privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்வெண்மணி தியாகிகள் நினைவு நாள்

வெண்மணி தியாகிகள் நினைவு நாள்

-

கீழ்வெண்மணியின் நெருப்பு நம் நெஞ்சில்

2-venmani

“அய்யோ எரியுதே! யாராவது காப்பாத்துங்களேன்! அம்மா-அப்பா” என்ற அலறல்கள் செவிப்பறையைக் கிழிக்கின்றன. எரியும் குடிசைக்குள்ளிருந்து நீயாவது பொழைச்சுக்கோ என்று தன் குழந்தையை வெளியில் தூக்கிப் போடுகிறாள் அந்தத் தாய் எரிந்து கொண்டே. அதை மீண்டும் தூக்கி நெருப்பில் போடுகிறான் கோபாலகிருஷ்ணநாயுடு எனும் பண்ணையாரின் கூலிப்படைத் தலைவன் . “கூலியாடா வேண்டும்? செவப்புக் கொடியாத் தூக்குறீங்க? செத்துத் தொலைங்கடா!” என்கிறான். கீழ்வெண்மணியில் நடந்த இந்த படுகொலை 1968 டிசம்பர் 25 அன்று நடந்தது.

சூரியன் எழுவதற்கு முன் எழுந்து மறைந்த பின்னரும்கூட வேலை ஓயாது விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும். நிலமெல்லாம் பண்ணையாருக்குச் சொந்தம். ஓய்வெடுக்க நேரமில்லை. கூலி கேட்கத் துணிவில்லை, மீறிக் கேட்டால் சாணிப்பாலும், சவுக்கடியும்தான் மிஞ்சும். சவுக்கடியால் தெறித்த ரத்தம்பட்டுக் களிமண்ணும் செம்மண்ணாகும்.

இந்த அநியாயத்துக்கு எதிராக உழைக்கும் மக்களை அணிதிரட்டுகிறார்கள் கம்யூனிஸ்டுகள். இருள் நிறைந்த தங்களின் வாழ்வை மீட்க வந்த கம்யூனிச இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள் மக்கள். தம் குருதி தோய்ந்த செங்கொடியை உயர்த்திப் பிடிக்கிறார்கள். “உழுபவனுக்கே நிலம்; உழைப்பவனுக்கே அதிகாரம்” என்ற முழக்கம் பண்ணையார்களை நடுங்கச் செய்கிறது.

அரை லிட்டர் நெல்கூலி உயர்வு கேட்டு கீழ்வெண்மணியில் தொடங்கியது போராட்டம். வெளியூர்காரர்களை வைத்து அறுவடை செய்யலாம் என்ற ஆண்டைகளின் கனவில் மண்ணள்ளி போட்டார்கள் மக்கள். வெளியூர் ஆட்கள் வந்த வண்டிகளை மறித்து அவர்களைத் திருப்பி அனுப்பினார்கள். பண்ணையாரின் அடியாட்கள் மக்களைத் தாக்க, செங்கொடிகள் மக்களைக் காக்கின்றன. அடியாட்களை விரட்டுகின்றன. திரும்பிய பக்கமெல்லாம் செங்கொடிகள் ஆண்டைகளை அச்சுறுத்துகின்றன.

பண்ணையாளர்களின் சங்கமான நெல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவனான இரிஞ்சியூர் கோபாலகிருஷ்ணநாயுடு சிவப்புக் கொடியை இறக்கிவிட்டுத் தங்களின் மஞ்சள் கொடியை ஏற்றினால் கேட்ட கூலியைத் தருவதாகக் கூறி, இல்லையேல் கீழ்வெண்மணி எரிக்கப்படும் என்று மேடைகளிக் கொக்கரித்தான். போலீசும், அரசும் அமைதியாக வேடிக்கைப் பார்த்தன. இனியும் இந்த அரசை நம்பிப் பயனில்லை. கீழ்வெண்மணியை செங்கொடிகள் பாதுகாத்தன. அதுவரை அடி வாங்கிய உழைக்கும் மக்கள் திருப்பியடிக்க ஆரம்பித்தார்கள்.

டிசம்பர் 25 இரவு 8 மணிக்கு திடீரெனப் புகுந்தது கோபாலகிருஷ்ண நாயுடுவின் வெறிநாய்ப்படை. கண்ணில் கண்டவர்களையெல்லாம் வெட்டித் தள்ளியது. தப்பி ஓடிய மக்கள் கூலித்தொழிலாளி ராமையாவின் குடிசையில் தஞ்சம் புகுந்தனர். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என மொத்தம் 48 பேர் எல்லாம் கரிக்கட்டைகளாக அடுத்த நாள் காலையில்.

