முடங்கிப் போய் ஆள அருகதையற்றுக் கிடக்கும் அரசை அகற்றுவோம்! மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவோம்! ஆக்கிரமிப்புகளைத் தகர்த்தெறிவோம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
சமீபத்திய மழை-வெள்ளம் நமது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் அடித்துச் சென்று விட்டது. கொலை பாதக, ஆணவ, ஆபாச-வக்கிர, பித்தலாட்ட-செயல்படாத, பார்ப்பன-பாசிச ஜெயலலிதா அரசியன் அலட்சியத்தால் முன்னறிவிப்பின்றியும், ஒரே நேரத்திலும் திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி நீர் அடையாறில் வெள்ளப் பெருக்கெடுத்து பல்லாயிரம் வீடுகளை மூழ்கடித்தது. இலட்சக் கணக்கான மக்களை நடுத்தெருவுக்குத் தள்ளியது. அம்பத்தூர், கிண்டி, மறைமலைநகர் தொழிற்பேட்டைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலையைப் பறித்தது, இந்தப் பெருவெள்ளம்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள் ஆகியவற்றின் மீதான ஆக்கிரமிப்பின் காரணமாக வெள்ளநீரால் இந்த அதிகப்படியான பாதிப்புகள் ஏற்பட்டன. கடலூர், விழுப்புரம் மாவடங்களிலும் புதுச்சேரியிலும் ஆற்றுமணல் கொள்ளையர்கள் ஆளும்கட்சி கிரிமினல்களோடு சேர்ந்து மணல் கொள்ளைக்காக ஆறுகளின் பாதையை மறித்தும், மடைமாற்றியும் விட்டதால் அந்தப் பிராந்தியமே வெள்ளக்காடாகிப் போனதுடன், பச்சைப்பசேலென்ற வயல்வெளிகளில் மணல்மூடி வாழ்வாதாரமே பறிபோனது.
“நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்” என்ற கோபக்குரல் ஒலிக்கத் துவங்கியுள்ள இந்த சூழலில் கூட ஆளும் வர்க்கம் நயவஞ்சகமாகத்தான் செயல்பட்டு வருகிறது. ‘ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றும் காஞ்சிபுரம் கலெக்டர்’, ‘ஆக்கிரமிப்புகளைத் தகர்க்கும் ஆக்ஷன் ஐ.ஏ.எஸ் ஸ்டார்ஸ்’ என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. ‘இனி எல்லாம் நல்லபடியாக நடக்கும், ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி தூள் தூளாகும்’ என பரபரப்பூட்டுகின்றன ஊடகங்கள்.
ஆனால், நடந்து கொண்டிருப்பது ஆக்கிரமிப்புகள் அகற்றல் அல்ல, அதிகார வர்க்கத்தின் வக்கிரம்தான் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அடையாறு உள்ளிட்ட நீர்நிலைகளிலும் நீர்வழித்தடங்களிலும் உள்ள குடிசைகளையும் சாதாரண வீடுகளையும் மட்டும் குறிவைத்து இடித்துவிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம் என கொக்கரிக்கிறார்கள், அதிகாரிகள். ‘வீட்டிலிருக்கும் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு ஓடுவதற்குத் தயாராக இருங்கள். பெரும்பாக்கம், கண்ணகி நகர் போகணும்’ எனத் துரத்துகிறார்கள்.
உண்மையான ஆக்கிரமிப்பு எது? யார் ஆக்கிரமிப்பாளர்கள்?
எது ஆக்கிரமிப்பு? யார் ஆக்கிரமிப்பாளர்கள்?
மழைநீரைச் சேமித்து வைக்கும் ஏரிகள்-குளங்களையும், வெள்ளம் வழிந்தோடும் வடிகால்களையும் முழுமையாக ஆக்கிரமித்துள்ள கார்ப்பரேட் கம்பெனிகள், தனியார் மருத்துவ-பொறியியல் கல்லூரிகள், நட்சத்திர மருத்துவமனைகள், ஷாப்பிங் மால்கள், மாபெரும் ரியல் எஸ்டேட் அடுக்குமாடிக் குடியிருப்புகள், விமான நிலையம் உள்ளிட்ட மத்திய, மாநிர அரசு நிறுவனங்கள் ஆகியவைதான் மிகப்பெரிய ஆக்கிரமிப்புகளை செய்துள்ளன.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டுக் கம்பெனிகள் பலவும் ஏரிகளையும், வடிகால்களையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளன. தங்கள் கம்பெனிக்குள் வெள்ளம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஏரிகளை உடைத்து, தண்ணீரை மடைமாற்றி மக்களை வெள்ளத்தில் மூழ்கடித்தனர் இவர்கள்.
