தருமபுரி
அர்ச்சகர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னொரு பார்ப்பன தந்திரமே என்ற முழக்கத்தின் கீழ் தருமபுரி பெரியார் சிலை முன்பு புரட்சிகர அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
தருமபுரி பகுதியில் உள்ள வி.வி,மு, பு.மா.இ.மு, மக்கள் அதிகாரம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியார் சிலை அருகே 17-12-2015 அன்று ஒன்றுதிரண்ட தோழர்கள், நீதிமன்றத்தின் பார்ப்பன தந்திரத்தை அம்பலப்படுத்தியும் தமிழக அரசிடம், அர்ச்சகர் மாணவர்களை உடனடியாக பணியில் அமர்த்த கோரியும், இந்து ஒற்றுமை நாடகமாடும் இந்து மத வெறி அமைப்புகளை அம்பலப்படுத்தியும், பார்ப்பன கும்பலின் சாதி தீண்டாமையை அம்பலப்படுத்தியும் முழக்கமிட்டனர்.
15 நிமிடம் முழக்கமிட்டதும் எஸ்ஐ, இன்சுபெக்டர் உள்ளிட்ட போலிசு 10 பேர் வந்து தடுத்தனர்.
“அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள்; அனுமதி கேட்டால் கொடுத்திருக்க மாட்டோமா” என்று காவல் உதவி ஆய்வாளர் கேட்டார்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் ஜானகிராமன் “நீங்கள் ஜனநாயக உரிமைகளை மதிக்கிறதில்ல; அனுமதிகொடுப்பதாக கூறி அலைக்கழிப்பது. அனுமதி கொடுப்பதாக கூறிவிட்டு இறுதியில் ஒலிப்பெருக்கி வைக்க அனுமதியில்லை என்பது; அதுவும் மக்களே இல்லாத மூத்திர சந்திலதான் அனுமதி கொடுக்கிறீங்க . இதனாலதான் இப்படி ஆர்ப்பாட்டம் செய்யுறோம்” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இவ்வாறு போலீசிடம் தோழர்கள் ஒரு சிலர் வாக்கு வாதம் செய்து கொண்டிருக்க மறுபுறம் தோழர்கள் முழக்கமிட்டவாறை இருந்தனர். அதனை ஏற்காத போலீசு உங்களை கைது செய்கிறோம் என்று அறிவித்தது. தோழர்கள் தொடர்ச்சியாக மக்களை பார்த்து முழக்கமிட்டு கொண்டேயிருந்தனர்.
கைது செய்த போது தோழர்கள் ஒத்துழைக்க மறுக்கவே தள்ளுமுள்ளானது. தோழர்கள் தரையில் அமர்ந்து ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்துக்கொண்டு முழக்கமிட்டனர். போலீசு தோழர்களை குண்டுகட்டாக சீப்பில் ஏற்றியது. சீப்பில் ஏற்றிய பிறகும் வழிநெடுகிலும் தோழர்கள் கொடிபிடித்தவாறு முழக்கமிட்டவாறை சென்றனர்.
சம்பவ இடத்தில் இந்நிகழ்வை திரளான பொது மக்கள் சுற்றி நின்று கவனித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி தோழர்கள் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை பேருந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தோழர்களை கைது செய்த போலீசு அன்று மாலையே விடுதலை செய்தது. இது மறுநாள் ஆங்கில செய்தித்தாள் உள்ளிட்டு 4 தினசரி பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது. உச்சநீதி மன்றத்திற்கும், இந்து மதவெறி அமைப்புகளுக்கும் எதிரான கருத்துக்கள் ஆயிரகணக்கான மக்களிடம் போய் சேர்ந்தது.
இப்படிக்கு
புஜ செய்தியாளர், தருமபுரி.
மதுரை
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வழக்கில் உச்சநீதி மன்றத்தின் அநீதியான மோசடியான குழப்பமான தீர்ப்பை கண்டித்து மதுரை தள்ளாகுளம், புதூர் ரோட்டில் உள்ள பெரியார் சிலை முன்பு மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் அமைப்பின் சார்பாக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் தலைமையில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்வதாகக் கூறி அனைவரையும் கைது செய்ய முயன்றது காவல்துறை. காவல்துறை வருவதைக் கண்டு பெரியார் சிலை முன்பு அமர்ந்து கொண்டு விண்ணதிர முழக்கமிட்டவாறே இருந்தவர்களை தரதரவென இழுத்துச் சென்று வேனில் ஏற்றியது. காவல்துறை. கைதான தோழர்கள் மாலையில் விடுதலையானார்கள்.
தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
மதுரை
தஞ்சாவூர்
“பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் தந்திரமான சொற்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது அனைத்து சாதி வழக்கு தீர்ப்பு” என்றார் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்குரைஞர் சதீஷ் குமார். மக்கள் கலை இலக்கியக் கழகம் தஞ்சை கிளை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்து “அர்ச்சகர் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு! பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் இன்னொரு தந்திரம்” என்ற முழக்கத்தை வைத்து (வெள்ளிக்கிழமை) 18-12-2015 அன்று மாலை தஞ்சை இரயிலடியில் நடைபெற்ற கண்டண ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றி மேலும் அவர் பேசியதாவது:
“2008-ம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் இன்றுவரை வேலை இல்லாமல் பரிதவித்துக் கொண்டு இருக்கிறார்கள். வெறுத்துப்போய் ரங்கநாதன் என்பவர் தனது அர்ச்சகர் அடையாளத்தை நேற்று துறந்து பெரியார் கொள்கையைப் பிரச்சாரம் செய்யப்போகிறேன் என்று அறிவித்து பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். நீதிமன்றத்தின் மூலம் தீர்வு கிடைக்காது. நீதிமன்றங்களின், நீதிபதிகளின் செயல்பாடுகளின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகி மேலும் அம்பலப்பட்டு வருகிறது. வீதியில் இறங்கி போராடித்தான் தீர்வைப் பெறமுடியும்” என்றார். நீதிமன்றங்களின் நடிவடிக்கைகள் சமூகநீதிக்கு எதிராக எப்படியெல்லாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் தோலுரித்தார்.
ம.க.இ.க தஞ்சை கிளைச் செயலாளர் தோழர் இராவணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் தஞ்சை தோழர்கள் அருள், தேவா, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் ஆசாத், பகுத்தறிவாளர் நன்னன், ஆதித்தமிழர் பேரவை தஞ்சை தலைவர் சந்திரன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை
நான் நினைக்கின்றேன்: இந்து மதமே வர்ணாசிரம முறையின் கீழ் தான் இயங்குகின்றது; அதனால் இந்து மதத்தின் கீழ் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகுவதே பித்தலாட்டமும் முரண்நகையுமாகும். இந்து மதத்தைத் துறக்கும் போராட்டமே இதற்கு வழி.