விவசாயத் தொழிலாளர்கள் தங்களைத் தாங்களே எரித்துக் கொண்டார்கள் – இது நெல் உற்பத்தியாளர்கள் சங்கம்.

இரு கிராம மக்களிடையே நடந்த சண்டை – இது தமிழக அரசு. ஒரு நிலக்கிழார் தானே எரித்துக் கொலை செய்திருக்க மாட்டார் – கோபாலகிருஷ்ண நாயுடுவை விடுதலை செய்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு.

“உயிரை விட்டாலும் செங்கொடியை விடேன்” என்று உரிமைகளுக்காகப் போராடிய கீழ்வெண்மணியின் மரபுதான் நம் மரபு. வர்க்கமும், சாதியும் பின்னிப் பிணைந்து இருக்கிற இந்த சமூகத்தில் உழைக்கும் வர்க்கமாக ஒன்றுபடாமல் ஆதிக்க சாதிவெறிக்கு, பண்ணை கொடுமைக்குக் கல்லறை கட்டமுடியாது என்பதைக் கீழ்வெண்மணி நமக்குக் கற்றுத் தருகிறது.

1980 அதிகாலையில் ஒரு நாள்…

கீழ்வெண்மணியில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவுத்தூணுக்கு அருகே 48 துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது கோபாலகிருஷ்ண நாயுடுவின் உடல். இது கீழ்வெண்மணி மக்களின்-நக்சல்பாரிகளின் தீர்ப்பு.

வர்க்க-சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட்டங்கள் நடக்கும் பொழுதெல்லாம் அரசு எந்திரமானது உழைக்கும் மக்களுக்கானது இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

பண்ணைக்கு உழைத்துக் கொடுத்த மக்களை நெருப்பிலிட்டுப் பொசுக்கிய, ஆதிக்க சாதிவெறி பிடித்த பண்ணையார் கோபாலகிருஷ்ண நாயுடுவைப் போன்றவர்கள் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளிலும், ஆதிக்க சாதிக் கட்சிகளிலும், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி போன்ற மதவெறி அமைப்புகளிலும் நிரம்பி வழிகிறார்கள். நம்மிடமோ கீழ்வெண்மணியின் நெருப்பு தகித்துக் கொண்டிருக்கிறது.

– மருது
புதிய மாணவன், டிசம்பர் 2015

venmani-poster

வேதாரண்யம் பகுதி வெண்மணித் தியாகிகள் நினைவு நாள்- தெருமுனைக் கூட்டம்

வேதாரண்யம் வட்டம் –ஆதனூர் கிராமத்தில் 25/12/2015 அன்று மாலை 7.00 மணியளவில் மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர் கிருட்டிணமூர்த்தி அவர்கள் தலைமையில் வெண்மணித் தியாகிகள் நினைவு நாள்-தெருமுனைக் கூட்டம் பறை முழக்கத்துடன் தொடங்கியது.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் வீரையன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் சரவணன், முகிலன் ஆகியோர் உரையாற்றினர்.

கூட்டத்தில் பேசியத் தோழர்கள் வெண்மணிச் சம்பவத்தை நினைவு கூர்ந்ததுடன் “வெண்மணிச் சம்பவம் முடிந்து போய்விடவில்லை. நாட்டில் நடக்கும் எல்லாவித ஒடுக்குமுறைகளும், சுரண்டல்களும் சாதிய ஒடுக்கு முறைகளும் வெண்மணியை நினைவுபடுத்திக் கொண்டுதான் இருக்கின்றன” என்பதையும், “மக்கள் விரோதிகள் அனைவரும் கோபாலகிருட்டிண நாயுடுக்கள்தான்” என்பதையும் நடப்பு அரசியல் நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பேசினர்.

தோழர்கள் பேசும் போது, “இந்த அரசமைப்புத் தோற்றுவிட்டது இதற்கு மாற்று மக்கள் அதிகாரத்தைக் கையிலெடுப்பதுதான் தீர்வு” என்று விளக்கிப் பேசினர்

பு.மா.இ.மு.தோழர் வீரமணி நன்றியுரைக்குப் பின் கூட்டம் முடிவடைந்தது.

மக்கள் அதிகாரம் தோழர்கள்,பு.மா.இ.மு தோழர்கள், பகுதிப் பெண்கள்,ஆண்கள், இளைஞர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

வெண்மணி நினைவு நாளையொட்டி அண்டர்காடு மற்றும் ஆதனூர் பகுதி உழைக்கும் மக்களிடம் துண்டு பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.ஆதனுர் பகுதி இளைஞர்களும் மாணவர்களும் இரண்டு நாட்களாக உற்காகத்துடன் செயல்பட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்

venmani-poster

தகவல்
மக்கள் அதிகாரம்
வேதாரண்யம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க