பொத்தேரியை ஆக்கிரமித்து எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தைக் கட்டிய பச்சமுத்துவின் புதிய தலைமுறை தொலைக்காட்சியோ, யார் ஆக்கிரமிப்பாளர்கள் என விவாதம் நடத்துகிறது.
பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகம், குன்றத்தூர் மாதா கல்லூரி, போரூர் ராமச்சந்திரா கல்லூரி, மதுரவாயல் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம், ஜேப்பியாரின் பனிமலர், சத்தியபாமா, ஆவடி வேல்டெக், செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரி போன்ற பல கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் ஏரிகளையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவைதான்.
இதெல்லாம் காஞ்சிபுரம் மாவட்டக் கலெக்டர் கஜலட்சுமி அம்மாவின் கண்களுக்குத் தெரியாதது ஏன்? இவர்களுக்கெல்லாம் பட்டா கொடுத்து, கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்ததும் அதிகாரிகள்தானே.
திருவள்ளூர் மாவட்டத்தில்
- ஆவடி, அம்பத்தூர், அயனம்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் ஏரியை தூர்த்து கட்டப்பட்டவைதான்.
- நெற்குன்றம் அருகே ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்காக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கட்டி வருகின்றன 1000 உயர்தர குடியிருப்புகள் ஏரியின் மீதுதான் இருக்கின்றன.
- திருநின்றவூரில், குடிசைமாற்று வாரியமே ஏரிக்குள்தான் வீடுகட்டி கொடுத்தது.
- பள்ளிக் கரணை ஏரிக்குள் மத்திய அரசின் கடல் ஆராய்ச்சி நிறுவனம் கட்டப்பட்டுள்ளது.
இவையெல்லாம் தண்ணீரில் மூழ்கும் போது ஆக்கிரமிப்பு என்கிறது அரசு. இதுதான் அரசின் லட்சணம்.
இப்போது சொல்லுங்கள் யார் உண்மையான ஆக்கிரமிப்பாளர்கள்? மக்கள்? அல்லது கார்ப்பரேட்டுகளும், மத்திய-மாநில அரசுகளும், ரியல் எஸ்டேட் கொள்ளையர்களுமா?
‘நெற்றிக்கண்ணை’ மறைப்பது எது?
உலகத்தரத்தில் அமைந்த உயிர்காக்கும் மருத்துவமனைகள் என சொல்லிக் கொண்டே மியாட்டும், குளோபல் மருத்துவமனையும் நீரில் மூழ்கியது ஏன்? உயிரைக் காப்பாற்றுகிறோம் எனப் பொய் சொல்லிப் பணம் பறித்துக் கொண்டு, அனாதைப் பிணமாக எறிந்து விட்டு ஓடிய இந்த அயோக்கியர்கள்தான் உண்மையான ஆக்கிரமிப்பாளர்கள்.
- இத்தனை பேரைக் கொன்ற பின்னரும் மருத்துவமனையை நடத்திக் கொண்டிருக்கிறார் மியாட் மோகன்தாஸ்.
- குளோபல் மருத்துவமனைக்குச் சொந்தக்காரரான மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவோ, வெள்ள ஆய்வு என்ற பெயரில் சென்னைக்கு வந்து தன்னுடைய ஆக்கிரமிப்புகளை காப்பாற்றிக் கொண்டார்.
- அமைந்தகரையில் இருக்கின்ற ஸ்கைவாக் வணிகவளாகம் கூவம் நதியை கபளீகரம் செய்தது என்றால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஐ.டி கம்பெனிகளும், ரியல் எஸ்டேட் தாதாக்களும் ஏப்பம் விட்டு விட்டனர்.
- கிண்டி தொழிற்பேட்டையை ஒட்டியுள்ள நாகிரெட்டி தோட்டம் அருகில் அடையாறை ஆக்கிரமித்த வி.ஜி.என் என்கிற ரியல் எஸ்டேட் கும்பல் 1000 குடியிருப்புகளைக் கட்டி தலா ஒரு கோடிக்கு விற்றுள்ளனர். இந்தக் குடியிருப்பைத் திறந்து வைத்தவர் கவர்னர் ரோசையா.
