழகியதற்கும் காரணம். இது அதிகார வர்க்கத்தால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவே.

மழைக்கு முன்னர் சென்னைக்கு தண்ணீர் வேண்டுமென திறக்க மறுத்து விவசாயிகளை ஒடுக்கினார்கள். மழை வந்த பிறகு ஏரி தாங்காது என்று திறந்து விட்டு விவசாய நிலங்களை மூழ்கடித்தார்கள். இந்த அயோக்கியத்தனத்தை என்னவென்பது?

சென்னையை பொறுத்த வரை இந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் வரக்கூடிய செய்தி என்னவென்றால் செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதற்கு அனுமதி கேட்டு கொடுக்கவே இல்லை. கடைசி நேரத்தில் திறந்து விட்டதன் விளைவாக அடையாறு ஆற்றில் வெள்ளத் தண்ணீர் சென்றதால் தான் இந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டது என்று கூறுகிறார்கள்.

veeranam-report-3இந்தத் தண்ணீரை அடையாறு தாங்குமா? இதற்கு குற்றவாளி யார்? நாம் ஏற்கனவே கூறுயது போல இந்த அரசு தான் குற்றவாளி. கண்ணுக்கெதிரே தெரிகிறது பொதுப்பணி துறை, நீர்பாசனத்துறை, வேளாண்துறை ஆகியவை தான் மக்கள் மீது அக்கறை இல்லாமல் அதற்குரிய வேலையை செய்யாமல் செயலிழந்து போய் விட்டது. மட்டுமல்லாமல் மக்களுக்கு எதிராக போய்விட்டது.

அதனால் தான் எந்த வித அறிவிப்புமின்றி தண்ணீரை திடீர் என்று திறந்து விட்டார்கள். இவ்வாறு தான் சென்னையிலும், கடலூரில் இவ்வளவு பெரிய பாதிப்புகள் ஏற்பட்டதற்கான அதிமுக்கிய காரணம்.

இந்த வீராணம் என்பது தென்னாற்காடு மாவட்டத்தினுடைய நீர் ஆதாரம். தென்னாற்காடு மாவட்டத்தின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் ஒரு காலத்தில் ஆர்டிசீயம் ஊற்றுகள் இருந்தன. அதாவது பத்தடி, இருபது அடி தோண்டினாலே தண்ணீர தானாக சுரக்கும். இது தென்னாற்காடு மாவட்டத்தில் அதிகமாக இருந்தது. தற்பொழுது இது முழுக்க அழிந்து விட்டது. அதற்கு காரணம் நெய்வேலி சுரங்கம் என்கிற பெயரில் நூறு அடிக்கு மேல் மண்ணை வெட்டி எடுப்பதனால் நீர்கள் அனைத்தும் அதை நோக்கி சென்று விட்டது. ஆக விவசாயத்திற்கு பயன்பட்ட நீர்நிலைகள், ஊற்றுக்கள் , ஆறு,குளங்கள், வீராணம் ஏரி இவை அனைத்தையும் நாசமாக்கி விட்டு எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல், நிவாரண பணியும் மேற்கொள்ளாமல் போராடக்கூடிய மக்கள் மீது தடியடி நடத்துகிறது ஜெயா அரசு.

விவசாயத்திற்கு தண்ணீர் வேண்டும் என்று போராடியபோதும் தடியடிக்கு ஆட்பட்டார்கள், தற்பொழுது வெள்ள பாதிப்பினால் நிவாரணம் கொடு என்று கேட்ட போதும் தடியடியால் பாதிக்கப்பட்டார்கள் வீராணம் பாசன பரப்பு வாழ் மக்கள். ஊனமுற்ற ஒரு இளைஞர் நிரந்தரமாக ஊனமாகி கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு அதிகமாக மழை பெய்தது என்பதை நாம் மறுக்க முடியாது. இயற்கையை எதிர்த்து போராடுவது தான் அதாவது இயற்கையை புரிந்து கொண்டு அதன் மீது நேர்மறையான ஆளுமை செலுத்துவதுதான் மனித குலத்தின் வேலை. மனித சமூக வளர்ச்சி என்பது இயற்கையை புரிந்து கொண்டுதான் இந்த அளவு முன்னேற்றத்திற்க்கு வந்திருக்கிறோம்.

ஆனால் இயற்கையை சீரழித்து கொண்டிருக்கின்ற நாசமாக்குகின்ற முதலாளித்துவவாதிகளும், முதலாளித்துவ ஊடகங்களும், முதலாளித்துவத்தை பாதுகாக்க கூடிய அனைத்து நபர்களும் இயற்கை பேரிடர்களை குறை கூறுகிறார்கள். அதற்கு தீர்வாக இயற்கையை அழிப்பவர்களிடமே சென்று முறையிடுவது என்பது ஒருகாலும் நடக்காது.

இயற்கையை குறை சொல்ல முடியாது. இயற்கையை சீரழித்த சீர்குலைவு சக்திகள் தான் மக்களுக்கு எதிரான சக்திகள்.  இதனை வீழ்த்தி விட்டு மக்களுக்கான ஒரு அரசியலை முன் வைக்க வேண்டும். மக்களே அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும். நமது ஆறுகள், ஏரிகள், குளங்கள் நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மிகப்பெரிய செல்வங்களாக இருந்த இவை அனைத்தும் சில நூற்றாண்டுகளிலேயே அழிக்கப்பட்டு விட்டது. இதனை நாம் பாதுகாக்காவிட்டால் பிற்காலத்தில் வரக்கூடிய தலைமுறைகளுக்கு நாம் செய்ய கூடிய மிகப்பெரிய துரோகம்.

இன்னொரு பக்கம் நாம் புரிந்து கொள்ள வேண்டியது இந்த இயற்கை மழை பொழிவதற்கு பருவகால மாற்றங்கள் தான் காரணம் veeranam-report-alaiyaathiஎன்று மாநாடு போட்டு கண்டு பிடிக்கிறார்கள். இந்த பருவ கால மாற்றம் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் தோன்றும். ஆனால் முதாளித்துவம் வந்த பிறகு முன்னூறு ஆண்டுகளில் பாருவ காலம் மாறியுள்ளது என்பது தான் உண்மை. ஆனால் யார் இந்த இயற்கையை சீரழித்தார்களோ அவர்களே மாநாட்டு போட்டு பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் தான் தவறு செய்து விட்டார்கள் என்று பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர்கள், கரியமில வாயு வெளியிடாதீர்கள் என்று கூறுகிறார்கள்.

இதை எல்லாம் வெளியேற்றக்கூடிய மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்யக்கூடிய நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், ஏசி, பிரிட்ஜ் இவையெல்லாம் தான் மனித குளத்தை சீரழிக்க கூடிய பசுமை குடில் வாயுக்களை வெளியேற்றுகிறது.

சென்னை, கடலூர் மாவட்டத்திற்கு வந்த பேரழிவு என்பது இயற்கை நம்மை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையே எச்சரிக்கிறது என்பதே உண்மை.

எனவே சென்னை மற்றும் கடலூர் மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஒருங்கிணைந்த முறையில் இந்த கண்ணோட்டத்தில் நாம் ஆழமாக பரிசிலித்து மக்களே அதிகாரத்தை கையில் எடுத்து நமது நீர்நிலைகளை பாதுகாக்க, நிரந்தரமான தீர்வு காண நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் இது.

– வினவு செய்தியாளர், கடலூர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க