- எத்தனை பேர் வெள்ளத்தில் மூழ்கினார்கள், எத்தனை பேர் செத்தார்கள் என்று கூடத் தெரியாத மர்மத்தீவாக நின்ற டி.எல்.எஃப் வளாகமே ஆக்கிரமிப்புதானே
இந்த ஆக்கிரமிப்பாளர்களில் எவன் மயிரையாவது அசைக்கும் தைரியம் இருக்கிறதா அதிகாரிகளுக்கு? இதையெல்லாம் இடிப்பாளர்களா? கார்ப்பரேட் ஆக்கிரமிப்புகளை இடிக்காமல் இவர்களைத் தடுப்பது எது? குடிசைகளை மட்டும் பார்க்கின்ற இவர்களது நெற்றிக்கண்ணால் மோகன்தாஸ்களை பார்க்க முடியாமல் மறைப்பது எது?
இடிக்க வரும் அதிகாரிகளை விரட்டியடி!
கிண்டி அருகில் நாகிரெட்டி தோட்டம் பகுதியில் 40 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்ற மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என அதிகாரிகள் துரத்த வந்தபோது, மக்கள் தைரியமாக எதிர்கொண்டனர். “எங்கள் வீடுகளைத் தாராளமாக இடி. ஆனால், அதற்கு முன்னால் மியாட், குளோபல் ஆஸ்பத்திரிகளை இடி. ஒரு கோடிக்கு ஒரு வீடு என ஆயிரம் வீடுகளைக் கட்டிய ஆக்கிரமிப்பாளன் வி.ஜி.என் ரியல் எஸ்டேட் கட்டிடங்களை இடி. அதன்பிறகு, எங்கள் வீடுகளை இடிக்க வா” என துரத்தினர்.
ரோசையா திறந்து வைத்த குடியிருப்புகளுக்கும், இன்னபிற ஆக்கிரமிப்புகளுக்கும் அதிகாரவர்க்கம் முழுபாதுகாப்பு தருவதை அம்பலப்படுத்துகின்ற மக்கள் போராட்டங்கள் அடுத்தடுத்த குடியிருப்புகளுக்கு பரவி வருகின்றன. ஈமு கோழி, தங்கக்காசு என எல்லா மோசடிகளுக்கும் சினிமாக்காரர்கள் காசு வாங்கிக் கொண்டு விளம்பரத்துக்கு வருவார்கள். கடைசியில் மோசடி அம்பலமானால், எங்களுக்கு எதுவுமே தெரியாது என நழுவிவிடுவார்கள். இதைப் போலத்தான் கவர்னர் கதையும் இருக்கிறது. ஆக்கிரமிப்புகளை இடிக்கச் சொல்லி அவரிடம்தான் நாம் மனு கொடுக்க வேண்டுமாம். மனு கொடுத்து பிரயோசனமில்லை என்பதால் சாலைக்கு வந்து விட்டனர், நாகிரெட்டி தோட்டத்து மக்கள்.
மாற்று இடம் காட்டிய மக்கள்!
வாழவழியின்றி, சகிக்க முடியாத சாக்கடைகளின் ஓரத்தில் ஒண்டுக் குடிசை போட்டவர்களை எல்லாம், ஆக்கிரமிப்பாளர்கள் என பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கொட்டப்படும் குப்பை போலத் தூக்கி எறிவதுதான் அதிகாரவர்க்கம் நமக்கு செய்யும் ஒரே சேவை.
நாகிரெட்டித் தோட்டம் பகுதியில் உள்ளவர்களை, ‘பெரும்பாக்கத்துக்குப் போங்க’ என விரட்டினர் அதிகாரிகள். “எங்க போகணும்னு நாங்க சொல்றோம். சென்னையில அரசுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் ரேஸ்கோர்சை இராமசாமி செட்டியாருக்கு அற்ப விலைக்கு குத்தகை கொடுத்திருக்கு அரசு. அந்த இடம் சும்மாதான இருக்குது. 800 ஏக்கர்ல கோல்ஃப் மைதானம் சும்மாதான கிடக்குது. அங்க இடம் ஒதுக்கு… போறோம்” என மாற்று இடங்களையும் காட்டினார்கள். இதுதான் நம் எல்லோருக்கும் முன்னுதாரணம்.
நமக்கான நிவாரணம் எது?
அரசு கொடுக்கும் 5 ஆயிரம், 10 ஆயிரமோ, எங்கோ கண்காணாத தூரத்தில் தரும் புறாக்கூடு வீடுகளோ அல்ல நமக்கான நிவாரணம். பெருவெள்ளம் ஏற்படக் காரணமான கார்ப்பரேட் கம்பெனிகள், ரியல் எஸ்டேட் கொள்ளையர்கள், அதிகாரவர்க்கத்தினர், ஓட்டுக்கட்சிப் பிரமுகர்கள் ஆகியோர்களிடமிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும், அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து மக்களுக்கு வழங்குவதும், அவர்களைக் கைது செய்து தண்டிப்பதும், நகருக்குள்ளேயை சும்மா கிடக்கும் அரசு இடங்களில் வீடு கட்டித் தருவதும்தான் நமக்கான நிவாரணம். இதுதான் நமது பாரம்பரிய நீர்நிலைகளையும், நமது வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும்.
- நீர்நிலைகள், ஆறுகள், கால்வாய்களை ஆக்கிரமித்து, இயற்கைப் பேரழிவிற்குக் காரணமானவர்கள் தனியார்மட்டுமல்ல, மத்திய-மாநில அரசுகளும், ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் அதிகார வர்க்கத்தினரும், செயலிழந்து ஆள அருகதையற்றுப் போன ஜெயலலிதா அரசும்தான்!
- ஜெயலலிதா அரசோ அல்லது வேறு எந்த அரசோ எந்தக் கட்சியோ ஆட்சிக்கு வந்து ஆக்கிரமிப்பை அகற்றுவார்கள் என நம்புவது மூடநம்பிக்கையே!
- போராடும் நாம், போராடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் நாமே அதிகாரத்தை எடுத்துக் கொண்டு மக்கள் அதிகாரத்தை நிறுவி, அதன் தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதே ஒரே வழி!
முடங்கிப் போய் ஆள அருகதையற்றுக் கிடக்கும் அரசை அகற்றுவோம்!
மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவோம்! ஆக்கிரமிப்புகளைத் தகர்த்தெறிவோம்!
ஆர்ப்பாட்டம்
நேரம் : 02-01-2016 மாலை 5 மணி
இடம் : குமணன்சாவடி, பூந்தமல்லி
அனைவரும் வருக
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம்-திருவள்ளூர் (கிழக்கு, மேற்கு)-வேலூர் மாவட்டங்கள்,
88075 32859, 94453 89536 94453 68009 99943 86941
சென்னையின் பூர்வகுடி தலித் மக்கள் அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றபட்டு 30-40km தொலைவில் உள்ள சதுப்பு நில பரப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு தள்ளபடும் நிகழ்வு மட்டுமே வெள்ள நிவாரணம் என்ற பெயரில் ஜெயாவின் அரசால் நிகழ்த்தபடுகிறது. அமெரிக்க செவ்விந்திர்களுக்கு ஏற்பட்ட நிலையை விட மிகவும் பரிதாபகரமான நிலைமை இது. உண்மையில் ஆக்கிரிமிப்புகளை நீக்குவது என்றால் சென்னையின் நீர்நிலைகளை ஒட்டிய வானளாவிய அடுக்கு மாடி குடியிருப்புகள் தானே இடித்து தள்ளப்பட்டு இருக்க வேண்டும். ? சென்னையின் மிடில்கிளாஸ் மக்களின் மனசாட்சி யாவற்றையும் வேடிக்கை பார்க்குமே தவிர தெருவுக்கு வந்து போராடாது.
இந்த மழை வெள்ள சேத்த்தின் போது நடுத்தர வர்க்க மக்களை சேரியில் வாழும் மக்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றினார்கள் என்று நடுத்தர வர்க்கத்தை சார்ந்த சிலர் தங்கள் அனுபவமாக சொல்லி இருக்கிறார்கள் நடுத்தர வர்க்கதை சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நன்றியுனர்வு இருந்தால் ஆக்கிரமிப்பு அகற்றல் என்ற போர்வையில் சேரி மக்களை வெளியே துரத்தும் கயமையை வேடிக்கை பார்க்காமல் அவர்களுக்கு உதவியாக போராட முன் வரவேண்டும் எனென்றால் அவர்களின் கோரிக்கை நியாயமானது ,நடுதர வர்க்க மக்களே உங்களிடம் அதிக கட்டணம் வாங்கி பிழைப்புநடத்தும் கல்லூரிகளும் மருத்துவமனைகளும் ஆக்கிரமிப்பு மூலம் கட்டப்பட்டது என்று தெரிந்தும் உங்களுக்கு கோவம் வராமல் சேரி மக்கள் வெளியேற்றப்படுவதை பார்த்து ரசிப்பீர்கள் என்றால் நாளை உங்கள் வீடும் ஆக்கிரமிகப்படும்…
Best feedback Joseph